"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Green and Black Cardamom.

Green and Black Cardamom.

ஏலக்காய்.

Elakkai.

          இஞ்சி மற்றும் மஞ்சள் இனத்தை சேர்ந்த ஏலக்காய் ஒரு வாசனைப்பொருள் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இது உணவிற்கு ரம்மியமான வாசனையை தருவதால் இதற்கு "வாசனைப் பொருட்களின் ராணி" (Queen of the spices) என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. உலகிலேயே விலையுயர்ந்த மசாலாக்களில் இதற்கு மூன்றாவது இடம்.

Green Cardamom.

இஞ்சி, கிராம்பு, மிளகு, மஞ்சள் என்று எத்தனையோ வகையான வாசனை பதார்த்தங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் வாசனை திரவியங்களின் ராணியாக வலம்வருவது ஏலக்காய் மட்டுமே.

  ஏலக்காயின் வரலாற்றை கொஞ்சம் ரீவைண்டிங் அடித்துப்பார்த்தால் இது சுமார் 4,000 வருடங்களுக்கு முந்தையது என தெரியவருகிறது.

  முதன்முதலாக கிரேக்கர்களும், ரோமானியர்களும் இதனை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

  பண்டைய எகிப்தில் இதனுடைய மருத்துவக் குணங்களை கண்டறிந்து நோய்தீர்க்கும் பொருளாக பயன்படுத்தியுள்ளனர். வெறும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமின்றி பலவித சடங்கு சம்பிரதாயங்களுக்கும் இதனை பயன்படுத்திவந்துள்ளனர். குறிப்பாக இறந்தவர்களின் உடலை பதப்படுத்தும் கிரியைகளுக்கு இதனை பயன்படுத்தி வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

  தற்காலங்களில் இதன் ரம்மியமான வாசனையையும், மதுரமான சுவையையும் கருத்தில்கொண்டு அனைவராலும் அடிக்கடி உணவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  விருந்தாக பயன்படும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துவர நோய்தீர்க்கும் மருந்தாகவும் வேலைசெய்கிறது என்பது ஆச்சரியமே .

  இது அஜீரணம் மற்றும் தலைவலிக்கு சிறந்த நிவாரணத்தை தருகிறது. உங்களின் மூச்சுக்காற்றோடு வாயும் நறுமணம்பெற வேண்டுமா தாம்பூலத்தோடு எடுத்துக்கொள்ளலாம். இதனை வெறுமனே வாயில் அடக்கிக்கொண்டாலே போதும் வாய் கமகமக்கும். இது எல்லாவற்றிற்கும் மேலாக ரத்தத்தையும் சுத்தீகரிக்கிறது என்பதுதான் ஹைலைட்.

  ஏலம் போட்டு இறக்காத பாயாசம் பாயாசமே இல்லை என்னும் அளவிற்கு பாயாசத்திற்கு சுவையும் மணமும் கொடுப்பது சாட்சாத் ஏலக்காய்தான்.

  ஏலக்காய் இல்லாமல் செய்யப்படும் கொழுக்கட்டையும் கொழுக்காது என்பதுவும் அனைவரும் அறிந்ததே.

  இத்துணை சிறப்புப்பெற்ற ஏலக்காயைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டாமா ... வாருங்கள் அறிந்துகொள்வோம்.

  Cardamom.

  ஏலக்காயில் பிரதானமாக இருவகைகள் உள்ளன. ஒன்று "பச்சை ஏலக்காய்" (Green Cardamom) மற்றொன்று "கருப்பு ஏலக்காய்" (Black Cardamom).

  Green and Black Cardamom

  இந்த பச்சை ஏலக்காய் மற்றும் கருப்பு ஏலக்காய்களைப்பற்றி தனித்தனியாக ஆராய்வோம்.

  பச்சை ஏலக்காய்.

  [Green Cardamom]

  இந்த ஏலக்காய்க்கு சிறிய ஏலக்காய் என்றொரு பெயருமுண்டு. இது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கேரளம் (Kerala), தமிழ்நாடு (Tamil nadu) மற்றும் கர்நாடகத்தின் (Karnataka) மலைசார்ந்த பகுதிகளிலும், காடுகள் நிறைந்த பகுதிகளிலும் அதிகம் பயிராகின்றன. மருத்துவ குணம் வாய்ந்த இந்த சிறு ஏலக்காயின் பயன்பாடுகள்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

  Green Cardamom

  பெயர் :- பச்சை ஏலக்காய்.

  வேறு பெயர்கள் :- சிறிய ஏலக்காய், சிறு ஏலம்.

  ஆங்கில பெயர் :- Green Cardamom.

  ஹிந்தி பெயர் :- எலாச்சி.

  திணை :- தாவரம்.

  தாவரவியல் பெயர் :- எல்ட்டேரியா கார்டமோம் - Elettaria Cardamomum.

  குடும்பம் :- ஜிங்கிபெரேசி (Zingiberaceae) என்னும் குடும்பத்தை சார்ந்தது. மஞ்சள், இஞ்சி மற்றும் ஏலக்காய் இம்மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள்.

  துணைக்குடும்பம் :- அல்பினியோய்டே - Alpinioideae.

  இனம்  :- எலெட்டேரியா - Elettaria.

  வரிசை :- ஜிங்கிபெரல்ஸ் - Zingiberales.

  தாயகம் :- இதன் பூர்வீகம் இந்தியா (India). உலகம் முழுக்க தன் வாசனையால் விழுதுகளை பரவவிட்ட இந்த ஏலக்காயானது முதன்முதலில் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் தன் வேர்களை பதித்தது.

  இனப்பெருக்கம் :- வேர்த்தண்டு கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

  பயிராகும் நாடுகள்.

  இந்தியா (India), ஸ்ரீலங்கா (Sri Lanka), இந்தோனேசியா (Indonesia), தான்சானியா (Tanzania), குவாத்தமாலா (Guatemala), பூடான் (Bhutan), நேபாளம் (Nepal), கோஸ்டாரிகா (Costa Rica), எல் சால்வடோர் (EL Salvador), ஹோண்டுராஸ் (Honduras), பப்புவா நியூ கினியா (Papua New Guinea), தாய்லாந்து (Thailand), வியட்னாம் (Vietnam).

  முதன்மை நாடு.

  தற்போது ஏலக்காய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு "குவாத்தமாலா" (Guatemala).

  ஜெர்மனை (Germany) சேர்ந்த "ஆஸ்கார் மஜஸ் க்ளோஃபர்" என்பவர் முதலாம் உலகப்போருக்கு முன்னரே குவாத்தமாலாவில் பயிர் செய்யும் பொருட்டு இந்தியாவின் பச்சை ஏலக்காயை அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாக இன்று பச்சை ஏலக்காய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் குவாத்தமாலாவே முதலிடத்தில் இருக்கிறது.

  ஆண்டுக்கு சராசரியாக 25,000 முதல் 30,000 டன் வரை உற்பத்தி செய்கின்றது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஆண்டுக்கு சராசரியாக 15,000 டன் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.

  இந்தியாவில் பயிராகும் இடங்கள்.

  கேரளம் (Kerala), கர்நாடகம் (Karnataka), தமிழ்நாடு (Tamil nadu) ஆகிய மாநிலங்களிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளையொட்டிய காட்டுப்பகுதிகளில் பயிராகிறது. 

  இந்தியாவில் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் கேரளம்.

  இந்தியாவின் ஏலக்காய் ஏற்றுமதி மிக குறைவாகவே உள்ளது. காரணம் உற்பத்தியின் பெரும்பகுதி உள்நாட்டின் தேவைக்கே சரியாக இருப்பதால் ஏற்றுமதி குறைந்த அளவே நடைபெற்றுவருகிறது.

  இறக்குமதி செய்யும் நாடுகள்.

  சவுதி அரேபியா (Saudi Arabia), குவைத் (Kuwait), ஜெர்மன் (Germany), ரஷ்யா (Russia), ஈரான் (Iran), ஜப்பான் (Japan), ஜோர்டான் (Jordan), கத்தார் (Qatar), பாகிஸ்தான் (Pakistan), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates), மற்றும் இங்கிலாந்து (England).

  பயன்பாடு.

  உணவுக்கு சுவையும், மணமும் கொடுக்கும் மசாலாப்பொருளாகவும், நோய்தீர்க்கும் மூலிகை பொருளாகவும் பயன்படுகிறது.

  தாவரங்களின் தன்மை.

  2 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம்வரை வளருகின்றன. இவைகள் வேர்களுடன்கூடிய வேர்த்தண்டு கிழங்குகளை கொண்டுள்ளன. இக்கிழங்கிலிருந்துதான் நிறைய புதியகன்றுகள் உற்பத்தியாகின்றன.

  நிலத்தின் மேற்பகுதிகளில் இரண்டுவித தண்டுகளை கொண்டுள்ளன.

  அதில், ஒன்று இலைத்தண்டு. இவைகளில் இலைகள் மட்டுமே உள்ளன.

  மற்றொன்று பூக்களையும் காய்களையும் தாங்கி நிற்கும் மலர்த்தண்டு. இவைகளில் இலைகள் இருப்பதில்லை. பூக்களும் காய்களும் மட்டுமே உள்ளன.

  இந்த இரு தண்டுகளுமே தனித்தனியாக நிலத்தடியின் கீழிருந்துதான் உற்பத்தியாகின்றன.

  Green Cardamom plant

  இலைகளின் தன்மை.

  கரும்பச்சை நிறமான ஈட்டிவடிவ இலைகள். இவைகள் இலைநடுதண்டின் இருபக்கங்களிலும் இரு அணிகளாக மாறிமாறி அமைந்துள்ளன. இலைகள் 30 செ.மீ முதல் அதிகப்படியாக 60 செ.மீ நீளம் கொண்டவையாக உள்ளன. அகலம் 8 செ.மீ உள்ளன.

  மலர்களின் தன்மை.

  சிறிய மலர்கள். இம்மலர்கள் வெண்மையும் சிவப்பும் கலந்த முதன்மையான ஒரு பெரிய இதழையும், வெளிர்பச்சை நிறமான மூன்று பக்கவாட்டு சிறிய பாதுகாப்பு இதழ் மடல்களையும் கொண்டுள்ளன. முதன்மையான அந்த ஒற்றை இதழில் இளஞ்சிவப்பு மற்றும் வயலட் நிறங்களில் டிசைன் வரையப்பட்டுள்ளது கொள்ளையழகு.

  Green Cardamom flower

  இந்த பச்சை ஏலக்காய்களில் பலரகங்கள் இருப்பதால் அதன் ரகங்களை பொறுத்து மலர்களின் வண்ணங்களும் வடிவங்களும் மாறுபடும்.

  காய்களின் தன்மை.

  காய்கள் பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும். நாட்கள் செல்லச்செல்ல பச்சைநிறம் படிப்படியாக மங்கி பசுமை கலந்த வெண்மை நிறத்தை அடையும்.

  ஒவ்வொரு காய்களும் மூன்று கண்ணறைகளை கொண்டுள்ளதால் வெளிப்புற தோற்றத்தில் மூன்று பக்கங்களை கொண்டுள்ளது.

  காய்கள் ஒவ்வொன்றும் 1முதல் 2 செ.மீ நீளம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு காய்களும் 15 முதல் 20 வரை கருப்பு மற்றும் பழுப்பு நிற விதைகளை கொண்டுள்ளன. இவ்விதைகள் முதிர்ச்சியடைவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகலாம். முதிர்ச்சியடைந்த விதைகள் கருப்பு நிறத்தில் காணப்படும். ஒரு செடி 1 ஆண்டில் சுமார் 2000 காய்கள்வரை காய்க்கும்.

  Cardamom pods

  வாசனையை தக்கவைக்கும் பொருட்டு முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே அறுவடை செய்யப்படுவதால் விற்பனைக்கு வரும் காய்கள் பச்சை நிறத்தை பெற்றுள்ளன. நன்கு முதிர்ச்சியடைந்த காய்கள் வெளிறிய வெண்மை நிறத்தை பெறும்.

  வகைகள்.

  இதில் பலவகை கலப்பு இனங்கள் உள்ளது என்றாலும் அதில் ஏழு வகைகளே மிக முக்கியமானவை. அவை..

  இனங்கள்
  மைசூர் ரகம் - Mysore
  மலபார் ரகம் - Malabar
  வழுக்கா ரகம் - Vazhukka
  வாலயார் ரகம்
  துவாலவல்லி
  கன்னி ஏலம்
  மார்சராபாத்

  இதுதவிர இன்னும் பலவகை கலப்பு இனங்களும் உள்ளன.

  மேற்குறிப்பிட்டுள்ள இனங்களில் பல வீரிய ஒட்டுரகங்களும் உள்ளன. அவை...

  வீரிய ஒட்டுரகங்கள்
  ஐசிஆர்ஐ 1 (ICRI 1)
  ஐசிஆர்ஐ 2 (ICRI 2)
  ஐசிஆர்ஐ 3 (ICRI 3)
  முடிகிரி 1 (Mudigree 1)
  முடிகிரி 2 (Mudigree 2)
  பிவி 1 (PV 1)
  பிவி 2 (PV 2)
  டிகேடீ 4 (TKD 4)
  ஐ ஐ எஸ் ஆர் ஸ்வர்ணா (IISR Suvarna)
  ஐ ஐ எஸ் ஆர் விஜிதா (IISR Vijetha)
  ஐ ஐ எஸ் ஆர் அவினாஷ் (IISR Avinash)
  நிஜாலனி (Njallani - Green gold)


  மேற்குறிப்பிடுள்ள இனங்கள் மற்றும் வீரிய ஒட்டுரகங்களைப்பற்றியும், சாகுபடி விபரங்களை பற்றியும் இப்பதிவின் இரண்டாவது பகுதியாகிய "ஏலக்காய் சாகுபடி - Cardamom cultivation and crop protection." என்னும் பதிவில் விரிவாக காணலாம்.

  பச்சை ஏலக்காயின் பயன்கள்.

  இது ஒரு தனித்துவமான காரமான இனிப்புச்சுவை கொண்டது. உணவுகளில் மதுரமான சுவையை ஏற்படுத்தவும், உணவுப்பண்டங்கள் ரம்மியமான வாசனையை பெறுவதற்காகவும் இவைகள் உதவுகின்றன. இதை எந்த உணவுடன் சேர்த்தாலும் அதன் சுவையையும் மணத்தையும் கண நேரத்திற்குள்ளாகவே உயர்த்தும். இனிப்பான உணவு பண்டங்களில் இவைகள் சேர்க்கப்படும்போது அவைகள் சிறப்பான வரவேற்பை பெறுகின்றன.

  மாமிசம் சார்ந்த உணவுகளில் மட்டுமல்லாது பிஸ்கட், கேக், ஊறுகாய், மதுபானங்கள், சுயிங்கம் முதலியவைகளிலும்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  மேலும் தேநீர், காபி மற்றும் சுவைமிகுந்த மசாலாபால் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

  மருத்துவ பயன்கள்.

  வெறும் சுவைத்தரும் பொருளாக மட்டுமல்லாது ஆரோக்கியம் காக்கும் சஞ்சீவியாகவும் இது திகழ்கிறது.

  இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க விருப்பமா? அப்படியெனில் உங்கள் உணவுப்பொருட்களில் ஏலக்காய் கட்டாயம் இடம்பெற வேண்டியது அவசியம். இதய செயலிழப்பு, கை,கால் வலிப்பு நோய்களுக்கும் பயனளிக்கிறது.

  அஜீரணம், வாயு பிரச்சனையை நீக்குகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. வாயில் அடக்கிக்கொள்ள வாய்க்கு புத்துணர்ச்சியை தருகிறது. வாய்நாற்றத்தை உற்பத்தி செய்யும் பாஃடீரியாக்களை அழித்து மூச்சு காற்றுக்கு வாசனையை கொடுக்கிறது.

  நுரைஈரலின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதய துடிப்பை சீராக்குகிறது. ஜீரண உறுப்புகளை முறையாக செயல்பட வைக்கிறது. பெருங்குடலில் தேங்கிநிற்கும் வாயுக்களையும் நீக்குகிறது.

  சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதை மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்கிறது. சிறுநீரையும் பெருக்குகிறது. உடலிலுள்ள அதிகப்படியான உப்பு மற்றும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. அதிகப்படியான கொழுப்பையும் கரைக்கிறது.

  சளியை நீக்கி இருமலை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள நச்சுப்பொருளையும் வெளியேற்றுகிறது. வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

  ஏலக்காயில் வைட்டமின் C உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றி. இது உடல் முழுவதும் இரத்தஓட்டத்தை சீர்படுத்துவதோடு தோல்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

  பொதுவாகவே இதில் மருத்துவகுணம் செறிந்த எளிதில் ஆவியாகும் எண்ணெய்களும், கால்சியம் மற்றும் இரும்பு மூலகங்களும் அதிக அளவில் உள்ளதால் மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  இதில் அடங்கியுள்ள எண்ணெய் சத்துக்கள் இரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதுடன் உடல்வலி, தலைவலி முதலியவைகளை நீக்குவதுடன் மன அழுத்தம் சோர்வு முதலியவைகளையும் போக்குகிறது.

  இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் உணவு செரிமானத்துக்கும் உதவுகிறது. வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாஃடீரியாக்களை கொல்லும் திறனையும் பெற்றுள்ளது.

  துளசி சாற்றில் சிறிது ஏலப்பொடியும் மிளகுப்பொடியும் சேர்த்து குடித்துவர இளகாத கபமும் இளகும்.

  தேனுடன் சிறிது ஏலக்காய்தூள் கலந்து உண்டுவர நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் பலப்படும்.

  ஏலக்காயை வெற்றிலையுடன் சேர்த்து மென்று தின்றுவர அஜீரணம் அகன்று பசி உண்டாகும். வாய் துர்நாற்றம் நீங்கி கமகமக்கும்.

  தொண்டைப்புண்.

  தொண்டைப்புண் உங்களை பாடாய்படுத்துகிறதா? கவலைப்படாதீர்கள்.. உங்களுக்கு தேவை ஏலக்காய்.

  உண்மைதான், ஏலக்காய் பொடி 1 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே இலவங்கப்பட்டை தூளும் 1 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 125 மில்லிகிராம் நல்லமிளகும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை 1 டீஸ்பூன் தேனுடன் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக நக்கி சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 3 தடவை. சில நாட்களில் தொண்டைப்புண் போயேபோச்சு. 

  அதுமட்டுமல்ல, வாய் மற்றும் தொண்டை சார்ந்த தொற்றுநோய்களையும் ஈறு சார்ந்த பாதிப்புகளையும் இது தடுத்து நிறுத்துகிறது.

  ஏலக்காய் எண்ணெய்.

  ஏலக்காய்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஏலக்காயிலிருந்து பெறப்படும் எண்ணெய் வாசனை நிரம்பியது என்பதால் வாசனை திரவியங்கள், லோஷன், சோப்பு மற்றும் பல அழகுசாதன திரவியங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  இந்த எண்ணெய்யில் வைட்டமின் C மற்றும் மாங்கனீசு ஏராளமாக உள்ளன. இவைகள் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குணப்படுத்துவதுடன் சருமத்தையும் அழகாக்குகின்றன.

  Black Cardamom oil

  இந்த எண்ணெய்யானது ஆன்டி-ஆக்சைடு மற்றும் ஆன்டி-பாஃடீரியா தன்மைகளை கொண்டுள்ளதால் பொடுகு பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும்.

  இந்த எண்ணெய்யை உள்ளுக்குள் அருந்திவர சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவி செய்யும்.

  கருப்பு ஏலக்காய்.

  [Black Cardamom].

  பெயர் - கருப்பு ஏலக்காய்.

  ஆங்கிலம் - Black Cardamom.

  இந்தி :- பாடி எலாச்சி, பிக் எலாச்சி, காளி எலாச்சி, ஹீல் காலன்.

  வேறுபெயர்கள் :-  பெரிய ஏலக்காய், மலை ஏலக்காய், காட்டு ஏலம், நேபாள ஏலக்காய், பழுப்பு ஏலக்காய், வங்காள ஏலக்காய் மற்றும் சிறகு ஏலக்காய்.

  Black Cardamom

  தாவரவியல் பெயர் :- அமோமம் சுபுலட்டம் Amomum Subulatum.

  குடும்பம் :- ஜிங்கிபரேசி - Zingiberaceae.

  வரிசை :- ஜிங்கிபெரல்ஸ் - Zingiberales.

  பேரினம் :- அமோமம் - Amomum.

  இன வகைகள்.

  இதில் முக்கியமாக இரண்டு இன வகைகள் உள்ளன. அவை -

  1. அமோமம் சுபுலட்டம்.
  2. அமோமம் சாவோ-கோ.

  இந்திய மற்றும் பாகிஸ்தான் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுவது "அமோமம் சுபுலட்டம்". இதுவே நேபாள ஏலக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. அளவில் கொஞ்சம் சிறியவை.

  சீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படுவது "அமோமம் த்சாவோ-கோ". இது அமோமம் சுபுலட்டத்தைவிட அளவில் கொஞ்சம் பெரியவை.

  இந்த இரண்டைத்தவிர "அஃப்ராமோம்" என்று ஒரு இனமும் உள்ளது. இது ஆப்பிரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

  தாயகம் :- இந்தியாவின் கிழக்கு இமயமலைப்பகுதி.

  இந்தியாவின் கிழக்கு இமயமலைப்பகுதிதான் பூர்வீகம் என்றாலும் இந்த கருப்பு ஏலக்காயை "கரம் மசாலா" என்னும் பெயரில் மசாலா கலவையாக முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு "குவாத்தமாலா".

  வளரும் காலநிலை :- குளிர்ச்சியான வனப்பகுதி, மலைகள், மலைகளின் சரிவுகள் ஆகிய இயற்கை சூழ்ந்த பகுதிகளில் வளர்கின்றன. இது வளர்வதற்கு மரங்களின் நிழல் அவசியம் தேவை.

  மண்வளம் :- வடிகால் வசதியுள்ள களிமண் தன்மையுள்ள கரிம சத்துக்கள் நிறைந்த மண்களில் செழித்துவளர்கின்றன.

  பயிராகும் இடங்கள்.

  நேபாளத்தில்தான் (Nepal) இது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனாலேயே இதற்கு "நேபாள ஏலக்காய்" என்றொரு பெயருமுண்டு.

  நேபாளத்திற்கு அடுத்தபடியாக இந்தியா (India) மற்றும் பூடான் (Bhutan) ஆகிய நாடுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  இந்தியாவில் அஸ்ஸாம் (Assam), மேற்கு வங்காளம் (West Bengal) , அருணாச்சல பிரதேசம் (Arunachal Pradesh), நாகலாந்து (nagaland), மணிப்பூர் (Manipur), திரிபுரா (https://en.wikipedia.org/wiki/Tripura), மேகாலயா (Meghalaya) மற்றும் சிக்கிம் (Sikkim) மாநிலங்களிலுள்ள இமயமலை அடிவாரங்களில் பயிராகிறது. மேலும் சீனாவிலும் (china) பயிராகின்றன.

  தாவரத்தின் தன்மை.

  கருப்பு ஏலக்காய் தாவரம் பருமனான வேர்த்தண்டு கிழங்குகளை கொண்டுள்ளன. இத்தாவரம் 1.5 முதல் அதிகப்படியாக 5 மீட்டர் உயரம்வரை வளர்வதுண்டு. 

  black Cardamom plant

  அடர்பச்சை இலைகளை கொண்டுள்ளன. இரு வரிசைகளில் சின்னஞ்சிறு இலைக்காம்புகளுடனும் அதில் நீள்வட்ட ஈட்டி போன்ற நீண்ட இலைகளும் காணப்படுகின்றன. இலைகளின் நீளம் 50 செ.மீ. அகலம் 5-15 செ.மீ. 

  இந்த இலைகள் சில இடங்களில் கீரைபோல சமைத்துண்ணவும் பயன்படுத்தப்படுகின்றன.

  கிழங்குகளின் தன்மை.

  வெளிறிய சிவப்புநிற வேர்த்தண்டு கிழங்குகளை கொண்டுள்ளன. இவைகளிலிருந்து புதிய கன்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த கிழங்குகளும் சமையலில் பயன்படுத்தப்படுவதுண்டு.

  மலர்களின் தன்மை.

  ரம்மியமான 5 செ.மீ விட்டமுள்ள வெண்மை நிற மலர்கள். மலர்களின் உட்பக்கம் மஞ்சள் மற்றும் நீலநிற கோடுகள் கண்களை பறிக்கின்றன. மலர்த்தண்டுகள் வேர்த்தண்டு கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.

  black Cardamom flower

  ஒவ்வொரு பூக்களிலும் 0.8 முதல் 1.5 செ.மீ அளவுகொண்ட முக்கோண அமைப்பைக்கொண்ட காய்கள் உற்பத்தியாகின்றன.

  இந்த கருப்பு ஏலக்காய்களில் பலரகங்கள் இருப்பதால் அதன் ரகங்களை பொறுத்து மலர்களின் வண்ணங்களும் வடிவங்களும் மாறுபடும். இவைகள் உணவுகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

  காய்களின் தன்மை.

  கருப்பு ஏலக்காய் என்றவுடன் இது கருப்பாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள்! விற்பனைக்கு வரும்போது பார்த்தால் அடர்பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். இது பச்சை ஏலக்காயைவிட அளவில் சற்று பெரியதாக இருக்கும். இது 2 - 2.5 செ.மீ விட்டம் கொண்டது. தோல் கரடுமுரடாகவும் சுருக்கங்களுடனும் காணப்படும். 

  மரத்தில் காயாக இருக்கும்போது பச்சையாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே பழுக்கும்போது ஏலக்காய்களின் ரகங்களைப் பொறுத்து ஊதா (Violet), பழுப்பு (Brown), அடர்பழுப்பு (Dark Brown), சிவப்பு (Red) என பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும். இந்த பழங்கள் ஆப்கானிய உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

  black Cardamom Fruit

  ஒவ்வொரு காய்களுக்குள்ளேயும் பிசுபிசுப்பான திரவத்தை ஒத்த சதைப்பகுதிகளையும் கூடவே சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் கொண்ட விதைகளையும் காணலாம். இவைகளின் எண்ணிக்கை 15 முதல் 20 வரை இருக்கலாம்.

  இந்த கருப்பு ஏலக்காய்களில் பலரகங்கள் இருப்பதால் அதன் ரகங்களை பொறுத்து காய்களின் வண்ணங்களும் வடிவங்களும் மாறுபடும். 

  பச்சை ஏலக்காய்களைப் போலல்லாமல் இதனுடைய சுவைகள் முற்றிலும் மாறுபட்டே காணப்படும். குறிப்பிட்டு சொல்லப்போனால் கற்பூர சுவையை ஒத்ததாக சிறிது காரமாக இருக்கும்.

  இவ்விதைகளிலிருந்து மருத்துவக்குணம் வாய்ந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

  நாம் முன்பு பார்த்த பச்சை ஏலக்காய் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே பறிக்கப்பட்டு நிழலில் உலர்த்தப்படும். ஆனால் இந்த கருப்பு ஏலக்காய்களோ நன்கு முதிர்ந்தபிறகே பறிக்கப்படுகின்றன.

  பறித்தபின்பு நிழலில் உலர்த்துவதற்கு பதிலாக நெருப்பு வெப்பத்தில் புகை மூட்டத்தில் உலர்த்தப்படுகின்றன. எனவே இது ஒருவித புகை வாசனையோடு இருப்பதை காணலாம்.

  வாசனை மற்றும் சுவை பிரமாதமாக இல்லையென்பதால் இதை இனிப்பு சம்பந்தமான உணவுகளில் பயன்படுத்துவதில்லை. கறி மசாலா மற்றும் பருப்புவகை உணவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

  சீனாவில் இறைச்சிவகை உணவுகளில் பயன்படுத்துகின்றனர். வியட்நாமில் நூடுல்ஸ் சூப்களில் மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர்.

  பயன்கள்.

  இது மாமிசம் சார்ந்த கறிவகைகள் மற்றும் பிரியாணி வகை உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வியட்நாம் மற்றும் சீன உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  வடஇந்திய உணவுகளிலும் இவைகளே அதிக அளவில் இடம்பிடிக்கின்றன. நாம் மளிகைக்கடைகளில் "கரம் மசாலா" (Garam masala) என்ற பெயரில் ஒரு மசாலா பாக்கெட் வாங்குகிறோமல்லவா?.. அதிலுள்ள பலவித மசாலா கலவைகளில் இதற்கும் முக்கிய இடமுண்டு.

  வெறும் உணவுக்காக மட்டுமே இந்த கருப்பு பயன்படுவதில்லை. பாரம்பரிய மருத்துவங்களில் இது நோய்தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  முக்கியமாக சீன மருத்துவத்தில் வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.  

  இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள்காமாலை நோய்க்கு இதன் வேர்த்தண்டுக்கிழங்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

  ஆயுர்வேத மருத்துவத்தில் இது பல்வலி (Toothache, Dental Pain) மற்றும் வாய் துர்நாற்றத்தை (Bad Breath) நீக்க பயன்படுத்தப்படுகிறது.

  பசி குறைவு, குமட்டல் (Nausea), அமிலத்தன்மை (Acidity), நெஞ்செரிச்சல் (Heart Burning), மலச்சிக்கல் (Constipation) இவைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுவதோடு தோல் நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  பொதுவாகவே இது இரைப்பை மற்றும் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டுள்ளன. அதோடு சுவாசமண்டலத்தையும் பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

  மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis), காசநோய் (Tuberculosis) முதலிய மூச்சு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை இது குறைக்கிறது. கூடவே இருமல் (Cough), சளி (Cold) தொல்லைகளையும் நீக்குகிறது.

  இரத்த அழுத்தம் (High blood pressure), இரத்த உறைதல் (Blood clot) பிரச்சனைகளை சரிசெய்வதோடு இருதயத்தின் ஆரோக்கியத்தையும் கட்டிக்காக்கிறது. பச்சை ஏலக்காயைவிட கருப்பு ஏலக்காய் இருதயத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

  மேலும் சிறுநீரகங்களையும் (Kidneys), கல்லீரலையும் (Liver) ஊக்குவித்து உடற்கழிவுகளையும், நச்சுக்களையும் திறமையாக நீக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை (urinary bladder), சிறுநீர்ப்பாதை, சிறுநீரக தொற்றுகளையும் (Urine infection) எதிர்த்து போராடுகிறது.

  ஏலக்காய்களுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் திறனோ அல்லது கட்டுப்படுத்தும் திறனோ இருப்பதாக கண்டறியப்படவில்லை. இதனை பரிசோதனைக்காக விலங்குகளுக்கு கொடுத்துப்பார்க்கும்போது புற்றுநோய் செல்கள் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. ஆனால் மனிதர்களுக்கு இது பயனளிக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆராய்சிகள் நடைபெற்றுவருகின்றன.

  கருப்பு ஏலக்காயில் அதிக அளவு மாங்கனீசு (Manganese) நிறைந்துள்ளதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.

  இது பாஃடீரியாவை அழிக்கும் பண்புகளை (Antibacterial) கொண்டுள்ளதால் தோல் ஒவ்வாமைக்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. ஏலக்காய் தூளை தேனுடன் கலந்து தோல்களின் மீது மேற்பூச்சாக பயன்படுத்திவரலாம்.

  ஏலக்காயிலுள்ள சத்துக்கள்.

  [100 கி. ஏலக்காயில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரங்கள்].

  Tamil English Nutrient content
  கலோரி Calories 311 (1302kJ)
  நீர்சத்து Water 8.3 g
  புரதம் Protein 10.8 g
  கார்போஹைட்ரேட் Carbohydrate 68.5 g
  நார்ச்சத்து Fiber 28.0 g
  நிறைவுற்ற கொழுப்பு Saturated Fat 0.7 g
  ஒற்றைநிறைவுறா கொழுப்பு Monounsaturated Fat 0.9 g
  நிறைசெறிவிலி கொழுப்பு Polyunsaturated Fat 0.4g
  ஒமேகா-3 கொழுப்பு அமிலம் Omega-3 fatty acids 120mg
  ஒமேகா-6 கொழுப்பு அமிலம் Omega-6 fatty acids 310 mg
  மொத்த கொழுப்பின் அளவு Total Fat 6.7 g
  பைட்டோஸ்டெரால் Phytosterol 46.0 mg
  சுண்ணாம்பு Calcium 383 mg
  பாஸ்பரஸ் Phosphorus 178 mg
  சோடியம் Sodium 18.0 mg
  பொட்டாசியம் Potassium 1119 mg
  தியாமின் Thiamine 0.2 mg
  ரிபோஃப்ளேவின் Riboflavin 0.2 mg
  நியாசின் Niacin 1.1 mg
  மெக்னீசியம் Magnesium 229 mg
  மாங்கனீசு Manganese 28.0 mg
  இரும்பு Iron 14.0 mg
  தாமிரம் Copper 0.4 mg
  துத்தநாகம் Zinc 7.5 mg
  வைட்டமின் A Vitamin A 0.01 U
  வைட்டமின் B6 Vitamin B6 0.2 mg
  வைட்டமின் C Vitamin C 21.0 mg

  ஆவியாகும் எண்ணெய்கள்.

  Tamil English Nutrient content
  டெர்பினோல் Terpinol 45%
  மைர்சீன் Myrcene 27%
  லிமோனீன் Limonene 8%
  மென்டோன் Menthone 6%
  பெல்லாண்ட்ரீன் Phellandrene 3%
  சினியோல் Cineole 2%
  ஹெப்டேன் Heptane 2%
  சபினீன் Sabinene 2%
  கார்வோன் Carvon -
  பைனின் Pinene -
  ஹீயமுலீன் - -
  யூகேலிப்டோல் - -

  காய்களை சேமிக்கும் முறை.

  இதனை திறந்த வெளியில் வைத்திருந்தால் அதன் தன்மையும், நற்பலன்களும் குன்றும். எனவே எப்போதும் காற்றுப்புகாத கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்தவும். இதன்மூலம் 1 வருடம்வரை அதன் தன்மையையும் சுவையையும் கெடாமல் பாதுகாக்க முடியும்.

  அளவுக்கு மிஞ்சினால்...

  ஏலக்காய்கள் உடலுக்கு நன்மைதான் செய்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை எப்போதும் மென்றுகொண்டே இருப்பது வாய்களில் புண்களை ஏற்படுத்தலாம். அப்படியானவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளவேண்டும்.

  "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதுபோல ஏலக்காய்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் சுவாசிப்பதில் சிரமம் (Difficulty Breathing), மூச்சுத்திணறல் (Shortness of breath) ஏற்படலாம். எனவே அளவோடு பயன்படுத்தி வருவது சிறப்பு.

  ஏலக்காயானது பெருங்குடல் (Large intestine) மற்றும் பித்தப்பை (Gallbladder) இவைகளை அதிக அளவு தூண்டும் தன்மை உடையதாதலால் மேற்குறிப்பிட்ட உறுப்புகளில் அழற்சி உள்ளவர்கள் மற்றும் பித்தம் சார்ந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இதனை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை ஒரு மருந்தாக அதிக அளவில் தினந்தோறும் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  இதுவரை ஏலக்காய்பற்றிய விபரங்களை தெளிவாக தெரிந்துகொண்ட நீங்கள் "ஏலக்காய் சாகுபடி" பற்றிய விபரங்களை விரிவாக அறிந்துகொள்ள வேண்டாமா?.. அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் - ஐ கிளிக் செய்யவும்.

  >> ஏலக்காய் சாகுபடி - Cardamom cultivation and crop protection<<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்