"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
செங்காந்தள் - Cenkantal - Flame lily - Gloriosa superba.

செங்காந்தள் - Cenkantal - Flame lily - Gloriosa superba.

Cenkantal.

Gloriosa superba.

இந்தியாவின் தேசிய மலர் எது என்றால் நாம் உடனே "தாமரை" மலரைத்தான் குறிப்பிடுவோம். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த மலரையும் தேசிய மலராக அறிவிக்கவில்லை என்கிறது மத்திய அரசு.. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு மாநில மலர்கள் உள்ளன.

நம் தமிழகத்தின் மாநில மலர் எது தெரியுமா? கார்த்திகைப்பூ என்று அழைக்கப்படும் "செங்காந்தள் பூ". அதுமட்டுமல்ல ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகவும் இது உள்ளது. இத்துணை பெருமைவாய்ந்த இந்த செங்காந்தள் பூவைப்பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்!.

செங்காந்தள்.

Flame lily.

திணை :- தாவரம்.

பெயர் :- செங்காந்தள்.

ஆங்கில பெயர் :- குளோரியோசா லில்லி (Gloriosa lily), சுடர் லில்லி (Fire lily), Flame lily.

தாவரவியல் பெயர் :- Gloriosa superba - குளோரியோசா சுபர்பா.

தாயகம் :- தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா.

வாழிடம் :- அனைத்து இடங்களிலும் மற்றும் வனப்பகுதிகளிலும் இது பரவலாக காணப்படுகிறது.

பெயர்க்காரணம் :- செங் + காந்தி + இதழ் = செங்காந்தள்.

"காந்தி" என்றால் "நெருப்பின் அழகு பொருந்திய வடிவம்" என்று பொருள். செங்காந்தள் என்றால் சிவப்பான நெருப்பின் வடிவத்தை இதழ்களாகக் கொண்ட மலர் என்று பொருள்.

வேறுபெயர்கள் :- காந்தள், கார்த்திகைப்பூ, கார்த்திகைக் கிழங்கு, கண்வலிப்பூ, கண்நோய் பூ, கண்வலிக்கிழங்கு, கலப்பை கிழங்கு, வெண்தோன்றிக்கிழங்கு, அக்கினிசலம்.

இனம் :- பூக்கும் தாவரம் - Angiosperm.

பேரினம் :- காந்தள் - Gloriosa.

வரிசை :- Liliales.

குடும்பம் :- Colchicaceae - கொல்ச்சிகேசி.

வகைகள் :- இந்த செங்காந்தள் இனத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவைகளில் மிக முக்கியமான இரண்டு இனங்கள் "செங்காந்தள்" மற்றும் "வெண்காந்தள்". அந்தந்த இனங்களைப் பொறுத்து மலர்களின் தன்மையும் அதன் வண்ணங்களும் வேறுபடுகின்றன.

Venkantal_Cenkantal

வளரியல்பு :- நான்கு முதல் ஆறு மீட்டர் உயரம் வளரும் இந்த தாவரமானது பல கிளைகளுடன் படர்ந்து வளரும் தன்மையுடையது.

மேலும் இது ஒரு ஏறுகொடி வகையைச் சார்ந்த கிழங்குவகை தாவரம். கிழங்கு என்றால் நாம் உண்ணுவதற்கு தகுந்ததான கிழங்கு அல்ல. மாறாக விஷத்தை தன்னிடம் சேர்த்துவைத்துள்ள விஷக்கிழங்கு. எனவே இது உண்ணுவதற்கு பயன்படுவதில்லை.

இனப்பெருக்கம் :- கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

இலைகளின் அமைப்பு.

இதன் இலைகளுக்கு இலைக்காம்புகள் கிடையாது. சுற்றடுக்கில் அமைந்துள்ள இளம்பச்சை நிறம்கொண்ட இதன் இலைகள் சொரசொரப்புத்தன்மை உள்ளவை. இந்த இலைகள் 3 லிருந்து 6 அங்குல நீளத்திலும், 0.75 லிருந்து 1.75 அங்குல அகலத்திலும் உள்ளன.

இலைகள் அடிப்பக்கம் அகலமாகவும் நுனிப்பக்கம் செல்லச்செல்ல படிப்படியாக அகலம் குறைந்து ஈட்டி போன்ற அமைப்புடன் இருக்கும். இலையின் நுனிகள் கூராக சுருண்டு பிற தாவரங்களை பற்றி வளர்வதற்கு ஏற்ற விதத்தில் இருக்கின்றன.

செங்காந்தள் செடியின் தண்டுகள் பசுமையாக காணப்படும் அதேவேளையில் வலுவில்லாததும்கூட. எனவே கடுமையான காற்று முதலிய  சீற்றங்களிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள பிற செடிகளை பற்றிவளரும் தன்மையுடையது. அவ்வாறு பற்றிவளர்வதற்கு இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போன்ற அமைப்பை பெற்றிருக்கும். இவற்றின் உதவியால் அருகில் நிற்கும் மரம் செடி போன்றவைகளைப் பற்றிக்கொண்டு 10 முதல் 20 அடி உயரம்வரை வளர்ந்துவிடும்.

Gloriosa superba leaf

எனவே இவைகளை சாகுபடி செய்யும்போது இவைகள் பற்றி ஏறுவதற்கு வசதியாக மரக்கொம்புகளில் முதலில் 3 அடி உயரத்திலும் செடி வளர்ந்தபின் தரைமட்டத்திலிருந்து 6 அடி உயரத்திலும் பந்தல் அமைத்தல் அவசியம்.

இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. சருமநோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மலர்களின் அமைப்பு.

பூக்களின் அமைப்பானது அகல்விளக்கு போன்று ஆறு இதழ்களை கொண்ட பெரிய பூவினை கொண்டது. பூக்காம்புகள் 3 லிருந்து 6 அங்குலம் வரை நீளமிருக்கும். கவிழ்ந்த நிலையில் நிலம்பார்த்து கூம்பியிருக்கும் காந்தள் மொட்டுகள் விரியும்போது இதழ்கள் பின்புறமாக நேராக மேல்நோக்கியபடி விரிகின்றன.

Cenkantal

இதழ்களின் கீழ்புறம் கதிர் போன்ற 5 மகரந்த பைகள் காணப்படுகின்றன. அதில் ஒரு சூலகமும் உள்ளன. பூக்களின் இதழ்கள் வரிசையாக பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணம் கொண்டதாக இருக்கும். தீ கொழுந்து விட்டு எரிவது போல் தென்படுவதால் இப்பூவை ''அக்கினிசலம்'' என அழைக்கின்றனர்.

பூவிதழ்கள் 6 அங்குல நீளத்திலும், 1.75 அங்குல அகலத்திலும் இருக்கும்.

சூலகம் 3 அறைகளுடனும் அதிலிருந்து கிளம்பும் சூலக தண்டு 2 அங்குல நீளத்துடனும் முடிவில் 3 குறுகிய விரல்களுடனும் கூடிய சூல் முடிகளையும் கொண்டுள்ளன.

இதற்கு ''கண் நோய் பூ'' மற்றும் ''கண்வலி பூ''  என்ற பெயரும் உள்ளது. இதனை தொடர்ந்து உற்று நோக்கினால் கண்நோய் வருகிறதாம் அதனால் இப்பெயர். ஆனால் அதில் உண்மையில்லை. கண்நோய் பரவும் பருவ காலங்களில் இதுவும் பூப்பதால் பழியையும், பாவத்தையும் இது சுமக்க வேண்டியதாயிற்று.

பொதுவாக பூக்கள் இரண்டு விதமான நிறங்களில் அதாவது பாதிக்கும் கீழே மஞ்சள் நிறமாகவும் பாதிக்கும் மேலே சிவப்பு நிறமாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ஆனால் பூக்கள் மலர்ந்தது முதல் இதழ்கள் உதிர்ந்துபோகும் வரை இதே நிறத்தை அப்படியே கொண்டிருப்பதில்லை.

பூக்கள் மொட்டிலிருந்து மலராக உயிர்பெறும் காலக்கட்டத்திலிருந்து அவைகள் மூச்சை நிறுத்திக்கொள்ளும் காலம்வரை மூன்று நிலைகளில் அவைகள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்கின்றன.

Gloriosa superba flower

மகரந்தங்களும் சூலகங்களும் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்னால் இதழ்களின் பாதிக்கும் கீழான பகுதி பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும் மேல்பாதி இளஞ்சிவப்பு நிறத்திலும், மகரந்தங்களும் சூலகங்களும் முதிர்ச்சி அடைந்தவுடன் இதழ்களின் கீழ்பாகம் தனி மஞ்சள் நிறத்திலும் மேல்பாகம் சிவப்பு நிறத்திலும், மகரந்த சேர்க்கை முடிந்து பிஞ்சு பிடிக்க ஆரம்பித்து இனி பூக்களால் பயனில்லை என்னும்நிலை ஏற்படும்போது மஞ்சள் நிறம் முற்றிலுமாக மாறி மொத்த இதழ்களும் சிவப்புநிறமாக மாறியிருப்பதைக் காணலாம்.

பூக்கள் 7 நாட்கள்வரை வாடாமல் இருக்கும் தன்மையுடையது. எனவே இது அலங்கார பூக்கள் வரிசையிலும் இடம்பிடித்துள்ளன.

பூக்கள் மருத்துவ குணம் கொண்டவை. பூவிதழ்கள் வெண்குஷ்ட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

காய்களின் அமைப்பு.

காய்கள் பச்சை நிறத்தை கொண்டது. காய்கள் ஒவ்வொன்றும் மூன்று அறைகளை கொண்டுள்ளன.

Gloriosa-lily-fruit

விதைகள் நன்கு விளைச்சலானவுடன் காய்கள் பழுப்பு நிறத்தை அடைந்து காய்கள் வெடிக்கும் தன்மையை பெறுகின்றன. இதுவே அறுவடைக்கு ஏற்ற காலம். எனவே காலம் தாழ்த்தாது முற்றிய காய்களை கண்டறிந்து அறுவடை செய்வது அவசியம்.

ஒரு செடியில் 60 காய்களிலிருந்து அதிகப்படியாக 100 காய்கள் வரை மகசூலாக கிடைக்கும். ஒரு காயில் 60ல் இருந்து 80 விதைகள் வரை இருக்கும்.

விதைகளின் தன்மை.

காய்களின் உள்ளே மிளகு அளவுள்ள இளஞ்சிவப்பு விதைகள் அடுக்கடுக்காக உள்ளன. இந்த விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை. எனவே பூக்கள் அழகாக உள்ளதே என்று இதை வீட்டில் அழகுசெடியாக வளர்க்க முற்படவேண்டாம். ஏனெனில் குழந்தைகள் இதை அறியாமல் தவறுதலாக சாப்பிட முற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

இதன் விதைகளில் ''கோல்ச்சிசின்'' (COLCICHINE), ''சுபர்பின்'', ''கோல்சிகோசைடு'', ''தையோ  கோல்சிகோசைடு'' போன்ற அல்கலாய்டுகள் உள்ளன.

இதன் விதைகள் ''கவுட்'' என்னும் மூட்டு வீக்கம், வாதநோய், தொழுநோய், வெண்குஷ்டம் மற்றும் மூட்டு அழற்சி நோய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக விளங்குகிறது என்றாலும் இதிலுள்ள ''கோல்ச்சிசின்'' (COLCICHINE) என்னும் அல்கலாய்டுவானது அளவில் அதிகப்படின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இதனை தப்பித்தவறிக்கூட உணவாக பயன்படுத்திவிடாதீர்கள்.

அதுபோல, இதன் கிழங்குகளிலும் இந்த ''கோல்ச்சிசின்'' (COLCICHINE) அதிக அளவில் நிரம்பியுள்ளதால் கிழங்குகளையும் வாயில் வைத்து ருசிபார்த்து விடாதீர்கள். இந்த எச்சரிக்கையையும் மீறி ருசி பார்த்தீர்கள் என்றால் ஊரார் ஒன்றுகூடி சங்கு சத்தத்தோடு உங்களுக்கு பாலூற்றும்படி ஆகிவிடும். அந்த அளவிற்கு கொடிய விஷம் இது. ஜாக்கிரதை...

gloriosa superba seeds

இதன் விதைகள் நெடுநாட்கள் கெடாமல் இருக்கும் தன்மையுடையதாதலால் இது இங்கு பயிரிடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை அந்நிய செலவானி கிடைக்கப்பெறுகிறது.

இதன் விதைகள் இந்தியாவிலிருந்து இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு இதிலிருந்து நோய்தீர்க்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஏக்கருக்கு வருடத்திற்கு 200 முதல் அதிகபட்சமாக 300 கிலோ வரை விதைகள் கிடைக்கின்றன.

அறுவடை செய்த காய்களை சேகரித்து நான்கைந்து நாட்கள் நன்கு வெடித்து மலரும்படி காயவிட்டால் தோடுகள் தனியாகவும் விதைகள் தனியாகவும் எளிதாக பிரித்தெடுக்க முடியும். பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை 1 வாரம் வெயிலில் நன்கு காயவைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

எச்சரிக்கை :- இதன் விதைகள் மற்றும் கிழங்குகள் முறைப்படி பக்குவப்படுத்தப்பட்டு அதிலுள்ள நன்மை செய்யும் சத்துக்கள் மட்டும் விஞ்ஞான முறைப்படி பிரித்தெடுக்கப்பட்டே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் உடலுக்கு தீங்குதரும் விஷ சத்துக்களும் ஏராளமாக உள்ளதாதலால் விதைகள் மற்றும் கிழங்குகளை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டீர்கள் என்றால் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். இது சாப்பிடுவதற்கான பொருள் அல்ல..  எனவே இதன் காய்கள் மற்றும் விதைகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

அதேபோல இதன் கிழங்குகளும் கொடிய விஷமாகும். கிழங்கை சாப்பிட்டீர்கள் என்றால் சிலமணி நேரத்திற்குள்ளாகவே உங்களைச்சுற்றி "சங்கு" சத்தம் கேட்கும்படி செய்துவிடும். எனவேதான் கிராமப்புறங்களில் இந்த செடியை "பால்டாயில் செடி" என அழைக்கின்றனர்.

கிழங்குகளின் அமைப்பு.

இது கலப்பை வடிவில் இருப்பதால் கலப்பை கிழங்கு என அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதங்களில் கிழங்குகள் அறுவடை செய்யப்படுவதால் இதனை "கார்த்திகை கிழங்கு" என்றும் அழைக்கின்றனர். 

தரைமட்டத்திலிருந்து அரை அடி அல்லது முக்கால் அடி ஆழத்தில் கிழங்குகள் உள்ளன. கிழங்குகள் பொதுவாக இரு பிரிவுள்ளதாக காணப்படுகின்றன.

கிழங்குகள் 6 முதல்12 அங்குல நீளத்திலும் 1 முதல் 1.5 அங்குல குறுக்களவிலும் உள்ளன. இது அதிகப்படியாக 100 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

kanvali kilangu

இது மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள ''கோல்ச்சிசின்'' (COLCICHINE) மற்றும் ''கோல்சிகோசைடு' முதலிய அல்கலாய்டுகள் சிறந்த மருந்து மூலக்கூறுகள் ஆகும்.

இது மருந்து தன்மை உள்ள கிழங்கு என்றாலும் விஷத்தன்மையையும் கொண்ட கிழங்காகும். இதன் விஷத்தன்மையை உரிய முறையில் நீக்கிய பின்பே மருத்துவத்துறையில் பயன்படுத்துகிறார்கள்.

இது விஷமுள்ள கிழங்காகையால் இந்த கிழங்கை "மூலிகை சுத்தி" விதிகளின் படி சுத்தி செய்து விஷத்தின் வீரியத்தை குறைத்து அதன்பின்பே மருந்துகளில் உபயோகிக்கின்றனர்.

சுத்தி செய்யும் முறை.

கிழங்கை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் அதனை சுத்தி செய்வது எவ்வாறெனில் உலர்த்தப்பட்ட கிழங்கை கொண்டுவந்து பசுவின் கோசலத்தில் (பசுவின் மூத்திரம்) மூன்று நாட்கள் வரை ஊறப்போடவேண்டும். ஒவ்வொருநாளும் பழைய கோசலத்தை மாற்றி புதிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் கிழங்கை எடுத்து மெல்லிய வில்லைகளாக அரிந்து உப்பிட்ட மோரில் இரவுமுழுவதும் ஊறப்போட்டு பகலில் எடுத்து உலர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழுநாட்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும். இதனால் இதிலுள்ள விஷத்தின் வேகம் ஓரளவு குறையும்.

குறிப்பு :- கிழங்குகளை முறைப்படி சுத்தி செய்தாகிவிட்டது.. இதிலுள்ள விஷம் முற்றிலும் நீங்கியிருக்கும்.. எனவே, இதனை பச்சையாக சாப்பிடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் இதனை உட்கொண்டுவிடாதீர்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

ஏனெனில், சுத்தி முறையென்பது இதைக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்துக்கு பாதகமில்லாமல் ஓரளவிற்கு விஷத்தின் வேகத்தை குறைக்குமேயொழிய முழுமையாக விஷத்தை நீங்குவதில்லை.

எனவே சுத்திசெய்த பின்பும்கூட விஷத்தின் மூலக்கூறுகள் இருக்கத்தான் செய்யும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த கிழங்கு உண்பதற்கு ஏற்றதல்ல. சுத்தி செய்த கிழங்காக இருந்தாலும் சாப்பிட்ட சிலமணி நேரத்திற்குள்ளாக உயிரை பறிக்கும் தன்மையுடையது என்பதனை நினைவில்கொண்டு இதனிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும்.

இந்த கிழங்கினை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகளை (நாட்டுமருந்து) வெளிப்பூச்சுகளுக்காக மட்டுமே (தைலம் மற்றும் எண்ணெய்) பயன்படுத்துதல் வேண்டும்.

கிழங்குகளை உட்கொள்வதால்
ஏற்படும் தீமைகள்.

நஞ்சுத்தன்மைகொண்ட இக்கிழங்கை எந்த வகைகளிலும் சாப்பிடுதல் கூடாது. மீறி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். குறைந்த அளவில் சாப்பிட முடிகள் உதிர்த்து போகும், கூடவே தோல்கள் பாதிப்படையும் அபாயமும் உண்டு. 

இக்கிழங்கை சாப்பிட்ட சில மணிநேரத்திற்கு உள்ளாக வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், வாய் கூச்சம், தொண்டையில் எரிச்சல், உணர்வின்மை, குருதியுடன் கூடிய வயிற்றுப்போக்கு முதலிய அறிகுறிகள் ஏற்படும். உடலில் நீர்ச்சத்தும் குறையும்.

சிகிச்சை எடுக்க தாமதித்தால் தசைகள் செயலிழத்தல், ஆக்சிஜன் செயல்பாடு குறைதல், குறைந்த இரத்த அழுத்தம், இரத்தம் நீர்த்து போகுதல், சீறுநீரில் இரத்தக்கசிவு, வலிப்பு, கோமா என்னும் மயக்க நிலை, நரம்புகள் சேதமடைதல் முதலிய பாதிப்புகள் ஏற்படும்.

இவைகளுடன் பெண்களுக்கு நீடித்த இரத்தப்போக்கையும் ஏற்படுத்தும். உடலிலுள்ள உரோமங்கள் அனைத்தும் உதிர்ந்துபோகும் நிலையும் ஏற்படும். அளவு அதிகப்படின் தப்பாமல் மரணத்தையும் விளைவிக்கும். எனவே வீடுகளில் அழகுக்காக கூட இதனை வளர்க்க முற்படவேண்டாம். அது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல எலி, முயல், குரங்கு, ஆடு, மாடு என அனைத்து வகையான உயிரினங்களுக்கும் ஆபத்துதான் என்றாலும் காடுகளில் உள்ள  முள்ளம்பன்றிகள் இதனை விரும்பி சாப்பிடுகின்றனவாம். (பார்றா!!.. எங்க தலைக்கு தில்ல)!!.. கிழங்கில் உள்ள விஷங்களால் அவைகள் பாதிப்படைவதில்லையாம்... அட்ரா சக்க... அட்ரா சக்க..

கிழங்குகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அவைகள் உள்நாட்டில் விதைபொருளாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்.

இதன் இலை, பூ, விதை மற்றும் கிழங்குகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.

Cenkantal leaf

மூட்டு அழற்சி நோய்க்கு விதைகளிலிருந்தும், கிழங்குகளிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தொழுநோய்க்கான மருந்தும் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அல்சருக்கான மருந்தும் இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் வெளிப்பூச்சாகவே பயன்படுத்தப்படுகின்றன.

மூலிகை மருத்துவத்தில் இது தேள்கடி, வண்டுக்கடி முதலியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இக்கிழங்கானது தலைவலி, கழுத்துவலி, குஷ்டம், கரப்பான் மற்றும் தோல்வியாதிகள் முதலியவைகளை குணப்படுத்தும் திறன் வாய்ந்தது.

இந்த மூலிகையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தைலத்தால் எலி, பூரான், வண்டு கடித்த விஷங்கள் நீங்கும். மேலும் சொறி, சிரங்கு, படை, மேகநோய், வாதம், மூட்டுவலி, குஷ்டம், வெண்குஷ்டம், பாரிசவாயு, நரம்புவலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும். மேலும் தலையிலுள்ள பேன்களை ஒழிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

சாகுபடி.

இது தமிழ்நாட்டில் பரவலாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், தாராபுரம், கடலூர் முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது. ஆண்டொன்றிற்கு 600 முதல் 700 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதை விதைகள் மூலமாகவும் கிழங்குகள் மூலமாகவும் பயிரிடலாம் என்றாலும் பெரும்பாலும் கிழங்குகள் மூலமாகவே இது பயிரிடப்படுகிறது.

1 ஏக்கருக்கு 600 முதல் 700 கிலோ விதை கிழங்கு தேவைப்படலாம். கிழங்குகள் 1 கிலோ 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்வரை விற்பனையாகிறது. 

நில சீரமைப்பு :- இதற்கு செம்மண்ணே மிகவும் ஏற்றது. 1 ஹெக்டேருக்கு 10 டன் மக்கிய தொழு உரத்தை 50 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்துடன் நிலத்திலிட்டு நன்கு உழுது நிலத்தை வளப்படுத்த வேண்டும்.

நடவு முறை.

ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில்தான் முளைப்புத்திறன் சிறப்பாக இருக்கும் என்பதால் மேற்குறிப்பிட்ட 3 மாதங்களில் இவைகளை நடவு செய்ய வேண்டும்.

கிழங்குகளின் முளைக்கும் தன்மை ஆடி முதல் ஆவணி மாதங்களில் பெய்யும் பருவ மழை காலங்களில்தான் சிறப்பாக இருக்கின்றன. மற்ற காலங்களில் இதன் முளைப்புத்திறன் சிறப்பாக இருப்பதில்லை.

உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இதில் ஏன் கிழங்குகள் நடவு  செய்யப்படுகின்றன?. விதைகள் ஏன் விதைக்கப்படுவதில்லை?. என்பதுதான் அது.

அதற்கான காரணம் ரொம்ப சிம்பிள். இப்பயிரில் போதிய அளவில் கிழங்குகள் வைத்தபின்பே செடி வேகமாக வளர்ந்து பூத்து காய்க்க ஆரம்பிக்கும். விதைகள் போட்டு பயிர் செய்தோம் என்றால் கிழங்குகள் வைக்கவே பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும். இதனால் காலவிரயமே மிஞ்சும்.

விதைகள் விதைக்கும் பட்சத்தில் பலன்கொடுப்பதற்கு 3 வருடங்கள் ஆகலாம். ஆனால் கிழங்கு விதைப்பதால் 6 மாதங்களில் அறுவடைக்கு  தயாராகிவிடும்.

கிழங்குகளை விதைக்க மண்களை அகலமான அளவில் "பெட்" போல் உயரமாக அமைத்து அதில் விதைத்தல்வேண்டும்.

ஒரு பாத்திக்கும் இன்னொரு பாத்திக்குமான இடைவெளி 5 அடி இருக்கவேண்டும். இரண்டு பாத்திகளுக்கும் நடுவில் வடிகால்வசதி ஏற்படுத்த வேண்டும். பாத்திகளில் கிழங்குகளை விதைக்கும்போது ஒரு கிழங்கிற்கும் மற்றொரு கிழங்குக்குமான இடைவெளி 20 செ.மீ இருக்குபடி விதைக்கலாம்.

விதைக்காக தேர்ந்தெடுக்கப்படும் கிழங்கின் எடை சராசரியாக 50 கிராம் முதல் 60 கிராம் இருக்கும்படி தேர்ந்தெடுத்து நடவு செய்தல்வேண்டும். 50 கிராமுக்கு குறைவாக கிழங்கின் எடை இருக்கும் பட்சத்தில் மகசூல் அதிகம் கிடைப்பதில்லை.

கிழங்குகளை வெயில் வருவதற்கு முன்னதாகவே விதைத்துவிட வேண்டும். ஏனெனில் கிழங்குகளில் மிக சிறிய முளைக்கணுக்கள் இருக்கும். இவைகள் வெயிலின் வெப்பத்தினால் கருகிவிடும். அப்படி கருகிவிடும் பட்சத்தில் வேறு புதிய கணுக்கள்வர வாய்ப்பில்லையாதலால் கிழங்குகளின் முளைப்புத்திறன் அற்று முற்றிலுமாக அழுகிவிடும்.

எனவே, விதைக்கும்போதும் சரி விதைத்தவுடன் முதன் முதலாக நீர் பாய்ச்சும்போதும் சரி வெயில் தாக்கம் இல்லாத நேரத்தையே தேர்வு செய்ய வேண்டும்.

Gloriosa superba_Cenkantal

விதைத்த 1 வாரங்களில் கிழங்குகள் முளைவிட ஆரம்பிக்கும். ஒரு கிழங்கிலிருந்து 1 முதல் அதிகப்படியாக 6 கன்றுகள்வரை முளைக்கும். கன்றுகள் 3 வாரங்களில் ஓரளவு வளர்ச்சி பெற்றுவிடும். விதைத்த 30 - 60 - 90 நாட்களில் களையெடுக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக கிழங்குகளை நடவேண்டியதில்லை. ஒருமுறை விதைக்கும் கிழங்குகள் தொடர்ந்து அதிலிருந்து கன்றுகளை உருவாக்கி 5 வருடங்களுக்கு பலன் கொடுக்கும்.

கோடைகாலங்களில் கிழங்குகளிலிருந்து புதிதாக கன்றுகள் உற்பத்தியாவதில்லை. எனவே கோடைகாலங்களில் ஓய்வாக இருக்கும் கிழங்குகள் கோடைகாலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிய உடன் மீண்டும் கன்றுகளை உற்பத்தி செய்கின்றன.

இவ்வாறு ஒரு கிழங்கானது வருடத்திற்கு ஒருதடவையென தொடர்ந்து 5 முதல் 6 வருடங்கள் பலன்தருகின்றன. 6 வருடங்களுக்கு பின்  பலன்தருவதில்லை. ஏனெனில் கிழங்குகள் அளவில் சுருங்கிப்போகின்றன. எனவே அதனை அகற்றிவிட்டு புதிய கிழங்குகளை நடவு செய்தல் வேண்டும். இவ்வாறு 5 அல்லது 6 வருடங்களுக்கு ஒருமுறை கிழங்குகளை நடவுசெய்தால் போதுமானது.

நீர்ப்பாசனம்.

இதற்கு அதிக அளவு நீர் தேவைப்படுவதில்லை. சொட்டுநீர் பாசனமே போதுமானது.

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்சினால் போதுமானது.

மண் எப்போதும் சிறிது ஈரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தாவரங்களின் வேர்ப்பகுதிகளில் நீர் தேங்கிநிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேர்களில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் தண்டுகளில் பூஞ்சாண தொற்று ஏற்படலாம்.

மேலும், வேர் அழுகல், கிழங்கு அழுகல், வாடல் நோய் அதன்காரணமாக இலைப்புள்ளி நோய் முதலானவைகள் ஏற்படலாம். எனவே வடிகால் வசதி மிகமிக அவசியம். சுற்றுப்புற வெப்பநிலையும் 20⁰ C முதல் 33⁰ C வரையே இருக்கவேண்டும்.

உரமிடுதல்.

செடி வளர்ந்த பின்பு மக்கிய தொழு உரம், கடலை பிண்ணாக்கு, மண்புழு உரங்களுடன் இரசாயன உரங்களும் கலந்து கொடுக்க சிறப்பான மகசூலை பெறலாம்.

வளர்ந்த செடிகளுக்கு நுண்ணூட்ட சத்தும் மிக மிக அவசியம். நுண்ணூட்ட சத்துக்களை கொடுக்கும் பட்சத்தில் அதிகமான மகசூலையும் தரமான விதைகளையும் பெறமுடியும்.

சிங்க் - 0.5 %, போரான் - 0.5 % கலந்துள்ள கலவை மருந்துகளை நீரில் கலந்து தெளித்து வரலாம்.

நோய் பாதிப்பு.

இந்த தாவரத்தில் பூச்சி தாக்குதல் மிக குறைவாகவே இருக்கும். இதனை தாக்கும் நோய்கள் என்று பார்த்தால் வேர் அழுகல், கிழங்கு அழுகல், இலை அழுகல், இலைப்புள்ளி நோய் முதலியன.

நடுவதற்கு முன்னால் விதை கிழங்கு நேர்த்தி செய்ய மேற்குறித்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

மகசூல்

விதைத்த 50 முதல் 70 நாட்களில் பூ பூக்க ஆரம்பித்துவிடும். ஒரு செடி 2 மாதத்திலிருந்து 4 மாதம்வரை தொடர்ந்து பூக்கும். அதன் பின் அந்தச்செடி பட்டுப்போகலாம். அதன்பின் அதன் கன்றுகள் வளர்ந்து பலன்கொடுக்க ஆரம்பிக்கும். எனவே வருடாவருடம் இதில் மகசூல் பெறமுடியும். 

இத்தாவரத்தில் அதிக அளவில் மகசூல் கிடைக்கவேண்டுமெனில் அயல்மகரந்த சேர்க்கை நடைபெற வேண்டியது மிக மிக அவசியம். அயல்மகரந்த சேர்க்கைக்கு துணைபுரிபவை பட்டாம்பூச்சிகள் போன்ற பெரிய பூச்சி இனங்களே.

தற்காலங்களில் பட்டாம்பூச்சிகளின் வரத்து குறைவாக உள்ள இடங்களில் பணியாளர்கள்மூலம் அயல்மகரந்த சேர்க்கை ஏற்பட வழி செய்கிறார்கள் இவர்கள் பட்டாம்பூச்சிகள் செய்யும் வேலையை தங்கள் கைகளாலேயே செய்து அயல்மகரந்த சேர்க்கை ஏற்பட வழிசெய்கிறார்கள். "air pressure pump" மூலமாகவும் அயல்மகரந்த சேர்க்கை ஏற்படுத்தப்படுகிறது.

நடவு செய்து 180 நாட்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு செடியிலிருந்து சுமார் 100 கிராம் விதைகள் கிடைக்கின்றன.

ஒரு செடியில் அதிகப்படியாக 70 லிருந்து 100 காய்கள்வரை காய்க்கும். ஏக்கருக்கு 1 வருடத்திற்கு சுமார் 250 கிலோ விதை மகசூலாக பெறமுடியும். மிக சிறப்பான பராமரிப்பு இருந்தால் அதிகப்படியாக 500 கிலோ வரைக்கும் மகசூல் பெறமுடியும். 1 கிலோ விதை சுமார் 2000 முதல் அதிகப்படியாக 3,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Gloriosa-Seeds

விதை மட்டுமல்லாமல் ஒரு செடியிலிருந்து 1 கிலோ அளவில் கிழங்கும் கிடைக்குமாதலால் 1 ஏக்கரில் 400 முதல் 500 கிலோ கிராம் அளவில் கிழங்குகளையும் மகசூலாக பெறமுடியும். கிழங்குகளை புதிதாக தோட்டம் அமைப்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

அறுவடையானது மார்கழி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை நீடிக்கிறது. காய் லேசாக வெடித்தவுடன் அறுவடை செய்யலாம். அதன்பின் செடி காய்ந்துபோகும். காய்ந்த செடிகளை அப்புறப்படுத்திவிட்டு 3 மாதம் இடைவெளிவிட்டு ஆடிமாதம் தொடங்கியவுடன் அதே கிழங்கிலிருந்து மீண்டும் செடியை உற்பத்தி செய்யலாம்.

எனவே இத்துணை சிறப்பு பெற்ற செங்காந்தள் செடியானது விஷத்தன்மை வாய்ந்த தாவரமாகவும் இருப்பதால் கவனமாக பயிரிடுவதின்மூலம் சிறப்பான பலனைப்பெறலாம்.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்