"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மின்மினிப்பூச்சி - The nature of Fireflies and their life cycle.

மின்மினிப்பூச்சி - The nature of Fireflies and their life cycle.

மின்மினிப்பூச்சி.

minmini poochi.

Part - 3.

ஆச்சரியம் நிறைந்த மின்மினிபூச்சிகளைப்பற்றி "மின்மினிப்பூச்சி - Firefly" என்னும் இப்பதிவின் மூலம் தொடர்ந்து  பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இது மூன்றாவது பகுதி.

இதுவரையில் "மின்மினிப்பூச்சி - Fireflies and their Species and Bioluminescence" என்னும் முதல் பகுதியில் மின்மினிப்பூச்சியைப்பற்றிய அடிப்படை விஷயங்கள், "பயோலூமினஸென்ஸ்", மின்மினியின் பேரினங்களைப்பற்றிய குறிப்புகள் மற்றும் சிற்றினங்களைப்பற்றிய விபரங்கள் பலவும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகிய "மின்மினிப்பூச்சி - Fireflies and their subfamilies" என்னும் இரண்டாவது பதிவில் இதன் துணை குடும்பங்களை பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம்.

அதன் தொடர்ச்சியாகிய மூன்றாவது பகுதியான இப்பகுதியில்  மின்மினிப்பூச்சிகளின் தன்மை மற்றும் அதன் வாழ்க்கை சுழற்சி பற்றிய கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

    மின்மினிப் பூச்சி - Firefly

    மின்மினி பூச்சிகள் பொதுவாக வெப்பமண்டல பிரதேசங்களையே தாங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்கின்றன. அதேவேளையில் அது அதிக அளவு நீர்வளம் நிரம்பிய இடமாக இருக்கவேண்டியதும் அவசியம்.

    ஏரிகள், குளங்கள், ஆறுகள், நீரோடைகள் அடங்கிய காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் வெளிகள் இவைகளே மின்மினி வாழ்வதற்கான ஏற்ற இடங்கள்.

    சரி, இனி இதனுடைய தன்மை, உடல்கூறுகள் மற்றும் வாழ்க்கை சுழற்சி முறைகளைப் பார்வையிடலாம்.

    உடல் அமைப்பு.

    சிறியவகை வண்டுகளின் குடும்பத்தை சேர்ந்த இது கணுக்காலிகளின் உடலமைப்பைக் கொண்டுள்ளன. இது 0.5 முதல் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்டவையாக உள்ளன. சிறிய தலைகளையும் அதில் பெரிய கண்களையும் கொண்டுள்ளன. 3 ஜோடி இணையான கால்களை கொண்டுள்ளன.

    உடலிலிருந்து தலை தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தலையில் ஆண்டனா போன்ற இரண்டு உணர்நீட்சிகள் உள்ளன.

    இவைகள் இரண்டு ஜோடி கடின மற்றும் மெல்லிய இறக்கைகளை கொண்டுள்ளன. இரண்டு ஜோடி இறக்கைகளில் மேற்புறமாக அமைந்துள்ளது "எல்ட்ரா" (elytra) என்னும் 1 ஜோடி கடின ஓடுபோன்ற பாதுகாப்பு இறக்கைகளாகும். இதனுள்ளே பறப்பதற்கு பயன்படும் மென்மையான 1 ஜோடி இறக்கைகள் பாதுகாப்பாக உள்ளன.

    firefly - elytra

    ஆண் மற்றும் பெண் இரண்டிற்குமே இறக்கைகள் உண்டு என்றாலும் இதிலுள்ள சில இனங்களைச் சேர்ந்த பெண் பூச்சிகளுக்கு முற்றிலுமாக இறக்கைகள் இருப்பதில்லை.

    பொதுவாக உடலமைப்பில் ஆண் மின்மினி பூச்சியைவிட பெண் மின்மினி பூச்சிகள் சற்று பெரியவை.

    கருப்பு, சாம்பல், பழுப்பு என பல்வேறுபட்ட நிறங்களுடன் இவைகள் காணப்படுகின்றன. இவைகளின் ஒளிவீசும் உறுப்புகளின் திசுக்கள் இரு அடுக்குகளாக அமைந்துள்ளன. அடுக்குகளின் உள்ளே கசகசா அளவில் அதைவிட தட்டையாக வட்டவடிவில் உறைபோன்ற அமைப்பு பல இருப்பதைக்காணலாம்.

    இந்த உறைபோன்ற அமைப்பை கிழித்து உள்ளே பார்த்தால் மெல்லிய மாவு போன்ற ஒளிவீசும் பொருள் இருப்பதை வெறுங்கண்களாலேயே காணமுடியும்.

    இனப்பெருக்கம்.

    ஆண் மின்மினிப்பூச்சிகள் வான்வெளியில் பறந்துகொண்டே தன் இன பெண்பூச்சிகளை கவரும்பொருட்டு தன் இனத்துக்கே உரித்தான குறிப்பிட்ட இடைவெளியுடன் விட்டு விட்டு ஒளியை உமிழ்கின்றன.

    தாவரங்களின் கிளைகளில் அமர்ந்துகொண்டு இதனை பார்க்கும் பெண் பூச்சியோ "கண்ணுக்கொண்டேன் வந்தது யாரென்று கண்டுகொண்டேன்" என்று குதூகலித்து பதிலுக்கு ஒளியை தூது அனுப்ப மெல்ல மெல்ல ஒரு காதல் நாடகம் அரங்கேறுகிறது.

    நான்கு பருவங்கள்.

    அனைத்துவகையான வண்டு இனங்களைப்போல மின்மினி பூச்சியும் நான்கு விதமான வாழ்க்கை சுழற்சி நிலைகளை கொண்டுள்ளன. அவை..

    1. முட்டை.
    2. லார்வா என்னும் புழு வருவம்.
    3. பியூபா என்னும் கூட்டுப்புழு பருவம்.
    4. வண்டு பருவம்.

    முட்டை - Egg.

    காதல் வாழ்க்கை தந்த பரிசாக பெண் மின்மினி பூச்சிகள் சுமார் 20 முதல் 50 க்கும் மேற்பட்ட முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் இளம் மஞ்சள் நிறத்தைக் கொண்டவை.

    பெரும்பாலும் மின்மினிப்பூச்சிகள் ஈரப்பாங்கான மணலில் குழி அமைத்து முட்டையிடுகின்றன அல்லது தாவர புதர்கள், இலை குப்பை கூழங்கள் நிறைந்த பகுதிகளில் முட்டையிடுகின்றன. வெப்பமண்டல பிரதேசங்களை சார்ந்த மின்மினிப்பூச்சிகள் மரத்தின் தண்டுகள், இலைகள், பாறை இடுக்குகளில் முட்டையிடுகின்றன.

    பொதுவாக மின்மினிப்பூச்சிகள்  ஈரப்பாங்கான நீர்நிலை நிறைந்த இடங்களையே முட்டையிடுவதற்கு தேர்ந்தெடுக்கிறது. அதற்கு காரணம் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு உணவாகத் தேவைப்படும்  நத்தை, மண்புழு மற்றும் சிலவகை பூச்சிகள் ஈரப்பாங்கான நிலம் மற்றும் நீர்நிலைகளின் அருகில்தான் கிடைக்கின்றன.

    முட்டையிலிருந்து வெளிவரும் தன்னுடைய குழந்தை உணவுக்காக அங்குமிங்கும் அலையவேண்டி வந்துவிடக்கூடாதே என்கிற தாய்ப்பாசமே இவைகளை ஈரப்பாங்கான இடங்களில் முட்டையிட தூண்டுகிறது.

    இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இதன் முட்டையும் ஒளிவீசும் தன்மையை பெற்றிருப்பதே.

    firefly egg - glow

    அனைத்து இன மின்மினி பூச்சிகளின் முட்டைகளும் ஒளி வீசுவதில்லை. ஒருசில இனங்களின் முட்டைகள் மட்டுமே ஒளிவீசுகின்றன. அதுவும் மிக மங்கலான ஒளியையே வெளியிடுகின்றன.

    முட்டைகள் எப்போதும் ஒளிவீசிக்கொண்டே இருப்பதில்லை. முட்டைகளின் அருகில் சென்று கைகளால் தட்டினாலோ அல்லது எதாவது தொந்தரவு கொடுத்தாலோ அவைகள் குறைந்த அளவில்  ஒளிர்கின்றன. இது ஒருவேளை முட்டைகளை "ஆம்லெட்' போடவரும் எதிரிகளை எச்சரிப்பதற்காக இருக்கலாம். சும்மாவா சொன்னார்கள் விளையும் பயிர் முளையிலேயே தெரியுமென்று!!.

    பொதுவாக மின்மினி பூச்சியிலுள்ள ஆயிரக்கணக்கான இனங்களில் பெரும்பாலான இனங்களிலுள்ள பெண்களுக்கு பறக்கும் தன்மை இருப்பதில்லை. இதிலும் ஒரு நன்மை உள்ளது. பறக்கும் பெண் பூச்சியைவிட பறக்கும் தன்மையற்ற பெண் மின்மினிப்பூச்சிகள் அதிகம் முட்டைகளை இடுகின்றன. இது அவைகளின் இனம் தாறுமாறாக பெருகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

    காலநிலையை பொறுத்து இம்முட்டைகள் பொரிக்க 3 முதல் 6 வாரங்கள்வரை ஆகலாம். வெப்பமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் 3 முதல் 4 வாரங்களுக்குள்ளாகவே பொரித்துவிடும். 4 வாரங்களில் முட்டையிலிருந்து இளம் புழு வெளியேறும். இவைகள் "லார்வாக்கள்" எனப்படுகின்றன.

    முட்டை மட்டுமல்ல அதிலிருந்து வெளிப்படும் லார்வாக்களும் ஒளிவீசும் தன்மையை பெற்றிருப்பது ஆச்சரியமே!. (சரிதான்.. அப்பனுக்கு புள்ள தப்பாமல் பொறந்திருக்கு).

    லார்வா பருவம் - Larva.

    முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களை நாம் "லார்வா" என்கிறோம். ஆனால் இந்த மின்மினி பூச்சியின் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் அது புழுக்கள் வகையை சார்ந்தது அல்ல. உடலிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட தலைகளையும், ஆறு கால்களையும் கண்டம் கண்டங்களாக பிரிக்கப்பட்ட உடல்பகுதிகளையும்  கொண்டுள்ளன. எனவே இது வண்டுகள் வகையை சார்ந்தது எனலாம்.


    firefly - larva

    இந்த லார்வாக்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் உள்ளன. தட்டையான உடலமைப்பைக் கொண்டுள்ளன. இவைகளில் நிலப்பரப்பில் வாழ்பவை மற்றும் நீர் பரப்பில் வாழ்பவை என இரு வகைகள் உள்ளன.

    இது லார்வாக்கள் வளர ஈரமான சூழ்நிலை தேவை. இவைகள் மண்ணில் மறைந்தோ அல்லது தாவரங்களின் இலைகள் மற்றும் மரப்பட்டைகளில் தன்னை மறைத்துக்கொண்டோ வாழ்க்கை நடத்துகின்றன.

    புழு வடிவில் உள்ள இந்த லார்வாக்களும் மின்மினி பூச்சியைப்போலவே ஒளிவீசும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே சில சமயங்களில் இது "பளபளப்பு புழுக்கள்" (glow worms) எனவும் அழைக்கப்படுகின்றன. இது உடலின் கடைசிப்பகுதியில் பச்சை மற்றும் மஞ்சள் நிற ஒளியை கொண்டுள்ளது.

    லார்வாக்கள் நத்தைகளையும், மண்புழுக்களையும், இன்னும் சில புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொண்டு வளர்கின்றன.

    இதன் முகத்தில் உள்ள கொடுக்கு போன்ற அமைப்பின்மூலம் இரைகளை மயக்கமடையச்செய்ய ஒரு வேதிப்பொருளை இரைகளில் உடலில் செலுத்துகின்றன. இரைகள் மயக்கமடைந்தபின் செரிமான நொதிகளை அவைகளின் உடலில் செலுத்துகின்றன. சிறிது நேரத்தில் அவைகளின் உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் கூழ்போல் மாறிவிடும். அதன்பின் அதனை உறிஞ்சு சாப்பிட்டு பசியாறுகின்றன.

    இந்த லார்வா பருவம் 1 முதல் ஒன்றரை வருடம் வரை நீடிக்கின்றன.

    கூட்டுப்புழுப்பருவம் - Pupa.

    லார்வா பருவத்தின் முடிவில் "பியூபா" (pupa) என்று சொல்லப்படும் கூட்டுப்புழு பருவம் ஆரம்பமாகின்றன.

    கூட்டுப்புழு பருவம் தொடங்குவதற்கு முன்னால் அது தன்னை தயார் படுத்திக்கொள்ள மண்ணிற்குள் ஒரு கூடு போன்ற ஒரு அமைப்பை உருவாக்கிக்கொள்கிறது. இங்குதான் அது தன் கூட்டுப்புழு பருவத்தை கழிக்கிறது.


    firefly - pupa

    ஆனால் எல்லா இனங்களுமே இதுபோல மண்ணிற்குள் தன் கூட்டுப்புழு பருவத்தை கழிப்பதில்லை. பதிலாக மரத்தின் பட்டைகளில் தன்னுடைய பின்முனையை இணைத்து அதாவது ஒட்டவைத்தபடி தலைகீழாக தொங்குகின்றன.

    இந்நிலையில் லார்வாவின் மேல்தோல் கடினமாகி பாதுகாப்பு அரணாக கூடுபோல் மாறுதல் அடைய "ஹிஸ்டோலிசிஸ்' (histolysis) என்று அழைக்கப்படும் செயல்பாட்டின்மூலம் உடலை உருமாற்றும் உயிரணுக்கள் வேகமாக செயல்பட தொடங்குகின்றன.

    "ஹிஸ்டோபிளாஸ்ட்கள்" (histoblasts) என்று அழைக்கப்படும் செல் குழுக்களான இது லார்வாவிலிருந்து ஒரு புழுவை கட்டிளம் பூச்சியாக மாற்றும் உயிர் வேதியியல் செயலை தூண்டுகிறது. இதனால் உள்ளிருக்கும் புழுவிற்கு மெல்லமெல்ல இறக்கைகள் முளைக்க...

    "வாடா மாப்புள்ள வயசுக்கு வந்துட்ட.. 
    ரெக்கை முளைச்சு முன்னுக்கு வந்துட்ட"

    என்று ஜொள்ள சாரி... சொல்ல வைக்கும் அளவிற்கு இறக்கைகள் முளைத்த வண்டுகளாக புதிய பரிணாமம் எடுக்கின்றன.

    புழுவை கூட்டுப்புழுவாக உருமாற்றும் இந்த வேதியியல் மாற்றமானது 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கின்றன.

    கட்டிளம் காளை (வண்டு) பருவம்.

    [Adult stage].

    கண்ணைப்பறிக்கும் அழகுடன் முழுமையாக விஸ்வரூபம் எடுத்த மின்மினி பூச்சிகளுக்கு இப்போது ஒரே ஒரு வேலை மட்டுமே பாக்கி இருக்கிறது. அது தன்னுடைய காதலியை கண்டுபிடித்து அதனுடன் இணைந்து "டூயட்"பாடி தன்னுடைய வம்சமான "சூரியவம்சத்தை" பெருக்குவதுதான்.

    ஆனால் இந்த குறுகிய காலத்திற்குள் இது எப்படி சாத்தியம்?!!..

    கஷ்டம்தான்.

    ஆயுளும் வேறு கம்மி. (இன்னும் 2 முதல் 4 மாதங்களுக்குள்ளாகவே ஆட்டம் குளோஸ்).

    இதற்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி... அதான் ஆபத்தில் கைகொடுக்க இருக்கவே இருக்கே "அலாவுதீனும் அற்புத விளக்கும்"!!.

    பயோலூமினஸென்ஸ்.

    ஆம்... இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் அதனிடம் இருக்கும் அற்புத விளக்கான "பயோலூமினஸென்ஸ்" முழு அளவில் பயனளிக்கப்போகிறது.

    "காத்திருந்து காத்திருந்து

    காலங்கள் போனதடி..

    என்று கண்ணீர்வடிக்க விடாமல் கணநேரத்திலேயே காதலியை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதுதான் இந்த பயோலூமினஸென்ஸின் மகத்துவமே!!

    சரி,... மின்மினி பூச்சியின் பின்புறத்தில் ஒளிரும் இந்த "பயோலூமினஸென்ஸ்" என்னும் ஒளியானது எவ்வாறு அதன் துணையை கவர்ந்திழுக்க உதவுகிறது என பார்ப்போமா!.

    பொதுவாகவே "மஞ்சள்" நிறமானது பாலுணர்ச்சியை தூண்டும் தன்மையுடையது. அதுமட்டுமல்லாது, பெண்களை எளிதாக "காதல்" வலையில் விழச்செய்யும் திறனும் இந்த மஞ்சள் நிறத்திற்கு உண்டு. அதனாலேயே பச்சை நிறத்துடன் மஞ்சளும் கலந்த ஒளியை ஆண் மின்மினிப்பூச்சிகள் உற்பத்தி செய்கின்றன.

    yellow for follow

    மஞ்சள் நிறமானது பாலுணர்ச்சியை தூண்டுவதெல்லாம் சரிதான். ஆனால் அந்த பிளாஷ் ஒளியில் மஞ்சளுடன் கலந்திருக்கின்ற அந்த "பச்சை" நிறம் எதற்காக என்கிறீர்களா?...

    பொதுவாக பெண் பூச்சிகள் தங்கள் காதலனை சந்திக்க பசுமையான மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. அதற்கான காரணம் என்னவென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை... உங்களுக்குத்தான் தெரியுமே?....

    "ஹனிமூன்" குளுகுளுவென்று ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சுக்கு சும்மா "ஜில்" என்று இருக்க வேண்டுமென பேதையவள் ஆசைப்படுவதில் தப்பில்லைதானே?...

    இதற்காக கொடைக்கானலுக்கும், ஊட்டிக்குமா போக முடியுமா?...

    எனவே,... காதலனின் வருகைக்காக மாறாத காதலுடன் காத்திருக்கும் காரிகை பசுமையான இலைகளுடன் குளுகுளுவென்று இருக்கும் செடிகொடிகள் அல்லது மரங்களைத் தேர்ந்தெடுத்து அதில் அமர்ந்து கொள்கின்றாள்.

    (பின்னே.... தன்னுடைய "முதலிரவு" ஊட்டியில்தான் நடக்கவில்லை... குளுகுளு ஏசி ரூமிலாவது நடக்கட்டுமே என்ற ஏக்கம் அவளுக்கு மட்டும் இருக்காதா என்ன?.... பாவம் அவளும் ஒரு பெண்தானே... அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகளுடன் இன்னும் சில அரசல் புரசலான ஆசைகளும் இருக்கும்தானே... )

    ஆனால், இங்கு ஆண் பூச்சிகளுக்குப் பிரச்சனை என்னவென்றால் மஞ்சள் நிறத்தை காட்டி பெண் பூச்சிகளை காதல் வலையில் வீழ்த்துவதற்கு முன்னால் காதலி உட்கார்ந்து இருக்கும் பசுமையான மரங்களை முதலில் கண்டறியவேண்டும்....

    பட்டுப்போன மரங்களையோ அல்லது கட்டாந்தரையையோ சுற்றி சுற்றி வந்து பயனில்லையல்லவா?

    எனவே, திக்கற்று நிற்கும் ஆண் பூச்சிகளுக்கு அந்த கும்மிருட்டிலும் பசுமையான இலைதழைகளை அல்லது மரங்களை இனங்காண உதவி செய்வதுதான் இந்த "பச்சை" ஒளியின் வேலை.

    தாழ்வான உயரத்தில் பறந்துசெல்லும் ஆண்பூச்சியின் பின்புறத்திலிருந்து வெளிப்படும் ஒளியில் மஞ்சளுடன் கலந்திருக்கு பிரகாசமான "பச்சை" நிறமானது பசுமையான இலைகளில் பட்டு முழு அளவில் பிரதிபலிக்குமாதலால் அதனைக்கொண்டு அந்த கும்மிருட்டிலும் பசுமையான செடிகொடிகள், மரங்களை கண்டறிவது அந்த காளைக்கு எளிதாகிறது. 

    அவ்வாறான மரங்களை கண்டறிந்த பின்பு பச்சை நிறத்திற்கு வேலையில்லை. அது தன்னுடைய பிரகாசத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள இனி "மஞ்சள்" நிறத்திற்குதான் வேலை.

    ஆம், பச்சைநிறம் தன்னுடைய பிரகாசத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள இப்போது மஞ்சள் நிற ஒளி தன்னுடைய செறிவை அதிகரித்துக் கொள்கிறது.

    அந்த மரத்தையே சுற்றி சுற்றி வரும் ஆண் பூச்சியிடமிருந்து வெளிப்படும் மஞ்சள் நிற "பிளாஷ்" வெளிச்சமானது மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பெண் பூச்சிகளிடம் தூதுசெல்ல காதலனின் வருகையை உணர்ந்துகொண்ட வஞ்சியவள் வாஞ்சையுடன் பதிலுக்கு "பிளாஷ்" அடிக்க..

    ஒருவரை ஒருவர் சிறைபிடிக்க முயன்று முடிவில் இருவருமே சிறை கைதியாகி காதல் வலையில் விழ.. காதல் கெட்டிமேளத்தில் முடிய.. அந்த பச்சைநிற குளுகுளு இலை சில வினாடிகளிலேயே அந்த ஜோடிகளுக்கு கிளுகிளுப்பாக மாற...

    கிளுகிளுப்பாக மாற...

    ... ❤♡☺☺♋ ☺☺♡❤ ...

    ம்.. ம்ம்... அப்புறம்?...

    (இன்னாது அப்புறமா?... செருப்பு பிஞ்சிடும்... நான் என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன்.... சின்னஞ் சிறுசுங்க கொஞ்ச நேரம் அப்படி இப்படி ஒளிவுமறைவா இருக்கத்தான் செய்யும்... அதையெல்லாம் போய் யாராவது எட்டிப் பார்த்துகிட்டு இருப்பாங்களா?....

    பொத்திக்கிட்டு அவரவர் வேலையைப் போய் பாருங்க....)


    mating of fireflies.

    தன் கடமையை முழுமையாக நிறைவேற்றிவிட்ட திருப்தியில் திளைக்கும் அந்த ஜோடிகள் சிலநாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் தன் குழந்தைகளை பார்த்த கையோடு அந்த மகிழ்ச்சி மறைவதற்கு முன்னதாகவே தன் வாழ்க்கையை இனிதே முடித்துக்கொள்கின்றன.

    உணவு முறை.

    லார்வா பருவத்தில் இருக்கும் மின்மினி பூச்சிகள் பெரும்பாலும் அசைவ உணவான நத்தை, புழு, பூச்சிகளையே உட்கொள்கின்றன. ஆனால் பறக்கும் பூச்சியாக உருவெடுத்தபின் இவைகள் என்ன சாப்பிடுகின்றன என்பதனை சரியாக கணிக்க முடியவில்லை.

    விஞ்ஞானிகளில் சிலர் இவை சைவ உணவையே சாப்பிடலாம் என சந்தேகின்றனர். வளர்ந்த மின்மினி பூச்சிகள் பூவிலுள்ள மகரந்தம் மற்றும் தேன்களை உட்கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து.

    ஆனால், "ஃபோட்டூரிஸ்" வகையை சேர்ந்த மின்மினி பூச்சிகள் பிற இன மின்மினிப்பூச்சிகளை ஏமாற்றி தன் இடத்திற்கு வரவைத்து.. என்னவோ உலகிலேயே இவர்தான் பெரிய பரோட்டா மாஸ்டர் என்ற நினைப்பில் அவைகளை கொத்துப்பரோட்டா போடும் வேலையில் இறங்கிவிடுகின்றன.

    தற்காப்பு முறை.

    இவைகள் வெயில் காலத்திலும், வேனிற்காலத்திலும் மண்ணுக்கடியில் மறைந்து வாழ்கின்றன.

    மின்மினி பூச்சிகளின் எதிரி என்று சொல்லவேண்டுமென்றால் பறவைகளை குறிப்பிடலாம். ஆனால் பறவைகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இது ஒரு உபாயத்தை கையாளுகின்றன.

    "லூசியுபஜின்" என்னும் ஒரு வேதிப்பொருளை தன் உடலில் உற்பத்தி செய்கின்றன. பூச்சியினங்களில் இதன் உடலில் மட்டுமே இது உற்பத்தியாகிறது. இந்தப்பொருளானது தன்னுடலை பறவைகளுக்கு சுவையற்றதாக மாற்றிவிடுகிறது. எனவே மீண்டும் ஒருதடவை பறவைகள் இதனை சுவைக்க விரும்புவதில்லை. இதனால் பறவைகளிடமிருந்து இவைகள் எளிதாக தப்பிவிடமுடியும்.

    ஆனால் பறவைகளிடமிருந்து தப்பிவிடும் இவைகளால் சிலந்திகளிடமிருந்து தப்பவே முடிவதில்லை. சிலந்திவலைகளில் மாட்டிக்கொள்ளும் இவைகளை சிலந்திகள் சத்தமே இல்லாமல் "சமோசா" போட்டுவிடுகின்றன.

    மின்மினிப்பூச்சிகளின் அடுத்த எதிரி என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பூரான் போன்ற கணுக்காலிகளை குறிப்பிடலாம். ஆனால் மின்மினிப்பூச்சிகளின் மிகப்பெரிய எதிரி தவளைகள்தான்.

    வௌவால்கள் மின்மினி பூச்சிகளை வேட்டையாடுகின்றனவா என ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆராய்ச்சியின் பயனாக பெரும்பாலான வௌவால் இனங்கள் மின்மினி பூச்சிகளை சாப்பிடாமல் தவிர்க்கின்றன என தெரியவருகிறது.

    ஆனால் வௌவால்களில் பலவகையான இனங்கள் இருப்பதால் அவைகளில் ஏதாவது ஒன்று மின்மினிகளை சாப்பிடும் திறனை பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. இன்னும் ஆராய்ச்சிகள் முடிந்தபாடில்லை.

    புரியாத புதிர்.

    சிலவகை மீன்கள், சிலவகை கரையான் மற்றும் சிலவகை கணுக்காலிகள் இவைகளெல்லாம் நீல நிறமான ஒளியை உமிழ்கின்றன.

    ஊதா மற்றும் நீல நிற ஒளிகளால் பூச்சிகள் கவரப்படுகின்றன என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்குறிப்பிடுள்ள உயிரினங்கள் நீலநிற ஒளியை தன் உடலிலிருந்து வெளிப்படுத்தி பூச்சிகளை கவர்ந்திழுத்து உணவாக உட்கொள்ள இவைகளை பயன்படுத்துகின்றன என்பது சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்மினி பூச்சியின் ஒளிதான் ஆராய்ச்சியாளர்களைப் பாடாய்படுத்துகிறது.

    ஏனெனில், இந்த ஒளிகளை இவைகள் எதற்காகவெல்லாம் பயன்படுத்துகின்றன என்பது இன்னும் முழுமையாக புரியாத புதிராகவே உள்ளன.

    தன்னுடைய துணையை இனம் கண்டுகொள்ள இதனை பயன்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இது உண்மைதான் என்றாலும்கூட இன்னும் சிலவகை மின்மினி பூச்சிகளோ தன்னுடைய லார்வா பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவம் வரை மட்டுமே ஒளிவீசுகின்றன. அதன்பிறகு ஒளிவீசும் தன்மையை முற்றிலுமாக இழந்துவிடுகின்றன.

    அதாவது, இணைதேடும் பருவத்தில் ஒளிவீசும் தன்மையை முற்றிலுமாக இழந்துவிடுகின்றன. இது எதற்காகவென்று புரியவில்லை.

    மேலும் இதன் முட்டைகளும் ஒளிவீசுகின்றன. அப்படியெனில் முட்டைகள் எந்த இணையை கவர்ந்திழுக்க ஒளிவீசுகின்றன என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

    மின்மினிப்பூச்சிகளின் உடலில் உற்பத்தியாகும் "பயோலூமினஸென்ஸ்" என்னும் ஒளியின் பயன்பாடு நிறையவே இருக்கலாம். ஆனால் தன்னுடைய ஜோடிகளை இனங்கண்டுகொள்ளவும் இதனை பயன்படுத்துகிறது என்பது பல ஆராய்ச்சிகள்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    ஆனால், ஒளிவீசும் தன்மையற்ற மின்மினி பூச்சிகள் நிறையவே உள்ளன. இம்மாதிரியான மின்மினி பூச்சிகள் பெரோமோன்களின் (Pheromones) வாசனையை உணர்ந்து தன் இனத்தை கண்டறிந்துகொள்கின்றன.

    "பெரோமோன்கள்" என்பது ஒவ்வொரு பூச்சிகளும் தங்கள் இனங்களை கண்டறிய, கவர்ந்திழுக்க இனப்பெருக்க காலங்களில் வெளிப்படுத்தும் ஒருவித வாசனை.

    சரி இப்போதைக்கு இந்த மின்மினி பூச்சியினால் மனிதகுலத்திற்கு ஏதாவது நன்மை உள்ளதா என்பதனை மட்டும் பார்ப்போம்.

    நன்மைகள்.

    இந்த மின்மினி பூச்சியால் நமக்கு சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. லார்வா பருவத்தில் இருக்கும் மின்மினிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் நத்தைகளை உணவாக உட்கொள்கின்றன. மேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் சில பூச்சிகளையும் உட்கொள்கின்றன. இதனால் இவைகளை விவசாயிகளின் நண்பன் என அழைக்கலாம்.

    ஜப்பானில் வயல்வெளிகளில் ஏராளமான மின்மினி பூச்சிகள் வலம் வருகின்றன. அவைகள் பயிரை பாதிக்கும் பூச்சிகளை பிடித்து சாப்பிடுகின்றன. இதனால் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து பயிர்கள் எளிதாக பாதுகாக்கப்படுகிறது.

    எனவே, மின்மினிபூச்சிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஜப்பானியர்கள் அதற்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர். மின்மினி பூச்சிகளை தங்கள் முன்னோர்களின் ஆத்மாக்கள் என கொண்டாடுகின்றனர்.

    ஆபத்தில் மின்மினி பூச்சிகள்.

    மின்மினி பூச்சிகள் தற்போது எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன. இதற்கு காரணம் ஒளிமாசுபாடு என்கிறார்கள். இந்த ஒளி மாசுபாடுகளை ஏற்படுத்துவது மனிதர்களாகிய நாம்தான்.

    இரவையும் பகலாக்கும் மின் விளக்குகளால் மின்மினி பூச்சிகள் குழப்பம் அடைகின்றன. இதனால் மின்மினிப்பூச்சிகளின் பயோலூமினஸென்ஸ் தன்மையில் தடை ஏற்படுகின்றன. இதனால் அதன் இனத்தை கண்டறிவதில் குழப்பம் ஏற்படுவதால் இணைசேர்க்கை தடைபடுவதோடு மின்மினி பூச்சிகள் விருத்தியாகும் விகிதம் மிக அதிக அளவில் குறைகின்றன.

    இப்பூச்சிகள் எண்ணிக்கையில் குறைவதற்கு மற்றொரு காரணம் நாம் பயன்படுத்தும் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் எனலாம்.

    மின்மினிகள் பெரும்பாலும் ஈரப்பாங்கான மணல்கள், தாவர குப்பை கூளங்கள், தாவர தண்டுகள் மற்றும் இலைகள் இவைகளில் முட்டையிடுவதால் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளால் கருவிலேயே கருவறுக்கப்படுகின்றன.

    Disaster caused by pesticides

    நீர்நிலைகளில் கொசுக்களின் லார்வாக்களை ஒழிப்பதற்காக தெளிக்கப்படும் மருந்துக்களாலும் மின்மினிப் பூச்சிகளின் முட்டை மற்றும் லார்வாக்கள் சிதைக்கப்படுகின்றன என்பதும் வேதனை.

    இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்கானது மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கானது என்னும் உண்மையை உணர்ந்து இயற்கையோடு இசைந்துவாழ உறுதிகொள்வோம்.

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.