"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera.

சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera.

சோற்றுக்கற்றாழை.

Indian Aloes.

[part - 2]

மூலிகைகள் வரிசையில் சோற்றுக்கற்றாழையைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சோற்றுக்கற்றாழையை பற்றிய பதிவில் இது இரண்டாவது பகுதி.


இதன் முதல் பகுதியை படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க.

👉 சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera - Part 1. 👈


கற்றாழையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இது அனைவருக்குமே நன்கு அறிந்த மூலிகை எனலாம். பொதுவாக கற்றாழையில் சுமார் 500 இனங்கள் உள்ளன.

பொதுவாகவே இது வறண்ட பகுதிகளில் வளரும் தாவர இனம். பூக்கும் தாவர வகையை சேர்ந்தது. நீர்வளம் குறைத்த இடத்தில் வளர்வதால் கிடைக்கும் சொற்ப நீரை வீணாக்காமல் தன்னுடைய எதிர்காலத் தேவைகளுக்காக தன் இலைகளில் சேமித்து வைக்கின்றன. எனவேதான் இவற்றின் இலைகள் நீர்சத்துமிகுந்து பருத்துக் காணப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, தன்னிடம் இருக்கும் நீர்ச்சத்துக்காக தன்னை சாப்பிடவரும் கால்நடைகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு தன் இலைகளிலுள்ள நீர்சத்தில் கசப்பு சுவையையும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில விஷ வேதியியல் பொருட்களையும் கொண்டுள்ளது. எனவே, கற்றாழை வகைகள் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள் சாப்பிடும் பட்சத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

கற்றாழையில் 500க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பதனை பார்த்தோம். அவைகளில் இந்தியாவில் வளரும் சிலவகை காற்றாழைகளின் பெயர்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

கற்றாழை வகைகளில் சில.

 • சிறு கற்றாழை.
 • பெருங் கற்றாழை.
 • கருங் கற்றாழை.
 • குருங் கற்றாழை.
 • நெடுங் கற்றாழை.
 • கொடுங் காற்றாழை.
 • வெண்காற்றாழை.
 • மருள் கற்றாழை.
 • பாம்புக்கற்றாழை.
 • நார் கற்றாழை.
 • செங்கற்றாழை.
 • வரிக்கற்றாழை.
 • மரைக்கற்றாழை.
 • பேய் கற்றாழை.
 • சப்பாத்திக்கற்றாழை.
 • நீலக்கற்றாழை (சீனிக்கற்றாழை).
 • யானை கற்றாழை (or ) ரயில் கற்றாழை (or ) ராக்காசிமடல்.
 • சோற்றுக்கற்றாழை (Indian Aloes).

இன்னும் இவைகளை போல் பலவகை கற்றாழை இனங்கள் உள்ளன. ஆனால் இவைகளில் 5 இனங்கள் மட்டுமே மருத்துவத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முன்னிலை வகிப்பது சோற்றுக்கற்றாழைதான்.

எனவே, நாம் மருத்துவ தன்மை மிகுந்ததாகக் கூறப்படும்  சோற்றுக்கற்றாழையைப் பற்றியே இங்கு விரிவாக பார்க்க இருக்கிறோம்.

சோற்றுக்கற்றாழை.

பெயர் :- சோற்றுக்கற்றாழை. (Indian Aloes).

வேறு பெயர்கள் :- குமரி. கன்னி, சோத்துக்கத்தாழை.

இனப்பிரிவு - தாவரம்.

தாவரவியல் பெயர் - ஆலோவேரா . (Aloe Vera ).

தாயகம் :- ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பம் .

வரிசை - அஸ்பாரகல்கள்.

குடும்பம் - அஸ்ஃபோடெலிசி. (Asphodelaceae).

துணைக்குடும்பம் :- அஸ்போடெலோய்டே (Asphodeloideae).

பேரினம் - கற்றாழை - Aloe.

இனம் :- A . Vera.

வளரும் இடங்கள்.

இந்தியா, சைனா, பாகிஸ்தான், வங்காளம், இத்தாலி, கிரீஸ், வெனிசுலா, கியூபா, மெக்சிகோ, ஜமைக்கா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா ஆகிய இடங்களில் இயற்கையானதொரு தாவரமாக வளர்கிறது.

பயன்கள்.

வீடுகளில் அலங்கார செடிகளாகவும், மருத்துவத்  தேவைகளுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் அனைத்து பகுதிகளும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் தோல்களுக்கு மெருகூட்டும் அம்சம் இதன் சாற்றில் இருப்பதாக கருதப்படுவதால் அழகுசாதன பொருள்களான சரும லோஷன், சோப்பு, ஷாம்பு, கிரீம் முதலியவைகளில் இதனை மூலப்பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

பண்புகள்.

சோற்றுக்கற்றாழை நோய்நீக்கும் பண்பினை கொண்டுள்ள அதே வேளையில் நச்சுப்பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே இதன் நச்சுப்பண்புகளை நீக்கிய பின்பே மருத்துவதேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

தாவரத்தின் தன்மை.

இது ஒரு தரிசு நில மூலிகை பயிர். மிக குறுகிய  தண்டுகளுடைய  சதைப்பற்றுள்ள பசுமையான தாவர இனம். இது சுமார் 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும்.

இதன் இலைகள் பச்சை நிறத்தில் மிகுதியான அளவில் சதைப்பற்றுடன் தடித்து காணப்படும். ஒவ்வொரு தடித்த இலைகளும் 200 கிராம் முதல் அதிகப்படியாக 1 கிலோ எடை கூட இருப்பதுண்டு. இலைகளின் இரு ஓரங்களிலும் சிறிய முற்கள் காணப்படும். அதிக வெயில் மற்றும் நீர் வளமும் குறைந்தால் இலைகளின் சதைப்பற்று குறைவதோடு பழுப்பு நிறம் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்திற்கு மாறுதலடையும்.

 சோற்றுக்கற்றாழையில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் சிறிது வித்தியாசப்படும். இந்தியாவில் உள்ள சோற்றுக்கற்றாழை புதர்போல் வளரும் இனம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள சில இன சோற்றுக்கற்றாழைகள் தடித்த தண்டுகளுடன் உயரமாக வளரும் தன்மையுடையன என்றும் கூறப்படுகிறது.

பூக்களின் தன்மை.

இவைகள் கோடைகாலங்களில் பூக்கின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய காற்றாழைகளின் தலைப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு பூக்காம்பு உருவாகி அதில் பூக்கள் கொத்துக்கொத்தாக உருவாகின்றன. ஆனால் இதில் விதைகள் உருவாவதில்லை. எனவே இதன் இனப்பெருக்கம் தாய்மரத்தின் வேர்களிலிருந்து முளைத்துக் கிளம்பும் புதிய இளம் செடிகள் மூலமாகவே நடக்கிறது.

Indian Aloes root

சத்துக்கள் விபரம்.

கற்றாழை சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பீட்டா கரோட்டின் முதலிய சத்துக்கள் நிறையவே உள்ளன. 

மேலும் கற்றாழையில் மனித உடலுக்கு தேவையான 20 வகை அமினோ அமிலங்களும் உள்ளன. அவைகளுடன் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள சத்துக்களும் நிறைந்துள்ளன.

Tamil English
வைட்டமின் A Vitamin A
வைட்டமின் C Vitamin C
வைட்டமின் E Vitamin E
வைட்டமின் B12 Vitamin B12
சுண்ணாம்பு Calcium
மெக்னீசியம் Magnesium
துத்தநாகம் Zinc
சோடியம் Sodium
இரும்பு Iron
பொட்டாசியம் Potassium
தாமிரம் Copper
செலினியம் Selenium
குரோமியம் Chromium
அலோயின் -
அலோசோன் -

மற்றும் பல அமினோ அமிலங்களும், வேதிப்பொருள்களும் நிறைந்துள்ளன.

கற்றாழையின் ரகங்கள்.

கற்றாழையில் பலவகை  ரகங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமான ரகங்களாவன..

 • ஜான்சிபார் கற்றாழை , 
 • யுகான்டா கற்றாழை, 
 • ஜஃபராபாத் கற்றாழை,  
 • நேட்டல்  கற்றாழை
 • குர்குவா கற்றாழை - அலோ பார்படென்ஸ் (Aloe vera )
 • சாகோட்ரின் கற்றாழை - அலோ பெராக்ஸ் (Aloe ferox )
 • கேப் கற்றாழை - அலோ பெர்ரி (Aloe perryi )

இதில் இந்தியாவின் பருவநிலையை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வகைகள் மட்டுமே இந்தியாவில் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. அவை 

 • குர்குவா கற்றாழை, 
 • சாகோட்ரின் கற்றாழை, 
 • கேப் கற்றாழை.

பயிர் சாகுபடி.

சோற்றுக்கற்றாழை தரிசு நில பயிர். இதை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. மழை வளமும் நீரும் இல்லாத காரணங்களால் எந்தவித விவசாயமும் செய்ய முடியாமல் ஏங்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் சோற்றுக்கற்றாழைக்கு அதிக அளவு நீர் தேவை இல்லை. நீர் மிக  குறைந்த அளவே போதுமானது. 5 நாட்களுக்கு ஒருதடவை நீர்பாய்ச்சினாலே போதுமானது. தற்போது பரவலாக சொட்டுநீர்ப்பாசனம் பயன்படுத்தப்படுகிறது. 

இதற்கு உரமும் அதிக அளவில் தேவைப்படுவதில்லை. சிறிதளவு மக்கிய சாணம் மேலுரமாக போட்டாலே போதுமானது. வடிகால் வசதியுடன் கூடிய  அனைத்து வகையான நிலங்களிலும் செழித்து வளரும் தன்மையுடையது.  

இதனை தனிப்பயிராகவும் பிற மரங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிடலாம். மிக குறைந்த செலவிலேயே விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு அற்புத பயிராகும்.

இது பூக்கும் தாவரம் என்றாலும் இதன் பூக்களில் விதைகள் உருவாவதில்லை. எனவே இதன் இனப்பெருக்கம் தாய்மரத்தின் வேர்களிலிருந்து முளைத்து கிளம்பும் புதிய செடிகள் மூலமாகவே நடக்கிறது. அப்படி உருவாகும் சிறு செடியை தாய் செடியிலிருந்து பிரித்தெடுத்து தனியாக நட வேண்டும்.

1 அல்லது 2 மாதமான கன்றுகளை தாய் மரத்திடமிருந்து பிரிந்தெடுத்து 3 அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நடவேண்டும். இவ்வாறு நடும் பட்சத்தில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 10,000 கன்றுகள் நடமுடியும்.

கற்றாழையில் பெரும்பாலும் எந்தவிதமான நோயும் ஏற்படுவதில்லை என்றாலும் சில நேரங்களில் "வேர் அழுகல்" நோய் பாதிப்பதுண்டு. இதன் வேர்களில் நீர் தங்கினால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே இதன் தண்டுப்பகுதியில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பயிர்செய்யப்படும் நிலம் சிறந்த வடிகால் வசதியுள்ளதாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

சில சமயங்களில் பூஞ்சைகள் தொற்றினாலும் வேர் அழுகல் நோய் ஏற்படுவதுண்டு. இதிலிருந்து விடுபட கற்றாழை கன்றுகளை நடுவதற்கு முன் அதன் வேர்களை  கார்பன்டாசிம் கரைசலில் (1லிட்டர் நீரில் 1 கிராம் வீதம் கார்பன்டாசிம் மருந்தை விட்டு கலக்க "கார்பன்டாசிம் கரைசல்" ரெடி ) 5 நிமிடநேரம் நனைத்து அதன்பின் நடவுசெய்ய வேர் அழுகல் நோயிலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

உரம்.

நன்கு வளம்பொருந்திய நிலமாக இருந்தால் தொழுஉரம் மட்டுமே போதுமானது. வளம் குறைந்த வறண்ட நிலம் எனில் இராசயன உரங்களும் தேவைப்படலாம்.

பயிடும் நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும். கன்றுகளை நடுவதற்கு முன்னால் 1 ஹெக்டேருக்கு 10 டன் தொழுவுரம் போட்டு உரம் மண்ணுடன் நன்கு உறவாகும்படி நன்கு உழுது அதன் பின் பாத்திகள் அமைத்து ஒரு செடிக்கும் மற்றோரு செடிக்கும் 3 அடிகள் இடைவெளி இருக்கும்படி நடவு செய்தல் வேண்டும்.

நடவு செய்தபின்பு வேறு களைச்செடிகள் எதுவும் வளராதபடி அவ்வப்போது  பராமரிக்க வேண்டும். களைச்செடிகள் வளராதபடி பார்த்துக் கொண்டால்தான் நாம் போட்ட மொத்த உரங்களும் கற்றாழை செடிகளுக்கு மட்டுமே பயன்படும்படி செய்ய முடியும்.

கன்றுகள் நடவு செய்த 20 அல்லது 30 நாட்களில் ஹெக்டேருக்கு 30 கிலோ யூரியாவுடன் 120 கிலோ ஜிப்சத்தையும் கலந்து அடி உரமாக  இட வேண்டியது அவசியம். இதனால் மகசூல் அதிகம் பெறலாம்.

பராமரிப்பு.

இது பெரும்பாலும் மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுவதால் இயற்கையான முறையிலேயே பராமரிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் தெளித்தல் கூடாது. பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படாது. ஏனெனில் கற்றாழை மடல்களின் சுவை மிதமான கசப்பு சுவை என்பதால் எந்தவிதமான பூச்சிகளும் இதனை அண்டுவதில்லை.

aloevera_plantation

மகசூல்.

இது சுமார் ஒரு வருடம் தொடர்ந்து பலன் தரும் பயிராகும். 20 நாட்களுக்கு ஒருதடவை அதன் தடித்த இலை மடல்களை அறுவடை செய்துவரலாம். அறுவடை செய்த 6 மணி நேரத்திற்குள்ளாக இதனை முறைப்படி பக்குவப்படுத்த வேண்டும். இல்லையெனில் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம்.

நோய்ப்பாதிப்பு.

இதை சிறிய ரக மாவுபூச்சிகள் தாக்கி நோய்களை ஏற்படுத்தலாம். பூஞ்சைகளும் சிலநேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயிர் பாதிப்பும் நிவாரணமும்.

சில காரணிகளால் பயிர்களில் ஏற்படும் பாதிப்பும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

1. இலைமுனைகள் வறண்டு போகுதல் - ஊட்டச்சத்து பற்றாக்குறை. உரமிடுவதால் நிவர்த்தி செயலாம்.

2. இலைகள் மென்மையாவதுடன் சிறிது மஞ்சள் நிறத்திற்கு மாறுதல் - அதிகப்படியான ஈரப்பதம் உள்ளது. வடிகால் வசதி ஏற்படுத்தவும். இலைகளில் சிலந்தி பூச்சி இருந்தாலும் இப்படிவரும். எனவே அதனை தேடி கண்டுபிடித்து அழிக்கவும்.

3. இலைகள் மெலிந்து காய்தல் - சூரிய ஒளி கிடைக்கவில்லை மற்றும் நீர்ப்பாசனம் குறைவு.

4. இலைப்பரப்பில் பழுப்புநிற புள்ளிகள் தோன்றுதல் - பூமியில் போதிய அளவு ஈரப்பதம் இல்லை. மற்றும் அதிக வெயில். சிலந்தி பூச்சி இருந்தாலும் இப்படி வரும்.

5. அடர் பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றுதல் - ஒருவிதமான பூஞ்சை நோய்கள் பாதித்திருக்கலாம். அதேவேளையில் இலைகளின் தொடக்கப்பகுதி இடுக்குகளில் நீர்கள் தேங்கி அதனால் பூஞ்சைகள் உற்பத்தியாகியிருக்கலாம். எனவே செடியின் வேர்ப்பகுதியில் மட்டும் நீர்விடவும். செடியின் தலை மற்றும் இலைப்பகுதியில் நீர் தெளிப்பதை தவிர்க்கவும். பூஞ்சை காளானை கட்டுப்படுத்தும் மருந்துகளையும் தெளிக்கவும்.

6. இலை சிவப்பது - அதிகப்படியான சூரிய ஒளி இலைகளில் பட்டால் இலைகள் சிறிய அளவில் சிவந்த நிறத்தை பெறும். உடனே இதுதான் வாய்ப்பு என்று கருதி இதுதான் "செங்கற்றாழை" என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி அதிகவிலைக்கு விற்றுவிடாதீர்கள். விகார புத்தி அகால நாசம். செடிகளின் மீது அதிக சூரியஒளி படுவதை கட்டுப்படுத்துங்கள் இலைகள் பழையபடி பச்சையாக மாறிவிடும்.

7. இலைகள் தண்டிலிருந்து ஒடிதல் அல்லது மடங்குதல் :- அதிகப்படியான குளிர்ச்சி உள்ள நீரை விட்டால் இப்படி ஆகும். எனவே  அந்தந்த இயற்கை சூழ்நிலைக்குத் தகுந்த இயல்பான நீரை விடவும்.

8. தண்டு உலர்ந்து போதல் மற்றும் வளர்ச்சி குறைவு :- இது நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பு. வேர்கள் நூற்புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கும். அல்லது வேர்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கும். காரணம் கண்டறிந்து அதற்கான மருந்துகளை பயன்படுத்தவும்.

9. இலைகள் வெண்மை நிறத்தில் மெழுகுபோல் இருத்தல் மற்றும் சிறுசிறு கட்டிகள் தோன்றுவது :- இது மாவு பூச்சியால் ஏற்படும் பாதிப்பு. சோப்பு கரைசலால் சுத்தம் செய்யவும்.

10. இலைகளில் வெள்ளை மாவு பூசியது போல் இருத்தல் கூடவே மஞ்சள் நிறத்தில் இலைகள் மாறுவது :- இது ஒருவித "இலைபேன்' என்னும் பூச்சியால் ஏற்படும் பாதிப்பு.

கற்றாழை பெரும்பாலும் வேர் அழுகல் நோயால்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. முறையான வடிகால் வசதி இல்லாததால் வேர்களில் நீர் தங்கி வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது. எனவே முறையான சிறந்த வடிகால் வசதி அவசியம். மேலும் பூஞ்சைகளாலும் வேர் அழுகல் நோய் ஏற்படுவதுண்டு. இதற்கு பூஞ்சைக்கொல்லி மருந்து வேர்ப்பகுதியில் விட வேண்டும்.

விவசாய கடன்.

இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விவசாய கூட்டுறவு சங்கம் மூலமாக மாநில அரசு உதவியுடன் விவசாயகடன் கொடுக்கப்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கத்தை அணுகி விவசாயிகள் பயனடையலாம்.

சோற்றுக்கற்றாழை கரைசல்.

சோற்றுக்கற்றாழை பெரும்பாலும் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அதிலுள்ள கசப்பு சுவையும், அதன் ஜெல்லிலுள்ள பூச்சிகளை விரட்டும் ஒருவித இரசாயன பொருளும் எனலாம். இதையும் மீறி நோய் பாதித்தால் அது "வேர் அழுகல்" நோயாகத்தான் இருக்கும்.

இதனுடைய ஜாதகமே இப்படியிருக்கும் போது இந்த கற்றாழையில் தயாரிக்கப்படும் ஒருவகை மருந்துகரைசல் "சம்பங்கி" போன்ற பூக்கள் பூக்கும் தாவரங்களில் ஏற்படும் வேர் அழுகல் நோயை அற்புதமாக விரட்டுகிறது என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா!. இதோ மலர் செடிகளில் ஏற்படும் வேர் அழுகல் நோயை விரட்டும் கரைசலை எவ்வாறு தயாரிப்பது என்பதனை பார்ப்போம்.

5 கிலோ அளவிற்கு சோற்றுக்கற்றாழையை இடித்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சுண்ணாம்பு , மஞ்சள்தூள் வகைக்கு 1 கிலோ சேர்த்து 200 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊறவைத்து ஒரு செடிக்கு 30 மில்லி என்ற அளவில் வேர்களில் விட்டுவர "வேர் அழுகல்" நோய் போயேபோச்சு!

இந்த பதிவில் சோற்றுக்கற்றாழை பற்றியும், அதை சாகுபடி செய்யும் விதம் பற்றியும் பார்த்தோம். இதனை தொடர்ந்துவரும் அடுத்த பதிவில் சோற்றுக்கற்றாழையை முறையாக பயன்படுத்தும் விதமும் அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மை தீமைகளையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் 3 வது பகுதியை படிக்க கீழேயுள்ள சுட்டியை கிளிக்குங்க.

👉 சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera - Part 3.👈

🌱🌱🌱🌱🌱🌱🌱

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

 1. நீங்கள் கொடுத்துள்ள தீர்வுகள் எனக்கு எங்களுக்கு உதவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பதிவு உங்களுக்கு பயனுடையதாக அமைந்ததில் எங்களுக்கும் மகிழ்சி நண்பரே !

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.