"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Herbal Purification - Basic Terms and Conditions.

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Herbal Purification - Basic Terms and Conditions.

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை.

Herbal Purification.

[Part-1]

''மூலிகை சுத்தி'' என்பது சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகளில் மருந்து தயாரிப்பதற்கு முன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மிக முக்கியமாக கிரியை ஆகும். அது என்ன ''மூலிகை சுத்தி'' என்கிறீர்களா?

மூலிகைகள் சுத்தி.

முதலில் "சுத்தி" என்றால் என்ன ? "சித்தி" என்றால் என்ன என்று பார்ப்போம்.

"சுத்தி" என்பது ஒரு பொருளிலுள்ள தீமை செய்யும் பகுதிகளை நீக்கி அதனை சுத்தம் செய்வதைக் குறிக்கும்.

மூலிகை 'சுத்தி' என்பது மூலிகைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்தின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.

"சித்தி" என்றால் சித்தித்தல் அதாவது காரிய "வெற்றி"யை குறிக்கும். செய்யும் வேலை பழுதில்லாமல் வெற்றிகரமாக முடிவதை குறிக்கும்.

ஒரு காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டுமெனில் அதற்கு முதலில் வணங்கப்படவேண்டிய கடவுளை "காரிய சித்தி விநாயகர்" என்கிறோம் அல்லவா. அதுபோல.

எனவே, இப்பகுதியில் மருந்து மூலப்பொருள்களை எவ்வாறு சுத்தம் செய்வது, அதன்மூலம் மருந்துகளை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பதனை பார்க்க இருக்கிறோம்.

உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் (மனிதன் உட்பட) நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் சேர்ந்தே காணப்படுகின்றன. உலகின் எந்த பொருள்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

உயிர்காக்கும் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் மூலிகைகளிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் நல்லகுணங்களும், பக்கவிளைவுகளை விளைவிக்கும் தீயகுணங்களும் சேர்ந்தே இருக்கின்றன.

எனவே மூலிகைகளை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னால் எதிர் விளைவுகளை உண்டு பண்ணும் அதன் தீய குணங்களை உரிய முறையில் நீக்கிய பின்பே மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறை. அவ்வாறு தீய குணங்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் வழிமுறைகளே ''மூலிகைசுத்தி'' ஆகும்.

அவ்வாறு சுத்தி செய்த மூலிகையினால் தயாரிக்கப்படும் மருந்தே பூரண குணத்தை தரும். முறையாக சுத்தி செய்யாத மூலிகையினால் தயாரிக்கப்படும் மருந்துகள் எதிர்பார்க்கும் பலனை தருவதில்லை என்பது மட்டுமல்ல அவைகள் தீய விளைவுகளையும் அளிக்கும் என்பது சித்தர்கள் வகுத்த விதிமுறை.

ஆனால் தற்காலத்தில் மருந்துகள் தயாரிக்க இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்றப்படுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

எனவேதான் தற்காலத்தில் மூலிகை மருந்துகள் ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக நின்று ஜெயிக்க முடியாமலும், துரித பலனை தர முடியாமலும் தன் பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வருகிறது.

''பாடுனவன் பாட்டை கெடுத்தான் எழுதினவன் ஏட்டை கெடுத்தான்'' என்பது போல பாரம்பரிய மருத்துவர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களாலேயே நம் பெருமைமிகு மூலிகை மருத்துவம் தன் மகத்துவத்தை இழந்து இன்று பரிதாபமாக ''பல்லிளித்துக்'' கொண்டிருக்குகிறது.

சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தை நமக்களித்த சித்தர்கள் மூலிகைகளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டும், மருந்துகள் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதி முறைகள் என்னென்ன.. என்பது போன்ற பல விஷயங்களை சொல்லி சென்றுள்ளனர்.

அவைகளில் பொதுவான சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

விதிமுறை 1.

மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலிகைகள் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.

விதிமுறை 2.

மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகள் ஒவ்வொன்றும் இயந்திரத்தில் தனித்தனியாக அரைக்கப்பட வேண்டும்.

அதாவது ஒரு குறிப்பிட்ட மருந்து பொடி தயாரிக்க 10 வகையான மூலிகைகள் பயன்படுத்த வேண்டியிருப்பின் மூலிகைகளை புழு, பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து எடுத்து 10 வகையான மூலிகைகளையும் ஒன்றாக போட்டு இடிக்காமல் ஒவ்வொரு மூலிகையாக தனித்தனியாக இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒவ்வொன்றையும் அதற்கான அளவுகளில் அளந்து எடுத்து அனைத்து பொடிகளும் நன்றாக உறவாகும்படி ஒன்று கலந்து கொள்ளவேண்டும்.

அதை விடுத்து நேரத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று சொல்லி அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக போட்டு ஒரே நேரத்தில் இடித்தால் மருந்தின் தன்மை முற்றிலுமாக கெட்டுப்போகும்.

herb purification

விதிமுறை 3.

உலோகங்களை பஸ்பமாகவோ அல்லது செந்தூரமாகவோ (செந்தூரம் - Oxide) தயாரிக்கும் போது தயாரிக்கப்பட்ட மருந்தில் உலோகங்களின் தன்மை இருக்கக்கூடாது என்பது விதி. உலோகங்களின் தன்மை இருந்தால் அம்மருந்து உடலுக்கு மிக அதிக அளவில் தீங்கு விளைவிக்கும்.

ஆனால் மருந்து கடைகளில் விற்கப்படும் ''அயசெந்தூரம்'' 10 கிராம் வாங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போட்டு (அயசெந்தூரம் என்றால் இரும்பு தூளை பக்குவப்படுத்தி மருந்தாக தயாரிக்கப்படும் ''Iron Oxide''). நீரில் கரைத்து வடிகட்டிப் பார்த்தீர்கள் என்றால் 10 கிராம் மருந்தில் கருப்பு நிறத்தில் 1 அல்லது 2 கிராம் ''இரும்புத்தூள்'' பாத்திரத்தின் அடியில் தங்கி இருக்கும்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த இரும்புத்தூளின் அருகில் காந்தத்தை கொண்டு சென்றால் அத்தனையும் காந்தத்தால் கவரப்படும். இதுதான் இவர்கள் மருந்து தயாரிக்கும் லட்ஷணம்.

விதிமுறை 4.

ஒவ்வொரு வகை மருந்திற்கும் அவை தயாரித்ததிலிருந்து எத்தனை மாதங்கள் வரை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்கான கால அளவை ( expiry date) சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். காலாவதியான மருந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் இது மூலிகை மருத்துவத்தில் தற்போது ஒருவராலும் பின்பற்றப்படுவதில்லை என்பது வேதனை.

விதிமுறை 5.

தயாரிக்கப்படும் மருந்துடன் ''முப்பூ''  என்று சொல்லப்படும் ''குருமருந்து'' கண்டிப்பாக சேர்த்து தயாரிக்கப்பட வேண்டும். முப்பூ சேர்க்கும் போது மருந்தின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் தற்போது மருந்துகளில் குருமருந்து எனப்படும் முப்பூ பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. மூலிகை மருந்துகள் விரைவாக செயல்படாததற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

விதிமுறை 6.

மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருளை உரிய முறையில் ''சுத்தி'' செய்தல் வேண்டும். சில மூலிகைகளை சில திரவங்களில் ஊற வைத்தும், சிலவற்றை லேசாக வறுத்தும், சிலவற்றை வெயில் அல்லது நிழலில் காயவைத்து உலர்த்தியும் அதன் தீங்கு செய்யும் எதிர் குணங்கள் நீக்கப்படுகின்றன.

இதனால் மருந்தின் வீரியம் அதிகரிக்கும். ஆனால் இதுவும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

இவ்வாறான விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாமல், நம்முடைய பொறுப்பின்மையால் சித்தர்கள் நமக்களித்த அற்புத மருத்துவ முறைகளான சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவங்களை அழிவின் எல்லைக்கே கொண்டுவந்து விட்டு இன்று பல பக்கவிளைவுகளை கொண்டுவந்து சேர்க்கும் மருத்துவத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நேற்றுவரை சந்தோசமாக வெற்றிலை போட்டு மென்று துப்பிக் கொண்டிருந்த நம் தாத்தா, பாட்டிகள் இன்று கைநிறைய மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருப்பது வேதனை.

not herbal

சரி, இனி மூலிகைகளின் எதிர் தன்மையை நீக்கும் சுத்தி செய்யும் முறையை பார்ப்போம்.

கடைசரக்குகள் சுத்திமுறை.

சுக்கு

சுக்கின் எடைக்கு இரண்டு பங்கு சுண்ணாம்புக்கல்லை சேர்த்து தாளிக்கவும். பின் இறக்கிவைத்து 3மணிநேரம் கழித்து கழுவி, உலர்த்தி, மேல் தோலை சீவி நீக்கி எடுத்துக்கொள்ளவும். இனி இதை மருந்துகள் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில் மருந்தின் வீரியம் அதிகரிக்கும். நோய்கள் விரைவில் குணப்படும்.

மிளகு.

மிளகை புளித்த மோரில் 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின் எடுத்து நிழலில் உலர்த்தி மருந்து செய்ய உபயோகப்படுத்தினால் மருந்தின் வீரியம் அதிகரிக்கும்.

திப்பிலி.

கொடிவேலி இலைச்சாற்றில் ஒரு நாழிகை ஊற வைத்துப் பின்னர் வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.

ஆனைத்திப்பிலி.

காடியில் 3 மணிநேரம் ஊறவைத்து பின் வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.

திப்பிலிமூலம்.

கணுக்களை நீக்கி நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதிமதுரம்.

herbal purification suthi

சுத்தமான நீரில் கழுவி மேல்தோலை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி உலர்திக்கொள்ளவும்,

கற்கடகசிங்கி.

வாதுமையெண்ணெய்யில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.

கடகரோகணி.

வேப்பிலை சாற்றில் அல்லது நொச்சிஇலை சாற்றில் 3 மணிநேரம் ஊறவைத்து எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.

கார்போகஅரிசி.

திருநீற்றுப் பச்சிலை சாற்றில் நனைத்தெடுத்து நிழலில் உலர்த்திக்கொள்ளுங்கள்.

வாலுளுவை, சிறுவாலுளுவை.

சோற்றுக்கற்றாழைச் சாற்றில் கழுவி வெயிலில் உலர்த்திக் கொள்க.

பெருங்காயம்.

தாமரை இலைச் சாற்றில் 1 நாழிகை ஊற வைத்து உலர்த்திக்கொள்ளுங்கள். அல்லது கரிநெருப்பில் பொரித்து அதன்பின் மருந்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

செங்கொட்டை.

இதனுடைய மூக்கை வெட்டி கழுநீரில் 3 மணி நேரமும், பின் எருமைப்பாலில் 3 மணிநேரமும் ஊறவைத்து எடுத்து நீரில் கழுவி வெயிலில் உலர்த்துங்கள்.

அரக்கு.

இதனை நறுக்கி உள்ளிருக்கும் குச்சிகளை நீக்கி பயன்படுத்துங்கள்.

தமாலபத்திரி.

இதிலுள்ள பெரிய நரம்புகளை நீக்கி வெயிலில் உலர்த்திக் கொள்க.

தேன் மெழுகு.

உருக்கி தெளியவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

குங்கிலியம்.

herbal_purification

எல்லாவிதமான குங்கிலியங்களையும் ''திரிபலாதி'' கஷாயத்தில் தோலாந்திரமாகக் கட்டி 6 மணிநேரம் எரிக்க குங்கிலியம் சுத்தியாகும்.

குக்கில்.

வேப்பம்பட்டை, சீந்தில், கண்டங்கத்திரி, கோரைக்கிழங்கு, ஆடாதோடை, நிலவேம்பு, வெண்நொச்சி, பேய்புடல் இந்த 8 பொருள்களையும் வகைக்கு 1 பிடி  எடுத்துக்கொள்ளவும்.

ஒரு மண்பாண்டத்தில் மேற்குறிப்பிட்ட பொருட்களை போட்டு நீர் விட்டு துணியினால் ஏடுகட்டி அதன்மேல் குக்கிலை வைத்து மூடி புட்டு அவிப்பது போல் 3 மணிநேரம் அவித்து எடுத்துக் கொள்க.

 கூகைநீர்.

ஏழு முறை நீர் விட்டு கரைத்து கழுவி தெளிந்தபின் வடிகட்டி எடுத்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.

குங்குமப்பூ.

இதனை ஒரு காகிதத்தின் மேல்பரப்பி நெருப்பனலில் காட்டி நொறுங்கும் பதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

கொறுக்காய்ப்புளி.

Herbal Purification

இது கொடுக்காய்ப்புளி அல்ல. கொறுக்காய்ப்புளி .... இதனை பழம் புளி, குடம்புளி எனவும் கூறுவர். இதனை நீர் தெளித்து பிசறி நிழலில் 1 நாள் உலர்த்துக.

சித்திரமூலம் - கருப்பு சித்திரமூலம்.

வேரின் உள்ளிருக்கும் நரம்பை நீக்கிவிடவும். மேல்பட்டையை மட்டும் இடித்து பொடிசெய்து கொள்ளவும்.

பின் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பசும்பால் விட்டு பாத்திரத்தின் வாய்ப்பகுதியை துணியினால் ஏடு கட்டி அதன்மேல் இடித்துவைத்துள்ள பொடியை பரப்பி அதன்மேல் சட்டியால் மூடி பிட்டு அவிப்பதுபோல் மிகக்குறைந்த நெருப்பால் 3 மணிநேரம் அவித்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து பொடிசெய்து கொள்ளவும்.

ஓமம்.

சுண்ணாம்பு நீரில் நனைத்து உலர்த்திக்கொள்ளவும்.

கருஞ்சீரகம்.

வெயிலில் காயவைத்து எடுத்து பொன்மேனியாக வறுத்துக் கொள்ளவும்.

வெந்தயம்.

நன்கு தெளிந்த சோறுவடித்த நீரில் அரை நாழிகை ஊறப்போட்டு எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.

கொத்தமல்லி.

வெந்நீரில் அல்லது எலுமிச்சம்பழச்சாற்றில்  கிளிகட்டி அவித்தெடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள்.

வசம்பு.

சுட்டு கரியாக்கிக் கொள்ளுங்கள்.

கடுக்காய்.

moolikai herbal purification

இதனை உடைத்து கொட்டை நீக்கி சோறு வடித்த நீரில் ஊறப்போட்டு மஞ்சள் நீரை நீக்கிக் கொள்ளவும். மஞ்சள் நீர் நீங்கும் வரை இரண்டு அல்லது மூன்று தடவை செய்துகொள்ளவும்.

நாவி.

இது ஒரு விஷத்தன்மைவாய்ந்த கிழங்கு. எனவே இதனை கவனமாக கையாளவேண்டும். இதனை சிறு துண்டுகளாக நறுக்கி பசுவின் மூத்திரத்தில் 3 நாள் ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்த்துக.

நெல்லிவற்றல்.

பால் விட்டு வேகவைத்து கொட்டையை நீக்கி உலர்த்திக் கொள்ளுங்கள்.

தான்றிக்காய்.

தாழைவிழுது சாற்றில் 3 மணிநேரம் ஊறவைத்து விதையை நீக்கி வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.

சந்தணம் - செஞ்சந்தணம் - கருப்பு அகரு.

herbalpurification

வயிரம் பாய்ந்த பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பிற பகுதியை கழித்துவிடுக.

வெயிலில் உலர்த்தவேண்டிய பொருட்கள்.

செவ்வியம், அரத்தை, அதிவிடையம், சிறுதேக்கு, மஞ்சள், மரமஞ்சள், மற்றும் ஜாதிக்காய் இவைகளை மேல்தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.

சதகுப்பை, காட்டுச்சதகுப்பை, ஏலம், வாய்விளங்கம், தூநீயாங்கிசம், செவ்வள்ளி, தாளிசபத்திரி, சடாமாஞ்சில், சிறுநாகப்பூ, சாதிபத்திரி, மந்திட்டி, கோஷ்டம், கிச்சிலிக்கிழங்கு, சீரகம் இவைகளை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக்கொண்டால் போதும்.

கடுகு , வெண்கடுகு - 3 நாள் வெயிலில் உலர்த்துக.

புளி - கொட்டை நீக்கி 3 நாள் வெயிலில் உலர்த்துக.

கங்குட்டம், கெந்தமாஞ்சில் - 1 நாழிகை வெயிலில் நன்றாக காயவைத்துக் கொள்ளவும்.

அசலா ? போலியா ?

''கஸ்தூரி'', ''கோரோசனை'' - இவ்விரு பொருட்களும் செயற்கை முறையில் வாசனைத்திரவியங்கள் சேர்க்கப்பட்டு போலியாகவும் தயாரிக்கப்படுகின்றன. எனவே அசல் எது, போலி எது என்று பார்த்து வாங்கவும்.

மூலிகை சுத்தி ''இரண்டாம் பகுதி'' படிக்க கீழேயுள்ள சுட்டியை சுட்டுங்க.

>> சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Herbal Purification part-2 <<.

🍺🍺🍺🍺🍺🍺🍺

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

10 கருத்துகள்

  1. பதில்கள்
    1. ஒரு கேள்வி ஒரே ஒரு கேள்வி.

      எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடக்கூடாது சரி(மருந்து மூலிகைகள்)

      ஆனால் இன்று எவருக்குமே எதுவுமே தெரியாமல் போய்விட்டதே சகோதரரே.

      ஏன் இவர்கள் மருந்தை கண்டுபிடித்தார்கள் பின் ஏன் அதற்கு இலைமறைகாயாய் இன்னொரு பெயர் வைத்தார்கள் இதெல்லாம் சரியென்றாலும்
      குருவை நாம் எங்கு போய் தேடுவது . எனக்காக குரு யார் தியானத்தில் அறியலாமா அதற்கு சில மாதங்கள் ஆகலாம் ஏன் வருடங்கள் கூட ஆகலாம்

      நீக்கு
    2. உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் நண்பரே!. வைத்தியர்கள் தங்கள் பிழைப்புக்கு பங்கம் வந்துவிடுமோ என்று மருத்துவ ஏடுகளை பிறர் கண்களில் படாதவாறு ஒளித்தே வைத்துள்ளனர்... காரணம் சுயநலம். அவர்களின் சுயநலத்தினால் மூலிகை மருத்துவம் அழிவின் விளிம்பில்....

      இவை எல்லாவற்றிற்கும் மேலாக இம்மருத்துவத்தை உருவாக்கியது "பதினெட்டு சித்தர்கள்" என்று சொல்கிறோமல்லவா? அவர்களுக்குள்கூட ஒற்றுமை இல்லை... நீ பெரியவனா நான் பெரியவனா என்கின்ற குடுமிபிடி சண்டைதான் நடந்துள்ளது... அதன்காரணமாகவே ஒரு மூலிகைக்கு நீங்கள் சொன்னதுபோல இலைமறை காயாக முப்பத்திரண்டு பெயர்கள்... கேட்டால் "பரிபாஷை"யாம்... ம்..ம்ம் ... என்னத்தைசொல்ல...

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி நண்பரே !!!

      நீக்கு
  3. அருமையான விளக்கம்.உங்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது.நன்றி ஐயா.கடவுளின் அருள் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே !!! தங்களின் வருகையும், பாராட்டுதலும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ... மிக்க நன்றி !...

      நீக்கு
  4. ஜாதிக்காயை நெய்யில் வெடிக்கும் வரை வறுத்து கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான தகவல்களுக்கு நன்றி நண்பரே!

      பொதுவாகவே மூலிகைகளை மருந்துகளில் சேர்ப்பதற்குமுன் அதன் தீமை செய்யும் பண்புகளை குறைப்பதற்கும் நன்மை செய்யும் பண்புகளை அதிகரிப்பதற்கும் "சுத்தி" முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

      ஒரு குறிப்பிட்ட மூலிகைக்கு ஒரே ஒரு முறையில் மட்டும் சுத்தி கிரியை செய்யப்படுவதில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட பலவழி முறைகள் சித்தர்களால் வழிமொழியப்பட்டு வந்துள்ளன. அதில் நமக்கு எது எளிதாக படுகிறதோ அந்த முறையில் சுத்திகரித்து கொள்ளலாம்.

      அதில் நான் இப்பதிவில் சொல்லப்பட்டுள்ளதைபோல சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்தும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் சொல்வதுபோல மேல்தோல் நீக்கி நெய்யில் வறுத்தெடுத்தும் கொள்ளலாம்.

      இரண்டும் நன்மை பயப்பதே...

      வெயிலில் நன்கு காய வைத்து பொடித்து எடுப்பதை பொடியாக (சூரணம்) பயன்படுத்தப்படும் மருந்துகளில் சேர்க்க அதிக நன்மை தரும்..

      நீங்கள் சொல்வது போல் நெய்யில் வறுத்தெடுக்கும் முறையில் தயாரிக்கப்படும் ஜாதிக்காயை லேகியம் முதலியன தயாரிப்பதற்கும், சூடான தேகிகளுக்கு தேவையான மருத்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள அதிக நன்மையை பெறலாம்...

      நீங்கள் இந்த தளத்திற்கு வந்து நல்ல கருத்துக்களை பதிவு செய்ததற்கு மீண்டும் நன்றி நண்பரே! தங்களிடமிருந்து தொடர்ந்து இது போன்ற பல நல்ல கருத்துகளை எதிர்பார்க்கும்....

      உங்கள் - நாஞ்சில் சிவா.

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.