அமினோ அமிலங்கள் - Amino Acids - Part 3.

அமினோ அமிலங்கள்.

Amino Acids.

Part - 3.

          அமினோ அமிலங்கள் (Amino Acids) என்னும் இந்த தொடரில் மனித உடலுக்கு தேவைப்படும் அமினோ அமிலங்களைப்பற்றி தொடர்ந்து பார்த்துவருகிறோம். இத்தொடரில் இது மூன்றாவது பகுதி. முதல் இரு பகுதிகளையும் படிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.          நம் உடலின் பெரும்பகுதி அமினோ அமிலங்களால் கட்டமைக்கப்பட்ட  புரதங்களினால் ஆனது என்பது உங்களுக்கு நன்கு தெரிந்ததே !!! . 

          பல வகையான அமினோ அமிலங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு நீளமான சங்கிலித்தொடராக ஒன்றை அடுத்து ஒன்றாக வரிசையாக பிணைக்கப்பட்டு நன்கு பொதியப்பட்டு  இருக்கும் தொகுதியையே நாம் புரதங்கள் என்கிறோம்.

          அமினோஅமிலம் என்பது அமைன் (-NH₂) மற்றும் கார்பாக்சைல் (-COOH ) வேதிவினை குழுக்களைக்கொண்ட ஒரு மூலக்கூறு. இதில் ஆக்சிஜன்[Oxygen], ஹைட்ரஜன் [Hydrogen], நைட்ரஜன் [Nitrogen] மற்றும் கார்பன் [Carbon] முதலிய தனிமங்கள் அடங்கியுள்ளன. புரதங்களின் தன்மையைப்பொறுத்து அதில் சிலவற்றில் கந்தகங்களும் [Sulfur] இடம்பிடித்துள்ளன.

          உலகில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றாலும் அதில் மனிதர்களுக்கு வெறும் 21 வகையான புரதங்களே அத்தியாவசியமான புரதங்களாக தேவைப்படுகின்றன.

          இந்த 21 வகையான புரதங்களில் 9 வகையான புரதங்களே மிக முக்கியமானவைகள். ஏனெனில் இவைகளை நம் உடலால் சுயமாக உருவாக்கிக்கொள்ள முடிவதில்லை. வெளியிலிருந்து உணவின் மூலமாகவே பெறவேண்டியுள்ளது. எனவே அவைகளை "அத்தியாவசிய அமினோ அமிலங்கள்" [Essential Amino Acids] என்கிறோம். இந்த 9 வகையான அமிலங்களையும் ஏற்கனவே நாம் முதல் இரு பகுதிகளில் பார்த்துவிட்டோம். 

          இந்த 9 வகையான அமினோ அமிலங்களை தவிர்த்து நம் உடலுக்கு தேவைப்படும் மேலும் 12 வகையான அமினோஅமிலங்களை "அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்கள்" [Nonessential Amino Acids]  என்கிறோம்.

          அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்கள் என்று பெயர் இருப்பதால் இந்த 12 வகையான அமினோ அமிலங்களும் நம்முடைய உடலுக்கு அவசியமில்லாத அமினோ அமிலங்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இதுவும் உடலுக்கு மிகவும் தேவைப்படும் அமினோ அமிலங்கள்தான்.

          இந்த 12 வகையான அமினோ அமிலங்களையும் நம் உடலே சிலவித வேதிவினைகளின் மூலமாக தமக்குத்தாமே திட்டத்தின்மூலம் சுயமாகவே  தயாரித்துக்கொள்வதால் இதனை உணவின்மூலமாக மட்டுமே பெறவேண்டுமென்கின்ற அத்தியாவசியமெல்லாம் இல்லையென்பதால் இதனை "அத்தியாவசியமற்ற அமினோஅமிலம்" என்கிறோம் அவ்வளவே. 

          இனி இப்பதிவில் மட்டுமல்லாது இதனை தொடர்ந்து வரும் பதிவுகளிலும்  இந்த 12 வகையான அமினோஅமிலங்களைப்பற்றி விரிவாக பார்ப்போம்.


Nonessential Amino Acids.


 1. Alanine - அலனைன்.
 2. Aspartic acid - அஸ்பார்டிக் அமிலம்.
 3. Asparagine - அஸ்பரஜின்.
 4. Glutamic acid - குளூட்டாமிக் அமிலம்.
 5. Serine. - செரைன்.
 6. Selenocysteine - செலீனோசிஸ்டீன்.
 7. Arginine - ஆர்ஜினின்.
 8. Cysteine - சிஸ்டீன்.
 9. Glutamine - குளூட்டமின்.
 10. Glycine - கிளைசின்.
 11. Proline - புரோலின்.
 12. Tyrosine - டைரோசின்.

அலனைன் - Alanine.


பெயர் :- அலனைன் - Alanine.

வேறுபெயர்கள் :- 2அமினோபிரபனாயிக் அமிலம். [2Aminopropanoic acid].

மூலக்கூறு வாய்ப்பாடு :- C₃H₇NO₂

மோலார் நிறை :- 89.09 g/mol.

அடர்த்தி :- 1.424 g/cm³

உருகுநிலை :- 298 ⁰C

கரையும் திறன் :- நீரில் கரையும் தன்மையுடையது. [167.2 g/L (25⁰ C)].

தன்மை :- இந்த அலனைன் என்னும் அமினோ அமிலமானது இடைப்பட்ட காலகட்டத்தில்தான் கண்டறியப்பட்டது. எனவே இதைப்பற்றிய முழுமையான ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. எனவே இதுவரை கண்டறியப்படாத பல நன்மைகளும் இந்த அமிலத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

          குறிப்பாக நீரழிவு நோய்க்கு (இரத்தத்தில் சர்க்கரை குறைவு சார்ந்த நீரழிவு ) இது பயனளிக்கலாம் என நம்பப்படுகிறது.

          இது மனிதர்களுக்கு தேவைப்படும் அமிலங்களில் Nonessential amino acid பிரிவை சார்ந்தது. அதாவது இதை  உணவிலிருந்துதான் பெற வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஏனெனில் இதை நம் உடலே திசுக்களில் நடைபெறும் வேதிவினைகளின் மூலமாக "பைருவிக்" (Pyruvic)  அமிலத்திலிருந்து தயாரித்துக்கொள்கிறது.

          அனலின் என்பது "குளுக்கோஜெனிக்" (glucogenic) அமினோ அமிலமாகும். நீங்கள் உணவுகிடைக்காமல் பட்டினிகிடக்க நேரிட்டால் அந்த இக்கட்டான வேளையில் இது குளுக்கோஸ்போல் செயல்பட்டு இரத்த ஓட்டத்தில் கலந்து கல்லீரலால் கிரகிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்பட்டு உங்கள் உடல் இயங்குவதற்கான திறனை அளிக்கிறது.

           நம் தசைகளிலுள்ள குளுக்கோஸ் சிதைவுறும் வினை ஏற்படும்போது அங்கு "லாக்டிக்" அமிலமும் அலனைனும் உருவாகின்றன. இந்த அலனைன் கல்லீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு லாக்டேட்டுடன் மீண்டும் இணைந்து குளுக்கோஸ் ஆக மாற்றப்பட்டு தசைகளுக்கு கடத்தப்பட்டு அங்கு மீண்டும் லாக்டிக் அமிலமும் அலனைனும் உருவாகின்றன. மீண்டும் மீண்டும் இந்த சுழற்சி ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் இந்த அலனைன் அமினோஅமிலத்தை நம் உடலே தசைகளில் ஏற்படும் வேதிவினைகளின் மூலம் சுயமாக உருவாக்குகின்றன என கொள்ளலாம்.

          நம் உடலே இதனை தயாரித்துக்கொள்வதால் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது. இது நம் உடலுக்கு மிகமிக அத்தியாவசியமாக தேவைப்படுகிற அமினோ அமிலமாகும். உணவின் மூலமாகவும் இந்த அமினோ அமிலத்தை பெறமுடியும். நாம் சாப்பிடும் பலவிதமான உணவுகளிலும்கூட இந்த அமினோ அமிலம் உள்ளது. குறிப்பாக இறைச்சிகளில் மிக அதிகமாகவே உள்ளது.

பயன்கள் :- "டிரிப்டோபான்" (Tryptophan) மற்றும் வைட்டமின் B6 (Vitamin B6) ஐ உடைக்க இது உதவுகிறது. இது மூளைக்கும், தசைகளுக்கும், மைய நரம்பு மண்டலங்களுக்கும் ஆற்றல் தருகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், நிணநீர் உற்பத்தியை ஊக்குவித்தல், மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் முதலிய வேலைகளை செய்கின்றன. உடலிலுள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது. சர்க்கரை மற்றும் கரிம அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.

பாதிப்புகள் :- நம்முடைய குருதியில் அலைனின் அளவு அதிகரிக்கும்போது அது உடலில் சிலபாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, உடல் எடையும் அதிகரிக்கலாம். அதுமட்டுமல்ல மாரடைப்பு ஏற்படுவதற்கும்கூட "அலனைன்" உடலில் அதிக அளவில் இருப்பதே காரணம் என சமீபகாலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்பார்டிக் அமிலம்.

Aspartic Acid.


பெயர் :- அஸ்பார்டிக் அமிலம் - Aspartic Acid.

வேறுபெயர்கள் :- அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம்.

மூலக்கூறு வாய்ப்பாடு :- C₄H₇NO₄ 

மோலார் நிறை :- 133.10 g/ mol

அடர்த்தி :- 1.7 g /cm³

உருகுநிலை :- 270 ⁰C.

கரையும் திறன் :- நீரில் கரைகிறது. (142 g /L).

தன்மை :- இது கரிமசேர்மங்களின் வழித்தோன்றலாகும். இது மனிதர்களுக்கு தேவைப்படும் அமிலங்களில் Nonessential amino acid பிரிவை சார்ந்தது.

          இதை நம் உடலே திசுக்களில் நடைபெறும் வேதிவினைகளின் மூலமாக  தயாரித்துக்கொள்கிறது. அதாவது வைட்டமின் B6 உதவியுடன் குளூட்டாமிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது "அஸ்பரஜின்" அமினோ அமிலத்தின் அமைடு ஆகும். அதாவது அதன் வேதிவினைக்குழுவை சேர்ந்த ஒரு சேர்மமாகும்.

பயன்கள் :- இது உங்களின் நோயெதிர்ப்புசக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நரம்பு மற்றும் மூளைசம்பந்தப்பட்ட கோளாறுகளை குணப்படுத்துகிறது. உடல்சோர்வை நீக்கி நரம்புகளுக்கு புத்துணர்வூட்கிறது.Aspartic Acid


அஸ்பரஜின்.

Asparagine.


பெயர் :- அஸ்பரஜின் - Asparagine. 

வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-கார்பமோயில்புரோபநோயிக் அமிலம்.

மூலக்கூறு வாய்ப்பாடு :- C₄H₈N₂O₃.

மோலார் நிறை :- 132.12 g.mol⁻¹

அடர்த்தி :- 1.543 g/cm³

உருகுநிலை :- 235 ⁰C.

கொதிநிலை :- 438 ⁰C.

கரையும் திறன் :- 168 mg /mL

கண்டறிந்தவர்கள் :- இது முழுமையாக ஒருவரால் மட்டுமே கண்டறியப்பட்டதல்ல. பலருடைய அர்ப்பணிப்பு இதில் உள்ளது எனலாம்.  1932 ம் ஆண்டில் அஸ்பாரகஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

தன்மை :- இது அஸ்பார்டிக் அமினோ அமிலத்தின் அமைடு ஆகும். அதாவது அஸ்பார்டிக் அமிலத்துடன் நெருங்கிய தொடர்புடைய அமினோஅமிலமாகும். புரதங்களை கட்டமைப்பதில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. இந்த அமினோ அமிலம் மனிதர்களுக்கு மிகவும் இந்தியமையாத ஒரு அமிலமென்றே சொல்லவேண்டும்.

அதிகமுள்ள உணவுப்பொருட்கள் :- இது உணவிலிருந்துதான் பெறவேண்டுமென்கின்ற அவசியமில்லை. நம் உடலே சில வேதிவினைகளின் மூலம் இதனை உருவாக்கிக்கொள்கிறது.

          இதனை உணவுகளிலிருந்தும் பெற முடியும். குறிப்பாக பால், மோர், முட்டை, மீன், மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் கடல்சார்ந்த உணவுகளிலும் நிறையவே உள்ளன. மற்றும் தாவரஉணவுகளான சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு, பருப்புகள்,  விதைகள், கொட்டைவகைகள் மற்றும் முழுதானியங்கள் ஆகியவைகளிலும் உள்ளன.

பயன்கள் :- நரம்பு, மூளை மற்றும் உயிரணு திசுக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், அதனுடைய சிறப்பான செயல்பாட்டிற்கும் அஸ்பரஜின் மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

          மேலும், புரத அமைப்பு மற்றும் புரதசெயல்பாடுகள், நொதிகள், மற்றும் தசை திசுக்களின் உற்பத்திக்கும் தேவைப்படுகிறது. மேலும் இது நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டை சமநிலைப்படுத்துகிறது.

குளூட்டாமிக் அமிலம்.

Glutamic Acid.


பெயர் :- குளூட்டாமிக் அமிலம் - Glutamic Acid.

வேறுபெயர்கள் :- (2S)-2-aminopentanedioic acid.

கண்டுபிடிப்பாளர் :- கிக்குனே இக்கேடா - kikunae Ikeda.

          சீனர்களும், ஜப்பானியர்களும் உணவில் சுவையையும், வாசனையையும் ஏற்படுத்துவதற்காக ''கடற்பாசி'' என்னும் தாவரத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

          எனவே இதுபற்றி ஆராயமுற்பட்ட "கிக்குனே இக்கேடா" [Kikunae Ikeda]. என்னும் ஜப்பானிய பேராசிரியர் கடல்பாசியின் சுவைக்கு அதிலுள்ள ''குளூட்டாமிக் அமிலம் - Glutamic acid '' என்னும் வேதிப்பொருள்தான் காரணம் என்பதனை டோக்கியோ அரசு பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்து கண்டறிந்தார். இதை அவர் கண்டறிந்த ஆண்டு 1908 ஜூலை 25.

மூலக்கூறு வாய்ப்பாடு :- C₅H₉NO₄

மோலார் நிறை :- 147.13 g . mol⁻¹

அடர்த்தி :- 1.4601(20 ⁰C).

உருகுநிலை :- 213 ⁰C.

கரையும் திறன் :- நீரில் கரைகிறது. நீரில் கரைதிறன் - 8.57 mg/ml. [80.6 g/L].

தன்மை :- இது கரிம சேர்மங்களின் வகையை சேர்ந்தது. இந்த குளூட்டாமிக் அமிலம் நம்முடைய உடல் திசுக்களில் நிகழும்  சில வேதிவினைகளின் மூலம் உற்பத்தியாகின்றன. அவ்வாறு உற்பத்தியாகும் அமினோ அமிலங்கள் தசைத்திசுக்களிலேயே சேமித்துவைக்கப்படுகின்றன. ஒவ்வொருநாளும் தசைத்திசுக்கள் சுமார் 70 முதல் 80 கிராம் குளுட்டாமிக் அமிலத்தை உற்பத்தி செய்வதுடன் உடல்முழுவதும் பயன்படுத்தும்படியும் செய்கிறது.

Glutamic Acid


பயன்கள் :- நாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த குளூட்டாமிக் அமிலத்தை தினந்தோறும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இது நம் உடலுக்கு பெரிய அளவில் தேவைப்படவில்லை என்றாலும் நாள்தோறும் சிறிதளவு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய சத்து. மனிதனுடைய புரதத்தில் இது 6.3 சதவீதம் இடம்பிடித்துள்ளது. உணவில் ஏதாவது அமோனியம் உப்புகள் இருந்தால் அதனை அமினோ அமிலமாக மாற்றும் வேலையை இது திறம்பட செய்துவருகிறது.

          இந்த அமிலமானது மனசோர்வு, பதட்டம், இதயநோய் மற்றும் மார்புவலி முதலியவைகளை கட்டுப்படுத்துகிறது. இதயத்துடிப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நோயெதிர்ப்பு மற்றும் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவைகள் சிறப்பாக செயல்படுவதற்கும் உதவுகிறது.

          மேலும் இது "ப்ரோஸ்டேட்" சுரப்பியின் செயல்பாட்டை எளிதாக்குகிறது. ப்ரோஸ்டேட் திரவத்தில் அதிக அளவில் குளூட்டாமிக் அமிலம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் வயதாகும்போது ப்ரோஸ்டேட் சுரப்பி சிலருக்கு அளவில் பெரிதாகிறது. இது அவர்களுக்கு சில அசௌகரியங்களை  ஏற்படுத்தலாம். "குளூட்டாமிக் சிகிச்சை" எடுத்துக்கொள்வதன்மூலம் இதனை தடுக்க முடியும் என அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

          மூளை வளர்ச்சிக்கு தேவையான ''குளுட்டோ தயான்'' மற்றும் ''காமா அமினோ புட்ரிக்'' ( Gama amino Butiric acid ) அமிலம் போன்றவற்றை தயாரிக்க இது உதவுகிறது. மூளையின் நரம்பு வளர்ச்சிக்கும் இதன் பங்கு முக்கியம். மூளையிலுள்ள நரம்புசெல்கள் மற்ற உயிரணுக்களிடமிருந்து தகவல்களை பெறவும் அனுப்பவும் உதவுகிறது.

          கற்றல், நினைவாற்றல், விழிப்புணர்வு இவைகளை வளர்த்துக்கொள்ள இது தேவைப்படுகிறது. மேலும் உடலில் சக்தி உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், உடலிலுள்ள நச்சு அமோனியாவை வெளியேற்றுவதற்கும்,  தசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் குளூட்டாமிக் அமிலம் அவசியம். உடலிலுள்ள அதிகப்படியான நைட்ரஜனை வெளியேற்றுவதில் இதனுடைய பங்கு அதிகம்.

           ஆனால் இந்த குளூட்டாமேட் அமிலம் நமக்கு மிக குறைந்த அளவே தேவைப்படுகிறது. நமக்கு தேவைப்படும் அளவைவிட இது  உடலில் குறைந்தால் நோயெதிர்ப்பு சக்தியில் சில பிரச்னைகள் ஏற்படலாம். சோர்வு , தூக்கமின்மை, எதிலும் கவனம் செலுத்த முடியாமை முதலியன ஏற்படலாம்.

          எனவே "பார்கின்சன்" என்று சொல்லப்படும் நடுக்குவாதம், மனசோர்வு, பதட்டம் முதலியவைகளுக்கு சிகிச்சையளிக்க குளூட்டாமிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

அதிகமுள்ள உணவுப்பொருட்கள் :- பால், பால்சார்ந்த பொருட்கள், மீன், கோழி இறைச்சி, முட்டை, பயறுவகைகள், பருப்புவகைகள், பட்டாணி,  பீன்ஸ், ஓட்ஸ் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஒரு சாதாரண அமினோ அமிலம்தான் இது. அதுமட்டுமல்ல நம் உடலே இதனை தன் தேவைக்கேற்ப சுயமாக உற்பத்தி செய்துகொள்கிறது.

பாதிப்புகள் :- உணவின் மூலம் இதை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் அது மூளையை கடுமையாக பாதிக்கும். மூளையின் செல்களை அழித்துவிடும். மூளையின் மிக முக்கிய பகுதியான ''ஹைப்போ தலாமஸ்'' ( hypothalamus gland ) - ஐ சிதைத்து விடும். ஞாபகசக்தி மங்கும்.... தலைவலி, சோர்வு முதலியவைகளை உண்டுபண்ணும். மேலும் உடலில் பல விபரீத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

          இப்பதிவின் இறுதி பகுதியாகிய நான்காவது பகுதியை (Part 4) படிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக்குங்கள் ...கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.