"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Albert Einstein - Biography.

Albert Einstein - Biography.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Albert Einstein - Biography.

          விஞ்ஞானிகள் என்றாலே முதலில் சட்டென்று நம் நினைவுக்கு வந்துபோகிறவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாகத்தான் இருக்கமுடியும். அந்த அளவிற்கு தம் புரட்சிகரமான கருத்துக்களால் விஞ்ஞான உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்தவர்.

Albert Einstein.

விஞ்ஞான ஆர்வமுள்ள இன்றைய மாணவர்களின் ரோல்மாடலாக திகழ்பவரும் இவரே!! இவர் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும் வெறும் வார்த்தைகள் அல்ல. தத்துவங்கள். இவருடைய வாழ்க்கையைப்பற்றி மிக சுருக்கமாக இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

வாழ்க்கைக்குறிப்பு.

பிறப்பு :- 1879 ம் ஆண்டு, மார்ச் 14.

தாயகம் :- உல்ம் (Ulm) ஜெர்மன்.(Germany).

சாதனை :- விஞ்ஞானி, அணுயுகத்தின் தந்தை என போற்றப்பட்டவர்.

விருதுகள் :- இயற்பியலுக்கான நோபல் பரிசு (1921).

இறப்பு :- 1955 ம் ஆண்டு, ஏப்ரல் 18. தன்னுடைய 76 வது வயதில் நியூ ஜெர்சியில் (அமெரிக்கா) காலமானார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879 ம் ஆண்டு மார்ச் 14 ல் ஜெர்மனியின் வூர்ட்டம்பேர்க் (Wurttemberg) என்னும் நகரிலுள்ள உல்ம் (Ulm) என்னும் இடத்தில் பிறந்தார்.

இவருடைய தந்தையார் ஹேர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein). தாயார் போலின் கோச் (Pauline Koch).

ஐன்ஸ்டீன் பிறந்த இரு மாதங்களுக்கு உள்ளாகவே இவரது குடும்பம் ஜெர்மனியின் முனிச் (Munich) என்னும் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு தாய் தந்தை அரவணைப்பில் வளர்ந்தார்.

Albert Einstein father mother

பின் அவரது பள்ளிப்படிப்பு  லூயிட் போல்ட் ஜிம்னாசியத்தில் (Luitpold Gymnasium) தொடங்கியது.

''விழையும்பயிர் முளையிலேயே தெரியும்'' என்பதற்கிணங்க இவர் சிறுவயதிலேயே சிறிய வகை இயந்திர கருவிகளை செய்து பார்ப்பதை பொழுது போக்காக கொண்டிருந்தார். சிறுவயதிலேயே அவர் அறிவியல் சார்ந்த கருவிகளோடு விளையாடுவதிலும் அதன் இயக்க முறையை ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்ததால் அவரால் ஏட்டுக்  கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே, அவரை அறிவில்லாதவர், மந்தபுத்திக்காரர் என்றே ஆசிரியர்கள் அழைத்து வந்தனர். ஆசிரியர்களால் வெறுக்கப்பட்ட மாணவராகவே அவர் இருந்து வந்தார். அவர் சிறுவயதிலேயே அறிவியல் சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததனாலேயே அவரால் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற உண்மையை ஆசிரியர்கள் கண்டறிய தவறிவிட்டனர்.

சிறுவயதிலேயே அவருக்குள் இருந்த அறிவார்ந்த சிந்தனையே இவருக்கு எதிர்காலத்தில் ''ஜீனியஸ்'' (Genius) என்றால் ஐன்ஸ்டீன் என்று பொருள்கொள்ளும் அளவிற்கு இவருக்கு புகழ்தேடி தந்தது எனலாம்.

ஐன்ஸ்டீன் 15 வயது இருக்கும் போது அவர் தந்தை பார்த்துவந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிழைப்பு தேடி அவரது குடும்பம் இத்தாலியிலுள்ள மிலான் (Milan) நகருக்கு குடிபெயர்ந்தது. ஆனால் ஐன்ஸ்டீனோ தனது முதல்கட்ட பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதற்காக முனிச்லேயே தங்கி படிப்பை தொடர்ந்தார்.

இத்தாலியில் (Italy) குடியேறிய அவர் தத்தைக்கு அங்கும் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டாம்கட்ட பள்ளிப்படிப்பை தொடர ஐன்ஸ்டீன் சுவிட்ச்சர்லாந்திற்கு (Switzerland) பயணப்பட்டார். அங்கு ஆராவ் (Aarau) என்னும் இடத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை 1896 ம் ஆண்டில் சுவிட்ச்சர்லாந்தின் சூரிச் (Zurich) நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடர்ந்தார்.

அக்கல்லூரியில் கணிதம் (Maths) மற்றும் இயற்பியல் (Physics) துறையில் ஆசிரியராக பயிற்சி எடுத்துக் கொண்டவர் 1901 ல் டிப்ளமோ பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் சுவிட்ச்சர்லாந்தின் குடியுரிமையும் (Swiss Citizenship) பெற்றார்.

ஆனால் ஆசிரியர் பயிற்சி முடித்தாலும் அவருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. இப்போது உள்ள வேலையில்லா திண்டாட்டம்  அப்போதும் இருந்தது போலும்!

வேலைதேடி அலைந்தவருக்கு ஒரு காப்புரிமை நிறுவனம் (Patent Institute) வேலை தர முன்வந்தது. அந்நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியாளராக (Technical Assistant) பணியமர்த்தப்பட்டார். சொற்ப வருமானம். ஆனாலும் கவலை கொள்ளவில்லை. வருமானம் முழுவதையும் தன் ஆராய்ச்சிகளுக்கே செலவிட்டார்.

சொற்ப வருமானத்தில் எளிமையான வாழ்க்கையே வாழ முடிந்தாலும் அதைப்பற்றியெல்லாம் மனம் தளராமல் தொடர்ந்து ஆராய்ந்ததின் விளைவாக அவரது மூளையில் பிறந்த சமன்பாடுகளும் தீர்வுகளும் இந்த உலகையே மெய் சிலிர்க்க வைத்தன.

1905 ஆண்டு முதல் இவர் தன் ஆச்சரியமூட்டும் பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியுலகிற்கு கொடுக்கத் தொடங்கினார். பிரௌனியன் இயக்கம் (Brownian motion), ஒளிமின்விளைவு (Photoelectric effect), ஆற்றல் சமநிலை விதி (Mass-energy equivalence) மற்றும் E = MC ² எண்ணும் சமன்பாடு முதலிய பல இயற்பியல் விதிகளை கண்டறிந்து உலகத்தையே அதிர வைத்தார்.

நேரத்திற்கும், காலத்திற்கும் இடையேயான இவரது ஆரம்பகால ஆய்வுகளே பின்னாளில் ''ரிலேடிவிடி தியரி'' (Theory of relativity) என்னும் சார்பியல் கோட்பாடு உருவாக காரணமாக அமைந்தது.

சுவிச்சர்லாந்து (Switzerland) நாட்டின் சிறுநகரமான "பென்" (Bern) என்ற இடத்தில் இருந்துதான் அவர் தன் ஆச்சரியமூட்டும் பல ஆய்வு முடிவுகளை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வந்தார். அந்நகரின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த கடிகார மணிக்கூண்டு அவர் சிந்தனையைத் தூண்டியது. நேரத்தையும், காலத்தையும் அதற்கான இடைவெளியையும் பற்றி சிந்திக்கலானார்.

அந்நாட்களில் நேரம் என்பது நிலையானது மாறாத வேகமுடையது என்றே நம்பப்பட்டு வந்தது. அதாவது ஒருவர் எவ்வளவு வேகமாக இயங்கினாலும் நேரம் தன் இயல்பிலிருந்து மாறாத நிலையான வேகமுடையது என நம்பப்பட்டு வந்தது.

ஆனால் ஐன்ஸ்டீனோ நேரம் எப்போதும் ஒரேபோல் இருப்பதில்லை. மாறும் இயல்புடையது. செயல்களை வைத்தே அது கணிக்கப்படுகிறது என்றார்.

1905 ம் ஆண்டு செப்டம்பர் 27 ல் சராசரி மனிதர்களால் புரிந்துணர முடியாத இந்த அரிய கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

E = mc ² 

இதுவே அந்த சமன்பாடு.

இதில் E = சக்தி, m = திணிவு, c = வெற்றிடத்தில் ஒளியின் வேகம். அறிவியலின் தாரக மந்திரமாக விளங்கும் இந்த கோட்பாட்டை அவர் உருவாக்கியபோது அவருக்கு வயது வெறும் 26 தான்.

1909 ம் ஆண்டில் அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. 1911 ல் ப்ராக்ஸில் தத்துவார்த்த பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். 1914 ல் தன் தாய்நாடான ஜெர்மனுக்கு (Germany) திரும்பினார். அங்கு கைசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) என்ற இயற்பியல் நிறுவனத்தின் இயக்குனராகவும், பெர்லின் (Berlin) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

அங்கு கணிதம் (Maths), அறிவியல் (Science), இயற்பியல் (Physics) முதலிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செய்தார். அணு (Atom) மற்றும் ஒளியின் விளைவு பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் புரட்சிகரமானவை. குவாண்டம் தியரியிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

1916 ம் ஆண்டில் பொது சார்பியல் கோட்பாடு (Theory of relativity) குறித்த தனது விரிவான ஆய்வு கட்டுரையை வெளியிட்டார். மேலும் கதிர்வீச்சு (radiation), புள்ளி விபர இயக்கவியல் கோட்பாடு போன்ற சிக்கல்களுக்கும் தீர்வுகண்டார்.

1933 ல் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டியில் பேராசிரியர் பதவி இவருக்காக காத்திருக்க உடனடியாக இயற்பியல் பேராசிரியராக பணிபுரிய ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா விரைந்தார். அங்கு தொடர்ந்து பணியாற்றிய அவர் 1940 ல் அமெரிக்க குடியுரிமையை பெற்று அமெரிக்க குடிமகனாக (American citizen) ஆனார். 1945 ல் தனது பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஜெர்மனை (Germany) தாயகமாக கொண்ட ஐன்ஸ்டீன் ஜெர்மனியின் அதிபரான ஹிட்லரின் (Adolf Hitler) அடக்குமுறையாலும் கொடுங்கோலாட்சியாலும் அங்கு வாழமுடியாது என்பதால் கடைசி வரையில் அமெரிக்காவிலேயே வாழ்ந்து விடுவதென முடிவு செய்தார்.

20 ம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளராக திகழ்ந்ததோடு சர்வதேச அளவில் ஒரு புகழ் பெற்ற மனிதராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலக அரங்கில் மிகவும் பேசப்படும் மனிதராக விளங்கினார். இஸ்ரேல் தேசம் (Israel country) அவரை தங்கள் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்படி வற்புறுத்தியது. ஆனால் பணிவோடு அதை மறுத்துவிட்டார்.

மேலும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உலகமக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. தற்காலத்தில் கூட மிகச்சிறந்த புத்திசாலி என்று ஒருவரை அடையாளப்படுத்த ஐன்ஸ்டீனின் திறமையோடு ஒப்பீடுபடுத்தப்படுகிறது.

1921 ம் ஆண்டு நோபல் கமிட்டி (Nobel Committee) அவருக்கு நோபல் பரிசு தந்து கவுரவிக்க முடிவு செய்தது. அவருடைய சார்பியல் கோட்பாடிற்கு (Theory of relativity) பரிசளிக்க முடிவு செய்தது. ஆனால் இக்கோட்பாடு  பற்றி விஞ்ஞானிகள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவியதால் அவரின் மற்றொரு கண்டுபிடிப்பான ''போட்டோ எலக்ட்ரிக் எபெக்ட்'' (Photoelectric effect) என்ற கண்டுபிடிப்பிற்காகவும்,  குவாண்டம் விசையில் (Quantum gravity) அவருக்குள்ள பங்களிப்புக்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஐன்ஸ்டீனுடைய திருமண வாழ்க்கையை பார்த்தோமானால் அது பல சிக்கல்கள் நிறைந்ததாகவே உள்ளது.

ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து பணியாற்றியவர் மிலாபா மாலிக் (Mileva Maric) என்னும் செர்பிய பெண். இவர் ஐரோப்பாவில் கணிதம் (Maths), மற்றும் இயற்பியல் (Physics) படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

1903 ல் மாலிக் ஐ ஐன்ஸ்டீன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு Lieserl Einstein என்னும் பெண்குழந்தையும் Hans Albert  Einstein மற்றும் Eduard Einstein என்னும் இரு ஆண்குழந்தைகளும் பிறந்தன.

ஆனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. 16 ஆண்டுகாலமே இவர்களுடைய திருமணவாழ்க்கை நீடித்தது. இந்த 16 ஆண்டுகால இடைவெளியில் அவர் தன் மனைவியிடம் எந்தவிதமான பாசத்தையோ அன்பையோ பகிர்ந்துகொண்டதில்லை என கூறப்படுகிறது. மனைவியை ஒரு அடிமையாகவே நடத்தினார்.

எனவே ஐன்ஸ்டீன் மீது வெறுப்புற்ற மாலிக் தன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு 1919 ம் ஆண்டில் ஐன்ஸ்டீனை விட்டு பிரிந்து சென்றார்.

ஆனால் அதே ஆண்டில் எல்சா லொவெந்தல் ( Elsa Lowenthal ) என்னும் தன்னுடைய உறவுக்கார பெண்ணை ஐன்ஸ்டீன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண்ணோ சிறுநீரக பிரச்சினையினாலும் இதயநோயினாலும் அவதிப்பட்டார்.

Albert Einstein

நோயினால் மிகவும் அவதியுற்ற எல்சா சிறிது காலத்தில் அதாவது 1936 ம் ஆண்டு மறைந்தார். அதன் பின் ஐன்ஸ்டீன் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனிமையிலேயே தன் வாழ்க்கையை தொடர்ந்தார்..

1939 ம் ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஹிட்லரின் ஆளுமையில் இருக்கும் ஜெர்மனிக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், அவ்வாறு தயாரிக்கும் பட்சத்தில் அது உலக அழிவிற்கு பயன்படுத்தப்படலாம் என தன் அச்சத்தை கடிதத்தில் வெளிப்படுத்தினார். 

உடனே அமெரிக்கா சுதாகரித்துக் கொண்டது.

அது இரண்டாம் உலகப் போர் (Second World War) நடந்து வந்த சமயம். அமெரிக்காவோ இந்த சந்தர்ப்பத்தில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள எண்ணியது. இதற்கு ஐன்ஸ்டீனையே பயன்படுத்திக் கொள்வதென முடிவு செய்தது. சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை அவரால் உருவாக்க முடியும் என்பதனை அமெரிக்கா (America) உணர்ந்தது. வெறும் ஏட்டளவில் இருந்த அணுகுண்டு தொழில்நுட்பத்திற்கு உயிரூட்ட விரும்பியது.

எனவே அப்போது அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt) ஐன்ஸ்டீனை அணுகினார். ஆனால் ஐன்ஸ்டீனோ அறிவியல் கண்டுபிடிப்புகளானது மனிதகுல உயர்வுக்கு பயன்படவேண்டுமேயொழிய மனித அழிவுக்கு பயன்படலாகாது. எனவே என்னுடைய அறிவை அழிவுக்கு பயன்படுத்த போவதில்லை என்று மறுத்துவிட்டார்.

ஆனால் ரூஸ்வெல்ட்டோ அசரவில்லை. பிற விஞ்ஞானிகள் மூலம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டார்.

விளைவு.. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அந்த கொடூர ஆயுதம் இரண்டு லட்சம் உயிர்களை குடித்தது.

ஆம்.. குருதி அள்ளிக் குடித்தாவது தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டும் என்று எண்ணிய அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வரப்போவதில்லை என்று அடம்பிடித்த ஜப்பானின் (Japan) மிகப்பெரிய நகரமான ''ஹிரோஷிமா'' (Hiroshima) மீது 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ம் தேதி அணுகுண்டு வீசியது. சல்லடையானது நகரம்.

அழிந்தது நகரம் மட்டுமல்ல ''மனிதம்'' என்னும் புனிதமும்தான்.

மனிதம் அழிந்த பின்னர் மனசாட்சிக்கு என்னவேலை.. அடுத்த மூன்றே நாட்களில் ஜப்பானின் மற்றொரு நகரமான ''நாகசாகி'' (Nagasaki) இரண்டாவது குண்டை தன் மடியில் வாங்கி மனித மாண்பை மரிக்கச் செய்தது.

hiroshima and nagasaki

இரு நகரங்களிலும் ஓரிரு வினாடிகளில் இரண்டு லட்சம் மனித உயிர்களையும் கோடிக்கணக்கான பிற உயிரினங்களையும் குடித்த அந்த ஆயுதமோ இன்றுவரையில் பசி அடங்காமல் தன் கோரமுகத்தை காட்டிநிற்கிறது.

ஆம்.. இன்றும் உடல் குறையுடன் பிறக்கும் சில குழந்தைகள்.. இன்னமும் அந்நகரம் அணு குண்டின் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பதையே இந்த உலகிற்கு பறைசாற்றுகின்றன.

ஆனால், மனிதமும், மனசாட்சியும் மரித்து விடவில்லை! அது இன்னமும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதனை இதோ இங்கே ஒரு ஜீவன் உலகிற்கு உணர்த்தி நின்றது!. ஆம்.. அது ஐன்ஸ்டீன்!

அணுகுண்டு ஜப்பான் மீது வீசப்பட்டதையும் அதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானதையும் கேள்விப்பட்ட ஐன்ஸ்டீன் வேதனையில் துடித்தார். நெஞ்சில் அறைந்து கொண்டு தேம்மி தேம்பி அழுதார். இந்த பேரழிவிற்கு தான் வரைந்த கடிதமும் ஒரு காரணமாகி விட்டதோ என்று அந்த ஏழை மனம் துடிதுடித்தது. ஆறாத்துயரில் ஆழ்ந்தது. வாழ்வின் இறுதிவரையில் இந்த வேதனையிலிருந்து அவரால் மீண்டுவரவே முடியவில்லை.

இதன் விளைவாக ஐன்ஸ்டீன் ''அரோடிக் அனரிசைம்'' என்னும் நோயினால் தாக்குண்டார். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் இந்த கொடிய நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். வாழ்நாளில் தான் செய்த சில தவறுகளுக்கு இது தண்டனையாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று நோயின் வேதனையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

விளைவு..

நோயின் தாக்கத்தினால் மரணப்படுக்கையில் விழுந்தார்.

மரணப்படுக்கையில் கூட தன் அறிவியல் கோட்பாடுகளை நிரூபிப்பதிலேயே தன் கவனத்தை செலுத்தினார்.

''அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது அதனை ஒருபோதும் அடக்குமுறையினால் ஏற்படுத்திவிட முடியாது'' என்று போரினை வெறுத்து அமைதியை விரும்பிய அந்த இலட்சிய நாயகனின் இதயம் 1955 ம் ஆண்டு  ஏப்ரல் 18 ல் 76 வது வயதில் நியூஜெர்சியில் (New Jersey) தன் துடிப்பை நிறுத்திக்கொண்டது.

உலகின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் துடித்த அந்த ஆன்மா நிறைவான வாழ்க்கை வாழ்ந்த திருப்தியில் அன்று அமைதியானது.

ஆனால் இன்றுவரையில் அவர் வாழ்ந்த வாழ்க்கை... அந்த ஆன்மா விட்டுச் சென்ற அந்த வெற்றிடம்... இன்னுமொரு ஆன்மாவால் நிரப்பப்படாமல் இன்றளவும் வெற்றிடமாகவே உள்ளது.

albert einstein's brain

அவருடைய பூத உடல் பூமித்தாயின் மடியில் துயில்கிறது.

ஆனால் அவருடைய மூளையோ பரிசோதனைச்சாலையில்!

ஆம்.. இது ஒன்றே ''ஐன்ஸ்டீன்'' என்னும் அறிவியலின் கருப்பொருளை மீண்டும் உருவாக்க துடிக்கும் ஆராய்ச்சியாளர்களின் கைகளில் இருக்கும் கடைசி துருப்பு சீட்டு!..

மானுடம் மீண்டும் ஒருமுறை வெல்லும்!. காத்திருப்போம்!!.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.