"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
எபிஃபில்லம் தாவர பராமரிப்பு - Epiphyllum Plant Care.

எபிஃபில்லம் தாவர பராமரிப்பு - Epiphyllum Plant Care.

Epiphyllum Plant Care.

தாவர பராமரிப்பு.

Part - 2.

          நாம் "குலேபகாவலி - எபிஃபில்லம் - Epiphyllum - Part 1" என்னும் முந்தைய பதிவில் "எபிஃபில்லம்" என்று அறியப்படும் கள்ளி இன தாவரத்தைப்பற்றி விரிவாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகிய இப்பதிவில் எபிஃபில்லம் பற்றிய மேலும் பல தகவல்களையும், அதன் சாகுபடி மற்றும் பராமரிப்பு விபரங்களைப் பற்றியும் சற்று விரிவாக அலசுவோம் வாருங்கள்.


Epiphyllum Plant.


  எபிஃபில்லம் என்னும் இந்த கள்ளிவகை தாவரம் அழகான வாசனைவீசும் பெரிய மலர்களை உற்பத்தி செய்வதால் தற்போது பலவீடுகளிலும் அழகுச்செடிகளாக வளர்க்கப்பட்டுவருகிறது.

  இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க (Part - 1) கீழேயுள்ள "லிங்க்" [Link] ஐ கிளிக் பண்ணுங்க.

  >> "குலேபகாவலி - எபிஃபில்லம் - Epiphyllum - Part 1" <<

  எபிஃபில்லம்.

  Epiphyllum.


  திணை :- தாவரம் - Plant.

  பிரிவு  :- இருவித்திலை தாவரம் - dicotyledonous plant.

  குடும்பம் :- காக்டேசியே - Cactaceae. (கள்ளி).

  துணைகுடும்பம் :- Cactoideae.

  பேரினம் :- எபிஃபில்லம் - Epiphyllum.

  இனம் :- எ.ஒக்ஸிபெடாலம் - E . oxypetalum.

  வரிசை :- Caryophyllales.

  தாவரவியல் பெயர் :- எபிஃபில்லம் - Epiphyllum.

  ஆங்கில பெயர் :-  Jungle cactus (காட்டுக்கள்ளி), Orchid cactus (ஒர்க்கிட் கள்ளி), Climbing cactus (ஏறும் கள்ளி), Night blooming cereus (இரவு மலரும் கள்ளி).

  தாயகம் :- மெக்சிகோ (Mexico).

  வளரும் நாடுகள்.

  வட, தென் அமெரிக்க கண்டங்கள், இந்தியா (India), சீனா (China), இலங்கை (Sri lanka), ஜப்பான் (Japan), இந்தோனேஷியா (Indonesia), பிரேசில் (Brazil), வெனிசுலா (Venezuela), கோஸ்டாரிகா (Costa Rica), கியூபா (Cuba), குவாத்தமாலா (Guatemala), ஹோண்டுராஸ் (Honduras), நிகரகுவா (Nicaragua).

  வாழிடம்.

  மலையடிவாரங்களிலும், காடுகளிலும் மறைவாக வாழ்ந்துவந்த இவைகள் 1812ம் ஆண்டிற்கு பின்னரே வெளிஉலகிற்கு தெரியஆரம்பித்தன. "அட்ரியன் ஹார்டி ஹாவர்த்" (Adrian Hardy Haworth) என்பவர்தான் இந்த தாவரத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வெளியுலகத்திற்கு தெரிவித்தார்.

  தற்காலங்களில் பலவீடுகளில் அழகுதரும் மலர் செடியாக வளர்க்கப்பட்டு வருகிறது என்றாலும் இது பொதுவாக மலைப்பிரதேசம் மற்றும் சதுப்புநில காடுகளில் வளரும் ஒருவகை கள்ளி இனம்.

  இனப்பெருக்கம்.

  இது தண்டுகள் மூலமாகவும், இலைகள்போல் காட்சிதரும் இரண்டாம்நிலை இலைதண்டுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் தன் இனத்தை பெருக்குகின்றன.

  எபிஃபில்லம் தாவர பராமரிப்பு.

  கள்ளி வகைகளில் ஆர்க்கிட் கள்ளி (orchid cacti), பற்றி படரும் கள்ளி (climbing cacti), இலை கள்ளி (leaf cacti) என பலவகைகள் உள்ளன.

  "ஆர்க்கிடேஸியே" (orchidaceae) என்னும் தாவர குடும்பத்திலுள்ள தாவரங்கள் அனைத்துமே அழகான மலர்களை மலரச்செய்பவை. இதனையே சுருக்கமாக "ஆர்க்கிட்" (orchids) வகை தாவரங்கள் என்கிறோம். ஆனால் இந்த எபிஃபில்லமானது "ஆர்க்கிடேஸியே" குடும்பத்தை சேர்ந்தவை இல்லையென்றாலும், அழகான மலர்களை மலரச் செய்வதால் "ஆர்க்கிட்" (Orchids) ரக கள்ளிகள் என சிறப்புப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

  தாவரத்தின் தன்மை.

  எபிஃபில்லம் என்னும் இந்தவகை தாவரங்கள் ஒரு காக்டஸ் (Cactus) செடி. கள்ளிவகையை சார்ந்தது. மெக்ஸிகோவிலிருந்து கரீபியன் வரை (Mexico to Caribbean) பரவியுள்ளது. சாதாரணமாக 2 முதல் 6 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.

  பாலைவனத்தில் வளரும் கள்ளி இனம்போல இதுவும் கள்ளிவகை  என்றாலும் அதற்கும் இதற்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உள்ளன. பாலைவன கள்ளிகளுக்கு உறுதியான தண்டுகள் உள்ளன. எனவே அவைகள் பிற மரங்களை சார்ந்து வாழ்வது இல்லை. ஆனால் இந்தவகை கள்ளிகளுக்கோ உறுதியான தண்டுகள் இல்லை. எனவே இவைகள் ஏராளமான கிளைகளுடன் அருகிலுள்ள உயரமான மரங்களை பற்றிப்படர்ந்தே வளருகின்றன. எனவே இவைகளை "தொற்றி வளரும் தாவரம்" என்று அழைக்கின்றனர்.


  Epiphyllum Plant

  இந்த தாவரத்திற்கு நன்கு சூரிய வெளிச்சம் தேவை. மேலும் நன்கு காற்றோட்டமுள்ள இடங்களில்தான் இவைகள் சிறப்பாக பூக்கும்.

  இந்த கள்ளி இனம் சுமார் 25 டிகிரி பாரன்ஹீட் முதல் 50 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தை தாங்கிவளரும் திறன்வாய்ந்தது.

  குளுமையான சீதோஷ்ணம் உள்ள இடங்களில் செழித்து வளருகின்றன. சாதாரண மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளையும் தாங்கிவளரும் தன்மையை கொண்டுள்ளன.

  தண்டுகள் அமைப்பு.

  இந்த எபிஃபில்லம் தாவரம் முதல்நிலை தண்டு மற்றும் இரண்டாம்நிலை தண்டு என இருவேறு தண்டுகளின் அமைப்பை கொண்டுள்ளன.

  தாவரம் நிமிர்ந்துவளர உதவுபவை முதல்நிலை தண்டுகள். இத்தண்டுகள் சிலவகை எபிஃபில்லம் தாவரங்களில் உருளைவடிவில் சாதாரணமாகவும் சிலவகை தாவரங்களில் பட்டையாகவும், சதைப்பற்றுடனும் காணப்படுகின்றன. ஆனால் இந்த முதல்நிலை தண்டுகள் வலுவானவை அல்ல. எனவேதான் எப்பிபில்லம் வகை தாவரங்கள் பிற பெரியவகை மரங்களின்மேல் தொற்றிவளரும் தன்மையுடையதாக இருக்கின்றன.

  இந்த தண்டுகள் மெழுகுபோல் வழுவழுப்பான தோற்றத்தை கொண்டுள்ளதோடு பக்கவாட்டிலும் பல கிளைகளை உருவாக்குகின்றன. தண்டுகளில் அதிக அளவு நீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. தண்டினை வெட்டினால் "ஜெல்" போன்ற திரவம் வெளியேறுவதை காணலாம்.

  இலைகளின் அமைப்பு.

  எபிஃபில்லம் என்னும் இந்த தாவர இனங்களுக்கு இலைகளே கிடையாது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உங்களின் கண்களுக்கு இலைகள்போல் காட்சி தருபவை உண்மையில் இலைகளே அல்ல. அவைகள் உண்மையில் தண்டுகள்.

  ஆம்... இரண்டாம் நிலை தண்டுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இலைத்தண்டுகள்.

  இந்த தாவரமானது முதல்நிலை தண்டு மற்றும் இரண்டாம்நிலை தண்டுகள் என இரு தண்டு அமைப்புகளை கொண்டுள்ளன என்பதனை முன்பே பார்த்தோம். இதில் முதல்நிலை தண்டு தாவரத்தின் பிரதான தண்டுகள் போலவும், இரண்டாம்நிலை தண்டுகளானது தாவரத்தின் இலைகள் போலவும் செயல்படுகின்றன. பார்ப்பதற்கு இலைகள்போல காணப்பட்டாலும் இவைகள் முழுக்க முழுக்க தண்டுகளின் செயல்பாடுகளையே கொண்டுள்ளன.


  epiphyllum flower for leaf

  ஏன் இந்த இலைகள் இரண்டாம் நிலை தண்டுகள் என குறிப்பிடப்படுகிறது என்றால் தண்டினைப்போலவே இது பூ உற்பத்திக்கு உதவிசெய்கின்றன. தண்டினைப்போலவே வேர்விடுகின்றன. தண்டினைப்போலவே ஒடித்து வைத்தால் புதிய செடியாக வளர்கின்றன, தண்டினைப்போலவே கிளைகின்றன. எனவே இதனை இலைவடிவில் உள்ள தண்டு அல்லது இரண்டாம்நிலை தண்டு என அழைக்கப்படுகிறது.

  epiphyllum leaf flower

  இந்த இலைத்தண்டுகள் தட்டையானவை. தடிமனானவை. நீள்வட்டமானவை. இவைகள் 13 முதல் 30 செ.மீ நீளமும் 12 செ.மீ அகலமும் கொண்டவை.

  மலர்களின் அமைப்பு.

  ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்குள்ளாக பூக்கத் தொடங்குகின்றன. ஒரு நாட்கள் இரு நாட்கள் அல்ல. பல நாட்கள் தொடர்ந்து பூக்கும் தன்மையுடையது. நீளமான குழாய்வடிவ மலர்த்தண்டுகளையும், அதன் முடிவில் வெண்மை நிற மலர்களையும் கொண்டுள்ளன.

  இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பது உண்மையல்ல. வருடத்திற்கு பல தடவை பூக்கும். அதற்கேற்ற பருவநிலை வாய்த்தால் வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு தடவை கூட பூக்கும்.

  இதில் பகலில் பூக்கும் இனங்கள் மற்றும் இரவில் பூக்கும் இனங்கள் என இரு ரகங்கள் உள்ளன. 95 % இனங்கள் இரவில்தான் பூக்கின்றன. ஓரிரு இனங்கள் மட்டுமே பகலிலும் பூக்கும்.

  இவைகள் இரவில் பூப்பதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தால் பகலில் பூக்கும் மலர்களில் மகரந்த சேர்க்கை தேனீக்களால் நடப்பதுபோல எபிஃபில்லம் பூவின் மகரந்த சேர்க்கையானது இரவில் மட்டுமே நடமாடும் ஒருவகை "அந்துப்பூச்சி" (Humming bird moths) மற்றும் "வௌவால்"களால் (bats) நடைபெறுகின்றன. எனவேதான் இப்படியொரு ஏற்பாடு.

  இரவு இருட்டில் அயல்மகரந்த சேர்க்கையாளர்களுக்கு தன் இருப்பிடத்தை உணர்த்த அதிக அளவு நறுமணத்தை காற்றில் பரவவிடுகின்றன. அவ்வாறு பரவவிடும் நறுமணமானது சுமார் 500 மீட்டர் தாண்டியும் காற்றில் பயணிக்கின்றன.

  epiphyllum flower_Pumilum

  ஆதலால் இவைகள் மலரும் இடங்களில் சுவாசமெல்லாம் வாசமாகவே இருக்கின்றன. அபரிமிதமான இதனுடைய நறுமணத்திற்கு "பென்சைல் சேலிசிலேட்" (Benzyl Salicylate) மற்றும் "மெத்தில் லினோலியேட்" (Methyl linoleate) என்னும் நறுமண வேதிப்பொருட்களே காரணம்.

  வெறும் நறுமணம் மட்டுமல்ல, இரவுநேர மங்கிய நிலவு வெளிச்சத்திலும்கூட பூச்சிகள் இவைகளை தெளிவாக கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காக பளீரென்ற வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. ஒருசில வகைகளில் மட்டுமே மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

  ஒரு செடியில் அதிகபட்சமாக 10 பூக்கள்வரையில் உற்பத்தியாகின்றன. ஆனால் அபூர்வமாக சிலநேரங்களில் 40 பூக்கள்வரை பூத்து நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதும் உண்டு. ஒரே செடியில் அதிகபட்சமாக 100 பூக்கள் வரை பூத்துள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது இன்னும் ஆச்சரியமே!

  பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைப்பட்ட மாதங்களில் தொடர்ச்சியாக பலகட்டங்களாக பூக்கின்றன. பிற மாதங்களில் பூக்காதா? என்றால் பூக்கும். மழையும் அதற்கான பருவநிலைகளும் இருந்தால் வருடத்தின் பிற மாதங்களிலும்கூட பல கட்டங்களாக பூக்கும் தன்மையுடையது.

  மொட்டுகள் உருவாகி இரு வாரங்கள் முடிவில் ஒரு மாலைவேளையில் சூரியன் கண்ணுறங்க தொடங்கும் சமயம்பார்த்து இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கண்களை திறக்கின்றன. கூடவே தன் இதழ்களிலிருந்து நறுமணத்தையும் பரவவிடுகின்றன. இவைகள் முழுமையாக மலர்வதை நீங்கள் பார்க்கவேண்டுமெனில் இரவு இரண்டு மணிவரை நீங்கள் சிவராத்திரி அனுஷ்டிக்கவேண்டும்.

  மலர்கள் முழுமையாக மலர இரவு 12 முதல் 2 மணி ஆகலாம். இரவில் பூப்பதால் இதனை மக்கள் "இரவின் இளவரசி", "இரவின் ராணி" (Night Queen) என செல்லமாக அழைக்கின்றனர்.

  இதன் அழகு நெஞ்சை அள்ளும் அதேவேளையில் இதன் நறுமணம் மூக்கை கிள்ளுகிறது. ஆனால் உதயசூரியன் உதிக்கும் அறிகுறி தெரிந்தால் தாமரை போன்ற இதன் முகம் சுருங்கிப்போகிறது. அந்த அளவிற்கு இரண்டிற்கும் ஏழாம் பொருத்தம். இரவுமுழுக்க இதழ் விரித்து தன் வெள்ளைச் சிரிப்பால் மணம் பரப்பும் இவைகள் காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் வெட்கத்தால் முகம் சுருங்கிப்போகின்றன.

  பூவின் காம்பானது சிவப்பு மற்றும் அம்பர் நிறத்துடன் 13 முதல் 30 செ.மீ நீளத்தில் குழாய் வடிவில் உள்ளன. பூக்கள் வெண்மை நிறத்தில் 12 முதல் 17 செ.மீ அகலத்தில் உள்ளன. மலர்கள் மூன்று விதமான வெவ்வேறு வடிவ இதழ்களை கொண்டுள்ளது.

  epiphyllum flower

  வெளிப்புற இதழானது குறுகலானது. உட்புற இதழைவிட சற்று கடுமையானது. ஏறத்தாழ 8-10 செ.மீ நீளம் கொண்டது. சிவப்பிலிருந்து அம்பர் நிறம்வரை இருக்கும்.

  இதற்கு அடுத்துள்ள இதழும் மேற்கண்ட இதழ்களைப் போன்றதுதான். ஆனால் அதனைவிட அகலமாகவும் நிறம் சற்று வெண்மையாகவும் இருக்கும். உட்புற இதழானது நீள்சதுர வடிவமானது. வெண்மையானது. மென்மையானது. இதழ்கள் 8-10 செ.மீ நீளமும், 2-5 செ.மீ அகலமும் கொண்டது.

  பூவின் நடுப்பகுதியில் ஏரளாமான மகரந்த இழைகள்  உள்ளன. இவைகளின் எண்ணிக்கை சுமார் 100 வரை இருக்கலாம்.

  சூலகம் பூ விரியாமல் மொட்டுகளாக இருக்கும்போது 4 மில்லிமீட்டர் பருமனில் வெள்ளை அல்லது பச்சைக்கலந்த வெண்மை நிறத்தில் காணப்படும். பூக்கள் விரியும் வேளையில் வெளிர்மஞ்சள் நிறத்திற்கு மாறுவதுடன் அளவிலும் நீளமாகின்றன.

  இவைகள் அழகுக்காக மட்டுமல்ல உணவுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க தேசங்களில் இந்த பூக்களின் மெல்லிய இதழ்களைக்கொண்டு "சூப்" (Soup) தயாரிக்கிறார்கள். இது பாலுணர்வை தூண்டுவதாக நம்புகின்றனர்.

  தற்போது இந்த எபிபைலும் இனத்தில் மனிதர்களால் பல கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் வெண்மை மட்டுமல்லாது மஞ்சள், சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.

  epiphyllum hybrid flower

  அதுமட்டுமல்ல, இந்த கலப்பினங்கள் இரவில் மட்டுமல்லாது பகலிலும் பூக்கும் தன்மையை கொண்டுள்ளன. இந்த கலப்பினப்பூக்கள் அதிகப்படியாக இரண்டு நாட்கள்வரை வாடாமலும் இருக்கின்றன.

  காய்களின் அமைப்பு.

  மேலும் இப்பூக்களில் அயல்மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே இப்பூக்கள் காய்களாக கருக்கொள்கின்றன.

  epiphyllum fruit

  காய்கள் சில பச்சையாகவும் சில மென்மையான மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளன.

  பழங்களின் தன்மை.

  அயல்மகரந்த சேர்க்கை ஏற்படும் பட்சத்தில் கருக்கொண்டு பிஞ்சுகள் உருவாகி காயாகி கனிந்து பழுக்கின்றன. ஊதா கலந்த சிவப்பு நிறத்தில் முட்டைவடிவ அல்லது சற்று நீள்வடிவ பழங்களாக உருப்பெறுகின்றன. சில இனங்களில் பழங்களின் மேல் பகுதியில் முட்களுடனும் இன்னும் சில இனங்களில் முட்கள் இல்லாமலும் காணப்படுகின்றன.

  epiphyllum fruit and seeds

  பழங்களினுள் கூழ்வடிவ வெண்ணிற சதைகள் உள்ளன. இந்த கூழ் ஒரு இனிமையான இனிப்பு சுவையை கொண்டுள்ளன. பழம் சிவப்பு நிறத்தில் நன்கு பருமனாக சதைப்பற்றுடன் இருக்கும்போது உண்டால் சுவையாகவே இருக்கும். ஆனால் உள்ளிருக்கும் விதைகள் முற்ற ஆரம்பித்தவுடன் பழம் தன் அளவில் சுருங்க ஆரம்பிக்கின்றன. இந்த பருவத்தில் பழங்கள் தன் சுவையை இழந்துவிடுகின்றன.

  பழத்தினுள் 2 மி.மீ அளவுகொண்ட ஏராளமான கருமை நிறமுடைய சிறிய விதைகள் காணப்படுகின்றன.

  பழங்கள் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுவதோடு மருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

  விதைகளின் தன்மை.

  பழங்களிலிருந்து பிரித்தெடுத்த விதைகளை உலர்த்தி பத்திரப்படுத்த அவைகள் 3 வருடங்கள்வரை முளைக்கும் திறனை பெற்றிருக்கும்.

  epiphyllum seeds

  விதையிலிருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு தாவரங்களும் நன்கு வளர்ந்து பூக்களை உற்பத்தி செய்ய 5 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் தண்டு மற்றும் இலைத்தண்டுகள் மூலம் உருவாக்கப்படும் தாவரங்கள் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே பூக்களை கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றன.

  மருத்துவப்பயன்கள்.

  இரைப்பை, குடல் மற்றும் நரம்பியல் சம்பந்தமான கோளாறுகளுக்கு இதன் தண்டுகள் மற்றும் பழங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தலைவலி, மூட்டுவலி, தோல்தடிப்பு, சளி சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் தோல் சம்பந்தமான அலர்ஜிகளுக்கும் இலைத்தண்டுகள் மற்றும் பழங்கள் பயன்படுகின்றன.

  இருமல் மற்றும் காசநோய் சிகிச்சைக்கு எபிஃபில்லம் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சீன மருத்துவத்தில்தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் தண்டு மற்றும் பழங்கள் இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது.

  சாகுபடி.

  இது பணப்பயிர் அல்ல. வீட்டில் அழகுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டுவருகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டமே இதனை நடவு செய்வதற்கு ஏற்ற காலம்.

  செடிகள் எளிதாக அனைத்து வகையான மண்களிலும் வளர்கின்றன. ஆனால் சிலவகையான மண்களுக்கு இவைகள் எளிதில் பூப்பதில்லை. தாவரத்திற்கு ஏற்ற மண்வளம் இருந்தால் மட்டுமே சில வருடங்களுக்குள்ளாக பூக்க ஆரம்பிக்கின்றன.

  மிதமான அமிலத்தன்மைகொண்ட நிலங்களில் செழித்து வளர்கின்றன. மண்ணின் அமிலத்தன்மை 5-6 pH ஆக இருக்கவேண்டியது அவசியம். மண்ணில் அதிக அளவில் சுண்ணாம்பு தன்மை இல்லாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். சுண்ணாம்பு அதிக அளவில் இருக்கும்பட்சத்தில் பூக்கள் விரைவிலேயே வாடிவிடுமாதலால் சுண்ணாம்பை தவிர்க்கவும்.

  விதை நடவு.

  வசந்தகாலம் அல்லது கோடை காலங்களில் விதைகளை மண்ணின் மேல் பரப்பி விதைகளின்மீது அவைகள் மறையும்படி மிக குறைந்த அளவு மணலை தூவவும். அதிக அளவில் மணலால் மூடினால் அவைகள் முளைப்பதற்கு பல மாதங்கள் ஆகலாம். மேலோட்டமாக விதைத்தபின் அதன்மீது நீர் தெளித்துவரவும். சில நாட்களில் முட்களுடன் கூடிய சிறிய முளைகள் வருவதைக்காணலாம்.

  சுற்றுப்புற வெப்பநிலை 20⁰C லிருந்து 23⁰C ற்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

  செடிகள் ஓரிரு அங்குலம் வளர்ந்தவுடன் அதனைத் தனித்தனியாக பிரித்தெடுத்து தனித்தனி தொட்டிகளில் வைத்து வளர்த்துவரலாம். அதன் வளர்ச்சிக்கேற்ப உர கரைசல்களை கொடுத்துவரலாம்.

  வேர்ப்பகுதி லேசான ஈரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் நீர் தேங்கிநிற்பது கூடாது. நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் அது வேரழுகல் நோயை உண்டுபண்ணலாம். எனவே சிறந்த வடிக்கால்வசதி அவசியம்.

  விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தாவரம் வளர்ந்து பூப்பதற்கு ஐந்து முதல் ஆறு ஆண்டுகள்வரை ஆகலாம்.

  இலை (தண்டு) நடவு.

  விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தாவரங்கள் முறையாக வளர்ந்து பலன்கொடுக்க அதிக ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. ஆனால் தண்டு மற்றும் இலைதண்டுகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் தாவரங்கள் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே பலன் கொடுக்க ஆரம்பிக்கின்றன.

  நடவு செய்ய நல்ல தரமான இலைதண்டுகளை தேர்ந்தெடுக்கவும். இலைகளை அரை அடி அளவிற்கு துண்டு செய்துகொள்ளவும். மண்ணில் ஊன்றப்படும் பகுதியான இலைகளின் அடிப்பகுதியை ஆப்பு வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

  இதனை ஓரிருநாட்கள் காற்றாட உலரவிட்டு பின் இதனை மண்ணில் 1 அல்லது 2 அங்குல ஆழத்தில் நட்டு வைக்கவும்.

  Rooting Epiphyllum

  நடவு செய்த அன்று நீர்விடுவதை தவிர்க்கவும். இது தண்டு அழுகுவதை தவிர்க்கும். ஒருநாள் கழித்து நீர்விட்டுவரவும். நீர் மிக குறைந்த அளவில் தெளிக்கவும். மணல் லேசான ஈரத்தில் இருந்தால் போதுமானது அதிக அளவு நீர் தண்டினை அழுகச்செய்யும்.

  மூன்று முதல் ஆறு வாரங்களில் இலையின் நடுநரம்புகளிலிருந்து வேர்விட ஆரம்பிக்கும். இலையின் பக்கவாட்டு விளிம்புகளிலிருந்து சிறிய கணுக்கள் தோன்றி அவற்றிலிருந்து சிறிய இலைகள் துளிர்க்க அரம்பிக்கும். ஓரிரு வருடங்களிலேயே பூக்கவும் ஆரம்பித்துவிடும்.

  உரமிடுதல்.

  உரமாக மக்கிய இலைதழைகள் மற்றும் கால்நடைகளின் மக்கிய எரு அளிக்க வேண்டியது மிக அவசியம்.

  மாதத்திற்கு ஒருதடவை உரமிடுவது சிறப்பு. நைட்ரஜன் (Nitrogen), பாஸ்பரஸ் (Phosphorus), பொட்டாசியம் (Potassium) இவைகளை 10-20-20 என்ற விகிதாசாரத்தில் நீருடன் கலந்து உரக்கரைசலாக சீராக அளிப்பது அவசியம்.

  அதிக அளவு நைட்ரஜன் உள்ள உரங்கள் இதற்கு ஏற்புடையது அல்ல. எனவே குறைந்த அளவு நைட்ரஜன் உள்ள உரங்களை பயன்படுத்தி வரலாம். அதிக அளவு நைட்ரஜன் உரங்களால் செடிகள் செழிப்பாக வளரும். ஆனால் இது பூக்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கின்றன.

  நீர்ப்பாசனம்.

  நீர் மூன்று நாட்களுக்கு ஒருதடவை விடலாம். வேர்களில் நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் பட்சத்தில் காளான் தொற்று (Fungal diseases of plants) ஏற்படலாம். அல்லது வேரழுகல் நோயால் (Root rot disease) பாதிப்பு ஏற்படலாம். எனவே இதனை நடவு செய்யும் இடத்தில் வடிகால்வசதி அவசியம்.

  இது கோடைகாலத்தின் துவக்கத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. இக்காலகட்டத்தில் இதற்கு அதிக அளவு நீரும் கரிம உரங்களும் (Organic Fertilizer) தேவைப்படும். ஆனால் குளிர் காலங்களில் இவைகள் பூப்பதில்லை. எனவே நீர்பாசனமும் மிக குறைந்த அளவில்தான் தேவைப்படும்.

  வீட்டிற்கு உள்ளே வளர்க்க வேண்டுமெனில் பூந்தொட்டிகளில் வளர்த்து வரலாம். பூந்தொட்டியானது நன்கு காற்றோட்டமுள்ள அதேவேளையில் நன்கு சூரியவெளிச்சம் வரக்கூடிய ஜன்னல் ஓரங்களில் அமைக்க வேண்டியது அவசியம்.

  Epiphyllum indoor Plant

  பூந்தொட்டிகளின் அடிப்பகுதியில் நீர்வெளியேற துளையிடப்பட்டு கால்பகுதி அளவு கூழாங்கற்களும் (Pebble), கரியும் (Charcoal) நிரப்பப்பட்டு அதன்மேல்தான் மணல் நிரப்பப்படவேண்டும். இதனால் அதிகப்படியான நீர் கரித்துண்டுகள் மற்றும் கூழாங்கற்களால் வடிகட்டப்பட்டு வெளியேற்றப்படும்.

  நீர் அதிக அளவு வேர்களில் தங்கி நிற்கும் பட்சத்தில் தாவரங்கள் பூக்காதது மட்டுமல்ல வேர் அழுகல் நோயாலும் பாதிக்கப்படும். கரி பயன்படுத்துவதால் இன்னும் ஒரு நன்மை இருக்கிறது. தாவரத்தை பாதிக்கும் பூஞ்சாண நோய்களை இது ஓரளவு கட்டுப்படுத்தும்.

  மனிதர்களுக்கு எவ்வாறு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முக்கியமோ (அப்போ "சோறு" முக்கியமில்லையா? எனக்கு பசிக்குமில்ல...) அவ்வாறு இதற்கு நீர், காற்று, வெப்பம் மூன்றும் தேவை. வெப்பமானது 35⁰C வரை இது தாக்குப்பிடிக்கும் என்றாலும் 20 லிருந்து 25 ⁰C வரை இருப்பது நல்லது. குளிர்காலங்களில் 13⁰C ற்கும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  நீர்ப்பாசனம் செய்யும்போது நீர்களால் இலைகளை நனைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரினால் இலைகளை ஈரப்படுத்தும் பட்சத்தில் இலைகளில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய பூஞ்சாண தொற்று ஏற்படுகிறது. எனவே உங்களுடைய வேலை வேர்களை ஈரமாக்குவது.. இலைகளை அல்ல..

  எபிஃபில்லம் பூக்காமல்
  இருப்பதற்கான காரணங்கள்.

  1. போதுமான அளவு வெளிச்சம் இல்லாமல் இருத்தல்.
  2. மண்ணில் போதுமான அளவில் ஈரப்பதம் இல்லாமை.
  3. மழைக்காலங்களில் அதிகமான அளவில் நீர்விடல்.
  4. போதிய அளவில் ஊட்டச்சத்து அளிக்காது விடுதல்.
  5. மாறுபட்ட வெப்பநிலை. அதிக அளவு குளிர்ச்சி.
  6. மண்ணில் அதிகப்படியான நைட்ரஜன்.
  7. செடிகளுக்கு போதியஅளவு காற்றோட்டமின்மை.
  8. குளோரின் (பிளீச்சிங் பவுடர்) கலந்த நீர்,
  9. பூஞ்சை நோய்.

  நோய் பாதிப்புகள்.

  பெரும்பாலும் இந்த தாவரமானது நோய்களால் பாதிப்படைவதில்லை என்றாலும் சிலந்திப்பூச்சிகள் (Spider mites) இதன் இலைகளை பாதித்து வாடிப்போக செய்கின்றன.

  இலை அழுகல் நோய்.

  இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறி அழுகி கருமை நிறத்தை பெறுவதை "இலை அழுகல் நோய்" (leaf rot disease) என்கிறோம். இதிலிருந்து நிவாரணம்பெற பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக அகற்றவும்.

  epiphyllum leaf rot disease
  epiphyllum leaf rot disease.

  இலைப்புள்ளி நோய்.

  இலைப்புள்ளி நோய் (leaf spot disease) என்று அழைக்கப்படும் இந்த நோயானது முதலில் சிவப்பு புள்ளிகளாக தோன்றி அதன்பின் கரும் புள்ளிகளாக மாற்றம் பெறுகின்றன. அதிகப்படியான வெயில், அதிகப்படியான நீர்ப்பாசனம் இவைகளால் இந்நோய் பாதிப்பதுண்டு.

  leaf spot disease
  epiphyllum leaf spot disease.

  மொசைக் நோய்.

  மஞ்சள் தேமல் நோய் (Yellow mosaic disease) என்று அழைக்கப்படும் மொசைக் நோயானது ஒருவித வைரசால் ஏற்படக்கூடியது. இதனை கட்டுப்படுத்த பாதித்த பகுதிகளை அகற்றவும். இது ஒரு செடியிலிருந்து பக்கத்திலுள்ள அடுத்த செடிகளுக்கும் பரவும் தன்மையுடையதாதலால் அதிக அளவில் பாதிப்பு உள்ளதாக உணர்ந்தால் சம்மத்தப்பட்ட செடிகளை அகற்றி தொலைவில் கொண்டுசென்று எரித்துவிடுதல் நன்று.

  epiphyllum yellow mosaic disease
  epiphyllum yellow mosaic disease.

  ஆந்த்ராக்னோஸ்.

  இந்த ஆந்த்ராக்னோஸ் (Anthracnose) என்னும் நோயானது ஒருவித பூஞ்சைகளால் ஏற்படும் நோய். இலைகளில் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நாளாக நாளாக அளவில் பெரிதாகிக்கொண்டே போகும். பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றுவதுடன் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

  Epiphyllum Plant Anthracnose
  Epiphyllum Plant Anthracnose.

  ஃபுசேரியம்.

  ஃபுசேரியம் (fusarium) என்பது வாடல் நோயை குறிப்பிடுவது. இது வேரழுகல் பாதிப்பால் ஏற்படுகிறது. வேரழுகல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே இதனை கட்டுப்படுத்திவிடமுடியும்.

  வேரில் அதிக அளவில் நீர் தங்குதல், அதிக அளவு குளிர்ச்சியான நீரை விடுதல், அதிக அளவு சூரிய வெப்பத்தினால் தாவரம் பாதிப்படைதல் முதலியவைகளால் இந்த நோய்  ஏற்படலாம். இதனை குணப்படுத்த பாதிக்கப்பட்ட வேர்களை கண்டறிந்து அகற்றுவதுடன் பூஞ்சை கொல்லி மருந்துகளை தெளித்து பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

  இது தவிர இந்த தாவரம் நத்தைகளாலும் (Snail) அதிக அளவு பாதிக்கப்படுவதுண்டு. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிறிய அளவில் வளரும் ரகங்களை தேர்வு செய்து தொங்கும் பூந்தொட்டிகளில் வளர்த்துவரலாம்.

  Epiphyllum outdoor Plant

  இதுவரை எபிஃபில்லம் பராமரிப்புபற்றி தெரிந்துகொண்ட நாம் இதன் தொடர்ச்சியாகிய அடுத்த பதிவில் இந்த எபிஃபில்லம் தாவரத்தின் பல்வேறுபட்ட "இனங்கள்" மற்றும் "கலப்பினங்கள்" பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்... 

  எபிஃபில்லம் தாவரத்தின் பல்வேறுபட்ட "இனங்கள்" மற்றும் "கலப்பினங்கள்" பற்றி விரிவாக தெரிந்துகொள்ளவும், இக்கட்டுரையின் தொடர்பதிவாகிய மூன்றாவது பகுதியை படிக்கவும் (Part - 3) கீழேயுள்ள "லிங்க்"ஐ கிளிக் பண்ணுங்க.

  >> "எபிஃபில்லம் முன் பத்து இனங்கள் - First Top Ten Epiphyllum Specice."<<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.