"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Electric Eel Fish.

Electric Eel Fish.

எலக்ட்ரிக் ஈல்.

Minsara Meen.

         ஈல் என்று சொல்லப்படும் விலாங்கு மீன்களைப்பற்றி நாம் பரவலாக அறிந்திருப்போம். சாதாரணமாக குளம், ஆறு, ஓடை இவைகளில் இந்த விலாங்கு மீன்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம்.


Electric Eel.


மொரே ஈல் (Morey Eel), கார்டன் ஈல் (Garden Eel), அமெரிக்கன் ஈல் (American Eel), ஐரோப்பிய ஈல் (European Eel), ஜப்பானிய ஈல் (Japanese Eel), சார்ட் ஃபைன் ஈல் (Short-finned Eel) என உலகில் சுமார் 800 வகையான விலாங்கு மீன்கள் உள்ளன.


  Electric Eel Fish.

  இந்தியர்களாகிய நாம் இந்த விலாங்கு (ஈல்) மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் நன்னீர் ஈல்களான "உனகி" (unagi), மற்றும் கடல் ஈல்களான "கொங்கர் ஈல்" (conger Eel), "அனகோ" (anogo) ஆகியன ஜப்பானிய உணவுகளில் (Japanese food) மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றன. சீனாவிலும் (Chinese food) ஈல் வகை உணவுகளுக்கு பஞ்சமில்லை.

  இத்தாலி (Italy), நியூசிலாந்து (New Zealand), ஜெர்மனி (Germany), நெதர்லாந்து (Netherlands), போலந்து (Poland), டென்மார்க் (denmark), செக்குடியரசு (Czechia) மற்றும் சுவீடன் (Sweden) ஆகிய நாடுகளிலும் விலாங்குமீன் உணவு களைகட்டுகிறது.

  நாம் இந்த பதிவில் உணவாகப்பயன்படும் விலாங்கு மீன்களைப்பற்றி பார்க்கப்போவதில்லை. இதையெல்லாம் தாண்டி மின்சாரத்தை தன் உடலிலேயே உற்பத்திசெய்து எதிரிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒருவகையான அணுஉலை விலாங்கு மீன்களைப்பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

  அது என்ன விலாங்கு என்கிறீர்களா? அதுதான் மின் விலாங்கு அதாவது எலக்ட்ரிக் ஈல்.

  வாருங்கள் மின்சாரத்தை தன் உடலிலேயே உற்பத்தி செய்வதுடன் அதை முறைப்படி பயன்படுத்தி ஒரு மினி அணுமின் நிலையமாகவே செயல்படும் எலக்ட்ரிக் ஈல் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.


  மின் விலாங்கு - எலக்ட்ரிக் ஈல்.

  பொதுவான பெயர் :- மின் ஈல்.

  தமிழ் பெயர் :- மின் விலாங்கு மீன், மின்சார விலாங்கு. (ஆனால் இது விலாங்கு இனத்தை சார்ந்தது அல்ல).

  ஆங்கில பெயர் :- எலக்ட்ரிக் ஈல் (Electric Eel).

  விலங்கியல் பெயர் :- எலெக்ட்ரோபோரஸ் எலெக்ட்ரிகஸ் (Electrophorus electricus).

  திணை :- விலங்கு.

  தொகுதி :- முதுகுநாணி.

  பெருவகுப்பு :- Osteichthyes.

  வகுப்பு :- அக்டினோட்டெரிகீயை.

  வரிசை :- ஜிம்னோட்டிபார்மீசு.

  வகை :- நைஃப் பிஷ் (Knife fish - கத்தி மீன்).

  குடும்பம் :- ஜிம்னோடிடே (Gymnotidae).

  பேரினம் :- எலக்டிரோபோரஸ்.

  இனம் :- எ. எலக்டிரிகஸ்.

  தாயகம் :- இது வட தென் அமெரிக்கா முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பிரேசில் (Brazil), கியானாஸ் (Guianas), சுரினாம் (suriname), வெனிசுலா (venezuela), கொலம்பியா (colombia), பெரு (Peru) மற்றும் ஈக்வடார் (Ecuador) வரை பரவலாக காணப்படுகின்றன.

  வாழிடம் :- நன்னீர் ஏரிகள் (Freshwater Lakes), நீரோடைகள், குளங்கள் (Tank) மற்றும் அமேசான் காடுகளிலுள்ள (Amazon Rainforest) நீர்நிலைகள்.

  நீளம் :- சுமார் 6 முதல் 8 அடி.

  எடை :- 20 கிலோ.

  நீந்தும் வேகம் :- மணிக்கு 8 கிலோ மீட்டர்.

  மின் உற்பத்தி திறன் :- 500 முதல் 650 வோல்ட் மின்னழுத்தம் (500 - 650 Volt) மற்றும் 40 முதல் 50 (40 - 50 milli amp) மில்லியாம்பியர் மின்னோட்டம். அதாவது 25 முதல் அதிகப்படியாக 35 வாட்ஸ் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது..

  சராசரி ஆயுள் :- ஆண் ஈல்கள் 10 முதல் 15 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. பெண் ஈல்கள் 12 முதல் 22 வருடங்கள்வரை உயிர் வாழ்கின்றன.


  மின்சார மீன்.

  That's all ஈல் Touch for வீல்.

  எட்ட இருந்து பார்த்தால் இது ஒரு சாதாரண மீன்போல்தான் தோன்றும். தட்ஸ் ஆல் ஈல்...

  ஆனால்,... அருகில் சென்று பார்த்தால் வீல் என்று ஒரு சத்தம் வரும்.. மீனிடம் இருந்து அல்ல உங்களிடம் இருந்து..

  பின்ன வராதா?.. 600 வோல்ட் மின்சாரம் தீடீரென்று உங்களை தாக்கினால்...

  அம்மாடியோவ், என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?.. வாருங்கள் பாதுகாப்பாக கொஞ்சம் எட்ட இருந்தே இதனை பார்ப்போம்.

  இது எங்கே வாழ்கிறது என்று கேட்கிறீர்களா?.. வேறெங்குமில்லை.. உங்கள் சொட்டைத் தலையிலும் முடி வளர வைக்கக்கூடிய அதிசய மூலிகைகள் நிறைந்த அமேசான் காடுகளில்தான் (வளரும்... ஆனா... வளராது) ஈல் என்னும் இந்த அதிசய மீனும் வாழ்கின்றன.


  Electric Eel

  இது பார்ப்பதற்கு கழுவுற மீனுல நழுவுற நம்ம ஊரு விலாங்குமீன் போல் காட்சியளித்தாலும் உண்மையில் இது விலாங்குமீன் அல்ல.

  மாறாக,... "நைஃப் பிஷ்" (Knife fish) என்னும் மீன் வகையை சார்ந்தது. விஞ்ஞான வகைப்பாட்டின்படி "கார்ப்" (carp fish) மற்றும் "கேட் பிஷ்" (Catfish) வகை மீன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

  இது விலாங்குமீன் வகையை சார்ந்தது இல்லை என்பதால் நாம் இதனை இன்றுமுதல் ''கரண்டு கண்ணாயிரம்'' என்று பெயரிட்டே அழைத்து வருவோம்.


  சிறப்பு தன்மை.

  இந்த ஈலின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு நடமாடும் குட்டி "அணுமின் நிலையம்" மாதிரி.

  சுமார் 600 முதல் 650 வோல்ட் மின்சாரத்தை தன் உடலில் உற்பத்தி செய்கிறது.

  இதில் "போராக்" என்னும் ஒருவகை ஈல்மீன் உள்ளது. அது அதிகப்படியாக 860 வோல்ட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதாம்.

  மின்னழுத்தம் 600 முதல் 860 வரை இருந்தாலும் மின்சக்தியாகிய ஆம்பியர் குறைவாகவே இருக்கும். இதில் 40 முதல் 50 மில்லி ஆம்பியர் வரைதான் மின்னோட்டம் (கரண்ட்) இருக்கும்.

  இந்த அளவு மின்சாரம் மனிதர்களுக்கு கடுமையான வலிகளை ஏற்படுத்தலாம்.  எப்போதாவது அரிதாக மூச்சுத்திணறல் மற்றும் இதய செயலிழப்பை ஏற்படுத்தலாம். ஆனாலும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை.

  மனிதர்களுக்கு மின்சாரம்மூலம் உயிரிழப்பு ஏற்படவேண்டுமெனில் உடல்வழியாக குறைந்தது 75 மில்லி ஆம்பியர் அளவாவது மின்சாரம் பாயவேண்டும். அப்போதுதான் மரணம் சாத்தியமாகும்.

  எனவே, இது மனிதர்களுக்கு அதிகப்படியான மின் அதிர்ச்சியை கொடுக்குமே தவிர உயிருக்கு பெரும்பாலும் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சிறியரக உயிரினங்கள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.


  உயிர் என்னும் மின் சக்தி.

  என்னாது!!. மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதா?! என்று திகைக்காதீர்கள்.. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் நம்முடைய உடலும்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது என்பதோ அல்லது நம்முடைய உடலும் முழுக்க முழுக்க மின்சாரத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கின்ற பேருண்மையோ உங்களுக்கு தெரியுமா?!

  "உயிர்" என்று நாம் குறிப்பிடுவதே மின்சாரத்திற்கு நம் முன்னோர்கள் வைத்த பிறிதொரு பெயர்தான் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?!

  இன்றைய அறிவியலானது மின்சாரம் என்று ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கு "மின்சாரம்" என்று பெயரிடுவதற்கு முன்னால் நம் முன்னோர்கள் அந்த சக்தியை குறிப்பால் கண்டுணர்ந்து அதற்கு உயிர் என்றும் ஆன்மா என்றும் அவர்கள் பாஷையில் பெயர்வைத்துவிட்டனர் அவ்வளவுதான்.

  நாம் மட்டுமல்ல உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் சதாசர்வகாலமும் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் 600 வோல்ட் அல்ல... தன் உடலுறுப்புகள் இயங்குவதற்கு போதுமான குறைந்த அளவில்.


  Electrocardiogram - ECG.

  உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் உயிர் என்று சொல்லப்படும் நிலை மின்சாரத்தின் மூலமாகவே (DC கரண்ட்) இயங்குகின்றன என்பதனை முதலில் ஆணித்தரமாக நினைவில் வையுங்கள். இந்த மின்சாரத்தைத்தான் "உயிர் மின்சாரம்" என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். நம் உடலிலுள்ள இந்த மின்சாரத்தை அளக்கும் கருவிதான் "எலெக்ட்ரோ கார்டியோகிராம்" (electrocardiogram). சுருக்கமாக "ECG".


  electrocardiogram - ECG

  குறிப்பாக நம்முடைய இருதயத்தை எடுத்துக்கொள்ளலாம். இதயம் தானாக துடிப்பதில்லை. அது இயங்க ஒரு மின்னாற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின்னுற்பத்தி நிலையத்தினை "சைனஸ் நோட்"  (Sinus node) என்கின்றனர்.

  இந்த மின்னுற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டால் இதய துடிப்பிலும் மாற்றம் ஏற்படும். இந்த மின்மாறுபாட்டை அளந்து பார்ப்பதற்காகத்தான் மருத்துவர்கள் "ECG" (இ.சி.ஜி) என்னும் கருவியை பயன்படுத்துகின்றனர்.

  "ECG" என்றால் என்ன?. "எலெக்ட்ரோகார்டியோகிராம்" (electrocardiogram) அதாவது இதயத்தின் மின்துடிப்பை அதன் செயல்பாட்டை பதிவுசெய்யும் கருவி.

  நம்முடைய உடல் செல்களில் நடைபெறும் இந்த மின்சார உற்பத்தி எதாவது ஒரு காரணத்தால் உடலில் நிரந்தரமாக நின்றுபோவதைத்தான் நாம் "உயிர்" போய்விட்டது. அல்லது "ஆன்மா" பிரிந்துவிட்டது. "சுடலைமுத்து" இறைவனடி சேர்ந்தார். "மைக்கேல் ஆண்டனி" கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்று ஆளாளுக்கு கதைவிட்டுக்கொண்டு திரிகின்றோம்.

  சரி உடல் இயங்குவதற்கான இந்த மின்சாரம் நம் உடலில் எங்கு உற்பத்தியாகிறது என்கிறீர்களா?... நம்முடைய ஒவ்வொரு செல் திசுக்களிலும்தான்.

  நம்முடைய ஒவ்வொரு செல்களிலும் நடக்கும் வேதிவினைகளின்மூலம் மிக குறைந்த அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்தந்த தனிப்பட்ட செல்களையும் அதை சுற்றியுள்ள நரம்புதிசுக்களையும் இயக்குவதற்கு பயன்படுத்தப்படுவதே இதன் தனிச்சிறப்பு. இதன்மூலம் மிகக்குறைந்த மின்சக்தியை கொண்டு மொத்த உடம்பையும் இயக்கிவிடமுடியும்.

  நம் மூளையில் இருந்துவரும் கட்டளைக்கேற்ப உடலில் எந்த உறுப்பு இயக்கப்படவேண்டுமோ அந்த உறுப்புகளுக்கு நரம்புகள் வழியாக தகவல்கள் பொட்டாசியம் அயனி (Potassium ion) ரூபத்தில் சிறு சிறு பொட்டலங்களாக கடத்தப்பட, இயக்கப்படவேண்டிய உறுப்புகளிலுள்ள கோடிக்கணக்கான நரம்புத்திசுக்களில் ஏற்கனவே நிறைய சோடியம் அயனி (Sodium ion) குவிந்திருக்க, இரண்டும் சேர்ந்து அங்கு ஒரு நிலை மின்னூட்டத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நரம்புசெல்களும் தனித்தனியாக ஒத்திசைவுடன் ஒரே நேர்கோட்டில் இயக்கம்பெற சம்பந்தப்பட்ட உறுப்புகளும் முழுவீச்சில் இயக்கம் பெறுகின்றன.

  "உயிர்" என்பது நீங்கள் நினைப்பதுபோல் புரியாத புதிர் ஒன்றும் அல்ல. அல்லது எங்கோ இருந்துகொண்டு கடவுள் என்னும் கற்பனை வஸ்துவால் இயக்கப்படும் பொருளும் அல்ல.

  உயிர் என்பது நம் ஒவ்வொருவருடைய உடலிலும் உள்ள செல்களில் இயற்கையாகவே நிகழக்கூடிய வேதிவினைகளின்மூலம் உருவாகும் உபரிசக்தியாகிய "மின்சக்தி" அவ்வளவுதான். இதில் அதிசயம் கொள்வதற்கு எதுவும் இல்லை.

  இதிலிருந்து நம் உடல் தடையின்றி தொடர்ந்து இயங்கவேண்டுமெனில் "உயிர்" என்று அழைக்கப்படும் மின்சாரம் மிக முக்கியமானது என்பது உங்களுக்கு புரிகிறது அல்லவா?

  உடலிலுள்ள ஒவ்வொரு நரம்பு செல்களிலும் ரசாயன வேதியியல் முறையில்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது என்றாலும் ஒவ்வொரு செல்லிலும் வேதியியல் பரிமாற்றம் நடக்கவேண்டுமெனில் உணவின்மூலம் பெறப்பட்ட வேதியியல் பொருள்களை ஒவ்வொரு செல்களுக்கும் கொண்டு செல்வதற்கு குருதியும் அதோடு ஆக்சிஜனும் அவசியம்.

  ஆக்சிஜன் இல்லாமல் வேதிவினைகள் நடைபெற சாத்தியமில்லை. வேதிவினை நிகழவில்லையெனில் மின் உற்பத்தியும் சாத்தியமில்லை. மின் உற்பத்தி இல்லையெனில் உடல் இயக்கமும் சாத்தியமில்லை.

  எனவேதான் மூச்சு நின்றுபோனால் மின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் (சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகள்) தொடர்ந்து செல்களுக்கு கிடைக்காமலும், ஆக்சிஜன் தடையால் செல்களில் நடைபெறும் வேதிவினைகளும் தடைபட... அதனால் செல்களின் மின்சார உற்பத்தியும் தடைபட்டு பேச்சும் மூச்சும்  நின்றுபோகிறது.

  அதுபோல உடல் முதுமையடையும்போது ஒவ்வொருநாளும் படிப்படியாக இலட்சக்கணக்கான செல்கள் அழிந்துகொண்டேவர வேறு புதிய செல்களின் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துபோக இதனால் செல்களில் உற்பத்தியாகும் மின்னுற்பத்தியும் பெருமளவில் தடைபட கொஞ்சம் கொஞ்சமாக உடல் மரணத்தைத் தழுவுகின்றன.

  எனவே உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கவேண்டுமெனில் உயிர் என்று சொல்லப்படும் மின்சக்தி மிக மிக அவசியம் என்பது தெளிவாகிறது அல்லவா!!.

  எனவே, எவ்வாறு மின்சாரம் இல்லாமல் மின்விசிறி, மின்மோட்டார்கள் இயங்காதோ அதுபோல, நம் உடலும் மின்சாரம் இல்லாமல் இயங்காது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

  நம் உடல் மட்டுமல்ல உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும், தாவரங்கள் உட்பட உயிர் என்று அழைக்கப்படும் மின்சாரத்தின் மூலமாகவே இயங்குகிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

  நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் "எலெக்ட்ரிக் ஈல்" என்னும் இம்மீன் தன் உடல் இயக்கத்திற்கு தேவையான அளவை விட அதிக மின்னழுத்தத்தை உற்பத்தி செய்கின்றது. வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் அளவுக்கதிகமான உயிர்சக்தியை உற்பத்திசெய்கின்றது.

  எதற்காக உற்பத்தி செய்கிறது?

  வேறு எதற்காக..

  பக்கத்துல வருகிறவனை வறுவல் போடுவதற்காகத்தான்.

  ஆம்,.. இது தன் உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் மின்சக்தியைவிட இன்னும் அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்திசெய்வதுடன்... அவ்வாறு அதிகப்படியாக உற்பத்தி செய்த மின்சக்தியை தனக்கான இரையை செயலிழக்க செய்வதற்கும், எதிரிகளை வீழ்த்துவதற்கும் பயன்படுத்துகின்றன.


  மின் விலாங்கின் மின்னுற்பத்தி.

  எப்போதும் இவைகளின் உடலில் 600 வோல்ட் மின்சாரம் நிலையாக இருப்பதில்லை. தேவைப்படும்போது மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி செய்கின்றன. எவ்வாறு இவைகள் இவ்வளவு அழுத்தமுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன என்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும்  எலெக்ட்ரோசைட்ஸ் (electrocytes) என்னும் செல்களை இவைகள் தங்களுடைய உடலில் அதிக அளவில் கொண்டுள்ளன. இந்த செல்களானது ஒன்றன்மேல் ஒன்றாக வட்டவடிவில் அமைந்துள்ளன.

  இந்த செல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 இலட்சம்வரை உள்ளன.

  ஒவ்வொரு செல்களுக்குள்ளும் பொட்டாசியம் அயான்களும், சோடியம் அயான்களும் உள்ளன. ஆபத்து வரும் காலங்களில் அல்லது உணவை வேட்டையாடும் சமயங்களில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளை அந்த செல்களுக்குள் இடப்பெயர்ச்சி செய்து அதிகப்படியான மின்னழுத்தத்தை உருவாக்குகின்றன.

  ஒரு தனிப்பட்ட செல் 0.15 வோல்ட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருந்தாலும் 2 இலட்சம் செல்களும் ஒன்றையடுத்து ஒன்றாக பேட்டரி செல்போல் தொடராக அமைந்துள்ளதால் மின்னழுத்தம் 600 வோல்ட் வரை அதிகரிக்கின்றன. இது உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதன் தலைப்பகுதி மற்றும் வால்பகுதிகளில் வெளிப்படுத்துகின்றன.


  That's all Eel

  இந்த மீன் உற்பத்தி செய்யும் மின்சாரத்தால் இந்த மீன் ஏன் பாதிப்படைவதில்லை என்பதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  இது உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இது இரு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறது.

  ஒன்று உணவை எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து வீழ்த்த...

  மற்றொன்று எதிரிகளை ஓட ஓட விரட்ட...

  மேலும், தன்னுடைய சகாக்களுடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும் மிக குறைந்த மின்னழுத்தமுள்ள மின்னதிர்வு சமிஞ்சைகளை பயன்படுத்துகின்றன.

  இந்த மின் அதிர்வெண் ஆண் ஈல்களுக்கும் பெண் ஈல்களுக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மாறுபட்ட அதிர்வெண்களையே கொண்டுள்ளன. இந்த வித்தியாசங்களை கருத்தில்கொண்டு இவைகள் எளிதாக தங்கள் ஜோடிகளை இனங்கண்டுகொண்டு காதலை பரிமாறிக்கொள்கின்றன.

  சரி,... இப்படி மின் அதிர்ச்சி கொடுக்கும் உயிரினங்களில் இந்த ஈல் மட்டும்தான் உள்ளதா என்றால் அதுதான் இல்லை. இதுபோல் இன்னும் சில உயிரினங்கள் மின் அதிர்ச்சி கொடுக்கும் திறனைப்பெற்றுள்ளன. அவைகளில் குறிப்பாக "எலக்டிரிக் Cat Fish" மற்றும் "எலக்ட்ரிக் Ray Fish" ஆகியவைகளை குறிப்பிட்டு சொல்லலாம்.


  மின் திருக்கை - Electric Ray Fish.

  மின் திருக்கை (electric ray fish) என்னும் மீனானது கடலில் வாழ்வது. இது திருக்கை என்னும் மீன்வகையை சார்ந்தது என்றாலும் அதிலிருந்து ரொம்பவே மாறுபட்டது.

  எப்படியெனில், சாதாரண திருக்கை மீன்கள் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விஷத்தை எதிரிகளின் உடலில் செலுத்தக்கூடிய நச்சு ஊசி போன்றதொரு உறுப்பைக்கொண்டுள்ளன.

  ஆனால், அதே இனத்தை சேர்ந்த இந்த மின்திருக்கையோ நச்சு ஊசி எதுவும் கையில் வைத்திருக்கவில்லை. மாறாக, கரண்ட் ஷாக் கொடுத்தே வேலையை கனகச்சிதமாக முடித்துக்கொள்கிறது.

  இது அதிகப்படியாக 220 வோல்ட் வரை மின்னழுத்தத்தை உற்பத்தி செய்கிறது. இதனுடைய மின்னழுத்தம் 220 வோல்ட் என்றாலும் மின்னோட்டம் (ஆம்பியர்) மிக குறைவாகவே இருக்குமாதலால் மனிதர்களின் உயிர்களுக்கு இதனால் ஆபத்தில்லை.


  மீன்களின் மின் அளவு.

  எலக்டிரிக் மீன்கள் மின் அளவு
  எலக்ட்ரோஃபோரஸ் (போராக்) 860 volt
  எலக்டிரிக் ஈல் 600 volt
  எலக்டிரிக் cat fish 380 volt
  எலக்ட்ரிக் ray fish 220 volt

  மின் ஈல் - உடலமைப்பு.

  சரி,... இனி நம் கட்டுரையின் கதாநாயகனான மின் ஈலின் கட்டுமஸ்த்தான உடலமைப்பைப்பற்றி பார்ப்போம்.

  இது பாம்புபோன்ற உடலமைப்பைக் கொண்டுள்ளதுடன் தட்டையான தலையமைப்பையும் கொண்டுள்ளது.

  இம்மீன்களை பொதுவாக 1 மீட்டர் நீளத்தில் எங்கும் காணலாம் என்றாலும் அதிகபட்சமாக 2.75 மீட்டர் ( 9 அடி ) வரை வளரும் இயல்புடையது.

  இதன் உடல் எடை சுமார் 22 கிலோவரை இருக்கும். இம்மீனின் உடலின் மேல்பக்கம் கருஞ்சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெண்மை கலந்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும்.

  உருண்டு திரண்ட நீண்ட உடலும் அதில் ஆங்காங்கே கரும்புள்ளிகளும் படர்ந்திருக்கும்.

  பிற வகை ஈல் மீன்களைப்போலவே இதற்கும் இடுப்பு துடுப்புகள் இல்லை. வால் துடுப்பின் உதவிகொண்டு இவைகள் நீரில் வலம்வருகின்றன. பெண் மீன்களைவிட ஆண் மீன்கள் அளவில் பெரியவை.

  ஈல் மீனின் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் அதன் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

  சுவாசிப்பதற்கான செவுள் அமைப்பு மிகச்சிறிய அமைப்பிலேயே அமைந்துள்ளது. சுவாசித்தபின் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற மட்டுமே செவுள்களை பயன்படுத்துகின்றன. பிற மீன்களைப்போல செவுள்களால் மட்டும் இவைகள் சுவாசிப்பதில்லை. இவைகள் வாழும் ஆறுகளில் ஆக்சிஜன் அளவு குறைவு என்பதால் இவைகள் அடிக்கடி மேல்பகுதிக்குவந்து வாய்வழியாக சுவாசித்துவிட்டு மீண்டும் நீரின் அடிப்பகுதிக்கு சென்றுவிடுகின்றன.

  இவைகள் குறைவான கண்பார்வை கொண்டவை. பெரும்பாலும் கலங்கியநீரின் அடிப்பகுதியில் வாழும் இவைகளால் நீரிலுள்ள இரைகளை தெளிவாக பார்க்க முடிவதில்லை. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய தன் உடலின் பக்கவாட்டில் வரிபோன்ற அமைப்புடைய உணர்திறன்கொண்ட இழைகளை கொண்டுள்ளன. இதனால் நீரிலுள்ள அழுத்த மாறுபாட்டை எளிதாக இவைகளால் உணர்ந்துகொள்ள முடியும்.

  நீரின் அழுத்த மாறுபாட்டை துல்லியமாக கணித்து இரைகளின் இருப்பிடத்தை அறியும் இவைகள் சிறிதும் தாமதிக்காமல் இரண்டு வலுவான மின்துடிப்புகளை வெளிப்படுத்துகின்றன. இது இரைகளின் தசைகளை பாதித்து அவைகளை நிலைகுலைய செய்கின்றன. அடுத்து வினாடிக்கு 400 துடிப்புகளை கொண்ட உயர் மின்னழுத்த மின்சாரத்தை அவைகளின் உடலில் செலுத்தி அவைகளை முற்றிலுமாக செயலிழக்க வைத்து இரையாக்கிக்கொள்கின்றன.

  இவைகள் தண்ணீரைவிட்டு வெளியில் வந்தாலும் பலமணிநேரம் தொடர்ந்து உயிர்வாழமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.


  உணவு முறை.

  இதன் முக்கிய உணவு பிறவகை மீன்கள், இறால்கள், நண்டுகள்தான். மேலும் நிலத்தில் வாழும் எலிகள்போன்ற சிறியவகை பாலூட்டிகளையும் கபளீகரம் செய்கின்றன.

  இவைகள் மீன்கள் மற்றும் மாமிசங்களை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழும் பிராணி அல்ல. அமேசான் காடுகளிலுள்ள மரங்களிலிருந்து நீரில் அடித்துவரப்படும் பலவகையான பழங்களையும்கூட ஒருபிடி பிடிக்கின்றன.

  சிறியரக பாலூட்டிகள் மற்றும் பறவைகளையும் உணவாக உட்கொள்கின்றன. தவளைகளும் இவைகளின் உணவுப்பட்டியலில் உண்டு.


  இனப்பெருக்கம்.

  இது முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. தன் வம்சத்தை வளர்ப்பதில் ஆண் ஈல்களின் பங்கு அளப்பரியது.

  எவ்வாறெனில், முட்டைகள் பாதுகாப்பாக இருக்க கூடு அமைக்கும் பொறுப்பை ஆண் ஈல்கள் எடுத்துக்கொள்கின்றன. தன்னுடைய வழவழப்பான உமிழ்நீரை பயன்படுத்தி கோழைப்படலம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறது.

  ஆண்மீன்கள் அமைத்த அந்த கூட்டில் பெண்மீன்கள் முட்டையிடுகின்றன. அதிகப்படியாக 1500 முதல் 3000 முட்டைகள்வரை இடும்.

  முட்டையிலிருந்து முதன்முதலாக வெளிப்படும் லார்வாக்கள் தங்கள் பக்கத்திலுள்ள இன்னும் பொரிக்காத முட்டைகளை "ஆப்பாயில்" போட்டுவிடுகின்றன. எனவே முதலில் முட்டையிலிருந்து வெளிவரும் சில ஆயிரம் பேர்களுக்கே தொடர்ந்து உயிர்வாழும் அனுமதி கிடைக்கிறது.

  முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களை மழைக்காலம் தொடங்கும் வரை பெற்றோர்கள் கவனமுடன் பாதுகாக்கின்றனர்.


  வாழ்க்கை சுழற்சி.

  இந்த ஈல் ஆனது ஆற்றினுடைய நன்னீரில் வாழும் மீனினம் என்றாலும் முட்டையிடுவதற்காக கடலின் உப்புநீரையே தேடிச்செல்கின்றன.

  கடலின் ஆழ்பகுதிக்கு சென்று முட்டையிட்டு அதிலிருந்து லார்வாக்கள் வெளிவந்த பின்பு சிலநாட்கள் அவைகளுக்கு பெற்றோர்கள் பாசத்தையும், பாதுகாப்பையும் பொழிகிறார்கள்.

  அதன்பின் மழைக்காலம் தொடங்குவதால் இனி தங்களின் விட்டுப்போன உறவுகளை காணும்பொருட்டு, தங்களுடன் தங்கள் குழந்தைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீந்தி வருவது கடினம் என்பதால் அவர்கள் வளரும்வரை நட்டாற்றில் .. சாரி .. நடுக்கடலிலேயே தவிக்க விட்டுவிட்டு மீளாத்துயரில் கண்ணீரும் கம்பலையுமாக பெற்றோர்கள் மட்டும் தன் இருப்பிடமான அமேசான் காட்டுப்பகுதிக்கு திரும்புகிறார்கள்.


  eel egg

  நடுக்கடலில் தனித்துவிடப்பட்ட ஆயிரக்கனக்கான ஈல் குஞ்சுகள் தாம் மீண்டும் பெற்றோரை சந்திப்போம் என்ற நம்பிக்கையில் புழு, பூச்சிகளை சாப்பிட்டு "நான் வளர்கிறேனா மம்மி" என்று மனத்திற்குள்ளேயே குதூகலித்துக்கொண்டு கொஞ்சம் நீளமாகவே வளர்ந்துவிடுகின்றன.

  தாங்கள் வயதிற்கு வந்தவுடன் பெற்றோர்களை காணும் ஆவலில் கடலுக்கு "குட்பை" சொல்லிவிட்டு கூட்டம்கூட்டமாக ஆற்றுப்படுகை வழியாக அமேசான் காட்டிற்கு தங்கள் பயணத்தை தொடங்குகின்றன.

  பெற்றோர்களை தாவியணைக்கலாம் என்ற ஆவலில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை பல மாதங்களாக கடந்து கடைசியில் பெற்றோர்களை வந்தடையும் பிள்ளைகளுக்கோ அங்கு காணும் காட்சி பேரதிர்ச்சியைத் தருகின்றன.

  ஆம்.. அங்கு தன்னுடைய தாயார் நிறைமாத கர்ப்பிணி கோலத்தில் கையில் பிரசவ வார்டுக்கான துண்டு சீட்டுடன் அடுத்த ரவுண்டு கடலுக்கு கிளம்ப தந்தையுடன் ஆயத்தமாகிக்கொண்டு இருப்பதை பார்த்து ஒருகணம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்பது அந்தோ பரிதாபம்.

  நமக்கோ குழந்தைகளின் பரிதாபநிலையைப் பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை.. ம்ம்.. இளைய தளபதி விஜய்ணா சொன்னதுபோல "வாழ்க்கை ஒரு வட்டம்"தான் போங்க!!.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  1. பதில்கள்
   1. வருக நண்பரே !!! ... சரியாக சொன்னீர்கள் ... அதில் ஒன்று பயங்கர கருப்பா இருக்கு ... மற்றொன்று கருப்பா பயங்கரமா இருக்கு ... ஹஹஹா...

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.