"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Hooded pitohui bird.

Hooded pitohui bird.

ஹீட் பிட்டோஹீய் பறவை.

Hooded pitohui bird.

          நாம் வாழும் இப்பூமியில் பலவகையான விஷத்தன்மை வாய்ந்த உயிரினங்களை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டும், பார்த்தும் இருக்கின்றோம்!

பாம்புகள் (Snakes), தேள் (Scorpion), பூரான் (Centipedes), பலவகையான விஷ பூச்சிகள், கடலில் வாழும் சிலவகை மீன்கள் மற்றும் சிலவகை தாவரங்கள் கூட மிக கடுமையான விஷங்களை தன்னுள் கொண்டுள்ளன.

Hooded pitohui bird.

ஆனால், பறவை இனங்களிலும் விஷத்தன்மை கொண்ட பறவைகள் (Poison bird) உள்ளன என்பதை என்றாவது கேள்விப்பட்டதுண்டா?!

ஆம்!  நாம் இப்பதிவில் பார்க்கப்போகும் பறவையானது கொடிய விஷத்தை தன் உடலில் மறைத்து வைத்துள்ளன. இவ்வாறு விஷத்தை தன் உடலில் வைத்திருக்கும் பறவைகள் ஒன்றிரண்டல்ல. இதுவரையில் நான்கு வகையான பறவைகள் இனங்காணப்பட்டுள்ளன. அவையாவன.

  • ஹீட் பிட்டோஹீய் ( Hooded pitohui ) (அ ) பிட்டோஹீய் டிக்ரஸ்.
  • ஸ்பர் - விங்கட் கூஸ் (Spur - Winged Goose).
  • லிட்டில் ஸ்ரீகேத்ருஷ் ( little shrikethrush ).
  • கோட்டர்னிக்ஸ் கோட்டர்னிக்ஸ்  (Common Quail).
Hooded pitohui - Quail.

மேற்குறிப்பிட்ட விஷ பறவைகளெல்லாம் ஆஸ்திரேலியா (Australia), ஆப்பிரிக்கா (Africa) மற்றும் இந்தோனேசியாவின் கிழக்கே தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ''நியூ கினியா'' விலுள்ள (New Guinea) மழைக்காடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் பரவலாக காணப்படுகின்றன.

இந்த நான்கு இனங்களில் ஹீட் பிட்டோஹீய் ( Hooded pitohui ) இனம்தான் மிகவும் ஆபத்து நிறைந்தது மற்றும் விஷத்தன்மை அதிகம் உள்ளது. எனவே, இப்பதிவில் ஹீட் பிட்டோ ஹீய் (Pitohui ) பறவையை பற்றி மட்டும் சற்று விரிவாக காண்போம்.

ஹீட் பிட்டோஹீய் பறவை.

Hooded pitohui bird.

பெயர் - ஹீட் பிட்டோஹீய் ( Hooded pitohui ) (அ ) பிட்டோஹீய் டிக்ரஸ்.

தாயகம் - நியூ கினியா ( New Guinea ).

வாழிடம் - மழைக்காடுகள் மற்றும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கிறது.

வகை - பறவை (Bird ).

உடல் அளவு - 22 முதல் 23 செ . மீ  நீளமும், 65 முதல் 75 கிராம் எடையும் கொண்டது.

குடும்பம் - ஓரியோலிடே (Oriolidae ).

பேரினம் - பிட்டோஹீய் (Pitohui )

இனம் - பி . டிக்ரஸ் (P . dichrous ).

இருமொழி பெயர் - பிட்டோஹீய் டிக்ரஸ் ( Pitohui dichrous ).

அழகுக்கு பின்னே ஒளிந்திருக்கும் ஆபத்து.

ஹீட் பிட்டோஹீய் ( Hooded pitohui ) என்னும் இப்பறவை கொள்ளை கொள்ளும் அழகைக் கொண்டது. ஆனால் அதன் பின்னால் ஆளைக் கொல்லும் ஆபத்தும் ஒளிந்துள்ளது.

இது ''நியூ கினியா'' [New Guinea] நாட்டில் காணப்படும் சிறிய உடலமைப்பைக் கொண்ட பறவை.

அழகான உடல், மயக்கும் கண்கள், கண்ணைக் கவரும் நிறம், அழகுக்கோ பஞ்சமில்லை. ஆபத்துக்கும்தான்.

Hooded pitohui bird.

இப்பறவை மழைக்காடுகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றன. இது இனிமையான விசில் ஒலியை எழுப்புகிறது. கூரான வலுவான அலகுகளையும் கொண்டுள்ளது.

இதன் தலை, கழுத்து, இறக்கை, வால் ஆகியன கருப்பு (Black Colour) நிறத்திலும் உடல் ஆரஞ்சு (Orange Colour) நிறத்திலும் காட்சியளிக்கின்றன.

கருமை நிறமான வலுவான கால்களும், விரல்களில் கூர்மையான நகங்களையும் கொண்டுள்ளன. ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் பெரும்பாலும் ஒரே மாதிரியே தோற்றமளிக்கின்றன.

இந்த பறவையிலும் ஆறு வகையான இனங்கள் ( உட்பிரிவுகள் ) உள்ளன. ஒவ்வொன்றும் நிறத்திலும் வடிவத்திலும் சிறிது மாறுபடும்.

இது பழங்கள் (Fruits), தானியங்கள் (Cereal), சிலந்தி (Spider), எறும்பு வகைகள் (Ants)  மற்றும் பூச்சிகளை (Insects) உணவாக உட்கொள்கின்றன. மேலும் ''சோரசின்'' என்னும் ஒரு வித விஷ வண்டையும் இது உணவாக உட்கொள்கிறது.

இந்த பறவையிடம் உள்ள ஒரு விசேஷ தன்மை என்னவென்றால் இது விஷத்தன்மை உள்ள ஒரு பறவை. விஷம் என்றால் பாம்புகளிடம் இருப்பதுபோல பல்லில் மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள். பயபுள்ளைக்கு உடம்பு முழுக்க அம்புட்டும் விஷம்.

உடனே பயந்து விடாதீர்கள். இதன் உடலைவிட தோல் மற்றும் இறகுகளில் மட்டுமே மிக அதிக அளவில் விஷம் காணப்படுகிறது. ''ஹோமோபாட்ராக்கோடாக்சின்'' (Homobatrachotoxin) என்ற நியூரோடாக்சின் (Neurotoxin) விஷமானது இப்பறவையை நெருங்கி தொட்டாலே போதும் இதிலிருந்து வெளிப்படும் வாசனை உங்களை லேசான மயக்க நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

இதன் சதைப்பகுதியில் அவ்வளவாக விஷம் இருப்பதில்லை. ஆனால் இதன் தோல்களிலும் இறகுகளிலும் விஷம் கொட்டிக்கிடக்கின்றன.

இப்பறவையின் சுயரூபம் தெரியாமல் சிக்கிட்டாண்டா ''சிக்கன் 65'' என்று இதன் தோலை உரித்து மசாலா தடவுனீர்கள் என்றால் அடுத்த சில வினாடிகளில் உங்கள் ஆட்டம் அனைத்தும் அடங்கிவிடும்.

ஆம் இதன் விஷம் பெரிய அளவில் நம் உடலுக்குள் சென்றால் பக்கவாதத்தை ஏற்படுத்தி விடும். பல நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

நியூகினியாவில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இப்பறவையின் ஆபத்தை பற்றி முன்பே அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் இதற்கு ''குப்பை பறவை'' என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

பழங்குடியின மக்கள் மிகப்பெரிய பஞ்சம் வரும் காலங்களில் வேறு உணவு எதுவும் கிடைக்காத காலங்களில் இப்பறவையை வேட்டையாடி உண்கின்றனர்.

எவ்வாறெனில், இப்பறவையின் இறக்கைகளிலும் தோலிலும் மட்டுமே அதிக அளவில் விஷம் உள்ளது என்பதால், இறக்கையையும், தோலையும் மிக கவனமாக நீக்கிவிடுகின்றனர். அதன் பின் இதன் உடல்முழுக்க தடிமனாக சாம்பலை பூசி காய விடுகின்றனர். இதனால் விஷம் நீக்கப்படுமாம். இது அவர்கள் நம்பிக்கை.

Hooded pitohui bird.

அதன்பின் சாம்பலோடு சேர்த்து சுட்டு பின் சாம்பலை நீக்கி சாப்பிடுகின்றனர். எனவேதான் இதனை ''சாம்பல் பறவை'' அல்லது ''குப்பை பறவை'' என்று அழைக்கின்றனர்.

ஆனாலும், இதனை சாப்பிடும்போது நாக்கு மற்றும் பற்களில் அதிக அளவில் கூச்சம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

தேள் (Scorpions), பல்லி (Lizards) முதலியவைகளை சுட்டு சாப்பிடும் இவர்களுக்கு இப்பறவையின் விஷம் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது மட்டும் உண்மை.

ஆனால் இப்படி ஒரு பறவை இருப்பது 1989 ல் தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

1989 ம் ஆண்டில் பறவை ஆராச்சியாளரான ஜாக் டம்பச்சர் (Jack Dumbacher) என்பவர் பறவைகளை பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் அழகான பறவை ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டார்.

அதனை பிடிக்க முற்பட்ட போது அதன் கால் நகங்கள் அவர் கை விரலில் லேசாக காயத்தை ஏற்படுத்த அந்த இடம் எரிச்சல் தந்ததோடு சிலவினாடிகளில் மரத்துப்போனதையும் உணர்ந்தார். ஏதோ ஆபத்து நிகழ்வதை உணர்ந்த அவர் காயத்தை ஈரப்படுத்துவதற்காக வாயில் வைத்தார்.

அவ்வளவுதான், விரலை வாயில் வைத்த அடுத்த வினாடி அதிர்ந்தார்.

வாயில் மின்சாரம் தாக்கியது போன்று உணர்ந்த அவர் சில வினாடிகளில் வாய், நாக்கு முழுவதும் மரத்துப்போனதை உணர்ந்தார்.

ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாக ஆய்வகத்திற்கு சென்று அப்பறவையை ஆராய்ந்தார். இதன் தோலிலும், இறக்கைகளிலும் ''ஹோமோபாட்ராக்கோடாக்சின்'' (Homobatrachotoxin) என்னும் விஷம் இருப்பதை அறிந்தார். இதன் பின்பே இப்பறவையின் சுயரூபம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தன.

இப்பறவைகள் காடுகளில் வாழும் ''சோரசின்'' என்னும் விஷ வண்டுகளை விரும்பி உண்கின்றன. இதனாலேயே இப்பறவையின் உடலும் விஷ தன்மையுள்ளதாக மாறி விட்டனவா என்பது பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதன் தோல் மற்றும் இறகுகள் ''பாட்ராச்சோடாக்சின்'' (Batrachotoxin) என்னும் விஷ சேர்மங்களிலுள்ள சக்திவாய்ந்த நியூரோடாக்ஸிக் அல்கலாய்டுகளை கொண்டுள்ளன. இந்த விஷம் பாம்பு (Snake), மனிதன் (Human) போன்ற எதிரிகளிடமிருந்தும், ஒட்டுண்ணிகளிலிருந்தும் (Bird louse) இப்பறவையை பாதுகாக்கிறது. 

இப்பறவைகள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை முட்டையிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மரக்கிளைகளில் கொடிகளையும், தழைகளையும் பயன்படுத்தி கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகின்றன.

இதன் முட்டைகளை இக்காடுகளில் வாழும் பாம்புகள் திருடி தின்று விடுவதுமுண்டு. மேலும் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளிடம் விஷத்தன்மை எதுவும் இருப்பதில்லை, எனவே பிற எதிரி உயிரினங்கள் மூலம் இதற்கு ஆபத்து அதிகம் என்பதால் ஆண், பெண் இருபறவைகளும் சேர்ந்து இதனை கவனமாக பாதுகாத்து வளர்க்கின்றன.

முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகளின் இறகுகளிலோ அல்லது அதன் தோல்களிலோ விஷம் எதுவும் இருப்பதில்லை. எனவே வளர்ந்த பறவைகளின் உடலில் உள்ள விஷம் இவைகள் சாப்பிடும் விஷ வண்டுகளின் உடலிலிருந்தே பெறப்படுகிறது என நம்பப்படுகிறது.

எது எப்படியோ '' நியூ கினியா'' நாட்டிற்கு நீங்கள் சென்றால்!

அங்கு இந்த பறவையை காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால்!!

அதன் அழகை தொலைவில் நின்று பாருங்கள். அதன் மென்மையான கீச் ஓசையின் இனிமையைக் கேட்டு ரசியுங்கள்!!!

ஆனால், அதன் அருகில் சென்று அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று மட்டும் தயவு செய்து ஆசைப்படாதீர்கள்!. ஏன்னா.. இத தொடுறதும் ஒண்ணுதான்.. மழைக்காலத்துல நம்ம ஊரு கரண்டு கம்பத்துல ஒண்ணுக்கு அடிக்குறதும் ஒண்ணுதான்.. என்ன புரிஞ்சுதா?

23 pulikesi Hooded pitohui bird

கடைசியா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க .. '' ம...ரு போனா திரும்ப வரும்.. உசுரு போனா திரும்ப வருமா?''.  இத புருஞ்சுகிட்டு நாசுக்கா நடந்துக்குங்க.. பை!!!

💢💢💢💢💢

மனிதனின் கையாலாகாத தனத்தால் இன்று உலகிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோன "டோடோ" (dodo bird) பறவையைப்பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உங்கள் விரல்களால் மெதுவாக தட்டுங்க.


💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.