சீமை அகத்தி - வண்டு கொல்லி - Cimai Akatti.

Cimai Akatti.

          அகத்தி கீரையைப்பற்றி அனைவருமே அறிந்திருப்போம். பலர் அதை உணவாக சமைத்து ருசித்திருப்பீர்கள். ஆனால் இதே அகத்தியில் 1டஜன் பெயர்களுடன் "சீமை அகத்தி" என்று ஒருவகை தாவரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? இல்லையெனில் தெரிந்துகொள்ள தொடருங்கள்.

சீமை அகத்தி.

மூலிகையின் பெயர் :- சீமை அகத்தி.
தாயகம் :- மெக்சிகோ.
தாவரவியல் பெயர் :- Senna Alata.
பேரினம் :- Senna [சென்னா].
குடும்பம் :- Fabaceae. [வாபேசியே]
துணைக்குடும்பம் :- Caesalpinioideae [சீஸல்பின்னியாய்டியே].

வேறுபெயர்கள்.

 • சீமை அகத்தி.
 • பேயகத்தி.
 • சீமைஅவுத்தி.
 • காலவகத்தி.
 • பொன்னகத்தி.
 • அஞ்சலி.
 • அலடா.
 • சிண்டுகை.
 • சிரிகை.
 • பைரவம்.
 • புளியச்சிகா செடி.
 • வண்டுக்கொல்லி.
 • புழுக்கொல்லி. 

வாழிடம்.

          இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா முதலிய பல்வேறு கண்டங்களில் வளர்கின்றன. இந்தியாவில் நீர்நிலைகள் மற்றும் நீரோடை ஓரங்களில் இதைக் காணலாம். வீடுகளில் அழகு செடியாகவும் வளர்க்கப்படுகிறது.

செடியின் தன்மை.

          இது புதர் போன்ற சிறு மரம். 3 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. நன்கு செழிப்பாக தழைத்து வளரும் இயல்புடையது. கண்களை கொள்ளை கொள்ளும் மஞ்சள் நிற பூக்களை கொண்டது. சில செடிகள் சிவப்பு நிற பூக்களையும் கொண்டுள்ளன.

Cimai Akatti flower

இலைகளின் தன்மை.

          அகத்தி இலைகளை ஒத்த ஆனால் அதை விட கொஞ்சம் பெரியதான முட்டைவடிவ இலைகளைக் கொண்டது. சிறு காம்புகளுடன் கூடிய தனி இலைகளைக் கொண்டது. இது மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உணவாக பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல.

மலர்களின் தன்மை.

          மஞ்சள் நிறமான கூம்பு வடிவ மலர் கொத்துக்களை கொண்டது. கதிர்வடிவில் பூக்கும். இது பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போல் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் ''மெழுகுவர்த்தி செடி'' என அழைக்கின்றனர். மலர்களின் சாறு மார்புச்சளிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

காய்களின் தன்மை.

          காய்கள் நீளமாக பார்ப்பதற்கு பிரண்டை கணுக்களைப்போல் இருக்கும்.  இதன் காய்கள் ''இருபுற வெடிகனி'' வகையினை சேர்ந்தது.

cimai akatti. seed

          விதைகள் முதிர்ந்த பின் கருமை நிறமாக மாற்றமடையும். விதைகள் 3 வருடம்வரை முளைப்பு திறனை தக்கவைத்துக் கொள்ளும் திறனுள்ளது.

வரலாறு.

          பொதுவாக தமிழில் சீமை என்றால் அது அந்நிய பிரதேசத்தைக் குறிக்கும். இத்தாவரம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாலும் இதன் இலைகள் பார்ப்பதற்கு அகத்தி இலைபோல் இருப்பதாலும் ''சீமை அகத்தி'' என்று அழைக்கிறோம். இதன் பிறப்பிடம் மெக்சிகோ.

          20-ம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் இது இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டது. இதன் இலைகள் பார்ப்பதற்கு அகத்தியின் இலைபோல் இருந்ததால் நாம் இதற்கு செல்லமாக ''சீமை அகத்தி'' என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டோம். தற்போது இது தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

மருத்துவப்பயன்.

          சீமை அகத்தி இலைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நுண்ணுயிர் மற்றும் புழுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

          தோல் நோய்களை குணமாக்கும் ''கிரையேகோனிக்'' என்னும் வேதிப்பொருள் இதன் இலைகளில் அதிக அளவில் உள்ளதால் உலர வைக்கப்பட்ட இதன் இலைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

          இதன் இலைகள் சோப்பு செய்வதற்கும், முகப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

          சீமை அகத்தி இலை, விதை ஆகியவற்றை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கரப்பான், படை, சொறி, சிரங்கு மற்றும் சிலருக்கு வரும் கழிப்பறை பற்று ஆகியவற்றின் மீது தடவிவர குணமாகும்.

          இதன் இலை சாற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் காய்த்து தைல பக்குவத்தில் இறக்கிக்கொள்ளவும். இதனை நகச்சுற்று, சேற்றுப்புண் , படர்தாமரை முதலியவற்றிற்கு பயன்படுத்த சிறந்த பலன்தரும்.

cimai Akatti.

          வண்டுக்கடியினால் ஏற்படும் வீக்கம் தடிப்பு முதலியவைகளை இது சிறப்பாக குணப்படுத்துவதால் இச்செடி ''வண்டுக்கொல்லி'' என்றும் அழைக்கப்படுகிறது. சீமை அகத்தி இலையை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு அரைத்து வண்டு கடித்து தடித்த இடங்களில் பூசிவர சிறந்த குணத்தைப் பெறலாம்.

          இதன் மஞ்சள் நிற பூக்களை கஷாயமாக அருந்திவர சிறுநீர் கோளாறுகள் நீங்கி சிறுநீர் தடையின்றி வெளியேறும்.

          இதன் பட்டையை ஊறவைத்த முறைப்படி கஷாயம் வைத்து சாப்பிட மேக வியாதிகள் நீங்கும்.

          பற்று, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றிற்கு சித்த மருந்துகள் விற்கப்படும் கடைகளில் ''சீமையகத்தி களிம்பு'' விற்கப்படுகிறது. இதையும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

          சரி, சீமையகத்தி களிம்பு எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பார்ப்போம்.

சீமையகத்தி களிம்பு.

தேவையானபொருட்கள் :-

சீமையகத்தி இலைச்சாறு - 1 லிட்டர்.
தேங்காய்யெண்ணை           - 1 லிட்டர்.
எலுமிச்சம்பழச்சாறு             -1 லிட்டர்.
கருஞ்சீரகம்                               - 20 கிராம்.
காட்டுசீரகம்                              - 20 கிராம்.
கசகசா                                          - 20 கிராம்
கார்போக அரிசி                       - 20 கிராம்.
நீரடிமுத்து                                 - 20 கிராம்.
தேன்மெழுகு                           - 300 கிராம்.

செய்முறை.

          மேற்கண்ட பொருட்களை மூலிகை சுத்தி முறையில் சுத்தி செய்து எடுத்துக்கொள்ளவும் +. கருஞ்சீரகம், காட்டுசீரகம், கசகசா, கார்போகஅரிசி, நீரடிமுத்து ஆகியவைகளை தேவையான அளவு தேங்காய்ப்பால் விட்டு தனித்தனியாக  அரைத்தெடுத்துக்கொள்ளவும்.

          பின் அரைத்தெடுத்த பொருட்களை ஓன்றாக கலந்து அதனுடன் சீமை அகத்தி இலை சாறு, தேங்காய்யெண்ணை, எலுமிச்சம்பழச் சாறு விட்டு சிறு தீயாக எரிக்கவும். [தீ அதிகமாக எரியவிட்டால் மருந்து கருகி வீணாகப்போகும்.] கலத்தின் அடியில் படியும் மருந்தின் வண்டல் பகுதி மெழுகுபதமாக வந்தவுடன் [கருகுவதற்கு முன் ] இறக்கிவிடவும்.

          பின் வடிகட்டி தேன்மெழுகை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்கு ஆறும்வரை கலக்கிக்கொண்டே இருந்தால் களிம்பாக உறையும். இதுவே ''சீமையகத்தி களிம்பு ''. இதை பாட்டிலில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

          அகத்தி என்று சொல்லப்படும் அகத்திக்கீரையைப் பற்றி அறிந்து கொள்ள >>இங்கு கிளிக்குங்க<<

          அகத்திக்கீரையின் மருத்துவ குணங்களை அறிய >>இங்கு கிளிக்குங்க<<


கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. சாதாரண அகத்தி எப்போதாவது வீட்டில் சமைப்போம். இது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். விதைகள் மூன்று வாருங்கள் வரை வீரியமாக இருக்கும் என்பது சிறப்பு. அதன் மருத்துவப்பயன்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!...

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருக நண்பரே !!! தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி !!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.