"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கொடிப்பசலை - Malabar Spinach.

கொடிப்பசலை - Malabar Spinach.

கொடிப்பசலை.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற முதுமொழிக்கேற்ப ஆரோக்கியமான வாழ்க்கைவாழ வேண்டுமெனில் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம்.

  "சீரை தேடின் கீரை தேடு" என்பர். இங்கு சீர் என்றால் சிறப்பு என்று பொருள். நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் என விரும்பினால் நல்ல தரமான  கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது நீதி.

  எனவே உணவின் அத்தியாவசிய தேவையான கீரைகளை பற்றி அவ்வப்போது விரிவாக பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் அதிகம் நன்மை பொருந்திய பசலைக்கீரையைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

  பசலை கீரை வகைகள்.

  இதனை "பசலை கீரை" என்றும் "வசலை கீரை" என்றும் இருவிதமாக குறிப்பிடுவதுண்டு. பசலைக்கீரையில் பல இனங்கள் உள்ளன. அவையாவன.

  • கொடிப்பசலை
  • தரைப்பசலை (Small leaf Purslane)
  • சிறுபசலை
  • செடி பசலை(குத்துப்பசலி)
  • பெரும்பசலை
  • கொத்துப்பசலை
  • ஆற்றுப்பசலை
  • கரும்பசலை
  • செம்பசலை
  • வெள்ளைப்பசலை
  • பேய்ப்பசலை
  • நற்பசலை
  • வருக்கப்பசலை
  • கசப்புபசலை
  என இதில் பல வகை இனங்கள் உள்ளன.

  இவைகளில் கொடிப்பசலை, தரைப்பசலை, சிறுபசலை, செடி பசலை ஆகிய நான்கு இனங்கள் மட்டுமே மருத்துவத்திற்காகவும், சமையலுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நான்கு இனங்களிலுமே சத்துக்கள் ஏறத்தாழ ஒரேமாதிரியாகவே உள்ளன.

  Malabar Spinach.

  பசலைக்கீரை பொதுவாக படரும் கொடிவகையை சேர்ந்தது. இதன் இலைகள் நீர்பற்றுடன் தடித்திருக்கும். இது துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ணப்படுகிறது. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.

  பசலை கீரையில் பலவகைகள் இருந்தாலும் அதில் ஒரு இனமான கொடிப்பசலையைபற்றி மட்டும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

  கொடிப்பசலை என்னும் பசளை கீரை.

  கொடிப்பசலையானது உண்மையில் கீரை வகையினை சார்ந்தது இல்லையென்றும், இது ஒருகொடிவகையை சார்ந்த தாவரம் என்றும் அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். என்றாலும், இதை உணவாக பயன்படுத்தும் பட்சத்தில் இது உடலுக்கு தீங்கு எதுவும் செய்யாமல் நன்மைகள் மட்டுமே செய்வதால் இதை கீரைகளைப்போல உணவாக பயன்படுத்துவதில் தடையேதும் இல்லை.

  கொடிப்பசலையின் தன்மைகளை பற்றி நம் சித்தர்கள் என்ன சொல்லியுள்ளனர் என்பதனை அவர்களின் செய்யுளின் வழியாகவே பார்ப்போம்.

  சித்தர் பாடல்.

  "போகம் மிகக் கொடுக்கும்
  போர்செய் கபம் பெருக்கும்
  ஆகமதிற் றாகமன லைத்தணிக்கும்
  மாகுடரின் மன்னு மலமிளக்கும்
  மாறா வுரிசை தருந்
  தின்னுங் கொடிவசலை செப்பு".

  செய்யுளின் பொருள் :- 

  போகம் மிகக் கொடுக்கும் - ஆண்மை தன்மையை பெருக்கும்.

  போர்செய் கபம் பெருக்கும் - கபத்தையும் அதிகப்படுத்தும்.

  அதி தாகம் அனலை தணிக்கும் - அதிக தாகத்தையும், வெப்பத்தையும் தணிக்கும்.

  மா குடலின் மன்னும் மலமிளக்கும் - பெருங்குடலில் சிக்குண்டு தவிக்கும் மலத்தை வெளியேற்றும்.

  மாறாத ருசியை தரும் - சுவையின்மையை போக்கும்.

  தின்னும் கொடிவசலை செப்பு - கொடிபசலை சாப்பிடுவதால் ஏற்படும் பலன் இதுவாகும்.

  கொடிப்பசலை.

  பெயர் :- கொடிப்பசலை.

  வேறு பெயர்கள்.

  • கொடிபசலி
  • கொடிவசலி
  • கொடி பசரை
  • கொடிவசலை
  • கொடியலை
  • கொடி வயலை
  • கொடி பயலை
  • கொடிலை
  • பசளை
  • பசலி

  பொதுவான பெயர் :- Spinach - ceylon.

  ஆங்கிலப் பெயர் :- Indian spinach, Ceylon spinach, Malabar spinach.

  சிவப்புத்தண்டு பசலையின் தாவரவியல் பெயர் :- Basella rubra.

  பச்சைத்தண்டு பசலையின் தாவரவியல் பெயர் :- Basella alba.

  தொகுதி (அ) பிரிவு :- Magnoliophyta.

  தாவர வகை :- Magnoliopsida. [கொடிவகை தாவரம்].

  வரிசை :- Caryophyllales.

  குடும்பம் :- Basellaceae.

  பேரினம் :- Basella.

  இனங்கள் :- "rubraமற்றும் "alba".

  தாயகம்.

  இது முதலில் எங்கு தோன்றியிருக்கும் என்று துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றாலும் அநேகமாக இது "இந்தியா" அல்லது  "இந்தோனேஷியா" பகுதிகளில் முதன்முதலாக தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்தும்  நிலவுகிறது.

  வாழிடம்.

  நீர்வளம் மிகுந்த இடங்களில் செழித்து வளர்கின்றன. மேலும் இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பரவலாக காணப்படுகின்றன.

  பயிராகும் நாடுகள்.

  சீனா, ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா, இலங்கை, பெலிஸ், கொலம்பியா, பிஜி, பிரஞ்சு மற்றும் மேற்கிந்திய தீவுகள்.

  வகைகள்.

  கொடிப்பசலையில் சிவப்பு மற்றும் பச்சை என இருவகைகள் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் சிவப்பு கொடிப்பசலையின் தண்டுகள் ஊதா கலந்த சிவப்பு நிறத்திலும், பூக்கள் மெல்லிய இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். ஆனால் பச்சை  கொடிப்பசலையின் தண்டுகளோ பச்சை நிறத்திலும், பூக்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். ஆனால் இரண்டு வகை தாவரங்களின் பழங்களும் அடர் நீல நிறத்திலேயே இருக்கும்.

  Basella rubra_Basella alba

  இனப்பெருக்கம்.

  விதைகள் மற்றும் தண்டுகள்மூலம் இனவிருத்தி செய்கின்றன.

  தன்மை.

  கொடிப்பசலையானது 30 முதல் 60 அடி அளவில் நீளமாக கொடிவீசி பல பக்கக்கிளைகளுடன் விரைவாக வளரும் கொடி இனம். தண்டுகள் நீலம் கலந்த சிவப்புநிறத்தில் (ஊதா நிறம்) மென்மையாக ஒடியும் தன்மையில் அமைந்துள்ளன. ஆனால் பச்சை கொடிப்பசலையானது பச்சைநிற தண்டுகளை கொண்டுள்ளன.

  இதன் இலைகள் சிறிய வெற்றிலைபோன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. இலைகாம்பின் தண்டு கணுவிலிருந்து பிரியும் நீளமான பூக்காம்பில் சிறிய அளவில் வரிசையாக பூக்கள் மலர்கின்றன.

  சிவப்பு கொடிப்பசலை வெளிறிய இளஞ்சிவப்புநிற பூக்களையும், பச்சை கொடிப்பசலையானது வெள்ளைநிறமான பூக்களையும் பூக்கின்றன. பூக்கள் பெரும்பாலும் சுயமகரந்த சேர்க்கை கொண்டவையாக உள்ளன. 

  பூக்களிலிருந்து பட்டாணி அளவில் காய்கள் உருவாகின்றன. காய்கள் சுமார் ஒருமாத காலஅளவில் பழுக்க ஆரம்பிக்கின்றன. இவைகள் பழுத்தால் கருநீல நிறத்தை அடைகின்றன.

  பழம் கூழ் போன்ற சிவப்பு நிற திரவத்தை கொண்டுள்ளது. இந்த திரவம் உணவுப்பொருள்களுக்கு நிறமூட்ட இயற்கை நிறமியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவம் சூடாக்கப்படும்போது பெரும்பான்மை நிறத்தை இழந்துவிடும் என்பதால் ஆறிய பால், குளிர்பானங்கள், கேக்குகள் மற்றும் பல்வேறு ஆறிய  உணவுப்பொருட்களுக்கு இயற்கை நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.

  இந்த பழங்களை பறவைகள் விரும்பி சாப்பிடுவதுமுண்டு. பழங்களின் உள்ளே மிளகு அளவில் ஒரேயொரு கருப்பு நிற விதைகளை கொண்டுள்ளது.

  பயன்பாடு.

  இதன் இலைகளும் தண்டுகளும் மருந்துப்பொருள்களாகவும், உணவுப் பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அழகுசாதனங்களில் தோல்களில் ஏற்படும் அலர்ஜியை கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு சேர்க்கப்படுகிறது.

  இதன் தண்டுகள் இளஞ்சிவப்பு நிறம் மற்றும் ஊதா நிறத்தில் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் வீடுகளில் அழகுசெடியாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. பலவீடுகளில் வளர்க்கப்படும் பயனில்லாத "மணி-பிளாண்ட்" என்னும் செடிகளுக்கு பதிலாக பிணி தீர்க்கும் இந்த கொடிப்பசலையை "பிணி-பிளாண்ட்"டாக வளர்த்து வந்தால் பல விதங்களிலும் சிறப்பை பெற்று தரும்.

  பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு இது பசுந்தாள் தீவனமாக கொடுக்கப்படுகிறது.

  பயிரிடும் முறை.

  இதனை விதையின் மூலமாக பயிரிடலாம். விதைகள் 2 அல்லது 3 வாரங்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். விதைகளை நடுவதற்கு முன்னால் ஒரு இரவுமுழுவதும் குளிர்ச்சி இல்லாத வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அதன்பின் எடுத்துநடவும். இது முளைப்புத்திறனை அதிகரிக்கும். 

  இதனை தண்டுகளை ஒடித்து நட்டுவைப்பதின் மூலமாகவும் பயிரிடலாம். தண்டுகளை ஒடித்து நட்டுவைக்கும் பட்சத்தில் அது நிலத்தில் வேர்விட்டு துளிர்விடும்வரை வெயில் படாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். தண்டுகள்மூலம் பயிரிடுவதைவிட விதைகள்மூலம் பயிர்செய்வதே பலவிதங்களிலும் சிறப்பு. 

  நடவு செய்யும்போது ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையே 1 அடி இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சூரிய வெளிச்சத்தில்தான் இவைகள் செழித்து வளரும். சூரிய வெளிச்சம் இல்லாமல் முழுவதுமாக  நிழலில் வளர்க்கப்படும் தாவரங்கள் அதிக மகசூலை தருவதில்லை. 

  இந்த கொடிப்பசலையானது அனைத்து வகையான மண்களிலும், அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. களிமண் நிலங்களில் செழித்துவளரும்.

  இதற்கு இரசாயனஉரம் எதுவும் தேவையில்லை. மணலுடன் நன்கு மக்கிய பசுஞ்சாணம் கலந்து மேலுரமாக இட்டாலே போதுமானது. இதனுடன் நைட்ரஜன் செறிந்த உரங்களை இடுவது மேலும் செழிப்பான வளர்ச்சிக்கு  வழிவகுக்கும். மண்புழு உரமும் பயனளிக்கும். 

  இதற்கு போதிய சூரியஒளி தேவை. சூரியஒளி கிடைக்காதபட்சத்தில் இதன் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.

  இது கொடிவீசி படரும் தன்மையுடையதாதலால் குச்சிகளால் பந்தல் போன்ற அமைப்பையோ அல்லது படருவதற்கு வேறுவிதமான அமைப்பையோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். 

  இதனை கிடைமட்டமாகவே  படரவிடுங்கள். ஏனெனில் உயரமான மரங்களில் படரவிட்டால் இலைகளை அறுவடை செய்வதில் பல சிரமங்கள்  ஏற்படும்.

  இது 1 வருடகாலம் மட்டுமே சிறப்பாக பலன்தரும் பயிராகும். எனவே வருடாவருடம் புதிய இளம்கன்றுகளை பயிரிடுவது அவசியம்.

  இக்கீரை அதிகம் நோய்தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை என்றாலும் சிலநேரங்களில் புழு பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதால் அதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும். 

  இதன் இலைகளை நாம் உணவாக பயன்படுத்துவதால் கண்டிப்பாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் கூடாது. இயற்கையான முறையிலேயே இதற்கு தீர்வு காணுதல் வேண்டும். 

  கொடிப்பசலை பெரும்பாலும் நூற்புழுக்களாலும், இலைப்புள்ளி நோய்களாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கவலைகொள்ள வேண்டாம் இதனை இயற்கை முறையிலேயே எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும்.

  இதற்கு பாதுகாப்பான ஒரே தீர்வு இயற்கை பூச்சி விரட்டியான   "வேப்பம்பிண்ணாக்கு நீர் கரைசல்".

  போதிய அளவு வேப்பம்பிண்ணாக்கை எடுத்து நீர்விட்டு கரைத்து சிறிது நேரம் வைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி எடுத்த நீரை பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை தாவரத்தின் தண்டு மற்றும் இலைகள் மீது தெளித்துவர பூச்சிகளின் தாக்குதலிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.

  அறுவடை.

  நடவுசெய்த 7 அல்லது 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன. செழிப்பாக வளரும் செடிகளில் சுமார் 1 கிலோவிற்கும் அதிகமாக இலைகளை அறுவடை செய்யமுடியும். கத்தரிக்கோலால் மட்டுமே இலைக்காம்புகளை கத்தரித்து எடுத்தல் வேண்டும். இலைகளில் நீர்சத்து அதிகம் இருப்பதால் இலைகள் விரைவாக வாடிப்போவதில்லை. சிலநாட்கள்வரை பசுமையாகவே இருக்கும். 

  இந்த செடியில் பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டால் இதன் இலைகள் சுவையை இழந்து கசப்புத்தன்மையை பெறுகின்றன. எனவே இது பூக்கும்வரை காத்திருக்காமல் அதற்குமுன்பாகவே இலைகளை சமையலுக்கு பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அடிக்கடி இலைகளை அறுவடை செய்துவந்தால் பூக்கும் கால அளவை தள்ளிப்போடலாம். 

  நீர்வளம் குறைந்தாலும் விரைவில் பூக்க ஆரம்பித்துவிடும். எனவே சுவையான இலைகள் வேண்டுமெனில் நீர்வளம் குறையாமல்  பார்த்துக்கொள்ளவும். ஆரம்பத்திலேயே பூக்களை கிள்ளியெடுக்கும் முயற்சியையும் மேற்கொள்ளலாம்.

  malabar spinach rubra_alba

  கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள்.

  (100 கிராம் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரம்).

  Tamil English Amount of Nutrients
  கலோரி Calories 73 KJ (19 kcal)
  கொழுப்பு Fat 0.3 g
  புரதம் Protein 1.8 g
  மாவுச்சத்து Carbohydrate 3.14 g
  நார் சத்து Fiber 2.1 g
  இரும்பு Iron 1.2mg
  துத்தநாகம் zinc 0.43mg
  வைட்டமின் A Vitamin A 400㎍
  தையமின்(B1) Thiamine 0.05 mg
  ரிபோஃபிளேவின் (B2) Riboflavin 0.155mg
  நியாசின் (B3) Niacin 0.5mg
  வைட்டமின் (B5) Pantothenic acid (B5) 0.141mg
  வைட்டமின் B6 Vitamin B6 0.24mg
  போலிக் அமிலம் (B9) Folic acid - B9 140㎍
  வைட்டமின் C Vitamin C 102mg
  சுண்ணாம்பு Calcium 109mg
  சோடியம் Sodium 113mg
  பாஸ்பரஸ் Phosphorus 52mg
  மெக்னீசியம் Magnesium 65mg
  மாங்கனீஸ் Manganese 0.735mg
  பொட்டாசியம் Potassium 510mg


  பயன்கள்.

  இது பிறவகை கீரைகளைப்போல அத்துணை சுவைபொருந்தியது இல்லையென்றாலும் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

  குறைந்த கலோரிகளுடன் நிறைத்த சத்துக்களை கொண்டுள்ளதால் "ஸ்லிம்'மாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு  வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 

  இது சிறிது கசப்பு சுவையுடன் இருக்குமாதலால் பிற கீரைகளுடனோ அல்லது பிறவகை உணவுகளுடன் கலந்து சமைத்தோ பயன்படுத்தலாம்.  இதனை உணவுடன் கூட்டாகவோ, பருப்பு சேர்த்து கடைந்தோ அல்லது பொரியலாகவோ சாப்பிடலாம். சூப்பாகவும் பயன்படுத்தலாம். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துவரலாம்.

  இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துவர இரத்தசோகையை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும், நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு நீங்குவதோடு சிறுநீரக கோளாறுகளையும் நீக்கும். உடல்சூட்டை தணிப்பதோடு உடலுக்கு அதிக அளவு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது. மலசிக்கலையும் நீக்கும்

  இதில் பலவகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உடல் வறட்சியை நீக்குவதுடன் உங்கள் உடலிலுள்ள செல்கள் விரைவில் முதுமையடைவதை தடுக்கும். இதிலுள்ள "பீட்டா கரோட்டின்" மற்றும் "லுடீன்" உங்கள் செல்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

  பெண்களுக்கு பலவிதங்களிலும் நன்மை தரக்கூடியது. வெள்ளை, வெட்டையை நீக்கும், மாதவிலக்கு குறைபாடுகளையும் சரிசெய்யும்.

  குழந்தைகளுக்கும், கர்பிணிப்பெண்களுக்கும் ஏற்படும் மலச்சிக்கலை எளிமையான முறையில் தீர்க்க பன்னெடுங்காலம் நம் பாரம்பரிய மருத்துவத்தில் இக்கீரையையே பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே இது  குழந்தைகளுக்கும் கர்பிணி பெண்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு. 

  மேலும் இது குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் தலைசிறந்ததாக கருதப்படுகிறது. இதன் இலைச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவர நீர்க்கோர்வை குணமாகும்.

  இந்த கொடிப்பசலையை உணவில் தொடர்ந்து பயன்படுத்திவர பித்தம், மேகம், தோல்நோய்கள் குணமாவதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுத்து நிறுத்துகிறது.

  பசியின்மை, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சீதபேதி முதலியவைகளை நீக்குவதோடு கல்லீரலையும் வளப்படுத்துகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்குவதோடு கண்சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராமலும்  பாதுகாக்கிறது.

  மேலும் இது சிறுநீரை பெருக்கும், பித்தவாந்தியை தடுக்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தாகம் மற்றும் உடல் வெப்பதையும் தணிக்கும்.

  வேனல் கட்டிகள், வேர்க்குரு, அக்கி முதலிய வெப்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலைச்சாற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்த நல்ல பலன் கிட்டும். கொடிப்பசலை இலையில் விளக்கெண்ணெய் தடவி அனலில் வாட்டி கட்டிகள் மீது வைத்து கட்ட கட்டிகள் விரைவில் உடையும்.

  அரைத்து கூழாக்கப்பட்ட இதன் வேர்கள் வீக்கங்களை குறைக்க மேற்பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

  இந்த கீரையை உணவில் பயன்படுத்திவருவதால் போக இச்சையை அதிகப்படுத்துகிறது, பாலுணர்வை தூண்டி தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு ஏற்பட செய்கிறது. மேலும் உடல் விரைவாக முதிர்ச்சி அடைவதை தடுத்து நிறுத்துகிறது.

  குறிப்பு.

  இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது என்பதாலும், கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதாலும் சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இக்கீரையை அடிக்கடி தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

  மேலும் கிட்னி சம்பந்தமான பிரச்னைகளுக்காகவோ அல்லது, இரத்தம் உறைதல் பிரச்னைகளுக்காகவோ தொடர்ந்து ஆங்கில மருந்துகளை தினந்தோறும் எடுத்துக்கொண்டிருப்பவர்கள் இந்த கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தவிர மற்றபடி உடலுக்கு தீங்குவிளைவிக்கும் எந்த அம்சமும் இதில் இருப்பதாக தெரியவில்லை.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. விளக்கங்கள் அபாரம்... எனக்கு மிகவும் பிடித்த கீரை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுக்கு மிகவும் பிடித்தமான கீரை என்பதனை அறிந்து எனக்கும் மிகவும் மகிழ்ச்சி நண்பரே !!!

    நீக்கு
  2. எத்தனை எத்தனை தகவல்கள். பசலைக் கீரை சாப்பிட்டதில்லை. அடுத்த முறை ஊருக்கு வரும்போது கிடைக்கிறதா பார்க்க வேண்டும்.

   தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சிவா.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுடைய கருத்து மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது நண்பரே !! நன்றி !!!

    நீக்கு
  3. Good information....thanks for that....where can i get this seed to grow in my garden

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டுரைக்கு நன்றி நண்பரே !! இதன் விதைகளை அரசு விதைப் பண்ணைகளிலும், வேளாண்மைத் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் அல்லது பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தரமான விதைகளை வாங்கலாம்.. நன்றி!!

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.