"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மணத்தக்காளி - Manathakkali - Methods of use.

மணத்தக்காளி - Manathakkali - Methods of use.

மணத்தக்காளி.

பயன்களும் - பயன்படுத்தும் முறைகளும்.

[PART - 4]

ஆங்கிலத்தில் "கார்டன் பிளாக் நைட்ஷேட்" (Garden Black nightshade) என்றும் தமிழில்  "மணத்தக்காளி" (Manathakkali) என்றும் அழைக்கப்படும் மூலிகை இன தாவரத்தை பற்றி தொடர்ந்து சில பதிவுகளாக பார்த்துவருகிறோம்.

>>மணத்தக்காளி - Manathakkali - Black nightshade - Solanum [PART 1]<<

அந்த வரிசையில் நான்காவது [PART 4] பகுதியாகிய இப்பதிவில் மணத்தக்காளி பற்றிய மேலும் சில அடிப்படையான விஷயங்களைப்பற்றி பார்க்கலாம்.


    Manathakkali.

    திணை - தாவரம்.

    தமிழ் பெயர் - மணத்தக்காளி.

    தமிழில் வேறு பெயர்கள் :- குட்டி தக்காளி, மிளகு தக்காளி, மணல் தக்காளி, மணித்தக்காளி, கருப்பு மணித்தக்காளி, பிள்ளைத்தக்காளி, காசித்தழை, சுக்குட்டிக்கீரை.

    பெயர் காரணம் :- இதன் சிறிய பழமானது "தக்காளி" போன்ற வடிவில் ஆனால் அதைவிட சிறியதாக உள்ளதால் "குட்டிதக்காளி" என்றும், மிளகைப்போன்ற அமைப்பில் இருப்பதால் "மிளகு தக்காளி" எனவும் அழைக்கப்படுகின்றன.

    black-berry-of-Solanum americanum

    மேலும், இதன் பழங்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் பளபளப்பாக மணி போன்று காணப்படுவதால் "மணித்தக்காளி" என அழைக்கப்பட்டு வந்தது. இதுவே பின்னாளில் "மணத்தக்காளி" என்று திரிந்துபோனது.

    ஆங்கிலப்பெயர் - Black nightshade. (பிளாக் நைட்ஷேட்).

    ஆங்கில வேறுபெயர்கள் - Glossy nightshade, garden nightshade, ink-berry.

    தாவரவியல் பெயர் - Solanum americanum (சோலனம் அமெரிக்கனம்).

    தாயகம் - ஐரோப்பா [Europe], அமெரிக்கா (United States), ஆப்பிரிக்கா (Africa) மற்றும் ஆசிய கண்டங்கள்.

    தொகுதி - Spermatophyta (விதைத்தாவரங்கள்).

    துணை தொகுதி - Angiospermae (பூக்கும் தாவரம்).

    வகுப்பு - Dicotyledonae (இருவித்திலை தாவரம்).

    வரிசை - Solanales (சோலானேல்ஸ்).

    குடும்பம் - Solanaceae. (சொலனாசியே).

    துணைக்குடும்பம் - solanoideae.

    பேரினம் - Solanum (சோலனம்).

    இனம் - Solanum americanum (சோலனம் அமெரிக்கனம்).

    வகைகள் -  மணத்தக்காளியில் பலவகைகள் உள்ளன என்றாலும் பொதுவாக 7 வகையான மணத்தக்காளி இனங்கள் மட்டுமே உலகின் பல்வேறு கண்டங்களில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவையாவன..

    Different Types of Manathakkali.

    1. Solanum americanum (சோலனம் அமெரிக்கனும்).
    2. Solanum nigrum (சோலனம் நிக்ரம்).
    3. Solanum douglasii (சோலனம் டக்ளசி).
    4. Solanum opacum (சோலனம் ஒபாகம்).
    5. Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்).
    6. Solanum scabrum (சோலனம் ஸ்கேப்ரம்).
    7. Solanum villosum (சோலனம் வில்லோசம்).

    மேலே குறிப்பிட்டுள்ள 7 வகையான மணத்தக்காளி இனங்களைப்பற்றியும் நாம் ஏற்கனவே "பகுதி - 2" மற்றும் "பகுதி - 3" ல் விரிவாக பார்த்துவிட்டோம். பார்க்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டி பார்த்துக்கொள்ளலாம்..

    >>மணத்தக்காளி - Manathakkali - Types of Solanum Plant [PART 2]<<

    >>மணத்தக்காளி - Manathakkali - Types of Nightshade Plant [PART 3]<<

    பயன்பாடு - இதன் இளந்தளிர்களும், காய்களும், பழங்களும் உணவாகவும், நோய் தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    வளரும் இடங்கள் - வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல மழைக்காடுகள், மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் கடலோரப்பகுதிகளிலும் இவைகள் வளர்கின்றன.

    மேலும், ஏரி, குளம், குட்டை மற்றும் வயல் வரப்புகளிலும் பரவலாக காணப்படுகின்றன. சாதாரண மணல்பாங்கான நிலங்களிலும்கூட இவைகள் செழித்து வளர்ந்து நிற்பதை காணலாம்.

    உணவாக பயன்படுத்தும் நாடுகள் - தென்னாப்பிரிக்கா (South Africa), ஹவாய் (Hawaii), கிரீஸ் (Greece), துருக்கி (Turkey), இந்தோனேஷியா (Indonesia), எத்தியோப்பியா (Ethiopia), இந்தியா (India), இலங்கை (Sri Lanka), தான்சானியா (Tanzania), கென்யா (Kenya), சீனா (China) ஆகிய நாடுகளிலெல்லாம் உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

    வட அமெரிக்க பகுதிகளிலும் இது உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

    தென்னாப்பிரிக்காவில் (South Africa) இதன் பழங்களும், கீரைகளும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.

    நைஜீரியா (Nigeria) மற்றும் கென்யா (Kenya) வில் இவைகள் உணவுக்காக அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன.

    தான்சானியா (Tanzania) நாட்டில் மிகவும் பிரபலமான உணவான யுகாலி (Ugali) என்னும் பதார்த்தங்களிலும் மணத்தக்காளியின் இளந்தளிர்கள் சேர்க்கப்படுகின்றன.

    வளரும் நாடுகள் - இதில் பல்வேறு இனங்கள் உள்ளதால் அதன் இனங்களைப்பொறுத்து அமெரிக்கா (United States), ஆஸ்திரேலியா (Australia), ஆப்பிரிக்கா (Africa), இந்தோனேசியா (Indonesia), நியூ கினியா (New Guinea), நைஜீரியா (Nigeria), கென்யா (Kenya), மெலனீசியா (Melanesia), ஹவாய் (Hawaii), மடகாஸ்கர் (Madagascar), மற்றும் ஆசிய கண்டங்களிலுள்ள பெரும்பான்மையான நாடுகளிலும் காணப்படுகின்றன.

    பயன்பாடு - பிணி தீர்க்கும் மூலிகையாகவும், வலு சேர்க்கும் கீரையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் இதற்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் மருத்துவ தேவைகளுக்காக பெருமளவில் பயிர்செய்யப்படுகின்றன.

    பயன்படும் பாகங்கள் :- வேர், தண்டு, இலை, காய், பழம் என அனைத்துமே மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சுவை - நன்கு கனிந்த பழங்களை தவிர இதன் அனைத்து பாகங்களுமே கசப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன.

    இனப்பெருக்கம் - பொதுவாகவே இந்த மணத்தக்காளி இனங்களெல்லாம் விதைகள் மூலமாகவே தங்கள் இனத்தை பெருக்குகின்றன. ஆனால் சில இடங்களில் விவசாய தேவைகளுக்காக விதைகளுக்கு பதிலாக எளிய முறையில் நன்கு வளர்ந்த மணத்தக்காளி செடிகளின் வலுவான தண்டுகளை பயன்படுத்தியும் புதிய செடிகளை உற்பத்தி செய்கிறார்கள்.

    மகரந்த சேர்க்கை என்று எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் சுயமகரந்த சேர்க்கை மூலமாகவே விதைகளை உற்பத்தி செய்கின்றன. பூச்சிகள் மற்றும் தேனீக்கள் மூலமாக அயல்மகரந்த சேர்க்கையும் நடைபெறுகின்றன.

    இதன் பழங்கள் பறவைகளால் உட்கொள்ளப்பட்டு அதன் எச்சங்கள் மூலமாக விதைகள் தொலைதூரங்களுக்கு பரப்பப்படுகின்றன.

    ஆயுள் - ஓராண்டு வளரும் தாவரம்.

    தீமைகள் - பழங்களை தவிர்த்து அனைத்து பாகங்களிலும் "சோலனம்" (Solanum) என்னும் நச்சு ஆல்கலாய்டுகளை இத்தாவரம் கொண்டுள்ளதால் பச்சையாக தொடர்ந்து சாப்பிட உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சூடுபடுத்தும்போது இதிலுள்ள "சோலனம் ஆல்கலாய்டு" தன் திறனை படிப்படியாக இழப்பதால் நன்கு சமைத்தபின்பே உண்ணுதல் வேண்டும். அதுவும் மாதம் 1 அல்லது 2 தடவை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    உண்மையை சொல்லப்போனால் இதனை "கீரை" என்று சொல்வதைவிட "களைச்செடி" என்பதே மிகவும் பொருந்தும்.

    தோற்றம்.

    வெப்ப மண்டல பிரதேசங்களில் வளரும் தாவரங்களில் இந்த மணத்தக்காளி கீரையும் ஒன்று. இது களர்நிலம் தவிர பிற அனைத்து இடங்களிலும் வளர்கிறது.

    Manathakkali

    மணற்பாங்கான மற்றும் கரிசல்மண் நிலங்களில் செழித்து வளரும் இதனை நாம் மூலிகை, கீரை என்று எவ்வளவுதான் கொண்டாடினாலும் இது பிற பயிர்களின் ஊடக வளரும் ஒருவித களைச்செடியாகவே உலகநாடுகளில் உள்ள 61 நாடுகள் முத்திரை குத்துகின்றன.

    ஏனெனில் சாதாரண மணல்பரப்புகளிலும்கூட இது செழிப்பாகவே வளர்கிறது என்றாலும்கூட விவசாயநிலங்களில் களைச்செடிகளாக வளர்வதையே இது அதிகம் விரும்புகிறது.

    பருத்தி மற்றும் மஞ்சள் செடிகளின் ஊடாக களைச்செடியாக வளரும் இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் பரவலாக களைக்கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    தாவரத்தின் தன்மை.

    இது ஒரு இருவித்திலை தாவரம். பல கிளைகளோடு வளரும் புதர்செடி. இது உலர்ந்த மற்றும் ஈரப்பதமான மணலில் வளர்கிறது. இறுக்கமில்லாத நடுத்தர களிமண் நிலங்களிலும் செழித்து வளர்கிறது. இவை வளர முழு சூரியஒளி தேவை. சூரிய ஒளி தீண்டாத நிழலான இடங்களில் இவைகள் செழிப்பாக வளர்வதில்லை.

    மணத்தக்காளியில் 7 வகையான இனங்கள் உள்ளதாக பார்த்தோமல்லவா... அந்த வகைகளில் எந்தெந்த நாடுகளில் எந்தெந்த இனங்கள் அதிகமாக உற்பத்தியாகிறதோ அவைகளை அந்தந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சிலவகை மணத்தக்காளி இனங்களில் வெண்ணிற உரோமங்கள் அல்லது சிறிய அளவான முட்கள் காணப்படுவதுண்டு. இன்னும் சில வகைகளில் இவைகள் எதுவும் காணப்படுவதில்லை.

    Hairs, thorns - Manathakkali


    Species இனங்கள் உரோமங்கள் முட்கள்
    Solanum americanum சோலனம் அமெரிக்கனம் இல்லை இல்லை
    Solanum nigrum சோலனம் நிக்ரம் இல்லை உண்டு
    Solanum douglasii சோலனம் டக்ளசி உண்டு இல்லை
    Solanum opacum சோலனம் ஒபாகம் உண்டு இல்லை
    Solanum ptychanthum சோலனம் பிடிச்சாந்தும் உண்டு உண்டு
    Solanum scabrum சோலனம் ஸ்கேப்ரம் உண்டு இல்லை
    Solanum villosum சோலனம் வில்லோசம் உண்டு இல்லை

    தென்னிந்தியாவில் அதிகமாக காணப்படுவது "Solanum americanum" (சோலனம் அமெரிக்கனும்) என்னும் இனம்தான். இதனையே தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்திவருகிறோம்.


    Solanum americanum tree

    இந்த சோலனம் அமெரிக்கனுமானது 1 முதல் 4 அடி உயரம்வரை வளரும் பசுமை நிறைந்த தாவரம். ஏறத்தாழ 1 முதல் 2 அடி அளவில் கிளைகளை பரப்பி பரந்து வளர்கின்றன. இதனுடைய புறத்தோற்றத்தை நாம் ஏற்கனவே இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் விரிவாக பார்த்துவிட்டோம். பார்க்காதவர்கள் கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்து பார்க்கவும்.


    வேர்களின் பயன்.

    இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் சாறு கக்குவான் இருமல் மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு கொடுக்கப்படுகின்றன.

    இலைகளின் பயன்.

    மணத்தக்காளி தழையை பச்சைப்பயிறுடன் சேர்த்து சமைத்துண்ண வாய்ப்புண், வயிற்றுபுண் ஆறும்.

    வாய்ப்புண்களால் வேதனைப்படுபவர்கள் இதன் சாற்றினால் வாய் கொப்பளித்துவர விரைவில் புண்கள் ஆறும்.

    மணத்தக்காளி கீரையை நன்றாக உலர்த்தி சட்டியில் போட்டு நிறைய நீரூற்றி சுண்ட காய்ச்சி அந்த நீரினால் பெண்ணுறுப்பை அலம்பிவர வெள்ளைப்படுதல் நீங்கும்.

    இதனுடைய இலைச்சாற்றை தோல் சம்பந்தமான நோய்களுக்கு மேற்பூச்சாக தடவிவர குணம் கிடைக்கும். குறிப்பாக தோலின் மீது ஏற்படும் தேமல், சொறிசிரங்கு, புண்கள் போன்ற பாதிப்புகளின் மீது இதன் இலையை கசக்கி தொடர்ந்து தேய்ப்பதால் தேமல் நீங்கி இயற்கையான நிறத்தை தோல்கள் பெறும்.

    வைசூரி நோயினால் பாதித்தவர்களுக்கும் அதன் வேகத்தை தணிக்க இதன்சாற்றை பயன்படுத்திவரலாம்.

    உடலில் ஏற்படும் வீக்கம், கொப்பளங்கள் இவைகளின் மீதும் இச்சாற்றை பூசுவதினால் குணம்பெறலாம்.

    இதிலுள்ள சில வேதிப்பொருட்களுக்கு கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இலைகளில் அடங்கியுள்ள வேதிப் பொருட்கள்.

    [100 கிராம் கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள்]

    Tamil English Measurement of nutrients
    கலோரி Calorie 39 k cal
    நீர் Water 84.4%
    புரதம் Protein 4.3 g
    கொழுப்பு Fat 1.0 g
    சர்க்கரை Sugar 8.9 g
    பொட்டாசியம் Potassium 1.7 g
    கார்போஹைட்ரேட் Carbohydrate 5.7 g
    சுண்ணாம்பு Calcium 210 mg
    பாஸ்பரஸ் Phosphorus 75 mg
    இரும்பு Iron 6.1 mg
    வைட்டமின் A beta-carotene 3660 ㎍
    தியாமின் (B1) Thiamine 0.15 mg
    ரிபோஃப்ளேவின் (B2) Riboflavin 0.50 mg
    நியாசின் Niacin 1.2 mg
    Vitamin C ascorbic acid 12 mg
    நார்சத்து fibre 2.2 g
    ஆல்பா சோலமார்கின் α-Solamargine -
    பீட்டா சோலமார்கின் β- Solamargine -
    ஆல்பா சோலனைன் α- solanine -
    சோலாசோடைன் Solasodine -
    சொலாமார்கின் Solamargine -
    சோலனிடைன் solanidine -
    சோலாசோனைன் Solasonine -
    கூமரின்ஸ் Coumarins -
    பைட்டோஸ்டெரால்ஸ் Phytosterols -
    கோகோயின் cocaine -
    குயினின் quinine -
    நிகோடின் nicotine -
    மார்பின் morphine -
    சாக்கோனைன் Chaconine -
    சோலாசோனைன் Solasonine -
    சபோனின் Saponin -
    ட்ரோபேன் tropane -
    ஸ்கோபோலமைன் Scopolamine -
    அட்ரோபின் Atropine -
    ஹையோசைமைன் Hyoscyamine -
    சபோஜெனின் Sapogenin -
    டியோஸ்ஜெனின் diosgenin -
    டைகோஜெனின் Tigogenin 0.5%

    இதுதவிர இலைகளில் குறிப்பிடத்தக்க அளவு "மெத்தியோனைன்" (Methionine) என்னும் அமினோ அமிலமும் நிறைந்துள்ளது.

    காய்களின் பயன்.

    மணத்தக்காளி காயை தயிரில் அல்லது மோரில் சிறிது உப்புபோட்டு ஊறவிட்டு எடுத்து வெயிலில் காயவைத்து வற்றலாக செய்து பொரித்து பயன்படுத்தலாம்.

    காய்களை மட்டுமல்ல மணத்தக்காளி பழங்களையும் உலரவைத்து வற்றலாக பயன்படுத்தலாம். வற்றலை நெய்யில் வதக்கி உணவில் பயன்படுத்தலாம்.

    manathakkali vathal

    இதில் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் நாம் ஆரம்பத்தில் சொன்னதுபோல காய்களை பச்சையாக உட்கொள்ளுதல் கூடாது. ஏனெனில் காய்கள் உடலுக்கு தீங்குதரும் கிளைகோலாய்டுவான "சோலனைன்" (Glycoalkaloid solanine) என்னும் நச்சுப்பொருளை 0.65% அளவில் கொண்டுள்ளது. கூடவே குறைந்த அளவே நச்சுத்தன்மைகொண்ட சோலினிடைன் (solanidine) என்ற நச்சுப்பொருளையும் கொண்டுள்ளது.

    இந்த நச்சுப்பொருள் காய்களில் மட்டுமல்ல இலைகளிலும் அதிக அளவில் உள்ளது. எனவே இலை மற்றும் காய்களை பச்சையாகவோ அல்லது சாறுபிழிந்தோ தொடர்ந்து உட்கொண்டுவந்தால் அது உடலின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இதனை உணவாக உட்கொள்ள வேண்டுமெனில் இலை மற்றும் காய்களை வெப்பத்தில் நன்கு வேகவைத்தே பயன்படுத்தவேண்டும். சூடுபடுத்தும்போது இதிலுள்ள நச்சுத்தன்மை முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும் ஓரளவாவது அழிக்கப்படுவதால் பொரித்தோ அல்லது நன்கு சமைத்தோ பயன்படுத்துவது பாதிப்பை குறைக்கும்.

    பழங்களின் பயன்.

    இதன் பழங்கள் இனங்களைப்பொறுத்து ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, கருப்பு என பல வண்ணங்களில் காணப்படுகின்றன.

    Black nightshade_Berries

    பேக்கரிகளில் நீங்கள் வாங்கும் சில "கேக்" போன்ற உணவுகளின் மேல் பகுதிகளில் திராட்சை போன்ற பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? இவ்வாறு அலங்கரிப்பதற்கு திராட்சை பழங்கள் மட்டுமல்ல வேறுசில பழங்களுடன் இந்த மணத்தக்காளியிலுள்ள பழங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஆச்சரியமே!!

    இந்த பழங்கள் கேக்குகளை அலங்கரிப்பதற்கு மட்டுமல்ல ஜாம் (Jam) போன்ற சுவையான உணவுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சர்பத் (Sarpad) கூட இதன்மூலம் தயாரிக்கிறார்கள்.

    இதன் காய்களும் முழுமையாக பழுக்காத பழங்களும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிப்பவை என்பதால் நன்கு கனிந்த பழங்களையே உணவாக பயன்படுத்துவது அவசியம்.

    பழத்திலுள்ள சாறுகள் பல்வலிக்கான சிறந்த வலிநிவாரணியாக அமைகிறது.

    காசநோயை கட்டுப்படுத்த இந்த பழத்தை தேனுடன் கலந்து கொடுக்கிறார்கள்.

    இதன் பழங்களில் அடையாளம் காணப்படாத aglycone (அக்லிகோன்) என்னும் ஆல்கலாய்டு 0.4% அளவு காணப்படுகின்றன. ஆனால் இந்த ஆல்கலாய்டு இலைகளில் இல்லை என்பது ஆச்சரியமே.

    இந்த பழங்களிலிருந்து பெறப்படும் சாயப்பொருளை பச்சைகுத்துவதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    பழங்களில் அடங்கியுள்ள சத்துக்களின் விவரம்.

    [100 கிராம் பழங்களில்]

    Tamil English Measurement of nutrients
    புரதம் Protein 2.5 g
    கொழுப்பு Fat 0.2 g
    கார்போஹைட்ரேட் Carbohydrate 7.9 g
    கால்சியம் Calcium 50 mg
    பாஸ்பரஸ் Phosphorus 30 mg
    பொட்டாசியம் Potassium 1.2 %
    இரும்பு Iron 2 mg
    சோலாசோடைன் solasodine 0.3% - 0.45%
    அசிட்டைல்கோலின் Acetylcholine -
    வைட்டமின் A beta-carotene 750 IUs
    தியாமின் (B1) Thiamine 0.08 mg
    வைட்டமின் C ascorbic acid (C) 80 mg
    ஆல்பா சோலமார்கின் α-Solamargine -
    பீட்டா சோலமார்கின் β- Solamargine -
    சோலாசோனைன் Solasonine -
    ஆல்பா சோலனைன் α- solanine -
    சொலாசொடின் solasodine -
    சோலனிடைன் solanidine -
    குளோரோஜெனிக் அமிலம் chlorogenic acid 0.06%
    காஃபிக் அமிலம் caffeic acid 0.02%
    நியோகுளோரோஜெனிக் அமிலம் neochlorogenic acid -
    ஐசோகுளோரோஜெனிக் அமிலம் isochlorogenic acid -
    காஃபியோயில் குளுக்கோஸ் caffeoyl glucose 0.01%

    உணவாக பயன்படுத்தும் முறை.

    Methods of use.

    மணத்தக்காளியில் உடலுக்கு தீங்கு தரும் சில மூலக்கூறுகள் அடங்கியுள்ளதால் இதனை பாதுகாப்பான முறையில் எவ்வாறு உணவாக பயன்படுத்துவது என்பதனை இப்போது பார்க்கலாம்.

    பொதுவாக இதனுடைய இளந்தளிர்களே உணவாக பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் பலவகையான "சூப்"களில் சேர்க்கப்படுகின்றன.

    மேலும் இது கீரைகடைசலாகவோ அல்லது பொரியலாகவோ செய்யப்படுகின்றன.

    இதன் பழங்களைத்தவிர பிற அனைத்து பாகங்களும் கசப்புத்தன்மை பொருந்தியது என்பதால் இதனை உணவாக பயன்படுத்துவதற்கு முன்னால் இதனுடைய கசப்பு தன்மை நீக்கப்பட வேண்டும்.

    கசப்புத்தன்மையை நீக்குவதற்கு ஒரு பாத்திரத்தில் இதன் இலைகளை போட்டு நிறைய நீர்விட்டு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு காய்ச்சி நீரை வடித்து விடுவதின்மூலம் இதனுடைய கசப்புத்தன்மையை நீக்கலாம்.

    அதுபோல இதன் காய்களை வற்றலாக பயன்படுத்தும்போது நெய் சேர்த்து வதக்குவதால் கசப்புத்தன்மையை நீக்கலாம்.

    நன்கு கனிந்த இதன் பழங்களில் கசப்புத்தன்மை இருப்பதில்லை என்பதால்  அப்படியே உண்ணப்படுகின்றன.

    இதன் இலைகளிலும் காய்களிலும் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் "சோலனம்" என்னும் ஆல்கலாய்டுகள் உள்ளது என்பதால் இதனை பச்சையாகவோ அல்லது சாறுபிழிந்தோ சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

    இதனை முறைப்படி சமைத்து சாப்பிடுவதே சிறப்பு. ஏனெனில் சமைக்கும்போது ஏற்படும் வெப்பத்தினால் இதிலுள்ள நச்சுத்தன்மையுள்ள ஆல்கலாய்டுகள் ஓரளவு நீக்கப்படுகின்றன.

    இங்கு இன்னும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. வெப்பப்படுத்துவதின்மூலம் முழுமையாக சோலனம் நீக்கப்படுவதில்லை என்பதால் இதனை தினந்தோறும் அல்லது அடிக்கடி உணவாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    வயிற்றுப்புண்களை ஆற்றும் குணம் இதற்கு இருப்பதால் வயிறு மற்றும் குடல்புண்களால் அவதிப்படுபவர்கள் இதனை சில நாட்கள் உணவில் சேர்த்துவருவதால் குணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மணத்தக்காளி வற்றல்.

    ஒரு கலனில் உப்பிட்ட மோரை ஊற்றி அதில் மணத்தக்காளி காயை போட்டு பிசறி மூன்று நாட்கள் ஊறவிடவும்.

    தினம் இருவேளை கலனை நன்கு குலுக்கி மோரும் உப்பும் காய்களில் நன்கு ஊறும்படி செய்யவும்.

    நன்கு ஊறியபின் நான்காவது நாள் அதையெடுத்து வெயிலில் உலர்த்தவும்.

    நன்கு வற்றலாக காய்ந்தபின் எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

    இதனை தேவையான அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து காரக்குழம்புடன் கலந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட உட்சூடு, நீர்க்கடுப்பு, அரோசகம் குணமாகும்.

    மருத்துவ பயன்கள்.

    பதினான்காம் நூற்றாண்டிலேயே மணத்தக்காளியானது கிரேக்கத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    இதன் இலை மற்றும் பழங்கள் உணவாகவும், இலை, தண்டு, வேர், காய், கனி ஆகியன நோய் நீக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

    இம்மூலிகை "ஆண்டிபிரைடிக்" மற்றும் "டையூரிடிக்ஸ்" மருந்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    சீழ் பிடித்த கட்டிகள் உள்ளதா? கவலை வேண்டாம். இதன் இலைகளை கசக்கி வைத்து கட்ட சீழ் நீங்கி குணப்படும்.

    இந்தியாவில் இவைகள் கீரைகளாகவும், வாய்ப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றும் மூலிகை தாவரமாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

    மணத்தக்காளி இலையை வாயில் நன்கு மென்று புண்கள் உள்ள உதடு மற்றும் நாக்குகளில் அப்பி சிறிதுநேரம் இருக்கும்படி செய்து அதன்பின் உமிழ்ந்துவிட நாக்கு மற்றும் வாயில் உள்ள புண்கள் விரைவாக ஆறும்.

    இக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டாலோ அல்லது நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டாலோ வாய்ப்புண், குடல்புண், கரப்பான் குணமாகும்.

    இது பாரம்பரிய மருத்துவ முறைகளில் வெட்டுக்காயங்கள், தோல் வெடிப்பு, மூச்சுக்குழாய் வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

    சருமத்தில் வரும் சில நோய்களுக்கு இதன்சாறு நல்ல பலனை தருகிறது. சிரங்கு, படர்தாமரை நீங்குகின்றன.

    இலை, தண்டு, வேர்கள் முதலியன புற்றுநோய் புண்கள், லூகோடெர்மா (leucoderma) மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

    பழங்களின் சாறு பல்வலிக்கு நிவாரண மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுப்புண்களை குணப்படுத்தவும் இந்த பழம் உண்ணப்படுகிறது.

    இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் ஆஸ்துமா மற்றும் கக்குவான் இருமலுக்கு நிவாரணம் தர பயன்படுத்தப்படுகிறது.

    எலிகளின் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் வளர்ச்சியை இந்த மணத்தக்காளியானது தடுத்து நிறுத்துவதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த பரிசோதனை இன்னும் மனிதர்கள்மீது நடத்தப்படவில்லை. ஆனால் இதிலுள்ள சில வேதிப்பொருட்கள் கல்லீரலில் வரும் புற்றுநோயை குணப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இலைச்சாறு மற்றும் பழச்சாறு இரண்டுமே சாயங்கள் தயாரிக்க பயன்படுகின்றன. பழங்களில் உள்ள அந்தோசயனின் (anthocyanin) என்னும் நிறமி மை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

    💢💢💢💢

    இந்த பதிவில் மணத்தக்காளியின் பொதுவான பண்புகளையும், அதில் அடங்கியுள்ள வேதியியல் பொருள்களையும், உணவாகப் பயன்படுத்தும் விதம் பற்றியும் பார்த்தோம்.

    இதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த பதிவில் இதனை பயிரிடும் முறை, பயிர் பாதுகாப்பு மற்றும் மகசூல் விபரங்களையும் பார்க்கலாம்.

    💢💢💢💢💢💢

    இதன் தொடர்ச்சியாகிய ஐந்தாவது பகுதியை [Part - 5] படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் பண்ணுங்கோ...

    >> மணத்தக்காளி - Manathakkali - Cultivation and Crop Protection. <<

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    4 கருத்துகள்

    1. மணத்தக்காளியின் பயன்பாடுகளை குறித்தும் அதன் இலை காய் கனி அவற்றின் பயன்பாடு குறித்தும் இதை விட சிறப்பாக யாராலும் கூற முடியாது மிக்க நன்றி.
      https://aashaatamil.blogspot.com/

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்களின் உயர்வான கருத்துகளுக்கு நன்றி சகோதரி!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.