"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா - Heliconia rostrata in Tamil.

ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா - Heliconia rostrata in Tamil.

ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா.

Rostrata.

          ஹெலிகோனியா என்னும் தாவர இனத்தில் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்பதனை "ஹெலிகோனியம் அறிமுகம் - Heliconia Introduction." என்னும் பதிவில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

ஹெலிகோனியா தாவர குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வகையான தாவரங்களும் கண்களைக்கவரும் வெவ்வேறு வகையான மலர்களை மலர்பவை.

Heliconia rostrata.

ஆனால், அனைத்து வகைகளுக்கும் சிகரம் வைத்ததுபோல் தன் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கிறங்கடிப்பதில் முன்னோடியாக திகழ்வது "ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா" ஒன்று மட்டுமே என்றால் அது மிகையில்லை.

  சிவப்பு, மஞ்சள், பச்சை என மூவர்ணங்களும் ஒருசேர சங்கமித்து மேலிருந்து கீழாக இதன் பூங்கொத்துக்கள் காற்றில் ஊசலாடுவது அழகின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

  எழில் பொருந்திய அழகும், கவின் பொருந்திய கவர்ச்சியும் ஒருசேர பெற்றுள்ள இதனை பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

  Heliconia Rostrata.

  தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா - Heliconia rostrata.

  ஆங்கில பெயர் :- லோப்ஸ்டர் க்ளா - Lobster Claw.

  வேறு பெயர்கள் :-

  • Hanging Lobster Claw (தொங்கும் இறால் நகம்).
  • False Bird of Paradise (பொய்யான சொர்க்கப்பறவை).
  • Crab Claw (நண்டு நகம்).
  • Parrot's Beak (கிளியின் அலகு).
  • சிங்கி இறால் பூ.

  என இதன் பூக்களின் அமைப்பை வைத்து வேடிக்கையாக பலவாறு அழைக்கப்படுகிறது.

  தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

  குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

  பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

  இனம் :- ரோஸ்ட்ராட்டா - Rostrata.

  வரிசை :- Zingiberales.

  பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.

  வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள்.

  தாயகம் :- இது பெரு(peru) ,பொலிவியா (Bolivia), கொலம்பியா(Colombia), கோஸ்டாரிகா(Costa Rica) மற்றும் ஈக்வடார்(Ecuador) ஆகிய நாடுகளை பூர்விகமாக கொண்டது.

  ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா "பொலிவியா" (Bolivia) வின் தேசியமலராகும்.

  தாவரத்தின் தன்மை.

  இது தொங்கும் தன்மையுடைய பூக்களைக் கொண்டது. மெல்லிய கிளைத்த, மிருதுவான தண்டுகளை கொண்டுள்ளன. இலைகள் குறுகிய இலைக்காம்புடன் வாழை இலைபோல் பச்சைநிறத்தில் சுமார் 4 அடி நீள இலைகளைக் கொண்டுள்ளன.

  தரையில் வளரும்போது சுமார் 20 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்ட இதனை ஒரு பெரிய பூந்தொட்டிகளில் வைத்து வளர்த்தீர்கள் என்றால் 4 முதல் 5 அடி உயரம் மட்டுமே வளரும்.

  Heliconia rostrata

  விவசாய நிலங்களில் 20 அடி உயரம் வளரும் இது பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும்போது 4 அல்லது 5 அடி மட்டுமே வளர்ந்து விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல ஒன்றிரண்டு அடிக்குள்ளான நீளத்தில் பூங்கொத்துக்களை கனகச்சிதமாக தருகின்றன.

  மலர்களின் தன்மை.

  இது மேலிருந்து கீழாக தொங்கும் மஞ்சரிகளை உருவாக்குகின்றன. பூ தண்டுகளின் நீளம் மூன்று அடி முதல் ஐந்து அடிவரை இருக்கும். தண்டின் இருமருங்கிலும் மேலிருந்து கீழ்நோக்கி வரிசையாக  பூ மடல்களும் மலர்களும் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமானது.

  பூ மடல்கள் ஒவ்வொன்றும் இறால்களின் நகம் போல் இருப்பதாலும் மேலிருந்து கீழாக தொங்கிக்கொண்டு இருப்பதாலும் இந்த மலர்களை பொதுவாக "தொங்கும் இறால் நகம்" (Hanging Lobster Claw) என வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு.

  இந்த மஞ்சரிகளும் மடல்களும் மிகவும் கவர்ச்சியான நிறத்தை கொண்டது. சிவப்பு வண்ணம் கொண்ட இதன் மலர்கள் நுனிப்பகுதியில் மஞ்சள் கலந்த வெளிர் பச்சை கொண்டதாக இருக்கும். மடலினுள்ளே மஞ்சள் நிற மலர்களும்  உள்ளன.

  இந்த மலரில் அழகு எவ்வளவு கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவு தேன்களும் நிறைந்திருக்கின்றன. எனவே இந்த மலர்களை சுற்றி எப்போதும் தேனீக்களும், தேனுண்ணும் சிறியரக பறவைகளும், வௌவால்களுக்கும் வலம் வருவது வாடிக்கையாகவே உள்ளன.

  நடவு செய்த இரண்டாவது ஆண்டில் பூக்க ஆரம்பிக்கும் இது தொடர்ந்து ஆண்டு முழுவதுமே பூக்கின்றன.

  காய்களின் தன்மை.

  வெளிர் மஞ்சள் நிற காய்களையும், அடர்நீல நிற பழங்களையும்  கொண்டுள்ளன. இதன் பழங்கள் பறவைகளுக்கும், வௌவால்களுக்கும் உணவாகின்றன.

  இனப்பெருக்கம்.

  சிறிய ரக வேர்த்தண்டு கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தைப் பெருக்குகிறது.

  "ஹம்மிங்" (Humming birds) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

  வளரும் நிலப்பகுதிகள்.

  மலைச்சரிவுகள், மழைக்காடுகள் மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் காணப்படுகின்றன. தற்காலங்களில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.

  சாகுபடி.

  வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாகப்  பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம்.

  Heliconia rostrata

  இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 12 மாதங்கள்வரை ஆகலாம்.

  விதைகள் விரைவாக முளைக்க ஒரு வழிமுறையை கையாளலாம். சுமார் 60 டிகிரி வெப்பநிலையிலுள்ள நீரில் விதைகளை 3 அல்லது 4 நாட்கள் ஊறவிடவேண்டும். நீரின் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்ள Thermos வாட்டர் பாட்டிலை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் விதைகளின் கடினமான ஓடுகள் மிருதுவாக்கப்பட்டு விதைகள் விரைவிலேயே முளைக்க ஆரம்பித்துவிடும்.

  சூடான நீரில் ஊறவைத்த விதைகளை 4 நாட்கள் கழித்து எடுத்து ஒரு சிறிய குழியில் கரி, மணல் கலந்து அதில் விதைகளை போட்டு அதன்மேல்  சிறிது மணல் தூவி மூடி நீர் விட்டு வரவும்.

  நான்காவது மாதத்தில் ஒவ்வொரு விதைகளாக முளைவிட ஆரம்பிக்கும். இதனை வீடுகளில் அழகுக்காக பூந்தொட்டிகளில் வளர்க்கலாம். அல்லது வியாபாரத்திற்காக விவசாய நிலங்களிலும் பெரிய அளவில் சாகுபடி செய்யலாம்.

  இது பயிர் செய்யப்படும் இடம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வேர்ப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் "வேரழுகல்" (Root rot disease) நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

  நல்ல தரமான பூக்கள் வேண்டுமெனில் மக்கிய தொழுஉரம் இடவேண்டும். வருடத்திற்கு 3 தடவை உரமிடவேண்டியது அவசியம்.

  கோடை காலங்களில் இதற்கு அதிக அளவு நீர் பாசனம் தேவைப்படும். கோடை காலங்களில் அதிக அளவான கோடைவெப்பம் இதனை பாதிக்காத அளவு இதன் இலைகளில் தினம் 2 தடவை நீரை பீச்சியடிக்கவேண்டியது அவசியம்.

  இந்த தாவரங்களின் ஊடாக அதிக காற்றோட்டம் இருக்கவேண்டியது அவசியம். எனவே மரத்திலிருந்து காய்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளை அகற்றுவதுடன் பிறவகை களைச்செடிகளையும் அகற்றி காற்றோட்டத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

  பயன்கள்.

  இதன் மலர்கள் மிகவும் கவர்ச்சியானவை மட்டுமல்ல பூங்கொத்துக்களை மரத்திலிருந்து அகற்றிய பின்பும் சுமார் 1 வாரத்திற்கும்மேல் வாடாமல் இருக்கும் தன்மையுடையதாதலால் மலர் அலங்காரங்களில் இது பிரதான அலங்கார பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

  இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. மலர் அலங்கார கலைஞர்களின் முதன்மையான தேர்வாகவும் இன்றுவரை இது தொடர்ந்து நீடிப்பது இதன் சிறப்பு.

  இந்த "ரோஸ்ட்ராட்டா" (rostrata) தொங்கியபடி கவர்ச்சி காட்டுகிறது என்றால்.. உனக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்று நின்றபடியே மப்பும் மந்தாரமுமாக ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சிகாட்டிவருகிறது "அங்கஸ்டா" (Heliconia angusta) என்னும் மற்றொரு ரகம். இதனைப்பற்றி தெரிந்துகொள்ள மொள்ளமா கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க.

  >>"ஹெலிகோனியா அங்கஸ்டா - Heliconia angusta."<<

  💘 💘 💘 💘 💘 💘 💘

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.