"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

பண்டுஸ்தான்.

Bantustan.

நிறவெறியின் கொடூரம் அரங்கேறிய இடம்.

     நம்ம பங்காளி "பாகிஸ்தான்" பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க... அதன் பக்கத்துக் கூட்டாளி "ஆப்கானிஸ்தான்" பற்றியும் கேள்விப்பட்டிருப்பீங்க... அதன் அண்டை வீட்டுக்காரர் "தஜகிஸ்தான்" மற்றும் "கஜக்கஸ்தான்" பற்றியும் கேள்விப்பட்டிருப்பீங்க... ஏன் நம்ம ஊரு "இராஜஸ்தான்" பற்றிக்கூட கேள்விப்பட்டிருப்பீங்க... ஆனால் "பண்டுஸ்தான்" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?...

சிலபேர் கேள்விப்பட்டிருக்கலாம். இன்னும் சிலபேர் கேள்விப்படாமல்கூட இருக்கலாம்... கேள்விப்படாதவர்கள் பண்டுஸ்தானைப்பற்றி அறிந்துகொள்ள இப்பதிவை தொடருங்கள்...


அதற்கு முன்னால் ஒரே ஒரு கண்டிஷன்...

இதயம் பலவீனமானவங்க, பிளட் பிரஷரால அவதிப்படறவங்க, கர்ப்பிணிப் பெண்ணுங்க, பதினெட்டு வயசுக்கு கீழே உள்ள சூது வாது அறியாத பச்ச குழந்தைங்க... இவங்களெல்லாம் தயவு செஞ்சு இந்த பதிவ படிக்காதீங்க...

ஏன்னா... இது ஒரு இரத்தபூமி... இங்குள்ள கார்ப்பரேசன் குழாயைத் திறந்தாக்கூட குடிநீர் வராது. அதற்குப்பதிலா குருதிதான் வரும்னா பார்த்துக்கோங்க.

இவ்வளவு விவரமா சொன்னதுக்கு அப்புறமும் அந்த விவகாரமான பூமியை பார்க்கத்தான் வேண்டும் என்று நீங்கள் அடம்பிடித்தால் அது உங்கள் விதி. உங்களுக்குள்ளே இருந்து சாத்தான் செய்யும் சதி... மனதை திடப்படுத்திக்கொண்டு வாருங்கள் பண்டுஸ்தானுக்குள் பிரவேசிப்போம்.

பண்டுஸ்தானில் நீங்கள் உங்கள் காலடிகளை பதிக்க வேண்டுமென்றால் நாம் முதலில் தென்னாப்பிரிக்காவுக்குள் காலடி எடுத்து வைக்கவேண்டும். ஏனென்றால் பண்டுஸ்தான் இருப்பதே அங்குதான்.

தென்னாப்பிரிக்கா (South Africa).

நம் பூமியல் உள்ள கண்டங்களில் இரண்டாவது மிகப்பெரிய கண்டமாக ஆப்பிரிக்க கண்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் தென்கோடியில் இருப்பதே தென் ஆப்பிரிக்கா (Southern Africa).

ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக அழகான இடம் தென்னாப்பிரிகாதான். ஏனென்றால் இங்குதான் இயற்கை வளமும், இயற்கை அழகும் கொட்டிக்கிடக்கின்றன.

பண்டுஸ்தான் - Bantustan - Part 1

இயற்கை அழகெல்லாம் ஒன்று சேர்ந்து கம்பளம் விரிக்கும் பட்சத்தில் வேடந்தாங்கல் பறவையாக மேல்நாட்டு மக்களெல்லாம் இயற்கை அழகை கண்டு ரசிக்க தென்னகம் நோக்கி படையெடுப்பது இயற்கைதானே.

அப்படித்தான் கூட்டத்தோடு கூட்டமாக வந்து இறங்கியது ஒரு வெள்ளைக்காக்கை கூட்டம்.

ஆம்... அந்த வெள்ளைக்காக்கை கூட்டம் வேறுயாருமல்ல நம்மையெல்லாம் அடக்கியாண்ட அதே பிரிட்டீஷ் கொள்ளைக்காரர்கள்தான்... சாரி வெள்ளைக்காரர்கள்தான்.

ஆனால் இந்த பிரிட்டீஷ் கொள்ளையர்கள் வருவதற்கு முன்னதாகவே போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்கள் தென்னாப்பிரிக்காவில் காலடி பதித்திருந்தனர்.

எங்கெல்லாம் ஆங்கிலேயர்கள் அதாவது பிரிட்டீஷ்காரர்கள் காலடி பதிக்கிறார்களோ அங்கெல்லாம் அதற்கு முன்னதாகவே காலடி பதித்து ஆங்கிலேயர்களுக்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க பிள்ளையார் சுழி போடுபவர்கள் இந்த போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும்தான். இந்தியாவிலும் இதுதான் நடந்தது. ஆப்பிரிக்காவிலும் இதுதான் நடந்தது.

யார் இந்த போர்ச்சுகீசியர்கள்?

இந்த போர்ச்சுகீசியர்கள் ஒரு நாட்டுக்கான கடல்வழியை கண்டுபிடிப்பதிலும், வியாபாரம் செய்வதிலும் வல்லவர்கள். இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதன்முதலில் முயன்று 1498 - ல் வெற்றியும் கண்டவர்கள் போர்ச்சுகீசியர்களே. வழி கண்டுபிடித்ததோடு நில்லாமல் இந்தியாவுடனான வாணிபத்திலும் ஈடுபட்டனர்.

அவர்களை தொடர்ந்து வாணிபம் செய்ய சுமார் நூறு வருடங்கள் கழித்து 1602 ல் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர்கள்தான் டச்சுக்காரர்கள்.

யார் இந்த டச்சுக்காரர்கள்?

டச்சுக்காரர்கள் என்பவர்கள் "ஹாலந்து" நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் 1602 ல் இந்தியாவில் தங்கள் வியாபார ஸ்தலத்தை விஸ்தரிக்கும் நோக்கில் "டச்சு கிழக்கிந்திய கம்பெனி" என்ற ஒரு உருப்படாத கப்பல் போக்குவரத்துக் கம்பெனியை தங்களின் வியாபார தேவைகளுக்காக இந்தியாவில் உருவாக்கி வைத்திருந்தனர்.

இந்தியா வரும் கப்பல்கள் வழியில் தங்கி ஓய்வெடுத்து செல்லவும், பொருட்களை பத்திரப்படுத்தவும் வரும் வழியிலேயே ஒரு துறைமுகம் தேவைப்பட்டதால் டச்சு காலனித்துவ முற்றுகைப்படையுடன் வந்த "வன் ரிபீக்" (Jan Anthoniszoon Van Riebeeck) என்பவன் தென்னாப்பிரிக்காவிலுள்ள கடலோரப்பகுதியான நன்னம்பிக்கை முனை மற்றும் "கேப்டவுன்" (Cape Town) பகுதியை கைப்பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

இதுவே பிரிட்டீஷ்காரர்கள் அதிக அளவில் தென்னாப்பிரிக்காவில் நுழையவும், அவர்களை அடிமைகொள்ளவும் அதிக அளவில் வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டது.

அதெல்லாம் இருக்கட்டும்,... டச்சுக்காரர்கள் துறைமுகம் அமைப்பதற்கும் பிரிட்டீஷ்காரர்கள் நாட்டை அபகரிப்பதற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா?

இருக்குங்க... நிறைய இருக்கு...

முன்பு சொன்னதுபோல டச்சுகாரர்கள் "ஹாலந்து" நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் அல்லது பிரிட்டீஷ்காரர்கள் என்பவர்கள் "இங்கிலாந்து" நாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த டச்சுக்காரர்கள் உள்நாடு மற்றும் அன்னிய நாடுகளில் வியாபாரம் செய்வதில் வல்லவர்கள். ஆனால் ஆங்கிலேயர்களோ ஒருவர் சென்றுவரும் பாதையை மோப்பம் பிடிப்பதிலும், அதன்வழியாகப் பயணப்பட்டு அந்த நாட்டையும், நாட்டுமக்களையும் அடிமைகொள்வதில் வல்லவர்கள்.

இந்த டச்சுக்காரர்கள் ஒருநாட்டிற்குள் போய் துறைமுகம் அமைத்து வியாபாரம் ஆரம்பித்த உடனே இந்த பிரிட்டீஷ்காரர்களுக்கு மூக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும். உடனே மோப்பம் பிடித்துக்கொண்டே பின்னால் வர ஆரம்பித்துவிடுவார்கள்.

அடுத்த பத்து வருடங்களுக்குள்ளாக டச்சுக்காரர்களுக்கு எதிராக இவர்களும் கடையைபோட வியாபாரம் சூடுபிடிக்க அதுவே இருவருக்கும் போட்டியாக மாற இறுதியில் அதுவே கைகலப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சில வருடங்களிலேயே வெள்ளைக்கார கொள்ளையர்களுடன் போட்டிபோட முடியாமல் தங்களுடைய "டச்சு கிழக்கிந்திய கம்பெனி"யை வந்தவரைக்கும் லாபம் என்று பிரிட்டீஷ்காரர்களிடமே விற்றுவிட்டு ஓட்டம்பிடிக்க பிரிட்டீஷ்காரர்களோ டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் பெயர்பலகையை நம்முடைய திராவிட பாணியைப் பின்பற்றி தார்பூசி அழித்துவிட்டு அதை "பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி" யாக மாற்றிவிடுவார்கள்.

அப்புறமென்ன இங்கிருந்து வாசனை பொருள்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யவேண்டியது. அப்புறம் அங்கிருந்து வெள்ளையர்களை இறக்குமதி செய்து மொத்த நாட்டையும் கபளீகரம் செய்யவேண்டியது.

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் வெள்ளையர் புத்தி வெளக்குமாற்றால் அடித்தாலும் மாறப்போவதில்லையல்லவா... நிலைமை இப்படியிருக்க தென்னாப்பிரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்தியாவில் நடந்த அதே கதைதான் அங்கும் நடந்தது. வழக்கம்போலவே வியாபாரத்தில் ஆரம்பித்து சேதாரத்தில் முடிந்த கதைதான்.

ஆப்பிரிக்கா தேசமானது கறுப்பு இன மக்களின் தாயகம் என்பதில் எந்தவித மாற்று கருத்துகளுக்கும் இடமே இல்லை. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாக வாழ்ந்துவருபவர்கள் அவர்கள்.

ஆனால் வெள்ளையர்கள் அப்படி அல்ல. அவர்கள் ஆப்பிரிக்காவின் இயற்கை அழகை பற்றி கேள்விப்பட்டு இயற்கையை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபார வணிகர்கள்.

அங்கு மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்கள் கருப்பு இன மக்களே என்பதால் அவர்களே அதிகமாகவும் வாழ்ந்துகொண்டு வருகின்றனர். ஆனால் வந்தேறிகளான வெள்ளையர்களோ சிறுபான்மையினரே.

சிறுபான்மையினராக இருந்தாலும் தென்னாப்பிரிக்காவின் கொள்ளையழகு பிடித்துபோனது மட்டுமல்லாமல் இங்குள்ள கடலோர பகுதிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் தங்கமும், வைரமும் வளமையாக கிடைக்க வழக்கம்போல உட்கார்ந்து கொள்ளையடிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

"குந்திக்கினு இருக்க இடத்தை கொடுத்தா குடும்பம் நடத்த மடத்தையே கேட்ட கதை"யாக பிழைப்புதேடி வந்த பிரிடிஷ்காரர்களோ தங்களிடம் ஆயுதம் இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையில்... கறுப்பின மக்களின் உழைப்பை கேட்டதோடு அவர்களின் நிலத்தையும், இயற்கை வளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்ததுவும் அல்லாமல் ஆட்சி அதிகாரத்தையும் ஒருவழியாக பிடித்துவிட்டனர்.

ஆட்சி கைக்கு வந்தபின் காட்சிகள் மாறுவது இயல்புதானே!!..

எனவே கையிலுள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கருப்பின மக்களை அடக்கியாண்டதோடு... ஆப்பிரிக்கா என்னவோ இவர்களின் அப்பன்வீட்டு சொத்து என்ற நினைப்பில் கருப்பர்களை வழக்கம்போல "கப்பம்" கட்ட கட்டளையிட்டனர்.

வெள்ளையர்களுக்கு எதிராக முரண்டுபிடிக்க... மீசையை முறுக்க... அது ஒன்றும் தமிழ்நாடு அல்லவே...

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

"வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...

உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி?...

எங்களோடு வயலுக்கு வந்தாயா?...

நாற்று நட்டாயா?... களை பறித்தாயா?...

ஏற்றம் இறைத்து நெடுவயல் நிறையக்கண்டாயா?...

கழனிவாழ் உழவர்களுக்கு கஞ்சிக்கலயம் சுமந்தாயா?

அங்கு கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு

மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா?...

மாமனா... மச்சானா... மானங்கெட்டவனே...

எதற்கு கேட்கிறாய் திரை?...

யாரை கேட்கிறாய் வரி?..."

          என்று வெள்ளையனுக்கு முன்னால் நின்று ஆவேசமாக கர்ஜிக்க அங்கு ஒரு வீரத்தமிழன் இல்லாததால் அந்நியர்களின் அதட்டல்களுக்கு அமைதியாக அடங்கிப்போயினர் ஆப்பிரிக்க மக்கள்.

அதிகாலை எழுந்து ஆப்பம் தின்று ஏப்பம் விடக்கூட வசதி இல்லாதவர்கள் கப்பம் கட்ட காசுக்கு எங்கே போவார்கள்?...

கொள்ளையடிக்க வந்த வெள்ளையனோ வெகுண்டெழுந்தான். வரி கட்ட வசதி இல்லாதவனுக்கு இங்கு வாழ்வதற்கு இடமில்லை. நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என உத்தரவிட்டான்.

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

"நாங்கள் ஆப்பிரிக்கர்கள்... இது எங்கள் நாடு... நீங்கள் சுற்றிப்பார்க்க வந்தவர்கள்... எங்களை வெளியேற்ற நீங்கள் யார்?" என்று அதட்டியவர்களின் முன்னே வெள்ளையன் கொண்டுவந்த ஆயுதம் பேசியது... வெகுண்டெழுந்தவர்களின் விலா எலும்பு முழுவதுமாக நொறுக்கப்பட்டது... குரல் எழுப்பியவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டது... நியாயம் கேட்பவர்களின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது... உரிமையைக்கூட கேட்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெந்து வெதும்பி நடைபிணமானவர்களோ ஏராளம்... ஏராளம்...

விளைவு,... அரண்டு போனவர்களோ அடிமையானார்கள். பயந்து போனவர்களோ பதுங்கிக்கொண்டார்கள்.

முடிவு,... வெள்ளையர்களின் ஆட்டம் எல்லை மீறியது.

கறுப்பின மாந்தர்களை கருவிலேயே கருவறுக்க அடுத்து இவர்கள் எடுத்த ஆயுதம்தான் நிறம் + வெறி = நிறவெறி.

நாங்கள் வெள்ளை இனத்தவர்கள். நீங்களோ கறுப்பினத்தவர்கள். எனவே நீங்கள் எங்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமென ஆட்டம் போட்டனர். அடங்காத பலரையும் கண்முன்னே கூறுபோட்டனர்.

"வேங்கை அடிமரத்தில்

கருமையாய் வைரம் பாய்ந்த

நிறத்தையே வடிவாய் கொண்ட

கறுப்பின மாந்தர்தன்னை

நிறத்தினால் நீ அடிமையென்று

சொன்னவன் திறத்தை கேளீர்...

இரத்தமும் வற்றிப்போக,

நரம்பெல்லாம் இற்றுப்போக,

சோகை என்னும் பெருநோயால்

உடலெல்லாம் வெளுத்துப்போக

குளிர்தாங்க முடியாமல்

குளிர் காயும் இவர்கள்தான்

சொல்வார்களாம்...

கருப்புத்தோல் இழிவென்று...

நீ எனக்கு அடிமையென்று... த்தூதூ..."

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்தை தொட்ட காலம்.

"தென்னாப்பிரிக்க தேசிய கட்சி" என்னும் அரசியல் அமைப்பின்கீழ் கோலோச்சிய வெள்ளை இனத்தவர்கள் தென்னாப்பிரிக்காவில் மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்துவந்த கறுப்பின மக்களின் நிறத்தைக் காரணம்காட்டி ஆடு மாடுகளைப்போல தென்னாப்பிரிக்க நிலப்பரப்பிலிருந்து துரத்தியடிக்கும் கொடூர நிகழ்வு அரங்கேறிய காலம் அது.

அதன் உச்சகட்டமாக கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. நில உரிமை மறுக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை எண்ணிலடங்காதது. அதை இங்கு விவரித்தால் உங்கள் இதயம் வேதனையால் வெதும்பி போகலாம், துக்கத்தால் துவண்டு போகலாம்.

ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் மீறி இதயம் பலவீனமானவர்களும் இதை படிக்கலாம் என்பதால் வெள்ளையர்களால் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை பலதையும் இங்கு சொல்லாமலேயே கடந்துபோக வேண்டியுள்ளது...

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெள்ளை அரசாங்கத்தால் கருப்பின மக்களுக்கு என்று தனியாக கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

இந்த கல்வி திட்டத்தில் எதுவெல்லாம் பாடத்திட்டமாக இருந்தது தெரியுமா? பயிர்களுக்கு தண்ணீர் இறைப்பது எப்படி? விறகு வெட்டி பிழைப்பது எப்படி? இந்த இரண்டும்தான் அவர்களின் சந்ததிகளுக்குப் போதிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அடுத்து அவர்கள் செய்த காரியம்தான் "பண்டுஸ்தான்" (Bantustan) என்று ஒரு நிலப்பரப்பு... மன்னிக்கவும்... ஒன்றல்ல இரண்டல்ல 10 நிலப்பரப்புகள்வரை தென்னாப்பிரிக்காவில் உருவாக வழிவகை செய்துவிட்டது.

அது என்ன? வேறொன்றுமில்லை... நிறத்தை காரணம்காட்டி கருப்பினமக்கள் வெள்ளையர்கள் வாழும் பகுதிக்குள் செல்ல தடை விதித்தார்கள். இதனால் ஆப்பிரிக்கர்கள் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டார்கள்.

அவ்வாறு அகதிகளாக்கப்பட்ட கருப்பின மக்களை தங்களிடமிருந்து பிரித்துவைக்கும் பொருட்டு தென்னாப்பிரிக்காவின் தேசிய கட்சி நிர்வாகம் அவர்களுக்கென்று ஒரு சிறிய நிலப்பரப்பை (தாயகம்) ஒதுக்கிக்கொடுத்தது.

தென்னாப்பிரிக்காவில் ஆங்காங்கே வாழ்ந்துவந்த பல்வேறு கறுப்பின மக்களுக்காக ஆங்காங்கே சிறு சிறு நிலப்பரப்புகளாக ஒன்றல்ல இரண்டல்ல 10 தனித்தனி பிராந்தியங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

அந்த நிலப்பரப்புகள் தனித்தனி பெயர்களில் அழைக்கப்பட்டதோடு பொதுவாக "பண்டுஸ்தான்" (Bantustan) என தனியாக அடையாளப்படுத்தப்பட்டது. 1940 ன் பிற்பகுதியில்தான் இந்த சொல் பயன்பாட்டுக்கு வந்தது. பண்டுஸ்தான் என்றால் "கருப்பர்களின் தாயகம்" (black homeland) என்று பொருள்.

நல்ல வேடிக்கைதான்... பிழைக்க வந்த இடத்தில் மொத்த நாட்டையும் ஆட்டையை போட்டுவிட்டு அதிலிருந்து சில சிறுபகுதிகளை மட்டும் நகத்தினால் கிள்ளிகொடுத்து இதுதான் இனி உங்கள் "தாயகம்" அதாவது "பண்டுஸ்தான்" என்பது நல்ல வேடிக்கை. இங்கு யார் யாருக்கு பிச்சை இடுவது?

நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தால் ஆப்பிரிக்கர்களுக்கான தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்த சிறு சிறு 10 பிராந்தியங்களை உலக நாடுகள் தனிநாடாக அங்கீகரிக்க மறுத்துவிட்டன.

பல நூற்றாண்டுகளாக தலைவிரித்தாடிய நிறவெறி முடிவை எட்டும் காலமும் வந்தது.

பல போராட்ட வீரர்கள் வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தாலும் கடைசியில் விடிவெள்ளியாக வெகுண்டெழுந்தவர் "நெல்சன் மண்டேலா" (Nelson Mandela). ஆம்,... அவர் கறுப்பர்களின் துருவ நட்சத்திரம். கருவறுக்க முயன்றவர்களின் கருவறுக்க வந்த கலங்கரை விளக்கம்.

பண்டுஸ்தான் - Bantustan - Part 1.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா 1962 ல் வெள்ளை ஏகாதிபத்திய அரசால் கைதுசெய்யப்பட்டு கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். உலக வரலாற்றிலேயே இத்தனை ஆண்டுகள் சிறையில் வாடிய தேசிய தலைவர்கள் யாருமே கிடையாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நெல்சன் மண்டேலா தலைமையில் நிகழ்ந்த மாபெரும் போராட்டத்திற்கு பின்பு 1994 ம் ஆண்டு முற்றிலுமாக நிறவெறியும், அவர்களுக்கான ஒடுக்குமுறை சட்டமும் ஒழிக்கப்பட்டதை அடுத்து கருப்பின மக்களை தனிமைப்படுத்த தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருந்த சின்ன சின்ன பிராந்தியங்கள் அனைத்தும் மீண்டும் தென்னாப்பிரிக்காவுடன் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்டன.

அவ்வாறு இணைக்கப்பட்ட "பண்டுஸ்தான்" (Bantustan) பிராந்தியங்கள் பத்தும் இணைக்கப்படுவதற்கு முன்னால் எந்தெந்த பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தன என்பது பற்றி சிறிது விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போமா...

இதன் இரண்டாவது பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்கள்...

>> பண்டுஸ்தான் - Bantustan - Part 2. <<

👼👼👼👼👼👼👼👼

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. படுபாவிகள் எங்கே சென்றாலும் கொடூரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்... மாறாது அய்யா மாறாது மணமும், குணமும் மாறாது!!!

      நீக்கு
  2. தகவல்கள் பிரமிக்க வைக்கிறது நண்பரே தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. இந்த இஸ்தான்கள் பற்றிக் கொஞ்சம் கொஞ்ச்ம தெரியும் இந்த பண்டுஸ்தான் உட்பட....பல தகவல்கள் விரிவாகக் கொடுத்திருக்கீங்க. நெல்சன் மண்டேலா போல தலைவர்கள் இனி உருவாக வேண்டாம் அதாவது இந்த இன வெறி வரக் கூடாது....ஆனால் அதே சமயம் அப்படியான நல்ல தலைவர்கள் இனி உருவாகுவாங்களான்னே சந்தேகம்தான்.

    நல்ல பதிவு அடுத்த விவரங்கள் அறிய தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.