"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாகப்பாம்பு - நல்ல பாம்பு - Naja naja - Indian Cobra.

நாகப்பாம்பு - நல்ல பாம்பு - Naja naja - Indian Cobra.

நாகப்பாம்பு - Nakappampu.

[Part - 2]

நாகப்பாம்புகளில் பல வகைகள் உள்ளன. அவைகள் வாழும் இடங்களைப் பொறுத்து சிறு சிறு மாறுதல்கள் அவைகளின் உடல்களில் தென்படும். அந்தவகையில் சிலவகை மாற்றங்களுடன் இந்தியாவில் வாழும் நாகப்பாம்பையே "இந்திய நாகம்" [Indian Cobra] என அழைக்கிறோம்.

இந்த பதிவின் முதல்பகுதியில் நாகப்பாம்புகளின் தன்மைகளைப்பற்றி பார்த்தோம். இரண்டாவது பகுதியாகிய இதில் நாகப்பாம்புகளின் இந்திய வகையான "இந்தியன் கோப்ரா"(naja naja) வின் தன்மைகளைப்பற்றி பார்ப்போம்.

இக்கட்டுரையின் முதல்பகுதியை பார்வையிட [Part 1] இங்கு கிளிக்குங்க >> நாகப்பாம்பு - நல்ல பாம்பு - Cobra Snake. <<.

  நல்ல பாம்பு - Nalla pambu.

  Naja naja.

  இந்திய நாகம் என்று சொல்லப்படும் இந்த பாம்பில் மட்டுமே அவைகள் வாழும் இடத்தை பொறுத்து உடல் மற்றும் விஷத்தின் தன்மைகளில் சிறு சிறு மாற்றங்களுடன் 1 டஜனுக்கும் மேலான வகைகள் உள்ளதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

  இந்த இந்திய நாகப்பாம்பையே தென்னிந்தியாவில் அதாவது தமிழ்நாட்டில் "நல்ல பாம்பு" என செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். காரணம் இந்த பாம்பு யாரையும் தேவையில்லாமல் தீண்டுவது இல்லை. அவைகள் படம் எடுத்து சீறுவது  நம்மை கொத்துவதற்கு அல்ல... நமக்கு எச்சரிக்கை விடுவதற்கு மட்டுமே.

  பலநேரங்களில் இவைகள் கொத்துவதுபோல் பாசாங்கு செய்வதுமுண்டு. சிலநேரங்களில் இவைகள் மனிதர்களை கடித்தாலும் விஷத்தை உடலினுள் செலுத்துவதில்லை. எனவேதான் அதனை ''நல்லபாம்பு'' என்கிறோம்.

  அதனுடைய உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தால் மட்டுமே அவைகள் வேறு வழியில்லாமல் விஷத்தை பிரயோகிக்கின்றன. தவறுதலாக இதனை மிதிப்பதாலேயே பல நேரங்களில் இவைகள் மனிதர்களை தீண்டுகின்றன.

  இந்தியாவில் அறியாமையால் இந்த பாம்பிற்கு அதிக அளவில் இடையூறு கொடுப்பதாலும், பல நேரங்களில் இது இருப்பதை கவனிக்காமல் தவறுதலாக மிதிப்பதாலும் நல்லபாம்பினால் தீண்டப்பட்டு அதிகம்பேர் உயிரிழக்கிறார்கள் என்பது வேதனை.

  பொதுவாக நல்லபாம்பு படம் எடுத்து சீறும் போது பார்த்தால் படத்தின் பின்புறம் மூக்குக்கண்ணாடி போன்று ஒரு அடையாளம் இருக்கும். இந்த மாதிரியான குறியீடு உள்ள பாம்பினை "Spetacled Cobra" என்றும், சில பாம்புகளுக்கு மூக்குக்கண்ணாடி அடையாளத்தில் ஒரு கண்ணாடி வில்லை மட்டும் இருப்பதுபோன்ற அடையாளம் இருக்கும் இதை "Monocled Cobra" என்றும் வகைப்படுத்துகின்றனர். 

  சரி, இனி இந்த நல்லபாம்பைப்பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

  Indian cobra & Spectacled cobra.

  திணை :- விலங்கினம்.

  பெயர் :- இந்திய நாகம்.[Indian cobra (or) Spectacled cobra).

  வேறுபெயர் - நல்லபாம்பு.

  அறிவியல் பெயர் :- Naja naja.

  திணை - விலங்கினம்.

  தொகுதி - முதுகு நாணிகள் [Chordata].

  துணை தொகுதி - முதுகெலும்பிகள்[Vertebrata].

  முதன்மை வகை - Tetrapoda.

  வகை - Reptillia.

  வரிசை - Squamata.

  துணைவரிசை - சர்பன்டிஸ் [Serpentes].

  வகுப்பு :- ஊர்வன.

  குடும்பம் :- எலாபிடே [Elapidae]

  இனம் - N. naja.

  பேரினம் - நாகம் - naja.

  ஆயுள் காலம் :- 20 முதல் 30 வருடங்கள்.


  Nalla pambu


  தாயகம்.

  இந்தியா மற்றும் இந்திய துணைக்கண்டங்களான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை முதலான இடங்களில் காணப்படுகின்றன. கடல் கடந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கூட சிலவகை இந்திய நாகம் காணக்கிடைப்பது ஆச்சரியமே!.

  இன்றைய சிலைகடத்தல் ஆசாமிகளைப்போல... அன்று பலநூறு வருடங்களுக்கு முன்பு... பாம்புக்கடத்தல் ஆசாமிகள் இருந்திருப்பார்கள் போல.

  வாழிடம்.

  சமவெளி நிலங்கள், மழைக்காடுகள், வயல்வெளிகள், நீர்நிலைகளின் அருகாமை முதலான இடங்களில் வாழ்வது மட்டுமல்லாமல் மனிதர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில்கூட தன் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. அதற்கு காரணமும் உண்டு. இதன் முக்கிய உணவாக எலிகள் இருப்பதாலும் மனிதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எலிகளும் அதிகம் வசிக்கும் என்பதாலேயே இப்பாம்புகள் மனிதர்கள் அதிகம் வசிக்கும் இடத்தை வசிப்பிடமாக தேர்வு செய்கின்றன.

  உடலமைப்பு.

  சராசரியாக இந்த பாம்பின் நீளம் 2 மீட்டர் நீளம் வரை இருக்கும். அரிதாக சில பாம்புகள் 2.4 மீட்டர் நீளம்கூட இருப்பதுண்டு.

  தன்மை.

  இதனுடைய பெயரைப்போலவே ரொம்பவே சமத்து. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் ரகம். யாருடனும் எந்த வம்புதும்புக்கு போகாது. ஆனால் இதற்கு யாராவது தொல்லை கொடுக்கும் பட்சத்தில் எச்சரிக்கும் விதமாக படம் எடுத்து சீறும்.

  இது படம் எடுக்கும்போது பார்த்தால் முன்பக்க படத்தில் இரண்டு பெரிய கண்கள் இருப்பது போன்ற கருமையான வடிவம் இருப்பதை நீங்கள் காணலாம். இது முன் பக்கத்திலிருந்து தாக்கும் எதிரிகளை ஏமாற்றி பயமுறுத்துவதற்காகவாம்.

  Nalla pambu - Naja Naja

  பின்னே சாதாரணமா பார்த்தா இப்பவெல்லாம் எவன் பயப்படுறான். கண்களை பெரிதாக உருட்டி பயமுறுத்துனாதான பயப்படுறானுக.

  அதே வேளையில்  தலையின் பின்புறத்தை கவனித்தால் அங்கும் கருமையான நிறத்தில் U போன்ற அடையாளத்தை காணலாம். அதிலும்  இரண்டுபெரிய கண்கள் இருப்பது போன்ற அமைப்பை காணலாம். இது இந்திய நாகத்திற்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பியல்பு.

  முன்னாடிதான் இரண்டு கண்கள் பயமுறுத்துகிறதே என்று பின்னால் வந்தால் அங்கும் இரண்டு கண்கள் இருப்பதை பார்த்து எதிரிகள் ஒருகணம் திகைத்துதான் போகும். இந்த அமைப்பு எதிரிகளை ஏமாற்றி தப்பித்துக்கொள்ள பரிணாமம் தந்த ஒரு வரப்பிரசாதம்.

  பின்னால் இருந்து எளிதாக தாக்கலாம் என்று இப்புறத்தே வரும் விலங்குகள் இந்த இரு கண்போன்ற அமைப்பை உண்மையான கண் என நினைத்துகொண்டு ஒருகணம் திகைத்து நிற்கும். முன்பகுதி எது பின்பகுதி எது எனத்தெரியாமல் குழம்பித்தான் போகும். பின்னாலிருந்து வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க இது துணைபுரியும்.

  மனிதனுக்கு இருப்பதுபோல ஒரு பொருளை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறன் விலங்குகளின் கண்களுக்கு இருப்பதில்லை என்பதாலும், பாம்பு படமெடுத்து நிற்கும்போது தலையின் இருபக்க அமைப்பும் ஒரே மாதிரி  தட்டையாக இருப்பதாலும் எதிரிகள் குழப்பம் கொள்வதில்  ஆச்சரியமில்லைதான்.

  அதுசரி இந்தியாவில் உள்ள பாம்புகளுக்கு மட்டும் ஏன் இந்த அமைப்பு உள்ளது என்கிறீர்களா? அது வேறொன்றுமில்லை. இந்தியாவில். அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் முதுகுக்கு பின்னால்தான் ஆபத்து அதிகம் என்பதனை பாம்புகூட நன்றாக புரிந்து வைத்துள்ளது

  Cobra Snake - Indian Cobra

  உணவு முறை.

  இவைகள் பல்லிகள், சிறியரக பாம்புகள், சிறியவகை பாலூட்டிகள், தேரைகள், தவளைகள், பறவைகள், பறவைகளின் முட்டைகள் மற்றும் எலி , அணில், முயல் போன்ற அனைத்து வகை கொறித்துண்ணும் விலங்குகளையும்  உணவாக கொள்கின்றன.

  இனப்பெருக்கம்.

  இவைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல் முதல் ஜூலை வரை. ஒரு சமயத்தில் சுமார் 15 முதல் 30 முட்டைகள் வரை இடுகின்றன. 48 நாளிலிருந்து 68 நாட்களுக்குள்ளாக அனைத்தும் பொரித்துவிடுகின்றன.

  முட்டையிலிருந்து வெளிவரும் குட்டிகள் 20 முதல் 30 சென்டி மீட்டர் நீளம்வரை இருக்கின்றன. இவைகள் பிறக்கும்போதே இதனுடைய விஷசுரப்பிகளும் முழு அளவில் தன் பணியை தொடங்கிவிடும். எனவே இவைகள் பிறக்கும்போதே விஷத்துடன்தான் பிறக்கின்றன. எனவே இவைகளாலும் நம்மை பிரீ விசாவில் பரலோகம் அனுப்பிவைக்க முடியும்.

  சாரைப்பாம்பும், நல்லபாம்பும் இணைந்து ''ஜல்சா'' செய்யும் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஏனென்றால் சாரைப்பாம்பு என்பது வேறு நல்ல பாம்பு என்பது வேறு. இரண்டிலும் ஆண் பெண் தனித்தனியாக உண்டு. எனவே இவை இரண்டும் இணைசேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

  விஷத்தன்மை.

  கொடிய விஷத்தன்மை கொண்டது. பிற அனைத்துவகை விஷ  பாம்புகளுக்கு இருப்பது போலவே இதுவும் தாடையின் மேற்பகுதியில் அதாவது தலைப்பகுதியில் இரண்டு நச்சு சுரப்பிகளை கொண்டுள்ளன. அவைகள் தாடையிலுள்ள குழாய் வடிவிலான நச்சுப்பற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

  இதன் விஷம் நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிப்பதால் தசைகள் செயலிழப்பு, பக்கவாதம் ஏற்படுவதோடு உயிருக்கும் பேராபத்தை  ஏற்படுத்தலாம். மேலும் இதன் விஷத்தினால் உடலில் வீக்கம், கொப்பளங்கள் ஏற்படுவதுடன் மூச்சு திணறலையும் ஏற்படுத்துகிறது.

  இங்கு ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாம்பின் விஷம் என்பது ஒரே ஒரு தனிப்பட்ட பொருளினால் ஆனது அல்ல. மாறாக நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களாலான நொதிகள் மற்றும் செறிவு நிறைந்த பலவகை புரதங்களின் தொகுப்பு. அதாவது கலவை.

  ஒவ்வொருவகை பாம்பிலுள்ள விஷங்களிலும் புரதங்களின் வகைகளும், கலவைகளின் மூலக்கூறுகளும் வேறுபடுகின்றன. ஆகவே ஒரு குறிப்பிட்ட வகை பாம்பின் விஷத்திற்கு கொடுக்கப்படும் விஷ எதிர்ப்பு மருந்தானது மற்றொரு வகை பாம்பின் விஷத்திற்கு பலனளிப்பதில்லை. எனவேதான் இன்றுவரை பாம்புகளின் விஷமானது மனித ஆளுமையால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத பல சிக்கல்கள் நிறைந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 

  இதிலுள்ள "நியூரோடாக்சின்கள்" (Neurotoxins) சுவாச மண்டலத்தை பாதிப்பதுடன் நரம்புகளை முடக்கி தசைகளை செயலிழக்க வைக்கும், இதன் விஷத்தில் உள்ள "ஹைலூரோனிடேஸ்" (hyaluronidase) என்னும் நொதிகள் விஷத்தை உடலில் வேகமாக பரவ செய்வதோடு உடலிலுள்ள திசுக்களையும் வேகமாக சிதைக்கிறது.

  மேலும் இதன் விஷத்திலுள்ள "சைட்டோடாக்ஸிக்" (Cytotoxic compounds) என்னும் பொருள் உடலிலுள்ள செல்களை படிப்படியாக அழிக்கும் தன்மையுடையது. இதிலுள்ள "மயோடாக்ஸிக்" கலவையானது (Myotoxic compounds) தசைகளை கடுமையாக பாதிக்கும் தன்மையுடையது.

  மேலும் இதிலுள்ள "கார்டியோடாக்ஸிக்" (அ) "ஹீமோடாக்ஸிக்" புரதமானது (cardiotoxic (or) hemotoxic proteins)  இரத்த உறைதலை தடுத்து நிறுத்தும் தன்மையுடையது. இது உடலில் அதிக அளவு இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

  பாம்பு கடியினால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை நல்லபாம்பின் கடியினாலேயே ஏற்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஒருவரை தீண்டினால் 1 மணி நேரத்திற்குள் சிகிக்சை எடுக்கவேண்டும். சிகிச்சை எடுக்க தாமதித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

  மேலும் இதில் சிலவகை பாம்பானது ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள  எதிரியின் கண்களை குறி பார்த்து விஷத்தை பீச்சியடிக்கும் திறனையும் பெற்றுள்ளன. 

  உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இந்த பாம்பு விஷங்களில்கூட சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் மற்றும் சில வலி நிவாரண மருந்துகள் தயாரிக்க நல்லபாம்பின் விஷம் பயன்படுகிறது.

  முதலுதவி சிகிச்சைகள்.

  நல்லபாம்பு கடித்தால் கடிவாய்க்கும் மேல்பகுதியில் மென்மையான பேண்டேஜ் கொண்டு கட்டுபோடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் இரத்த ஓட்டம் முழுமையாக தடைபடும் அளவிற்கு இறுக்கமாக கட்டவே கூடாது.

  ஏனெனில், விஷம் வேறு எங்கும் செல்லமுடியாமல் அதே இடத்தில்  தங்குவதால் விஷத்தினால் சம்பந்தப்பட்ட உறுப்பு அதிக அளவில் பாதிக்கப்பட அதன்பின் அந்த உறுப்பையே உடம்பிலிருந்து அகற்றவேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே கவனம் தேவை.

  Naja naja.

  இந்த இந்திய நாகத்தில் கூட மேலும் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை ... 

  1. ஒற்றை சக்கர நாகம் (Monocled cobra).
  2. ஆசிய நாகம் (Central asian cobra).
  3. அந்தமான் நாகம் (Andaman Cobra).

  இந்த மூன்றுவகை நாகங்களுமே வடிவத்திலும், குணத்திலும் சிறிது வித்தியாசப்படுகின்றன. எனவே அதைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

  ஒற்றை சக்கர நாகம்.

  இது வட இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றன. இலங்கையிலும் பரவலாக காணப்படுகின்றன. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரும் தன்மையுடையது. இந்தியாவிலுள்ள நான்குவகை நாகத்திலும் இவர்தான் அதிக கோபக்காரர். கோபம் வந்தால் அவ்வளவுதான் அவருடைய பேச்சை அவரே கேட்க மாட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அப்படி ஒரு கோபம். அவருக்கு எதிரில் நிற்பது நீங்கள் என்றால் சந்தேகமே வேண்டாம் அவருக்கான அன்றைய 'கொத்துப்பரோட்டா' நீங்களாகத்தான்  இருக்கும்.

  இது தீண்டிய இடத்தில் கடுமையான வீக்கம் மற்றும் கொப்பளங்கள் ஏற்படும். இதன் விஷம் நரம்புமண்டலத்தை கடுமையாக பாதிக்கும். இது பக்கவாதத்தை ஏற்படுத்துவதோடு உயிருக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.

  இது படம் எடுக்கும்போது தலையின் பின்புறம் பார்த்தீர்கள் என்றால் "O" வடிவ சக்கர அடையாளத்தை காணலாம். இந்த அடையாளம் நமக்கு உணர்த்துவது யாதெனில் யாராவது என்னிடம் மோதினால் அதன்பின்  உங்கள் வாழ்க்கையே "ஜீரோ"தான் என்று உணர்த்துவதாகவேபடுகிறது.

  இது இரவு நேரத்தில் மட்டுமே இரைதேடுகிறது என்பது மட்டுமே இப்போதைக்கு நமக்கு கொஞ்சம் ஆறுதலளிக்கும் விஷயமாக இருக்கிறது.  

  அம்மாடி.. இனிமேல் ராவு நேரத்துல எவன் வந்து கூப்பிட்டாலும் வெளியே போகவே கூடாதுடா சாமி.

  ஆசிய நாகம்.

  இது இந்தியாவில் இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரில் மட்டுமே காணப்படுகின்றன. இது சராசரியாக 4 அடி நீளம் வரை வளரும். வெளிர் பழுப்பு நிற உடலமைப்பு கொண்டது. மிக வேகமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கொத்தும் திறன் வாய்ந்தது.

  இதனுடைய நஞ்சு நரம்புமண்டலத்தை பாதிக்கும் தன்மையுடையது. இது தீண்டிய இடத்தில் வீக்கம், கொப்பளங்கள் ஏற்படும். உயிருக்கும் பேராபத்தை ஏற்படுத்தலாம்.

  இது படம் எடுத்து சீறும்போது தலையின் பின்பக்கம் பார்த்தீர்களென்றால் மற்ற இந்திய நாகங்களில் இருப்பதுபோல U வடிவ அடையாளமோ O வடிவ அடையாளமோ காணப்படுவதில்லை.

  அந்தமான் நாகம்.

  அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படுவதால் இதற்கு "அந்தமான் நாகம்" என்று பெயர். ஒற்றை சக்கர நாகத்திற்கு இருப்பதுபோல இதற்கும் "O" வடிவ சக்கர அடையாளம் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இதன் உடல்முழுக்க கருப்பு நிற வரிகள் காணப்படுகின்றன.

  இதன் விஷம் நரம்புமண்டலத்தை கடுமையாக பாதிப்படைய செய்யலாம். அதுமட்டுமல்லாமல் இது கடித்த இடத்தில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

  ஆடு பாம்பே விளையாடு பாம்பே.

  மகுடி இசை.

  பாம்புகளை வைத்து வித்தை காட்டும் பாம்பாட்டிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.

  இந்தியாவில் எத்தனையோ வகையான பாம்புகள் இருந்தாலும் இந்தியாவிலுள்ள பாம்பாட்டிகளின் முக்கிய தேர்வு "நல்லபாம்பு" மட்டும்தான். 

  இவர்கள் கையில் வைத்திருக்கு "மகுடி" என்னும் இசைக்கருவிக்கு மயங்காத பாம்புகளே இல்லையெனலாம். உண்மையிலேயே இசையால் கவரப்பட்டுத்தான் பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றனவா என்றால் சந்தேகம்தான்.

  ஏனென்றால் பாம்பிற்கு காதுகள் கிடையாது. அதாவது புறச்செவி, செவிப்பறை, செவித்துளை என எதுவுமே இல்லை. அப்படியென்றால் பாம்பிற்கு காது கேட்காதா என்றால் கேட்கும்.

  எப்படி என்கிறீர்களா?. 

  லதாமங்கேஷ்கரின் இனிமையான குரலை நாம் ரசிப்பதுபோல அதனால் ரசிக்கமுடியாது என்பது என்னவோ உண்மைதான்.

  ஆனால், இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் பாம்பிற்கு வெளிக்காது மற்றும் செவித்துளைகள்தான் கிடையாதேயொழிய "உள்காது" என்னும் ஒரு வித்தியாசமான விசேஷ அமைப்பு உள்ளது.

  எனவே, ஒலியலைகளால் பூமியின் தரைப்பகுதி தாக்கப்பட்டு அதிர்வுறும்போது அந்த மெல்லிய அதிர்வுகள் பாம்புகளின் உடல்களால் கிரகிக்கப்பட்டு பாம்பின் கபால எலும்புகளில் ஒன்றான ''குவாட்ரேட்'' மற்றும் அதை ஒட்டியுள்ள ''காலுமல்லா'' என்ற குருத்தெலும்பு பகுதிக்கு கடத்தப்படுகின்றன.

  இந்த குருத்தெலும்புப்பகுதி மிகவும் தொலைவில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட உணர்ந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது இசையை அது இனிமையாக உணராமல் அதன் உடல்வழியாக ஒரு எரிச்சலூட்டும் அதிர்வாகவே உணர்கிறது எனலாம்.

  குறிப்பிட்டு சொல்வதென்றால் 100 Hz முதல் 700Hz வரையுள்ள அதிர்வுகளை உணரும் திறன் பாம்புகளுக்கு உண்டு.

  magudi

  எனவேதான், பாம்பாட்டி மகுடியை வாயில்வைத்து ஊதுவதோடு அல்லாமல் அதனை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே இருப்பதை நீங்கள் காணலாம். இந்த அசைவு ஏற்கனவே அதிர்வு தந்த எரிச்சலில் காண்டாகி  இருக்கும் பாம்பை ஓரளவு நிதானமாக இருக்க செய்ய பாம்பாட்டி செய்யும் தந்திரம் எனலாம்.

  மகுடியின் அசைவை பாம்பாட்டி நிறுத்திவிட்டால்.. அடுத்த வினாடியே பாம்பால் பாம்பாட்டின் மொத்த உடலசைவும் நிறுத்திவைக்கப்படும்.

  ஜெய் ஜக்கம்மா !!!.

  நாகப்பாம்பு போன்ற ஆபத்தான பாம்புகளிடையே விஷமே இல்லாத அதேவேளையில்.. வித்தியாசமான நிறத்துடன் காட்சிதரும் பாம்பென்றால் அது "பச்சைப்பாம்பு"தான். இந்த பச்சை பாம்பைப்பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க்-ஐ கிளிக்குங்க.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. முழுவதும் படித்தேன். தெரிந்து கொண்டேன்.

   நன்றி. தொடரட்டும் பதிவுகளும் தகவல்களும்.

   பதிலளிநீக்கு
  2. நல்ல பாம்பு பற்றி நல்ல தகவல்கள் சகோ. சென்னைல இருந்தப்ப கிண்டி பார்க் பக்கத்தில்தான் வீடு அங்கு பாம்புகள் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அதே போல முதலைப்பூங்காவுக்கும் போயிருக்கோம் நிறைய அங்கு பாம்பின் விஷம் எடுப்பதையும் பார்த்திருக்கிறோம்.

   உங்கள் கீரை பதிவுகளையும் பார்த்தேன் சகோ.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி சகோதரி !!! .. பதிவுகளை படித்ததோடு கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி !!! ...

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.