திரிகோணாசனம் - யோகா - trikonasana - yoga.

Trikonasana - yoga.

          'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பொன் மொழிக்கு ஏற்ப நோயில்லா சுக வாழ்வு வாழ வேண்டுமென்றால் நமக்கு முதலில் தேவை பிணியில்லா ஆரோக்கியமான உடல்.

trikonasana step by step

திரிகோணாசனம்.

          உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது, அதில் உறுதியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டும்

          ஒரு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலிலுள்ள அத்தனை நாடிநரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலிலுள்ள அத்தனை நரம்பு மண்டலங்களும் சுறுசுறுப்பாக இயங்கினால் மட்டுமே அவ்வுடலில் நிரந்தரமாக ஆரோக்கியம் குடி கொள்ளும். அதற்கு தேவை பயிற்சி, மூச்சுப்பயிற்சியுடன் கூடிய யோகப்பயிற்சி.

          ஆம், சித்தர்கள் நமக்களித்த வற்றாத இரு ஜீவநதிகளே மூச்சு பயிற்சியும், யோகாசனப்பயிற்சியும்.

          மனித உடலும், உள்ளமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் பன்னெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் இந்த பயிற்சிகள்.

          இதில் யோகாசனப்பயிற்சியானது அற்பமாக இருக்கும் நம் உடலை சிற்பமாக செதுக்கி சீர்படுத்தும் திறன் படைத்தது.

          உடலை என்றும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும் ''திரிகோணாசனம்'' என்னும் பயிற்சியை பற்றி இங்கு பார்ப்போம்

          இந்த திரிகோணாசனம் உங்களை எப்போதும் இளமையாகவே வைத்துக்கொள்ளும் அற்புதமான ஆசனம். உங்கள் இடுப்பு சதையை கரைத்து உங்களை எப்போதும் ''ஸ்லிம்'' மாகவே வைத்துக்கொள்ளும். இதை எப்படி பயிற்சி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை.

          உடலை வளைக்காமல் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். பின் இரு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு விரித்து வைக்கவும். பின் இரு கைகளையும் தோளுக்கு நேராக பக்கவாட்டில் நீட்டவும். பின் இடதுகை பக்கம் பக்கவாட்டில் இடுப்பை வளைத்து  இடது கை விரல்களால் இடது பாதத்தின் அருகில் தரையை தொடவும். அதேவேளையில் உங்கள் வலது கை வளையாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். உங்கள் பார்வையும் வலதுகை விரல்களின் நுனியை பார்த்தபடி இருக்கவும்.

          இதே நிலையில் 10 முதல் 20 வினாடிகள் நிற்கவும். பின் நேராக நிமிர்ந்து வலது பக்கமும் இதேபோல் செய்யவும்.

trikonasana

          இப்பொழுது நீங்கள் ஒருதடவை இந்த ஆசனத்தை செய்து முடித்துள்ளீர்கள். சில விநாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் இடது மற்றும் வலது பக்கம் முன்போல் செய்யவும். இந்த ஆசனத்தை 5 அல்லது 6 தடவை அவசரப்படாமல் நிதானமாக பயிற்சி செய்யவும்.

பயன்கள்.

          இதை தொடர்ந்து பயிற்சி செய்து வர இடுப்புக்கு வலிமை தருகிறது. தொப்பை கரைகிறது. அடிவயிற்றிலுள்ள அனைத்து உள்ளுறுப்புகளும் பலம் பெறுகிறது. மேலும் வாயுக்கோளாறும் நீங்கும்.

          முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி முதலியன நீங்கும். முதுகெலும்பிற்கு நெகிழும் தன்மையை கொடுத்து இளமையை மீட்டுத்தரும். உடலும் மனமும் உற்சாகம் பெறும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்