"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].

மண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].

மண்ணுளி பாம்பு.

Sand boa.

இன்று உலகிலேயே மிக அதிகமாக "சோசியல் மீடியா" வில் வலம் வருபவர், பரபரப்பாக பேசப்படுகிறவர் யார் என்றால் அது நம்ம தல "இருதலைமணி" யாகத்தான் இருக்க முடியுமுங்கோ. அந்த அளவுக்கு நம்ம "தல" வேர்ல்டு பூரா பேமஸ்!

அவனவன் ஒரேயொரு தலையை வச்சுக்கிட்டே தலை, கால் தெரியாம ஆட்டம் போடும்போது.... தலை எது? கால் எது?...ன்னே தெரியாம இன்னும் குழப்பத்துலேயே இரு தலைகளோடு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியா வாழ்ந்துகிட்டு இருக்கிற நம்ம "தல" பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? தெரிந்துகொள்ள தலைவரிடமே உங்களை அழைத்து செல்கிறோம் வாருங்கள்.

  இருதலை மணியன்.

  நம்ம தல வேறு யாரும் இல்லீங்க நம்ம ஊரு "மண்ணுளிப்பாம்பு"தானுங்க. இதுக்கு "இருதலை மணியன்" என்று ஒரு பட்டப்பெயரும் உண்டுங்க!

  இதற்கு "இருதலைமணியன்" என்று பெயர் இருப்பதால் இந்த பாம்பிற்கு இரண்டு தலைகள் உண்டு என்று நினைத்து விடாதீர்கள். இதற்கு இரு தலைகள் எல்லாம் கிடையாது. இதன் வால்பகுதி உருண்டு மொட்டையாக பார்ப்பதற்கு தலைபோல் பருமனாக காணப்படுவதால் இது ''இருதலை மணியன்'' என்று அழைக்கப்படுகிறது.

  ஆனால் பொதுவாக மார்க்கெட்டில் (மார்க்கெட் என்ற உடனேயே நம்ம ஊரு "கோயம்பேடு சந்தை"யாக இருக்குமோ என்று நினைத்துவிடாதீர்கள். இது அதற்கும் மேல "சர்வதேச கள்ளசந்தை") இது இருதலைகளைக் கொண்ட பாம்பு என்றும், வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் "வாஸ்து" பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கும் என்று சொல்லி லட்ச ரூபாய்க்கு விற்கிறார்கள்.

  இதையும் உண்மை என்று நம்பி லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிச்செல்ல ஊருக்குள்ள சில "விவரமான" (??? ) பெரிய மனுஷனுங்க இருக்கானுக என்பது வேறுகதை!

  பார்றா நம்ம "தலை"க்கு வந்துருக்குற மவுச!... பின்ன இருக்காதா. மார்க்கெட்டுல விலைபோகாம இருக்க நம்ம தலை என்ன "முத்துன கத்தரிக்காயா"?

  மேலும் நம்ம தலைக்கு மண்பாம்பு, சிவப்பு உழவன் பாம்பு, இருத்தலை பாம்பு, வாஸ்து பாம்பு என பலப்பல பெயர்கள் உண்டுங்கோ!

  இது பாம்பு இனத்தை சார்ந்தது அல்ல, மண்புழு இனத்தை சார்ந்தது என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது. எது எப்படியோ இது எப்போதும் மண்ணுக்குள்ளேயே தன் உடலை மறைத்துக் கொண்டு வாழ்வதால் மண் பாம்பு, மண்ணுளிப்பாம்பு என அழைக்கின்றனர். சரி இனி நம்ம "தல" ய பற்றி கொஞ்சம் விலாவாரியாக  பார்ப்போமா.

  sand boa

  Manuli pambu.

  பெயர் :- மண்ணுளிப்பாம்பு - Sand boa.

  வேறு பெயர்கள்:- மண்பாம்பு, சிவப்பு உழவன் பாம்பு, இருத்தலை பாம்பு, வாஸ்து பாம்பு.

  சிறப்பு பெயர் :- இருதலை மணியன்.

  விலங்கியல் பெயர் :- எரிக்ஸ் ஜோஹ்னி - Eryx johnii

  தாயகம் :- இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான், நேபாளம். 

  குடும்பம்:- Boidae.

  துணைக்குடும்பம் :- Erycinae.

  இனம்:- E.Johnii.

  பேரினம்:- Eryx (genus).

  வாழிடம்.

  இது வயல்வெளிகளிலும், மணற்பாங்கான நிலங்களிலும், காடுகளிலும் வாழ்கின்றன. இதன் கழிவுகள் வயல்களுக்கு நல்ல உரமாக பயன்படுவதால் இது விவசாயிகளின் நண்பன் என அழைகப்படுகிறது. அமெரிக்காவில் சில வீடுகளில் இப்பாம்புகள் செல்லப் பிராணியாகக்கூட வளர்க்கப்படுகின்றன.

  உடலமைப்பு.

  இந்த பாம்புகள் வெவ்வேறு உடல் நிறங்களை கொண்டுள்ளன. சில செம்பழுப்பு நிறத்திலும் சில மஞ்சள் கலந்த செம்பழுப்பு நிறத்திலும், சில சாம்பல் கலந்த கரும்பழுப்பு நிறத்திலும் சில கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன.

  இதன் உடல் தொடுவதற்கு வழுவழுப்பாக இருக்கும். இதன் உடல் உருளை வடிவமாகவும், 2 அடி முதல் அதிகப்படியாக 3 அடி வரை நீளம் கொண்டதாகவும் இருக்கும்.

  தலை கழுத்தைவிட சிறியதாக இருக்கும். மிகச்சிறிய கண்களைக் கொண்டது. உடல் பளபளப்பான மழுங்கிய செதில்களைக் கொண்டுள்ளது.

  manuli pambu

  இயல்பு.

  பயந்த சுபாவம், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத சாதுவான குணம். மொத்தத்துல நம்ம தலைவரு குணத்துல சொக்க தங்கமுங்க!

  உணவு.

  இரவில் இரை தேடும். எலிகள் மற்றும் இயற்கை கழிவுகளை உண்டு வாழும். இதனால் நீண்ட நாட்கள் உணவு எதுவும் சாப்பிடாமல் பட்டினி இருக்கவும் இவரால் முடியும்.

  இனப்பெருக்கம்.

  இது குட்டிப்போட்டு தன் இனத்தை பெருக்குகின்றன. ஒரு நேரத்தில் 5 முதல் 8 குட்டிகள் வரை போடும்.

  விஷத்தன்மை.

  விஷத்தன்மை அற்றது. இது யாரையும் கடித்ததாக தெரியவில்லை. மண் பாம்பு கடித்தால் தோல்வியாதி வரும் என்பது வெறும் கட்டுக்கதையே.

  இப்பாம்பு பல அரிய மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்கின்ற ஒரு தவறான நம்பிக்கையால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.

  அதனாலதான் என்னவோ கப்பல்களிலும், விமானங்களிலும் டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்த அனுபவம் நம்ம தலைக்கு நிறையவே இருக்குங்க.

  manuli pambu sarai pambu meeting

  மேலும் இது ''வாஸ்து பாம்பு'' என்று கூறி மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. எனவே இப்பாம்பு எண்ணிக்கையில் குறைந்து அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

  manuli pambu Sand boa

  எய்ட்ஸ் மற்றும் கேன்சர் நோய்களை குணப்படுத்துகிற ஆற்றல் இப்பாம்பிற்கு உண்டு என்கிற ஒரு தவறான புரிதலே இப்பாம்பை வேட்டையாட தூண்டுகிறது. சொல்லப்போனால் நோய்களை குணப்படுத்துகிற எந்த சக்தியும் இப்பாம்பிற்கு கிடையாது என்பதே உண்மை.

  மண்ணுளி பாம்பை பற்றி அறிந்து கொண்ட நீங்கள் இதற்கு முன்னால் எப்போதாவது "கொடி பாம்பு" பற்றியோ அல்லது "சாட்டை பாம்பு" பற்றியோ கேள்விப்பட்டதுண்டா ? இல்லையெனில் அறிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ உங்கள் சின்ன விரல்களால் மெல்ல தட்டுங்க.

  >> "பச்சைப்பாம்பு - Common Green Vine Snake."<<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  1 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.