"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Viral jaundice Hepatitis A - Keelanelli.

கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Viral jaundice Hepatitis A - Keelanelli.

கீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை.

Viral jaundice Hepatitis A.

[PART - 7]

கீழாநெல்லி என்னும் மூலிகையைப்பற்றி தொடர்பதிவாக பார்த்துவருகிறோம். பொதுவாக இது கீழாநெல்லியைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு (awareness) பதிவு எனலாம்.

இக்கட்டுரையின் முதல் பகுதியை [PART - 1] படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் பண்ணுங்க..

>>கீழாநெல்லியும் பல்வகை இனங்களும் - Keelanelli - Phyllanthus Species.<<

கீழாநெல்லி (keelanelli) என்ற உடனேயே நமக்கு நியாபகத்திற்கு வருவது மஞ்சள் காமாலை நோய்தான். அந்த அளவிற்கு பன்நெடுங்காலமாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் மஞ்சள் காமாலைக்கு சிறந்த நிவாரணமாக கீழாநெல்லியே பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

    மஞ்சள் காமாலை (mancha kamalai) நோயில் மட்டுமே பலவகைகள் உள்ளதால் அனைத்து வகையான மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கீழாநெல்லி ஒன்றே தீர்வல்ல என்பதனை இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    மஞ்சள் காமாலைகளில் பல வகையான காமாலைகள் உள்ளன என்றாலும் அவைகள் அனைத்துமே நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை..

    1. ஆபத்தில்லா காமாலை.
    2. இரத்த அழிவு காமாலை.
    3. அடைப்பில்லா காமாலை.
    4. அடைப்பு காமாலை.

    இதில் முதல் இரண்டு காமாலைகளையும் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். தற்போது மூன்றாவது வகையான அடைப்பில்லா காமாலையைப்பற்றி பார்த்துவருகிறோம்.

    அடைப்பில்லா காமாலை.

    இந்த அடைப்பில்லா வகை காமாலையை 5 பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை..

    1. பொதுவான கல்லீரல் பாதிப்பு காமாலை.
    2. பாக்டீரியாவினால் ஏற்படும் காமாலை.
    3. நுண்பூஞ்சை காமாலை.
    4. நுண்கிருமி அழற்சி காமாலை.
    5. வைரஸ் அழற்சி காமாலை.

    இதில் முதல் நான்கு வகைகளைப்பற்றி முந்தைய பதிவில் ஏற்கனவே பார்த்துவிட்டோம். 5வது வகையான வைரஸ் அழற்சி காமாலையைப்பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

    வைரஸ் அழற்சி காமாலை.

    பலவகையான வைரஸ்கள் நம் உடலை பாதிப்பதால் நமக்கு பல்வேறுபட்ட உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    இவ்வைரஸ்களானது உடலிலுள்ள பிற உறுப்புகளை மட்டுமல்லாது கல்லீரல், மண்ணீரல், பித்தநாளங்கள் மற்றும் குருதியோட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் போது பலவித உடல் பாதிப்புகளோடு மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    அவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற வைரஸ்கள் பல உள்ளன என்றாலும் அவைகளில் முக்கியமானவையாவன:-

    1. மஞ்சள் காய்ச்சல் வைரஸ் - Yellow fever virus.
    2. முத்த நோய் வைரஸ் - Epstein barr virus.
    3. ஹெர்பெஸ் வகை வைரஸ் - Herpes Simplex virus.
    4. ஹெப்படைட்டிஸ் வைரஸ் - Hepatitis virus.

    மேற்குறிப்பிட்டுள்ள வைரஸ்களான Yellow fever virus, Epstein barr virus, Herpes Simplex virus மற்றும் Hepatitis virus முதலிய நான்குமே கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி காமாலை பிரச்சனைகளை உருவாக்குபவைதான். ஆனால் முதல் மூன்று வகை வைரஸ்களும் நம்முடைய உடலில் மிகக் கடுமையான தாக்குதலில் இறங்கும்போது மட்டுமே கல்லீரலையும் பாதித்து மஞ்சள் காமாலை அறிகுறியை ஏற்படுத்துகின்றன.

    ஆனால் நான்காவதாக உள்ள "ஹெப்படைட்டிஸ் வைரஸ்" (Hepatitis virus) அப்படியானது அல்ல. பயபுள்ள இது மஞ்சள் காமாலையை உருவாக்குவதற்கு என்றே பிறந்த பிதாமகன்போல செயல்படுவதுதான் இங்கு ஆச்சரியமே!!.

    இந்த ஹெப்படைட்டிஸ் வைரஸ் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக 7 பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஏழுபேரும் மஞ்சள் என்னும் மங்களகரமான முகமூடியை போர்த்திக்கொண்டு வயது வித்தியாசமே பார்க்காமல் நம் மக்களை மரணம்வரை அழைத்துச்செல்வதுதான் கொஞ்சம் மரணபீதியை கிளப்புகிறது. யார் அந்த 7 பேர்கள்? வாருங்கள் பார்க்கலாம்.

    ஹெப்படைட்டிஸ் வைரஸ்.

    ஹெப்படைட்டிஸ் (Hepatitis) என்பது ஈரல் அழற்சியை குறிக்கும். இந்தவகை வைரஸ்களானது ஈரல் அழற்சியை ஏற்படுத்துவதால் ஹெப்படைட்டிஸ் வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தவகை வைரஸானது "ஹெபாட்னாவிரிடே" (Hepadnaviridae) என்ற குடும்பத்தை சேர்ந்த பேரினமான "ஆர்த்தோ ஹெபாட்னா" (Orthohepadna) வைரஸ்களாகும்.

    இந்த வைரஸ்களில் பலவகைகள் உண்டென்றாலும் மனிதர்களில் 7 வகையான வைரஸ்களே கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி மஞ்சள் காமாலை அறிகுறியை உண்டாக்குகின்றன. அவை..

    1. ஹெப்படைட்டிஸ் A (Hepatitis A)
    2. ஹெப்படைட்டிஸ் B (Hepatitis B)
    3. ஹெப்படைட்டிஸ் C (Hepatitis C)
    4. ஹெப்படைட்டிஸ் D (Hepatitis D)
    5. ஹெப்படைட்டிஸ் E (Hepatitis E)
    6. ஹெப்படைட்டிஸ் F (Hepatitis F)
    7. ஹெப்படைட்டிஸ் G (Hepatitis G)

    இந்த 7 வகையான வைரஸ்களில் முதலில் "ஹெப்படைட்டிஸ் A" யை பற்றி பார்க்கலாம்.

    ஹெப்படைட்டிஸ் A.

    கையில் சூடு போட்ட 1 வாரத்திலேயே மஞ்சள் காமாலை குணமாகிவிட்டது என்று சொல்லிக்கொள்வது மட்டுமல்லாமல் கையிலுள்ள தீயினால் சூடு போட்ட தழும்பைக்காட்டி நம்மிடையே பலபேர் பெருமையாக ஜெர்க் விட்டுக்கொண்டு திரிகிறார்கள் அல்லவா அது இந்த "ஹெப்படைட்டிஸ் A" வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.


    Fire for jaundice

    நாம் இதுவரையில் பார்த்த பல்வேறு காரணங்களால் வரக்கூடிய மஞ்சள் காமாலைகள் எதையுமே கீழாநெல்லி மூலிகையால் குணப்படுத்தவே முடியாது என்பதனை பார்த்தோமல்லவா!.. ஆனால், இங்குதான் நாம் நம்முடைய கருத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

    ஏனெனில் இந்த "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை அறிகுறியை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கீழாநெல்லி குணப்படுத்தி விடுகின்றன.

    அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே!! (இப்போதான் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது). "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் மூலம் மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை எப்படி பக்குவப்படுத்தி சாப்பிடுவது என்பதனை சீக்கிரமாக சொல்லுங்கள் என்கிறீர்களா?

    அவசரப்படாதீர்கள்.. பக்குவமா சாப்பிடுவதற்கும் பல வழிமுறைகள் இருக்கு.. எப்படி என்பதனை ஒவ்வொண்ணா ஆர்டரா சொல்கிறேன் கவனமா கேட்டுக்குங்க!!

    கீழாநெல்லி வேரை 1 கைப்பிடி அளவு பிடுங்கிவந்து 1 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக வற்ற காய்ச்சி ஆற வைத்து குடிக்கலாம். ரொம்ப அவசரம் என்றால் கொதிக்க கொதிக்க அப்படியேகூட குடிக்கலாம் தப்பில்லை. 

    ஏனென்றால், மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட உடனேயே ஏன்? எதற்கு? என்று கேட்காமலேயே குழிப்பணியாரம் அளவுக்கு மணிக்கட்டை சுட்டு புண்ணாக்கிக்கொள்ளும் அளவுக்கு வீரதீர பராக்கிரமம் நிறைந்த பரம்பரையை சேர்ந்தவர்களாயிற்றே நாம்!.. எனவே பத்தோடு ஒன்று பதினொன்றாக தொண்டைக்குழியும் அப்பளம்போல் பொசுங்கிப்போவதால் ஒன்றும் தப்பில்லைதான்.

    Phyllanthus amarus root

    வேரை கஷாயமிடுவதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்கிறதே என்று ரொம்ப "பீல்" பண்ணுகிறீர்களா?..

    கவலையை விடுங்கள்.. இருக்கவே இருக்கு இன்னொரு வழி!!.

    கீழாநெல்லியை முழுசாக பிடுங்கிவந்து.. அம்மியில் வைத்து அலுங்காமல் அரைத்து.. அரைத்ததை அப்படியே எடுத்து அடிநாக்கில் படாமல் சாப்பிட்டு வரலாம்..

    இன்னும் சொல்லப்போனால் கீழாநெல்லியை உள்ளுக்குள்  சாப்பிடவேண்டிய அவசியமே இல்லை!!.. நைய அரைத்து உச்சந்தலையில் "தப்பாளம்" வைத்தாலே போதும்..

    வாவ்.. மஞ்சள் காமாலை போயேபோச்சு.

    உங்கள் இடத்தில் கீழாநெல்லி கிடைக்கவில்லையா?.. கவலையே படாதீர்கள்.. நீங்கள் இரவில் தூங்க செல்லும்போது கீழாநெல்லியை அரைத்து தலையில் தப்பாளம் வைப்பதுபோல கற்பனை செய்து கொண்டு படுத்தாலே போதுமானது. ஒரிரு வாரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மஞ்சள் காமாலை ஓடியே போய்விடும்.

    ஒருவேளை நீங்கள் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிற பார்ட்டி என்று வைத்துக்கொள்ளுங்கள்.. இருக்கவே இருக்கு இன்னொரு மருத்துவம்.

    ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் வேப்பிலை அடிப்பவரிடம் உங்கள் வியாதியை எடுத்துச்சொல்லி விபூதி மந்திரித்து தாயத்து கட்டி வேப்பிலை அடித்துவிட்டு வாருங்கள். "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் குளோஸ்.

    இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?.. இன்னும் ஒரு மருத்துவம் இருக்கு... ஒரு விரல் கனத்தில் இரும்புக்கம்பி எடுத்துக்கொள்ளுங்கள். அது "அம்மன் DRY" முறுக்கு கம்பிதானா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது, "அக்னி TMT" முறுக்கு கம்பியாக இருந்தாலும் பரவாயில்லை.

    மேற்படி கம்பியை நெருப்பிலிட்டு நன்றாக பழுக்க காய்ச்சி கை மணிக்கட்டில் அல்லது இடுப்பில் ஒரு இழுப்பு இழுங்கள். என்ன முடிஞ்சுதா இனி மஞ்சள் காமாலை பற்றிய கவலையை விட்டொழியுங்கள். ஒரு வாரம்தான் டைம்.. துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு ஓடியே போய்விடும்.

    ஐயகோ.. டிரீட்மென்ட் ரொம்ப கொடூரமாக இருக்குதே.. கை, கால்களெல்லாம் தீப்புண்களால் கொப்பளித்துவிடுமே என்று பயமாக இருக்கிறதா? கவலையை விடுங்கள் உங்களுக்காகவே ஒரு எளிமையான மருத்துவம் இருக்கிறது.

    ஒருவாரத்திற்கு எளிதாக ஜீரணிக்ககூடிய நல்ல சத்துள்ள ஆகாரமாக எடுத்துகொள்ளுங்கள். இட்லி, சப்பாத்தி, சாதம், பருப்பு, பட்டாணி, சுண்டல், பச்சைப்பயிறு, ரொட்டி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டுவாருங்கள்.

    எண்ணெய் பயன்படுத்தி சமைக்கப்படும் சமையலை தவிருங்கள், கொழுப்பு சார்ந்த உணவுகளையும் தவிருங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்துங்கள்.

    குளுக்கோஸ் தண்ணீர், ராகி கஞ்சி, பழரசம் சாப்பிடுங்கள். சாப்பிடுகிற உணவு கொழுப்பில்லாத சத்துநிறைந்த உணவாக இருக்கட்டும். அப்புறம் பாருங்கள் ஒரிரு வாரத்தில் மஞ்சள் காமாலை சத்தமே இல்லாமல் தலைதெறிக்க ஓடியேபோகும்.

    Hepatitis A jaundice food

    இது "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ்கான மருத்துவமுறை மட்டும்தான். இதே மருத்துவமுறை "ஹெப்படைட்டிஸ் B" மற்றும் பிற வைரஸ்கள் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலைகளுக்கு ஒத்துவராது.

    என்னப்பா இது அநியாயமா இருக்கு? சத்துள்ள ஆகாரம் சாப்பிட்டாலே சத்தமில்லாமல் "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் ஓடிப்போகுமென்றால்.. அப்புறம் எதற்கு ஏழு தலைமுறைகண்ட சில வைத்திய சிகாமணிகளோடு இன்னும் சில வகையாறாக்களும் சேர்ந்து கீழாநெல்லி கஷாயம், பச்சிலை தப்பாளம், விபூதி சாத்தி வேப்பிலை அடித்தல், அப்புறமா தாயத்து.. இது போதாதென்று அக்கினி TMT முறுக்கு கம்பி ட்ரீட்மென்ட் என்றெல்லாம் சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கிறார்களே.. அப்போ அதெல்லாம் என்னவாம் என்கிறீர்களா?.

    எல்லாம் காரணமாகத்தான்.

    உங்களைப்போல அவர்களுக்கும் பிள்ளைகுட்டிகள் இருக்குதில்லையோ? சம்பாதித்தால்தானே சாப்பிடமுடியும்.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் பாவம்.. பிழைச்சிட்டுப் போகட்டும் விடுங்க..

    என்னப்பா சொல்ற? ஒரே கன்பியூஸா இருக்கே என்கிறீர்களா?

    புரியும்படியாகவே சொல்லுறேன் கேளுங்க.. ஒருவருடைய அறியாமைகூட சிலநேரங்களில் இன்னொருவருக்கு வருமானத்தை பெற்றுத்தரும் சிறந்த முதலீடாக அமைந்துவிடுவதுண்டு. மஞ்சட்காமாலையை ஏற்படுத்தும் இந்த ஹெப்படைட்டிஸ் வைரஸ்கள் இருக்கே அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவைகளின் குணங்களை வைத்தே அவைகளை 7 தனித்தனி வகைகளாக பிரித்துள்ளனர்.

    அவைகளில் இந்த "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் ஒரு அப்பிராணி. சுருக்கமா சொல்லப்போனா நம்ம வடிவேலு மாதிரி. "பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு"டைப். எனவேதான் இந்த சீக்கு 1 அல்லது 2 வீக்குலேயே ஓடிப்போய்விடுகிறது.

    இந்த ஹெப்படைட்டிஸ் A - ஐ விரட்ட நாம் செய்யவேண்டிய வேலை ஒன்றேஒன்றுதான். வேளாவேளைக்கு நன்கு சத்துள்ள ஆகாரம் சாப்பிடுவதோடு நன்கு ஓய்வும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

    அப்படியென்றால் கஷாயம் காய்ச்சுவது, தலையில் தப்பாளம் வைப்பது, மந்திரித்து விபூதி அடிப்பது , அம்மன் TMT முறுக்குக்கம்பியால் சூடு வைப்பது இதெல்லாம் வெறும் நடிப்பா.. என்கிறீர்களா?

    பாத்தீங்களா.. சின்னக்குழந்தை மாதிரி எவ்வளவு அப்பாவியா கேள்வி கேக்குறீங்க.. உங்களுடைய இந்த அப்பாவித்தனமான இந்த  அறியாமையைத்தான் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். "பார்றா செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல".. என்று நினைத்துக்கொண்டே உங்களுக்கு பெருமாள் ரேஞ்சுக்கு பட்டைநாமமும் போட்டுவிடுகின்றனர்.

    எப்படி என்கிறீர்களா?

    இந்த "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் இருக்கே.. இது வெளியேதான் நாங்கெல்லாம் பின்லேடன் பரம்பரையாக்கும்னு வடிவேல் பாணியில் பீத்திக்கிட்டு திரியுது. ஆனா உள்ளுக்குள்ள ஒரு மண்ணும் கிடையாது. மிஞ்சிமிஞ்சி போனா சாதாரண கல்லீரல் அழற்சியை மட்டும்தான் இதனால் உண்டுபண்ண முடியும். சுத்த வேஸ்ட்.

    Hepatitis A vadivelu

    இது உண்டுபண்ணும் சாதாரண காமாலை நோயானது 2 வாரங்களில் தானாகவே குணமாகிவிடும். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மந்திர தந்திர வேலையில் ஈடுபடுகிறவர்களும், சில 15 தலைமுறைகண்ட பாரம்பரிய மருத்துவர்களும் நாங்கள் தாயத்து கட்டியதால்தான் சரியானது, சூடுபோட்டதால்தான் ஓடிப்போனது, மூலிகை அரைத்ததால்தான் போயேபோச்சு என்று உங்களை ஏமாற்றி காசு பார்த்துவிடுகின்றனர் என்பதே உண்மை.

    சரிங்க இந்த ஹெப்படைட்டிஸ் A டைப் வைரஸ்தான் அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டோமல்லவா. எனவே இந்த நல்லவனைப்பற்றி மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியமல்லவா? வாங்க தெரிந்துகொள்வோம்..

    Hepatitis A - வைரஸ்.

    குழந்தைகளையும் இளம்வயதினரையும் அதிகம் பாதிக்கும் இது ஒரு ஓட்டுவார் ஒட்டி.. ஓட்டுவார் ஒட்டி என்றால் நீங்கள் யாரிடமும்போய் ஒட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் ஓரமாக நடந்து சென்றால்கூட வாண்டடாக வந்து உங்களுடன் ஒட்டிக்கொள்ளும். (பயபுள்ளைக்கு பாசத்த பாரேன்!!)

    அட.. அது எப்படி என்கிறீர்களா?

    தண்ணீர் மூலமாக வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும். உணவுப்பொருள்கள் வழியாக டிராவல் செய்தும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    அது எப்படி?

    உணவு பரிமாறுபவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரிடமிருந்து ஏதோ ஒரு வகையில் உணவுடன் கலந்து உங்களிடம் வந்துவிடும்.

    மேலும் ஓரின சேர்க்கை.. ஒண்ணே முக்கால் இன சேர்க்கை என்று ஏதேதோ சொல்கிறார்கள் அல்லவா? அதன் மூலமாகவும் வேகமாக பரவுகிறதாம். (கோவாலு... ஏ கோவாலு... பாப்பு... ஏ பாப்பூ ...வச்சுட்டாங்கய்யா ஆப்பு..😪😭😩)

    அதேபோல விடுதிகளில் ஒன்றாக தொடர்ந்து தங்கியிருப்பவர்களிடமும் பரவும் அபாயம் உள்ளதாம்.

    இளைஞர்களுக்கு இந்நோய் வந்தால் அதிகம் பயப்படவேண்டியதில்லை. ஏனென்றால் இதனால் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டு மூன்று வாரங்களில் உங்களிடமிருந்து விடைபெற்று சென்றுவிடும். (அப்பாடா.. இப்பவாவது வவுத்துல பாலை வார்த்தீங்களே.. கோடானுகோடி நன்றி ஏசப்பா! கோடானுகோடி நன்றி!!. 😊😄😋)

    இந்த வைரஸை விரைவில் வழியனுப்பி வைக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நோயைப்பற்றி அதிகம் கவலைகொள்ளாமல் நிம்மதியாக ஓய்வெடுங்கள். கொழுப்புசார்ந்த உணவுகள், எண்ணெய் கலந்த உணவுகளை தவிர்த்து ஆரம்பத்தில் சொன்னதுபோல சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இட்லி, சப்பாத்தி, சாதம், பருப்பு, பட்டாணி, சுண்டல், பச்சைப்பயிறு, ரொட்டி ஒரு பிடி பிடியுங்கள்.

    பழச்சாறு, குளுக்கோஸ், ராகி கஞ்சி இவைகளுடன் நிறைய தண்ணீர் குடியுங்கள். வேறு எதுவும் நீங்கள் செய்யவேண்டியதில்லை. இந்த வைரஸை விரட்டியடிக்கும் வேலையை உங்கள் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியே பார்த்துக்கொள்ளும்.

    நான் சொல்வதெல்லாம் "ஹெப்படைட்டிஸ் A" வைரஸிற்கு மட்டும்தான். இதே இது ஹெப்படைட்டிஸ் B வைரஸ் என்றால் நிலைமையே வேறு.

    அதுசரி ஆபத்தே இல்லாத ஹெப்படைட்டிஸ் A வைரஸ் பாதிப்பால்தான் உங்களுக்கு மஞ்சள் காமாலை அறிகுறி ஏற்பட்டுள்ளது என்பதனை நீங்கள் எப்படி கண்டுகொள்வீர்கள்?

    கஷ்டம்தான்..

    ஒருவேளை ஹெப்படைட்டிஸ் A வைரஸ்தான் உங்களை தாக்கியுள்ளது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்க ஹெப்படைட்டிஸ் B வைரஸ் உங்களை தாக்கியிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..

    ஏனென்றால் "ஹெப்படைட்டிஸ் A" வைரஸ் உங்கள் உடலில் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உங்களை விட்டு ஓடிவிடுமென்றால் இதற்கு நேர் எதிராக செயல்படுவது ஹெப்படைட்டிஸ் B வைரஸ். ஆம்.. இது உங்கள் உடலைவிட்டு செல்லும்போது உங்கள் உயிரையும் கூடவே கூட்டிக்கொண்டு சென்றுவிடும். ஆனால் அதற்கு முன்னதாகவே உங்கள் உடலையும் ஒருவழியாக பாடையில் ஏற்றிவிட்டுத்தான் செல்லும். (அடி ஆத்தி..)

    உயிரை காவு வாங்கும் இந்த ஹெப்படைட்டிஸ் B வைரஸினால் உலகில் வருடத்திற்கு 2 கோடிக்கும் அதிகமான பேர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர் என்பது வேதனை நிறைந்த உண்மை. எனவே உங்களுக்கு வந்துள்ளது "ஹெப்படைட்டிஸ் A" வைரஸா அல்லது "ஹெப்படைட்டிஸ் B" வைரஸா என்பதனை மருத்துவரிடம் சென்று முறையாக பரிசோதனை செய்து அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகமிக அவசியம்.

    சரி.. இனி இந்த ஹெப்படைட்டிஸ் A வைரஸ் நம்மை தொற்றிக்கொண்டால் என்னென்ன பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்தும் என்பதனை கொஞ்சம் பார்ப்போம்.

    நோயின் தன்மை.

    குழந்தைகளையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கும் இது வயதானவர்களை தொற்றிக்கொண்டால் தன் முழு ஆதிக்கத்தையும் அவர்கள்மீது செலுத்துகிறது.

    இந்த வைரஸானது கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான் என்றாலும் பிற வைரஸ்களைப்போல நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் இந்நோயால் தாக்குண்டால்கூட அது பிறக்கும் குழந்தையை பாதிப்பதில்லை. கருச்சிதைவையும் ஏற்படுத்துவதில்லை. (அடடடா.. நீயும் என்ன மாதிரியே அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேடா!!..)

    Hepatitis A Virus

    மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, பசியின்மை, வயிற்று உப்பிசம் முதலியன ஏற்படுகின்றன. வயிற்றினுள் வலியுணர்வும் இருக்கும். சிறுநீரும் மஞ்சளாகவே போகும். கண்களிலும் மஞ்சள் பூத்திருக்கும். மலம் மஞ்சளாகவோ அல்லது களிமண் நிறத்திலோ போகும்.

    வயிற்றின் வலதுபக்கம் மேல்புறத்தில் வலி இருக்கும். அந்த இடத்தை தொட்டுப்பார்த்தால் வைரஸ் தாக்குதலால் கல்லீரல் வீங்கிப்போயுள்ளதை தெரிந்து கொள்ளமுடியும்.

    பெரும்பாலும் இந்நோயால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் சிலநேரங்களில் கல்லீரல் செயல் இழப்பையும் ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்து இல்லை என்று  நினைத்துக்கொண்டு பாதாமும், பிஸ்தாவும் சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக ஓய்வு மட்டுமே எடுத்துக்கொண்டு இருக்காதீர்கள். அவ்வப்போது மருத்துவரின் கண்காணிப்பிலேயே இருந்துவாருங்கள்.

    உணவு பத்திய முறைகள்.

    இட்லி, பழங்கள், கீரைகள், சாதம் இவைகளை சாப்பிட்டுவரலாம். சமைத்த காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.

    [நம்முடைய வீட்டில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் என்றால் பச்சையாகவே தினந்தோறும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுவரலாம். ஆனால் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் காய்கறிகளில் பூச்சி மருந்துகளின் பாதிப்பு அதிகம் இருக்குமென்பதால் நன்றாக கழுவி வேகவைத்து சாப்பிடுவதே சிறப்பு. வேகவைப்பதால் பூச்சிமருந்தின் வீரியம் குறைக்கப்படுமாம். விற்பனை நிலையங்களில் கிடைக்கும் பூச்சிமருந்து பாவிக்கப்பட்ட காய்கறிகளை தினந்தோறும் பச்சையாக சாப்பிட்டுவந்தால் அதிலுள்ள பூச்சி மருந்துகளின் பாதிப்பால் தொண்டையில் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்]

    தாகம் எடுக்கும் போதெல்லாம் நிறைய இளநீர், குளுக்கோஸ், மோர், பழரசங்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

    இறைச்சி வகைகள், எண்ணெய், வெண்ணெய், நெய், கொழுப்புள்ள உணவுகள் மற்றும் எண்ணையில் தாளித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவிட்டு குடிக்க வேண்டும்.

    சிகிச்சை முறை.

    இந்நோய் வராமல் இருப்பதற்கு தடுப்பூசிகள் உள்ளன. அதனை போட்டுக்கொள்ளலாம். இதனால் "ஹெப்படைட்டிஸ் A" வைரஸிடமிருந்து நம் உடலை வரும்முன்னே பாதுகாத்துக்கொள்ள முடியும். இத்தடுப்பூசியை குழந்தைகளுக்கு பிறந்த 1 வருடத்தில் ஒரு தடவையும், அதன்பின் ஆறுமாதம் அல்லது 1 வருடம் கழித்து மேலும் ஒரு ஊசியும் போட்டுக்கொள்ள வேண்டும். பெரியவர்களும் இதேபோல 2 ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

    இந்நோயை குணப்படுத்துவதில்

    கீழாநெல்லியின் பங்களிப்பு.

    ஒரு மண்ணாங்கட்டி பங்களிப்பும் இல்லை. கீழாநெல்லியை சாப்பிட்டாலும் சரி அல்லது சாப்பிடாவிட்டாலும் சரி ஆட்டோமேட்டிக்காக 2 அல்லது 3 வாரத்தில் தானாகவே குணமாகிவிடுகின்றன என்பதே உண்மை.

    உங்களுக்கு இப்போது என்மீது கோபம் வரலாம். என்ன கோபமென்றால்.. என்னடா இவன் ஆரம்பத்திலிருந்தே கீழாநெல்லியானது மஞ்சள் காமாலைக்கு ஏற்ற மருந்து இல்லை என்பதனையே திரும்ப திரும்ப வலியுறுத்திக்கொண்டு இருக்கிறானே என்கின்ற கோபம்தான் அது.

    நீங்கள் ஒன்றை இங்கு புரிந்துகொள்ள வேண்டும். நான் மூலிகை மருந்துக்கு எதிரானவன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நானே ஒரு மூலிகை மருந்தாளுநர்தான்.

    பலநோய்களுக்கு மூலிகை மருந்து அற்புதமானதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் மஞ்சள் காமாலை போன்ற வைரஸ் சார்ந்த தொற்று நோய்களுக்கு கீழாநெல்லி மட்டுமல்ல எந்தவகையான மூலிகையும் ஏற்றதல்ல என்பதுதான் என்னுடைய வாதம்.

    அதாவது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாக பரவும் தொற்று நோய்களுக்கு மூலிகைகள் பயனளிப்பதில்லை என்பதே உண்மை. அதற்கு காரணமும் உண்டு. அதனை சில உதாரணங்கள்மூலம் விளக்க முயல்கிறேன்.

    சிலபல வருடங்களுக்கு முன்னால் "காலரா" என்று ஒரு வியாதி இருந்தது உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். இது தொற்று வைரஸ்களால் வரும் நோய். ஒரு கிராமத்தில் ஒருவருக்கு வந்தால் போதும் அந்த கிராமத்தையே காலி செய்துவிடும். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நோய் அது.

    cholera

    அந்த வைரஸ் பரவிய வேளைகளில்.. மக்களின் உயிரை வேட்டையாடிய காலகட்டத்தில்.. மூலிகை மருத்துவம் என்னும் பாரம்பரிய மருத்துவம் நம் நாட்டில் இல்லாமல் இருந்ததா?

    இருக்கத்தானே செய்தது?

    காலராவுக்கு அதில் மருந்து சொல்லப்படாமல் இருந்ததா?

    ஏராளமான மருந்துகள் அதிலும் இருக்கத்தானே செய்தன. ஆனால் எதுவுமே பயனளிக்கவில்லை.

    எப்போது காலராவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதுதான் அந்த தொற்றுநோயை நிரந்தரமாக ஒழிக்க முடிந்தது.

    அதுபோல "போலியோ"வை சொல்லலாம். இதுவும் வைரஸ்களால் பரவும் நோய்தான். சிலகாலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் லட்சக்கணக்கான குழந்தைகள் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டு கைகால்கள் சூம்பிப்போயின. நடக்கமுடியாமல் தரையோடு தரையாக தவழ்ந்து கொண்டிருந்த அவலமும் பன்னெடுங்காலம் நீடித்தது.

    அப்போதும் இதே பாரம்பரிய மூலிகை மருந்து இதே பாரத நாட்டில் இருக்கத்தானே செய்தன?. "இளம்பிள்ளைவாதம்" என்னும் பெயரில் வகைவகையாக மருந்துகளும் இருக்கத்தானே செய்தன... ஆனால் அவைகளால் போலியோ வைரஸை ஒழிக்கமுடியவில்லையே!!. தற்போது போலியோ சொட்டுமருந்து வந்துதானே போலியோவை ஓடஓட விரட்டியுள்ளன.

    இன்றும்கூட போலியோ சொட்டுமருந்துதான் நம்முடைய குழந்தைகளை போலியோவிலிருந்து பாதுகாத்து வருகிறதேயொழிய பாரம்பரிய "கஷாயம்" அல்லவே.

    இதுபோல "பெரியம்மை" நோயை குறிப்பிடலாம். இதுவும் வைரசால் பரவும் நோய்தான். பரம்பரை மருத்துவத்தில் இதற்கும் மூலிகை இருக்கத்தான் செய்கிறது.

    ஆனால், வேலைக்காகவில்லையே.. 50 கோடி மக்களின் உயிரை பெரியம்மை குடித்து தீர்த்ததுதான் மிச்சம். பரம்பரை மூலிகையால் அதனை துளியளவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1977 ல் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் இதனை முற்றிலுமாக ஒழித்துகட்ட முடிந்தது.

    இதேபோல சின்னம்மை, தட்டம்மை, பிளேக், வெறிநாய்கடி, பாம்புகடி என்று அனைத்துக்குமே மூலிகை மருத்துவத்தில் மருந்துகள் ஏராளமாக  சொல்லப்பட்டுள்ளன. அதெல்லாம் பெருமையடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறதே ஒழிய தொற்று நோய்கள் எதையும் விரட்டியடித்ததாக சரித்திரமே இல்லை.

    மேற்கண்ட நோய்களிலிருந்து தடுப்பூசிகள்தான் நம்மை காப்பாற்றி உயிரை மீட்டுத் தருகின்றனவேயொழிய பாரம்பரிய கஷாயங்கள் அல்லவே.

    பொதுவாகவே வைரஸ் சார்ந்த தொற்று நோய்கள், வெறிநாய் கடியால் வரும் வைரஸ் பாதிப்பு மற்றும் பாம்புக்கடி போன்ற விஷம் சார்ந்த விஷயங்களுக்கெல்லாம் மூலிகைகள் பயன்படுவதில்லை.

    ஏனென்றால் நவீன அறிவியல் வளர்வதற்கு முன்புவரை "நுண்ணுயிர்கள்" என்ற வஸ்து இருப்பது தெரியாமலேயே இருந்தது. நுண்ணுயிர் என்ற ஒன்று இவ்வுலகில் இருப்பதோ அது நோய்களை உருவாக்கும் என்பதோ முற்றிலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயமாகவே இருந்தது.

    "வைரஸ்" என்னும் கண்ணுக்குத்தெரியாத மிகச்சிறிய உயிரினத்தால்தான் தொற்றுநோய்கள் ஏற்படுகிறது என்பதை மனித மூளையால் புரிந்துகொள்ள முடியாத அந்த கால சூழ்நிலையில் அந்த நோய்க்கான மருந்தை மட்டும் எப்படி சரியாக உருவாக்கி இருக்க முடியும்?

    ஒரு நோய்க்கான மருந்தை சரியாக உருவாக்க வேண்டுமென்றால் முதலில் அந்த நோய் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான அடிப்படைக்காரணம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

    வைரஸ்களைப்பற்றியும், நுண்கிருமிகளைப்பற்றியும் எந்தவித அடிப்படை அறிவும் இல்லாத அந்த காலகட்டத்தில், அப்படி ஒரு வஸ்து இருக்கிறது என்பதே தெரியாத, கண்டறியப்படாத அந்த காலகட்டத்தில் அதனை கொன்றொழிப்பதற்கான மருந்தை மட்டும் எவ்வாறு சரியாக உருவாக்கியிருக்க முடியும்?.. சிந்தியுங்கள்..

    எனவே "வைரஸ்" சார்ந்த தொற்று நோய்களாகட்டும் அல்லது "விஷம்" சார்ந்த விஷயங்களாகட்டும் இவ்விரண்டைப்பற்றிய சரியான புரிதல்களும், அறிவும் பாரம்பரிய மருத்துவம் தோன்றிய காலகட்டத்தில் இல்லையென்பதால் அதற்கான சரியான மருந்துகளையும் உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.

    எனவே நுண்ணுயிரிகளால் பரவும் நோய்களுக்கு மட்டுமல்ல விஷம் சார்ந்த விஷயங்களுக்கும்கூட நவீனகால தடுப்பு மருந்துகளும், தடுப்பூசிகளும் மட்டுமே பயன் தரும் என்பது சாதாரண அறிவுள்ளவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய உண்மை. மீதியெல்லாம் பெருமை பேசுவதற்கு மட்டுமே உதவும்.

    இதே நிலைமைதான் மஞ்சள் காமாலைக்கும். மஞ்சள் காமாலை வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக இது வைரஸ்களால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். குறிப்பாக 7 வகையான வைரஸ்களால் இது ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஹெப்படைட்டிஸ் B என்பது உயிர்கொல்லி நோயான HIV வைரஸை விட ஆபத்தானதாக கணிக்கப்பட்டுள்ளது.

    பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் காமாலை என்பது பித்தநீர் இரத்தத்தில் கலப்பதால் வருவது என்பதனை மட்டுமே அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்களேயொழிய அதற்கு வைரஸும் ஒரு காரணம் என்பதனை பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஏனெனில் வைரஸ் பற்றிய புரிதலே அப்போது கிடையாது.

    எனவே இந்த வைரஸை கொன்றொழிப்பதையே முக்கிய குறிக்கோளாகக்கொண்டு அவர்கள் எந்த மருந்தையும் உருவாக்கவும் முயற்சித்ததில்லை. எனவே பழம்பெருமை பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு உண்மை அறிந்து தெளிவடைவதே சிறப்பு.

    ஆகவே, மஞ்சள் காமாலை தோற்றுவிக்கும் இந்த ஆட்கொல்லி வைரஸை முன்பு எப்படி காலரா, போலியோ, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, பிளேக், வெறிநாய்கடி முதலியவைகளுக்கு மூலிகை மருந்து இருந்தும் குணப்படுத்தமுடியாமல் கடைசியில் தடுப்பூசியால் மட்டுமே குணப்படுத்த முடிந்ததோ.. அதுபோல மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தடுப்பூசியால் மட்டுமே குணப்படுத்த முடியுமேயொழிய கீழாநெல்லியால் அல்ல.

    தற்போது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நோய்களுக்கு காரணமான வைரஸ்கள் கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட பெரும்பான்மையான காமாலை வைரஸ்களுக்கு தடுப்புமருந்துகளும் கண்டறியப்பட்டுவிட்டன.

    சரி இனி இந்த "ஹெப்படைட்டிஸ் A" வைரஸிற்கு வருவோம்..

    இந்த ஹெப்படைட்டிஸ் A வைரஸை விரட்டியடிக்கும் தன்மை நம் உடலில் செயல்படும் நோயெதிர்ப்பு சக்திக்கு உள்ளன என்பதனை முன்பே பார்த்தோம்.

    எனவே, கீழாநெல்லி வைத்தியம் செய்கிறேன் என்றும், தாயத்து கட்டுகிறேன் என்றும், கையில் சூடு வைக்கிறேன் என்றும் சொல்லி மக்களுடைய அறியாமையை பயன்படுத்தி தானாக குணமாகும் நோயை தாங்கள் செய்த வைத்தியத்தால்தான் குணமானதாக சொல்லி காசு பார்த்து விடுவது மட்டுமல்லாமல் "வைத்திய சிரோன்மணி" என்னும் பட்டத்தையும் சேர்த்தே சம்பாதித்துவிடுகின்றனர் என்பதே உண்மை.

    three days keelanelli maruthuvam

    ஆனால், இங்கு இன்னும் ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த "ஹெப்படைட்டிஸ் A" வைரஸினால் பெரிய அளவில் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் ஒரு சிலருக்கு கல்லீரல் வெகுவாக பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. எனவே காமாலை குணமாகும்வரை கண்டிப்பாக முறையான சிகிச்சை எடுக்கும் பொருட்டு மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதற்கு தற்போது நல்ல தரமான தடுப்பூசிகள் உள்ளன. அவைகளை போட்டுக்கொள்ள வேண்டியதுவும் மிக மிக அவசியமே.

    அதெல்லாம் சரி.. "ஹெப்படைட்டிஸ் B" ன்னு சொல்லுறாங்களே.. அப்படீனா இன்னா நைனா?..

    ஓ.. அதுவா.. பெருசா ஒண்ணுமில்லீங்க.. புரியுறமாதிரி சொல்லணும்னா.. "ஹெப்படைட்டிஸ் A" மரண பயத்தை மட்டும்தான் கண்ணில் காட்டும். ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. ஆனால் "ஹெப்படைட்டிஸ் B" அப்படியில்லை உங்களுக்கு மரணபயம் வருவதற்கு முன்னாடியே மெய்யாலுமே மரணத்தை கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிடும்.

    ஹெப்படைட்டிஸ் வைரஸ்களிலேயே மிகவும் கொடூரமானது இதுதான். அதாவது உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் "ஹெப்படைட்டிஸ் B" வைரஸானது மரணத்தை உங்களுக்கு காட்டியும் கொடுக்கும்.. கூடவே கூட்டியும் கொடுக்கும்.. (அட.. ஆத்தி.. இது என்னடா அநியாயமா இருக்கு. ஒரு பேச்சுக்கு வெளக்கம் கேட்டா.. விளக்குமாத்தை எங்கேயோ கொண்டுவந்து சொருவுறீங்களே.. ஆனா ஒண்ணு மட்டும் தெரிஞ்சுபோச்சுடா.. இந்த பிரபஞ்சத்துல உங்க மத்தியில இந்த உசுர காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்டா..😪😩)

    ஆகவே ஹெப்படைட்டிஸ் வகை வைரஸ்களை பொத்தாம்பொதுவாக "சிங்கம்" என்று வர்ணித்தால் அது உண்மையாகவே "ஹெப்படைட்டிஸ்-B" வைரஸ்சுக்குத்தான் பொருந்தும். ஆம் அதற்கு மட்டுமேதான் பொருந்தும். ஏனென்றால் உண்மையாகவே ஹெப்படைட்டிஸ் B என்பது மாஸ் காட்டி நிற்கும் சிங்கம்தான். இந்த சிங்கத்தைப்பற்றிதான் அடுத்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

    நீங்க பொதுவா சிங்கிளா வர்ற சிங்கத்தை பற்றித்தான் கேள்விப்பட்டுருப்பீங்க.. ஆனா வரும்போதே தலைய சிலிப்பிக்கிட்டே வர்ற சிங்கத்தை பார்த்திருக்கீங்களா? இனி வரும் அடுத்த பதிவில் அதைத்தான் பார்க்கப்போறீங்க.

    சிங்கத்த போட்டோவுல பாத்திருப்பீங்க.. சினிமாவுல பாத்திருப்பீங்க.. TVல பாத்திருப்பீங்க.. ஏன் கூண்டுல கூட பாத்திருப்பீங்க.. ஆனா கம்பீரமா காட்டுல நடந்து பாத்திருக்கீங்களா? வெறித்தனமா தனியா நின்னு வேட்டையாடி பாத்திருக்கீங்களா? ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா.. பாக்குறியா.. பாக்குறியா என கத்திக்கொண்டே ஒரு குத்துவிட இது ஒண்ணும் சிங்கம்1 டிரைலர் இல்லீங்க.. அதுக்கு அதுக்கு.. அதுக்கும் மேல "சிங்கம் 2".. பாப்பீங்க... அத அடுத்த பதிவுலயே  பாப்பீங்க.. Wait.. follow.. me.

    (சிங்கம் அசிங்கியபடாம இருந்தா சரி.. ம்ம்.. எதுக்கும் "Wait.. follow.. me.." ன்னு சொல்லி வைப்போம்..)

    இப்பதிவின் தொடர் பகுதியாகிய 8 வது பகுதியை [PART - 8] படிக்க கீழேயுள்ள சுட்டியை உங்கள் விரல்களால் மெல்ல தட்டுங்க!.


    💗💙💙💚💚💙💙💗

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    4 கருத்துகள்

    1. This is real take it seriously, Who will believe that herbal medicine can cure herpes, I never believe that this will work, I have to spend a lot of money getting drugs from the hospital to keep me and my son healthy, it got to a point that I was waiting for death to come because I was broke, one day I hard about this great man called Dr. Abolo who is well know for Herpes, HIV, and cancer cure, I decided to email him I didn't believe him that much, I just wanted to give him a try, he replied to my mail and Needed some Information about me, then I sent them to him, he prepared herbal medicine and, he gave my details to the Courier Office. they told me that in 4-8 days I will receive the package and after receiving it, I took the medicine as prescribed by him at the end of two weeks, he told me to go to the hospital for a check-up, and I went, surprisingly after the test the doctor confirm me Herpes simplex virus-negative, and my son and I thought it was a joke, I went to another hospital and was also negative, thank you for saving our life's, I promise I will always testify of your good works. if you are a herpes simplex virus patient, contact him and I am sure you will get cured, contact him via Email@ draboloherbalhome@gmail.com
      THESE ARE THE THINGS Dr. WILLIAMS CAN CURE
      . HERPES
      . HIV/AIDS
      . CANCER
      . DIABETES
      . LASSA FEVER
      . GONORRHEA
      . MENOPAUSE DISEASE
      . EPILEPSY

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. வருக நண்பரே! தங்கள் கருத்துக்களை விரிவாக பதிவு செய்தமைக்கு நன்றி! தாங்கள் கொடுத்த தகவல்கள் பலருக்கு பயனுடையதாக இருக்கும். நன்றி நண்பரே!!!

        நீக்கு
    2. கேள்வி கேட்டு பதில் விளக்கமாக... நகைச்சுவையுடன் சொல்லும் போது மனதில் விரைவாகப் பதியும்... அருமை... தொடர வாழ்த்துகள்...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்கள் கருத்து உண்மை.. நகைச்சுவையை விரும்பாதார் யாருமில்லை.. தங்களின் வாழ்த்துக்கு நன்றி!!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.