"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கொம்பேறி மூக்கன் - Bronze back tree snake.

கொம்பேறி மூக்கன் - Bronze back tree snake.

Bronze back tree snake.

Komperimukkan snake.

"கொம்பேறி மூக்கன்" என்னும் இப்பாம்பைப்பற்றி அனைவருமே ஓரளவு தெரிந்து வைத்திருப்பீர்கள். நம்முடைய வீட்டின் அருகிலேயே பரவலாக காணப்படும் விஷமில்லாத சாதாரண வகை பாம்புதான் இது.

இதன் உடலமைப்பு சாட்டை அல்லது நீண்ட கொடி போல் உள்ளதால் இதனை சாட்டை பாம்பு மற்றும் கொடி பாம்பு என்னும் பிரிவில் வகைப்படுத்துகின்றனர்.

இந்த பிரிவில் இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று ''பச்சை பாம்பு'', மற்றொன்று ''கொம்பேறி மூக்கன்''.

நாம் இந்த பதிவில் மரமேறிப்பாம்பு என்று அழைக்கப்படும் "கொம்பேறி மூக்கன்" என்னும் பாம்பை பற்றியே பார்க்க இருக்கிறோம்.

    கொம்பேறி மூக்கன்.

    பெயர் :- கொம்பேறி மூக்கன்.

    வேறுபெயர்கள் :- மரமேறிப்பாம்பு.

    ஆங்கில பெயர் :- ப்ரோன்ஸ் பேக் ட்ரீ ஸ்னேக் - Bronze back tree snake.

    அறிவியல் பெயர் :- டென்ட்ரேலாபிஸ் ட்ரிஸ்டிஸ் - Dendrelaphis tristis.

    திணை :- விலங்கு - Animal

    தொகுதி :- முதுகுநாணி - Chordate.

    துணைத்தொகுதி :- முதுகெலும்பி.

    வகுப்பு :- ஊர்வன - reptile.

    வரிசை :- செதிலுடைய ஊர்வன - scaled reptiles.

    துணைவரிசை :- பாம்பு.

    குடும்பம் :- Colubridae.

    பேரினம் :- Dendrelaphis.

    இனம் :- D.tristis.

    தாயகம்.

    இதன் தாயகம் இந்தியா. இது அதிக அளவில் இமயமலை அடிவாரங்களிலும், தென்னிந்தியப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

    பெயர்க்காரணம்.

    எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மரக்கொம்புகளில் ஏறி தன்னை மறைத்துக்கொள்வதாலும், கூடவே பயபுள்ளைக்கு கொஞ்சூண்டு மூர்க்க குணமும் உண்டு என்பதால், கொம்பு + ஏறி + மூர்க்கன் = "கொம்பேறி மூர்க்கன்'' (கொம்பேறி மூக்கன்) என பெயர் பெற்றிருக்கலாம்.

    மரத்தில் வாசம் செய்வதால் இதற்கு "ரமேறிப்பாம்பு" (tree snake.) என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    வாழிடம்.

    பொதுவாக இது பெரும்பாலான நேரங்களில் மரங்களிலேயே தன் வாழ்க்கையை தொடருகின்றன. எனவேதான் இதனை "மரமேறிப்பாம்பு" என்ற பெயரிலும் அழைத்துவருகிறோம். மரப்பட்டைகளின் நிறத்தோடு இதன் நிறமும் ஒத்துப்போவதால் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவதற்கும், இரைகளை மறைந்திருந்து தாக்கிப் பிடிப்பதற்கும் எளிதாகிறது.

    மரப்பொந்துகள் மற்றும் சில நேரங்களில் பாறை இடுக்குகளிலும் வாசம் செய்கின்றன.

    Vine or Whip snake

    இயல்பு.

    மிகவும் சுறுசுறுப்பானது. கொஞ்சம் தைரியசாலியும் கூட. மிகவும் விரைவாக செல்லும் தன்மையுடையது.

    உடலமைப்பு.

    இது நீண்ட சாட்டை போன்ற மெல்லிய உடலமைப்பினை கொண்டது. இதன் தலை நீண்ட தட்டையான முக்கோண வடிவில் காணப்படும். கண்கள் பெரியதாக இருக்கும். உடல் கரும்பழுப்பு நிறத்திலும், உடலில் மெல்லிய பழுப்புநிற வரிகளும் காணப்படும்.

    உணவு.

    பல்லி, தவளை, ஓணான், பூச்சிகள் மற்றும் சிறிய ரக பறவைகளையும்,  உயிரினங்களையும் உணவாக கொள்கின்றன.

    இனப்பெருக்கம்.

    முட்டையிட்டு அடைகாக்கிறது. சராசரியாக 5 முதல் 8 முட்டைகள்வரை இடும். 4 லிருந்து 6 வாரங்கள்வரை முட்டைகளை அடைகாக்கிறது.

    Bronze back tree snake.

    விஷத்தன்மை.

    கொம்பேறி மூக்கனைப் பற்றி பல வேடிக்கையான கதைகள் சொல்லப்படுகிறது என்றாலும் மனிதனை கொல்லும் அளவிற்கு  இந்த பாம்பிற்கு விஷம் கிடையாது என்பதுதான் உண்மை.

    இதன் கடைவாயில் விஷப்பற்கள் உள்ளன.அதில் மிகக் குறைந்த அளவு விஷத்தை கொண்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் விஷம் வீரியம் குறைந்த விஷம். இதற்கான இரைகளைப்பிடிக்க இதை பயன்படுத்துகிறது.

    இது கடித்தால் கடித்த இடத்தில் சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும். ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கடிபட்ட இடத்தில் ''பாக்டீரியா தொற்று'' (bacterial infections) ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    கொம்பேறி மூக்கன் என்னும் சாட்டை பாம்பை பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் "சாரைப்பாம்பு" பற்றியும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பீர்கள். என்றாலும், சாரைப்பாம்பைப் பற்றி அறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ விரல்களால் மெதுவாக தட்டுங்க.

    >> "சாரைப் பாம்பு - rat snake."<<

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    12 கருத்துகள்

    1. தன்னால் கடிக்கபட்டவன் உயிரிழந்து சுடுகாட்டில் எரிவதை மரத்தில் இருந்து பார்த்தபிறகே செல்லும் போன்ற கதைகள் இந்தக் கொம்பேறி மூக்கன் பற்றி உண்டு!!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உண்மைதான் நண்பரே....இதுபோல பல சுவாரசியமான கதைகள் மக்கள் மத்தியில் உலா வருவதுண்டு.....இக்கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். மற்றபடி அதில் உண்மையிருப்பதில்லை... ஏனெனில் ஈமசடங்கு பற்றிய அறிவோ அல்லது மனிதனுடைய பிற சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றிய புரிதல்களோ பாம்புகளுக்கு இருக்க வாய்ப்பில்லை....
        நம் அறிவுக்கு ஒத்துவராத எந்த விசயமாக இருந்தாலும் அதைபற்றி அறிவுப்பூர்வமாக ஆராயாமல் நம்பித்தொலைப்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்பு.....

        நீக்கு
    2. Saw this snake in my garden today. Was searching to know whether it is poisonous or not. Thanks for the detailed information.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி நண்பரே!! உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி !! விஷமில்லாத சாதாரண வகை பாம்புதான் இது. இப்பாம்பால் மனித இனத்திற்கு நிறைய நன்மைகளும் உண்டு. எனவே இதனை கொல்வதை தவிர்க்க வேண்டும். இது கடித்தால் கடித்த இடத்தில் சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கடிபட்ட இடத்தில் ''பாக்டீரியா தொற்று'' ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இப்பதிவு உங்களுக்கு பயனளித்ததில் மகிழ்ச்சி !!

        நீக்கு
    3. எங்களுடைய ஆண்டைக் கடித்து விட்டது என்ன செய்ய வேண்டும்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. "ஆண்டை" கடித்து விட்டதா? "ஆண்டை" என்றால் என்ன? ஒரு வேளை ஆட்டைத்தான் (ஆடு) குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். கொம்பேறி மூக்கன் கடிப்பதால் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷமில்லை என்றாலும் கூட கடுமையான வலியையும் தொற்றுநோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அளவிற்கு மிக குறைந்த அளவில் விஷத்தைகொண்டுள்ளது. எனவே கால்நடைகளுக்கு கண்டிப்பாக கடுமையான வலியும் வீக்கமும் இருக்கும். பலநேரங்களில் கடித்த இடம் ஆறாமல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே கண்டிப்பாக கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். வலியை குறைக்க வலிநிவாரண மருந்துகளையும், தொற்றுநோய் கிருமிகளால் பாதிப்பு ஏற்படால் இருக்க "டெட்டனஸ் டாக்ஸைடு" என்னும் தடுப்பூசியையும் பரிந்துரை செய்வார். நன்றி !!!

        நீக்கு
    4. Today enna kadichiruchi.....but veekam kooda illa. Naan hospital um pogala..nxt future ethavathu effect kaamikuma

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. கொம்பேறி மூக்கனிடம் விஷமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதனுடைய உணவை செயலிழக்கச் செய்யுமளவிற்கு மிக குறைந்த அளவில் விஷமுண்டு. ஆனால் அதனால் மனித உயிருக்கு பெரும்பாலும் ஆபத்தில்லை.

        அதே வேளையில் இங்கு விஷத்தினை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளுதல் கூடாது.

        எல்லா உயிரினங்களின் உமிழ்நீரிலும் பாக்டீரியாக்கள் உண்டு. பாம்பு கடிப்பதால் அதன் உமில்நீரிலுள்ள பாக்டீரியாக்கள் நம்முடைய இரத்தத்தில் கலந்து சிலருக்கு சிலவித அலர்ஜியை ஏற்படுத்தலாம். இந்த அலர்ஜியின் பாதிப்பு சிலருக்கு குறைவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அதிகமாகி வேறுசில பதிப்புகளை ஏற்படுத்தலாம். அது அவரவர் உடல்நிலையை பொருத்தது.

        எனவே எந்த பாம்பு கடித்தாலும் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். அவசியமும்கூட.

        பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கான "டெட்டனஸ் டாக்ஸைடு" என்னும் தடுப்பூசியை போடுவார்கள்.

        பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா... இதற்கு தடுப்பூசி தேவையா தேவையில்லையா... என்பதனை மருத்துவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். நீங்கள் அல்ல.

        எனவே எதையும் அசால்டாக எடுத்துக்கொள்ளாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முறையாக ஆலோசனை பெறுவதே சிறப்பு.

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.