"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சிற்றகத்தி - கருஞ்செம்பை - Sithagathi - Sesbania sesban.

சிற்றகத்தி - கருஞ்செம்பை - Sithagathi - Sesbania sesban.

Sithagathi.

"சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே" ..

1994ல் இளையராஜா இசையில் காற்றில் தவழ்ந்து வந்து நம் செவி மடல்களை வருடிய பாடல். இந்த பாடலை தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இதில் வரும் சித்தகத்தி பூக்களை பற்றி தெரிந்துவைத்துள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.


சிற்றகத்தி.

உண்மையில் பாடல்களின் இசையை போலவே சித்தகத்தி பூக்களின் இதழ்களும் மென்மையானவை. மென்மையானவை மட்டுமல்ல மருத்துவக்குணங்களும் கொண்டவை. இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்துகொள்வோம் வாருங்கள்.

பெயர் :- சிற்றகத்தி.

தாவரவியல் பெயர் :- செஸ்பேனியா செஸ்பன்.(Sesbania sesban).

வழங்கப்படும் பெயர்கள் :- சிற்றகத்திசித்தகத்திசெம்பை.

பயன்படும் பகுதிகள் :- இலை மற்றும் பூ.

சுவை :- கசப்பு, துவர்ப்பு.

குணம் :- வெப்பம்.

செய்கை :- வெப்பமுண்டாக்கும், புழுக்களை கொல்லும்.

வகைகள் :- இதில் கருப்பு, மஞ்சள்சிவப்பு என 3 வகைகள் உள்ளன.

 1. கருப்பு நிறத்தில் பூ பூப்பதை ''கருஞ்செம்பை'' எனவும்
 2. மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை ''மஞ்சள் செம்பை''  எனவும்,
 3. சிவப்பு நிறத்தில் பூ பூப்பதை ''செஞ்செம்பை''  எனவும் குறிப்பிடுகின்றனர்.

மரத்தின் தன்மை.

மென்மையான தண்டினையுடைய இது சிறு மரமாக அதேவேளையில் விரைவாக வளரும் தன்மையுடையது. ஆறு மாதங்களிலேயே மரமாகிவிடும். வயல்களுக்கு சிறந்த தழை உரமாகவும் இது பயன்படுகிறது.

காய்களின் தன்மை.

நீண்ட மெல்லிய தட்டையான காய்கள்.

இலையின் தன்மை.

மருத்துவ பயன் கொண்டது. கட்டி, வீக்கம் ஆகியவற்றை கரைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மூலிகைகளாக மட்டுமே பயன்படுத்துவதற்கு ஏற்றது. உணவாக பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல.

Cirrakatti manchalcempai yellow

பூக்களின் தன்மை.

சிற்றகத்தி பயிரிட்டு நான்கு மாதங்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும். இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. நாடி நடையை அதிகரிக்கவும், தாய்ப்பாலை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுப் பூச்சியை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Sithagathi

சித்தர் பாடல்.

விப்புருதிப் புண்ணாறும் வீறுகரப் பானும்போந்
தப்பாமன் மேகந் தணியுங்காண் - வெப்பார்
கபரோக மேகுங் கருஞ்செம்பை யொன்றுக்
கிபமா முலைமாதே யெண். 

கட்டியொடு வீக்கங் காமத்துள் நேரேற்றம்
ஓட்டிவரு வாதகபம் ஓட்டுவது தொட்டுவிடும்
அம்பையிலை வேலைவென்ற வங்கண்மடமதே
செம்பையிலை வேலையெனத் தேர்.

தலைக்குத்த லையஞ் சலதோடம் வாதம்
உலைப்பீ நிசமுமிந்த வூர்க்குள் நிலைக்கா
தருஞ்சண் பகநாசி யாயிழையே சுத்தக்
கருஞ்செம்பைப் பூவிருக்குங் கால்.

மருத்துவ பலன்கள்.

சிற்றகத்தி பூக்களை நல்லெண்ணெயில் போட்டு பதமுற காய்ச்சி தலைமுழுகி வர மூக்கில் நீர்வடிதல், சீதளம், தலைவலி, கழுத்து நரம்பு வலி, தலைபாரம் முதலியன குணமாகும்.

கருசெம்பை இலைச்சாறு 10 மில்லி தினந்தோறும் அருந்திவர சிறுநீர் கோளாறு நீங்கும்.

கருஞ்செம்பை எனப்படும் சிற்றகத்தி படை, சொறி மற்றும் பல்வேறு தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கீல்வாத வலி, வீக்கம், காய்ச்சல், புண் மற்றும் நீரழிவு நோய்க்கும் பயன்படுகிறது.

கருஞ்செம்பை இலையுடன் குப்பைமேனி இலை சம அளவு எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து படை,சொறி, சிரங்கு இவைகளுக்கு தடவி 2 மணி நேரம் ஊறவிட்டு அதன் பின் குளித்துவர குணமாகும். இவ்வாறு 5 நாட்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

இதன் இலையை அரைத்து ஆமணக்கு எண்ணெயில் வதக்கி கட்ட கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

cirrakatti karuncempai

10 கருஞ்செம்பை  பூக்களை 10 மில்லி நல்லெண்ணையில் போட்டு  பக்குவமாக காய்ச்சி வாரம் இருமுறை தலையில் தேய்த்து குளித்துவர தலைக்கனம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் குணமாகும்.

காலையில் வெறும் வயிற்றில் 15 மில்லி சிற்றகத்தி இலைச்சாற்றை தொடர்ந்து 5 நாட்கள் குடித்துவர மலம் கழியும். வாயுவினால் தடைப்பட்ட மாதவிடாய் வெளியேறும். நாட்பட்ட கரப்பான் குணமாகும்.

இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு தோல் வெடிப்பு மற்றும் அரிப்பு நோய்களுக்கு பயன்படுகிறது.

தேள்கடிக்கு இதன் வேரை பேஸ்ட் போல அரைத்து பயன்படுத்துகிறார்கள்.

 கருஞ்செம்பை தைலம்.

தேவையான மூலிகை பொருட்கள் :-

கருஞ்செம்பை இலை சாறு   -  அரை லிட்டர்.
வெள்ளுள்ளிச் சாறு                  -   அரை லிட்டர்.
நல்லெண்ணெய்                        -  1 லிட்டர்.

இதனுடன் மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி வகைக்கு 5 கிராம் சுத்தி செய்து பசும்பால் விட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அரைத்தெடுத்த நான்கு பொருள்களுடன் சாறு வகைகளையும் கலந்து நல்லெண்ணை சேர்த்து அடிகருகாமல் சிறு தீயில் பதமுற காய்ச்சி வடித்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.

தைலம் காய்க்கும்போது மூலிகை பொருட்கள் கருகுதல் கூடாது. கருகின வாசம் வருமாயின் தைலத்தின் குணம் முற்றிலும் கெடும். எனவே மிக குறைந்த நெருப்பிலேயே தைலம் காய்க்க வேண்டும்.

தீரும் நோய்கள்.

தலைபாரம், தலை நீரேற்றம், மண்டைக்குத்து, காதுமந்தம் ஆகியவை தீரும்.

கருஞ்செம்பை பூத்தைலம்.

தேவையான பொருட்கள் :-

கருஞ்செம்பை மலர்கள்               - 10.
கஸ்தூரி மஞ்சள் , சாம்பிராணி - சிறிதளவு.(சுத்தி செய்தது)
நல்லெண்ணெய்                              -  அரை லிட்டர்.

செய்முறை.

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கருஞ்செம்பை மலர்கள் மூன்றையும் நல்லெண்ணெயில் பதமுற காய்ச்சி இளஞ்சூட்டில் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்துவர வேண்டும். இவ்வாறு 4 நாட்களுக்கு ஒருமுறை குளித்துவர வேண்டும்.

தீரும் நோய்கள்.

தீராத தலைவலி தீரும். நீர்க்கோர்வை, பீனிசம், கபாலகுத்து, குடைச்சல், கழுத்துவலி, தலைபாரம், தலையில் நீரேற்றம், கண்நோய்கள் தீரும்.

சிற்றகத்தி பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் "வண்டுக்கொல்லி" என்று அழைக்கப்படும் "சீமை அகத்தி" பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டாமா?.. தெரிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை சுட்டுங்கோ..

>> சீமை அகத்தி - வண்டு கொல்லி - Cimai Akatti - Senna Alata. <<

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. நாங்கள் இந்த யென்னை தான் பயன் படுத்துகிறோம்.
  கண்டிப்பாக வேளை செய்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், மேலான கருத்துகளுக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. சித்தகத்தி பூவும் விதையும் கிடைக்குமிடம் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே! சித்தகத்தி விதைகளை சில ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அவர்களிடம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். சில நர்சரி கார்டன்களில் குறுஞ்செடிகளாக கிடைகின்றன. வாங்கி தோட்டங்களில் வளர்க்கலாம். ஆனால் பூக்கள் கிடைப்பது அரிதே!...

   தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.