கண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.

Russell's Viper.

          பொதுவாகவே பாம்பென்றால் எல்லோருக்குமே நடுக்கம்தான். அதிலும் விஷ பாம்பென்றால் கேட்கவே வேண்டாம். இந்தியாவில் காணப்படும் ஆபத்தான நான்கு பெரிய பாம்புகளில் "கண்ணாடி விரியன்" பாம்பும் ஒன்று. இந்த பதிவில் அதுபற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

கண்ணாடி விரியன்.

பெயர் :- கண்ணாடி விரியன்.

வேறு பெயர்கள் :- கழுதை விரியன்.

அறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii]

தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான்.

வரிசை :-  ஸ்குவா மாட்டா - Squamata.

குடும்பம் :- Viperidae.

துணைக்குடும்பம் :- Viperinae.

இனம் :- டாபோயா ரஸ்ஸெலி - Daboia russelii.

பேரினம்:- டாபோயா - Daboia.

பெயர்க்காரணம்.

          "கண்ணாடி வரையன்" என்பதே காலப்போக்கில் "கண்ணாடி விரியன்" என்று மருவி விட்டது எனலாம். (கண்ணாடி  - மூக்குக்கண்ணாடி போட்டது போன்ற. வரை - கோடு) இதன் உடலில் மூக்குக்கண்ணாடி போன்று வட்டவடிவ  கோடு தொடர்ச்சியாக உள்ளதால்  "கண்ணாடி வரையன்" என பெயர் வந்தது.

உணவு

          எலிகளும், தவளைகளும்தான் இவைகளின் பேவரைட் உணவுகள்.

வாழிடம்.

          வறண்ட நிலப்பகுதி, மணற்பாங்கான நிலப்பகுதி மற்றும் முட்புதர்கள்  நிறைந்த பகுதிகளிலும் இவைகள் வாழ்கின்றன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மனிதர்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தே இவைகள் வாழ்கின்றன.

இனப்பெருக்கம்.

          இவைகள் குட்டிகள் போட்டு தன் இனத்தை பெருக்குகின்றன. 

வகைகள்.

          கண்ணாடி விரியன் பாம்புகளில் பல வகைகள் உள்ளன என்றாலும் மிக முக்கியமான வகைகளாக இருவகைகளைக் குறிப்பிடலாம். அவையாவன.

  • Russell's viper. [கண்ணாடி விரியன் (அ ) கழுதை விரியன்] .
  • Saw-scaled viper. [சுருட்டை விரியன்].

          இந்த இரு வகைகளில் இங்கு இப்போது "கண்ணாடி விரியன்" பாம்பை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

Russell's Viper.

உடலமைப்பு.

          முக்கோணவடிவ தலை அமைப்பைக் கொண்டது. தலையின் மேற்பகுதியில் செதில்கள் போன்ற அமைப்பு சிறியதாகவும், அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.

 Russell's Viper

          உடல் பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. உடலில் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் நீள்வட்ட வடிவில் சங்கிலி போல் குறிகள் பெரிய அளவில் காணப்படுகின்றன.

snake for russell's viper

          உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை வடிவ குறியுடனும் காணப்படுகின்றன.

உணவு.

          எலிகள், தவளைகள் முதலிய சிறு உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன.

விஷத்தின் தன்மை.

          இது நச்சுத்தன்மை அதிகமுள்ள பாம்பு. இதன் விஷம் இரத்த சிவப்பணுக்களை கடுமையாக பாதிக்கும். இரத்த குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி குருதி உறைதலை தடுத்து மரணத்தையும் ஏற்படுத்துகிறது.

          மேலும் இப்பாம்பின் விஷத்தால் வயிறு மற்றும் உடலும் வீங்கும். இரத்த வாந்தியை உண்டுபண்ணுவதோடு சிறுநீரிலும் இரத்தம் கலந்து வெளியேறும். 

          அதுமட்டுமல்ல பற்களிலிருந்தும், மூக்கிலிருந்தும் கூட இரத்தக்கசிவு ஏற்படும். கொடிய விஷம் கொண்ட இப்பாம்பு தீண்டினால் 3 மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சையை தொடங்க வேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

குறிப்பு.

          சிலர் முதலுதவி என்கிற பெயரில் பாம்பு கடித்த இடத்தில் கத்தியால் கீறி விஷத்தை  வெளியேற்றுகிறேன் என்றும், மேலும் பாம்பு கடித்த இடத்தின் மேல்பகுதியில் கட்டு போட்டு விஷத்தை உடல் முழுவதும் பரவாமல் தடுக்கிறேன் என்றும் சில கிரியைகளை செய்கின்றனர்.

          இந்த செய்கைகள் மிகவும் தவறானவை ஆகும். ஏனெனில் கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் இரத்தத்தை நீர்த்துப் போக செய்யும் குணமுடையதாதலால் பாம்பு கடித்த இடத்தை கத்தியால் கீறுவதை தவிர்க்க வேண்டும்.

          கத்தியால் கீறுவதால் இரத்தம் உறையாமல் உடலிலுள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

          அதுபோல கட்டு போடுவதையும் தவிர்க்க வேண்டும். கட்டு போடுவதால் விஷம் வேறு எங்கும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தங்கி சம்பத்தப்பட்ட உறுப்பை முற்றிலுமாக சிதைத்து உடலிலிருந்தே அவ்வுறுப்பை அகற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும். எனவே கட்டு போடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

          பாம்பு கடிபட்டவரை பதற்றமடையாமல் தைரியமாக இருக்க செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே சிறப்பு.

          இன்னும் ஒரு விஷயம் இங்கு அவசியம் சொல்லவேண்டி உள்ளது. கண்ணாடி விரியன் பாம்புகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பல மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் தொலைவில் இருந்து பார்ப்பதற்கு "மலைப்பாம்பு" போலவே இருக்கும்.

Russell's Viper. snake

          உடனே நீங்களாகவே அது மலைப்பாம்புதானே.. விஷம் எதுவும் கிடையாது என்று முடிவு செய்துகொண்டு ஆர்வத்தால் தொட்டுப்பார்ப்பதோ அல்லது பாசத்தால் கட்டிப்பிடிப்பதோ செய்துவிடாதீர்கள். அப்புறம் உங்களை கட்டிப்பிடித்து ஊரார் அழ வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால் இந்தியாவில் அண்மையில் இப்படியான சில சம்பவங்கள் நடந்துள்ளன.

          "மலைப்பாம்பு குட்டி" என்று தவறாக நினைத்துக்கொண்டு பலபேர் முன்னிலையில் கண்ணாடி விரியனுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஒருவர் வாயிலேயே கொத்து வாங்கி கடின முயற்சிக்கு பின் உயிர்பிழைத்த சம்பவம் தமிழ்நாட்டில் அண்மையில்தான் நடந்தேறியது.

          இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் கண்ணாடி விரியனிடம் கடிபட்டு ஒருவர் சிகிச்சையின் மூலம் பிழைத்துக் கொண்டால்கூட நாளடைவில் சம்பந்தப்பட்டவருடைய சிறுநீரகம் முற்றிலும் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

          எனவே எதுவாக இருந்தாலும் முன் எச்சரிக்கை உணர்வோடு இருக்க பழகிக்கொள்ளுங்கள். நன்றி !!!.

          "கட்டுவிரியன் பாம்பு" பற்றி அறிய கிளிக்குங்க 👇


கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.