"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஆசை தோசை அப்பளம் வடை - Dosa appalam vada Claim Patent.

ஆசை தோசை அப்பளம் வடை - Dosa appalam vada Claim Patent.

தோசைக்கு வேண்டும் காப்புரிமை.

Dosa - dosai.

          நாம இங்க மொதல்ல என்ன பாக்க போறோமுன்னா தோசை இருக்குதில்லையோ தோசை. அதுக்கு எப்படி "தோசை"ன்னு பெயர் வந்தது என்பதனை பற்றியும். அது தமிழர்களின் பாரம்பரிய உணவு என்பதற்கான ஆதாரத்தையும், அதற்கு காப்புரிமை வாங்குவது பற்றியும் ஆலோசிக்கப்போறோம்.

Dosa.

அப்புறமா "மொறு மொறு ரவா தோசை" எப்படி செய்யுறது என்பதனை பற்றியும் விலாவாரியாகப்  பார்க்கப் போகிறோம்.

அப்புறமா தலைப்பில் உள்ளதுபோல அப்பளம், வடை பற்றியெல்லாம் இங்க பார்க்கப்போறதில்ல... அதெல்லாம் ஒரு ரைமிங்கிற்காக வச்சிருக்கோம்... கோவிச்சுக்காதீங்க.

சரி வாங்க இப்போ தோசைக்கு தோசைன்னு பேருவச்ச புண்ணியவாளன பத்தி பார்ப்போம்.

இந்தியாவுல இந்த தோசைய வச்சு இரு மாநிலங்களுக்கு இடையே நெடுங்காலமாக ஒரு பனிப்போரே நடந்துகிட்டு வருது. அந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வருவதே நம்முடைய தலையாய நோக்கம். அந்த இரு மாநிலமும் எதுன்னு பாத்தீங்கன்னா ஒண்ணு "கர்நாடகம்" (Karnataka) மற்றொன்று நம்ம "தமிழ்நாடு" (Tamilnadu).

தோசையானது தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டு வருவதால் வரவர இந்த கர்நாடக வாலாக்களின் ரவுசு தாங்க முடியல. இது தங்களுக்கே உரிமையான உணவு என்றும், இதற்கு பூ வச்சு, போட்டு வச்சு அழகு பார்த்தது மட்டுமல்லாமல் நாங்கதான் அதற்கு பேரும் வச்சோம் என்கின்றனர். "தோசை" என்பதே கர்நாடக பெயர்தான் என்பது அவர்களுடைய வாதம். எனவே அது எங்கள் பாரம்பரிய உணவாக்கும் என கச்சை கட்டி நிற்கின்றன கர்நாடக வாலாக்கள்...

ஆனால், தமிழர்களோ... இல்லை, இல்லை தோசை என்பதே தமிழ் பெயர்தான். எனவே அது எங்கள் பாரம்பரிய உணவு. எனவே நாங்கள்தான் அதற்கு உரிமை கொண்டாட முடியும். யாருக்காகவும் எதற்காகவும் எங்கள் பாரம்பரிய உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என நெடுங்காலமாகவே குடுமிபிடி சண்டை நடத்திவருகின்றனர்.

Dosa fight

நாமும் இந்த சண்டைக்கு ஒரு முடிவுகட்டவேண்டுமே என்கின்ற சமூக அக்கறையுடன் களத்தில் இறங்கிவிட்டோம்.

வாருங்கள்... தோசை கன்னடர்களின் பாரம்பரிய உணவா அல்லது தமிழர்களின் பாரம்பரிய உணவா என்பதனை அதன் பெயரைக்கொண்டே ஆராய்ந்தறிவோம்.

தோசை பிறந்த கதை.

ஆதிகாலத்தில் ஆப்பிரிக்க மண்ணில் தோன்றிய ஆதிமனிதன் இயற்கையாக விளைந்த பழங்களில் மட்டுமே அறு சுவையையும் கண்டறிந்தான். ஒருநாள்  ஏதேச்சையாக அவன் கண்டறிந்த நெருப்பானது சுவையற்ற உணவுக்கு கூட சுவையை ஏற்படுத்தி கொடுத்ததைக்கண்டு திகைத்துதான் போனான். 

நெருப்பினால் சுடப்படும்போது சுவையற்ற உணவும் சுவையாக ருசிக்க ஆரம்பித்தன. மாமிசத்தை நெருப்பிலிட்டு சுடுவதால் அதில் உருவாகும் விசேஷ ருசியால் கிறங்கிப்போன அவன் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.

விளைவு,... அவன் வாழ்ந்த இடத்தில் கொஞ்சம்கொஞ்சமாக விலங்குகளின் எண்ணிக்கை குறைய... அதனால் இயற்கை வளமும் குறைய... ஆப்பிரிக்காவிலிருந்து ஒருபகுதி மக்கள் உணவுக்காக இடம்பெயர ஆரம்பித்தனர்.

அப்படி அவர்கள் வந்து சேர்ந்த இடம்தான் இந்திய நிலப்பரப்பு. அப்படி அவர்கள் வந்தபோது இங்கு மனிதர்கள் யாருமே இல்லை. தாவரங்களும், பறவைகளும், காட்டுவிலங்குகளும் மட்டுமே மண்டிக்கிடந்தன. கூடவே ஏராளமான தானியங்களும் வளர்ந்து நிற்பதைக் கண்டான்.

ஆரம்பத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடி தின்றுவந்த அவனுக்கு அங்கு வளர்ந்து நின்ற தானியப் பயிர்கள் அவனுக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வதுபோல காற்றில் அசைந்தாடின. அப்போதுதான் அவனுடைய மூளையில் பளீரென்று ஒரு யோசனை தோன்ற ஆரம்பித்தது.

மாமிசங்களை சுட்டு சாப்பிடுவதைப்போல இந்த சுவையற்ற தானியங்களையும் இதே போல் நெருப்பில் சுட்டு பயன்படுத்தினால் என்ன என்கின்ற யோசனை தோன்ற தானியங்களை அரைத்து அடையாக தட்டி நெருப்பில்காட்டி நாவில் வைக்க "அடடா" என அசந்து போகுமளவுக்கு சுவையுடன் தித்திக்க... அதன் விளைவாக அதற்கு அவனுக்கு தெரிந்த பாஷையில் "அடை' என்று பெயரும் வைத்து விட்டான்.

ஆம்,... தானியங்களை அரைத்து அடையாக தட்டி இரண்டு பக்கங்களையும் நெருப்பினால் சுட்டு தயாரிக்கப்பட்ட அந்த பதார்த்தத்துக்கு அப்போது அவன்  வைத்தபெயர் "அடை".

மாமிசத்திற்கு அடுத்தபடியாக நெருப்பின் உதவியால் கலைநயத்துடன் உருவாக்கிய முதல் பதார்த்தம் இதுதான். இதுதான் எதிர்காலங்களில் பரிணாம மாற்றமடைந்து தோசையாக மாறி உலக மக்களையெல்லாம் தன் சுவையால் கட்டிபோடப்போகிறது என்பது பாவம் அவனுக்கு அப்போது புரிந்திருக்க நியாயமில்லை.

தானியங்களின் சுவையில் தன்னையிழந்தவன் பயிர் வளர்த்தான்... அதன் பலனாக உயிர் வளர்த்தான்.... கூடவே அதற்கு பெயர்வைக்க மொழி வளர்த்தான்... சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான்... காலப்போக்கில் நாகரிகமும் வளரவே தன்னுடைய முதல் பாரம்பரிய கண்டுபிடிப்பு உணவான "அடை"க்கு அவன் முதன் முதலில் உருவாக்கிய மொழியான தமிழ் மொழியில் "மெல்லடை" என பெயரும் வைத்தான்.

அதன்பின் பன்னெடுங்காலம் இது தமிழில் "மெல்லடை" என்றே வழங்கப்பட்டுவந்தது.

மெல்லிடையாளின் கைவண்ணத்தில் உருவாகும் இந்த மெல்லடைக்கு "தோசை" (Dosa) என்று பெயர்சூட்டப்பட்டது 20 ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில்தான்.

19 ம் நூற்றாட்டின் இறுதிவரை "தோசை" (Dosa) என்ற ஒரு பதமே இந்திய மொழிகளில் இருந்ததில்லை. தமிழ் இலக்கியங்களிலோ அல்லது வேறு எந்தமொழி இந்திய இலக்கியங்களிலோ தோசை என்ற பதத்தைப்பற்றியோ அல்லது பதார்த்தத்தைப்பற்றியோ எந்தவித குறிப்பும் தென்படவில்லை.

"மெல்லடை" என்று வழங்கப்பட்டு வந்த இதற்கு 20 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் "தோசை" (Dosa) என்று பெயர்மாற்றம் செய்தவர்கள் யார் என்கின்ற விபரம் தெரியவில்லை என்றாலும்கூட தமிழ் இலக்கணம் கற்றறிந்த ஒருவராலேயே இந்த பெயர்மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதுமட்டும் இதன் பெயரிலிருந்தே தெரியவரும் உண்மை. அப்படியென்ன அதன் பெயரிலிருக்கிறது என்கிறீர்களா?

இதன் பெயர் இரண்டே எழுத்துக்களால் ஆனவை. முதலெழுத்து "தோ" இரண்டாவது எழுத்து "சை".

தோ + சை = தோசை.

"தோ" என்றால் நெருப்பை குறிக்கும்.

"தோயம்" என்றால் நெருப்பு இல்லாதது... அதாவது "நீர்" ஐ குறிக்கும்.

"சை" என்பது "இரண்டு" அல்லது "இரு பக்கம்" என்று பொருள்படும்.

தமிழில் இந்த "சை" என்னும் எழுத்து எங்கெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று பார்த்தோமென்றால் அது பெரும்பாலும் "இரண்டு" என்னும் பதத்தை குறிப்பதாகவே அமைகிறது.

எப்படி என்பதை பார்ப்போம் வாருங்கள்...

இரண்டு கைகளாலும் ஆட்டி ஆட்டி பேசுனாதான் அதுக்கு பேரு - "சை"கை.

அதே இரண்டு கைகளால் ஓங்கி தட்டினால் வருவது - ஓ"சை".

இரண்டு பக்கமும் இருந்தால்தான் அதுக்கு பேரு - மீ"சை".

உள்ளும் புறமும் என இரண்டு பக்கமும் தோன்றினால்தான் அதுக்கு பேரு - ஆ"சை".

மேல் தாடை பற்களும் கீழ்த்தாடை பற்களும் சேர்ந்து அசைந்தால்தான் அதுக்கு பேரு - அ"சை".

போஸ்டர்ல மட்டும் போதாது சுவத்துலயும் சேர்த்து தடவுனாதான் அதுக்கு பேரு - ப"சை".

எதுத்த வீட்டுக்காரனை மட்டுமல்லாது அதற்கு பக்கத்து வீட்டுக்காரனையும் சேர்த்து திட்டினால்தான் அதுக்கு பேரு - வ"சை".

மனது உடல் இரண்டையும் இசைய செய்தால்தான் அது - இ"சை".

முன்னாடி மட்டுமல்ல பின்னாடியும் என இரண்டு பக்கமும் இருந்தால்தான் அது - தி"சை".

காலை, மாலை இரண்டு வேளையும் கோவிலில் ஆராதித்தால்தான் அது - பூ"சை"

மேல் வீட்டுலயும் இருந்து கூடவே கீழ் வீட்டுலயும் இருந்தாதான் அது டேபிள் மேட். சாரி... தமிழில் குட்டி - மே"சை".

ஸப்பா.. இப்பவே கண்ண கட்டுதே... இப்போ ஒங்களுக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்குமுன்னு நினைக்கிறேன். முன் பக்கம் மட்டுமல்லாமல் பின் பக்கத்தையும் சேர்த்து காட்டினால்தான் அங்கு "👰சை".... 😆 என்கிற அடைமொழி வருகிறது என்பது தெரியுதில்லீயோ. 

அதுபோல "தோ" என்னும் நெருப்பினால் மேல் பக்கம் மற்றும் கீழ் பக்கம் என இரண்டு பக்கமும் சுடப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு தோ"சை" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்போ சொல்லுங்க இந்த தோசையானது தமிழனின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல... அவனுடைய அரிய கண்டுபிடிப்பும்தானே.

(அப்பாடா எப்படியோ கர்நாடகக்காரன்கிட்ட இருந்து தோசையை ஒருவழியா தட்டிப்பறிச்சாச்சு. மேலேயுள்ள விளக்கத்த பாத்துகிட்டு அவனுக வெளக்குமாத்த எடுத்துக்கிட்டு வர்றதுக்குள்ள சட்டுபுட்டுன்னு இந்த தோசைக்கு "தமிழர் பண்பாட்டு உணவு" என்கிற காப்புரிமையை மொதல்ல வாங்கிடனும்.)

suna pana dosa patent

(அப்பனே முருகா... என்னோட அரும பெரும தெரியாம விளக்கத்த மட்டும் பாத்துபுட்டு கன்னாபின்னான்னு கன்னடத்துல திட்டிக்கிட்டு யாராச்சும் வெளக்குமாத்த தூக்கிட்டு வந்தா உசுருக்கு எந்தவித சேதாரமுமில்லாம உன் புள்ளைய கூடவே இருந்து காப்பாத்தி கொடுக்க வேணும்... அப்பனே முருகா... மருதமலை அய்யனாரே...)

சரி... இந்த "தோசை" (Dosa) தமிழ் மக்களின் பாரம்பரிய உணவுதான் என்கிற காப்புரிமை கிடைக்கும்வரை சும்மா தேமேன்னு உட்கார்ந்து இருக்காமல் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான "மொறுமொறு ரவா தோசை" செய்வது எப்படி என்பதனை பார்ப்போமா?.

மொறு மொறு ரவை தோசை.

தேவையான பொருட்கள்.

ரவை - கால் கிலோ.

கோதுமை மாவு - 3 ஸ்பூன்.

தயிர் - அரை கப்.

சிறிய வெங்காயம் - போதுமான அளவு.

தேங்காய் நெய் - தேவையான அளவு.

பசுநெய் - கணிசமான அளவு.

உப்பு - சிறிதளவு.

செய்முறை.

முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு மிதமாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த ரவையை எடுத்துக்கொண்டு அதனுடன் கோதுமைமாவையும் சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு இதனுடன் தயிரையும் (Curd) கலந்து சிறிதளவு உப்பும் (Salt) சேர்த்து போதிய அளவு நீர் விட்டு தோசைமாவு பக்குவத்தில் கலக்கி எடுத்துக்கொள்ளவும். இதனை ஒரு 10 அல்லது 15 நிமிடம் அப்படியே வைக்கவும்.

அதன் பின்பு ஒரு சொம்பு தண்ணி எடுத்து அதை தோசைக்கல்லுல ஊத்தி அதுக்குன்னு வழக்கமா பயன்படுத்துற வௌக்குமாத்த கொஞ்சம் அடிப்பக்கமா திருப்பி வறட்டு வறட்டுன்னு ஒரு நாலு இழு இழுத்து....

தோசைக்கல்ல நல்லா பிராண்டி கழுவி விட்டு... கல்லு நல்லா காஞ்ச ஒடன... ஒரு கரண்டி எண்ணையை எடுத்து... பட்டும்படாம நைசா விட்டு...

அது சூடாகி வரும்போது... ஒரு கரண்டி மாவு எடுத்து.... பெரிய ரவுண்டாவும் இல்லாம சின்ன ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்டா ஊத்தி....

ஏற்கனவே பொடியா நறுக்கி வச்சிருக்கிற வெங்காயத்தை எடுத்து... அப்படியே மேலாக்க மழைச்சாரல் போல பரபரவென தூவி.....

அப்புறமா ஒரு 16 கரண்டி நெய் எடுத்து... அதுல ஆறு கரண்டி நெய்ய அப்படியே உள் சைடுல விளாவி விட்டு.... மிச்சம் இருக்கிற பத்து கரண்டி நெய்ய அப்படியே தோசைக்கு வெளிப்பக்கமா விளாவி விட்டு... தோசை வேகும்வரை சிறுது நேரம் காத்திருக்கவும்....

நெய் வாசனை உங்கள் மூக்கை தொட்ட உடன் சிறிதும் தாமதிக்காமல்... சட்டாப்பையை தோசைக்கு அடிப்பக்கமா உள்ளாற விட்டு...

அப்படி ஒரு பிரட்டு... இப்படி ஒரு பிரட்டு பிரட்டி...

அப்படியே ரொட்டி கலருல... முறுகல் பதத்துல எடுத்தீங்கன்னா "ரவா தோசை" ரெடி...

அதோடு நிறுத்தாம அது சூடாறுவதற்கு முன்னாடியே நாலு மடிப்பா மடிச்சி தட்டுல வச்சி...

தொட்டுக்க தேங்காய் சட்டினி அல்லது கார சட்டினியை யூஸ் பண்ணுனீங்கன்னா... அடடா... நெய் வாசனையுடன் கூடிய கமகமக்கும் "ரவா தோசை" ரெடி.

rava dosa

அப்படியே தட்டுல இருக்கிறத மசமசன்னு பாத்துகிட்டே இருக்காம... கொஞ்சமா பிச்சி... சட்டினியில் ஒரு பொரட்டு புரட்டி... வாயில் வச்சீங்கன்னா ... சும்மா சொல்லக்கூடாது... உண்மையாகவே இதனுடைய ருசியானது... அடுத்த நாள் "ஆயி" போகுற வரைக்கும் வாயிலேயே இருக்கும்.

பின் குறிப்பு :- தோசை (Dosa) வார்ப்பதற்கு முன்னால் மறக்காமல் அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.

சரி,... இதுவரை தோசை தமிழர்களுடைய பாரம்பரிய உணவு என்பதனையும் அதற்கு தமிழர்களாகிய நாம் காப்புரிமை பெறவேண்டிய அவசியம் பற்றியும் பார்த்தோமல்லவா... அதுபோல அப்பளம் (Appalam), வடை (Vada), சமோசா (Samosa), பீட்ஸா (pizza), பர்க்கர் (Burger) முதலியவைகளும் தமிழர்களின் பாரம்பரிய உணவே என்பதனை நிரூபிப்பதற்கும் சிலபல ரகசிய ஐடியாக்கள் கைவசம் உள்ளன. இனி வரும் பதிவுகளில் அதனையும் தொடர்ந்து பார்க்கலாம்...

suna pana crying

இதேபோல "பானிபூரி" (Panipuri) யையும் தமிழர் பாரம்பரிய உணவு என்கிற பெயரில் ஆட்டையைப்போட்டு காப்புரிமை வாங்குவதற்கான சில ரகசிய ஐடியாக்களும்கூட கைவசம் உள்ளன. உசுருக்கு உத்திரவாதம் கொடுத்தால் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

விரைவில் மீண்டும் நளபாகத்தில் சந்திப்போம்... வாழ்க தமிழ்...

💢💢💢💢

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...

ஷேர் செய்வதெல்லாம் சரிதான்.. ஆனால் இந்த "கர்நாடகா" வாலாக்களுக்கு மட்டும் ஷேர் செஞ்சுடாதீங்க மக்களே... மீறி செஞ்சீங்கன்னா... இந்த "சேகரு" செத்துடுவான்...

👐 👐 👐 👐 👐 👐

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. தோசைக்கு இப்படியும் இருக்கிறதா?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னங்க துளசிதரன் சார் இப்படி கேட்டுப்புட்டீங்க... தோசைய பற்றி இன்னும் எவ்வளவோ இருக்கு... அவ்வளவையும் சொன்னா வாயிலேயே குத்துவானுங்களோன்னு என்னோட உள்ளுணர்வு எச்சரித்ததால பாதுகாப்பு கருதி இத்தோட நிறுத்திக்கிட்டேன்...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.