"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
வாழ்வில் வளம் சேர்க்கும் பழமொழிகள் - Proverbs that add Wealth to Life.

வாழ்வில் வளம் சேர்க்கும் பழமொழிகள் - Proverbs that add Wealth to Life.

Proverbs that add Wealth to Life.

வாழ்க்கை இருள்பட்டு நிற்கும்போது வழிகாட்டும் மெழுகுவர்த்திபோல் செயல்படுபவை பழமொழிகள் என்பது நாம் அறிந்ததே.

நாம் தொடர்ந்து சில பதிவுகளாக நம்மிடையே மறைந்தும், மறந்தும்போன பழமொழிகளைப்பற்றி பார்த்துவருகிறோம். இப்பதிவிலும் கருத்தாழமிக்க சில பழமொழிகளைப் பற்றியே பார்க்க இருக்கிறோம்.

வாருங்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் பழமொழிகள் சிலவற்றைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.


வாழ்வில் வளம் சேர்க்கும் பழமொழிகள்.

  • ஊண் அற உயிர் அறும்.
  • ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.
  • விரும்பினால் வேம்பும் கரும்பு போலாம்.
  • வில் வளைவதும் வலியோர்கள் பணிவதும் நல்லதற்கு அடையாளம் அல்ல.
  • விலக்க முடியா துன்பத்திற்கு விசனம் கொள்ளல் வீண்.
  • விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.
  • விழுங்கின இரகசியம் வயிற்றில் தங்காது.
  • விழுந்த இடம் பொழுது, விட்ட இடம் விடுதி.
  • விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதானே ஒட்டும்.
  • வீட்டின் அழகு வாசல்படியிலேயே தெரியும்.
  • வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.
  • வீணை கோணினால் நாதமும் கோணுமா?
  • வீதி சண்டையை விலைக்கு வாங்கினானாம்.
  • வீரம் கெட்டவன் சேரன் ஆவானா? தீரம் கெட்டவன் சோழன் ஆவானா?
  • வெட்டி கெட்டது தென்னை, வெட்டாமல் கெட்டது பனை.
  • வெண்ணைபோல உழுதால் குன்றுபோல் விளையும்.
  • வெள்ளம் பாயும் கடலில் வாய்க்காலும் பாயும்.
  • வெள்ளமே வந்தாலும் பள்ளம் பார்த்தே பயிர் செய்.
  • வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
  • வெயில் வெளிச்சம் புகாத வீடு வைத்தியன் வந்துபோகும் மனையாக மாறும்.
  • வேக நேரம் இருந்தாலும் சாக நேரம் இல்லை.
  • வேகிற உடலுக்கு வெள்ளி என்ன? செவ்வாய் என்ன?
  • வைத்தியன் உயிர் இருக்கும் வரை விட மாட்டான். வைதிகனோ உயிர் போன பின்பும் விட மாட்டான்.
  • வைத்து வாழ்ந்தவனும் இல்லை. கொடுத்து கெட்டவனும் இல்லை.
  • வைததால் வட்டி போச்சு, அடித்ததால் அசலும் போச்சு.
  • வைதாரையும் வாழ வைத்து வாழ்ந்தாரையும் தாழ வைக்கும் வையகம்.
  • வையகம் உற்றவன் மெய்யகம் உற்றவன்.

  • வையம் கெட்டால் ஐயம் இல்லை.
  • வெண்கலத்து சூடும், வேட்டகத்து வார்த்தையும் ஆறா.
  • ஜென்மக் குணத்தை செருப்பால் அடித்தாலும் போகா.
  • இரத்தலே இழிவு தரும்.
  • இல்லாதவன் சொல் செல்லாது.
  • இல்லாதவனை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயாரும் வேண்டாள்.
  • நல்லோர் குணங்கள் உரைப்பதுவும் நன்று.
  • நாள் செய்வதை நல்லோர் செய்யார்.
  • நீரை சுருக்கி, நெய்யை உருக்கி, மோரை பெருக்கி உண்.
  • அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை.
  • அடித்தவன் பின்னால் போனாலும் பிடித்தவன் பின்னால் போகாதே.
  • அடுத்து அடுத்து போனால் தொடுத்த வீடும் பகை.
  • பொல்லார் உதவியை விட நல்லார் உதைமேல்.
  • அலை நிற்பது எப்போ? தம்பி தர்ப்பணம் செய்வது எப்போ?
  • அலைமோதும் போதே கடலாடு.
  • எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்குமாம் அவரை.
  • சொன்னதே சட்டம், இட்டதே பிச்சை.
  • அழகு கிடந்து அழும், அதிர்ஷ்டம் கிடந்து துள்ளும்.
  • அழுவார் அற்ற பிணமும், சுடுவார் அற்ற சுடலையும்.
  • அற்ப ஆசை கோடி தவத்தை கெடுக்கும்.
  • அற்பன் தரும் ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் தரும் கை தவிடு நன்று.
  • குளிர் வந்துவிட்டால் அழுக்கு துணியும் அவசியமாகும்.
  • குணமில்லா அழகு மணமில்லா மலரைப் போன்றது.
  • அழகில்லா மனைவியும், அறிவில்லா வேலைக்காரியும் விலைமதிக்க முடியாத இரு பொக்கிஷங்கள்.
  • மற்றவர்களின் வடு உனக்கு பாடமாக மாறவேண்டும்.
  • வேடம் கூடம் கொள்ளாது.
  • வேடமோ தவ வேடம், மனதிலோ அவவேடம்.
  • ஆசன கீதம் சீவன நாசம்.
  • ஆசானுக்கும் அடைவு தப்பும்.

  • ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.
  • ஆசை தீர அல்லல் தீரும்.
  • ஆடி செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சளையும் தேய்த்தே குளி.
  • ஆடி செவ்வாய் நாடி பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான்.
  • ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தைப் பழிப்பான்.
  • ஆணுக்கு அவகேடு செய்தாலும், பெண்ணுக்கு பிழைகேடு செய்யாதே.
  • ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்.
  • ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
  • ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிறவனுக்கே தெரியும் அவலம்.
  • ஆயிரம் சொன்னாலும் அவிசாரி சம்சாரி ஆகா?
  • ஆர்ப்பரிப்பவர் எல்லோருமே போருக்கு உரியவர் அல்லர்.
  • ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ?
  • ஆழப் பொறுத்தாலும் வாழ பொறுக்க மாட்டார்கள்.
  • ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது.
  • ஆளான ஆள் புகுந்தால் கணநேரத்தில் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும்.
  • ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான்.
  • ஆற்று நீர் ஊற்றி அலசி கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர்தான்.
  • ஆற்று நீர் பித்தம் போக்கும், குளத்து நீர் வாதம் போக்கும், சோற்று நீர் எல்லாம் போக்கும்.
  • ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
  • இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான்.
  • இரந்து குடித்தாலும் இருந்து குடி.
  • இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.
  • இளைத்தநேரத்திற்கு புளித்த மோர்.
  • ஈயார் உறவும் பாழ், ஈகை இல்லா அன்பும் பாழ்.
  • ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.
  • உடைந்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உட்சுவர் இருக்க புறச்சுவர் பூசலாமா?
  • உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ?
  • உண்டார் மேனி கண்டால் தெரியும்.

  • உண்ணாமல் ஊரெல்லாம் திரியலாம், உடுத்தாமல் ஒரு வீட்டிற்கும் போகுதல் ஆகா.
  • உப்பு இட்ட பாண்டமும், உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
  • உரு ஏற திரு ஏறும்.
  • உருளுகிற கல்லில் பாசி சேராது.
  • உழவு இல்லா நிலமும், மிளகு இல்லா கறியும் வழ வழ கொழ கொழ.
  • உள்ளக் கருத்து வள்ளலுக்கு தெரியும்.
  • உள்ளது குற்றம் ஒருகோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ?
  • உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வணங்கினாலும் பிள்ளை கொடுக்கின்ற தெய்வம் அகமுடையான் ஒருவனே.
  • உள்ளதை கொண்டுதான் ஊராள வேண்டும், நல்லதை கொண்டுதான் நாடாள வேண்டும்.
  • உள்ளதை சொல்லி உலகத்தை வெல்லு.
  • உள்ளதை விற்று நல்லதை கொள்ளு.
  • உள்ளம் தீ எரிய உதடு தேன் சொரிய.
  • உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை உள்ளே நுழைந்துவிடும்.
  • உள்ளூர் சம்பந்தம் உள்ளங்கை சிரங்கு போல.
  • உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
  • உறியிலே கட்டி தூக்கினாலும் அழுகல் பூசணிக்காய் அழுகலே.
  • ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ்.
  • ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான்.
  • ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை. நாட்டை வளைத்தாலும் நல்ல துணை இல்லை.
  • ஊரை கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக்கொடுக்கிறவன் மந்திரி.
  • ஊர் ஓடினால் ஒத்து ஓடு, ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.
  • ஊர் ஓரத்தில் கொல்லை, உழுதவனுக்கோ பயிர் இல்லை.
  • ஊர் நஷ்டம் ஊரிலே தேர் நஷ்டம் தெருவிலே.

  • ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே.
  • எட்டாத மரத்து இளநீர்போல ஒட்டாத இடத்தில் உறவாடி நிற்காதே.
  • எட்டும் மட்டுமே வெட்டும் கத்தி, எட்டாத இடத்திலும் வெட்டுமாம் காசு.
  • எட்டு எள்ளுக்கு சொட்டு எண்ணெய்.
  • எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • எண் மிகுந்தவனே திண் மிகுந்தவன்.
  • எத்தனை முறை தேய்த்தாலும் பித்தளைக்கு தன் நாற்றம் போகா.
  • எத்தனை பேர் துடுப்பு போட்டாலும் தோணி போவது என்னவோ சுக்கான் பிடிப்பவன் கையில்தான் இருக்கிறது.
  • எத்தனை வித்தை கற்றாலும் செத்தவன் செத்தவன்தான்.
  • எரு இல்லையேல் பயிர் இல்லை.
  • எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான்.
  • எழுத்தறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை.
  • எழுத்து வாசிக்க தெரியாது, ஆனால் எடுத்து கவிழ்க்க தெரியும்.
  • எழுதிய விதி அழுதால் தீருமா?
  • எள்ளத்தனையை மலையத்தனை ஆக்குவான் மாபாவி.
  • எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய்.
  • எள்ளும் கொள்ளும் எழுபது நாள்.
  • எளியவனாய் பிறந்தாலும் இளையவனாய் பிறக்காதே.
  • ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே.
  • ஏகாதசி மரணம், துவாதசி தகனம்.
  • ஏடு அறியாதவன் பீடு தெரியாதவன்.
  • ஏடு கிடக்க தோடு முடைந்தாளாம்.
  • ஏணி கழிக்கு கோணல் கழி வெட்டலாமா?
  • ஏவல் பேய் கூரையை பிடுங்கும்.
  • ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு.
  • ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப்பானை தானே நிரம்பும்.
  • கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.
  • ஐங்கல கப்பியிலும் இது நழுவுன கப்பி.

  • ஐயப்பட்டால் பைய நட.
  • கலப் பணத்தை காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.
  • வீணருக்கு செய்வதெல்லாம் வீணாம்.
  • வெள்ளம் பள்ளத்தை நாடும், உள்ளம் கள்ளத்தை நாடும்.
  • வெறி கொண்ட மனதுக்கு குழிதோண்டும் குணமுண்டு.
  • அடுத்து அடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.
  • வைக்கிறவன் வைத்தால் நடுப்பந்தி என்ன? கடைப்பந்தி என்ன?
  • அகங்காரமதை அடக்கி ஐம்புலனையும் சுட்டெரித்து தூங்காமல் தூங்குவதே சுகம்.

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.