Wednesday, April 03, 2019

கொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.


               இதன் உடலமைப்பு நீண்ட கொடி அல்லது சாட்டை போல் உள்ளதால் இதனை கொடி பாம்பு எனவும், சாட்டை பாம்பு எனவும் அழைக்கின்றனர்.               இதற்குப் ''பறவைப்பாம்பு'' என்று ஒரு பெயரும் உண்டு....இது கண்களை குறி பார்த்து கொத்தும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிகழ்வதால் இதற்கு ''கண்கொத்திப்பாம்பு'' என்று ஒரு செல்லப்பெயரும் உண்டு.

              இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று ''பச்சை பாம்பு'', மற்றொன்று ''கொம்பேறிமூக்கன்''.


               உடலின் நிறம் பச்சை நிறத்தில் இருப்பதை பச்சை பாம்பென்றும், பழுப்பு நிறத்தில் இருப்பதை கொம்பேறிமூக்கன் என்றும் அழைக்கிறோம்.

வாழிடம் :- இவைகள் பெரும்பாலும் மரக்கிளைகளில் வாழ்கின்றன.


 பச்சைப் பாம்பு. [Green Vine Snake].

அறிவியல் பெயர் :- Ahaetulla nasutra.

வரிசை :- squamata.

குடும்பம் :- Colubridae.

பேரினம் :- Musticophis.

வேறுபெயர்கள் :- கண்கொத்திப்பாம்பு. பறவைப்பாம்பு.

உணவுமுறை :- ஓணான், பல்லி, எலி, சிறிய ரக பறவைகள், பூச்சிகள் ; பறவைகளின் முட்டைகள்.

 உடலமைப்பு :- இது 5 அடி வரை வளரும். கொடி போன்ற சிறிய உடலைக்கொண்ட இப்பாம்பு வாழும் இடத்திற்கு தக்கவாறு இளம்பச்சை, கரும்பச்சை, சாம்பல், பழுப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்டுள்ளன.

இனப்பெருக்கம் :- குட்டிப் போட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

 விஷத்தன்மை :-  பச்சைப்பாம்புகளில் பலவகையான இனங்கள் உள்ளன. பொதுவாக பச்சைப்பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை. ஆனால் சிலவகை பச்சைப்பாம்புகள் குறைந்த அளவு விஷத்தன்மையை கொண்டுள்ளன.               இது தீண்டுவதால் உயிருக்கு ஆபத்தில்லை. சிறிதளவு வீக்கமும், வலியும் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்தில்லை என்பதால் சிகிச்சை தேவையில்லை என்று சும்மா இருந்துவிடுதல் கூடாது. இது கடித்த காயத்தில் ''பாக்கடீரியா தொற்று'' ஏற்பட்டு நோயை உண்டு பண்ணும். எனவே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இயல்பு :- இது பச்சைநிறமான தாவரங்கள்,புல், பூண்டு, புதர்களில் மறைந்து வாழ்வதால் பரிணாம வளர்ச்சியின் தாக்கத்தால் இதன் உடல் பச்சைநிறமாக மாறுதலடைந்து உள்ளது. பச்சை நிறமான தாவரங்களில் மறைந்து வாழ்வதால் எதிரிகளின் கண்களுக்கு இவை எளிதில் புலப்படுவதில்லை. தன்னுடைய இரையை சுலபமாக எதிர்கொள்வதற்கும் இது நல்ல வாய்ப்பாக அமைகிறது.

               இவைகள் எதிரிகளை எதிர்கொள்ள நேரிட்டால் தன் உடலை உப்பலாக்கி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான செதில்களை வெளிக்காட்டும்.               அப்போது பச்சைப்பாம்பு  பார்க்க கருப்பு, வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். இதை பார்க்கும் எதிரிகள் இது ஏதோ விஷப்பாம்பு என்று பயந்து ஓடிவிடும் என்று இதற்கு ஒரு நினைப்பு....நம்ம ''ஸ்னேக் பாபு'' வுக்கு என்ன ஒரு புத்திசாலித்தனம் ....
நம்பிக்கை :-  இது கண்களை குறிபார்த்து கொத்தும் என்று ஒரு நம்பிக்கை மனிதர்களிடையே உண்டு.... ஆனால் இதுவரையில் இது யாருடைய கண்ணையும் கொத்தியதாக தெரியவில்லை....

               பச்சைப்பாம்பை கைகளில் பிடித்து உருவினால் நாம் சமைக்கும் சமையலின் சுவை தூக்கலாக இருக்கும் என்பதும் வேடிக்கை நிறைந்த கட்டுக்கதையே...


கொம்பேறி மூக்கன்.

குடும்பம் :- Colubridae.

பேரினம் :- Dendrelaphis.

இனம் :- D.tristis.

தாயகம் :- இந்தியா. [தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்கிறது].

வேறுபெயர்கள் :- மரமேறிப்பாம்பு.

பெயர்க்காரணம் :- ஏதிரிகளிடம் இருந்து தப்பிக்க மரக்கொம்புகளில் ஏறி தன்னை மறைத்துக்கொள்வதால் ''கொம்பேறி மூக்கன்'' என பெயர் பெற்றிருக்கலாம்.


வாழிடம் :- மரங்களில் வாழ்கிறது. மரப்பட்டைகளின் நிறத்தோடு இதன் நிறமும் ஒத்துப்போவதால் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவதற்கும், இரைகளை மறைந்திருந்து தாக்கிப் பிடிப்பதற்கும் எளிதாகிறது.உடலமைப்பு :- இது நீண்ட சாட்டை போன்ற உடலமைப்பினை கொண்டது. இதன் தலை நீண்ட முக்கோண வடிவில் காணப்படும். கண்கள் பெரியதாக இருக்கும். உடல் கரும்பழுப்பு நிறத்திலும், உடலில் மெல்லிய பழுப்புநிற வரிகளும் காணப்படும்.உணவு:- பல்லி, தவளை மற்றும் சிறிய உயிரினங்கள்.

இனப்பெருக்கம் :- முட்டையிட்டு அடைகாக்கிறது.


விஷத்தன்மை :- கொம்பேறி மூக்கனைப் பற்றி பல வேடிக்கையான கதைகள் சொல்லப்படுகிறது என்றாலும் மனிதனை கொல்லுகிற அளவிற்கு  இந்த பாம்பிற்கு விஷம் கிடையாது என்பதுதான் உண்மை. மிகக் குறைந்த அளவு விஷத்தை கொண்டுள்ளது.

               இது கடித்தால் கடித்த இடத்தில் சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும். ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கடிபட்ட இடத்தில் ''பாக்டீரியா தொற்று'' ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

6 comments:

 1. தன்னால் கடிக்கபட்டவன் உயிரிழந்து சுடுகாட்டில் எரிவதை மரத்தில் இருந்து பார்த்தபிறகே செல்லும் போன்ற கதைகள் இந்தக் கொம்பேறி மூக்கன் பற்றி உண்டு!!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே....இதுபோல பல சுவாரசியமான கதைகள் மக்கள் மத்தியில் உலா வருவதுண்டு.....இக்கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். மற்றபடி அதில் உண்மையிருப்பதில்லை... ஏனெனில் ஈமசடங்கு பற்றிய அறிவோ அல்லது மனிதனுடைய பிற சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றிய புரிதல்களோ பாம்புகளுக்கு இருக்க வாய்ப்பில்லை....
   நம் அறிவுக்கு ஒத்துவராத எந்த விசயமாக இருந்தாலும் அதைபற்றி அறிவுப்பூர்வமாக ஆராயாமல் நம்பித்தொலைப்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்பு.....

   Delete

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.

Next previous home