"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Aloe Vera - Indian Aloes.

சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Aloe Vera - Indian Aloes.

சோற்றுக்கற்றாழை.

Indian Aloes

[Part - 1]

அண்னே.. அண்ணே!!

யாருப்பா அது.. அடடே நம்ம சீனுவா!!. எப்படிப்பா இருக்கே? பாத்து ரொம்ப நாளாச்சு. நல்லாயிருக்கியா? இப்படி விறுவிறுக்க ஓடிவர்றே. வாக்கிங்கா. 

ஆமாண்ணே.. டெய்லி இப்படி கொஞ்ச நேரம் "வாக்கிங்" போறது வழக்கம்.. அது இருக்கட்டும்.. நீங்க எப்படி இருக்கீங்க?

எனக்கு ஒரு கொறச்சலும் இல்லப்பா? உன்னை ரொம்ப நாளுக்கு அப்புறமா இப்பதான் சந்திக்கிறேன். வா அந்த "பார்க்" பெஞ்சுல ஒக்காந்து கொஞ்ச நேரம் பேசலாம்.

சரிண்ணே.

என்னப்பா இப்படி கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்குது. நீ ரொம்ப டயர்டா இருக்கேபோலுக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டுட்டு அப்புறமா பேசலாம் வா.

அதெல்லாம் ஒன்னும் வேணாம்ணே.

அப்போ, ஆப்பிள் ஜூஸ் எடுத்துக்கோ.

ஹிஹி.. இப்போ அதெல்லாம் எதுக்குண்ணே.

அப்போ ஆலோவேரா.

என்னாது.. அழுவீங்களா.. அட ஒரு பேச்சுக்கு வேண்டாமுன்னு சொன்னா இதுக்கு போயி நீங்க எதுக்குண்ணே அழுவுறீங்க?

அட போப்பா.. ஒனக்கு நாட்டுநடப்பே தெரியமாட்டேங்குது. "ஆலோவேரா" என்றால் நான் அழுவேன்னு சொல்லலை.

அப்புறம்?.

"ஆலோவேரா" என்பது "கற்றாழை"யைக் குறிக்கும். சோற்றுக்கற்றாழை ஜூஸ் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன்.

ஓஹோ.. சோற்றுக்கற்றாழை ஜூஸா?

அதேதான்.

ஆமா, தெரியாமதான் கேக்குறேன்.. எல்லோரும் சோற்றுக்கற்றாழை பின்னாடியே ஓடுறாங்களே, அதுல அவ்ளோ பெரிய நன்மை இருக்குதாண்ணே?

என்னப்பா இப்படி கேட்டுட்ட.. அதனுடைய பெயரே அதனுடைய பெருமையை சொல்லுமே !!!.

அப்படியா?

ஆமாங்குறேன்.. சோற்றுக்கற்றாழைக்கு இன்னொரு பெயரும் இருக்கு தெரியுமோ ?

என்னாண்ணே அது!!

"கன்னி".

என்னாது கன்னியா?.

ஆமா.. அழகுக்கு அழகூட்டும் இதன் தாயகம் ஆப்பிரிக்கா என்றாலும் இன்று "ஆலோவேரா" (Aloe vera) என்ற பெயரில் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முதற்கொண்டு உலகெங்கும் தன் விழுதுகளை பரப்பி சாதாரண "பிகர்"களை கூட கட்டழகு கன்னிகளாக வலம்வரச் செய்துகொண்டிருக்கும் இந்த கற்றாழைக்கு "கன்னி" என்று மற்றொரு பெயரும் இருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே?

ஆமாம்.. ஆமாம்.. மிகவும் பொருத்தமான பெயர்தான்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.

சரி..  இதற்கு "குமரி" என்று இன்னொரு பெயரும் உள்ளது தெரியுமோ?

என்னாது.. குமரியா?

ஆமாம்.. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் வயதான தோற்றத்தை அப்படியே அலேக்காக தூக்கிவீசிவிட்டு கும்மென்று குமரியாக உலாவர செய்வதால் இதற்கு "குமரி" என்று பெயர்.

அடடே அப்படியா! இதுவரையில் எத்தனை முதிர் கன்னிகள் இதனை சாப்பிட்டதால் இன்று இளம் குமரிகளாக உருமாறி நகருக்குள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமாண்ணே?

"அபிஸ்து  அபிஸ்து " உன்னை யாரு இப்படியெல்லாம் கேள்வி கேட்க  சொன்னது. நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எது சொன்னாலும் அப்படியே எதிர்கேள்வி கேட்காமல் தலையை பலமாக ஆட்டி ஆமோதிக்க வேண்டும். அப்படி அதை ஏற்றுக் கொண்டால்தான் நீயும் ஒரு புத்திசாலி என்று உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும் புரியுதில்லையோ.

அப்போ..  சந்தேகம் வந்தால்கூட கேள்வி கேட்கக்கூடாதாண்ணே?

கேட்கக்கூடாதுடா.. அதுதான் தமிழர் பண்பாடு. இந்த  மூலிகையை பயன்படுத்தித்தான் நிறைய அழகு கிரீம் தயார் செஞ்சு மார்கெட்டுல விக்குறாங்க. அத வாங்கி பயன்படுத்துறதாலதான் நம்ம ஊரு பொண்ணுங்களெல்லாம் மூன்றே வாரங்களில் கண்களை பறிக்கும் சிவப்பழகு பெற்று வளைய வருகிறார்கள். இது உனக்கும் தெரியும்தானே? "ஆலுவேரா" பயன்படுத்துங்கள் மூன்றே வாரங்களில் சிவப்பழகு பெறுங்கள்னு சும்மாவா கம்பெனிக்காரன் விளம்பரம் கொடுக்குறான்?!

பெண்கள் சிவப்பழகோடு வலம் வருவதெல்லாம் சரிதான் அண்ணே. ஆனால்..

என்னடா ஆனால்னு இழுக்குற. மறுபடியும் சந்தேகமா?

ஆமாண்ணே, நீங்க சொன்ன அந்த சிவப்பழகு பெண்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து அலங்காரங்களையெல்லாம் கலைத்தவுடன் அதற்குள்ளிருந்து ஒரு "கொல்லங்குடி கருப்பாயி" வேளியே வருகிறதே அது எப்படி அண்ணே? 

அட போப்பா. எப்பபாரு குதர்க்கமாகவே கேள்வி கேட்டுக்கிட்டு.

சாரிண்ணே.

சாரி. பூரின்னுகிட்டு.. தமிழ்நாட்டுல பொறந்த நமெக்கெல்லாம் சந்தேகமே வரக்கூடாதுடா அம்பி!... எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொன்னாலும் நம்பனும். அதேமாதிரி கே. ஆர். விஜயா கொண்டையில "KTV" தெரியுதுன்னு சொன்னாலும் நம்பணும்.. புரியுதோ? அப்பதாண்டா உனக்கு தன்மானமுள்ள பச்சைத்தமிழன் என்கின்ற அங்கீகாரமே கிடைக்கும்.

சாரிண்ணே. இனி சந்தேகமே கேக்கமாட்டேண்ணே.

சபாஷ். அப்படித்தான் இருக்கணும். "குமரி" என்றும் "கன்னி" என்றும் வாஞ்சையோடு அழைக்கப்படும் கற்றாழையை பற்றி இன்னும் நிறைய சொல்லுகிறேன் கேட்டுக்கோ.

சொல்லுங்கண்ணே.

வேறு பேஸ் கிரீம் எதுவுமே தேவையில்லைடா தம்பி. இதனுடைய "ஜெல்" ஐ அப்படியே எடுத்து முகத்துல அப்பிக்கிட்டா போதும். முப்பதே நாளில் முகம் பளபளபளபளப்பாகிடும் தெரியுமோ? 

அப்படியா?

அப்படித்தான். அதுமட்டுமல்ல இந்த ஜெல்லை ஜீஸ் மாதிரி செஞ்சு  காலையில் 1 பெக். மாலையில் 1 பெக் சாப்பிட்டேன்னு வச்சுக்கோ உடம்புல நீயே எதிர்பார்க்காத அளவுக்கு நோயெதிர்ப்பு சக்திவரும். அதுமட்டுமல்ல 4448 நோய்களும் ஓடியே போயிடும்.

Indian Aloes

அப்படியா? அப்போ நம்ம "கொரானா"?

அதுவும்தான்.

அட போங்க சார். நீங்க வேற காலங்காத்தாலே வந்து கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு.

என்னாது. கிச்சு கிச்சு மூட்டுகிறேனா! என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்ட. நான் எவ்வளவு சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

கிழிச்சீங்க.. இத ஜூஸ் ன்னு சொல்லி குடிச்சவன் அத்தனை பேரும் "கொரானா" பாதிச்சு சீரியஸ் கண்டிஷன்ல இழுத்துகிட்டு கிடக்குறானுக. நீங்க என்னடானா.. "கன்னி".. "சு.." ன்னு கிட்டு.

டேய்.. டேய்.. கெட்ட வார்த்தை மாதிரி ஏதோ ஒண்ணு இப்போ என் காதுல விழுந்துச்சேடா..  அண்ணன் பேசிக்கிட்டே இருக்கும் போது நீ கெட்ட வார்த்தையால எதாவது திட்டுனியா ?

இல்லண்ணே..

எனக்கு கேட்டுச்சேடா..

அது.. வந்து.. அது ஒரு ப்ளோவுல வந்துருக்கும்..

என்னாது.. ப்ளோவுல வந்துடுச்சா.. ப் ' ளோ ' வு ' ல.. o.k.. o.k.. ப்ளோவுல வந்தா நோ ப்ராப்பளம்..

ப்ளோவுல "கெட்ட" வார்த்தைகூட வரும் சொல்லிப்புட்டேன். 

என்னாது.. ப்ளோவுல கெட்டவார்த்தை வருமா? இப்போ வந்ததே "அந்த" வார்த்தைதானடா.. இதுக்கு மேல வேற என்னடா வரணும்..  ஐயோ ராமா.. இவன்கிட்ட இப்படியே பேசிகிட்டு இருந்தா என்னோட மானம் மரியாதை எல்லாமே காத்துல போயிடும் போலிருக்கே.

பின்னே.. நீங்க சொல்லுறதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ?

ஏண்டா.. இதையே நீ நம்ப மாட்டேங்குற.. இன்னும் இந்த சோற்றுக்கற்றாழையை பற்றி எவ்வளவோ மேட்டரு கைவசம் இருக்கு தெரியுமா?.

அப்படியா சொல்லுங்க கேட்போம்.

ம்.. ம்ம்.. இனி அண்ணனை கெட்ட கெட்ட வார்த்தையால திட்ட மாட்டேன்னு சொல்லு அப்பதான் சொல்லுவேன்.

சத்தியமா இனி திட்ட மாட்டேன்ணே.

ம்.. ம்ம்.. சொல்லுறேன் கவனமா கேட்டுக்கோ.. சோற்றுக்கற்றாழை ஜூஸை நீ தொடர்ந்து 3 வருடம் சாப்பிட்டு வந்தால்..

மூன்று வருடம் சாப்பிட்டால் போதுமாண்ணே?

போதும்டா அம்பி.. அதற்குப்பிறகும் நீ உசுரோடு இருந்தா ஒரு 2 வருடம் எக்ஸ்ட்ராவா சாப்பிடவேண்டி இருக்கும் அவ்வளவுதான்.

சாப்பிட்டா என்னவாகும் அண்ணே?

முதுமை போய் இளமை வரும். அதுமட்டுமல்ல இதனுடன் வெந்தயம் சேர்த்து தைலம் காய்ச்சு அதனை தலையில் தடவி வந்தால் தலையிலுள்ள  நரை முடியெல்லாம் மாறி..

சொட்டை ஆகிடுமா?

இல்லை.. இல்லை.. கருமை ஆகிடும்.. அதுமட்டுமல்ல உன் உடலும் இறுகி காயகல்ப தேகமாக மாறிவிடும்.

காயகல்ப தேகமா? அப்படின்னா?

உனக்கு ஒரு எழவும் தெரியமாட்டேங்குது. "காயகல்பம்" னா ஊழிக்காலம் என்று சொல்லப்படும் "கல்ப"காலம். அதாவது இந்த உலகம் அழியும்வரை உன் உடலும் அழியாமல் அப்படியே இருக்குமாம். 

உண்மையாகவா?

உண்மையைதாண்டா சொல்லுறேன் அம்பி. சோற்றுகற்றாழை என்பது  சாதாரண மூலிகை இல்லையப்பா. அது ஒரு காயகல்ப மூலிகை உனக்கு தெரியுமோல்லியோ?

நெசமாவா?

நெசமாதான் சொல்லுறேன். இப்போ சென்னையில தள்ளு வண்டிக்காரங்ககிட்ட டெய்லி சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடிக்கிறவனுக அம்புட்டு பேரும் 15 வருசத்துக்கு முன்னாடி இதே தள்ளுவண்டி கடையில "அருகம்புல் ஜூஸ்" குடிச்ச பயலுகதான். புரிஞ்சுதோ.. ஜூஸ் குடிச்சி குடிச்சி அத்தனை பயலுக உடம்புலயும் நோயெதிர்ப்புசக்தி தாறுமாறா ஏறி காயகல்பமாக மாறி கிடக்கு. அன்னைக்கு அருகம்புல் ஜூஸ் சாப்பிட்டதிலிருந்து இன்னைக்கு கற்றாழை ஜூஸ் சாப்பிடுகிறவரைக்கும் இந்த பயலுக யாருமே ஒரு பேச்சுக்கு கூட ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லைன்னா பாத்துக்கோயேன்!. நீ வேணுமின்னா பாரு குடிக்கிறது அம்புட்டும் காயகல்ப மூலிகையின் சாறு என்பதால இன்னும் 300 வருசத்துக்கு இவனுக யாரும் சாகவேமாட்டானுக.

அப்படி யாரு சொன்னா?

வேறு யாரு சொல்லனும்.. அதான் "you tube" ல வீடியோ, வீடியோவா போட்டுருக்காங்கல்ல.. நீ சமூகவலைப்பக்கமே போறது இல்லையா அம்பி?

கிழிஞ்சுதுபோ.. அப்போ நீங்க இவ்வளவு நேரம் "you tube" வீடியோவை பாத்துபுட்டுதான் கதை கதையா அளந்து கொண்டிருந்தீரோ? கருமம்.. கருமம்.

என்னடா பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிட்ட.. அப்போ. ஜூஸ் குடிக்கிறவன் மட்டுமென்ன மெடிக்கல் ரிப்போர்ட் அத்தாரிடி பாத்துக்கிட்டா குடிக்கிறான்?.

அதுசரி, அப்படி என்னதான் போட்டுருக்காங்க அதுல?

எதுல ?

அதுதான் அந்த பாழாய்ப்போன "யூ டூப்" வீடியோவுலதான்.

அது "யூ டூப்" இல்லைடா அம்பி "யூ டியூப்"..

ரெண்டும் ஒண்ணுதான். சொல்லுங்க.

சொல்லுறேன் கேட்டுக்க.. கற்றாழை சாற்றை முகத்தில் தடவிகிட்டே வந்தா முகப்பருவெல்லாம் நீங்குவதோடு சிலருக்கு முகப்பருக்களால் முகத்தில் ஏற்பட்ட வடு மற்றும் குண்டு குழியெல்லாம் நீங்கி முகம் அப்படியே பளபளப்பாகிடுமாம். முகத்தில் முகம் பார்க்கலாம்னா பாத்துக்கோயேன்!

அப்புறம்?

இதை எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் நரை முடியெல்லாம் மாறி கருமுடியாகி விடுமாம்.

அப்படியா? அப்புறம் ஏன் நரை மண்டைக்கு பெயிண்ட் அடிக்குறாங்க?

பெயிண்டா.. ஓ.. நீ "ஹேர் டை" யூஸ் பண்ணுறவங்கள சொல்லுறியா? அவர்களெல்லாம் இந்த சோற்றுக்கற்றாழையின் மகத்துவம் பற்றி தெரியாதவங்க...

சரி.. வேற என்ன போட்டுருக்காங்க?

கவனமா கேட்டுக்கோ. இதுவரை நான் சொன்னது வெறும் டிரைலர்தான். இனிமேதான் மெயின் பிச்சரே வரப்போகுது. இந்த சோற்றுக்கற்றாழையை வீட்டுக்கு முன்னாடி ஒன்று அல்லது இரண்டு வச்சு வளர்த்து வந்தா உன் வீட்டுக்குள்ள கெட்ட காற்று என்பதே துளியும் வராதாம். 

அட ஆச்சரியமா இருக்கே.. அது எப்படி?

கெட்ட காற்று அம்புட்டையும் பில்டர் செஞ்சு சுத்தமான காற்றை மட்டும் வாசல் வழியா வீட்டுக்குள்ள ஒன்வேயில் அனுப்புமாம்..

எதை வச்சு பில்டர் பண்ணுமாம்?

இரு.. இரு.. அடுத்தவாட்டி வரும்போது அதையும் கேட்டுவந்து சொல்லுறேன்..

அண்ணே நீங்க சொல்லுறது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

நான் எங்கடா சொல்லுறேன்.. நம்ம "யூ டூப்பர் " சொல்லுறத அப்படியே கொண்டுவந்து உன் காதுல சொருவுறேன்.. இது ஒரு குற்றமாடா?

அத ஒரு இளிச்ச வாயன்கிட்ட சொல்லியிருக்கோணும்.. என்கிட்டவந்து சொல்லுறீக.. சரி. சரி. வருத்தப்படாதீக. அப்புறம் வேற என்ன சொல்லுறாக?

இந்த கற்றாழை ஜூஸ் உடன் மோர் கலந்து தொடர்ந்து குடித்து வந்தா  நோயெதிர்ப்பு சக்தி ஒடம்புல கண்ணுமண்ணு தெரியாம சகட்டுமேனிக்கு ஏறுவதால 4448 நோய்களும் அண்டவே அண்டாதாம்.

அப்படியா!. ஐயய்யோ.. அப்போ இந்த ஆஸ்பத்திரிகளின் கதி?

அதோகதிதான்.. 

அப்போ.. டாக்டர்கள் எல்லாம் இனி வேலை இல்லாம நடுத்தெருவுல அல்லாட வேண்டியதுதானா?

எதுக்கு நடுத்தெருவுல அல்லாடனும்.. ஒரு ஓரமாகவே நின்னு யாவாரத்த பாக்க சொல்லு.

யாவாரமா? என்னா வியாபாரம்ணே?

வேறென்ன. தள்ளுவண்டியில சோற்றுக்கற்றாழை வியாபாரம்தான்.

ஹா.. ஹாஹா.. போங்கண்ணே ஒங்களுக்கு எப்பவுமே குசும்புதான்.

அடப்பாவி.. நான் எவ்வளவு சீரியஸா பேசிகிட்டு இருக்கேன் நீ குசும்புன்னு சொல்லி சிரிக்குற..

கோவிச்சுக்காதீங்கண்ணே.. வேற என்னவெல்லாம் சொல்லுறாக?

ஏற்கனவே நான் சொன்னதுதான். இதுதான் கிளைமாக்ஸ் சீன் என்கிறதால திரும்பவும் ஒருவாட்டி சொல்லுறேன் கேட்டுக்கோ. இது ஒரு காயகல்ப மூலிகை என்பதால இதை உடல் முழுக்க அப்ளே பண்ணிட்டு அப்படியே தயிர்ல கலந்து ரெண்டு பெக்கு உள்ளுக்குள்ள எறக்கிகிட்டு வந்தா கிழவர்கள் இளவர்களாகவும், கிழவிகள் குமரிகளாகவும் மாறிடுவாங்க.

Indian Aloes juice

அட தேவுடா.. அப்புறம்..

அப்புறம் என்ன காசு போறதபத்தி  கவலைப்படாம இதையே தொடர்ந்து வாங்கி குடிச்சுப்புட்டு வந்தா இந்த ஜென்மாவுல உனக்கு சாவே வராதுலே. 

ஹாஹா.. வேடிக்கையாகத்தான் இருக்கு.. வரவர இந்த "யூ டியூப் சேனல்" தொல்லை பெரிய ரோதனையா போச்சு. கற்றாழையை அப்படியே கயித்துல கட்டி அலேக்கா வீடு முன்னாடி தொங்கவிட்டா கண் திருஷ்டி போகும், மண்ணாங்கட்டி போகும்னு கதை விடுவானுக. சிறுமூளை கெட்டவனுக. பக்கத்துல இருந்து பாத்தமாதிரி.

சரியா சொன்ன அம்பி! பேசுவதற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டால் போதும் நம்ம ஆட்களுக்கு. மனசாட்சியே இல்லாமல் ஓவரா பில்டப்பு விடுவானுக. முன்பு இப்படித்தான் இவனுகளை நம்பி "அருகம்புல் ஜூஸ்" குடித்து தீர்த்தவர்கள் இப்போது கற்றாழை ஜூஸ்க்கு மாறிவிட்டார்கள். முதலில் ஒரு மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகையை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பதனை எப்போதுதான் இவர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

அவனுக கிடக்குறானுக பேதியில போறவனுக. கற்றாழை சாப்பிட்டா அது ஒடம்புக்கு நல்லதா, கெட்டதா?  நீங்க கரெக்ட்டா சொல்லுங்க அண்ணே.

அப்படிகேளு. முதல்ல கற்றழை என்பது சாப்பிடக்கூடிய பொருளே அல்ல. இது உடலின் வெளிப்பூச்சுக்கான மருந்து மட்டுமே. அத மொதல்ல புரிஞ்சிக்கோ.

அப்படியா!

அப்படித்தான். ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன் இது என்ன வெள்ளரிக்காயா "கருக்கு புருக்கு'ன்னு கடிச்சி சாப்பிட. அல்லது தர்பூசணி பழமா ஜூஸ் போட்டு குடிக்க. சுருக்கமா சொன்னோம்னா இது சிறிதளவு நச்சுத்தன்மை கொண்ட ஒரு மூலிகை இனம். அதனாலதான் ஆடுமாடுகள் கூட இதனை விரும்பி சாப்பிடுறது இல்ல. பொதுவாகவே மூலிகை என்று வந்துவிட்டாலே அதை நோய் தீர்க்கும் மருந்தாக மட்டும் பயன்படுத்த வேண்டுமேயொழிய பசிதீர்க்கும் விருந்தாக பயன்படுத்துதல் கூடாது என்கின்ற அடிப்படை புரிந்துணர்வு முதலில் நமக்கு வரவேண்டும்.

நீங்க சொல்வதும் சரிதாம்ணே. இந்த கற்றாழையை கண்டதையும் கடியதையும் சாப்பிடும் கால்நடைகளே சாப்பிடமாட்டேங்குது. ஐந்தறிவு விலங்குகளுக்கே தெரியுது இது உடம்புக்கு ஆகாதுன்னு. ஆனா இந்த ஆறறிவு படைத்த கஸ்மாலங்களுக்கு இது புரியவே மாட்டேங்குது.

சரியாய் சொன்னே அம்பி. உதாரணமா ஒரு மாத்திரை ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்துகிறது என்பதற்காக அதையே கிலோ கணக்கில் வாங்கி கலக்கி கலக்கி குடிச்சுக்கிட்டு இருப்போமா? இல்லைதானே.. ஆனா இந்த நோய் தீர்க்கும் மூலிகையை மட்டும் ஏன்தான் மாடு புல்ல துண்ணுறது மாதிரி ஒரு வரையறையே இல்லாம இப்படி திங்குறானுகளோ தெரியல. உணவாக பயன்படுத்தவேண்டிய தாவரங்களுக்கும், மருந்தாக பயன்படுத்த வேண்டிய மூலிகைவகை தாவரங்களுக்கும் வித்தியாசமே தெரியாதாடா இந்த அப்ரன்டீஸ் பசங்களுக்கு?.

அதான் எனக்கும் புரியலைண்ணே.

பொதுவாகவே தாவரங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை உணவாக பயன்படுவது... இதனை உடல் வளம்பெற உணவாக நிறையவே சாப்பிடலாம். இரண்டாவது வகை நோய் தீர்க்கும் மூலிகைகள் யாருக்கு எந்த நோய் இருக்கிறதோ அவர்கள் மட்டும் அந்தந்த மூலிகையை நோய் தீரும் வரை மட்டும் சொற்ப அளவில் சாப்பிடலாம். மூன்றாவது விஷ தாவரங்கள் இவைகளை நாம் தொடவே கூடாது. தொட்ட நீ செத்த..

சரியா சொன்னீங்கண்ணே.

இந்த வகையில் கற்றாழை உணவாக பயன்படும் தாவரம் அல்ல மாறாக இரண்டாவது வகையை சேர்ந்தது. இதனை சொற்ப அளவில் மருந்தாக பயன்படுத்த வேண்டுமேயொழிய விருந்தாக பயன்படுத்துதல் கூடாது. இதனை உணவாக நினைத்துகொண்டு ஒரு வரையறையே இல்லாமல் தினம் இருவேளை ஜூஸ் வடிவில் மடக் மடக் என குடிப்பது என்றும் உடலுக்கு கெடுதல்தான். 

கரெக்டா சொன்னீங்கண்ணே!. சோற்றுக்கற்றாழை என்றால் என்ன? அதுபற்றிய முழுவிபரத்தையும். இதனை யாரெல்லாம் சாப்பிடலாம்  யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்கிறது பற்றியும் உள்ளது உள்ளபடி சுருக்கமா விளக்கமா சொல்லுங்கண்ணே கேட்போம்.

நான் எங்க சுருக்கமா விளக்கமா சொல்லுறது. நீயே கீழே உள்ளதை படிச்சு தெரிஞ்சுக்கோ.

உங்களுக்கும் கற்றாழை என்னும் மூலிகையை பற்றி அறிந்துகொள்ள விருப்பமா? ஆர்ப்பாட்டம் நிறைந்த பொய் தகவல்கள் எதுவும் இன்றி உள்ளது உள்ளபடி தெரிந்துகொள்ள விருப்பமா?

இதோ இந்த பதிவின் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதியை படிக்க அடுத்துள்ள சுட்டியை கொஞ்சம் பலமா கிளிக்குங்க.

👉 சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera - part 2. 👈

🌷🌷🌷🌷🌷🌷🌷

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.