Monday, November 25, 2019

அயோடின் - Iodine Element.


பெயர் - அயோடின்.

வகை - வேதியியல் தனிமம்.

குடும்பம் - ஹாலோஜன் (Halogen).

தன்மை - திடப்பொருள் மற்றும் நச்சுத்தன்மை.

பண்பு - அலோகம்.

நிறம் - கரு நீலம்.


குறியீடு - I

அணு எண் - 53

அணு நிறை - 126 . 90447.

அணு ஆரம் - 140 பிக்கோ மீட்டர். [1× 10 ⁻ ¹² ]

அடர்த்தி - 4 . 933 g .cm-³.

உருகுநிலை - 113.7 ⁰ C [236.66 ⁰ F ].

கொதிநிலை - 184 . 3 ⁰ C [363.7 ⁰ F ].

கண்டறிந்த விஞ்ஞானி - பெர்னார்டு கூர்டாய்ஸ். ( Bernard Courtois). பிரெஞ்சு.

கண்டறிந்த ஆண்டு - 1811 ம் ஆண்டு.


               அயோடின் சாதாரண நிலையில் கருநீல நிறமாகவும். வெப்பப்படுத்தப்படும்போது ஊதா நிறமாகவும் மாறுகிறது. மேலும் இது பளபளப்பு தன்மை கொண்ட தனிமம்.


               கிரேக்க மொழியில் ''ஐயோடேஸ்'' (Iyodes ) என்றால் 'வயலட்' அல்லது 'கருநீலம்' என்று பொருள். எனவே இதன் நிறத்தை வைத்தே இதற்கு ''அயோடின்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

               இந்த அயோடின் தனிமத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் ''பெர்னார்டு கூர்டாய்ஸ்'' ( Bernard Courtois) என்னும் பிரெஞ்சு விஞ்ஞானி. 1811 ம் ஆண்டு கந்தக அமிலத்தில் கடல்பாசி சாம்பலை கரைத்து தன்னுடைய ஆய்வு கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது தற்செயலாக அயோடினை கண்டறிந்தார்.

               அயோடின் என்பது உப்பு அல்ல.பொதுவாக உப்பு என்பது ஒன்றிற்கு மேற்பட்ட தனிமங்கள் அடங்கிய சேர்மத்தை குறிப்பதாகும். ஆனால் அயோடின் என்பது ஒரு வேதியியல் தனிமம். நச்சுத்தன்மை வாய்ந்தது. மேலும் இது ஒரு அலோகம்(non - metallic).   இது காற்று, நீர், மண் முதலியவைகளில் பலவித உலோகங்களுடன் கலந்து காணப்படுகின்றன. பூமியில் கிடைக்கும் தனிமங்களில் இது மிகவும் அரிதானது மற்றும் அதிக கனமானது.


               பூமியில் கிடைக்கும் அரிதான தனிமங்களின் வரிசையில் இது 47 வது இடத்தையும், அதிகமாக கிடைக்கும் தனிமங்கள் வரிசையில் 61 வது இடத்தையும் பிடித்துள்ளது.

               இது அதிக அளவில் கடல்களில்தான் உப்புடன் கலந்து காணப்படுகின்றது. சாதாரண நிலையில் திட நிலையில் உள்ள தனிமம். இது 113.7 ⁰ C வெப்பநிலையில் உருகும் தன்மையுள்ளது. உருகும் என்றால் நீர் போல் உருகுவதில்லை. அதற்கு பதிலாக ஆவியாகும் தன்மைக்கு தயாராகின்றன. 183 ⁰ C வெப்பநிலையில் ''வயலட்'' நிறத்தில் ஆவியாகி பதங்கமாகி விடும். இதன் வாயு கண்களிலும் நுரையீரலிலும் எரிச்சலை உண்டுபண்ணும்.


               போலார் கரைசலுடன் சேர்க்கப்படும் போது அயோடின் மின் கடத்தும் தன்மையை பெறுகிறது.   இது அதிக எலக்ட்ரான் அடர்த்தி கொண்ட தனிமம். தூய்மையான அயோடின் நீரில் மிக குறைந்த அளவே கரையும் அதாவது 3.45 லிட்டர் நீரில் 1 கிராம் அயோடின் மட்டுமே கரையும்.

              அயோடின் ஆய்வகங்களில் ஆக்சிஜன் அணுக்களை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது. இது காரங்களுடன் வினைபுரிந்து அயோடைடுகளை உருவாக்குகிறது. மேலும் அசிடிக் அமிலம் தயாரிக்கவும், பாலிமர் தயாரிக்கும் தொழில்கூடங்களிலும் வினையூக்கியாக பயன்படுகிறது. மேலும் மருத்துவ துறைகளிலும், சாயம் தோய்க்கும் துறைகளிலும், ஒளிபடத்துறைகளிலும்,  நீரை சுத்திகரிப்பதற்கும் அயோடின் கலந்த மருந்துப்பொருள்களே பயன்படுத்தப்படுகின்றன.

               அயோடின் தோலில் எரிச்சலை உண்டுபண்ணும். அயொடினில் இருந்து பெறப்படும் ''அயோடைடு'' மிகவும் நச்சுத்தன்மை வாய்த்தது ஆகும்.

               பொதுவாக அயோடின் நச்சுக்குணம் உடையது என்றாலும் மருத்துவத்துறையில் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆல்கஹாலுடன் சேர்த்து ''டிங்சர் அயோடின்'' என்ற கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது.



               ''அயோடின் 131'' ஏன்ற ரேடியோ நியூக்ளிடைடு (radionuclides) அணுஆயுத கருவி உற்பத்தி துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அயோடின் 131 புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதால் தற்போது பயன்பாட்டில் இல்லை எனலாம். அயொடினின் கதிரியக்க ஐசோடோப்புகளை தைராய்டில் வரும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துகின்றனர்.

               இங்கு நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அயோடினானது நம் உடலுக்கு மிக குறைந்த அளவில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒருவித கனிம சத்து.

               நான் வளர்கிறேனா மம்மி - என்று உங்கள் குழந்தை கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கொஞ்ச வேண்டுமெனில் உங்கள் குழந்தைக்கு அவசியம் தேவை அயோடின். குழந்தைகளுக்கு மட்டுமல்ல கரு முதல் எரு வரை மனித வாழ்க்கைக்கு கண்டிப்பாக தேவைப்படும் ஒரு கனிம சத்து இது எனலாம்.

               ஆம், ...  மனித உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுவது இதுவே. உங்கள் உடம்பிலுள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிக முக்கியமானது ''தைராய்டு''. இந்த சுரப்பி ''தைராக்ஸின்'' என்னும் ஹார்மோனை தடையில்லாமல் சுரந்தால் மட்டுமே உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் சாத்தியமாகும். இந்த தைராக்சின் ஹார்மோனில் அதிக அளவில் இருப்பது அயோடின் மூலக்கூறுகள்தான். எனவே நீங்கள் உண்ணும் உணவில் போதிய அளவில் அயோடின் இருந்தால்தான் மேற்கண்ட தைராய்டு சுரப்பி நேர்த்தியாக வேலை செய்யும் .

               எனவே, ..  உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு பல சத்துக்கள் அவசியமாயினும் மிக அதிக அளவில் துணைபுரிவது அயோடின் என்னும் இந்த கனிம சத்துதான். மேலும் இது உடலின் வெப்பத்தை பாதுகாப்பதிலும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை ஆரோக்கியமான நிலையில் வைத்து கொள்ளவும் இது மிகவும் அவசியமானது. ஆனால் பூமியில் இந்த கனிம சத்து அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. என்றாலும் பால் , முட்டை, தானியம், மாமிச உணவு, மற்றும் அனைத்து கடல் சார்ந்த உணவுகளிலும் சிலவகையான காய்கறிகளிலும் ஓரளவில் கிடைக்கின்றன.



               நமக்கு அன்றாடம் வயதிற்கேற்ப 50 மைக்ரோ கிராம் முதல் 150 மைக்ரோ கிராம் வரை அயோடின் தேவைப்படுகிறது. 100 கிராம் காய்கறி, மாமிசம் அல்லது முட்டையில் 25 மைக்ரோ கிராம் அயோடின் சத்து உள்ளது. அயோடின் சத்து குறைந்தால் ''முன்கழுத்து கழலை'' நோய் வருவதுடன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் பாதிப்படையும். உலகம் முழுக்க 50,000,000 குழந்தைகள் அயோடின் பற்றாக்குறையால் பாதிப்படைகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.

               அயோடின் சத்து குறைவினால் உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

               கருவுற்ற பெண்களுக்கு தினந்தோறும் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை. இதில் ஏதாவது குறைவு நேர்ந்தால் கரு சிதைவு ஏற்படும். பிறக்கும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி இருக்காது. அறிவுத்திறன் மற்றும் கற்றல் திறனை வெகு அளவில் பாதிக்கும்.

               எனவே, உணவில் அயோடின் சத்து பற்றாக்குறையை போக்க அரசாங்கமே அயோடின் கலந்த உப்பை விநியோகிப்பதுடன் அதை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளவும் பரிந்துரைக்கிறதது.



நம் உடலுக்கு அயோடினின் தேவை (1 நாளைக்கு )

சிறு குழந்தைகளுக்கு  - 50 முதல் 60 மைக்ரோ கிராம்.

சிறுவர்களுக்கு  -  70 முதல் 120 மைக்ரோ கிராம்.

பெண்களுக்கு  -  100 முதல் 120 மைக்ரோ கிராம்.

ஆண்களுக்கு  -  130 முதல் 150 மைக்ரோ கிராம்.

கர்ப்பிணி பெண்களுக்கு - 100 முதல் 120 மைக்ரோ கிராம்.

பாலூட்டும் பெண்களுக்கு - 150 முதல் 170 மைக்ரோ கிராம்.

அயோடின் குறைவு பாதிப்பு உள்ளவர்களுக்கு - 300 மைக்ரோ கிராம் வரை தேவைப்படும்.

ஒரு தேக்கரண்டி அயோடின் கலந்த உப்பில் சுமார் 150 மைக்ரோ கிராம் (0.15 மில்லி கிராம் ) அயோடின் உள்ளது.

               ''அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'' என்பது போல உடலுக்கு நன்மை விளைவிக்கும் அனைத்து சத்துக்களுமே உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அளவில் அதிகரித்தாலும் அது தீமையை விளைவிக்கும் என்பதனை நினைவில் கொள்ளவும்.


               ஒருவருக்கு முன்கழுத்து கழலை நோய் வந்துள்ளது என்றால் உடனே அவருக்கு அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள் ... ஏனென்றால் உடலில் அயோடின் சத்து அளவு அதிகரித்தால்கூட முன்கழுத்து கழலை நோய் வரும் என்பதனை நினைவில் நிறுத்தி எதனால் முன்கழுத்து கழலை நோய் வந்துள்ளது என்பதனை அறிந்து அதன் பின் அயோடின் கலந்த உணவை எடுத்துக்கொள்வதா அல்லது குறைத்துக்கொள்வதா என முடிவு செய்யவும்.

               எனவே, உடலுக்கு நம்மை அளிக்கும் அயோடினை அளவு அறிந்து உண்போம் ... வளம் அறிந்து வாழ்வோம் ... நன்றி!!!...

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

4 comments:

  1. மாணாக்கர்களுக்கு பயனுள்ள செய்திகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே !!!

      Delete

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...