"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மணத்தக்காளி - Manathakkali - Types of Solanum Plant.

மணத்தக்காளி - Manathakkali - Types of Solanum Plant.

மணத்தக்காளி.

Manathakkali.

[PART - 2].

மணத்தக்காளி பற்றிய தொடர் பதிவில் இது இரண்டாவது பகுதி [PART - 2].

முதல் பகுதியில் [PART - 1] மணத்தக்காளியை பற்றிய சில பொதுவான விஷயங்களையும், அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில அடிப்படையான விஷயங்களைப்பற்றியும் பார்த்தோம்.

மணத்தக்காளி பற்றிய இந்த பதிவின் முதல் பகுதியை [PART - 1] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..

>> மணத்தக்காளி - Manathakkali - Black nightshade - Solanum <<

    Black nightshade.

    மணத்தக்காளியானது Solanaceae (சொலனாசியே) என்னும் தாவர  குடும்பத்திலுள்ள "Solanum" என்னும் பேரினத்தை சார்ந்த சிற்றின தாவரமாகும். இந்த சிற்றினத்தில் 1500 கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

    அவற்றில் ஒன்றுதான் நம்முடைய மணத்தக்காளி.

    இந்த மணத்தக்காளியில் மட்டுமே பத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றாலும் அவைகள் அனைத்துமே உணவாகவோ அல்லது மூலிகைகளாகவோ பயன்படுத்தப்படுவதில்லை. அவைகளில் வெறும் 7 வகையான இனங்கள்  மட்டுமே உணவாகவும், நோய் நீக்கும் மூலிகை தாவரமாகவும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த 7 வகையான மணத்தக்காளியைப்பற்றி மட்டுமே நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

    இந்த இரண்டாவது பதிவில் அந்த ஏழு வகையான மணத்தக்காளிகளில் முதல் 3 வகையான மணத்தக்காளி வகைகளைப்பற்றி பார்க்கப்போகிறோம்...

    மணத்தக்காளி வகைகளைப் பார்ப்பதற்கு முன்னால் மணத்தக்காளி பற்றிய சில அடிப்படை விஷயங்களைப்பற்றி பார்த்துவிடலாம் வாருங்கள்...

    Types of Solanum Plant.

    மணத்தக்காளி - சிற்றின வகைகள்.

    திணை - தாவரம்.

    பெயர் - மணத்தக்காளி.

    தாயகம் - ஐரோப்பா [Europe].

    வேறு பெயர்கள் :- மிளகு தக்காளி, மணல் தக்காளி, மணித்தக்காளி, கருப்பு மணித்தக்காளி, பிள்ளைத்தக்காளி, கறிஞ்சுக்கட்டி, செஞ்சுக்கட்டி, சுக்குட்டிக்கீரை, விடைக்கந்தம், வாயகம், காகமாசி.

    பெயர் காரணம் :- பளபளப்பாக கருப்பு நிறத்தில் உருண்டையாக காணப்படும் ஒருவித சிறிய கல்லுக்கு "மணி" என்று பொருள். இதன் பழங்களும் பார்ப்பதற்கு அந்த கல்லைப்போலவே மணிமணியாக காணப்படுவதாலும், பார்ப்பதற்கு சிறிய தக்காளி போன்று காணப்படுவதாலும் "மணி தக்காளி" என பெயர்பெற்றது. இதுவே பின்னாளில் "மணத்தக்காளி" என்று திரிந்துபோனது.

    ஆங்கிலப்பெயர் - Black nightshade. (பிளாக் நைட்ஷேட்).

    Manathakkali plant

    தொகுதி - Spermatophyta (விதைத்தாவரங்கள்).

    துணை தொகுதி - Angiospermae (பூக்கும் தாவரம்).

    வகுப்பு - Dicotyledonae (இருவித்திலை தாவரம்).

    வரிசை - Solanales (சோலானேல்ஸ்).

    குடும்பம் - Solanaceae. (சொலனாசியே).

    துணைக்குடும்பம் - solanoideae.

    பேரினம் - Solanum (சோலனம்).

    வளரும் இடங்கள் - வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் இவைகள் காணப்படுகின்றன. ஏரி, குளம், குட்டை மற்றும் வயல்வரப்புகளில் பரவலாக காணப்படுகின்றன. மணல்பாங்கான நிலங்களில் செழித்து வளர்கின்றன.

    உணவாக பயன்படுத்தும் நாடுகள் - தென்னாப்பிரிக்கா, ஹவாய், கிரீஸ், துருக்கி, இந்தோனேஷியா, எத்தியோப்பியா, இந்தியா, தான்சானியா, கென்யா, சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

    தென்னாப்பிரிக்காவில் (South Africa) இதன் பழங்களும், கீரைகளும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.

    இந்தியாவில் தமிழ் மாநிலத்தில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கேரளா (Kerala), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka) விலும் இது ஓரளவு பயன்பாட்டில் உள்ளது.

    Types of Solanum Plant.

    பயன்பாட்டில் உள்ள சிற்றினங்கள்.

    மணத்தக்காளியில் பலவகைகள் இருந்தாலும் 7 வகை தாவரங்களே உணவாகவும், நோய்தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று பார்த்தோமல்லவா... அந்த 7 வகையான தாவரங்களாவன..

    1. Solanum americanum (சோலனம் அமெரிக்கனும்).
    2. Solanum nigrum (சோலனம் நிக்ரம்).
    3. Solanum douglasii (சோலனம் டக்ளசி).
    4. Solanum opacum (சோலனம் ஒபாகம்).
    5. Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்).
    6. Solanum scabrum (சோலனம் ஸ்கேப்ரம்).
    7. Solanum villosum (சோலனம் வில்லோசம்).

    இந்த 7 இனங்களும் ஒரே இடத்தில் காணப்படுவதில்லை. மாறாக உலகின் பல்வேறு கண்டங்களில் பரவலாக காணப்படுகின்றன.

    இதில் இந்தியாவில் குறிப்பாக 4 இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அவைகளாவன..

    1. Solanum americanum (சோலனம் அமெரிக்கனும்).
    2. Solanum nigrum (சோலனம் நிக்ரம்).
    3. Solanum villosum (சோலனம் வில்லோசம்).
    4. Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்).

    மணத்தக்காளி இனங்களில் பெரும்பாலானவை தென் அமெரிக்காவிலேயே காணப்படுகின்றன.

    ஆனால் மருத்துவத்தன்மை கொண்ட மணத்தக்காளி இனங்கள் ஆப்பிரிக்க கண்டங்களில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படும் இவ்வினங்களே ஆஸ்திரேலியா (Australia), ஐரோப்பா (Europe) மற்றும் ஆசியா (Asia) விலும் காணப்படுகின்றன.

    ஆனாலும் நைஜீரியா (Nigeria) விலும், கென்யா (Kenya) விலும்தான் இவைகள் உணவுக்காக அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. கென்யாவில் இது "ஏழைகளுக்கான" உணவு என்றே அழைக்கப்படுகிறது.

    எனவே, மணத்தக்காளியின் பொதுவான பயன்பாடுகளைப்பற்றி அறிவதற்கு முன்னால் உணவாகப் பயன்படுத்தப்படும் மேற்குறிப்பிட்டுள்ள 7 வகையான மணத்தக்காளி இனங்களைப்பற்றி சிறிது பார்க்கலாம்.

    Solanum americanum (சோலனம் அமெரிக்கனம்).

    தாயகம் - வட அமெரிக்கா (North America).

    தமிழ் பெயர் - மணத்தக்காளி.

    தமிழில் வேறுபெயர்கள் - மிளகுதக்காளி, காசித்தழை, சிறுங்குன்னி.

    ஆங்கில பெயர் - American black nightshade. (அமெரிக்கன் பிளாக் நைட்ஷேட்).

    ஆங்கில வேறுபெயர்கள் - small-flowered nightshade, Glossy nightshade, garden nightshade, common nightshade, ink-berry.

    Solanum americanum plant

    தாவரவியல் பெயர் - Solanum americanum (சோலனம் அமெரிக்கனம்).

    குடும்பம் - Solanaceae (Nightshade).

    பேரினம் - Solanum (சோலனம்).

    இனம் - Solanum americanum (சோலனம் அமெரிக்கனம்).

    இனப்பெருக்கம் - பொதுவாகவே இந்த மணத்தக்காளி இனங்களெல்லாம் விதைகள் மூலமாகவே தங்கள் இனத்தை பெருக்குகின்றன. ஆனாலும் வர்த்தகத்திற்காக பயிர்செய்யப்படும் சில நாடுகளில் இவைகளின் விதைகளுக்கு பதிலாக எளியமுறையில் தண்டுகளை பயன்படுத்தி பயிர்செய்கின்றனர். 

    வளரும் நாடுகள் - இதன் தாயகம் அமெரிக்க கண்டமென்பதால் இது "அமெரிக்கன் மணத்தக்காளி" (American black nightshade) என அழைக்கப்படுகிறது.

    இது அமெரிக்காவில் மட்டுமல்லாது நியூ கினியா (New Guinea), மெலனீசியா (Melanesia), ஆஸ்திரேலியா (Australia), ஹவாய் (Hawaii), மடகாஸ்கர் (Madagascar), இந்தோனேசியா (Indonesia), ஆப்பிரிக்கா (Africa) மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

    தென்னிந்திய கடலோர பகுதிகளான கேரளா (Kerala), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka) மற்றும் தமிழகத்திலும் (Tamil nadu)  இது அதிக அளவில் காணப்படுகின்றன.

    தமிழகத்தில் நாம் பொதுவாக "மணத்தக்காளி" என்று குறிப்பிடுகிறோமல்லவா... நம்ம வீட்டு தோட்டங்களில்கூட பூத்து நிக்குதே அது இந்த "சோலனம் அமெரிக்கனம்"தான்.

    வட அமெரிக்காவை தாயகமாக கொண்ட இது மனிதர்கள் மூலமாகவோ அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்லும் பறவைகள் மூலமாகவோ இங்கெல்லாம் பரப்பப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    தாவரத்தின் தன்மை.

    இது 1 முதல் 3 அடி உயரம் மற்றும் 1 முதல் 2 அடி பரப்பளவில் கிளைகளை பரப்பி வளரும் வருடாந்திர தாவரம் ஆகும்.

    தண்டுகள் உருண்டையாக அதேவேளையில் நீளவாக்கில் வரைவரையான நரம்புகள் போன்ற முகடு அமைப்பை கொண்டுள்ளன.

    தண்டுகளில் முட்கள் போன்ற அமைப்போ அல்லது சிறிய ரக வெண்ணிற உரோமங்களோ காணப்படவில்லை.

    Solanum americanum Leaf

    இலைகளின் அமைப்பு.

    இதன் இலைகள் நீள்வட்டமானது. இவைகள் 5 செ.மீ நீளமும், 3 செ.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. இலைக்காம்புகள் 2 செ.மீ நீளத்தை கொண்டிருக்கின்றன. சில இலைக்காம்புகள் 8 செ.மீ வரை நீளத்தை பெற்றிருக்கலாம்.

    இலைகள் தண்டுகளில் மாற்று இலையடுக்கு (Sub-Opposite) அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

    Solanum americanum single Leaf

    பூக்களின் அமைப்பு.

    பூக்கள் மஞ்சரி அமைப்பை கொண்டுள்ளன. மஞ்சரி தண்டு சராசரியாக 2 செ.மீ நீளத்தை கொண்டுள்ளன. மஞ்சரிகளில் 4 முதல் 12 பூக்கள்வரை பூக்கின்றன.

    பூக்கள் மொட்டாக இருக்கும்போது வெளிறிய பச்சை நிறத்திலும் விரிந்தபின் வெண்மை நிறத்திலும் காணப்படுகின்றன.

    பூக்காம்புகள் 6 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன.

    Solanum americanum flower

    பச்சைநிற புல்லிதழ்கள் 1 முதல் 2 மி.மீ நீளத்தில் 5 எண்ணிக்கையை கொண்டுள்ளன. அதனை அடுத்துள்ள வெண்மை நிற பூவிதழ்கள் 5 முதல் 8 மி.மீ நீளத்தை கொண்டவை. பூக்கள் ஒவ்வொன்றும் 1 செ.மீ விட்டத்தை கொண்டுள்ளன. பூக்களின் மையத்தில் அமைந்துள்ள மகரந்தங்கள் 1.5 லிருந்து 2 மி.மீ நீளத்தை கொண்டுள்ளதோடு பூக்களுக்கு விசேஷ அழகையும் கொடுக்கின்றன.

    மலர்கள் பெரும்பாலான நேரங்களில் வெண்மை நிறங்களாகவும், எப்போதாவது மெலிதான வெளிர் ஊதா நிறங்களிலும் பூக்கின்றன.

    மார்ச் முதல் நவம்பர் வரை பூத்து காய்க்கின்றன.

    காய்களின் தன்மை.

    இதன் காய்கள் மிளகு அளவில் பச்சை நிறத்துடனும், கோள வடிவிலும் காணப்படுகின்றன.

    ஆனால் காய்கள் கனியும்போது ஊதா கலந்த கருப்பு நிறத்திற்கு மாறுகின்றன. பழங்கள் 6 லிருந்து 9 மில்லி மீட்டர் விட்டத்தை கொண்டுள்ளன. பழங்களின் காம்புகள் 45 மி.மீ நீளத்தில் உள்ளன.

    Solanum americanum fruits

    விதைகளின் தன்மை.

    ஒரு பழத்தினுள் 50 முதல் 70 விதைகள்வரை உள்ளன. விதைகள் தட்டையானது. ஒவ்வொரு விதைகளும் 1 மி.மீ நீளத்திலிருந்து 1.5 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன.

    Solanum americanum seed

    விதைகள் லேசான பழுப்பு நிறத்தை கொண்டுள்ளன. சில விதைகள் லேசான ஊதா நிறத்தையும் பெற்றிருப்பதுண்டு.

    பயன்பாடு.

    இது பாரம்பரிய மருத்துவ முறைகளில் வெட்டுக்காயங்கள், தோல் வெடிப்பு, மூச்சுக்குழாய் வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வயிறு சார்ந்த வலிகள், மூத்திர பை வீக்கம் இவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஆப்பிரிக்கா (Africa), நியூகினியா (New Guinea) மற்றும் ஓசியானியா (Oceania) தேசங்களில் இதன் இளந்தளிர்கள் கீரைகளாக சமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

    இந்தியாவிலும் இவைகள் கீரைகளாகவும், வாய்ப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றும் மூலிகை தாவரமாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

    இந்தோனேசியா (Indonesia), சீனா (China) முதலிய தேசங்களில் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

    Solanum nigrum (சோலனம் நிக்ரம்).

    தாயகம் - மத்திய அமெரிக்கா (Central America) மற்றும் மெக்சிகோ (Mexico).

    ஆங்கில பெயர் - Greenapot nightshade.

    தாவரவியல் பெயர் - Solanum nigrum (சோலனம் நிக்ரம்).

    குடும்பம் - Solanaceae (Nightshade).

    பேரினம் - Solanum (சோலனம்).

    இனம் - Solanum nigrum (சோலனம் நிக்ரம்).

    Solanum nigrum

    வாழிடம் - வெப்ப மண்டல மழைக்காடுகள்.

    இனப்பெருக்கம் - பொதுவாகவே இந்த மணத்தக்காளி இனங்களெல்லாம் விதைகள் மூலமாகவே தங்கள் இனத்தை பெருக்குகின்றன. ஆனால் மனிதர்கள் இதன் தண்டுகள் மூலமாகவும் புதிய செடிகளை உற்பத்தி செய்கின்றனர்.

    தாவரத்தின் தன்மை.

    இந்த சோலனம் நிக்ரமானது பக்கவாட்டில் பல கிளைகளை பரப்பி வளரும் இனம். தாவரத்தின் தண்டுகள் உருண்டை வடிவிலும் அதில் நீள்வாக்கில் வரைவரையான நரம்புகள் போன்ற முகடு அமைப்பையும் கொண்டுள்ளன.

    தண்டுகளில் வெண்ணிற உரோமங்கள் காணப்படவில்லை என்றாலும் ஆங்காங்கே மிக சிறிய முற்கள் போன்ற அமைப்பை கொண்டுள்ளன.

    இலைகளின் அமைப்பு.

    இலைகள் முட்டை வடிவத்துடன் முக்கோண வடிவத்தையும் கொண்டுள்ளன. இலைகளின் விளிம்புகள் ஆப்பு வடிவ மென்மையான பெரிய நெளிவுகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளன.

    Solanum-nigrum-leaf

    மலர்களின் அமைப்பு.

    மலர்கள் மஞ்சரி வகையை சேர்ந்தது. மஞ்சரியின் தண்டுகள் சராசரியாக 2 செ.மீ நீளத்தை கொண்டுள்ளன. மஞ்சரிகளில் 4 முதல் 10 பூக்கள்வரை பூக்கின்றன.

    புல்லிதழ்கள் 1 முதல் 2 மி.மீ நீளத்தில் 5 எண்ணிக்கையில் பிளவுபட்டு காணப்படுகின்றன. அடுத்துள்ள வெண்மைநிற பூவிதழ்களானது 5 எண்ணிக்கையில் உள்ளன. 1 செ.மீ விட்டத்தை கொண்டுள்ள பூக்களின் ஒவ்வொரு இதழ்களும் 5 முதல் 8 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன.

    பூக்களின் காம்புகள் 6 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன.

    Solanum-nigrum-flowers

    பூக்களின் மையத்தில் அமைந்துள்ள மகரந்தங்கள் 1.5 லிருந்து 2 மி.மீ நீளத்தை கொண்டுள்ளதோடு பூக்களுக்கு விசேஷ அழகையும் கொடுக்கின்றன.

    இவைகள் மார்ச் முதல் நவம்பர் வரை (March to November) பூத்து காய்க்கின்றன.

    Solanum nigrum fruits

    காய்களின் தன்மை.

    இதன் காய்கள் பச்சை நிறத்திலும், கனியும்போது ஊதா கலந்த கருப்பு நிறத்திற்கும் மாறுகின்றன. பழங்கள் 6 லிருந்து 9 மில்லி மீட்டர் விட்டத்தை கொண்டுள்ளன. பழங்களின் காம்புகள் 45 மி.மீ நீளத்தில் உள்ளன.

    SolanumNigrum black fruits

    விதைகளின் தன்மை.

    ஒரு பழத்தினுள் 40 முதல் 60 விதைகள்வரை உள்ளன. விதைகள் லேசான பழுப்பு நிறத்தை கொண்டுள்ளன. ஒவ்வொரு விதைகளும் 1 மி.மீ நீளத்திலிருந்து 1.5 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன.

    பயன்பாடு.

    இதன் தழைகளும், பழங்களும் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    Solanum douglasii (சோலனம் டக்ளசி).

    தாயகம் - மத்திய அமெரிக்கா (Central America) மற்றும் மெக்சிகோ (Mexico).

    ஆங்கில பெயர் - Greenspot nightshade, Douglas nightshade.

    தாவரவியல் பெயர் - Solanum douglasii (சோலனம் டக்ளசி).

    solanum_douglasii

    குடும்பம் - Solanaceae (Nightshade).

    துணைக்குடும்பம் - solanoideae.

    பேரினம் - Solanum (சோலனம்).

    இனம் - Solanum douglasii (சோலனம் டக்ளசி).

    வாழிடம் - வெப்ப மண்டல மழைக்காடுகள். மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் கடலோரப்பகுதிகளிலும் இவைகள் வளர்ந்துநிற்பதை காணலாம்.

    காணப்படும் நாடுகள் - அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.

    பெயர்க்காரணம் - இதனுடைய ஆங்கில பெயர் "Greenspot nightshade".

    இதற்கு ஏன் இந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என அறியவேண்டுமெனில் இதனுடைய பூக்களை கூர்ந்து கவனியுங்கள்...

    ஒவ்வொரு இதழ்களின் அடிப்பகுதிகளிலும் பச்சைநிறத்தில் ஏராளமான புள்ளிகள் நெருக்கமாக அமைக்கப்பட்டு மலர்களுக்கு ரம்மியமான அழகு கொடுப்பதை பார்க்கலாம். எனவே இந்த பச்சை புள்ளிகளை நினைவுபடுத்தும் விதமாக "Greenspot nightshade" என அழைக்கப்படுகிறது.

    solanum-douglasii_Greenspot nightshade

    தாவரத்தின் தன்மை.

    இது புதர்செடிகளாக 6 அடி உயரம்வரை வளரக்கூடியது. இவைகள் பல பக்கக்கிளைகளுடன் வளர்கின்றன.

    பக்கக்கிளைகளானது தாவரத்தின் அடிப்பகுதியிலிருந்தும், நடுப்பகுதியிலிருந்தும் ஏராளமாக கிளைப்பதால் தாவரமானது 6 அடி பரப்பளவில்கூட பரந்து காணப்படுவதுண்டு.

    இதன் தண்டுகள் மற்றும் இலைகளில் குறுகிய வெள்ளைநிற உரோமங்கள் காணப்படுகின்றன.

    Solanum_douglasii_Greenspot nightshade

    இலைகளின் அமைப்பு.

    இதன் இலைகள் மென்மையானது. நீள்வட்ட வடிவமானது. பொதுவாக இலைகள் 3.5 அங்குலம் அளவிற்கு நீளமாக உள்ளன. இலைகளின் இரு விளிம்புகளிலும் ஒழுங்கற்ற பற்கள் போன்ற அமைப்பை கொண்டுள்ளன. இலைகள் மிகச்சிறியதான வெண்மைநிற உரோமங்களை கொண்டுள்ளன. இலையினுடைய காம்புகள் 1 முதல் 2.5 செ.மீ நீளத்தை பெற்றுள்ளன.

    solanum-douglasii Leaf

    மலர்களின் அமைப்பு.

    இதன் மலர்களானது மஞ்சரி வகையை சேர்ந்த மலர் கொத்துக்களை கொண்டுள்ளன.

    மலர் தண்டுகளானது 1 லிருந்து 3 செ.மீ வரை நீளத்தை கொண்டுள்ளன. மலர்கள் வெண்மையான ஐந்து இதழ்களை கொண்டுள்ளன. ஐந்து இதழ்களும் தனித்தனி இதழ்களாக இல்லாமல் அடிப்பகுதியில் ஒன்றாக இணைக்கப்பட்டு மேல்பகுதியில் மட்டுமே ஐந்தாக பிரிந்து தனித்தனி இதழ்போல் தோற்றம் தருகின்றன.

    Solanum douglasii flowers

    இதழ்களின் நீளம் சுமார் 0.5 லிருந்து 1.2 செ.மீ வரை இருக்கலாம். புல்லிவட்ட இதழ்களானது (Calyx) 2 லிருந்து 3 மி.மீ நீளத்தை கொண்டுள்ளது. இதழ்களின் மத்தியில் குவிந்த நிலையில் காணப்படும் மகரந்த தாள்களின் (Anther) நீளம் 3 லிருந்து 4 மி.மீ.

    குவிந்த நிலையிலுள்ள மகரந்தங்களும் அதன் மத்தியில் நீட்டிக்கொண்டு நிற்கும் சூலகமும் (Stigma) சேர்ந்து பூக்களுக்கு விசேஷ கவர்ச்சியை கொடுக்கின்றன.

    Solanum_douglasii_flower

    இந்த தாவரமானது பிப்ரவரி முதல் அக்டோபர் (February to October) வரையில் பூத்து காய்கின்றன.

    காய்களின் தன்மை.

    இதன் காய்கள் பச்சை நிறத்தில் கோளவடிவில் காணப்படுகின்றன. இவைகள் சராசரியாக 1 செ.மீ அகலம் கொண்டவை. நச்சுத்தன்மை உள்ளவை.

    Solanum douglasii - fruits

    பச்சை நிறத்திலுள்ள காய்கள் கனியாக கனியும்போது கருமை நிறத்தை அடைகின்றன. பழங்களில் காய்களில் இருக்கும் அளவில் நச்சுத்தன்மை இல்லையென்பதால் இவைகள் உண்ணத்தகுந்தவைகளாகவே உள்ளன.

    பயன்பாடு.

    இதன் பழங்களை அமெரிக்க பழங்குடியின மக்கள் மருத்துவ தேவைகளுக்காக இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் இப்பழங்களின் சாறுகளை பச்சைகுத்துவதற்கு சாயப்பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது இது சாயப்பொருளாக பயன்படுத்தப்படுவதில்லை.

    இனப்பெருக்கம் - பொதுவாகவே இந்த மணத்தக்காளி இனங்களெல்லாம் விதைகள் மூலமாகவே தங்கள் இனத்தை பெருக்குகின்றன. ஆனால் கென்யாவில் நன்கு வளர்ந்த மணத்தக்காளி செடிகளின் வலுவான தண்டுகளை பயன்படுத்தியும் புதிய செடிகளை உற்பத்தி செய்கிறார்கள்.

    💢💢💢💢

    இதுவரையில் பலவகையான மணத்தக்காளி இனங்களில் உணவிற்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் 7 வகையான சிற்றினங்களில் முதல் மூன்று வகையான சிற்றினங்களை பார்வையிட்டோம். அடுத்துள்ள இன்னும் 4 வகையான இனங்களைப்பற்றி அடுத்துவரும் மூன்றாவது பகுதியில் [PART - 3] இன்னும் விரிவாக பார்வையிட இருக்கிறோம்..

    இப்பதிவின் மூன்றாவது பகுதியை [PART - 3] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்க...

    >> மணத்தக்காளி - Manathakkali - Types of Nightshade Plant. <<

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    6 கருத்துகள்

    1. அப்பப்பா ஒரு மணத்தக்காளிக்கு இவ்வளவு தகவலா? அற்புதம் நண்பரே!

      பதிலளிநீக்கு
    2. அனைத்து விளக்கங்களும் அருமை... பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது...

      பதிலளிநீக்கு
    3. மணத்தக்காளி குறித்த பல விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுகள். எனக்கும் பிடித்தது.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்கள் பாராட்டுக்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது... நன்றி!!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.