"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும். Phyllanthus amarus - Medical jaundice.

கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும். Phyllanthus amarus - Medical jaundice.

கல்லீரல் பாதிப்பு காமாலை.

[PART - 5]

கீழாநெல்லியைப்பற்றி நாம் தொடர்ந்து பல பதிவுகளில் பார்த்துவருகிறோம். கீழாநெல்லியின் வகைகள், அதன் நோய் நீக்கும் பண்புகளோடு மஞ்சள்காமாலை என்னும் உயிர்கொல்லி நோயை தீர்ப்பதில் அது எந்த அளவிற்கு நம்பிக்கைக்குரியதாக உள்ளது என்பதுபற்றியும் தொடர்ந்து பார்த்துவருகின்றோம்.

மஞ்சட்காமாலை என்றாலே அதற்கு ஒரே தீர்வு கீழாநெல்லிதான் என்கின்ற மனநிலையில் இன்னும் பலர் இருந்துகொண்டுதான் உள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் மஞ்சள்காமாலையை ஒரு தனிப்பட்ட நோயாக பார்ப்பதே காரணம் எனலாம்.

இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் பண்ணுங்க.

>>கீழாநெல்லியும் பல்வகை இனங்களும் - Keelanelli - Phyllanthus Species.<<

ஆனால், உண்மையில் மஞ்சள்காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதுவும், பலவிதமான நோய்கள் ஏற்படுத்துகின்ற பொதுவான அறிகுறியே காமாலை என்பதுவும், இந்த அறிகுறியை சுமார் 20க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுத்துகின்றன என்பதனையும் புரிந்துகொண்டால் மஞ்சள் காமாலைப்பற்றிய தெளிவும், இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும் திறனை கீழாநெல்லி என்னும் மூலிகை பெற்றிருக்கவில்லை என்னும் புரிதலும் உண்டாகும்.

இந்த புரிதலை புரியவைப்பதே இக்கட்டுரையின் நோக்கமே தவிர யாரையும் காயப்படுத்துவது அல்ல.

  இருபதுக்கும் மேற்பட்ட நோய்களில் எந்த ஒரு நோய் உடலை தாக்கினாலும் அவை மஞ்சட்காமாலை அறிகுறியைத்தான் வெளியே காட்டுகின்றன. எனவே எந்த நோய் தாக்கியுள்ளதால் காமாலை அறிகுறி ஏற்பட்டுள்ளது என்பதனை சாதாரணமாக கண்டறிவது கடினம். 

  எனவே, எந்த நோய் தாக்கியுள்ளது என்பதனை அறியாமலேயே மஞ்சள்காமாலை அறிகுறியை மட்டும் வைத்துக்கொண்டு சிகிச்சை மேற்கொள்வதென்பது இறுதியில் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் வாய்ப்பும் உள்ளது.

  பொதுவாக அனைத்துவகையான மஞ்சட்காமாலைகளும் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதனை முன்பே பார்த்துள்ளோம். அவை..

  1. ஆபத்தில்லா காமாலை.
  2. இரத்த அழிவு காமாலை.
  3. அடைப்பில்லா காமாலை.
  4. அடைப்பு காமாலை.

  இதில் முதல் இரண்டு காமாலைகளைப்பற்றி முன்னிரு பதிவுகளில் பார்த்துவிட்டோம். அடுத்து மூன்றாவது வகையான அடைப்பில்லா காமாலையைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

  அடைப்பில்லா காமாலை.

  ஏதோ ஒரு காரணத்தினால் அல்லது நுண்கிருமிகளால் கல்லீரல் பாதித்து இரணமாகி சரியாக செயல்பட முடியாத தன்மையை "கல்லீரல் அழற்சி" என குறிப்பிடுகிறோம்.

  இந்த அழற்சியால் இரத்தத்திலுள்ள கழிவுப்பொருளான "பிலிருபினை" முறையாக வடிகட்டி கல்லீரலால் பிரிக்க முடியவில்லையெனில் அதனால் மஞ்சள்காமாலை வரலாம். இதனை  "அடைப்பில்லா காமாலை" (Medical Jaundice) அல்லது "கல்லீரல் பாதிப்பு காமாலை" என அழைக்கின்றனர். இந்த கல்லீரல் செயலிழப்புக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை 5 பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அவை..

  1. பொதுவான கல்லீரல் பாதிப்பு காமாலை.
  2. பாக்டீரியாவினால் ஏற்படும் காமாலை.
  3. நுண்பூஞ்சை காமாலை.
  4. நுண்கிருமி அழற்சி காமாலை.
  5. வைரஸ் அழற்சி காமாலை.

  இந்த ஐந்து பிரிவுகளிலும் மஞ்சள்காமாலை அறிகுறிகளை ஏற்படுத்துகின்ற நோய்கள் எண்ணிக்கையில் பல உள்ளன என்றாலும். ஒரு புரிதலுக்காக குறிப்பிட்ட சில வகை நோய்களை பற்றிமட்டும் இங்கு பார்ப்போம்.

  பொதுவான கல்லீரல் பாதிப்பு காமாலை.

  1. வில்சன் நோய் (Wilson Disease).
  2. கல்லீரல் இறுக்க நோய்.
  3. கில்பெர்ட் மஞ்சள்காமாலை.
  4. சிவப்பணு உற்பத்தி மஞ்சள்காமாலை.
  5. மருந்துகளால் ஏற்படும் மஞ்சள்காமாலை.
  6. மதுவால் ஏற்படும் 

   மஞ்சள்காமாலை.
  7. புற்றுநோய்.

  பாக்டீரியாவினால் ஏற்படும் காமாலை.

  1. சிபிலிஸ் 
  2. கல்லீரல் சீழ்கட்டி.
  3. கல்லீரல் காச நோய்.
  4. பொரெலியா பர்க்டோர்பெரி - Borrelia burgdorferi.

  நுண்பூஞ்சை காமாலை.

  1. ஹிஸ்டோபிளாஸ் மோசிஸ்.
  2. பிளாஸ்டோமைக்கோசிஸ்.

  நுண்கிருமி அழற்சி காமாலை.

  1. பிளாஸ்மோடியம்.
  2. டாக்ஸோகோரியசிஸ்.
  3. எக்கினோகாக்கோசிஸ்.
  4. லெப்டோஸ்பைரோசிஸ்.
  5. தட்டைப்புழு மற்றும் நாக்குப்பூச்சி மஞ்சள்காமாலை.

  வைரஸ் அழற்சி காமாலை.

  1. மஞ்சள் காய்ச்சல் வைரஸ் - Yellow fever virus.
  2. முத்த நோய் வைரஸ் - Epstein barr virus.
  3. ஹெர்பெஸ் வகை வைரஸ் - Herpes Simplex virus.
  4. ஹெப்படைட்டிஸ் டைப் வைரஸ்.

  மேற்குறிப்பிட்டுள்ள அடைப்பில்லா காமாலைக்கான 5 வித பிரிவுகளில் முதல் பிரிவான "பொதுவான கல்லீரல் பாதிப்பு" காமாலையை பற்றி முதலில் பார்ப்போம்.

  பொதுவான கல்லீரல் பாதிப்பு காமாலைகள்.

  வில்சன் நோய் - Wilson disease.

  இது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு மரபணு சார்ந்த நோய் எனலாம். இந்த நோய் பாதிப்பை முதன்முதலாக கண்டறிந்து கூறியவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் "சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன்". எனவே அவர்பெயராலேயே இது "வில்சன்" நோய் என அழைக்கப்படுகிறது.

  பிறழ்வான மரபணுக்களை தாய் தந்தை இருவரும் கொண்டிருந்தால் அது வயிற்றில்வளரும் குழந்தைக்கும் கடத்தப்பட்டு அவர்கள் பிறக்கும்போதே இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

  wilsons-disease

  இந்த மரபணு பாதிப்பால் தாமிர சத்துக்களை உடல்முழுக்க கொண்டு செல்லும் புரதத்தின் செயல்பாடு சீர்குலைக்கப்படுவதால் இதன் காரணமாக தாமிரம் சில உறுப்புகளில் தேக்கமடைந்து படிந்துவிடுவதால் இந்நோய் ஏற்படுகிறது.

  இந்த நோயின் தாக்கத்தால் செம்பு என்னும் உலோக சத்தானது மூளை, கல்லீரல், சிறுநீரகங்களில் படிந்துவிடுகின்றன. இந்த படிவுகளால் கடுமையான அளவில் கல்லீரலும், மண்ணீரலும் தன் இயல்பான செயல்பாட்டை  இழக்க.. அதன் காரணமாக மஞ்சள்காமாலை அறிகுறிகள் தோன்றுகின்றன.

  பொதுவாக 30,000 பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவருக்கு இந்நோய் இருக்கலாம். 5 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களுடைய கண்களின் நிறத்தைக்கொண்டே எளிதாக கண்டறியமுடியும். ஆனால் வயதானவர்களை இந்நோய் பாதிக்கும் பட்சத்தில் அதனை ஆரம்பகட்டத்தில் அறிவது கொஞ்சம் கடினமே.

  இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடைய கண்களின் கருவளையத்தை சுற்றி பழுப்பு அல்லது காவிநிறமான வளையம் காணப்படுவதை வைத்து இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை எளிதில் கண்டறியலாம். ஆனால் 65 % நோயாளிகளின் கண்களில் மட்டுமே இவ்வளைய அமைப்பு காணப்படுகின்றன.

  தாமிர சத்தைப்போல இரும்பு சத்து அதிகரித்தாலும் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. இதனை ஹீமோகுரோமடைசிஸ் (Hemochromatosis) என குறிப்பிடுகின்றனர்.

  Wilson disease_ringArrow

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- இந்நோயை குணப்படுத்த "D - பெனிசில்லாமின்" மற்றும் "ட்ரைன்டைன்" மருந்துகள்  பயன்படுத்தப்படுகிறது.

  இந்த மருந்துகளானது கல்லீரலில் படிந்துள்ள அதிகப்படியான தாமிரசத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. ஆனால் நோய் மிக கடுமையாக இருக்கும் பட்சத்தில் இம்மருந்து பயன்படுவதில்லை. இக்காலகட்டத்தில் நோயாளிகளின் உயிரைக் காப்பற்ற வேண்டுமெனில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே கைகொடுத்து உதவுகிறது.

  அப்படியென்றால் மஞ்சள் காமாலை அறிகுறியை ஏற்படுத்துகின்ற இந்த நோயை குணப்படுத்த கீழாநெல்லி உதவாதா என்கிறீர்களா?

  ஹ. ஹஹ.. உங்களுக்கு எப்ப பார்த்தாலும் குசும்புதான்.

  💢💢💢💢

  கல்லீரல் இறுக்க நோய்.

  லிவர் சிரோசிஸ் - Liver Cirrhosis.

  இதனை "கல்லீரல் இறுக்கம்" , "கல்லீரல் சுருக்கம்", "கல்லீரல் கரணை நோய்" என பலவகைகளில் குறிப்பிடுகின்றனர். இது பித்தநாளங்களில் ஏற்பட்டால் அதனை "முதன்மை பித்தநாள இறுக்கநோய்" என அழைக்கின்றனர். இந்த இறுக்க நோய்கள்  பெரும்பாலும் பலவருடங்களாக தொடர்ந்து மதுபானம் அருந்துபவர்களுக்கே ஏற்படுகின்றன.

  தொடர்ந்து குடிப்பதால் இந்தியாவின் கலங்கரை விளக்கமாக திகழும் குடிமகன்களுடைய கல்லீரலின் மிருதுவான செல்கள் இறுகி வறண்டு நார் தன்மையுள்ள செல்களாக உருமாற்றமடைகின்றன. இச்செல்கள் தொடர்ந்து கல்லீரலை சுருங்க செய்து அதன் இயக்கத்தையே முடக்கிப்போடுகின்றன. நாளடைவில் இந்த நார் செல்கள் புற்றுநோய் செல்களாக உருமாறுகின்றன. இதனாலும் மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படுகின்றன.

  அதெல்லாம் இருக்கட்டும்...  இந்த கல்லீரல் நோயிலிருந்து விடுபட கீழாநெல்லியை எப்படி பக்குவப்படுத்தி சாப்பிடவேண்டும்... அதை முதல்ல சொல்லுங்க என்கிறீர்களா?...

  ம்... ம்ம்... உண்மையைச் சொல்லப்போனால்... இந்த கல்லீரல் இறுக்க நோயை குணப்படுத்தும் திறனெல்லாம் நீங்கள் குறிப்பிடும் கீழாநெல்லிக்கு கிடையாதுங்கோ!!...

  💢💢💢💢

  கில்பெர்ட் மஞ்சள்காமாலை.

  பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு "கில்பெர்ட்" (Gilbert's) என்னும் ஒருவகை பிரச்சனையால் மஞ்சட்காமாலை ஏற்படலாம்.

  gilberts syndrome Jaundice_eye

  இந்நோயின் குணம் யாதெனில்.. நீங்கள் பட்டினியாக இருக்கும்போதோ அல்லது நீங்கள் உடல்சோர்வு, மனசோர்வு, காய்ச்சல் இவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும்போது மட்டும் மஞ்சள்காமாலை அறிகுறி அதிகரிக்கும். இது இயல்பானது. இதற்கு சிகிச்சை தேவையில்லை. கீழ்காய்நெல்லி சிகிச்சை இதற்கு பயனளிக்காது. அது தேவையும் இல்லை.

  💢💢💢💢

  சிவப்பணு உற்பத்தி மஞ்சள்காமாலை.

  இரத்தத்தில் அளவுக்கதிகமான சிவப்பணுக்கள் உற்பத்தியானாலும் மஞ்சள்காமாலை ஏற்படும். ஆம்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். இந்த கீழாநெல்லி இருக்குதே கீழாநெல்லி... அது அளவுக்கதிகமான சிவப்பணு உற்பத்தியை குறைக்கவும் செய்யாது... அதனால் எற்படுகின்ற மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தவும் செய்யாது.

  💢💢💢💢

  மருந்துகளால் ஏற்படும் மஞ்சள்காமாலை.

  சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளால்கூட சிலருக்கு மஞ்சள்காமாலை ஏற்படலாம்.

  நோய்களுக்கு கொடுக்கப்படும் சிலவகையான மருந்துகள் கல்லீரலை பாதிப்படைய செய்வதால் மஞ்சள்காமாலை அறிகுறிகள் உருவாகும்.

  dangerous Drugs Pills

  ஆண்டி பயாடிக்ஸ், வலிநிவாரணிகள் மட்டுமல்லாது இன்னும் சில மருந்துகளை தொடர்ந்து சிலவருடங்கள் எடுத்துக்கொண்டால் அது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுவும் மஞ்சள்காமாலைக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிடும்.

  ஆங்கில மருந்துகள் என்று சொல்லப்படும் அலோபதி மருந்துகள் மட்டுமல்ல சிலவகை மூலிகை மருந்துகளாலும்கூட "கல்லீரல் அழற்சி" ஏற்படுகின்றன. சித்த மருத்துவத்துறையில் அனைத்துவகையான உலோகம், பாதரசம் மற்றும் ரசாயன, பாஷாண மருந்துகளை பயன்படுத்தி பற்பம், செந்தூரம் முதலிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடல் மற்றும் கல்லீரலுக்கு மிகப்பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

  அதிலும் "மெர்குரி" என்று சொல்லப்படும் பாதரசத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் "ரஸ செந்தூரம்", "லிங்க செந்தூரம்" முதலியன நரம்புகளை முற்றிலுமாக பாதித்து உங்களை படுக்கையிலேயே முடக்கிப்போடும் திறன் வாய்ந்தது எனலாம்.

  dangerous Drugs

  ஏனெனில், பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பது. மனித உடலில் 0.21 முதல் அதிகப்படியாக 1.3 வரை மட்டுமே மெர்குரி இருக்கலாம். இந்த அளவைவிட அதிகரிக்கும் போது கல்லீரல் பாதிப்பதோடு நரம்புகளும் முடங்கிப்போகும். மிகவும் பிரபலமாக பேசப்படும் "தங்கபஸ்பம்" கூட கிட்னியை சிதைக்கும் தன்மையுள்ளதே.

  இவ்வளவு ஆபத்து நிறைந்த மருந்துகளைத்தான் மருந்தகங்களில் மட்டுமல்லாமல் வலைத்தளம் வழியாக ஆன்லைனிலும் கூட கூவி கூவி விற்பனை செய்கின்றனர். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

  எனவே மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சுயவிருப்பத்தின்பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மஞ்சள்காமாலையை வருவிப்பதோடு நிரந்தர கல்லீரல் பாதிப்பையும், நரம்பு சிதைவையும் ஏற்படுத்தி உங்களை படுக்கையிலேயே முடங்கிப்போக வைத்துவிடும்.

  💢💢💢💢

  மதுவால் ஏற்படும் மஞ்சள்காமாலை.

  தொடர்ந்து மது அருந்தும் பழக்கமுடையவர்களில் சிலருக்கு கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு கொழுப்பு படிதல் ஏற்படும். இதனாலும் மஞ்சள்காமாலை அறிகுறி தென்படும்.

  தொடர்ச்சியாக பலவருடங்கள் வரையறை இல்லாமல் மது குடிப்பவர்களுக்கு "கல்லீரல் சுருக்க நோய்" (Cirrhosis) ஏற்படுகின்றன. 

  இந்நோயினால் ஆரம்பத்தில் கல்லீரலில் வீக்கம் உருவாகி அதன்பின் கல்லீரலின் செல்கள் தொடர்ந்து சேதங்களை சந்திப்பதால் கல்லீரல் படிப்படியாக சுருங்கிப்போகும்.

  இதனால் பலவீனம், உடல்சோர்வு, கன்னம் வற்றிப்போகுதல், கண்கள் குழிவிழுந்து போவதோடு லேசான மஞ்சள்காமாலையும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இப்படியானவர்களுக்கு குடியை அறவே நிறுத்தினால்தான் மஞ்சள்காமாலை குணமாகுமேயொழிய கீழாநெல்லி சிகிச்சையெல்லாம் பயன்படாது.

  💢💢💢💢

  புற்றுநோய்.

  இரத்தப்புற்றுநோய் பாதிப்பாலும், கல்லீரல் புற்றுநோய் பாதிப்பாலும், நிணநீர் சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளாலும் மிதமான மஞ்சள்காமாலை ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், கல்லீரல் மண்ணீரல் வீக்கம், எலும்புகளில் வலியுணர்வு உட்பட இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

  liver cancer

  இதில் கல்லீரல் புற்றுநோயானது பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கின்றன. அதுவும் தொடர்ந்து பலவருடங்களாக மதுபானம் அருந்துபவர்களையே பாதிக்கின்றன.

  கல்லீரல் புற்றுநோயுள்ளவர்களை ஆராய்ந்து பார்க்கும்போது அதில் 80% பேர் கல்லீரல் சுருக்கநோயினால் அவதிப்படுபவர்களாகவே உள்ளனர். இந்த கல்லீரல் சுருக்கநோயானது வரையறையே இல்லாமல் அதிகமாக மதுபானம் அருந்துபவர்களுக்கே  ஏற்படுகின்றன.

  மேலும், ஹெப்பாடிட்டிஸ் வைரஸ்களான "ஹெப்பாடிட்டிஸ் B" மற்றும் "ஹெப்பாடிட்டிஸ் C" டைப் வைரஸ்களால் ஏற்படும் ரணங்கள் மற்றும் அழற்சிகள் புற்றுநோய்களாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய் பாதிப்புகளையெல்லாம் சீர்செய்யும் திறன் கீழாநெல்லிக்கு கிடையாது. இரத்தப்புற்றுநோய்க்கு எலும்பு மஜ்ஜை சிகிச்சை மட்டுமே ஓரளவு பலன்தரும். கல்லீரல் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை மற்றும் லேசர் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன.

  💢💢💢💢

  பாக்டீரியாவினால் ஏற்படும் காமாலை.

  சிபிலிஸ் - கிரந்தி நோய்.

  பாலின நோயான "சிபிலிஸ்" வகை நோய்களும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி மஞ்சள்காமாலை அறிகுறியை உண்டுபண்ணுகின்றன.

  சிபிலிஸ் (Syphilis) என்பது கிரந்தி என்று சொல்லப்படும் பாலியல் சார்ந்த ஒரு வித மேக நோய். இது "டிரிப்போனிமா பாலிடம்" என்னும் நீள்சுருள் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.

  பாலியல் உறவுமூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றுகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைக்குக்கூட சிலசமயங்களில் தாயினுடைய குருதியின்மூலமாக தொற்றிக்கொள்கின்றன. ஓரின சேர்க்கையாளர்களுக்கு எளிதாக தொற்றிக்கொள்கிறது.

  Syphilis

  இந்த நோய் உடலில் நீடிக்கும்பட்சத்தில் கல்லீரலும், மண்ணீரலும் வீக்கமடைகின்றன. இதனாலும் மஞ்சள்காமாலை ஏற்படுகின்றன. சிபிலிஸ் பாதித்த அனைவருக்குமே மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. சிலபேருக்கு ஏற்படலாம்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இந்நோயை குணப்படுத்த பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தரப்படுகின்றன. "பென்சிலின்", "டெட்ராசைக்லைன்" மற்றும் "டாக்ஸிசைக்ளின்" முதலியன நல்ல பலனை தருகின்றன.

  இந்த நோய்க்கு காரணமான "டிரிப்போனிமா பாலிடம்" என்னும் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கீழாநெல்லிக்கு கிடையாதென்பதால் சிபிலிஸ் பாதிப்பால் ஏற்படும் மஞ்சட்காமாலைக்கு கீழாநெல்லி சிகிச்சையால் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை.

  💢💢💢💢

  கல்லீரல் சீழ்கட்டி.

  உடலுக்குள் ஊடுருவும் பாக்டீரியா கிருமிகள் இரத்தத்தின் வழியாக டிராவல் செய்து கல்லீரலுக்குள் சென்று அங்கு சீழ்கட்டிகளை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் குளிர்காய்ச்சல், கல்லீரல் வீக்கம் ஏற்படுவதோடு அதன் காரணமாக வயிற்றில் வலியும் மஞ்சள்காமாலை அறிகுறிகளும் ஏற்படுகின்றன.

  liver abscess

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - கல்லீரலிலுள்ள சீழ்களை ஊசியின் மூலமாகவோ அல்லது வேறு கருவிகள் மூலமாகவோ அகற்றுவதுடன் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வதாலேயே இந்நோயிலிருந்து நிவாரணம் பெறமுடியும். இதற்கு கீழாநெல்லி சிகிச்சை பயன்தருவதில்லை.

  💢💢💢💢

  கல்லீரல் காச நோய்.

  காசநோய் என்பது "மைக்கோபாக்டீரியம்" (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. காற்றின் வழியாகவும், அசுத்த நீரின் மூலமாகவும் உடலினுள் செல்லும் இது உடலின் பல உள்ளுறுப்புகளை பாதிப்பதோடு குடலையும் பாதிக்கிறது. குடலிலிருந்து கல்லீரலுக்கு தாவுகிறது.

  Mycobacterium

  கல்லீரலுக்குள் சென்று அங்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இது வலி, காய்ச்சல் மற்றும் மஞ்சள்காமாலை அறிகுறியையும் ஏற்படுத்துகிறது.

  💢💢💢💢

  பொரெலியா பர்க்டோர்பெரி.

  (Borrelia burgdorferi).

  பொரெலியா பர்க்டோர்பெரி (Borrelia burgdorferi) வகை பாக்டீரியாவினாலும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு மஞ்சட்காமாலை வரலாம். இந்த பாக்டீரியாவானது லைம் (Lyme disease) என்னும் ஒருவித நோயை உருவாக்குகின்றன. அமெரிக்காவில் இந்தநோய் மிகவும் பிரபலம்.

  கருப்பு நிறமான ஒருவகை உண்ணி கடிப்பதால் இந்தவகை பாக்டீரியா மனிதர்களுக்கு பரவுகின்றன. இந்தவகை பாக்டீரியா பாதிப்புகளால் காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, தோலில் "எரித்மா மைக்ரான்ஸ்" (Erythema migrans) எனப்படும் சிவந்த வட்டவடிவ அடையாளங்களுடன் சொறிநோய் ஏற்படுகின்றன.

  இதற்கு முறையான சிகிச்சை அளிக்க தவறினால் இந்த பாக்டீரியாவானது உடலிலுள்ள மூட்டுகளை கடுமையாக பாதித்து மூட்டுவலியை ஏற்படுத்துகின்றன. மேலும் நரம்பு மண்டலத்திற்குள் பரவுவதுடன் இதயத்திற்குள்ளும் என்டர் ஆகின்றன. நோயின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விட்டு விட்டு வரும் மஞ்சள் காமாலை தோன்றுகின்றன.

  💢💢💢💢

  நுண்பூஞ்சை காமாலை.

  சிலவகை நுண்பூஞ்சை காளான்களாலும் மூச்சுக்குழாய் மற்றும் குருதி அணுக்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு காமாலை அறிகுறிகள் ஏற்படுகின்றன. 

  அவ்வகையான நுண்பூஞ்சைகளை குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் "ஹிஸ்டோபிளாஸ் மோசிஸ்" மற்றும் "பிளாஸ்டோமைக்கோசிஸ்" பூஞ்சைகளை குறிப்பிடலாம்.

  உயிருக்கு மிகவும் ஆபத்தான இந்த பூஞ்சைகள் ஈரப்பதம் நிறைந்த பழங்கால பாழடைந்த கட்டிடங்களிலும், குகைகளிலும் வளருகின்றன.

  இந்த பூஞ்சையானது பாழடைந்த கட்டிடங்களை இடிக்கும் இடங்களில் தொடர்ந்து இருப்பதாலும், வௌவால்கள் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகின்றன.

  bat-in-cave

  வௌவால்கள் மூலமாக எவ்வாறு பரவுகிறதெனில், இந்த பூஞ்சைகளானது பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் இருள்சூழ்ந்த குகைபோன்ற இடங்களிலேதான் பெரும்பாலும் வளர்கின்றன.

  இவ்விடங்களில் வாசம் செய்யும் வௌவால்களின் மீது இப்பூஞ்சைகளின் மைக்ரோ அளவுள்ள விதைகளும், பூஞ்சை துகள்களும் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும்.

  இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் உங்களினூடாக இறகடித்துப் பறக்கும் வௌவால்களிலிருந்து சிதறடிக்கப்படும் பூஞ்சை துகள்கள் உங்களின் மூச்சுக்குழாய்கள் வழியாக சென்று நுரைஈரலை பாதித்து மூச்சு சார்ந்த நோய்களை ஏற்படுத்துவதோடு ரத்தத்திலும் கலந்து இரத்தத்தின் செயல்திறனையும் பாதித்து மஞ்சள் காமாலை அறிகுறியை ஏற்படுத்துவதோடு மரணத்தையும் கொண்டுவருகின்றன.

  twin bat-cave

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இதை குணப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு பங்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனையும் மீறி கீழாநெல்லியை தேடித்தான் போவேன் என்று நீங்கள் அடம்பிடித்தீர்கள் என்றால் விரைவிலேயே "சங்கு" சத்தம் உங்களின் பின்னால் கேட்க ஆரம்பித்துவிடும்.

  இந்த வகையான பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க "கீட்டோகோனசோல்" (Ketoconazole) மற்றும் "கீட்டோபன் மாத்திரைகள்" (KetopanTablet) பயன்படுத்தப்படுகின்றன.

  இம்மருந்துகள் பூஞ்சை மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை (asole antifungals) தடுத்து நிறுத்துகின்றன.

  மேற்குறிப்பிடுள்ள மருந்துகளை கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்படியே பாவிக்கவேண்டும். சுய மருத்துவம் என்றுமே ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில் இதனை உட்கொள்வதற்கு சிலவரையறைகள் உள்ளன. தவறினால் பலவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

  💢💢💢💢

  இப்பதிவில் அடைப்பில்லா காமாலை என்னும் கல்லீரல் பாதிப்பு காமாலையை ஏற்படுத்தும் பலவகை காரணிகளில் "பொதுவான கல்லீரல் பாதிப்பு காமாலை", "பாக்டீரியாவினால் ஏற்படும் காமாலை" மற்றும் "நுண் பூஞ்சைகளால் ஏற்படும் காமாலை"களைப்பற்றியும் பார்வையிட்டோம். 

  மேலும் தொடர்ந்துவரும் பதிவுகளில் "ஒட்டுண்ணி மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படும் காமாலை" மற்றும் "வைரஸ் அழற்சி காமாலை" களைப்பற்றியும் அதனை நிவர்த்திக்கும் திறன் "கீழாநெல்லி" என்னும் தாவரத்திற்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதுபற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

  இப்பதிவின் தொடர் பகுதியாகிய ஆறாவது பகுதியை [ PART - 6 ] படிக்க கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க.

  >>கீழாநெல்லியும் நுண்ணுயிர் அழற்சி காமாலையும் - Microorganisms Inflammatory Jaundice.<<

  🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.