Wednesday, December 11, 2019

நளபாகம் - அகத்திக்கீரை.


               ''நளபாகம்'' பகுதிக்கு வருகை தந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி ! இப்பகுதியில் உடலுக்கு நன்மையும் உறுதியும் தரும் பல வகையான உணவுப் பொருள்களையும், அவைகளில் அடங்கியுள்ள சத்துக்களை பற்றிய


விபரங்களையும். நாவிற்கு சுவையாக தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்பதையும் பார்த்து வருகிறோம். இப்பகுதியில் இன்று ''அகத்திக்கீரை'' யில் எவ்வகையான உணவுப் பொருள்களை தயாரித்து பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

அகத்திக்கீரையில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரங்கள்.
[100 கிராம் கீரையில்]

புரதம்                  - 8.4 கிராம்.
தாதுஉப்புக்கள்          - 2.1 கிராம்.
மாவுச்சத்து             - 11.8 கிராம்.
இரும்பு                 - 3.9 மி.கிராம்.
வைட்டமின் A          - 5,400 மைக்ரோ கிராம்.
வைட்டமின் C          - 1.69 மி.கிராம்.
நீர்                     - 7.2 கிராம்.
கொழுப்பு               - 1.4 கிராம்.
நார்ச்சத்து              - 2.2 கிராம்.
சர்க்கரைச்சத்து         - 11.8 கிராம்.
சுண்ணாம்பு            - 1.30 மி.கிராம்.
பாஸ்பரஸ்             - 80 மி.கிராம்.
தையமின்              - 0.21 மி.கிராம்.
ரிபோக்பிளேவின்       - 0.09மி.கிராம்.
நியாசின்               - 1.2 மி.கிராம்.
நிக்கோடினிக் அமிலம்  - 1.2 மி. கிராம். மற்றும்,
வைட்டமின் B, மக்னீசியம், பொட்டாசியம், அயோடின், உட்பட ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இனி அகத்திக்கீரையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை காண்போம்.
☕☕☕☕☕☕☕☕☕☕

அகத்திக்கீரை குழம்பு.

தேவையானவை :-

          அகத்திக்கீரை இலை - 2 கப், சின்ன வெங்காயம் - 1 கப், பூண்டு - 6 பல்லரிசி, தக்காளி - 4, புளி - நெல்லிக்காய் அளவு, மல்லித் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்கள் :- 

          துவரம்பருப்பு - அரை டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், பச்சரிசி - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன்.

தாளிக்கத் தேவையான பொருட்கள் ;-

          உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.
செய்முறை :-

          பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அகத்திக்கீரையை நன்கு கழுவி குக்கரில் அரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கி 2 நிமிடம் கழித்து திறந்து வைக்கவும். பூண்டுப்பல்லை நசுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

          எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடுங்கள். நன்கு கொதிக்கும்போது கீரையை அதனுடன் சேர்த்து  பச்சை வாசனை போனதும் பொடித்து வைத்திருக்கும் மசாலாப் பொடியைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


கம கமக்கும் அகத்திக்கீரை குழம்பு ரெடி.

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

அகத்திக்கீரை சாம்பார்.

தேவையானவை :-

          துவரம்பருப்பு - 100 கிராம், அகத்திக்கீரை - 1 கப், சின்னவெங்காயம் - 20, தக்காளி - 1, பச்சைமிளகாய் - 2, கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 8 பல், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை :-

          துவரம் பருப்பை அலசி அத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து மசித்து கொள்ளவும். அகத்திக்கீரையையும் சுத்தம் செய்து  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

          கடாயில் எண்ணெய்  ஊற்றி கடுகு, வெந்தயம்,கறிவேப்பிலை  போட்டு தாளிக்கவும். பின் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும். பின் அகத்திக் கீரையை போட்டு 2நிமிடங்கள் வதக்கவும். பின் மசித்த துவரம்பருப்பு  பச்சைமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், சீரகத் தூள், புளி கரைத்த  நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வந்ததும் அவற்றுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் தூள்,சேர்த்து  தேவையான தண்ணீர் விட்டு கிளறி கொதிக்க விடவும்.


கம கம சுவையோடு சத்து நிறைந்த அகத்திக்கீரை சாம்பார் ரெடி.


🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚

அகத்திக்கீரை சொதி.

தேவையானவை :- 

                  அகத்திக்கீரை - 1 கட்டு, தக்காளி - 2, பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 4, மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப், உப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையன அளவு.

செய்முறை :- 

             கீரையை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். தக்காளியை நான்கைந்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை இரண்டிரண்டாகக் கீறிக்கொள்ளவும்.

          ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு கொதிக்க விடவும். சிறிது கொதித்தவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

          வெங்காயம்,தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் 5 நிமிடத்திற்குப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றுங்கள். பால் கொதித்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கிவிடவும்.


          சுவையான அகத்திக்கீரை சொதி தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺

அகத்திக்கீரை சூப்.

தேவையானவை :- 

          அகத்திக்கீரை - 1 பிடி, தக்காளி - 1, சிறிய வெங்காயம் - 10, பூண்டு - 4 பல், தேங்காய்ப் பால்  - 100 மில்லி, மஞ்சள்தூள் - 1டீ ஸ்பூன், சீரகம் - அரை டீ ஸ்பூன், பட்டை  - சிரியதுண்டு, கிராம்பு  - 1, நல்லமிளகு தூள் - சிறிதளவு, அரிசி கழுவிய தண்ணீர் - அரை லிட்டர், நெய் - 1 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :-

          சிறிய வெங்காயத்தையும், பூண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

          குக்கரில் நெய் விட்டு அகத்திக்கீரையை போட்டு லேசாக வதக்கி அதன்பின் அதனோடு வெங்காயமும், பூண்டும் சேர்த்து  2 நிமிடம் வதக்கி அதன்பின் அதனோடு மஞ்சள்தூள், சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி அரிசிகழுவிய தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். 2 விசில் வந்தவுடன் இறக்கி தேங்காய்ப்பால், நல்லமிளகு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.


         அகத்திக்கீரை சூப் ரெடி. வாரம் ஒருநாள் இதை சாப்பிட்டு வர வயிற்றுப்புண், வாய்புண்கள் தீரும்.

🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰

அகத்திக்கீரை பொரியல்.

தேவையானவை :-

          அகத்திக்கீரை - 4 கப், வெங்காயம் - 1, தேங்காய் - அரை கப் (துருவியது), பூண்டு - 6 பற்கள், காய்ந்த மிளகாய் - 3, கடுகு மற்றும் உளுந்தம்பருப்பு (தாளிக்க) - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 1மேஜைக்கரண்டி.

செய்முறை :-

          காய்ந்த மிளகாய் (வத்தல்) மற்றும்  பூண்டு இரண்டையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

          கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பை தாளிக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும். அதன்பின் அரைத்த பூண்டு, மிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கிய பின்பு சுத்தம் செய்த அகத்திக்கீரையை போட்டு நன்கு கிளறவும். கீரை வெந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.


 சுவைமிகுந்த அகத்திக்கீரை பொரியல் ரெடி.

🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹

அகத்தி பூ பொரியல்.

தேவையானவை :- 

          செவ்வகத்திப்பூ - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 15, வரமிளகாய் - 2, கடுகு - கால் ஸ்பூன், கடலை பருப்பு - கால் ஸ்பூன், உளுந்தம் பருப்பு - கால் ஸ்பூன், தேங்காய்ப்பூ - 3 ஸ்பூன், கருவேப்பிலை - தேவையான அளவு, எண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :-

          செவ்வகத்தி பூவில் காம்பை நீக்கி சிறிதாக அரிந்து நீரில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.

          கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பின்பு சின்ன வெங்காயம் போட்டு வதக்கிய பின் அதனுடன் வரமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.


          பின்பு அரிந்த செவ்வகத்திப்பூவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அளவான சூட்டில் கிளறவும். பின்பு தேங்காய்ப்பூவை சேர்த்து கிளறி இறக்க சுவையான அகத்திப்பூ பொரியல் ரெடி.

🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯

முக்கிய குறிப்புகள் :- 

          அகத்திக்கீரைக்கு மருந்துகளின் வீரியத்தை குறைக்கும் சக்தி உண்டு. எனவே வேறு ஏதாவது நோய்களுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மருந்து சாப்பிடும் வரை அகத்திக்கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

          அதிக அளவு மது சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இக்கீரையை சாப்பிடுவதை தவிர்க்கவும். 

          இக்கீரையை அடிக்கடி உண்பதால் கிரந்தி, சொறி, வாய்வு முதலிய உடற்கோளாறுகள் அதிகரிக்கின்றன. எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும். வாரத்திற்கு ஒருநாள் அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை உணவாக பயன்படுத்திவர பல நன்மைகளை அடையலாம்.

          பொதுவாக கீரை உணவை அது எந்த கீரையாக இருந்தாலும் சரி இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கீரை ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கடினம் என்பதாலும், பகலில் ஜீரண மண்டலம் பிரமாதமாக வேலை செய்வதுபோல இரவில் வேலை செய்வதில்லை ஆதலால் ஜீரணிக்க கடினமான பொருள்களை இரவில் புசிப்பதை தவிர்க்க வேண்டும்.

🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻

2 comments:

  1. ஆஹா அகத்திக்கீரையில் இவ்வளவு விசயங்களா ?

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.

Next previous home