Friday, March 15, 2019

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moolikaikal-suthi-herbal purification-Tamil-part-2.

               மூலிகை சுத்தி என்பது மூலிகைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்தின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.
               ''மூலிகைகள் சுத்தி. [பாகம் -1]'' ல் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்த்தோம். இப்பதிவில் மேலும் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்ப்போம்.

 காட்டு மிளகு:-

               வெற்றிலை சாற்றில் அரை நாழிகை ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்திக் கொள்ளவும்.

வால்மிளகு :-

               காம்புகளை நீக்கி வெயிலில் உலர்திக்கொள்ளுங்கள்.

கஸ்தூரிமஞ்சள் :-


               மேல்தோல் சீவி கழித்து சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்திக் கொள்க.

பறங்கிச்சக்கை :-
                                    இடித்து சூரணம் செய்து ஒரு மண் பாண்டத்தில் பசும்பால் விட்டு வாயில் ஏடு கட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல் சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்து எடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்.

பீதரோகிணி :-
                              மேல்தோல் சீவி கழித்து சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்திக் கொள்க.

 நிலப்பனங்கிழங்கு :-

                               
               இடித்து சூரணம் செய்து ஒரு மண் பாண்டத்தில் பசும்பால் விட்டு வாயில் ஏடு கட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல் சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்து எடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்.

அக்கரகாரம் :-

               மேல்தோல் சீவி கழித்து சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்திக் கொள்க.

 அமுக்குராங்கிழங்கு :-



               இடித்து சூரணம் செய்து ஒரு மண் பாண்டத்தில் பசும்பால் விட்டு வாயில் ஏடு கட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல் சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்து எடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்.

வட்டத்திருப்பி :-


               மேல்தோல் சீவி கழித்து சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்திக் கொள்க.

 தண்ணீர்விட்டான் கிழங்கு :-


                                                          
               இதற்கு தண்ணீர்விட்டான் கிழங்கு, சதாவேலி, வீராணி கிழங்கு என பல பெயர் உண்டு. 
               இதை இடித்து சூரணம் செய்து ஒரு மண் பாண்டத்தில் பசும்பால் விட்டு வாயில் ஏடு கட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல் சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்து எடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்.

மகரப்பூ :-
                     காம்பையும், மகரந்த சூலகங்களையும் நீக்கி காயவைத்து எடுத்துக் கொள்க.

சிற்றேலம் :-


               பொன் வறுவலாக வறுத்துக் கொள்க.

புகையிலை :-

               அகத்திக்கீரையின் மத்தியில் புகையிலையை சுருட்டி வைத்து நீர் விட்டு அவித்துதெடுத்து வெயிலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளுங்கள்.

இருவி :-
                    இதனை சிறு துண்டுகளாக நறுக்கி சிறுநீரில் 3 நாள் ஊறப்போட்டு எடுத்து உலர்த்திக்கொள்க.

நாவி :-


                 இதனை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் மூத்திரத்தில் 3 நாள் ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்த்துக.

 தேவதாரு, அகில் :-




               வைரம் செறிந்த பகுதிகளைமட்டும் எடுத்துக்கொண்டு பொன்வறுவலாக வறுத்து உபயோகிக்கவும்.

குரோசானி ஓமம் :- 
                                         இதனை கைகளால் நன்றாக தேய்த்து உமி, மண் போக்கி புடைத்தெடுத்துக் கொள்க.

நேர்வாளம் :-

               இது ஒரு விதை. இதன் விதை முளை விஷ தன்மை கொண்டது. எனவே இதை எருமை சாணியில் வேகவைத்து தோலை நீக்கி இரண்டாகப் பிளந்து முளையை நீக்கிவிடவும். 
               பின் இதை ஒரு துணியில் தளர்ச்சியாக முடிச்சிக்கட்டி பச்சரிசிக்குள் வைத்து நீர் விட்டு வேக விடவும். அரிசி வெந்ததும் முடிச்சை நீர் விட்டு அலம்பி எடுத்துக்கொள்ளவும். (பச்சரிசி விஷத்தன்மை பெற்றதாக மாறிவிடுமாதலால் அதை உபயோகிக்காமல் கீழே கொட்டி விடவும்). பின் நேர்வாளப்பருப்பை மீண்டும் தளர்ச்சியாக முடிசிக்கட்டி பசும்பாலில் அவித்து எடுத்து கழுவி நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.
               பின் ஒரு சட்டியில் கொஞ்சம் சிற்றாமணக்கெண்ணை தடவி அதில் பருப்பை போட்டு வறுத்ததெடுத்து அதன் பின் தேவைப்படும் மருந்துகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

சிவதை வேர் :-

               இந்த வேரின் நடு நரம்புகளை நீக்கி விடவும். அதன்பின் இதை பசும்பாலில் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்தி அதன் பின் மருந்து தயாரிக்க பயன்படுத்தவும்.

நாகணம் :-
                        ஒரு மண்சட்டியில் நெய் தடவி நாகணத்தை வில்லைகளாக நறுக்கிப்போட்டு வறுத்ததெடுத்து கொள்ளுங்கள்.

சீந்தில் :- 


                   இதன் மேல்தோலை சீவி நீக்கிக் கொள்க.

சமுத்திரசோஷி விதை :-
                                                     இதன் மேலோட்டை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.

எட்டிக்கொட்டை :-


               இந்த கொட்டையானது விஷத்தன்மை வாய்ந்தது. உயிருக்கு ஆபத்தானது. உள்ளுக்குள் சாப்பிடக்கூடாது. இதனை நெல்லுடன் சேர்த்து அவித்து எடுத்து கொள்ளவும். (நெல்லை உணவுக்காக உபயோகப்படுத்தாமல் வெளியே கொட்டிவிடவும்) அதன்பின் சிறுகீரை சாற்றில் 3 மணிநேரம் ஊறப்போட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும்.

தேற்றான் கொட்டை :-


               தேற்றான் கொட்டைக்கு நான்கு பங்கு சிறுகீரை சாறுவிட்டு அரைபாகம் சுண்ட எரித்து நீரில் அலம்பி எடுத்துக்கொள்ளவும்.(அல்லது) பசும்பாலில் ஒரு நாழிகை ஊறப்போட்டு நீரில் அலம்பி எடுத்துக்கொள்ளவும்.

கழற்சி வித்து :-


               இதன் மேலோட்டை நீக்கி, வெந்நீரில் கழுவி உலர்த்திக்கொள்க.

நில ஆவாரை :-

 
               முதலில் இதை இடித்து சூரணம் (பொடி) செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால் விட்டு ஏடு கட்டி (''ஏடு கட்டுதல்'' என்றால் வாய் அகன்ற ஒரு மண் பானைக்குள் பால் அல்லது மூலிகைச்சாறு விட்டு வாய் பகுதியில் குழிவாக ஒரு துணியை கட்டி, குழிவான துணியில் மூலிகை பொடிகளை பரப்பி மூடி அடுப்பில் வைத்து ஆவியில் ''பிட்டு'' அவிப்பது போல் அவித்து எடுக்கும் முறை) சூரணத்தை பரப்பி மேல் சட்டி மூடி 3 மணிநேரம் ஆவியில் அவித்து எடுத்துக்கொள்ளவும்.


ஊமத்தை வித்து, மருள் ஊமத்தை வித்து :-



               இது விஷத்தன்மை வாய்ந்தது. இவற்றை எலுமிச்சை பழச்சாற்றில் 3 மணிநேரம் ஊறவைத்து எடுத்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.


பிரண்டை :-



                       
               இதன் கணுக்களை தெறித்து நீக்கி மேல் தோல் சீவி கழித்து புளிப்பு மோரில் சிறிது உப்பு சேர்த்து 3 நாள் ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.

கிராம்பு :-


                   மொட்டுப் பகுதியை நீக்கி வெயிலில் உலர்த்திக்கொள்க.
  
 வெயிலில் உலர்த்த வேண்டிய பொருட்கள்.

வெட்டிவேர், விலாமிச்சு வேர்        - இவ்விரண்டையும் சிறுதுண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்திக்கொள்க.
               இலவங்கப்பட்டை, தக்கோலம், இலவங்கப்பத்திரி, வெட்பாலை அரிசி, கடலுராய்ஞ்சிப்பட்டை, தலைசுருளிப்பட்டை, வலம்புரிக்காய், காட்டாத்திப்பூ, கோரைக்கிழங்கு, நிலவேம்பு இவைகள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொண்டால் போதுமானது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.