பழமொழிகளும் சில புரிதல்களும் - Proverbs.

பழமொழிகள் சில புரிதல்கள்.

Proverbs and some understanding.

வணக்கம் நண்பர்களே. சிந்தனைக்களம் பகுதியில் நாம் இப்போது பார்க்கப்போவது இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட அதே வேளையில் நம்மிடம் தவறான புரிதலுடன் பன்னெடுங்காலம் புழக்கத்திலுள்ள ஒரு பழமொழியை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.


பழமொழிகள் என்பது எதுகை மோனையுடனோ அல்லது சில சிலேடை சொற்றொடர்களுடனோ மனதில் எளிதில் புரியும் வண்ணம் நம் முன்னோர்களால் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த பொன் மொழிகள் எனலாம்.

பழமொழிகளில் புரிந்துகொள்ள முடியாத சில எதுகை மோனை வாக்கியங்கள் இடம் பெறுவதும் உண்டு. பெரும்பாலான பழமொழிகள் இலக்கியத்தில் சொல்லப்பட்டவை. அவைகளுக்கு இலக்கியத்திலிருந்துதான் விடைகாண முயலவேண்டுமேயொழிய நம் தனிப்பட்ட கற்பனைக்கு இடம்தர கூடாது.

காலம் காலமாக அர்த்தம் காணமுடியாமல் விழிபிதுங்கி நம் மனம்போன போக்கில் விளக்கம் கூறி உயர்ந்த கருத்துச்செறிவுள்ள ஒரு அற்புத பழமொழியானது நகைப்புக்குரியதாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக சிதைவு பெற்று வருவது வேதனையளிப்பதாக உள்ளது.

அவ்வாறு நகைப்புக்கு உள்ளாகி வரும் பழமொழி எது தெரியுமா?.

'' பந்திக்கு முந்து படைக்கு பிந்து '' என்னும் பழமொழிதான் அது.

கருத்தாழமும் இலக்கியத்தரமும் வாய்ந்த பழமொழி சரியான புரிதல்கள் இல்லாமல் சாப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு நகைப்புக்கு உரியதாக்கப்படுகிறதோ என்ற வேதனை நம்முள் ஏற்பட்டது. 

எனவே இதற்கு சரியான தீர்வு காணும்பொருட்டு "சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்" (Scientific Judgment) என்னும் நம் தளம் இலக்கிய உலகத்திற்குள் களம் இறங்கி மேற்கண்ட பழமொழிக்கு சரியான விடையைக்காணும் பொருட்டு தன் தேடுதலை தொடங்கியது.

விளைவு, முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பொன்மொழிக்கு ஏற்ப நமக்கு வெற்றியும் கிடைத்தது. 

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.

padaiku pinthu

எனவே ''பந்திக்கு முந்து படைக்கு பிந்து'' என்கிற பொன்மொழிக்கு அளிக்கப்பட்டு வரும் பலவிதமான கற்பனை விளக்கங்களை புறம்தள்ளி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சரியான விளக்கங்களை இங்கு காண்போம்.

பொதுவாக "பந்திக்கு முந்து" என்றால் விருந்தில் பரிமாறப்படும் உணவிற்கு முந்திக் கொள்ள வேண்டும் என்றும் "படைக்கு பிந்து" என்றால் போருக்கு செல்லும்போது கடைசி ஆளாக செல்லவேண்டும் அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும் என்றும் தவறான விளக்கம் கொடுக்கப்படுகிறது.

வீரத்திற்கு பெயர்போன தமிழன் இப்படி ஒரு கோழைத்தனமான பொன் மொழியை உருவாக்கியிருப்பானா?  என்பதை பற்றி இங்கு யாரும் சிந்திப்பதில்லை. 

மேலும், படைக்கும் சோற்றுக்கும் என்ன சம்பந்தம் என்றும், பொருந்தாத இரு விஷயங்களை வைத்து யாராவது ஒரு பொன்மொழியை உருவாக்குவார்களா என்கிற தெளிவும் நமக்கு இல்லை. சரி போகட்டும். இப்போது இங்கு இப்பழமொழி பற்றிய சரியான விளக்கத்தை இலக்கியத்தை ஆராய்வதின் மூலம் விடை காண்போம்.

இந்த பழமொழியில் இரண்டு வாக்கியங்கள்தான் நமக்கு புரியாதவை. அதில் ஒன்று பந்தி. மற்றொன்று படை.

இதில் "படை" என்ற சொல் போர் அல்லது யுத்தம் என்பதை குறிக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் '' பந்தி '' என்ற சொற்றொடரை பற்றித்தான் நமக்கு சரியான புரிதல்கள் இல்லை.

"பந்தி" என்ற பதத்திற்கு இலக்கியத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் என்ன தெரியுமா?.. அறிந்தால் ஆச்சரியப்பட்டுத்தான் போவீர்கள். ஆம் பந்திக்கு இலக்கியத்தில் அளிக்கப்பட்டுள்ள சரியான விளக்கம் '' சமாதானம் '' அல்லது '' சமரசம் ''!.

பொதுவாக திருமண வீடுகளில் உணவு பரிமாறும் இடத்திற்கு "பந்தி" என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

இங்குதான் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.

எழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன், உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், நல்லவர், கெட்டவர், அழகானவர், அழகில்லாதவர், ஆண் பெண் மற்றும் ஜாதி மதம் என்ற அனைத்து வேற்றுமைகளையும் களைந்து எல்லோரும் சமாதானமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதால் தான் அந்த இடத்தை பந்தி ( சமரசமாக உட்கார்ந்து சாப்பிடும் இடம் ) என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்கள்.

panthiku munthu padaiku pinthu

எனவே பந்தி - க்கு முந்து என்றால் சமாதானத்திற்கு முந்திக்கொள் என்று பொருள்படுமேயொழிய சாப்பாட்டிற்கு முத்திக்கொள் என்பது பொருள் அன்று.

பந்தி = சமாதானம் அல்லது சமரசம்,

படை = போர் அல்லது யுத்தம்.

நாட்டிலோ அல்லது வீட்டிலோ ஏதாவது பிரச்சினை என்றால் எடுத்த உடனேயே சண்டைக்கு  செல்லாதே. முதலில் சமரசம் பேசி சமாதானமாக போ. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமரசம் பேசி பிரச்சனையை முடித்துக்கொள். அப்படியும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லையெனில் அதன்பின் வேண்டுமென்றால் போரின் மூலம் தீர்வுகாண முயற்சி செய் என்பதையே ''பந்திக்கு முந்து படைக்கு பிந்து '' என்று கூறியுள்ளனர்.

''பந்திக்கு முந்து படைக்கு பிந்து '' என்றால் ''சமாதானத்திற்கு முந்து போருக்கு பிந்து '' என்று பொருள். அல்லது ''அன்பு செலுத்துவதற்கு முந்திக்கொள் பகைமை பாராட்டுவதற்கு பிந்து'' என்றும் கொள்ளலாம். மற்றபடி பந்திக்கும் சோற்றுக்கும் சம்பந்தம் இல்லை. புரிந்து கொள்வோம் தெளிவு பெறுவோம்.

மீண்டும் வேறு ஒரு பொருள் அறியா பொன் மொழியுடன். இலக்கியக் கடலில் களம் இறங்கி விடைதேடும்வரை. நன்றியுடன் உங்களின் ''சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்''. நன்றி நண்பர்களே!

💢💢💢💢

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. அருமையான தெளிவுரை நண்பரே இன்றே நானும் அறிந்து கொண்டேன்.

  மேலும் இது போன்ற நல்ல விடயங்களை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. KILLERGEE Devakottai ... தங்களின் பாராட்டுதல்களுக்கு நன்றி நண்பரே! நல்ல பல விஷயங்களை தருவதற்கான முயற்சிகள் கண்டிப்பாக தொடரும்...

   நீக்கு
 2. வித்தியாசமான விளக்கம். நான் வேறு மாதிரி படித்த நினைவு. நினைவில்லை.

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.