"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - ஷேக்ஸ்பியர் - William Shakespeare.

மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - ஷேக்ஸ்பியர் - William Shakespeare.

Philosophical Pearls of the Shakespeare.

பெயர் :- வில்லியம் ஷேக்ஸ்பியர் - William Shakespeare.

பிறப்பு :- 1564 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி இங்கிலாந்தின் "வார்விக்க்ஷையர்" (Warwickshire) மாநிலத்திலுள்ள "ஸ்ட்ராட்ஃபோர்டு அன்-ஏவன்" (Stratford Upon-Avon) என்னும் இடத்தில் பிறந்தார்.

William Shakespeare.
மேலும் இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் இவருடைய பிறந்த தேதி சரியாக தெரியவில்லை. அதாவது பதிவு செய்யப்படவில்லை. இவர் ஞானஸ்நானம் பெற்ற நாளாக ஏப்ரல் 26 ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த நாளிலிருந்து மூன்று நாளுக்கு முன் இவர் பிறந்திருக்கலாம் என ஒருவாறு ஊகிக்கப்படுகிறது. அவ்வளவே.

எனவேதான் இவருடைய பிறப்பு 1564 ம் ஆண்டு ஏப்ரல் 23 என்றும்,.... இல்லை... இல்லை... ஏப்ரல் 26 என்றும் என இருவேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

இறப்பு :- 1616 ம் ஆண்டு ஏப்ரல் 23.

தொழில் :- வில்லியம் ஷேக்ஸ்பியராகிய நம்முடைய கதாநாயகர் பன்முகத்தன்மை கொண்டவர். அதாவது ஆங்கில நாடகாசிரியர், நடிகர் மற்றும் பாடல்கள் புனையும் கவிஞரும் கூட.

உலகின் தலை சிறந்த நாடகாசிரியராகவும், சிறந்த நடிகராகவும், சிறந்த எழுத்தாளராகவும் கருதப்படுபவர்தான் இந்த ஷேக்ஸ்பியர். இவருடைய எழுத்துக்கள் விவாதத்துக்குரியதாக இருந்தாலும் ஆங்கில மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இன்றும் கருதப்படுகிறார்.

ஷேக்ஸ்பியர் மிகச்சிறந்த நாடகாசிரியராக இருந்து வந்தாலும் அவ்வப்போது தத்துவ ஞானியாக மாறி தத்துவ முத்துக்களை உதிர்ப்பதுவும் உண்டு.

அவ்வாறு ஷேக்ஸ்பியர் (William Shakespeare) உதிர்த்த சில தத்துவ முத்துக்களைத்தான் இப்பகுதியில் பார்க்க இருக்கின்றோம்.... வாருங்கள் பார்க்கலாம்.

ஷேக்ஸ்பியரின் தத்துவ முத்துக்கள்.

  • கண்களே உங்கள் ஆன்மாவின் ஜன்னல்.
  • ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பு அவருடைய குணத்திற்கேயன்றி பதவிக்கானது அல்ல.
  • பலவற்றையும் கேளுங்கள். ஆனால் சிலவற்றை மட்டுமே பேசுங்கள்.
  • எல்லோருடைய பேச்சையும் கேட்டுக்கொள். ஆனால் சிலரிடம் மட்டுமே பேச்சுக்கொடு.
  • முயற்சி என்பது ஒரு தடாகம் போன்றது. அதில் நீந்தி கரைசேரும்போது கிடைக்கும் இன்பம் வேறு எந்த ஒன்றிலும் கிடைப்பதில்லை.
  • நீ செல்லும் பாதையை முதலில் சரியாக தேர்ந்தெடு. பிறகு அந்த பாதையில் உன் பயணத்தை தொடங்கு.
  • நாம் யார் என்பது நமக்கு தெரியும், ஆனால் யாராக கூடும் என்பது நமக்குத் தெரிவதில்லை.
  • மனிதனின் தீய குணங்களை கல்வெட்டில் எழுதுகிறோம். ஆனால் அவனுடைய நல்ல குணங்களை ஓடும் தண்ணீரில் எழுதுகிறோம்.
  • நெஞ்சிலே குற்றம் உள்ளவர்களுக்குத்தான் எதிர்படும் ஒவ்வொரு கண்ணும் தன்னையே பார்ப்பதாக தோன்றும்.
  • உங்களுடைய குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் உங்களுடைய வளர்ச்சியின் அடையாளம்.
  • எவர் பேச்சையும் கேட்டுக்கொள். ஆனால் சிலரிடம் மட்டுமே பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்துகொள். அனால் சிலருக்கு மட்டுமே ஆலோசனை கூறு.
  • வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால் இழப்பதற்கும் எதுவுமில்லை.
  • ஏழையாக இருந்தாலும் மனதில் மகிழ்ச்சியும், திருப்தியும் குடியிருந்தால் அதுவே பெரிய செல்வமாகும்.
  • விதை விழுவது மரமாவதற்கு நீ விழுவது திறமாவதற்கு.
  • தைரியமும், தன்னம்பிகையுமே நம்முடைய மிக நெருங்கிய நண்பர்கள்.
  • காதல் வசப்பட்டவர்களும், கள் வசப்பட்டவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.
  • நம்பிக்கை வாழ்க்கையின் நண்பன், கவலை வாழ்க்கையின் எதிரி.
  • வாழ்வென்பது ஒரு ஆடை. அது இன்பம், துன்பம் என்ற இரு இழைகளால் பின்னப்பட்டுள்ளன.
  • காதலிக்க உணர்ச்சி மட்டும் போதும். ஆனால் கரம்பிடிக்க தன்நம்பிக்கையுடன் கொஞ்சம் அறிவும் வேண்டும்.
  • நண்பனிடம் கடன் வாங்குபவர்கள் நட்பை அடமானம் வைக்கிறார்கள்.
  • நண்பனுக்கு கடன் கொடுத்தால் நண்பனும் போய் விடுவான், கூடவே பணமும் போய்விடும். பட்டை நாமம் மட்டுமே நம்முடன் இருக்கும்.
  • சுருங்கச் சொல்வதே பேச்சுத்திறமைக்கு அழகு.
  • அறிவற்ற சினேகிதனைவிட புத்திசாலியான விரோதியை பெற்றிருப்பது சிறப்பு.
  • மாறுதல் கண்ட உடன் மாறும் அன்பு உண்மையில் அன்பாகாது.
  • கண்ணீரை சுமந்துகொண்டு திரிவதைவிட அதை சிந்தி தீர்த்து விடுவதே சிறப்பு.
  • பிறருக்கு உதவும் குணம் இல்லையெனில் நீ பெற்றிருக்கும் புகழ் அனைத்தும் வீணே.
Shakespeares-Quotes.

  • கொள்ளையன் பணக்காரனை கொள்ளையடிக்கிறான். ஆனால் முதலாளியோ ஏழைகளை கொள்ளையடிக்கிறான்.
  • அரசியல்வாதி என்பவன் மக்களை மட்டுமல்ல கடவுளையே ஏமாற்றும் திறன் படைத்தவன்.
  • கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு சுவைக்காது.
  • நீ பேசும் தீமையான வார்த்தைகள்தான் உன்னை தீமையான செயல்களுக்கு இட்டு செல்கிறது.
  • நாங்கள் சிந்தும் கண்ணீர் எங்கள் வளர்ச்சிக்கான தண்ணீர்.
  • காதலில் வென்றவன் வாழ்க்கையில் தோற்கிறான். காதலில் தோற்றவன் உலகையே வெல்கிறான்.
  • நேரம் பொன் போன்றது. நேரத்தை தாமதப்படுத்தாதே. தாமதங்களே பாதகமான முடிவுகளை தருகின்றன.
  • விவேகமாக நடந்துகொள்வதே வீரத்தின் சிறப்பான அம்சம்.
  • நேர்மையைப்போல வளமான சொத்து வேறெதுவுமில்லை.
  • மற்றவர்களின் உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள். ஏனெனில் இந்த சீண்டல் உங்களுக்கு அப்போது மகிழ்ச்சியை தரலாம். ஆனால், அந்த நபரின் நட்பை வாழ்நாள் முழுவதுமாக இழந்து விடுவீர்கள்.
  • பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே மிகச்சிறந்த ஆசிரியர்கள்.
  • ஒருவருடன் பகை கொள்ளல் என்பது எனக்கு மரணத்தை போன்ற துன்பத்தை தருவது. எனவே நான் அதை வெறுக்கிறேன்.
  • அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்!! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை வளப்படுத்துவதாகவே இருக்கட்டும். நீ வீழ்ந்தாலும் தியாகியாகவே மதிக்கப்படுவாய்.
  • இயற்கை குறையே இல்லாதது. பூரணமானது. இவ்வுலகில் குறையுள்ளது என்று ஒன்று உள்ளதென்றால் அது மனித மனமே ஆகும். உண்மையில் அங்கவீனம் என்பது அன்பில்லா மனமே ஆகும்.
  • ஒருவரின் உணர்ச்சிகள் தணிந்துவரும் சந்தர்ப்பம் பார்த்தே நல்ல உபதேசங்களை சொல்ல வேண்டும்.
  • விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காக அல்ல. அதுபோல உனக்குள் ஏற்றப்படும் நல்ல குணங்கள் உனக்கு நன்மை தருவதற்காக அல்ல. அது பிறருக்கு நன்மை தரவேண்டும்.
  • கடன் வாங்குவது என்பது காசநோயை போல. அது வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டத்தில் உன்னை இழுத்துக்கொண்டே கிடக்கச் செய்யும். பிரச்சனையை தீர்த்து வைக்காது.
  • கருணையானது பிழியப்படுவதன்று... மழைபோல் பொழிவதாகும். அது கொடுப்பவனையும் பெறுபவனையும் ஆசீர்வதிக்கும்.
  • குற்றமுள்ள நெஞ்சில் தேள்களே நிறைந்து இருக்கும்.
  • நன்மொழி கூறுதலும் ஒருவித நற்செயலே ஆயினும் சொற்கள் செயல்கள் ஆகா.
  • சோகம் தோன்றினால் வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட வேண்டும். அடங்கி கிடக்கும் சோகம் கோபமாக மாறி முறுகிக்கிடக்கும் இதயத்தை உடையச் செய்துவிடும்.
  • களைப்பு கல்லின்மீதும் குறட்டை விடும்.
  • நன்றியற்ற குழந்தையை பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட கொடுமையானது.
  • அவதூறானது வெட்டி சாய்க்கும் வாளினும் அதிக கூர்மையுடையதும், கொடிய நாகத்தினும் அதிக விஷத்தை உடையதுவும் ஆகும்.
  • நீ பனிகட்டிபோல குற்றமில்லாதிருந்தாலும், பனிபோல பரிசுத்தமாக இருந்தாலும் தூற்றுவார் தூற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
  • சிறு பொறியேயாயினும் துருத்தி கொண்டு ஊதினால் பெரும் நெருப்பாவது போல சிறிய தீமை செய்தவனேயாயினும் முகத்துதி பெறப்பெற அதிகக் கொடியவனாக உருவாகிவிடுகிறான்.

💙💙💙💚💚💚💙💙💙

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. அனைத்துமே அருமையான கருத்துகள். அதுவும் ஃபோட்டோவுடன் ஹைலைட் செய்திருக்கும் அப்பொன்மொழி ரொம்பப் பிடித்தது. ரொம்பவும் யதார்த்தம். சில பொட்டில் அறைவது போன்று உள்ளன

    கீதா

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.