"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஆரைக்கீரை - Aarai Keerai - European water clover.

ஆரைக்கீரை - Aarai Keerai - European water clover.

Aarai Keerai.

"ஆரையடா சொன்னாய் அது"

"எட்டேகால் லட்சண மேயெமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது".

மேலே நீங்கள் காணும் பாடல் தமிழ் பாட்டியாகிய ஔவை பாட்டியால்   அருளப்பட்டது.

  தன்னை வார்த்தைகளால் சீண்டிய புலவர் ஒருவரை வாய்க்கு வந்தபடி நார்நாராகக் கிழித்து தொங்க விடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பாடல்.

  சாந்த மூர்த்தியான "ஆறுவது சினம்" என்று நமக்கு கற்றுத்தந்த அந்த ஔவையாரையே கோபம் கொள்ள செய்த அந்த புலவர் யார்?

  வேறு யாருமல்ல. அந்த புலவர் "ஒட்டக்கூத்தர்". 

  சங்ககாலத்தில் கவி புனையும் புலவர்களை அவர்கள் ஆண்களாக இருந்தால் "புலவர்" என்றும், அதுவே பெண்ணாக இருந்தால் "ஔவையர்" என்றும் அழைத்து வந்திருப்பர் என தோன்றுகிறது. ஏனெனில் சங்ககாலங்களில் ஒன்று இரண்டல்ல பல்வேறு காலக்கட்டங்களில் "ஔவை" என்று பெயர்தாங்கி பல பெண் புலவர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. இங்கு குறிப்பிடப்படும் ஔவை இதில் யாரென்று தெரியவில்லை.

  சிலர் ஔவையாரை வம்பிக்கிழுத்த புலவர் ஒட்டக்கூத்தர் அல்ல ...  கவிச்சக்கரவர்த்தி "கம்பர்" என்றும், இன்னும் சிலரோ அது ஒட்டக்கூத்தரும் அல்ல, கம்பரும் அல்ல... அது "காளமேக புலவர்" என்றும் பலவாறாக யூகிக்கிறார்கள்... யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்... நாம் இங்கு புலவர் என்றே சொல்லிவருவோம்.

  ஔவையார் கோபப்படுமளவிற்கு அந்த புலவர் செய்த தவறுதான் என்ன?

  ஒன்றுமில்லை. ஔவையாரிடம் ஒரேயொரு விடுகதை சொன்னார் மறுவிநாடியே புலவரின் கதை கந்தலாகி விட்டது.

  புலவரின் விடுகதையை கேட்ட ஔவையாரின் கண்கள் சிவக்க. கோபத்தின் உச்சிக்கே சென்றவர் புலவரை சகட்டுமேனிக்கு வசைபாட... துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியவர்தான்.  இன்றுவரையில் அவர் யாரென்ற சரியான விபரம்கூட நமக்கு காணக்கிடைக்கவில்லை.

  அதெல்லாம் சரிதான். ஔவையார் கோபப்படுமளவிற்கு அந்த விடுகதையில் அப்படி என்னதான் இருந்தது என்கிறீர்களா?

  பெரிதாக ஓன்றுமில்லை. ஒரே ஒரு "கீரை" இருந்தது.

  என்னது கீரையா?

  ஆம். கீரையேதான். "ஆரைக்கீரை".

  என்னது ஆரைக்கீரையா. ஒரே ஒரு ஆரைக்கீரைக்குப்போய் இவ்வளவு பிரச்சனையா என்கிறீர்களா?

  அதுவும் சரிதான். பிரச்சனை ஆரைக்கீரை மட்டும்தான் என்றால் கோபப்பட வேண்டியதில்லைதான். விடுகதைக்கு "பாஸ்" சொல்லி நைசாக பக்கத்து சீட்டுக்கு தள்ளிவிட்டிருக்கலாம். ஆனால் கூடவே மரியாதை என்ற ஒன்றும் இருக்கிறதே. சும்மா விடமுடியுமா?

  ஔவையார் கோபப்படுமளவிற்கு அங்கு என்ன நடந்தது என முதலிலிருந்தே ஆர்டரா சொல்லுகிறேன் கேட்டுக்குங்க.

  இங்கு பிரச்சனை ஆரைக்கீரை அல்ல. அந்த புலவர்தான்.

  அரசவைக்கு வரவேண்டிய புலவர் பைபாஸ் ரோடு வழியாக ஸ்ட்ரைட்டா  அரசவைக்கு வந்திருக்க வேண்டும். அதுதானே உலக வழக்கம். மாறாக குறுக்கு பாதையில் வருகிறேன் என்று சொல்லி அவர் வாய்க்கால்வரப்பு வழியாக வந்ததுதான் பிரச்சனையே.

  ஆம் ! வயல்வரப்பு வழியாக நடந்துகொண்டிருந்த புலவருக்கு வரப்பு ஓரங்களில் வளர்ந்துநின்ற "ஆரைக்கீரை" கண்ணில்பட்டது. அதன் அமைப்பு அவருக்கு ஆச்சரியத்தை தந்தது.

  ஒரே ஒரு இலைக்காம்பு பந்தல்கால் போல் மேல்நோக்கி நிற்க அதன்மேல் நான்கு இலைகள் கூரைபோல் படர்ந்திருக்க அது பார்ப்பதற்கு ஒரு காலில் நான்கு இலைகளைக்கொண்டு வேயப்பட்ட பந்தல்போல பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது.

  உடனே அவருடைய கவிபாடும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. 

  இந்த ஆரைக்கீரையையே ஒரு விடுகதையாக்கி அரசவை கவிஞர்களை வம்புக்கு இழுத்தால் என்ன என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். உடனே அதனை அன்றே செயல்படுத்தி பார்ப்பது என முடிவும் செய்தார்.

  ஆனால் அன்றைய தினம்பார்த்து அவருடைய நாவில் "அஷ்டமத்துசனி" முக்காடு போட்டுக்கொண்டு குந்திக்கின்னு இருந்ததோ என்னமோ அவரின் கண்களில் முதலில் தென்பட்டவர் ஔவையார்.

  விதி யாரை விட்டது....

  தன்னுடைய வாழ்க்கையிலும் விதி சதி செய்ய முற்படுவதை உணராமல் ஔவையாரிடமே விடுகதையை கேட்டுவிடுவது என முடிவு செய்தார்.

  ஜாலி மூடில் இருந்த புலவரோ முதலில் அவ்வையாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதனை ஏனோ மறந்துவிட்டார். அதேவேளையில் அவசர குடுக்கையாக இடம் பொருள் ஏவல் தெரியாமல் விடுகதையையும் கேட்டேவிட்டார். (செத்தாண்டா சேகரு).

  விளைவு, ஔவையார் வெகுண்டெழுந்துவிட்டார்.

  பின்னே.. கோபப்படாமல் என்ன செய்வார். விடுகதை சொல்லுகிறேன் என்று சொல்லி "ஒரு காலில் நாலிலை பந்தலடி" என்று மரியாதையில்லாமல் "வாடி.. போடி" என்று ஒருமையில் சொன்னால் விடுவாரா ஔவை. கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். 

  தன்னை "டி" போட்டு பேசிய வம்பரை.. சாரி.. புலவரை.. பதிலுக்கு "டா" போட்டு கவிதை வடிவில் வசைபாடி வறுத்தெடுத்துவிட்டார்.

  புலவரை சகட்டுமேனிக்கு வசைபாடிய அந்த கவிதையைத்தான் நீங்கள் ஆரம்பத்தில் பார்த்தீர்கள்.

  அதுசரி, அந்த கவிதையின் பொருள்தான் என்ன?

  "எட்டேகால் லட்சணமே" என்றால் "அவலட்சணமே" என்று பொருள்.

  "யமன் ஏறும் பரியே" என்றால் யமன் ஏறிச்செயலும் வாகனமே அதாவது "எருமை மாடே" என்று பொருள்.

  "பெரியம்மை வாகனமே" - சீதேவியின் அக்கா மூதேவி. அதாவது சீதேவி சின்னம்மா என்றால் மூதேவி பெரியம்மா... மூதேவியின் வாகனம் கழுதை. எனவே பெரியம்மை வாகனமே என்றால் "கழுதையே" என்று அர்த்தம்.

  "மேல் கூரையில்லா வீடே" கூரையில்லாவீடு "குட்டிச்சுவர்". கூரையில்லா வீடே என்றால் கழுதைகள் சகவாசம் செய்யும் "குட்டிச்சுவரே" என்று பொருள்.

  "குலராமன் தூதுவனே" ராமனுக்காக சீதையிடம் தூதுசென்றவன் ஹனுமான். அதாவது குரங்கு. குலராமன் தூதுவனே என்றால் "கருங் குரங்கே" என்று பொருள்.

  "ஆரையடா சொன்னாய் அது" இதில் ஆரை என்பது இருபொருள் படும்படி வருவதை காணலாம். ஒரு பொருள் "ஆரை" என்னும் "ஆரைக்கீரை"யை சொன்னாய் என்றும், மற்றொரு பொருள் நீ "டி" என்று ஒருமையில் "யாரையடா சொன்னாய்" என்று கோபப்படும்படியாகவும் அமைந்துள்ளது.

  சரி, விடுகதை இருக்கட்டும். புலவர்தான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று காததூரம் ஓடிவிட்டாரே... எனவே அவர் திரும்பி வரும்வரை அந்த விடுகதையில் சொல்லப்பட்ட "ஆரைக்கீரை"யைப்பற்றி சிறிது பார்ப்போமா!.

  ஆரைக்கீரை.

  Arai Keerai

  பெயர் :- ஆரைக்கீரை.

  வேறு பெயர்கள் :- ஆரைக்கீரை, ஆராக்கீரை, நீராரை கீரை, ஆலக்கீரை, நீர் ஆரை.

  ஆங்கில பெயர் :- european water clover.

  தாவரவியல் பெயர் :- Marsilea quadrifolia.

  தாயகம் :- ஐரோப்பா மற்றும் ஆசியா.

  வகுப்பு :- Polypodiopsida.

  பிரிவு :- Fern - பன்னம் (or) வித்திலியம். அதாவது வித்தில்லாமல் இனவிருத்தி செய்யும் தாவரப்பிரிவை சேர்ந்தது.

  துணை பிரிவு :- Polypodiidae.

  வரிசை :- Salviniales.

  குடும்பம் :- Marsileaceae mirbel.

  பேரினம் :- Marsilea.

  இனம் :- பூக்காத, காய்க்காத தாவர இனம்.

  வகை.

  மூன்று இலைகளை கொண்ட புளியாரை மற்றும் ஒரு இலையை கொண்ட வல்லாரை இனத்தில் ஆரைக்கீரை மற்றொரு வகையாகும். நீர்வாழ்வகை குறுஞ்செடி வகையை சார்ந்தது.

  தன்மை.

  இதை யாரும் பயிர் செய்வதில்லை. இது நீர்நிலைகளில் தன்னிச்சையாக வளரும் ஒரு தாவர இனம். குளிர்ச்சி மற்றும் இனிப்பு சுவை உடையது. இத்தாவரம் புழு, பூச்சிகளாலோ அல்லது நோயினாலோ அதிகம் பாதிப்படைவதில்லை.

  வாழிடம்.

  குளம், குட்டை, வாய்க்கால் மற்றும் நீர்ப்பாங்கான இடங்களில் செழித்து வளர்கிறது. ஒரு சிறிய இலைத்தண்டு அதன் நுனிப்பகுதியில் நான்கு கால்வட்ட இலைகளை கொண்டுள்ளது.

  ஆடிமாதம் முதல் மார்கழி மாதம்வரை நம்மூர் வாய்க்கால் வரப்புகளில் இது செழித்து வளர்ந்து நிற்பதை காணலாம்.

  இனப்பெருக்கம்.

  இதில் பூக்கள் எதுவும் உருவாவது இல்லை என்பதால் காய்கள் எதுவும் காய்ப்பதுமில்லை. கிடைமட்டத்தில் படரும் வேர்த்தண்டிலிருந்து புதிய இளம் செடிகள் உற்பத்தியாகின்றன.

  european water clover

  பயிராகும் நாடுகள்.

  சைபீரியா, ஆப்கானிஸ்தான், ஐரோப்பா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மிதமான வெப்ப மண்டலநாடுகளில் பரவலாக காணப்படுகிறது. 1862 ம் ஆண்டிற்கு பின்பே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.

  பயன்பாடு.

  வீடுகள் மற்றும் தோட்டங்களை அழகுபடுத்தும் அழகு செடியாகவும், மருத்துவத்தன்மை வாய்த்த மூலிகையாகவும், கீரையாக சமைத்துண்ணவும் பயன்படுகிறது.

  சத்துக்கள்.

  [100 கிராம் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரம்].

  Tamil English Amount of Nutrients
  கலோரி Calories 46 g
  புரதம் Protein 3.7 g
  தாது உப்புகள் Mineral Salts 5.3 g
  மாவுச்சத்து Carbohydrate 4.6 g
  இரும்பு Iron 2.1mg
  சுண்ணாம்பு Calcium 53 mg
  பாஸ்பரஸ் Phosphorus 91 mg

  மற்றும் தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், உலோகச்சத்துக்கள் உட்பட ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

  பயன்கள்.

  சித்தர்கள் இதனை கற்பக மூலிகை என்று வர்ணிக்கிறார்கள். இது சிறப்பான மருத்துவ குணங்களை தன்னிடத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

  ஆரைக்கீரை சாற்றை சிலநாட்கள் தொடர்ந்து சிறிய அளவில் சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி குணமாகுமாம்.

  ஆரைக்கீரையை நிழலில் நன்றாக உலர்த்தி உரலிலிட்டு பொடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிடுவர மூளை பலமடைவதோடு நினைவாற்றலும் பெருகுமாம். சர்க்கரை வியாதியும் கட்டுக்குள் வருமாம்.

  இந்த பொடியை தினம் மூன்றுவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலந்து அருந்திவர நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

  மேலும் இந்த கீரையானது உடலிலுள்ள அதிகப்படியான பித்தத்தை தணிப்பதோடு நீரழிவினால் ஏற்படும் பாதிப்பையும் பாதியாக குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. சிறுநீரில் இரத்தம் கலந்து போகும் பிரச்சனையையும் நிவர்த்தி செய்யும்.

  மேலும், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துவதோடு சூலக நோய்களையும் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உடலுக்கு வலுவூட்டுவதோடு கண் பார்வையையும் தெளிவடையச் செய்கிறதாம்.

  வாரம் இருமுறை இதனை சூப்பாக செய்து உண்டுவர மலச்சிக்கல், கைகால் நடுக்கம், உடல் சோர்வு, ஜீரணக்கோளாறு, சருமநோய்கள், பித்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் வயிற்றுபுண்ணும் குணமாகும் என சித்தமருத்துவக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  இந்த கீரையை  நீரில் நன்கு அலசி வாயிலிட்டு நன்றாக மென்று சாப்பிட வாய்ப்புண் அகலுவதோடு ஜீரணசக்தியும் அதிகரிக்கும்.

  இந்த கீரை "காக்கா வலிப்பு" என்று சொல்லப்படும் "கால் கை வலிப்பு" நோய்க்கும் சிறந்த நிவாரணமாக அமையும் என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது.

  மேற்குறிப்பிட்டுள்ள மருத்துவ குறிப்புகள் அனைத்தும் சித்தர்களால் சொல்லப்பட்டவையே.... நவீன மருத்துவ அறிவியலால் முறையாக பரிசோதித்து நிரூபிக்கப்பட்டவைகள் அல்ல.

  எனவே,... மேற்குறிபிட்டுள்ள மருத்துவ முறைகளை பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தி பார்ப்பது அவசியம். பயன்படுத்தும்போது ஏதாவது பக்கவிளைவுகளை சந்திக்க நேர்ந்தால் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

  European water clover

  குறிப்பு.

  இந்தியர்களாகிய நாம்தான் இதனை மூலிகை என்றும், கீரை என்றும் கொண்டாடுகிறோமேயொழிய மேலைநாடுகளில் இதனை தொல்லைதரும் வேண்டாத "களை" செடியாகவே பார்க்கின்றனர்.

  பல விதங்களிலும் இது உடலுக்கு நன்மை செய்வதாக இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்பட்டாலும் பெண்களுக்கு கருத்தடையாக செயல்பட்டு கரு உற்பத்தியை தள்ளிப்போடுமாதலால் கருத்தரித்த பெண்கள், அல்லது கருத்தரிக்க ஆயத்தமாக உள்ள பெண்கள் இக்கீரையை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டியது அவசியம்.

  மேலும் இது தாய்மார்களுக்கு பால்சுரப்பையும் தடுத்து நிறுத்தும் தன்மையுடையது ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் இக்கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

  இதுவரையில் ஆரைக்கீரையைப்பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் "அரைக்கீரை"யை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் - ஐ உங்கள் விரல்களால் கொஞ்சம் தட்டுங்களேன்.

  >> அரைக்கீரை - Amaranthus dubius. <<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. விளக்கங்கள், தகவல்கள் நன்று. தொடரட்டும் உங்கள் சிறப்பான பகிர்வுகள்.

   பதிலளிநீக்கு
  2. விருதுநகர் கார்த்திக்23 ஜூன், 2023 அன்று முற்பகல் 10:00

   ஐயா வணக்கம் இக்கட்டுரையில் நல்ல மொழிநடை, கருத்தாழம், நல்ல சேகரிப்புகள் புலனாகின்றன


   இக்கட்டுரையில் சொல்லப்படும் மருத்துவக் குறிப்புகள் தங்களால் பரிசோதனை செய்யப்பட்டதா?
   இவை உபயோகத்திற்கு ஏற்றவையா?
   இவ்வினாக்களுக்கு விடை அளித்தால் மகிழ்வேன்.....
   நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வணக்கம் நண்பரே! தங்கள் வருகைக்கு நன்றி!...

    எனக்கு சித்த மருத்துவத்தில் நல்ல அனுபவமும் பல மூலிகைகளை கையாண்டு பார்த்த திறமைகளும் உண்டு என்றாலும் இந்த ஆரைக்கீரையின் மருத்துவப் பயன்பாட்டை இதுவரையில் பரிசோதித்து பார்த்ததில்லை.

    இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் சித்தர்கள் சொன்ன குறிப்புகளே. அதை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன். நான் முறையாக பரிசோதித்து பார்த்ததில்லை.

    சித்தர்கள் ஒன்றும் அறிவியல் வித்தகர்கள் இல்லை என்பதாலும், அவர்களின் மருத்துவக் குறிப்புகள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்பதாலும்,... இவர்களால் சொல்லப்பட்ட மருத்துவக் குறிப்புகளை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பது உண்மையே!.

    தங்களின் வினா எனக்குள் சில கேள்விகளை எழுப்ப மருத்துவக் குறிப்புகளுடன் சில பாதுகாப்பு குறிப்புகளையும் கட்டுரையுடன் தற்போது புதிதாக சேர்த்துள்ளேன்... நன்றி நண்பரே!

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.