"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
யோகாசனம் - யோகா அறிமுகம். Yogasana Yoga Introduction.

யோகாசனம் - யோகா அறிமுகம். Yogasana Yoga Introduction.

Yogasana Yoga Introduction.

சித்தர்கள் மனிதகுலம் மேன்மையுற பல அரும்பெரும் விஷயங்களை இந்த உலகிற்கு தந்து சென்றுள்ளனர். அவைகள் இலக்கியம், வேதங்கள், தத்துவங்கள், தற்காப்புக்கலைகள், மருத்துவம் இன்னும்பல..


யோகா அறிமுகம்.

அவைகளில் மனித உடலும், மனமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் பன்னெடுங்காலம் நிலைத்திருக்க அவர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோகக்கலைகளும் ஆகும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அதுபோல் உடல் என்ற ஒன்று இருந்தால்தான் 'உலகம்' என்கிற கலைக்கூடத்தில் 'வாழ்க்கை' என்கிற எழிலோவியத்தை தீட்டிப்பார்க்க முடியும். உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது, அதில் உறுதியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டும். 

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ சித்தர்கள் நமக்களித்த வற்றாத இரு அருஞ்செல்வங்களே மருத்துவமும், யோகக்கலையும் ஆகும்.

நோய் வந்தபின்பு மருந்து தேடி ஓடுவதை விட நோய் வராமலேயே உடலை சீர்படுத்திக் கொள்வதுதான் சிறப்பானதும், புத்திசாலித்தனமானதும் ஆகும். அந்த வகையில் நோய்கள் நெருங்கமுடியாத வகையில் உடலை செதுக்கும் திறன்படைத்த ''யோகக்கலை'' மருத்துவத்தைவிட ஒருபடி மேலான சிறப்பைப் பெற்று விளங்குகிறது.

யோகாசனம் - வரலாறு.

''யோகம்'' என்ற பதத்திற்கு ''ஒருமுகப்படுத்துதல்'' மற்றும் ''இணங்கியிருத்தல்'' என்று பொருள்.

மனதையும். உடலையும் புலன்களின்பால் அலைபாயாமல் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி மனிதனின் மனதில் புதைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை தட்டியெழுப்பி அதை எவ்வாறு மனித சமுதாயத்திற்கு பயன்படும்படி செய்யலாம் என்பதை கற்றுத்தருவதே ''யோகக்கலை'' ஆகும்.

யோகத்தின் வகைகள்.

யோகம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன :-

  • கர்மயோகம். (பலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவை).
  • பக்தி யோகம் . (முழுமையாக தன்னை அற்பணித்தல்).
  • ஞானயோகம். (பூரண அறிவுடன் செயலாற்றல்).
  • இராஜயோகம்.(யோகங்களில் முதன்மையானது. விஞ்ஞான நுட்பம் கொண்டது).

யோகக்கலை வேதகாலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முறையாக வரையறுக்கப்படாமல் இருந்த யோகசாஸ்திரத்தை முறையாக ஒருங்கிணைத்து வடிவமைத்த பெருமை ''பதஞ்சலி'' முனிவரையே சாரும்.

இராஜயோகம், ஹதயோகம் என்னும் இருவகை சாஸ்திரங்களில்தான் யோகாசனம் விவரிக்கப்படுகிறது. எனவே இரு சாஸ்திரங்களையும் ஆராய்வோம்.

இராஜயோகம்.

இதில் ''இராஜயோகம்'' என்ற யோக சூத்திரத்தில்தான் ''யோகாசனம்'' முதன்முறையாக கையாளப்படுகிறது. இராஜயோகம் என்பது மனதை நல்வழிப்படுத்தி, உடலை நேர் நிறுத்தி உடலினுள் உறைந்திருக்கும்  ''குண்டலினி'' என்னும் மனோசக்தியை தட்டியெழுப்பி மனிதனை அபரிதமான சக்தியுள்ளவனாக மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளையும், பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்கும் சாஸ்திரமாகும்.

இராஜயோகம் 8 அங்கங்களை உள்ளடக்கியது. அவையாவன :-

  1. இயமம்.
  2. நியமம்.
  3. ஆசனம்.
  4. பிராணாயாமம்.
  5. ப்ரத்யாஹரம்.
  6. தாரணை.
  7. தியானம்.
  8. சமாதி.

இவைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

நாம் செய்யும் எந்த ஒரு விஷயமும் முழுமையான வெற்றியை அடையவேண்டுமென்றால் ''ஒழுக்கம்'' மிக முக்கியம். ஒழுக்கம் இல்லாத சாதனை விழலுக்கு இறைத்த நீர்போல வீண் போகும். இராஜயோகத்தின் 'இயமம்', 'நியமம்' ஆகிய முதல் இரண்டு அங்கங்களும் ஒழுக்கத்தையே போதிக்கிறன.

இயமம்.

சாந்தகுணம், பேராசை நீக்குதல், பொறுமை முதலிய நல்லொழுக்கத்தை கற்று தரும் அங்கம்.

நியமம்.

போதுமென்ற மனம், எளிமை, கண்டிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், சரணாகதி இவைகளை கற்று தரும் அங்கம்.

ஆசனம்.

தியானம், தவம் முதலிய பயிற்சிகளின் போது உடல் துன்புறாத வண்ணம் சவுகரியமாக உட்காருவதற்கான இருக்கை (ஆசனம்) முறையை கற்று தருவது.

எவ்வாறெனில், தியானம், தவம் செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து உட்காரும்போது உடல் நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவேண்டியது மிக முக்கியம். கூனல் விழுந்த முதுகுடன் உட்காருதல் கூடாது. நேராக உட்காராமல் முதுகை வளைத்துக்கொண்டு உட்கார்ந்து தியானம் செய்தால் மூளை கடுமையான பாதிப்பை அடையும்

எனவே காலை மடக்கி நேராக உட்காரும்போது அவர்கள் உட்காரும் அந்த முறை அவர்களுக்கு வலியை ஏற்படுத்தாதவாறு சவுகரியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களால் பலமணிநேரம் ஒரே இடத்தில் நேராக உட்கார்ந்து தியானம் செய்ய முடியும்.

ஆனால் ஒருவருக்கு சவுகரியமாக இருக்கும் ஆசனம் (ஆசனம் என்றால் காலை மடக்கி நேராக உட்காரும் முறை.) இன்னொருவருக்கு உடம்பில் வலியை ஏற்படுத்தலாம். எனவே  அவரவர் உடல்நிலைக்கு தகுந்தவாறு உட்கார பலவகையான ஆசன வகைகளைக் கற்று தருவதே இந்த அங்கத்தின் பணியாகும்.

''இராஜயோகம்'' சொல்லும் பலவகையான ஆசனங்களை கீழே கண்டுணர்க...

yogasana

பத்மாசனம் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் - ஐ கிளிக்குங்க

>> பத்மாசனம் - கமலாசனம். Padmasana - Kamalasana <<

சோமாசனம் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் - ஐ கிளிக்குங்க.

 >> சோமாசனம் - Somasana <<

ஸ்வஸ்திகாசனம் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் - ஐ கிளிக்குங்க.

>> ஸ்வஸ்திகாசனம் - Swastikasana <<

இதில் நாம் எதாவது ஒரு ஆசனத்தை பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆசனங்களை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விளக்கமாக காணலாம்.

பிராணாயாமம்.

ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்கு படுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை. இப்பயிற்சி "ஆஸ்துமா" போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களை விரட்டியடிக்கும் திறன் படைத்தது.

மூச்சுக்காற்றிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒருவர் பயம்கொள்ளும் போது மூச்சுக்காற்று தடைபடும். மனது சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனப்படுவதை கணலாம். மனதில் பயஎண்ணங்கள் வரும்போது கீழ்மூச்சு,மேல்மூச்சு ஏற்படுவதை காணலாம். வாழ்க்கையில் சலிப்படையும் போதோ அல்லது மனதில் பொறாமை எண்ணம் ஏற்பட்டாலோ ''பெருமூச்சு'' விடுவதை காணலாம். 

இதயநோய் உள்ளவர்கள் மனதில் அதிகளவு சந்தோஷப்படுவதோ, துக்கப்படுவதோ கூடாது என்பார்கள். ஏனெனில் இந்த அதிகப்படியான மன உணர்ச்சிகள் மூச்சுக்காற்றில் தடையை ஏற்படுத்தி அதன்மூலம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால்.

ஆக மனதில் ஏற்படும் எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

மன எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது எனில் அதே மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துவதன்மூலம் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?

ஆம்.. முடியும் என்றுதான் தோன்றுகிறது.

அப்படியெனில் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்தி அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி ஆசையினாலும், காமத்தினாலும், பொறாமையினாலும் அலைபாயும் மனதை எளிதாக கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவதே பிரணாயாமம்.

பிராணாயாமம் அதற்கான விதிமுறைகளின்படி மிக கவனமாக பயிற்சி எடுக்கவேண்டும். தவறினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முறையாக நன்கு பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் பயிற்சி எடுப்பதே சிறப்பு.

பிராணாயாமத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவையாவன :-

  • பஸ்திரிகா.
  • கபாலபதி.
  • நாடிசுத்தி.
  • சிட்காரி.
  • சிட்டாலி.
  •  உஜ்ஜயி.
  • சூரிய பேதனா.
  • சந்திர பேதனா.
  • பிரமாரி.
  • மர்ச்சகா.
  • பிளாவினி.    

மேலும் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

ப்ரத்யாஹரம்.

ஐம்புலன்களை உலக ஆசாபாசங்களிலிருந்து விலக்குவதற்கான பயிற்சி.

தாரணை.

பல பொருள்களின் மீது செல்லும் கவனத்தை தடுத்து ஒரே பொருளின் மீது குவிக்கும் பயிற்சி.

தியானம்.

ஒருபொருளை அல்லது தத்துவத்தை ஆழ்ந்து சிந்திப்பதின் மூலம் மன வலிமையில் அளப்பரிய ஆற்றலை பெறுவதற்கான பயிற்சி.

சமாதி.

மனம் ஒருமைப்பட்ட இறுதி நிலை.

இதுவரை யோகம் என்றால் என்ன என்பதையும், அதில் முதன்மையான ''இராஜயோகம்'' பற்றியும் சுருக்கமாக பார்த்தோம். இனி ''ஹதயோகம்'' என்றால் என்ன என்று பார்ப்போம்...

ஹதயோகம்.

இது இராஜயோகத்தின் 3 வது அங்கமாகிய ஆசனம் வகையை சார்ந்தது என்றாலும் அதில் இருந்து இது கொஞ்சம் மாறுபட்டது.

எப்படியெனில், இராஜயோகம் பிராணாயாமம், தியானம் செய்வதற்கு ஏற்ற வகையில் உடலை நேராக வைக்க உட்கார்ந்து பயிற்சி மேற்கொள்ளும் சிலவகை ஆசனங்களை மட்டுமே விவரிக்கிறது. மற்றபடி அது ஆசனங்களை பற்றி விரிவாக எதுவும் பேசவில்லை.

ஆனால் ''ஹதயோகம்'' அப்படி அல்ல. இது நூற்றுக்கணக்கான ஆசனங்களை விளக்கும் சிறப்பான சாஸ்திரம்.

yogasana-yoga

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பதற்கிணங்க ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் எந்த பெரிய சாதனையும் தடங்கல் இல்லாமல் செய்யமுடியும் என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதற்கான நூற்றுக்கணக்கான ஆசனங்களையும் விவரிக்கிறது.

யோகாசனம் என்றால் என்ன?

''யோகம்'' என்றால் இணங்கி இருத்தல் என்று பொருள். ''ஆசனம்'' என்றால் இருக்கை என்று பொருள். யோகாசனம் என்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலை இணக்கமாக இருக்க வைப்பது என்று பொருள்.

இறுக்கமாக மரக்கட்டைபோல் வளையும் தன்மையற்று இருக்கும் நமது உடலை பலவித பயிற்சிகளின் மூலம் நெகிழும் தன்மையுள்ள உடலாக மாற்றி அதன் மூலம் உடலின் உள்ளுறுப்புகளை இதமாக மசாஜ் செய்து அனைத்து உறுப்புகளுக்கும் சீராக இரத்தத்தை செலுத்தி அனைத்து உறுப்புகளின் நோய்களையும் தீர்ப்பதில் முதன்மையான பயிற்சியாக விளங்குகிறது.

உடற்பயிற்சி - யோகா பயிற்சி வேறுபாடு

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.  உடற்பயிற்சியினால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன.

உடற்பயிற்சியானது உடலின் அனைத்து உறுப்புகளும் இரும்புபோல் வலிமையாவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறது. அதனாலேயே அதன் பயிற்சிகள் யாவும் வேகமான அசைவுகளாகவும், அதிகம் பளு உள்ள பயிற்சிகளாகவும் அமைகிறது. உடலின் உள்ளே சில உறுப்புகள் மிருதுவான தன்மையுடன் இருந்தால்தான் அவைகளால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் மென்மையாக இருக்க வேண்டிய உள்ளுறுப்புகளையும் இறுக வைத்து விடுகிறது.

மென்மையாகவும், துவளும் தன்மையுடனும் இருக்கவேண்டிய பல உள்ளுறுப்புகள் கடினமானப் பயிற்சியின் மூலம் இறுக்கப்பட்டு அதன் இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்படுவது குறித்து அது பெரிதும் கவலைப்படுவதில்லை. எனவேதான் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் முதுமைக்காலங்களில் பல ஆபத்தான நோய்களில் துன்புறுவதைக் காண்கிறோம்.

ஆனால் யோகாசனப்பயிற்சி உடலை இறுக்குவதில்லை. மாறாக உடலை நன்கு துவளும் தன்மையுடன் வைக்கிறது. சிறுகுழந்தைகளின் உடல் எவ்வாறு ரப்பர் போல் வளையும்தன்மை பெற்றுள்ளதோ அதே தன்மைக்கு உங்கள் உடலை கொண்டு வருகிறது. எனவே முதுமையிலும் உடல் இளமையும் சுறுசுறுப்பும் பெற்று திகழ்கிறது.

Yogasana Yoga Introduction Daily yoga

உடலின் உள்ளுறுப்புகளை இறுக்கநிலைக்கு கொண்டு செல்லாமல் அத்தனை உள் உறுப்புகளையும் மென்மையாக மசாஜ் செய்து இரத்தஓட்டத்தை சீராக்கி நரம்புமண்டலத்தை வளப்படுத்தி என்றும் மாறாத இளமையையும், சுறுசுறுப்பான நோயணுகா உடலையும் தருகிறது.

யோகாசனம் செய்வதற்கான விதிமுறைகள்.

6 வயதிலிருந்து எல்லோரும் யோகா செய்ய ஆரம்பிக்கலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். மாலையில் உடல் நன்றாக வளைந்து கொடுக்கும்.

பயிற்சி செய்யும் இடம் நல்ல தூய்மையான காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். உடலை உறுத்தும் வெறும்தரை பயிற்சிக்கு ஏற்றதல்ல. எனவே ஜமுக்காளத்தை நான்காக மடித்து விரித்து அதன் மேல் உட்கார்ந்து பயிற்சி செய்யவும்.

இறுக்கமான ஆடைகள் பயிற்சிக்கு ஏற்றதல்ல. பயிற்சியின்போது உடல் தடையில்லாமல் இயங்குவதற்கு ஏற்றவாறு தளர்வான குறைந்த அளவு ஆடைகளே போதுமானது.

பயிற்சியின்போது வயிறு காலியாக இருக்கவேண்டும். காலையில் உணவருந்துவதற்கு முன்பும், மாலையில் உணவருந்தி 3 மணிநேரம் கழித்த பின்பும் பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சியில் ஈடுபடும் முன் மலசலம் கழித்து சிறிது வெந்நீர் அருந்திவிட்டு பயிற்சியில் ஈடுபடலாம். தேவையெனில் குளிரூட்டப்படாத பழரசம் சிறிது அருந்தலாம்.

எடுத்த எடுப்பிலேயே கடினமான யோகாசனப் பயிற்சிகளை செய்ய முயற்சிக்க வேண்டாம். செய்வதற்கு எளிதான யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து உடலை பழக்கப்படுத்தவும்.

பொதுவாக யோகாசனம் செய்பவர்கள் மிக முக்கியமான ஒரு விஷத்தை இங்கு கவனிக்க வேண்டியது மிக முக்கியம். அரைமணி நேரம் அல்லது 1 மணி நேரம் பயிற்சில் ஈடுபடுகிறீர்கள் என்றால் குறைந்தது 4 முதல் 6 வகையான ஆசனங்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்வீர்கள் அல்லவா அப்படி பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும் ஆசனம் முதல் ஆசனம் உடலை முன்னோக்கி வளைக்கும் படியான ஆசனமாக இருந்தால் அடுத்து செய்யும் இரண்டாவது ஆசனம் உடலை பின்னோக்கி வளைக்கும் ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்ய வேண்டும். இதனையே மாற்று ஆசனம் என அழைப்பர்.

அப்படி பயிற்சி செய்யாமல் அனைத்து ஆசனங்களையும் ஒரே பொசிஷனில் இருக்கும்படியான ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தீர்கள் என்றால் அஜீரணக்கோளாறு. மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, முதுகு கூன்விழுதல் போன்ற உடல்பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே ஆசனங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.

தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம் .

பயிற்சி செய்யும்போது உங்கள் முழு கவனமும் பயிற்சிலேயே இருக்கவேண்டும். அதைவிடுத்து டிவி பார்த்துக்கொண்டோ, earphone ல் பாடல் கேட்டுக்கொண்டோ, அருகில் யாரிடமாவது பேசிக்கொண்டோ பயிற்சியில் ஈடுபட்டால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. பயிற்சியின்போது அமைதியும், நிதானமுமே பிரதானம்.

பயிற்சி முடிந்தவுடன் நீர் அருந்துதல் கூடாது. ஏனெனில் பயிற்சியின் காரணமாக உடல் உஷ்ணமாக இருக்கும். பயிற்சி முடிந்த உடனே நீர் அருந்துவதால் உடல் உஷ்ணம் உடனடியாக குறைக்கப்படும், திடீரென ஏற்படும் இந்த உஷ்ண மாறுபாடு உங்கள் நரம்புமண்டலத்தை பாதிக்கும். எனவே பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்தே வென்னீர் அருந்துதல் வேண்டும். 30 நிமிடம் கழித்தே உணவு உண்பதோ, முகம் கழுவுவதோ, குளிப்பதோ செய்ய வேண்டும்.

பயிற்சியின்போது உடலை தளர்வான நிலையில் வைத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் ஆசனம் செய்ய தொடங்கும்போது எடுத்தயெடுப்பிலேயே மிக சரியாக செய்யமுடியாது. உடம்பு சரியாக வளைத்து கொடுக்காது. எவ்வளவு வளைந்துக்கொடுக்கிறதோ அவ்வளவு செய்தால் போதும். சிறிது சிறிதாக முயற்சி எடுக்க சில மாதங்களில் உடல் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்கும்.

அதைவிடுத்து ஒரேநாளில் சரியாக செய்துவிடவேண்டும் என்று உடலை அதிகம் துன்புறுத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிடும். அதன்பின் மருத்துவமனை ''பெட்'' டில் படுத்துதான் யோகாசனம் செய்ய வேண்டியிருக்கும் ஜாக்கிரதை.

சிலபேர்களுக்கு எத்தனை மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தாலும் சில வகையான கடின ஆசனங்களை சரியாக செய்ய அவர்களின் உடல் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கலாம். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்பு, உடலிலுள்ள எலும்புகளின் வளர்ச்சி, நரம்பு மண்டல அமைப்புகள் காரணமாக இருக்கலாம். எனவே அப்படியான உடல் இசைந்து கொடுக்காத கடின ஆசனத்தை பயிற்சி செய்ய தொடர்ந்து முயற்சி எடுப்பதை தவிர்த்து தன் உடல் ஒத்துழைக்க கூடிய ஆசனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தல் வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதுபோல் ''தம்'' கட்டிக்கொண்டோ அல்லது முறுக்கேறிய நிலையில் இறுக்கமாக உடலை வைத்துக்கொண்டோ பயிற்சியில் ஈடுபடக்கூடாது. மனதையும், உடலையும் எந்தவித பரபரப்பும் இல்லாமல் கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்காமல் ஒரே சீராக மூச்சு விட்டபடி நிதானமாக பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதுபோல் வேகமான உடலசைவு கூடாது. யோகாசனப் பயிற்சியை நிதானமாகவும், பொறுமையாகவும் செய்யவேண்டும். யோகாசனம் என்பது உடலின் உள்ளுறுப்புகளையும், வெளியுறுப்புகளையும் மசாஜ் செய்து அத்தனை உறுப்புகளுக்கும் இரத்த ஒட்டத்தை சீராக செலுத்தி நோயில்லா பெருவாழ்வு தரும் ஒரு அற்புத கலை என்பதை கருத்தில் கொள்ளவும்.

யோகாசனப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வேறு கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நலம். ஏனெனில் கடினமான உடற்பயிற்சியினால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன. உடல் இறுக்கமடைவதால் உடல் வளையும் தன்மையை இழந்துவிடுகின்றன. இதனால் யோகாசனம் செய்வதற்கு உடல் ஒத்துழைப்பதில்லை.

காய்ச்சல், இருமல் முதலிய உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கண்டிப்பாக யோகாசனப் பயிற்சியில் ஈடுபடாமல் இருக்கவேண்டும். நலம் பெற்ற பின் பயிற்சியை தொடங்கலாம்.

வயிற்று வலி, வயிற்றுபோக்கு, உடல்வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

yoga-Introduction-tamil.

முதுகெலும்பில் பிரச்னை உள்ளவர்கள், ஒற்றை தலைவலி, உயர் இரத்த அழுத்தம், வலிப்பு நோய், குடல் இறக்கம், கருப்பை இறக்கம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயிற்சியை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கடினமான யோகாசனத்தை தவிர்க்க வேண்டும். எளிய பயிற்சியை செய்து வரலாம். கருவுற்ற முதல் 3 மாதங்களும், பிரசவம் ஆவதற்கு 3 மாதங்களுக்கு முன்பும் பிரசவம் ஆனபின் 3 மாதங்கள் வரையிலும் பயிற்சியை நிறுத்தி வைக்க வேண்டும்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சர்ஜரி சிகிக்சை மேற்கொண்டவர்கள், முதுகுத்தண்டில் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பே பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.

ஆசனங்கள் தினந்தோறும் செய்துவர உடல்வளம் பெறும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி பெருகும். நன்றாக பசி எடுக்கும்.

முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை பெறுவதாலும், உடலின் அத்தனை தசைநாண்களும், நரம்புகளும் விறைப்பு தன்மையற்று நெகிழும் தன்மை பெறுவதால் எப்போதும் குன்றாத இளமை மேலிடும்.

உடம்பின் முதன்மையான உறுப்புகளாகிய கண், மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் , சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் முதலியன நன்றாக அழுத்தப்பட்டு வளம்பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உடல் முழுவதும் சீராக இரத்தஓட்டம் பாய்வதால் நோயில்லா நல்வாழ்வு கிட்டும். பூரண ஆயுளைக் கொடுக்கும்.

பிரஷர், சுகர் முதலிய தீர்க்கமுடியாத நோய்களெல்லாம் தகர்த்தெறியப்படும். இன்னும் இதில் கிடைக்கும் நன்மைகள் பலப்பல.

இனி தொடர்ந்து வரும் பதிவுகளில் பலவகையான ஆசனங்களைப் பற்றியும், அதன் செய்முறையும், பலன்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய குறிப்பு.

யோகாசனப் பயிற்சியை முடித்தவுடன் கடைசி ஆசனமாக கண்டிப்பாக ''சவாசனம்''. செய்யவேண்டும். இது மிக மிக முக்கியம். ''சவம்'' என்றால் பிணம். அதாவது பிணம்போல் உடலை தளர்வாக எந்தவித விறைப்புத் தன்மையும் இல்லாமல் வைத்து படுத்திருக்க வேண்டுமாதலால் ''சவாசனம்'' எனப் பெயர்பெற்றது. சிலர் இது உடலை சாந்தப்படுத்துவதால் ''சாந்தி'' ஆசனம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

யோகாசனம் செய்யும் நீங்கள் இறுதி ஆசனமாக சவாசனம் செய்யாமல் பயிற்சியை முடித்தால் நீங்கள் இதுவரை செய்த மொத்த பயிற்சியும் வீண் என்பதை புரிந்து கொள்ளவும். எனவே கடைசி பயிற்சியாக சவாசனத்தை கண்டிப்பாக செய்யவும். சவாசனம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

சவாசனம்.

செய்முறை விளக்கம்.

விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். கால்களை நேராக நீட்டி லேசாக அகட்டி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மேற்புறம் பார்த்திருப்பதுபோல கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைக்கவும்.

உடம்பின் எந்த ஒரு உறுப்பையும் விறைப்பாக வைக்காமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் செத்த பிணம் போல் கிடக்க வேண்டும். சுவாசம் இயல்பாக விடவும்.

குறிப்பாக மனதிலும் எந்த வித எண்ணங்களும் இல்லாமல் நார்மலாக படுத்திருக்கவும்.

மனதில் முன்னாள் காதலியை நினைத்துக்கொண்டு படுத்தீர்களானால் உடம்பின் சில பகுதிகள் விறைப்படையும் வாய்ப்பு இருப்பதால் (ஹ ஹ ஹா.. என்னவெல்லாம் சொல்லி உங்களுக்கு புரியவைக்க வேண்டியிருக்கு சாமியோவ்..) எந்த நினைப்பும் இல்லாமல் Relax ஆக படுத்திருக்கவும். பத்து முதல் பதினைந்து நிமிடம் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

Yogasana Yoga

இந்த ஆசனமானது ஆழ்ந்த தூக்கத்தை தரவல்லது. ஆதலால் பலபேர் அப்படியே நிம்மதியாக தூங்கிவிடுகிறார்கள். எனவே விழிப்புடன் இருங்கள்.

சவாசனத்தின் பலன்.

ஆசனங்களிலேயே மிகவும் சுகமான இன்பகரமான ஆசனம் ஒன்று உண்டு என்றால் அது இந்த ஆசனம்தான். அனுபவித்து பார்த்தவர்களுக்கே அது புரியும். (பின்ன இருக்காதா.. காலை அகட்டி வச்சிகிட்டு மல்லாக்க விட்டத்த பாத்துகிட்டு தூங்குறதுனா சும்மாவா).

ஆசனப் பயிற்சியின்மூலம் உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சில விறைப்பான தன்மை அடைந்திருக்கலாம். அதை அப்படியே விடும் பட்சத்தில் சுளுக்கு, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகளை வருவிக்கலாம்.

எனவே பயிற்சியின் முடிவில் இந்த சவாசனத்தை செய்து உடம்பின் உள் மற்றும் வெளி உறுப்புகளை தளர்வடைய செய்வதால் அனைத்து உறுப்புகளுக்கும், நரம்பு மண்டலங்களுக்கு சுத்த இரத்தம் சீராக பாய்ந்து உடலை வலுப்படுத்துகிறது. உடலின் அத்தனை உறுப்புகளும் செப்பனிடப்படுகின்றன. எனவே கடைசி ஆசனமாக ''சவாசனம்'' செய்து பயிற்சியை நிறைவு செய்யவும்!

பல ஆசனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அதே வேளையில் உடலுக்கு மிகச் சிறந்த பயிற்சியாக விளங்குவது ''சூரிய நமஸ்காரம்''.

சூரிய நமஸ்காரம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்த லிங்க் - ஐ கிளிக்குங்க.

>> சூரிய நமஸ்காரம். Surya Namaskar - Sun Salutation <<

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.