"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாம்பு விஷம் - ஒரு அறிமுகம் - An Introduction to Snake Venom.

பாம்பு விஷம் - ஒரு அறிமுகம் - An Introduction to Snake Venom.

Introduction - Snake Venom.

உலகிலுள்ள அனைத்து பாம்புகளையும் விஷத்தன்மையுள்ள பாம்பு, விஷத்தன்மை இல்லாத பாம்பு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாம்புகள் தன் விஷத்தை எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், இரைகளை வேட்டையாடவும்  பயன்படுத்துகின்றன.


    பாம்பு இன வகைகள்.

    உலகில் ஏறக்குறைய 2,500 கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. இதில் வெறும் 5 சதவீத பாம்புகளே விஷத்தன்மை வாய்ந்தவை.

    இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அவைகளில் 50 க்கும் குறைவான இனங்களே விஷத்தன்மை வாய்ந்தவையாகும்.

    இந்தியாவில் உள்ள பாம்புகளில் நல்ல பாம்பு, இராஜநாகம், கட்டுவிரியன் போன்றவை கொடிய விஷப்பாம்புகள் ஆகும். சிலவகை பாம்புகளின் விஷங்கள் நேரடியாக நரம்புமண்டலத்தையும், சிலவகை பாம்புகளின் விஷங்கள் குருதி உறைதலையும் தடுத்து இறப்பை ஏற்படுத்துகின்றன.

    Belcher snake

    நிலப்பரப்பில் பாம்புகள் வாழ்வதுபோல் நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன. நீரில் வாழும் பாம்புகளில் அதிக விஷ தன்மையுள்ளது கடலில் வாழும் ''Belcher snake'' தான்.

    கடல்களில் பலவகையான பாம்பு இனங்கள் இருக்கின்றன என்றாலும் உடலில் கருப்பு, வெள்ளை வரிகளைக் கொண்ட இந்த பாம்புதான் மிகக் கொடூரமான விஷத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

    பாம்பு விஷம் - ஒரு அறிமுகம்.

    பாம்பு விஷம் என்பது ஒருவிதமான ப்ரோட்டீன்தான். ஆனால் மிகவும் சிக்கல் நிறைந்த பலவித மூலக்கூறுகளை கொண்டது. இது செறிவு செய்யப்பட்ட பலவகை புரோட்டீன்களால் (Highly protin) ஆனது. இது ''நியூரோ டாக்சின்ஸ்'' Neurotoxins என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு ஒன்றை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். பாம்பின் விஷம் என்பது  ஒரே ஒரு தனிப்பட்ட பொருளினால் ஆனது அல்ல. அது பல்வேறு பொருள்களினால் ஆன ஒரு கூட்டுக்கலவை. நூற்றுக்கும் மேற்பட்ட  வேதியல் நொதிகள் மற்றும் செறிவு நிறைந்த பலவகை புரதங்களின் தொகுப்பு.

    ஒவ்வொருவகை பாம்புகளிலும் புரதங்களின் வகைகளும், கலவைகளின் மூலக்கூறுகளும் வேறுபடுகின்றன. எனவேதான் இன்றுவரை பாம்புகளின் விஷமானது மனித மூளையால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத பல சிக்கல்கள் நிறைந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    நச்சு உறுப்புகள்.

    பாம்பின் விஷப்பையானது அதன் தலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதிலிருந்து ஒரு குழாய் உட்புறம் துளையிடப்பட்ட விஷப்பற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. விஷப்பற்கள் இரண்டும் தேவைப்படும்போது மட்டுமே வெளிவரும். மற்ற நேரங்களில் மேல் அன்னத்தில் உட்புறமாக உள்ளிழுக்கப்பட்டு மடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.

    Snake Venom

    இந்த விஷப்பற்கள் கூர்மையானதாகவும், துளையுள்ளதாகவும் இருக்கின்றன. எதிரிகளை இப்பற்களால் கடிக்கும் போது உட்புறமுள்ள கடைவாய்ப்பற்களால் அதன் மேற்புறமுள்ள விஷப்பையை அழுத்தும்போது குழாய்கள்மூலம் கடத்தப்பட்டு பற்களின் துளைகள் வழியாக விஷம் பீச்சியடிக்கப்படுகிறது.

    குட்டி பாம்புகளுக்கு கூட விஷம் இருப்பது உண்டு. முட்டையிலிருந்து அப்போதுதான் வெளியில் வந்துள்ள ராஜநாகத்தின் குட்டி தீண்டினால் கூட பரலோகம்தான்.

    மிக அதிக அளவு விஷத்தன்மையுள்ள பாம்புகள் என்றால் ராஜநாகம் மற்றும் கடல் பாம்புகளை குறிப்பிடலாம்.

    கோப்ரா வகையை சேர்ந்த பாம்புகள் பல நேரங்களில் எதிரிகளின் கண்களை நோக்கி விஷத்தை மிக வேகமாக பீச்சி அடிக்கின்றன. இந்த விஷம் கண்களில்பட்டால் எக்காரணத்தைக் கொண்டும் கண்களை கசக்குதல் கூடாது. சுத்தமான நீரினால் கண்களை கழுவ வேண்டும். கண்களை கசக்கினோம் என்றால் அவ்வளவுதான் உடனடியாக கண்பார்வை பறிபோகும்.

    பாம்பின் விஷம் மயில், சிங்காரக்கோழிகள், கீரி உள்ளிட்டவைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உண்மையில்லை. இவைகளும் பல நேரங்களில் ப்ரீ விசாவில் பரலோகம் போவதுண்டு.

    பாம்பு தன்னை தீண்டாதவாறு இவைகள் எச்சரிக்கையாக பாம்பை கையாளுகின்றன என்பதே உண்மை. மேலும் கீரியின் உடலில் "அசிட்டைல்கோலின்" (Nicotinic acetylcholine receptors) என்னும் ஒருவித விஷ எதிர்ப்புசக்தி இருப்பதால் பாம்பின் விஷத்தை இது ஓரளவிற்கு முறியடித்துவிடுகிறது. காடுகளில் பாம்பின் விஷத்தினால் பாதிப்படையாத மேலும் சில உயிரினங்கள் உள்ளன என்பதும் உண்மை.

    பாம்பு ஒருவரை கடித்து விஷம் உடம்பில் ஏறிவிட்டால் உடனே அவர் கண்கள் மற்றும் உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிடும், வாயில் நுரை தள்ளும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையே.

    எனவே உடல் நீலமாக மாறவில்லை, வாயில் நுரைதள்ளவில்லை எனவே விஷம் இல்லை என்று நீங்களே முடிவு செய்து வேப்பிலை அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து விடாதீர்கள். உடலில் பாம்பு கடித்ததற்கான விஷப் பல்லின் அடையாளம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    மருத்துவத் துறையில் விஷத்தின் பயன்.

    பாம்பின் விஷம் தற்காலத்தில் மருத்துவத்துறையில் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். அவைகளின் விபரங்களாவன- 

    எப்டிபிபனட், ட்ரோபிபான் - மாரடைப்பு.

    நியூக்ரோ டாக்சிஸ் - கேன்சர் மற்றும் வலி நிவாரணி.

    ரஸ்ஸல்ஸ் வைப்பர் - ரத்தம் உறைதலை தடுக்க.

    முதலுதவி.

    பாம்புகள் தேவையின்றி யாரையும் கடிப்பதில்லை. நாம் அவைகளுக்கு இடையூறு செய்தால் மட்டுமே அதுவும் தன் உயிருக்கு ஆபத்து வருவதாக உணர்ந்தால் மட்டுமே அவை தீண்டுகின்றன.

    ஒருவரை விஷ பாம்பு தீண்டினால் உடனே அவர் இறந்துபோவார் என்பது உண்மையில்லை. ஏனெனில் பல நேரங்களில் பாம்புகள் கடிப்பதோடு நிறுத்திவிடுகின்றன விஷத்தை உடலில் செலுத்துவதில்லை.

    கடிபட்டவர் இறப்பதும், பிழைப்பதும் அவர் உடம்பில் செலுத்தப்பட்டுள்ள விஷத்தின் அளவைப் பொறுத்தும், நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பொறுத்துமே அமையும்.

    விஷத்தினால் ஏற்படும் மரணத்தை விட பயத்தினாலும், அதிர்ச்சியினாலும்தான் அதிக மரணம் நிகழ்வதாக சொல்கிறார்கள். எனவே பாம்பு கடித்தவருக்கு நாம் முதலில் கொடுக்க வேண்டிய சிகிச்சையே தைரியம்தான்.

    பாம்பு தீண்டியவர்கள் பயப்படாமல் தைரியமாக, பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்தாலே அவர்கள் உயிர் பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது என்பது அறிவியல்மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

    suna pana

    பாம்பு தீண்டியவுடன் இதயத்துடிப்பு குறையும். ஆனால் நாம் பாம்பு கடிபட்டவருக்கு பயத்தை உண்டாக்கி, இதயத்துடிப்பை வேகமாக்கி விரைவாக விஷம் உடல் முழுக்க பரவ வழிசெய்துவிடக்கூடாது. எனவே சம்பத்தப்பட்ட நபரை பரபரப்பில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்யவும்.

    அதே வேளையில் பாம்புக்கடித்தவரை எழுந்து நடக்கவிடவும் கூடாது. நடப்பதாலும், ஓடுவதாலும் இரத்தஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் விஷம் வேகமாக பரவ வழிவகுத்துவிடும். எனவே உடம்பில் அதிக அளவில் அசைவை ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும்படி சொல்லுங்கள்.

    எந்த பாம்புக்கடியானாலும் அதை செயலிழக்கச் செய்யக்கூடிய அளவிற்கு மருத்துவமும், அறிவியலும் வளர்ச்சி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டி அவருக்கு தைரியம் கொடுங்கள்.

    பாம்பு எந்த இடத்தில் கடித்ததோ அந்த இடத்தின் மேற்பகுதியில் இறுக்கமாக கட்டு போடும் பழக்கம் நம்மிடையே பரவலாக இருக்கிறது. இது ஒரு தவறான பழக்கம். ஏனெனில் பாம்பின் விஷம் சதைகளை கூழாக்கும் தன்மை படைத்தது.

    கைகளிலோ, கால்களிலோ பாம்பு தீண்டினால் அதன் மேல்பகுதியில் இறுக்கமாகக் கட்டுவதால் பாம்புவிஷம் வேறுஎங்கும் செல்ல முடியாமல் மொத்த விஷமும் அந்தப்பகுதியிலேயே தங்கி அந்த பகுதி சதைகளை கூழாக்கி நரம்புகளையும் சிதைத்து மீட்கவே முடியாத அளவிற்கு சிக்கலாக்கி கை, கால்களை உடம்பிலிருந்து நிரந்தரமாக எடுக்கவேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

    எனவே இரத்த ஓட்டம் தடைப்படும்படி மிக இறுக்கமாக கட்டு போடுவதை தவிர்க்கவேண்டும்.

    இறுக்கமாக கட்டு போடுவதால் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட உறுப்புகள் முற்றிலும் அழிந்து போகும் நிலைக்கு நாம் கொண்டு சென்று விடுகிறோம். எனவே கட்டு போடுவதைத் தவிர்க்கவும்.

    பாம்பு கடித்த இடத்தில் விஷத்தை உறிந்து எடுக்கிறேன் என்று பிறிதொருவர் வாய் வைத்து உறிவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் வாய் வழியாக விஷம் உங்கள் உடலிலும் பரவி உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

    பாம்பு கடித்த இடத்தில கத்தியால் கீறி விஷத்தை வெளியே எடுக்கிறேன் என்று கத்தியை தீட்ட ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் காலன் உங்கள் ரூபத்தில் வந்து கணக்கை முடிக்க முடிவுகட்டி விட்டான் என்று உறுதிப்படுத்திவிடலாம்.

    ematharma raja

    ஏனெனில் சில பாம்புகளின் விஷம் இரத்தத்தை உறையச் செய்யும். இன்னும் சிலவகை பாம்புகளின் விஷம் இரத்தத்தை உறையவிடாமல் நீர்த்துப்போக செய்யும் குணம் கொண்டதாக இருக்கும். எந்தவகையான பாம்பு தீண்டியது என்று தெரியாமல் தீண்டிய காயத்தில் கத்தி வைத்து கீறி விட ஆரம்பித்தீர்கள் என்றால் அவ்விடத்தில் இரத்தம் உறையாமல் ஆறு போல் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துவிடும். அடுத்த 5 நிமிடத்தில் அவர் பரலோகம் பயணித்துவிட வேண்டியதுதான்.

    அதனாலேதான் ''கத்தியை தீட்டாதே உன் புத்தியை தீட்டு'' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே கத்தியை கையில் எடுத்து விடாதீர்கள்.

    பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    மூலிகை மருந்துகள்.

    இன்னொன்றையும் இங்கு கவனத்தில் கொள்ளுங்கள். பாம்பு விஷத்தை நீக்குவதற்கு மூலிகை சிகிச்சையோ, அல்லது வேறுமாதிரியான நாட்டு வைத்திய சிகிச்சைகளோ எந்தவிதத்திலும் பயன்தராது என்பதனை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். பாம்பு விஷத்தை செயலிழக்க செய்யும் திறன் எந்தவிதமான மூலிகைகளுக்கும் கிடையாது என்பது மட்டுமல்ல அப்படியான அதிசய மூலிகை எதுவும் உலகில் இல்லை என்பதனை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.

    பாம்பு விஷம் என்பது செறிவூட்டப்பட்ட பலவகையான புரோட்டீன்களால் ஆன பொருள். இந்த ப்ரோட்டீன்களின் தன்மை ஒவ்வொரு வகையான பாம்பிற்கும் வேறுபடும். எனவே ஒருவகை பாம்புக்கடிக்கு கொடுக்கப்படும் விஷ எதிர்ப்பு மருந்தானது மற்றொருவகை பாம்புக்கடி விஷத்திற்கு பயனளிப்பதில்லை.

    எனவே, உலகிலுள்ள கோடானுகோடி மூலிகைகளாகட்டும் அல்லது தாவரங்களாகட்டும் எதற்குமே பாம்பின் விஷத்தை செயலிழக்கச் செய்யும் திறன் கிடையாது என்பதனை ஆணித்தரமாக நினைவில் வையுங்கள்.

    மூலிகை மருத்துவம் மிக அற்புதமான மருத்துவம்தான் மறுப்பதற்கில்லை. ஆனால் பாம்புக்கடி என்று வரும்பட்சத்தில் தயவுசெய்து மூலிகை சிகிச்சை செய்கிறேன் என்று சொல்லி உயிரை பணயம் வைக்காதீர்கள்.

    உடனே செய்யவேண்டியவை.

    அப்படியென்றால் நாங்கள் வேறு என்னதான் செய்ய என்கிறீர்களா? சொல்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது மூன்றே மூன்று வேலைதான்

    முதல் வேலை.

    பாம்பினால் தீண்டப்பட்டவருக்கு பயத்தை உண்டாக்காமல் நல்ல தைரியத்தை கொடுங்கள். இதயதுடிப்பு அதிகரிக்கும்படியான எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். இதயத்துடிப்பு அதிகரித்தால் விஷம் வேகமாக உடலில் பரவி பாதிப்பை அதிகரிக்கும்.

    மேலும் விஷ பாதிப்பு உள்ளவரை எழுந்து நடக்கவோ, ஓடவோ சொல்லாதீர்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவேண்டுமெனில் நாம்தான் அவரை தூக்கிச்செல்ல வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இரண்டாவது வேலை.

    பாம்பு கடித்த கடிவாயை கண்டிப்பாக நீரினால் சுத்தம் செய்தல் கூடாது. கத்தியாலோ அல்லது வேறு எந்தவிதமான ஆயுதத்தாலோ கீறுதல் கூடாது. பாம்பு கடித்த இடத்திற்கும் மேல் பகுதியில் கட்டுப்போட வேண்டிய தேவையில்லை. தேவைப்பட்டால்  இறுக்கமாக கட்டு போடாமல் இரத்தவோட்டம் இருக்கும்படி தளர்வாகக் கட்டுப்போடவும்.

    ஏனெனில் இறுக்கமாக கட்டு போடும்போது விஷம் வேறு எங்கும் செல்ல முடியாமல், மொத்த விஷமும் ஒரே இடத்தில் தங்கி, விஷத்தின் வீரியத்தால் சம்பந்தப்பட்ட உறுப்பு முற்றிலுமாக சிதைந்துபோவதோடு அவ்வுறுப்பை உடலிலிருந்து நிரந்தரமாக அகற்றவேண்டிய நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே இறுக்கமாக கட்டு போடுவதை தவிர்க்கவும். இன்னும் சொல்லப்போனால் கட்டுபோடுவதை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

    அதிலும் குறிப்பாக கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டைப்பாம்பு என்று சொல்லப்படும் சுருட்டை விரியன் கடித்தால் கண்டிப்பாக எக்காரணம் கொண்டும் கட்டு போடவே கூடாது.

    மேலும், கட்டு போடுகிறேன், தலையில் பற்று போடுகிறேன் என்று விதவிதமான காரணங்களைச் சொல்லி தயவு செய்து நேரத்தை வீணடிக்கவேண்டாம்.

    மூன்றாவது வேலை.

    அடுத்து நாம் துரிதமாக செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை என்னவென்றால், காலதாமதம் செய்யாமல் அருகிலிருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்ப்பதே.

    அதை விடுத்து மூலிகை அரைக்கிறேன், கஷாயம் காய்சுகிறேன், ஒத்தடம் கொடுக்கிறேன், பூஜை போடுகிறேன், தாயத்து கட்டுகிறேன், நெருப்பினால் சூடு போடுகிறேன், கத்தியை வைத்து கீறுகிறேன், வாயைவைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்கிறேன், வேப்பிலை அடிக்கிறேன். என்று களத்தில் இறங்கி விட்டால்.. சந்தேகமே இல்லாமல் ''டெட் சர்டிபிக்கேட்'' டிற்கு  விண்ணப்பித்து விடலாம்.

    Snake Venom.

    Snake Venom vadivel

    கல்கி பகவானுக்கு நன்றி சொல்லுங்க.

    கல்கி பகவான் என்று இங்கு நான் சொல்வது "குதிரை"யை. அது சரி குதிரைக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும் என்று கேட்கின்றீர்களா?. தொடர்ந்து படியுங்கள் புரியும்.

    பாம்பின் விஷத்தை செயலிழக்கச் செய்து உங்கள் உயிரை மீட்டுத்தரக்கூடிய தடுப்பு மருந்து குதிரைகளின் உடம்பிலிருந்துதான் பெறப்படுகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அதுதான் உண்மை.

    பாம்புகளிடம் இருந்து சேகரிக்கப்படும் விஷத்தை ஒரு ஆரோக்கியமான குதிரையின் உடலில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஊசி மூலம் செலுத்துவார்கள். விஷம் செலுத்தப்பட்டவுடன் குதிரையின் உடல் மிக வேகமாக அந்த விஷத்திற்கு எதிர்வினையாற்றும். அதாவது விஷத்தை செயலிழக்கச் செய்வதற்கு அதன் உடலில் ''விஷ எதிர்ப்பு அணுக்கள்'' உற்பத்தியாகும்.

    அவ்வாறு வேகமாக உற்பத்தியாகும் விஷ எதிர்ப்பு அணுக்களை அதன் இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்தெடுக்க குதிரையின் மொத்த எடையில் 1 சதவீதம் என்ற அளவில் இரத்தத்தை எடுத்து அதிலுள்ள விஷ எதிர்ப்பு அணுக்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு பதப்படுத்தி ''விஷத்தடுப்பு'' மருந்தாக உங்களை வந்தடைகிறது. இவ்வாறே விஷ முறிவு மருந்து தயார் செய்யப்படுகிறது.

    அணுக்கள் பிரிந்தெடுக்கப்பட்டபின் காலதாமதம் செய்யாமல் மிஞ்சிய இரத்தத்தை மீண்டும் அந்த குதிரையின் உடலிலேயே ஏற்றி விடுகிறார்கள். இதனால் அந்த குதிரைக்கு எந்த விதத்திலும் இரத்த இழப்பு ஏற்படுவதில்லை.

    antivenin-serpent 1

    antivenin-serpent

    எனவே இனி எங்காவது குதிரையை பார்க்க நேர்ந்தால் அதை ஒரு விலங்காக பார்க்காமல் உயிர்காக்கும் தோழனாக நன்றியோடு பாருங்கள்.

    இந்தியாவில் சென்னை, பூனா, சிம்லா ஆகிய இடங்களில் குதிரையின் குருதியிலிருந்து விஷ முறிவு மருந்து தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அனைத்து வகையான பாம்பின் விஷத்திற்கும் ஒரே மருந்து பயனளிப்பதில்லை. பாம்புகளின் வகை மற்றும் அதன் விஷங்களின் தன்மையைப் பொறுத்து மருந்துகளின் தன்மைகளும் மாறுபடும்.

    பாம்புகளின் விஷத்தின் தன்மையைப் பற்றி விரிவாக பார்த்தோம். இதே போல் பாம்புகளின் அடிப்படை பண்புகளைப் பற்றி அறிந்து கொள்ள தட்டுங்க.

    >>"பாம்புகள் - அறிமுகம் - snakes Introduction."<<

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    6 கருத்துகள்

    1. இதை படித்ததும் பாம்பு மியூசியத்துக்குள் சென்று வந்தது போன்ற உணர்வு வருகிறது நண்பரே...

      பதிலளிநீக்கு
    2. பாம்பின் விசத்தைப் பற்றி கூடுதலான விசயங்களை ௮றிய முடிந்தது.👍 நன்றி 🙏

      பதிலளிநீக்கு
    3. பெயரில்லா5 மே, 2023 அன்று PM 11:53

      அருமையான விளக்கம்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்களின் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.