"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Cardamom cultivation and crop protection.

Cardamom cultivation and crop protection.

ஏலக்காய் சாகுபடி.

Elakkai Sagupadi.

          வாசனைப் பொருட்களின் ராணி (Queen of the spices) என அழைக்கப்படும் நறுமணப்பயிர் எது தெரியுமா?

உலகிலேயே விலையுயர்ந்த வாசனை மசாலாக்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள ஏலக்காய்க்குத்தான் "வாசனை பொருட்களின் ராணி" என்னும் உயரிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Queen of the Spices.

அறுசுவைக்கும் அருஞ்சுவை ஊட்டும் ஏலக்காய்களின் தன்மை மற்றும் அதன் நோய் தீர்க்கும் பண்புகளை பற்றி "ஏலக்காய் - Green and Black Cardamom" என்னும் பதிவில் ஏற்கனவே பார்த்து விட்டோம். பார்க்காதவர்கள் கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

👉 "green-and-black-cardamom-tamil" 👈

இந்த பதிவில் ஏலக்காய்கள் சாகுபடி செய்யும் விதத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

    ஏலக்காயில் பிரதானமாக இருவகைகள் உள்ளன. ஒன்று "பச்சை ஏலக்காய்" (Green Cardamom) மற்றொன்று "கருப்பு ஏலக்காய்" (Black Cardamom).

    இந்த இரண்டு வகையான ஏலக்காய்களுமே சமையலிலும், மருத்துவ துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு ஏலக்காய்களைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களை முதலில் பார்ப்போம்.

    பச்சை ஏலக்காய்.

    [Green Cardamom]

    திணை :- தாவரம்.

    பெயர் :- பச்சை ஏலக்காய்.

    வேறு பெயர்கள் :- சிறிய ஏலக்காய், சிறு ஏலம்.

    ஆங்கில பெயர் :- Green Cardamom.

    ஹிந்தி பெயர் :- எலாச்சி.

    தாவரவியல் பெயர் :- எல்ட்டேரியா கார்டமோம் - Elettaria Cardamomum.

    இனம்  :- எலெட்டேரியா - Elettaria.

    குடும்பம் :- ஜிங்கிபெரேசி (Zingiberaceae).

    வரிசை :- ஜிங்கிபெரல்ஸ் (Zingiberales).

    துணைக்குடும்பம் :- அல்பினியோய்டே - Alpinioideae.

    இனப்பெருக்கம் :- வேர்த்தண்டு கிழங்குகள் மற்றும் விதைகள்.

    தாயகம் :- இந்தியா (India).

    பயிராகும் நாடுகள் :- இந்தியா (India), பூடான் (Bhutan), நேபாளம் (Nepal), ஸ்ரீலங்கா (Sri Lanka), இந்தோனேசியா (Indonesia), தாய்லாந்து (Thailand), தான்சானியா (Tanzania), குவாத்தமாலா (Guatemala), கோஸ்டாரிகா (Costa Rica), எல் சால்வடோர் (EL Salvador), பப்புவா நியூ கினியா (Papua New Guinea), ஹோண்டுராஸ் (Honduras), வியட்னாம் (Vietnam).

    இந்தியாவில் பயிராகும் இடங்கள் :- கேரளம் (Kerala), கர்நாடகம் (Karnataka), தமிழ்நாடு (Tamil nadu).

    தாவரத்தின் வளர்ச்சி :- 2 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம்வரை.

    தாவரங்களின் தன்மை.

    green cardamom tree

    இலைகளின் தன்மை.

    கரும்பச்சை நிறமான மெல்லிய இலைகள். நீளம் 30 செ.மீ முதல் அதிகப்படியாக 60 செ.மீ. வரை. அகலம் 8 செ.மீ.

    இலைகளிலும் நறுமணம் உண்டு. தேநீர் தயாரிப்பதற்கும், கீரைகளாக சமைத்துண்ணவும் பயன்படுத்தப்படுகிறது.

    மலர்களின் தன்மை.

    வெண்மையும் சிவப்பும் கலந்த ஒற்றை இதழைக்கொண்ட சிறிய மலர்கள். முதன்மையான ஒரு பெரிய இதழையும், வெளிர்பச்சை நிறமான மூன்று பக்கவாட்டு சிறிய இதழ் மடல்களையும் கொண்டுள்ளன.

    green cardamom flower

    காய்களின் தன்மை.

    காய்கள் பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும். வாசனையை தக்கவைக்கும் பொருட்டு முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே அறுவடை செய்யப்படுவதால் விற்பனைக்கு வரும் காய்கள் பச்சை நிறத்தை பெற்றுள்ளன.

    ஒவ்வொரு காய்களும் 15 முதல் 20 வரை விதைகளை கொண்டுள்ளன. இவ்விதைகள் 3 முதல் 4 மாதங்களில் முதிர்ச்சியடையும்.

    green cardamom pods

    இனங்கள்.

    இந்த பச்சைரக ஏலக்காய் தாவரங்களில் பலவகை கலப்பு இனங்கள் உள்ளது என்றாலும் அதில் 7 வகையான இனங்களே மிக முக்கியமானவை. அவை

    1. மைசூர் இனம் (Mysore)
    2. மலபார் இனம் (Malabar).
    3. வழுக்கா இனம் (Vazhukka).
    4. வாலயார் இனம்,
    5. துவாலவல்லி.
    6. கன்னி ஏலம்.
    7. மார்சராபாத்.

    இதுதவிர இன்னும் பலவகை கலப்பு இனங்களும் உள்ளன.

    மைசூர் இனம்.

    1. ஐசிஆர்ஐ 2. (ICRI 2)

    இந்த ரகமானது 2 முதல் 3 மீட்டர் உயரம்வரை வளரும் தன்மையுடையது. உறுதியான தண்டுகளைக் கொண்டது. நீண்ட காம்புகளுடன் கரும்பச்சை நிற அகன்ற இலைகளை கொண்டது. நிமிர்ந்த பூங்கொத்துக்களையும், வித்துக்கள் நிரம்பிய நீண்ட காய்களையும் கொண்டுள்ளன. இதில் ICRI 1, ICRI 2, ICRI 3 என பல ரகங்களும் உண்டு.

    மலபார் இனம்.

    1. முடிகிரி 1. (Mudigree 1).
    2. முடிகிரி 2. (Mudigree 2).
    3. பிவி 1 (PV 1).
    4. பிவி 3 (PV 3).
    5. ஐசிஆர்ஐ 1 (ICRI 1).
    6. ஐசிஆர்ஐ 3 (ICRI 3).
    7. ஐசிஆர்ஐ 8 (ICRI 8).
    8. டிகேடீ 4 (TKD 4).
    9. ஐ ஐ எஸ் ஆர் ஸ்வர்ணா (IISR Suvarna).
    10.  ஐ ஐ எஸ் ஆர் விஜிதா (IISR Vijetha).
    11. ஐ ஐ எஸ் ஆர் அவினாஷ் (IISR Avinash).
    12. TDK - 11.
    13. CCS-1.
    14. Suvasini.
    15. Avinash.
    16. Vijetha 1.
    17. Appangala 2.
    18. Njallani (Green gold).

    2 மீட்டர் அளவே வளரும் நடுத்தர ரகம். சிறுத்த இலைக்காம்புகளுடன் நீண்டும், குறுக்கியதுமான இலைகளை கொண்டிருக்கும். பூங்கொத்துக்கள் தலைசாய்ந்த நிலையிலே காணப்படும். இதன்காய்களும் நீண்டும் குறுகியதுமாக பல்வேறு அளவுகளில் காணப்படும். வறட்சியை தாங்கி வளரும் இது பூச்சி தாக்குதல்களையும் சமாளித்து வளரும் இயல்புடையது.

    வழுக்கா இனம்.

    1. பிவி 2 (PV2).
    2. பிவி 5 (PV5).
    3. MCC -12.
    4. MCC -16.
    5. MCC -40.

    மைசூர் மற்றும் மலபார் ஆகிய இரு ரகங்களையும் கலப்பினம் செய்து அதன்மூலம் உருவானதுதான் இந்த வழுக்கா ரகம். எனவே இரண்டிலுமுள்ள சிறப்பு குணங்களையும் ஒருசேர இவைகள் பெற்றுள்ளன. மைசூர் ரகத்தைப்போல உறுதியான தண்டுகளை கொண்டது. காய்கள் பருமனாக இருப்பது இதனுடைய சிறப்பம்சம்.

    வாலயார் இனம்.

    இது கலப்பினத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரகம். இது நல்ல நீளமான காய்களை உற்பத்தி செய்வதில் சிறந்தது.

    துவாலவல்லி.

    இதுவும் கலப்பினம்தான். இதன் பூங்கொத்துகள் சிறப்பான தோற்றத்தில் அமைந்திருக்கும். இதன் காய்கள் பிற ஏலக்காய்கள் போலல்லாமல் இளஞ்சிவப்பு நிறத்தில் கவர்ச்சியாக காணப்படுவது இதன் தனி சிறப்பு. காய்கள் மட்டுமல்லாது தண்டு, இலை, பூ அனைத்துமே கவர்ச்சியான தோற்றத்தில்தான் காணப்படுகின்றன.

    கன்னி ஏலம்.

    இது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்வதில் சிறந்தது.

    மார்சராபாத்.

    கன்னி ஏலத்தைப்போல இதுவும் ஓரளவு வறட்சியை தாங்கிவளரும் தன்மையுடையது.

    கருப்பு ஏலக்காய்.

    [Black Cardamom].

    பெயர் - கருப்பு ஏலக்காய்.

    வேறுபெயர்கள் :-  பெரிய ஏலக்காய், மலை ஏலக்காய், பழுப்பு ஏலக்காய், வங்காள ஏலக்காய், நேபாள ஏலக்காய், சிறகு ஏலக்காய் மற்றும் காட்டு ஏலம்.

    இந்தி :- பாடி எலாச்சி, காளி எலாச்சி, பிக் எலாச்சி, ஹீல் காலன்.

    ஆங்கிலம் - Black Cardamom.

    black cardamom

    தாவரவியல் பெயர் :- அமோமம் சுபுலட்டம் Amomum Subulatum.

    வரிசை :- ஜிங்கிபெரல்ஸ் (Zingiberales).

    குடும்பம் :- ஜிங்கிபரேசி - Zingiberaceae.

    பேரினம் :- அமோமம் - Amomum.

    இன வகைகள்.

    இதில் முக்கியமாக இரண்டு இன வகைகள் உள்ளன. அவை -

    1. அமோமம் சுபுலட்டம்.
    2. அமோமம் சாவோ-கோ.

    இந்த இரண்டைத்தவிர "அஃப்ராமோம்" என்று ஒரு இனமும் உள்ளது.

    தாயகம் :- இந்தியாவின் கிழக்கு இமயமலைப்பகுதி.

    மண்வளம் :- வடிகால் வசதியுள்ள கரிம சத்துக்கள் நிறைந்த மண்களில் செழித்து வளர்கின்றன.

    வளரும் காலநிலை :- குளிர்ச்சியான வனப்பகுதி, மலைகள், மலைகளின் சரிவுகள் ஆகிய இயற்கை சூழ்ந்த பகுதிகளில் வளர்கின்றன.

    பயிராகும் இடங்கள் :- நேபாளத்தில்தான் (Nepal) இது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தபடியாக இந்தியா (India), சீனா (China) மற்றும் பூடான் (Bhutan).

    தாவரத்தின் தன்மை.

    இத்தாவரம் 1.5 முதல் அதிகப்படியாக 5 மீட்டர் உயரம்வரை வளர்வதுண்டு. இவைகள் பருமனான வெளிறிய சிவப்புநிற வேர்த்தண்டு கிழங்குகளை கொண்டுள்ளன. இவைகளிலிருந்து புதிய கன்றுகள் உற்பத்தியாகின்றன. வேர்கிழங்குகள் உருளைக்கிழங்கைப்போல வேகவைத்து உண்ணப்படுகின்றன.

    black cardamom tree with flower

    இலைகளின் தன்மை.

    அடர்பச்சை இலைகளை கொண்டுள்ளன. இலைகளின் நீளம் 50 செ.மீ. அகலம் 5-15 செ.மீ. இலைகள் கீரைபோல சமைத்துண்ணவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மலர்களின் தன்மை.

    5 செ.மீ விட்டமுள்ள மலர்கள். உட்பக்கம் மஞ்சள் நிறத்தை பார்டராக கொண்டுள்ளதோடு இளஞ்சிவப்பு மற்றும் நீலமும் வயலட்டும் கலந்த கோடுகளையும் கொண்டுள்ளன. மலர்களை தாங்கி நிற்கும் மஞ்சரிகள் வேர்த்தண்டு கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.

    காய்களின் தன்மை.

    ஒவ்வொரு பூக்களிலும் 0.8 முதல் 1.5 செ.மீ அளவுகொண்ட காய்கள் உற்பத்தியாகின்றன. தோல்கள் கரடுமுரடாகவும் சுருக்கங்களுடனும் காணப்படும். காய்களின் விட்டம் 2 - 2.5 செ.மீ.

    பழங்களின் தன்மை.

    தாவரத்தின் வகைதனை பொறுத்து பழுப்பு, பச்சை, சிவப்பு நிற பழங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு பழங்களும் பிசுபிசுப்பான சதைப்பகுதிகளை கொண்டுள்ளன. பழங்கள் உண்ணத்தகுந்தவை.

    black cardamom fruit

    விதைகளின் தன்மை.

    ஒவ்வொரு காய்களின் உள்ளும் சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களைக் கொண்ட விதைகள் உள்ளன. விதைகளின் எண்ணிக்கை 15 முதல் 20 வரை இருக்கலாம். இதனுடைய சுவைகள் கற்பூர சுவையை ஒத்ததாக சிறிது காரமாக இருக்கும்.

    சாகுபடி & பயிர் பாதுகாப்பு.

    ஏலக்காய்கள் இருமுறைகளில் பயிர் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று "வேர்த்தண்டு நடவு முறை". மற்றொன்று "விதை நடவு முறை".

    வேர்த்தண்டு நடவு முறை.

    ஏலச்செடிகள் வேருடன் தடித்த வேர்த்தண்டு கிழங்குகளையும் கொண்டுள்ளன. இந்த வேர்த்தண்டு கிழங்கிலிருந்து நிறைய கன்றுகள் உற்பத்தியாவது உண்டு. இந்த வேர்த்தண்டு கிழங்குகள் 10 முதல் 15 ஆண்டுகள்வரை உயிர்ப்புடன் இருந்து தொடர்ந்து கன்றுகளை உற்பத்தி செய்யும்.

    இந்த கன்றுகளை  தாய்மரத்திலிருந்து தனியாக பிரித்தெடுத்து நடவு செய்யும் முறையையே "தண்டு நடவுமுறை" என அழைக்கப்படுகிறது. இந்த நடவுமுறை எளிதானது. விதை விதைத்து அது மெதுவாக வளர்ந்து பலன்தருவதற்கு நெடுநாட்கள் காத்திருக்கவேண்டியதுபோல் இதற்கு காத்திருக்க வேண்டியதில்லை.

    கன்றுகள்மூலம் நடப்படும் இம்முறையால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரைவாக செடிகள் வளர்ந்துவிடுவதோடு உடனடியாக பூ பூத்து காய்க்கவும் ஆரம்பித்துவிடுகின்றன. இதனால் இந்த நடவுமுறையே பன்னெடுங்காலம் நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் இந்த நடவு முறையை தற்போது யாரும் பின்பற்றுவதில்லை. ஏனெனில் இந்த நடவுமுறை அடிப்படையில் எளிமையானதாக தோன்றினாலும் நடைமுறையில் தீர்க்கவே முடியாத சில சிக்கல்களை கொண்டுள்ளது.

    அது யாதெனில், முதிர்ந்த செடிகளின் வேர் தண்டிலிருந்து கன்றுகளை  பெறுவதால் தாய் தாவரத்தில் என்னவிதமான நோய்த்தொற்று உள்ளதோ அது அப்படியே கன்றுகளையும் தொடருகின்றன.

    மேலும், இக்கன்றுகள் நோய்களையும், தன்னைத்தாக்கும் பூச்சிகளையும்  எதிர்த்து நிற்கும் வலிமையையும் இழந்து நிற்பதால் இவைகள் நோயெதிர்ப்புசக்தி அற்றதாகவே காணப்படுகின்றன. இதனால் தாவரம் எளிதாக பூச்சி தாக்குதல்களுக்கு உள்ளாவதோடு மகசூலும் பெருமளவில் குறைகின்றன. எனவே தற்காலங்களில் விதை நடவுமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றன.

    விதை நடவு முறை.

    இம்முறையில் நன்கு முற்றிய காய்கள் சேகரிக்கப்பட்டு மேல்தோல் நீக்கி உள்ளிருக்கும் விதைகள் சேகரிக்கப்பட்டு சுத்தமான நீரில் கழுவி சுத்தப்படுத்தப் படுகின்றன.

    அதன்பின் 3 நாட்கள் நிழலில் நன்கு காயவைத்து விதைப்பதற்கு முன்னால் கந்தக காடியில் 2 நிமிடங்கள் ஊறவைத்து பக்குவம் செய்யப்படுகிறது. அதன்பின் அதனை எடுத்து ஒருநாள் முழுவதும் நீரில் ஊறவிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் கன்றுகள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும். பின் பக்குவப்படுத்தப்பட்ட விதைகளை விதைப்பதற்கு நிலத்தை தயார்படுத்த வேண்டும்.

    நிலத்தை தயார் செய்தல்.

    விதைகள் அக்டோபர் நவம்பர் மாதங்களில் விதைக்கப்படவேண்டியது அவசியம். அவ்வாறு மேற்குறிப்பிட்ட மாதங்களில் விதைத்தால்தான் பருவநிலை மாற்றங்கள் பயிர்களுக்கு கைகொடுக்கும்.

    விதைப்பதற்கு முன்னால் நிலத்தில் மண் பரிசோதனை செய்து கார அமிலத்தன்மை 4.2 முதல் 6.6 க்கும் மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    விதைப்பாத்தி அமைப்பதற்கு முதலில் நிலத்தை நன்கு ஆழ உழுதல் வேண்டும். அதன்பின் அதில் முக்கால் அடி உயரத்தில் மக்கிய தழைகளால் வளப்படுத்தப்பட்ட மண்களை கொண்டு மேட்டுப்பாத்திகள் அமைத்தல் வேண்டும். பாத்திகளில் மரசாம்பலுடன் மக்கிய தொழு உரம் கலந்து பொடி செய்து தூவவேண்டும். அதன்பின் பாத்திகளில் விதைகளை வரிசையாக விதைக்கலாம்.

    1 அங்குல இடைவெளியில் கால் அங்குல ஆழம்கொண்ட குழியில் விதைகளை விதைக்கவும். அதன்பின் காலையும், மாலையும் தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்துவர வேண்டியது அவசியம். கடுமையான வெயில்களால் விதைகள் பாதிக்காத அளவு பாத்திகளை மக்கிய இலைதழைகளால் மூடி வைக்கவேண்டியதும் அவசியம்.

    Cardamom cultivation

    20 - 40 நாட்களில் விதைகள் முளைவிட ஆரம்பிக்கும். உடனே பாத்திகளிலுள்ள இலைதழைகளை அகற்றுவதோடு வெயில் மற்றும் மழையினால் கன்றுகள் பதிப்படையாத வகையில் பந்தல் அமைக்கப்படவேண்டியது அவசியம்.

    நாற்றுகளுக்கு அதிக அளவில் நைட்ரஜனும் குறைந்த அளவில் பொட்டாசியமும் கலந்த கரிம உரங்களை அளிக்கவேண்டும். தரைப்பகுதி எப்போதும் ஈரப்பதமாக இருத்தல் அவசியம். அதேவேளையில் நீர் தேங்கி நிற்கவும் அனுமதித்தல் கூடாது. வடிகால் வசதி மிகமிக அவசியம்.

    நாற்றுகள் ஓரளவு வளர்ந்தவுடன் குறிப்பாக 6 அல்லது 8 மாதங்கள் வளர்ந்த நாற்றுக்கள் தனியாக பிரிக்கப்பட்டு மற்றொரு பாத்தியில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் அதிகப்படியாக 1 அடி இடைவெளிவிட்டு நடவேண்டும். போதிய அளவு கரிம உரமும் நீர்பாசனமும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

    சரியாக 1 வருடம் கழித்து மீண்டும் இந்த நாற்றுகள் பிடுங்கப்பட்டு ஜூன், ஜுலை மாதங்களில் பருவமழை ஆரம்பித்தவுடன் விவசாய நிலங்களில் முறையாக நடவு செய்யப்படுகின்றன.

    மூன்று அடி அகலம் ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுத்து அதில் இலை, தழை, குப்பைகளை போட்டு அதனுடன் தொழுஉரமும் சேர்த்து மேல் மண்மூடி 1 மாதம் வரை நன்கு மக்கும்படி செய்யவேண்டும்.

    1 மாதம் கழித்து அதன்மேல் கையால் குழிதோண்டி அதில் ஏலக்காய் செடிகளை நடவேண்டும். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்குமான இடைவெளி சராசரியாக 8 க்கு 8 அடி அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இம்முறையில் 1 ஏக்கருக்கு 400 செடிகள்வரை நடவு செய்யமுடியும்.

    இவ்வாறு விதைகள்மூலம் பயிர் செய்யப்படும் செடிகள் நோய்த்தாக்குதல் மற்றும் பூச்சித்தாக்குதலை எளிதில் சமாளிக்கும் திறனை பெற்றிருக்கும். நீர்ப்பாசனம் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் கொடுத்தால் போதுமானது.

    உர மேலாண்மை.

    அனைத்து வகையன கரிம உரமும் ஏற்றது. தாவரங்களுக்கு மக்கிய தொழுஉரம், மக்கிய இலைதழைகள் மற்றும் கலப்பு உரங்கள் இடுவதோடு  அவ்வப்போது களைகள் அகற்றப்பட வேண்டியதும் அவசியம்.

    செடிகளை சுற்றிலும் 1 அடி தள்ளி மணல்களை கிளறிவிட்டு தேவையான அளவு கலப்பு உரங்களை அவ்வப்போது தூவ வேண்டியதுவும் அவசியம்.

    [1 ஹெக்டேருக்கான அளவு]

    மக்கிய கம்போஸ்ட் - 15 கிலோ.

    தழைசத்து - 35 கிலோ.

    பாஸ்பரஸ் - 35 கிலோ.

    பொட்டாஷ் - 75 கிலோ வீதம் ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொடுக்கவேண்டும்.

    ஊட்டச்சத்து மிகுந்த மண்வளமும், மிதமான ஈரப்பதமும் இவைகள் செழித்துவளர மிகவும் அவசியம்.

    வளரும் சூழ்நிலை.

    இது வளர்வதற்கு 22⁰ C ல் இருந்து 35⁰ C வரை வெப்பம் தேவை. 15⁰ C ற்கும் குறைவான வெப்பநிலை நிலவும் பட்சத்தில் தாவரத்தின் வளர்ச்சி பாதிப்படையும்.

    மேலும் நேரடியான சூரிய ஒளி இதனை பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இதற்கு சூரிய வெளிச்சம் மட்டுமே போதுமானது எனவே உயரமான மரங்களின் நிழலில்தான் இது வளர்க்கப்படவேண்டும்.

    வீட்டு தோட்டங்களில் ஏலக்காய்.

    உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்... வீட்டிற்கு தேவைப்படும் அளவில் குறைந்த அளவு ஏலக்காய்களை பெறும்பொருட்டு ஒன்றிரண்டு ஏலக்காய் செடிகளை வீட்டிலேயே வளர்த்து பயனடைய முடியுமா ? என்பதுதான் அது.

    உங்களுக்கான பதில்..

    தாராளமாக வளர்க்கலாம்.

    ஆனால், ஒரு கண்டிஷன்... ஏலக்காய் வேண்டுமென்றால் நீங்கள் கடையில் போய்தான் வாங்கவேண்டும்??!!

    காரணம்..

    ரொம்ப சிம்பிள்..

    நீங்கள் வைத்த ஏலக்காய் செடி ஆளுயர வளர்ந்து நிற்கும்... ஆனால் பூக்காது, காய்க்காது.

    ஏனெனில், இது ரொம்ப தெர்மோபிலிக்கான தாவரம். அதிகமான உஷ்ணம் பொருந்திய காலங்களில் இந்த குழந்தைக்கு அதிக அளவில் நிழல் தேவை. குளிர் பொருந்திய காலங்களிலோ செல்லத்துக்கு குளிர் தாங்காது. குளிருக்கு இதமாக கொஞ்சம் கதகதப்பு தேவை.

    எனவே, "பொத்தி பொத்தி வளர்க்க வேண்டிய பிள்ளையப்பா இந்த மேகல... அதுக்கு இன்னும் வெட்கம் விட்டு போகல... நம்ம வீட்டு சூழ்நிலைகளெல்லாம் இந்த பச்ச மண்ணுக்கு ஒத்துக்காதுய்யா"..

    பயிர் பாதுகாப்பு பராமரிப்பு.

    பிற பயிர்களைப்போல் அல்ல இது. அதிக அளவு பராமரிப்பு தேவைப்படும் தாவரம். அதிக அளவில் பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் தாவரமும் இதுவே. எனவே மிக கவனமாக கண்காணித்தாலன்றி மகசூல் பெறுவது கடினம்.

    இதற்கு வருடத்திற்கு 3 தடவை "களை" எடுக்கவேண்டியது அவசியம். தற்காலங்களில் களைகளை களைவதற்கு களைக்கொல்லிகளை பயன்படுத்திவருகின்றனர்.

    நேரடியான சூரியனின் தாக்கத்தை தாங்கிக்கொள்ளும் திறன் இத்தாவரத்திற்கு இல்லையாதலால் குறைந்த அளவு சூரிய ஒளியுடன் தேவையான அளவு நிழலும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நிழல் கிடைப்பதற்கு தேவையான அளவு உயரமான மரங்களை ஆங்காங்கே நட்டுவைக்க வேண்டியதும் அவசியமாகிறது. வேங்கை, முள்முருங்கை போன்ற நிழல்தரும் மரங்களை தேர்ந்தெடுத்து வளர்த்துவரலாம்.

    Cardamom crop protection

    இத்தாவரம் அதிக அளவில் வெயிலினால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக அதன் வளர்ச்சியும் மகசூலும் பெருமளவில் பாதிக்கப்படும். அதிகம் காற்றுவீசும் பகுதியும் ஏற்றதல்ல. காற்றில் அதிக ஈரப்பதமும் மிதமான தட்பவெப்ப நிலையும் இருந்தால் இது செழித்து வளரும்.

    நோய் பாதிப்புகள்.

    அந்துப்பூச்சிகள்.

    ஏலக்காய் செடிகளில் நோய் பாதிப்பு என்பது பெரும் சவாலாகவே உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்துப்பூச்சி பாதிப்பை குறிப்பிடலாம். அந்துப்பூச்சியின் லார்வாக்கள் இதன் வேர்கள் மற்றும் தண்டுகளை ஒருவழி செய்துவிடுகின்றன. இந்த புழுக்களால் பாதிக்கப்படும் செடிகள் ஒருசில வாரங்களிலேயே வாழ்விழந்து வாடிப்போய்விடுகின்றன. எனவே இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

    இதனை கட்டுப்படுத்த :-

    • பி.எச்.சி மருந்துக்கலவையை நீரில் 2% கலந்து தாவரங்களின் அடிப்பகுதியில் தெளித்துவரலாம்.
    • ஆல்ட்ரின் அல்லது க்ளோர்டென் பூச்சி மருந்தை 1% நீரில் கலந்து தெளிக்கலாம்.

    மஞ்சள் கம்பளி புழுக்கள்.

    ஏலக்காய் செடியில் பாதிப்பை ஏற்படுத்துவதில் இதற்கு இரண்டாவது இடம்.

    இவைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

    ஒன்று தாவரத்தின் தண்டினில் இருந்துகொண்டு தண்டினை துளைத்து சாறினை உறிந்து மரத்தை மரணத்தின் விளிம்புக்கே கொண்டுசெல்கின்றன. மற்றொருவகை இலைகளில் உட்கார்ந்துகொண்டு இலைகளை டிஸைன் டிஸைனாக தின்று முதலுக்கே மோசம் விளைவிக்கின்றன.

    கட்டுப்படுத்தும் முறை :- இதை தடுப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது கம்பளி புழுக்களால் பாதிப்படைந்த செடிகளை வேரோடு பிடுங்கி தொலைவில் கொண்டுபோய் எரித்துவிட வேண்டியதுதான்.

    எரிப்பதோடு நம்முடைய பணி முடிந்துவிடுவதில்லை. கம்பளி புழுக்களால் பாதிப்படைந்த செடிகள்நின்ற பகுதிகளில் பிற செடிகளும் இப்புழுக்களால் பாதிப்படையாமல் தடுக்கும்வண்ணம் மருந்து தெளிக்கவேண்டியது அவசியம்.

    1 % என்டோஸல்ஃபஸ் அல்லது 1% மானோக்ரொடோஃபஸ் அல்லது 1% ஃபாஸ்லோன் பூச்சிக்கொல்லி மருந்தை நீரில் கலந்து மாதம் ஒருமுறை தெளித்துவரவேண்டும்.

    ரோம கம்பளி புழுக்கள்.

    இதன் உடலில் அதிக அளவில் உரோமம் உள்ளதால் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவைகள் முதலில் வேறு எதாவது ஒரு பெரியமரங்களின் அடிப்பகுதியில்தான் உற்பத்தியாகின்றன. அதன்பிறகு ஏலச்செடியின் வாசம் மூக்கைத்துளைக்க மொத்த குடும்பமும் சத்தமில்லாமல் வந்து குடியேறிவிடுகின்றன. எனவே இது ஒரு வந்தேறி இனம். இலைகள்தான் இவைகளுக்கு உணவு. எனவே இவைகளின் வரவால் செடிகள் இலைகளின் இழப்பால் களையிழந்து போகின்றன.

    கட்டுப்படுத்தும் முறை :- "மனோக்ரோ டோஃபஸ்" (Monocrotophos) அல்லது "மெதில் பராதியான்" (Methyl parathion) மருந்தை 1% நீரில் கலந்து மேற்கண்ட கம்பளிப்புழுக்கள் ஏலச்செடிகளுக்கு வருவதற்கு முன்னாடியே அதாவது பெரியமரங்களின் அடிப்பகுதியில் இருப்பதைக் கண்டறிந்து அங்கேயே மேற்கண்ட மருந்தை தெளித்து ஒழித்து விடுவதே சிறப்பு.

    நூற்புழு.

    "நெமாடோட்" (Nematode) எனப்படும் நூற்புழு தாவரங்களின் வேர்களை கடுமையாக பாதிக்கின்றன. இது ஏலக்காய் செடியை பாதித்தால் வேர்களில் முடிச்சுகள், கரணைகள் தோன்றும். இதனால் வேர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தாவரங்களின் வளர்ச்சி குன்றும். இதனால் இலைகளில் நீர்வளம் குறைந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும்நிலை ஏற்படுகின்றன.

    கட்டுப்படுத்தும் முறை :- நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கை வேர்ப்பகுதியில் தூவிவரலாம். பார்மலின் மருந்தினையும் தெளித்துவரலாம்.

    மேலும் நூற்புழுவைப்போலவே தோற்றமளிக்கும் ஆனால் அதைவிட சிறியதாக உள்ள ஒருவகை நுண்புழு இனமும் செடிகளை பாதிக்கின்றன. இதனை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 10 கிலோ அளவில் "டெமிக் 10 ஜி" கிருமி நாசினி மருந்தை செடிகளின் வேர்களில் தூவுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

    சாறு உறிஞ்சும் பூச்சிகள்.

    ஏலக்காய்செடியை பாதிக்கும் பூச்சி இனங்களில் மிக முக்கியமானவை "த்ரிப்ஸ்" (Thrips) என்னும் ஒருவித சாறு உறிஞ்சும் பூச்சி. இலைகளில் இருந்துகொண்டு இலைகளிலுள்ள சாறுகளை உறிந்துகுடிப்பது மட்டுமல்லாது தாவரத்தின் உயிரையும் சேர்த்தே குடிப்பதுதான் இந்த த்ரிப்ஸ்பூச்சி.

    சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் காணப்படும் இது தண்டு, இலை, வேர் முதலியவைகளை பாதிப்பதில்லை. அதற்குப்பதிலாக இது ஏலக்காய்களையே நேரடியாக பாதிக்கும் ஒரு பூச்சி எனலாம்.

    ஆம், ஏலக்காய்களின் மேலே உட்கார்ந்துகொண்டு அதிலுள்ள சாறுகளை உறிந்து ஏலக்காய்களின் தரத்தையே பாழாக்கிவிடும்.

    நீங்கள் ஏலக்காய்களை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் சிலகாய்களில் சொறிசிரங்குபோல தழும்புகள் இருக்குமல்லவா... அது இந்த பூச்சியின் கைவண்ணம்தான்.

    செடிகள் பூக்கும்போதே அதன் பூக்காம்புகளையும் இது பாதிக்கும். அவ்வாறு பாதித்ததால் பூக்கள் கருகி உதிர்ந்துவிடும்.

    ஏலக்காய் செடியை பாதிக்கும் புழு பூச்சிகளில் மிக அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துவது இந்த "த்ரிப்ஸ்" (Thrips) பூச்சிகள்தான். எனவே அதிக கவனம் எடுத்து இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.

    கட்டுப்படுத்தும் முறை :- "செவின்" மற்றும் "ஃபான்டல்" முதலிய மருந்துகளை தெளித்து இதனை கட்டுப்படுத்தலாம். அல்லது "ஏலாக்ஸ் - க்வினால்பேஸ்" என்னும் மருந்தை 0.05 சதவீதம் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தெளித்துவரலாம்.

    தண்டு துளைப்பான் பூச்சி.

    இதில் இருவகைகள் உள்ளன. ஒன்று தண்டு துளைப்பான் பூச்சி மற்றொன்று வித்து உறை துளைப்பான் பூச்சி.

    செடியின் தண்டை துளைத்து உள்ளே சென்று செடியை முற்றிலுமாக சேதப்படுத்துவது தண்டு துளைப்பான் பூச்சி.

    இரண்டாவது சொல்லப்பட்ட வித்து துளைப்பான் பூச்சியோ காய்களில் துளைபோட்டு உள்ளே சென்று விதைகளை முழுமையாக தின்றுவிடும் ரகம்.

    கட்டுப்படுத்தும் முறை :- இந்த இருவகை பூச்சிக்களையும் ஒழித்துக்கட்டுவகற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்த செடியை இது பாதித்துள்ளதோ அந்த செடியை அப்படியே பிடுங்கியெடுத்துசென்று தொலைவில் கொண்டுபோய் எரித்து விடுவதுதான் ஒரேவழி.

    வெள்ளை ஈக்கள்.

    இவைகளும் ஏலசெடியின் இலைகளை பாதிக்கும் ஒரு பூச்சி இனம். இதனை கட்டுப்படுத்த "டெமக்ரான்" மருந்தை 0.05% என்ற அளவில் பயன்படுத்திவரலாம்.

    செடிப்பேன் மற்றும் கட்டே.

    செடிப்பேன்கள் (Apids) என்னும் நோயானது செடியின் சாறு அத்தனையும் குடித்துவிடும். இதனையடுத்து "கட்டே" (Katte Disease) என்ற கொடிய வைரஸ் நோய் செடியை தாக்கும்.

    ஏலச்செடிக்கு மிகப்பெரிய பாதிப்பை  ஏற்படுத்துவது இந்த கட்டே நோய்தான். இந்த நோய் பாதித்த தாவரத்திலிருந்து நீங்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்கவே முடியாது. எனவே செடிப்பேன் பாதிப்பை கண்டவுடன் "அலார்ட்டாயிக்கடா ஆறுமுகம்" என்ற ரீதியில் செடிப்பேனை விரட்ட  ரெடியாகிவிட வேண்டும்.

    கட்டே நோய் பாதித்தால் ஏலச்செடிகளின் இலைகளின் நடுநரம்பிலிருந்து ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் வெளுத்த பச்சைநிற கோடுகள் வரிவரியாக தோன்றும். இதனால் இலைகளின் மேற்பகுதியும் உட்பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டு செடியின் வளர்ச்சி குன்றி முற்றிலும் பாதிக்கப்படும்.

    கட்டுப்படுத்தும் முறை :- செடிப்பேன் மற்றும் கட்டே நோய் பாதித்த செடிகளை சிறிதும் காலம் தாமதிக்காமல் உடனடியாக பிடுங்கி தூரமாய் கொண்டு சென்று எறித்துவிட வேண்டும். ஏனெனில் இது ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு மிக வேகமாக பரவும் ஒரு கொடிய நோய். இதனை கட்டுப்படுத்த 'டிமிதொட்டே-ரோகார்' என்னும் மருந்தை 0.05% அளவில் நீரில் கலந்து தெளிக்கவும் அல்லது "மீதைல் டெமட்டான்" அல்லது "பாஸ்போமிடான்" தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

    ஈரடி நோய்.

    இது ஒருவகையான பூஞ்சாண நோய். "பிதியம்" என்னும் ஒருவித நுண் கிருமிகளால் ஏற்படுவது. இந்நோயினால் தாவரத்தின் அடிதண்டுப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலுமாக அழுகும் நிலை ஏற்படும். இதனால் இலைகளுக்கு போதிய அளவு நீர்சத்து இல்லாமல் மஞ்சள் நிறத்திற்கு மாறி காய்ந்து உதிர்ந்துவிடும். விரைவிலேயே தாவரமும் உயிரிழக்கும். ஏலசெடிகள் சிறு நாற்றுகளாக இருக்கும் போதே இந்த நோய் தாக்கும்.

    போதிய அளவு இடைவெளிவிடாமல் நெருக்கமாக நாற்றுகளை நடும் பட்சத்தில் இந்நோய் தாக்கும். அதுபோல வேர்ப்பகுதியில் அதிக அளவு நீர் தேங்கி நின்றாலும் இந்நோய் பாதிக்கும். எனவே நாற்றுகளை போதிய அளவு இடைவெளிவிட்டு நடுவதோடு சிறந்த வடிகால் வசதி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

    கட்டுப்படுத்தும் முறை :- இது பெரும்பாலும் மழைப்பொழிவு காலங்களில்தான் தாவரங்களை பாதிக்கிறது. அதுவும் நாற்று பண்ணையிலுள்ள இளங்கன்றுகளையே பாதிக்கிறது. எனவே மழை காலங்களில் நாற்று பண்ணைகளில் "போர்டோ" கலவை மருந்தை தெளித்துவரலாம்.

    இந்த வழிமுறைகளால் நோய் கட்டுப்படவில்லையெனில் நோய் பாதித்த இளங்கன்றுகளை வேரோடு பிடுங்கி எரித்துவிடுவதே சிறப்பு. அத்தோடு நில்லாமல் நோய் பாதித்த செடிகள் நின்ற இடங்களில் உடனடியாக பூஞ்சாணகொல்லி தெளித்துவர இந்நோய் பிற தாவரங்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

    இலைப்புள்ளி நோய்.

    "ஃபிலோஸ்டிக்டா-எலெட்டேரியா சவுத்" என்ற ஒருவித பூஞ்சை பாஃடீரியாக்களால் இலைகளின் ஆரம்பத்தில் புள்ளிபுள்ளியாக தோன்றும் ஒருவித நோய்.

    ஆரம்பத்தில் சிறுசிறு புள்ளிகளாக தோன்றும் இது நாளாக நாளாக புள்ளிகள் பெரிதாகி சிறுசிறு வட்டமாக மாறி, வட்டம் மாவட்டமாக மாறி, அதன்பின் மாவட்டம் மொத்தமும் அப்படியே அழுகி மாநிலத்தில் விழுந்துவிடும் அவலமும் அரங்கேறும்.

    மழைக்காலங்களில் தோன்றும் இந்நோய் ஜூன், ஜுலை மாதங்களில் உச்சநிலையை அடையும்.

    கட்டுப்படுத்தும் முறை :- "காஃப்டஃபோல் - டிஃபால்டன்" என்னும் கலவை மருந்தை ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே மாதம் இருமுறை தொடர்ந்து இலைகளில் தெளித்துவர இதனை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

    செந்தாள் நோய்.

    இது ஒருவித பாஃடீரியாவினால் ஏற்படும் நோய். இந்நோயினால் இலைகள் முதற்கொண்டு மொத்த செடிகளும் கருகி விடும். இதனை ஒழிக்க பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்திவரலாம்.

    மகசூல்.

    ஏலக்காய் தாவரங்கள் சராசரியாக 2 முதல் 4 மீட்டர் உயரம்வரை வளருகின்றன. சரியாக மூன்று வருடங்கள் கழித்தே பூத்து காய்க்கத் தொடங்குகின்றன. என்றாலும் நான்காவது வருடத்தில்தான் அதிக அளவு மகசூலை எதிர்பார்க்கமுடியும். அறுவடை பெரும்பாலும் ஆகஸ்ட்  செப்டம்பரில்தான் நடத்தப்படுகிறது.

    green cardamom

    நாம் முன்பு பார்த்த பச்சை ஏலக்காய் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே பறிக்கப்பட்டு நிழலில் உலர்த்தப்படும். ஆனால் கருப்பு ஏலக்காய்களோ நன்கு முதிர்ந்த பிறகே பறிக்கப்படுகின்றன.

    பறித்தபின்பு நிழலில் உலர்த்துவதற்கு பதிலாக நெருப்பு வெப்பத்தில் புகைமூட்டத்தில் உலர்த்தப்படுகின்றன.

    ஒரு செடி 1 ஆண்டில் சுமார் 2000 காய்கள்வரை காய்க்கும். மிக கவனமாக பராமரிக்கும் பட்சத்தில் அதிக லாபம் தரும் தொழில். 1 வருடத்தில் 1 ஏக்கரில் 1 டன் வரையில் மகசூல் பெறமுடியும்.

    பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய் விதைகளிலிருந்து மருத்துவக்குணம் வாய்ந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    4 கருத்துகள்

    1. 1.1 கிலோ பச்சை ஏலாக்காயின் விலை சராசரியாக எவ்வளவு இருக்கும்.

      2. 1 ஏக்கரில் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை காய் பறிக்கலாம். ஒவ்வொரு முறை பறிக்கும் பொழுதும் 1 ஏக்கருக்கு சராசரியாக எத்தனை கிலோ காய் கிடைக்கும்.

      3. பராமரிப்பு செலவு எவ்வளவு ஆகும் அதை தெளிவாகவும் விரிவாகவும் தெரிவு படுத்தவும்.

      4. இடுக்கி மாவட்டம் கேரளாவில் 1 ஏக்கர் ஏலக்காய் நிலம் 10 வருட குதக்கைக்கு வாங்கலாம் என்று உள்ளேன். ஆண்டுக்கு 120000 ரூபாய் குத்தகை தொகை கேட்கிறார்கள். என்னால் ஆண்டுக்கு குத்தகை தொகை 120000 ரூபாய் , பராமரிப்பு செலவு (40000 ரூபாய் தோராயமாக)மற்றும் லாபம் 80000 ரூபாய் சேர்த்து 240000 ரூபாய் ஆக வருமானம் ஈட்ட முடியுமா?

      தயவு செய்து என்னுடைய சந்தேகங்களை விரைவில் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

      M PRABHU
      9789327304

      உங்கள் அழைப்புகாகவும் காத்துஇருக்கிறேன்

      பதிலளிநீக்கு
    2. தங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பரே!

      1. ஏலக்காய் விலை வருடாவருடம் மாறிக்கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிலோ 5000 வரை விற்றுவந்த ஏலக்காய் சில மாதங்களுக்கு முன்பு கிலோ 1000 த்தைக்கூட தாண்டவில்லை.

      2. 1 ஆண்டுக்கு 6 முறை ஏலக்காய் அறுவடை செய்யப்படுகிறது. இதில் முதல் 3 அறுவடையில் மட்டுமே அதிக அளவு ஏலக்காய் கிடைக்கும். அடுத்த 3 அறுவடையில் விளைச்சல் பாதியாக குறைந்துவிடும்.

      1 ஏக்கரில் கிடைத்த ஏலக்காய்களை ஈரம்போக நன்கு உலர்த்தியபின் எடைபோட்டு பார்த்தீர்களென்றால் 500 லிருந்து 600 கிலோவரை இருக்கும். இயற்கை நமக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே இந்த மகசூல் கிடைக்கும். இயற்கை பாதகம் செய்துவிட்டால் முதலுக்கே பட்டை நாமம்தான்.

      3. செலவு என்று பார்த்தோமென்றால் வேலைக்காரர்களுக்கான சம்பளம், களையெடுப்பு, மருந்தடிப்பு, உரம் என அதிகப்படியாக வருடத்திற்கு 1 லட்சத்திலிருந்து 1.50 லட்சம் வரை செலவு பிடிக்கும். இதையெல்லாம் கணக்கில்கொள்வது மட்டுமல்லாது குத்தகை தொகையையும் கணக்கில் கொண்டு நமக்கு லாபம் கிடைக்குமா? கிடைக்காதா? என நீங்களே கணக்கும்போட்டு பார்த்துகொள்ளுங்கள்.

      ஒன்றை இங்கு கவனத்தில் கொள்ளுங்கள் நண்பரே... "பூட்டான் என்றும் ஏமாற்றமாட்டான்" என்று சொல்லிக்கொண்டு பூட்டான் லாட்டரி வாங்கிக்கொண்டால் உடனே யாரும் லட்சாதிபதியாகி விட முடியாது. லட்சத்தில் ஒருவருக்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் கைகொடுக்கலாம். ஆனால் அனைவருக்குமே அதிர்ஷ்டம் கைகொடுப்பதில்லை... ஏமாற்றமே மிஞ்சும்.

      ஆனால், அனைவருக்குமே கை கொடுக்கும் "விஷயம்" ஒன்று உலகில் உள்ளது. அந்த விஷயத்தை கவனமாக கடைபிடித்தோம் என்றால் எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆம்... அதுதான் "அனுபவம்".

      ஓரு தொழிலை முதல் போட்டு சொந்தமாக தொடங்குவதற்கு முன்னால் அத்தொழிலைப்பற்றிய நேரடி அனுபவங்களை நீங்கள் நிறைய பெற்றிருந்தால் மட்டுமே அத்தொழிலில் சறுக்கல் எதுவும் இல்லாமல் வெற்றிபெறமுடியும். ஆனால், நீங்கள் எழுப்பும் வினாவை வைத்து பார்த்தால் தங்களுக்கு ஏலக்காய் விவசாயத்தைப்பற்றிய போதிய அனுபவம் இல்லையென்றே தோன்றுகிறது.

      எனவே, முதலில் நீங்கள் செய்யவேண்டியது ஒரு ஏலக்காய் தோட்ட தொழிலாளியாக களம் இறங்குவதே. இரண்டு மூன்று வருடங்கள் தொழிலாளிகளோடு தொழிலாளியாக களம் இறங்கி வேலை பார்த்தபின் அதில் கிடைத்த அனுபவங்களைக்கொண்டு முதலாளியாக விஸ்வரூபம் எடுங்கள். இதுவே உங்களுக்கு சறுக்கல் இல்லாத வெற்றியை தேடிக்கொடுக்கும்.

      கண்ணதாசன் சொல்வதுபோல "அனுபவமே ஆண்டவன்". அந்த அனுபவ ஆண்டவனின் கிருபை உங்களுக்கு இருந்தால் வெற்றிமேல் வெற்றியே! எனவே, ஒருவருக்கு பணமோ, வசதி வாய்ப்புகளோ எந்த விதத்திலும் வெற்றிகளைத் தேடித்தரப்போவதில்லை... மாறாக சிறந்த "அனுபவமே" வெற்றியைத் தேடித்தரும். எனவேதான் சொல்கிறேன் முதலில் தோட்டதொழிலாளியாக களம் இறங்குங்கள் அங்கு பெற்ற அனுபவங்களைக்கொண்டு முதலாளியாக முளைத்து எழுங்கள்... உங்கள் "நேரடி அனுபவம்" உங்களுக்கு வெற்றியை தேடித்தர வாழ்த்துகிறேன் . நன்றி!

      பதிலளிநீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.