"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா சாகுபடி - Heliconia - Cultivation and Crop protection.

ஹெலிகோனியா சாகுபடி - Heliconia - Cultivation and Crop protection.

ஹெலிகோனியா.

Heliconia.

          "ஹெலிகோனியம்" என்பது மத்திய அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட பூக்கும் தாவர இனம். இந்த ஹெலிகோனிய வகை தாவர இனங்களில் சுமார் 200 வகையான தாவரங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு வகைகளுமே வெவ்வேறு வகையான மலர்களை மலரச்செய்பவை.

Heliconia.
Heliconia - Cultivation and crop protection.

  அதிகம் மழைபொழியும் வெப்பமண்டல பிரதேசங்களில் செழித்து வளரும் தன்மைகொண்ட இது தன்னுடைய அழகிய மலர்களால் அனைவரையுமே கட்டிப்போடும் தன்மை வாய்ந்தது.

  தற்காலங்களில் இது உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வீடுகளில் அழகுச்செடிகளாக  வளர்க்கப்படுகிறது.

  இதன் மலர்களை தாவரங்களிலிருந்து தனியாக பிரித்துதெடுத்த  பின்பும்கூட ஓரிரு வாரங்கள்வரை வாடாமல் இருக்கும் தன்மை கொண்டவை. அதுமட்டுமல்லாமல் விதவிதமான தன்னுடைய கவர்ச்சியான மலர்களால் தான் இருக்கும் இடத்தை மெருகூட்டுபவை.

  இவ்விரு தன்மைகளும் இதற்கு இருப்பதாலேயே இதனுடைய மலர்களை "கொய் மலர்" என்னும் பிரிவில் சேர்த்துள்ளனர்.

  கொய்மலர் என்பது திருவிழா மேடைகள், வரவேற்பு நிகழ்ச்சிகள்,   பண்டிகைக்கால வைபவங்கள் மற்றும் திருமண அலங்கார மேடைகள் முதலியவைகளை அழகுபடுத்த பயன்படுத்தப்படும் பலவகையான அலங்காரமலர்களைக் குறிப்பவை.

  மேடை அலங்காரத்திற்காக மட்டுமல்ல வீடுகள், பூங்கா மற்றும் அலுவலக முகப்புகளில் அழகுதரும் செடிகளாகவும் இது வளர்க்கப்பட்டு வருகிறது.

  ஹெலிகோனியா மலர்கள் தற்காலங்களில் மேடை அலங்காரத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் இது அதிக விலையுள்ள பொருளாகவும் பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகளால் இது பணப்பயிராக விவசாய நிலங்களில் பயிர்செய்யப்பட்டு வருகிறது.

  இந்த ஹெலிகோனியத்தை பற்றிய பல அடிப்படை விஷயங்களை ஏற்கனவே நாம் "ஹெலிகோனியம் அறிமுகம்" என்னும் பதிவில் விரிவாகவே பார்த்துள்ளோம். இதுவரை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

  >> ஹெலிகோனியம் அறிமுகம் - Heliconia Introduction <<

  இந்த பதிவில் ஹெலிகோனிய தாவரத்தை விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் முறை பற்றியும். அதனை முறையாக பராமரிக்கும் விதத்தைப் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

  ஹெலிகோனியா பொதுவான தகவல்கள்.

  ஹெலிகோனியம் அதன் ஒவ்வொரு வகைதனைப் பொறுத்து அதிகப்படியாக 2 அடி உயரத்திலிருந்து 15 அடி உயரம் வரை அல்லது அதற்கு மேலும் வளரும் இயல்புடையது.

  நிலங்களில் நடவு செய்த 8 வது மாதம் முதல் 2 ஆண்டிற்குள்ளாக பூக்க ஆரம்பித்துவிடும். இது சூரிய வெளிச்சத்தை அதிகம் விரும்பும் தாவரமாகையால் போதிய அளவு வெளிச்சமான இடங்களில் பயிரிடவேண்டியது மிக அவசியம்.

  சூரிய வெளிச்சமே இல்லாத அதிக அளவு நிழல் உள்ள இடங்களில் பயிர் செய்தால் இது பூப்பதில்லை. காரணம் தாவரத்திற்கு தேவையான உணவினை தயாரிக்க இதன் இலைகளுக்கு அதிக அளவு சூரிய வெளிச்சம்  தேவைப்படுவதால் நிழலில் வளர்க்கப்படும் தாவரங்கள் சூரிய ஒளியை பெறும்பொருட்டு அதிக அளவில் இலைகளை உற்பத்தி செய்வதிலேயே காலத்தை செலவிடுமேயொழிய பூக்களை உற்பத்தி பண்ணுவதில்லை.

  இதற்கு சூரிய வெளிச்சம்தான் தேவையேயொழிய சூரிய வெப்பம் தேவையில்லை. எனவே அதிகப்படியான சூரிய வெப்பம் நேரடியாக இதனை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். எனவே தரமான பூக்கள் சீக்கிரமாகவே உங்களுக்கு கிடைக்கவேண்டுமெனில் அதற்கு தேவைப்படும் அளவு சூரியவெளிச்சம் கிடைக்கும்படி செய்யுங்கள். இது பொதுவாக அனைத்து தாவரங்களுக்கும் பொருந்தும்.

  இந்த ஹெலிகோனியாவிற்கு போதிய அளவு சூரிய வெளிச்சம் இருப்பதோடு சுறுப்புற வெப்பநிலை 22 முதல் 26 டிகிரி அளவிலும் இருக்க வேண்டியது அவசியம். குளிர் நிலவும் காலங்களில் கூட 18 டிகிரி அளவாவது வெப்பம் இருக்கவேண்டியது அவசியம். அதற்கும் குறைந்தால் மகசூல் பாதிக்கப்படும்.

  அதுமட்டுமல்லாது, இந்த தாவரங்களுக்கு போதுமான அளவில் காற்றோட்டமான சூழ்நிலை இருக்கவேண்டியதும் அவசியம். விவசாய நிலங்களில் இதனை பயிரிடும்போது மழைக்காலங்களில் பயிரிடுவதே சிறப்பு.

  வீடு மற்றும் மாடி தோட்ட பராமரிப்பு.

  நீங்கள் இதை அழகுக்காக பூந்தொட்டிகளில் வளர்க்க விரும்பினால் அதற்கு ஏற்ற விதமாக குறைந்த உயரம் வளரும் ஹெலிகோனியக்களை தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக ஹெலிகோனியா சிட்டகோரம் (Heliconia psittacorum) ஹெலிகோனியா ஸ்ட்ரிக்டா (Heliconia stricta), ஹெலிகோனியா அங்கஸ்டா (Heliconia angusta) ஆகிய வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.

  இவைகள் அதிகப்படியாக 1 முதல் 6 அடிவரை வளரும் என்றாலும் பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும்போது அதிகப்படியாக இரண்டு அடி உயரம் மட்டுமே வளரக்கூடியவை.

  மேற்குறிப்பிட்ட வகைகளில் முதல்வகையான ஹெலிகோனியா சிட்டகோரம் (Heliconia psittacorum) ஆண்டுமுழுவதும் தொடர்ந்து தாராளமாக பூக்கக்கூடியவை.

  சாகுபடி & பயிர் பாதுகாப்பு.

  Cultivation and Crop protection.

  இந்த தாவரம் இருவழிகளில் தன் இனத்தைப் பெருக்குகின்றன. அதில் ஒன்று வேர்பகுதிகளில் கிளைக்கும் இளங்கன்றுகள் மூலமாகவும், மற்றொன்று விதைகள் மூலமாகவும் இனத்தை பெருக்குகின்றன. 

  இந்த பதிவில் இருமுறைகளையும் பயன்படுத்தி நடவு செய்யும் முறையை பார்ப்போம்.

  கன்றுகள்மூலம் நடவுமுறை.

  இது பொதுவாக தாய் செடியின் வேர்களிலிருந்து கிளைக்கும் கன்றுகளை தனியாகப் பிரித்தெடுத்து நடுவதின்மூலம் பயிர் செய்யப்படுகின்றன.

  கன்றுகள் மூலமாக நடுவதற்கு முன்னால் அந்த கன்றுகளை இரண்டு நாட்கள் நிழலில் உலரவிடுங்கள். அதன்பின் வேர்களை பூஞ்சைக்கொல்லி கரைசல்களில் நனைத்து அதன்பின் நடுங்கள். இதனால் நோய்த்தொற்றுகள்  பரவாமல் தடுக்கலாம்.

  தென்னை மற்றும் வாழைகளுக்கிடையில் ஊடுபயிராகவும் இதனை பயிரிடலாம். அல்லது தனிப்பயிராகக்கூட பயிரிடலாம்.

  இதனை நடும்போது இரு செடிகளுக்கிடையில் நான்கு அடி இடைவெளி விட்டு நடவும். 1 அடி ஆழம் மற்றும் அகலத்தில் குழி வெட்டி அதனுள் நன்கு மக்கிய தொழுஉரம், மக்கிய இலைதழைகள் அல்லது கோழி எரு போட்டு கன்றுகளை நடவு செய்யுங்கள்.

  ஊடுபயிராக இல்லாமல் தனிப்பயிராக நடவு செய்தால் 1 ஹெக்டேர் நிலத்தில் 600 முதல் 700 தாவரங்கள்வரை நடலாம். தரமான மலர்களை பெறவேண்டுமெனில் தரமான கன்றுகளை தேர்வுசெய்து நடவேண்டும். தவறினால் மகசூல் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகலாம்.

  விதைகள்மூலம் நடவுமுறை.

  பொதுவாகவே அனைத்து ஹெலிகோனிய இனங்களுமே ஊதா கலந்த நீல நிற பழங்களை உற்பத்தி செய்கின்றன. ஒவ்வொரு பழங்களினுள்ளும் 1 முதல் 3 விதைகள் உள்ளன. இந்த விதைகளை பயன்படுத்தியும் இதனை பயிர் செய்யலாம்.

  ஆனால் விதைகள் மூலமாக பயிர் செய்வதை யாரும் விரும்புவதில்லை. அதற்கு காரணமும் உண்டு. விதைகள் மிகவும் கடினமான ஓடுகளால் மூடப்பட்டுள்ளதால் தாவரங்களின் வகைதனை பொறுத்து விதைகள் முளைக்க 1 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை எடுத்துக்கொள்கின்றன. அதுவரை காத்திருக்கும் பொறுமை பெரும்பாலும் யாருக்கும் இருப்பதில்லை என்பதால் கன்றுகளின்மூலமாக நடவு செய்வதே தற்போது அனைவராலும் விரும்பப்படுகிறது.

  மேலும் விதைகள்மூலம் பயிர் செய்யும்போது அவைகள் வளர்ந்து மகசூல் தர அதிகப்படியாக 3 முதல் 4 வருடங்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் கன்றுகளின் மூலமாக பயிரிடும்போது அதன் வகைதனை பொறுத்து 8 வது மாதத்திலிருந்து 2 வருடங்களுக்கு உள்ளாகவே பூக்க ஆரம்பித்து விடுகின்றன.

  இதனை விதைகள் மூலம் நடவுசெய்ய வேண்டுமெனில் முதலில் விதைகளை மிதமான சுடுநீரில் குறிப்பாக 50 முதல் 60 டிகிரி வெப்பமுள்ள நீரில் ஊறவைக்க வேண்டும். நீரின் வெப்பம் குறையும்போது வேறு புதிய சூடான நீரை சேர்க்க வேண்டும்.

  இவ்வாறு 2 அல்லது 3 நாட்கள் ஊறவைத்தபின்பு எடுத்து நடவும். இப்படி செய்வதால் விதைகளின் கடுமையான ஓடுகள் மிருதுவாக்கப்பட்டு  விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கலாம். இந்த வழிமுறையை பின்பற்றினால் முளைக்க 1 வருடம் எடுத்துக்கொள்ளும் விதைகள்கூட நடவு செய்த நான்கு மாதங்களுக்கு உள்ளாக முளைவிட ஆரம்பித்துவிடுகின்றன.

  ஹெலிகோனியாக்கள் இந்தியாவில் ஆந்திராவில்தான் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. கர்நாடக, கேரளா மற்றும் தமிழகத்திலும் தற்போது பயிர் செய்யப்பட்டு வருகிறது.

  Heliconia - Cultivation

  பயிர் பராமரிப்பு.

  பொதுவாக ஹெலிகோனிய தாவரங்களுக்கு வடிகால் வசதி இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வேர்ப்பகுதியில் நீர் தேங்குதல் கூடாது. நீர் தேங்கினால் வேர் அழுகல் நோய் ஏற்படலாம்.

  மழை காலங்களில் வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சினால் போதுமானது. ஆனால் கடுமையான வெயில் உள்ள காலங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருதடவை நீர்பாய்ச்ச வேண்டும். நீர்வளம் குறைந்தால் நீர்சத்து குறைந்து இலைகள் சுருள ஆரம்பித்துவிடும்.

  இத்தாவரத்தின் தண்டுகளுக்கு காற்றோட்டம் மிகவும் அவசியமான ஒன்று. எனவே செடியிலுள்ள காய்ந்த இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். வேறு களைச்செடிகள் ஏதாவது வளராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

  இச்செடிக்கு சூரிய வெளிச்சமும் தேவை. அதிகப்படியான நிழல் இருந்தால் பூக்கள் பூப்பதில் தாமதம் ஏற்படுகின்றன.

  பொதுவாக மொட்டுகள் ஏற்பட்டு 15 முதல் 1 மாதத்தில் அறுவடை செய்யலாம்.

  நோய்களும் தீர்வுகளும்.

  இதனை அதிக அளவில் நோய்கள் எதுவும் பாதிப்பதில்லை என்றாலும் சிலந்தி பூச்சிகளால் பாதிப்பு ஏற்படலாம்.

  இலைகளில் பொட்டுப்பொட்டாக பூசனத்தால் ஏற்படும் பாதிப்பு தெரிந்தால் சோப்புக்கரைசல்களால் இலைகளை கழுவி சுத்தம்செய்ய வேண்டும்.

  இத்தாவரத்தை சில நேரங்களில் மாவு பூச்சி (Mealybug), செதில் பூச்சி (Scale insect), சிவப்பு எறும்பு (Fire Ant), அசுவினி (Aphid pest), சிலந்தி பூச்சி (Spider) ஆகிய பூச்சியினங்கள் தாக்கி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

  சிலநேரங்களில் எலிகளும் (Rat) இவற்றின் வேர்பகுதிகளை சேதப்படுத்துவதுண்டு. எலியிலிருந்து பயிர்களை பாதுகாக்க எலிப்பொறிகளையோ (Rat trap) அல்லது வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையோ பின்பற்றலாம்.

  மாவுப்பூச்சி.

  மாவுப்பூச்சி (Mealybug) உடல் மெழுகு போன்று வெண்மையான நிறத்தில் காணப்படும். மலர்களின் உட்புறத்தில் இது அதிக அளவில் காணப்படும். மலர்களின் இதழ்களிலுள்ள சாறுகளை உறியும். இதனால் மலர்கள் பொலிவிளக்கும்.

  இந்த பூச்சிகள் தேன்போன்ற சுவையுடைய ஒரு திரவத்தை வெளியேற்றும். இதனை சாப்பிட நிறைய எறும்புகள் இதனை நோக்கி படையெடுக்கும். இது தங்களுக்கு தேனை தருவதால் அதற்கு பிரதி உபகாரமாக எறும்புகள் இப்பூச்சிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன் ஓரிடத்திலிருந்து இதனை செடிகளின் பலப்பகுதிகளுக்கு பரப்பி இதன் இனம் பெருக ஒத்துழைப்பு கொடுக்கும். அந்த அளவிற்கு இவை இரண்டிற்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்.

  கட்டுப்படுத்தும் முறை :- எனவே, இந்த மாவுப்பூச்சிகளின் இனப்பெருக்கம் அழியவேண்டுமெனில் முதலில் எறும்புகளை அதற்கான மருந்துகளை தூவி  ஒழித்துக்கட்டவேண்டும்.

  எறும்புகளை விரட்டியபின் இந்த மாவுப்பூச்சிகளை ஒழிக்க அசிபேட் 75 எஸ்.பி  (Acephate 75 sp) மருந்தினை 1 லிட்டர் நீரில் 20 கிராம் கலந்து தெளிக்கலாம் அல்லது புரபனோபாஸ் 50 இ.சி (Profenophos 50ec) மருந்தினை 1 லிட்டர் நீரில் 2 மி.கி கலந்து தெளிப்பதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

  செதில் பூச்சி.

  செதில் பூச்சி (Scale insect) என்னும் இவைகள் இலைகளின்மீது கூட்டம் கூட்டமாக ஆரஞ்சு நிறத்தில் இலையோடு இலையாக ஒட்டிக்கொண்டு அசைவற்று காணப்படும். இவைகள் இலைகளிலுள்ள சாறுகளை உறிஞ்சுவதால் இலைகள் விரைவிலேயே வாடிப்போய்விடுகின்றன. இதனால் மகசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

  கட்டுப்படுத்தும் முறை :- இந்த பூச்சிகள் அதிகமுள்ள இலைகளை செடியிலிருந்து அகற்றி பூச்சிகளுடன் சேர்த்து நெருப்பிலிட்டு அழிக்கவும். 

  மீத்தைல் டெமட்டான் 25 இ.சி (Methyl demeton 25 ec) என்னும் மருந்தினை 2 மில்லிகிராம் அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்கவும்.

  அசுவினி.

  அசுவினி (Aphid pest) என்னும் இப்பூச்சியானது மலர்களின் உட்புறமாக மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் இருந்துகொண்டு பூக்களில் உள்ள சாறுகளையெல்லாம் உறிந்துகொள்ளும். இதனால் பூக்களின் ஓரங்கள் காய்ந்துவிடுவதோடு பூக்களின் தரமும் மங்கும்.

  மாவுப்பூச்சிகளைப்போல இந்த பூச்சிகளும் தேன் போன்ற சுவையுடைய ஒரு திரவத்தை வெளியேற்றும். எனவே இது இருக்குமிடம் எறும்புகளும் இருக்கும். எறும்புகள் இப்பூச்சிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன் ஓரிடத்திலிருந்து இதனை செடிகளின் பலப்பகுதிகளுக்கும் கொண்டுசென்று செடிமுழுவதும் பெருக செய்துவிடும்.

  எனவே, அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த முதலில் எறும்புகளை ஒழித்துக்கட்ட வேண்டியது அவசியம்.

  கட்டுப்படுத்தும் முறை :- சிவப்பு எறும்புகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5D (Malathion 5d) மருந்தினை 1 ஏக்கருக்கு 25 கிலோ என்ற அளவில் தூவ வேண்டும்.

  எறும்புகளை கட்டுப்படுத்தியபின் அசுவினி பூச்சிகளை அழிக்க மீத்தைல் டெமட்டான் 25 இ.சி (Methyl demeton 25 ec) மருந்தை 2 மில்லிகிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

  அல்லது, டைமீத்தோயேட் 30 இ.சி (Dimethoate 30% EC) மருந்தை 2 மில்லிகிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

  அல்லது, இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல் (Imidacloprid 17.8% SL) மருந்தை 3 மில்லிகிராம் அளவு எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

  அல்லது, தையாமீத்தாக்சம் 25 W.G (Thiamethoxam 25% WG) மருந்தை 2 கிராம் எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

  சிலந்தி பூச்சி.

  இலைகளில் அவ்வப்போது நீரை பீச்சியடிப்பதால் சிலந்திப்பூச்சிகள் (Spider) இலைகளில் கூடுகட்டி வாழ்வதை தவிர்க்கமுடியும்.  

  இலைகளில் சிலந்திப்பூச்சிகளின் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் இயற்கை பூச்சி விரட்டியான "வேப்பெண்ணை கரைசலை" இலைகளில் தெளியுங்கள்.

  ஊட்டச்சத்து குறைவு.

  பாதிப்புகள் மற்றும் தீர்வுகள்.

  இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது.

  • போதிய அளவில் சூரிய வெளிச்சம் கிடைக்காமல் இருக்கலாம். 
  • மண்ணில் போதிய அளவு ஈரப்பதம் இல்லாமல் இருக்கலாம்.
  • மண்ணில் அதிக அளவில் சுண்ணாம்பு சத்து இருக்கலாம்.

  இலைகள் பச்சையாக உதிர்தல் அல்லது வாடுதல்.

  • வெப்பநிலை மாற்றத்தால் இது நிகழலாம். 
  • நீர் பற்றாக்குறையாகவும் இருக்கலாம்.

  இலைகள் சுருங்குதல்.

  • பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் பற்றாக்குறை.
  • நுண்ணூட்ட சத்துக்குறைவினாலும் இது நிகழும்.
  • நீர் பாசனம் குறைந்தாலும் இது நிகழும்.

  மலர்களில் போதிய அளவு நிறமின்மை.

  • சூரிய வெளிச்சம் குறைவாக கிடைப்பதால் இது ஏற்படுகிறது.

  பொதுவான ஆலோசனைகள்.

  ஒரே வகையான மலர்களைக்கொண்ட ஹெலிகோனியா தாவரத்தை நடவு செய்யாமல் ஒன்றிற்கும் மேற்பட்ட வகைகளை கலந்து நடவு செய்யுங்கள். இதனால் ஒருவகை பூக்களுக்கு மார்க்கெட்டில் போதிய அளவு விலை இல்லையென்றாலும் பிறவகை பூக்களால் லாபம் பெறலாம்.

  Heliconia crop protection

  ஒளி பற்றாக்குறை இருந்தால் இத்தாவரம் பூக்காது. எனவே இதனை பயிரிட சூரியவெளிச்சம் உள்ள இடத்தை தேர்வு செய்யவும்.

  இத்தாவரத்திற்கு காற்றோட்டமும் மிகவும் அவசியம் என்பதால் போதிய இடைவெளிவிட்டு நடவும். பழைய காய்ந்து போயுள்ள இலைகளை வெட்டி அகற்றி செடிகளின் இடையே நன்கு காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

  கோடைகாலங்களில் அதிக அளவு நீர்ப்பாசனம் தேவைப்படும். ஆனால் குளிர்காலத்தில் நீர்ப்பாசனத்தை குறைத்துக்கொள்ளலாம். அதேவேளையில் இவைகளை சுற்றியுள்ள  மணல்பரப்பு எப்போதும் ஈரமாக இருக்கவேண்டியது அவசியம்.

  ஆனால் கண்டிப்பாக இதன் வேர்பகுதிகளில் நீர் தேங்கி நிற்பது கூடாது. வேர்களில் நீர்தேங்குவதற்கு அனுமதித்தால் இலைகள் பசுமையிழந்து மஞ்சளாக மாறுவதுடன் வேரழுகல் நோயும் ஏற்படும். எனவே இதற்கு வடிகால் வசதி மிக மிக அவசியம்.

  பூக்கும் வேளைகளில் பாஸ்பரஸ் நிறைந்த உரங்களை குறைத்த அளவில் அதற்கான கால இடைவெளிகளில் இடவேண்டியதும் அவசியம்.

  மிக அதிகப்படியான பனிப்பொழிவுகள் இதன் வளர்ச்சியை பாதிக்கும். எனவே அதிக அளவு பனிபொழியும் இடங்களில் இதனை பாதுகாக்க பசுமை குடிலை பயன்படுத்தலாம்.

  மகசூல்.

  அலெக்ஸ் ரெட் (Alex red), அன்ட்ரோமிடா, டிவார்ப்ஜமைக்கா, பிளாக் செர்ரி (Black Cherry), கென்யா ரெட் (Kenya red), லேடி டி, லாத்திஸ்பேத்தி, ஸ்ட்ராபெரி கிரீம் (Strawberry Cream) முதலிய வகைகள் அலங்காரத்திற்கு மிகவும் ஏற்ற வகைகள். எனவே இவைகளை உற்பத்தி செய்து அதிகம் லாபம் பெறலாம்.

  மலர்களை அறுவடை செய்யும்போது பூ தண்டுகளின் நீளம் 1 அடி முதல் 2 அடி வரை இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இருந்தால்தான் மலர்கள் நெடுநாட்கள் வாடாமல் இருக்கும்.

  பூக்களின் தரத்தினைபொறுத்து சந்தையில் அதிகஅளவு இலாபம் கிடைப்பதோடு தாய் செடியிலிருந்து உருவாகும் இளம் கன்றுகளை  அவ்வப்போது பிரித்தெடுத்து தனியாக விற்பனை செய்வதின் மூலமாகவும் நல்லதொரு வருமானத்தைப் பெறலாம். எனவே இதனை முறையாகப்  பயிரிட்டு வளமான எதிர்காலத்தைப் பெறுவோம். 

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  3 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.