"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Herbal Purification part-2.

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Herbal Purification part-2.

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை.

Herbal Purification.

[Part-2].

மூலிகை சுத்தி என்னும் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. மூலிகை "சுத்தி" என்பது மூலிகை பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்துப் பொருள்களின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.

"சித்தி" என்றால் சித்தித்தல் அதாவது காரிய "வெற்றி"யை குறிக்கும். செய்யும் வேலை பழுதில்லாமல் வெற்றிகரமாக முடிவதை குறிக்கும்.

எனவே, இப்பகுதியில் மருந்துகளை வெற்றிகரமாக பலனளிக்கும் வகையில் செய்துமுடிக்க, மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதனை பார்க்க இருக்கிறோம்.

மூலிகைகள் சுத்தி.

''மூலிகைகள் சுத்தி பாகம் -1 ல் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்த்தோம். இப்பதிவில் மேலும் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்ப்போம்.

 காட்டு மிளகு.

காட்டு மிளகை வெற்றிலைச் சாற்றில் அரை நாழிகை ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்திக்கொள்ளவும்.

வால்மிளகு.

HerbalPurification part-2.

காம்புகளை நீக்கி வெயிலில் உலர்திக்கொள்ளுங்கள்.

பறங்கிச்சக்கை.

இடித்து சூரணம் செய்து ஒரு மண் பாண்டத்தில் பசும்பால்விட்டு வாயில் ஏடுகட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல்சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்துதெடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு.

தண்ணீர்விட்டான் கிழங்கிற்கு சதாவேலி, வீராணி கிழங்கு என பல பெயர்கள் உண்டு. இதனை சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து இடித்து சூரணம் செய்து ஒரு மண்பாண்டத்தில் பசும்பால்விட்டு வாயில் ஏடுகட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல்சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்தெடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்தெடுக்கவும்.

மகரப்பூ.

காம்பையும், மகரந்த சூலகங்களையும் நீக்கி காயவைத்து எடுத்துக்கொள்க.

சிற்றேலம்.

பொன் வறுவலாக வறுத்துக்கொள்க.

புகையிலை.

அகத்திக்கீரையின் மத்தியில் புகையிலையை சுருட்டி வைத்து நீர்விட்டு அவித்துதெடுத்து வெயிலில் உலர்த்திக்கொள்க.

இருவி.

இதனை சிறு துண்டுகளாக நறுக்கி சிறுநீரில் 3 நாள் ஊறப்போட்டு எடுத்து உலர்த்திக்கொள்க.

கலப்பை கிழங்கு சுத்தி.

இதற்கு கண்வலிக்கிழங்கு, கலப்பைக்கிழங்கு, வெண்தோன்றிக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, செங்காந்தள் கிழங்கு என பல பெயர்கள் உண்டு. இது உயிருக்கு ஆபத்தை தரும் விஷமுள்ள கிழங்கு.

இதனை சுத்தி செய்வதற்கு இதன் உலர்த்தப்பட்ட கிழங்கை கொண்டுவந்து பசுவின் கோசலத்தில் (பசுவின் மூத்திரம்) மூன்று நாட்கள் வரை ஊறப்போட வேண்டும். ஒவ்வொரு நாளும் பழைய கோசலத்தை மாற்றி புதியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் கிழங்கை எடுத்து மேல்தோல்சீவி மெல்லிய வில்லைகளாக அரிந்து உப்பிட்ட மோரில் இரவுமுழுவதும் ஊறப்போட்டு பகலில் எடுத்து உலர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழுநாட்கள் தொடர்ந்து செய்துவரவேண்டும். இதனால் இதிலுள்ள விஷத்தின் வேகம் குறையும்.

தேவதாரு மற்றும் அகில்.

Herbalpurificationpart-2.

வைரம் செறிந்த பகுதிகளைமட்டும் எடுத்து பொன்வறுவலாக வறுத்து உபயோகிக்கவும்.

நிலப்பனங்கிழங்கு

நிலப்பனை கிழங்கு என்பது வேறு. கோரைக்கிழங்கு என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.

நிலப்பனை என்பது அனைத்து இடங்களிலும் வளரும் ஒருவகை புல் இனம். இதன் மண்ணிற்குள் இருக்கும் அடித்தண்டானது தடித்து கிழங்குபோன்ற அமைப்பை பெற்றிருக்கும். இதுவே நிலப்பனங்கிழங்கு.

இதனை சுத்தி செய்ய மண்ணை தோண்டி இந்த கிழங்கை தனியாக பிரித்தெடுத்துவந்து சுத்தம் செய்து சிறுசிறு  துண்டுகளாக நறுக்கி காயவைத்து இடித்து சூரணம் செய்து ஒரு மண்பாண்டத்தில் பசும்பால்விட்டு வாயில் ஏடுகட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல்சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்தெடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்தெடுக்கவும்.

குரோசானி ஓமம்.

இதனை கைகளால் நன்றாக தேய்த்து உமி, மண் போக்கி புடைத்தெடுத்துக் கொள்க.

நேர்வாளம்.

இது ஒரு விதை. இந்த விதையிலுள்ள முளைப்பகுதி விஷ தன்மை கொண்டது. எனவே இதை எருமை சாணியில் வேகவைத்து தோலை நீக்கி இரண்டாகப் பிளந்து முளையை நீக்கிவிடவும்.

பின் இதை ஒரு துணியில் தளர்ச்சியாக முடிச்சிக்கட்டி பச்சரிசிக்குள் வைத்து நீர் விட்டு வேக விடவும். அரிசி வெந்ததும் முடிச்சை நீர் விட்டு அலம்பி எடுத்துக்கொள்ளவும்.

(பச்சரிசி விஷத்தன்மை பெற்றதாக மாறிவிடுமாதலால் அதை உபயோகிக்காமல் கீழே கொட்டி விடவும்).

பின் நேர்வாளப்பருப்பை மீண்டும் தளர்ச்சியாக முடிசிக்கட்டி பசும்பாலில் அவித்து எடுத்து கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

(பசும்பாலும் விஷத்தன்மை பெற்றதாக மாறிவிடுமாதலால் அதை உபயோகிக்காமல் கீழே கொட்டி விடவும்).

பின் ஒரு சட்டியில் கொஞ்சம் சிற்றாமணக்கெண்ணை தடவி அதில் பருப்பை போட்டு வறுத்ததெடுத்து அதன் பின் தேவைப்படும் மருந்துகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

சிவதை வேர்.

இந்த வேரின் நடு நரம்புகளை நீக்கி விடவும். அதன்பின் இதை பசும்பாலில் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்தி அதன் பின் மருந்து தயாரிக்க பயன்படுத்தவும்.

"சிவதை வேர்" சிறிது விஷ தன்மை பொருந்தியது என்பதால் இதை அவிக்க பயன்படுத்திய பாலை உணவாக பயன்படுத்துதல் கூடாது.

நாகணம்.

"நாகணம்" என்பது ஒருவகையான உயிருள்ள கடல் சங்கின் வாய் பகுதியில் காணப்படும் மூடி போன்ற அமைப்பு ஆகும். இறந்து கரை ஒதுங்கும் சங்கில் இது காணப்படுவதில்லை. நத்தையுடன் ஒட்டியபடி காணப்படும் இது கடினமானது. ஆபத்துக்காலங்களில் சங்கின் வாயை மூடிக்கொள்ளவும் அதன் மூலம் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படுத்துகிறது.

ஒரு மண்சட்டியில் நெய் தடவி நாகணத்தை வில்லைகளாக நறுக்கிப்போட்டு வறுத்ததெடுத்து கொள்ள சுத்தியாகும்.

சீந்தில்.

வெற்றிலை போன்ற இலையமைப்பைக்கொண்ட ஒருவகை கொடி. வேலிகளில் படர்ந்தபடி வளரும். இதன் மேல்தோலை சீவி நீக்கியபின் பயன்படுத்துக.

அமுக்கிராங்கிழங்கு.

இதற்கு அமுக்கராங்கிழங்கு, அசுவகந்தம், அசுவகந்தி என பலபெயர்கள் உண்டு.

இதனை மேல்தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து இடித்து சூரணம் செய்து கொள்ளவும். ஒரு மண்பாண்டத்தில் பசும்பால்விட்டு வாயில் ஏடுகட்டி அதன்மேல் சூரணத்தை பரப்பி மேல்சட்டி மூடி பிட்டு அவிப்பதுபோல் 3 மணி நேரம் அவித்தெடுத்து வெயிலில் உலர்த்தி அதன்பின் மீண்டும் இடித்து அல்லது அரைத்தெடுத்து அதன்பின் மருந்துகளில் உபயோகப்படுத்தவும்.

சமுத்திரசோஷி விதை.

இதன் மேலோட்டை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.

எட்டிக்கொட்டை.

herbalpurificationpart2.

இந்த கொட்டையானது விஷத்தன்மை வாய்ந்தது. உயிருக்கு ஆபத்தானது. உள்ளுக்குள் சாப்பிடக்கூடாது.

இதனை நெல்லுடன் சேர்த்து அவித்து எடுத்து கொள்ளவும். (நெல்லை உணவுக்காக உபயோகப்படுத்தாமல் வெளியே கொட்டிவிடவும்) அதன்பின் சிறுகீரை சாற்றில் 3 மணிநேரம் ஊறப்போட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும்.

தேற்றான் கொட்டை.

தேற்றான் கொட்டைக்கு நான்கு பங்கு சிறுகீரை சாறுவிட்டு அரைபாகம் சுண்ட எரித்து நீரில் அலம்பி எடுத்துக்கொள்ளவும். (அல்லது) பசும்பாலில் ஒரு நாழிகை ஊறப்போட்டு நீரில் அலம்பி எடுத்துக்கொள்ளவும்.

கழற்சி வித்து.

Herbal Purification 2.

இதன் மேலோட்டை நீக்கி, வெந்நீரில் கழுவி உலர்த்திக்கொள்க.

நில ஆவாரை.

முதலில் இதை இடித்து சூரணம் (பொடி) செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால் விட்டு ஏடு கட்டி சூரணத்தை பரப்பி மேல் சட்டி மூடி 3 மணிநேரம் ஆவியில் அவித்து எடுத்துக்கொள்ளவும்.

''ஏடு கட்டுதல்'' என்றால் வாய் அகன்ற ஒரு மண் பானைக்குள் பால் அல்லது மூலிகைச்சாறு விட்டு வாய் பகுதியில் குழிவாக ஒரு துணியை கட்டி, குழிவான துணியில் மூலிகை பொடிகளை பரப்பி மூடி அடுப்பில் வைத்து ஆவியில் ''பிட்டு'' அவிப்பது போல் அவித்து எடுக்கும் முறை. 

ஊமத்தை வித்து, மருள் ஊமத்தை வித்து.

இது விஷத்தன்மை வாய்ந்தது. இதை தவறுதலாக அதிக அளவில் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தையும் குறைந்த அளவில் சாப்பிட்டால் மூளை பாதிப்பையும் (பைத்தியம்) ஏற்படுத்தும். எனவே மருத்துவ அனுபவம் இல்லாதவர்கள் இதனை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும். இதனை சுத்தி செய்ய எலுமிச்சை பழச்சாற்றில் 3 மணிநேரம் ஊறவைத்து எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.

பிரண்டை.

இதன் கணுக்களை தெறித்து நீக்கி மேல் தோல் சீவி கழித்து புளிப்பு மோரில் சிறிது உப்பு சேர்த்து 3 நாள் ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.

கற்றாழை.

இன்று உடல் சூட்டை  தணிக்க கற்றாழை சாப்பிடும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இதனை அப்படியே சாப்பிடுதல் கூடாது. கண்டிப்பாக சுத்தி செய்த பின்பே சாப்பிடவேண்டும். இல்லையெனில் இதிலுள்ள  "அலோனின்" என்னும் வேதிப்பொருள் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உடல் நலத்திற்கும் மிகுந்த துன்பத்தை உண்டாக்கும்.

herbalpurificationpart2.

சரி, இனி இதனை எவ்வாறு சுத்தி செய்வது என்பதனை பார்ப்போம்.

முதலில் நன்கு பருத்த சதைப்பிடிப்பான கற்றாழை மடலை கொண்டுவந்து துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். அப்போது அதிலிருந்து மஞ்சள் நிறமான திரவம் வெளிப்படும். இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது. எனவே அது முற்றிலுமாக நீங்கும்படி நன்கு கழுவி எடுக்கவும். பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து மேல்தோலை சீவி கழிக்கவும்.

உள்ளே உள்ள சதைப்பகுதியை மட்டும்(ஜெல்) எடுத்து சுத்தமான நீரில் அதிலுள்ள வழவழப்பான திரவம் நீங்கும்படி நன்கு அழுத்தி கழுவவும். பின் வேறு சுத்தமான நீர் கொண்டுவந்த அதிலும் மேற்படி கழுவவும். இவ்வாறு 7 அல்லது 8 முறை புதிய நீரில் அழுத்தி கழுவி அதிலுள்ள சாறுகள் எல்லாம் நீங்கியபின் கண்ணாடிபோல் பளபளப்பாக வரும்படி எடுத்துக்கொள்ளவும். இதன் பின்பே இது சாப்பிட உகந்தது.

இவ்வாறு சுத்தம் செய்யாமல் அப்படியே சாப்பிட்டால் கற்றாழையில் உள்ள வழவழப்பான மஞ்சள் மற்றும் வெண்மை நிற நீர் மலக்கழிச்சல் மற்றும் வயிற்றில் எரிச்சலை உண்டுபண்ணுவதோடு உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

கிராம்பு.

மொட்டுப் பகுதியை நீக்கி வெயிலில் உலர்த்திக்கொள்க.

வெயிலில் உலர்த்த வேண்டிய பொருட்கள்.

வெட்டிவேர், விலாமிச்சு வேர் - இவ்விரண்டையும் சிறுதுண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்திக்கொள்க.

அக்கரகாரம், பீதரோகிணி, கஸ்தூரிமஞ்சள், வட்டத்திருப்பி இவைகளை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் உலர்த்தவும்.

மேலும், இலவங்கப்பட்டை, தக்கோலம், இலவங்கப்பத்திரி, வெட்பாலை அரிசி, கடலுராய்ஞ்சிப்பட்டை, தலைசுருளிப்பட்டை, வலம்புரிக்காய், காட்டாத்திப்பூ, கோரைக்கிழங்கு, நிலவேம்பு இவைகள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொண்டால் போதுமானது.

சுத்தி ''மூன்றாம் பகுதி'' (part 3) படிக்க அடுத்துள்ள சுட்டியை உங்கள் விரல்களால் தட்டுங்கள்..

>> சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Saltl Purification - part- 3 <<

💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

12 கருத்துகள்

  1. ரொம்ப நாளா தேடிய விசயம்... நன்றி சேர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூலிகைகள் சுத்தி என்னும் இந்த மருத்துவ பகுதி தங்களுக்கு பயனளித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது நண்பரே ! தங்களின் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி !!!

      நீக்கு

  2. நல்ல பதிவு நன்றி.
    சுத்தி செய்த பொருட்கள் வேண்டும்.
    எங்கே கிடைக்கும். என்று சொல்லுங்கள்.
    நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி !!! பொதுவாக நாட்டு மருந்து கடைகளில் சுத்தி செய்த பொருட்கள் என்று தனியாக விற்பனை செய்வதில்லை. நாம்தான் மருந்துசரக்குகளை வாங்கிவந்து தனியாக முறைப்படி சுத்திசெய்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றி !

      நீக்கு
  3. அய்யா இம்முறை பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன் உதவ முடியுமா சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை அதை சிறிது சிரத்தையுடன் விளக்கம் அளிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா ! உங்களுக்கு உதவுவது என்னுடைய தலையாய கடமையில் ஒன்றாக உணர்கிறேன். எனவே உங்களுக்கு எந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லையோ அதனை அடுத்த கமெண்டில் தாராளமாக கேளுங்கள்.. உங்கள் சந்தேகத்திற்கு பதிலளிக்க தயாராகவே இருக்கின்றேன். இந்த வலைப்பதிவில் எழுதப்படும் அனைத்துவிதமான கட்டுரைகளிலும் ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் தயக்கமில்லாமல் கேட்கலாம்.. உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் அறிவியல் பூர்வமாக பதிலளிக்க என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன். அதே வேளையில் பதிவுகளில் தவறுகள் மற்றும் தவறான கருத்துக்கள் எதாவது இருந்து அதனை சுட்டிக்காட்டினால் அதனை திருத்திக்கொள்ளவும் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். எனவே தயக்கமில்லாமல் கேளுங்கள் ... வலையகத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி !!!

      நீக்கு
  4. நாகணம் என்பது எந்த பொருளை குறிப்பது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், சந்தேகங்களை தயக்கமில்லாமல் வினவியதற்கும் நன்றி நண்பரே!...

      பொதுவாக கடலில் பலவகையான சங்குகள் காணப்படுகிறதல்லவா. இந்த சங்கினுள் சிறியது முதல் பெரியது வரையான நத்தைகள் வாழ்கின்றன.

      ஆமைகள் தங்கள் பாதுகாப்பிற்காக எவ்வாறு கடின ஓடுகளை கொண்டுள்ளதோ அதுபோல நத்தைகளும் தங்கள் பாதுகாப்பிற்காக சுண்ணாம்பினால் உருபெற்ற கடினமான ஓடுகளை கொண்டுள்ளன. நத்தைகள் வளர வளர அதை சுற்றியுள்ள இந்த ஓடும் செல் பிளவுறும் அடிப்படையில் பெரிதாக மாற்றம் பெறுகின்றன.

      உயிருள்ள சங்கை பிடித்து அதன் வாய்பகுதியை பார்த்தீர்கள் என்றால் நத்தையுடன் ஒட்டிக்கொண்டு தட்டையான ஒரு மூடிபகுதி இருக்கும். இறந்து கரை ஒதுங்கும் சங்கில் இந்த மூடி இருக்காது. இந்த மூடி பகுதியையே "நாகணம்" என்கின்றனர். இது ஒருவித வாசனையுடன் காணப்படும்.

      இந்த மூடி பகுதியை சேகரித்து காயவைத்து மருந்தாக பயன்படுத்துகின்றனர். அனைத்து வகையான சங்கின் மூடிகளும் நாகணமாக பயன்படுவதில்லை. ஒரு குறிப்பிட்டவகை சங்கின் வாய்பகுதியில் காணப்படும் மூடியே நாகணமாக பயன்படுகின்றன.

      அதாவது "நாகணம்" என்பது உயிருள்ள ஓர்வகை குறிப்பிட்ட சங்கின் வாய்பகுதியில் தட்டையாக காணப்படும் மூடி போன்ற அமைப்பு. நன்றி!

      நீக்கு
  5. நன்னீர் நத்தை ஓட்டை நாகணம் என்று சொல்லலாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே! நன்னீர் நத்தை ஓட்டையோ அல்லது கடல் நத்தை ஓட்டையோ "நாகணம்" என அழைப்பதில்லை. அவை வெறும் நத்தை ஓடு அவ்வளவுதான். கடலில் மட்டுமே வாழும் ஒரு குறிப்பிட்ட நத்தை வாசம் செய்யும் சங்கின் (கவனிக்கவும் அனைத்து வகையான சங்கும் அல்ல) வாய் பகுதியை மூடியபடி காணப்படும் தட்டையான "மூடி"யை மட்டுமே "நாகணம்" என அழைக்கின்றனர்.

      நீக்கு
  6. மழை காலத்தில் கிடைக்கும் நத்தை கால் பகுதியில் உள்ள
    வில்லை போன்ற பகுதியை நாகணம் என்று வைத்தியர்
    ஒருவர் கூறினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். பொதுவாக சித்தா, யூனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் குறிப்பிட்ட "ஒர்ஜினல்" பொருள் கிடைக்கவில்லையெனில் அதனையொத்த பண்புள்ள மாற்று பொருளை பயன்படுத்திகொள்ளலாம் என்னும் ஒரு மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிபிட்ட மூலிகை கிடைக்காத பட்சத்தில் அதற்கு பதிலாக அதே குணத்தை கொண்ட வேறொரு மூலிகையை பயன்படுத்திக்கொள்வது நடைமுறையில் உள்ளது. எனவே ஒரிஜினல் நாகணம் கிடைக்காதவர்கள் அதன் குணத்தை ஓரளவு ஒத்த பிறவகை நத்தை வில்லைகளையும் பயன்படுத்துவார்களாக இருக்கலாம். இதனை மேற்குறிப்பிட்ட மருத்துவ முறைகள் அனுமதிக்கின்றன என்றாலும் ஒர்ஜினல் பொருளை பயன்படுத்துவதே கூடுதல் சிறப்பு.

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.