"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
விவசாய பழமொழிகள் - Vivasaya Palamoligal - Agricultural proverbs.

விவசாய பழமொழிகள் - Vivasaya Palamoligal - Agricultural proverbs.

Agricultural proverbs.

விவசாய பழமொழிகள்.

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற அரும்பெரும் அனுபவ பொக்கிஷங்களே பழமொழிகள் எனலாம். தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை, அதன் ஏற்ற இறக்கங்களை பழமொழிகளாக இளைய சமுதாயம் பயனுறும் வகையில் சொல்லி சென்றுள்ளனர்.

பொதுவாக பழமொழிகள் என்பது நாம் செய்யும் சில தவறுகளை சுட்டிகாட்டும்விதமாக இடித்துரைத்தல், நையாண்டி செய்தல், நகைச் சுவையுடன் எடுத்துரைத்தல், மற்றும் தத்துவங்கள் மூலம் உணர்த்துதல் ஆகியன சார்ந்தவையாகவே அமையும். 

இந்த பழமொழிகள் என்பது மனித சமுதாயத்தினூடே வாய்வழியாகவே காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த சொல்லாடல் எனலாம். 

பொதுவாகவே பிற துறை சார்ந்த பழமொழிகளைவிட வேளாண்மை சார்ந்த பலமொழிகளே அதிகம் வழக்கில் இருப்பதைக் காணலாம். இதிலிருந்தே விவசாயத்திற்கு நம் முன்னோர்கள் எத்துணை முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதனை எளிதாக உணர்ந்துகொள்ளமுடியும். அவ்வாறான சில விவசாயம் சார்ந்த பழமொழிகளை இன்றைய இலக்கியம் சார்ந்த பதிவாக இங்கு பார்ப்போம்.

வேளாண்மை பழமொழிகள்.

Velanmai Palamoligal.

 • விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
 • களை பிடுங்காத பயிர் காற்பயிர்.
 • பட்டம் தவறினால் நட்டம்.
 • இஞ்சி லாபம் மஞ்சளில்.
 • ஈர வெங்காயத்திற்கு இருபத்தி நாலு புரை.
 • மல்லிகை மணம் கொடுக்கும், பயிர் செய்தால் பணம் கொடுக்கும்.
 • அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது.
 • எள்ளுக்கு ஏழு உழவு. கொள்ளுக்கு ஒரு உழவு.
 • குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
 • உண்டால் உயிருக்கு உறுதி, உழுதால் பயிருக்கு உறுதி.
 • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன் ?
 • அடர விதைத்து சிதறப் பிடுங்கு.
 • எந்நிலத்தில் வித்திட்டாலும் காஞ்சிரங்காய் தெங்காகாது.
 • களர் கெட பிரண்டையை புதை.
 • அகல உழுகிறதை விட ஆழ உழு.
 • உள்ளூர்ல உதை வாங்காத... வெளியூர்ல விதை வாங்காத...

Agricultural_proverbs

 • உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பர்.
 • உழவும் தரிசும் ஓரிடத்தில், ஊமையும் செவிடும் ஒரு மடத்தில்.
 • பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.
 • இட்டதெல்லாம் பயிருமாகா, பெற்றதெல்லாம் பிள்ளையுமாகா .. 
 • ஆட்டுப்புழுக்கை அன்றைக்கே உரம், மாட்டுச்சாணம் மக்கினாதான் உரம்.
 • மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை.
 • புஞ்சைக்கு நாலு உழவு, நஞ்சைக்கு ஏழு உழவு.
 • நாலாறு கூடினால் பாலாறு.
 • நெல்லுக்கு பாய்கிற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாயும்.
 • தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்.
 • நன்னிலம் கொழுஞ்சி, நடு நிலம் கரந்தை. கடை நிலம் எருக்கு.. விளைவை வைத்து நிலத்தை அறி.
 • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
 • ஆடிப்பட்டம் தேடி விதை.
 • ஆடு பயிர் காட்டும், ஆவாரை கதிர் காட்டும்.
 • உழுகிற நாளில் ஊருக்கு போய்விட்டானாம், அறுக்கிற நாள் பார்த்து அருவாய் கொண்டு வந்தானாம்.
 • உழுகிற நாளில் ஊருக்கு போய்விட்டால், அறுக்கிற நாளில் ஆளே தேவைப்படாது.
 • அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அருவாள்.

 • மாடு மேய்க்காமல் கெட்டது.. பயிர் பார்க்காமல் கெட்டது.
 • இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலை அறுப்பான்.
 • மாரி இல்லையேல் காரியம் இல்லை.
 • மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. ஆனால் தை மழையோ நெய் மழை.
 • உன் வாழ்க்கையில் சீரை தேடின் ஏரை தேடு.
 • பண்ணிய பயிரிலே நீ செய்த புண்ணியம் தெரியும்.
 • பாவியின் பாவம் பதராய் விளையும்.
 • கொழுத்தவன் கொள்ளு விதை. இளைத்தவன் எள்ளு விதை.
 • வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
 • நண்டு ஓட நெல் நடு, நரி ஓட கரும்பு நடு, வண்டி ஓட வாழை நடு, தேர் ஓட தென்னை நடு.
 • கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி காணாது.
 • வெள்ளியில் விதை பிடி. சனியில் கதிர் பிடி.
 • தாய் முகம் காணாத பிள்ளையும், மழைமுகம் காணாத பயிரும் உருப்படாது.
 • வஞ்சகமில்லா மகராசனுக்கு வறுத்த காணமும் முளைக்குமாம்.
 • பட்டா உன் பேரில், சாகுபடி என் பேரில்.
 • உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
 • அழுதுகொண்டே இருந்தாலும் ஊழுதுகொண்டே இரு.

Agricultural proverbs

 • உடையவன் பாராத பயிர் உருப்படாது.
 • அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
 • இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது.
 • அணில் தாவாத ஆயிரம் தென்னை மரங்களை உடையோன் ஐந்து மன்னனுக்கு நிகரானவன் ஆவான்.
 • வளமை கொத்தமல்லி வறுக்கப் போயிருக்கு, சீமை கொத்தமல்லி சிமிட்ட வந்திருக்கு.
 • நிலத்துக்கு தகுந்த கனி விளையும், குலத்துக்கு தகுந்த குணம் விளையும்.
 • ஐப்பசி அடைமழை,கார்த்திகை கன மழை.
 • ஆனி அடைசாரல், ஆவணி முச்சாரல்.
 • ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் என்றுமே கெடுதிதான்.
 • தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
 • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்திலேதான் மடிய வேண்டும்.
 • கூலியை குறைக்காதே வேலையை கெடுக்காதே.

🔺🔻🔺🔻🔺🔻🔺🔻

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. அனைத்தும் பொக்கிசங்கள்... Bookmark செய்து கொண்டு விட்டேன்... நன்றி... தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் சிறப்பான பொன்மொழிகள். ஒரே இடத்தில் தொகுத்து தந்தது நன்று. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.