"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பச்சைப்பாம்பு - Pachai Pambu - Common Green Vine Snake.

பச்சைப்பாம்பு - Pachai Pambu - Common Green Vine Snake.

 பச்சைப்பாம்பு.

பச்சைப்பாம்பை நீங்கள் அனைவருமே பார்த்திருக்கலாம். இதன் உடலமைப்பு நீண்ட கொடி அல்லது சாட்டை போல் உள்ளதால் இதனை "கொடி பாம்பு" மற்றும் "சாட்டை பாம்பு" என்னும் பிரிவில் வகைப்படுத்துகின்றனர் .

இந்த பிரிவில் இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று ''பச்சை பாம்பு'', மற்றொன்று ''கொம்பேறிமூக்கன்''.

நாம் இங்கு "கண்கொத்திப்பாம்பு" மற்றும் "பறவைப்பாம்பு" என்று அழைக்கப்படும்  "பச்சைப்பாம்பு" பற்றியே பார்க்க இருக்கின்றோம்.

  இது கண்களை குறி பார்த்து கொத்தும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருப்பதால் இதற்கு ''கண்கொத்திப்பாம்பு'' (Kan kothi pambu) என்று ஒரு செல்லப்பெயரும் உண்டு. இதில் சிற்சில மாற்றங்களுடன் பல சிற்றினங்கள் உள்ளன.

  Common Green Vine Snake.

  Pachai Pambu.

  பெயர் :- பச்சைப்பாம்பு.

  வேறுபெயர்கள் :- கண்கொத்திப்பாம்பு, பறவைப்பாம்பு.

  அறிவியல் பெயர் :- Ahaetulla nasutra.

  திணை :- விலங்கு. (Animal).

  தொகுதி :- முதுகுநாணி. (Chordate).

  வகுப்பு :- ஊர்வன. (reptile).

  வரிசை :- செதிலுடைய ஊர்வன. (scaled reptiles).

  துணை வரிசை :- பாம்பு.

  குடும்பம் :- Colubridae.

  துணைகுடும்பம் :- Colubrinae.

  பேரினம் :- அஹேடுல்லா - Ahaetulla. 

  இனம் :- A . nasuta.

  தாயகம் :- இந்தியா (India), இலங்கை (Sri Lanka), பர்மா (Myanmar & Burma), தாய்லாந்து (Thailand), வங்கதேசம் (Bangladesh), வியட்நாம் (Vietnam), கம்போடியா (Cambodia).

  வாழிடம் :- இவைகள் பெரும்பாலும் மரக்கிளைகளில் வாழ்கின்றன.


  Common Green Vine Snake

  உணவுமுறை.

  ஓணான், பல்லி, எலி, சிறிய ரக பறவைகள், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள் இவைகளை உட்கொள்கின்றன. இவைகள் பகலில் உணவை வேட்டையாடுகின்றன. இரவில் ஓய்வு எடுக்கின்றன.

  உடலமைப்பு.

  இது 5 அடி வரை வளரும். கொடி போன்ற சிறிய உடலைக்கொண்ட இப்பாம்பு வாழும் இடத்திற்கு தக்கவாறு இளம்பச்சை, கரும்பச்சை, சாம்பல், பழுப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்டுள்ளன.

  இனப்பெருக்கம்.

  குட்டிப்போட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. 10 முதல் 18 குட்டிகள்வரை போடும். ஆண் பாம்புடன் இணை சேர்ந்து கருவுருகின்றன. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஆண்துணை இல்லாமல்கூட சுயமாக கருத்தரிக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

  பாம்பினங்களில் "குருட்டு பாம்பு - blind snake" என்று ஒன்று இருக்கிறது. இதில் ஆண் பாம்பு கிடையாது. ஒன்லி பெண் இனம் மட்டும்தான். எனவே இது ஆண்துணை இல்லாமலே தனக்குத்தானே இனப்பெருக்கம் செய்கிறது.

  இந்த குருட்டு பாம்பு மட்டுமல்ல உலகில் இன்னும் சில உயிரினங்களும்  இதுபோல் நமக்குநாமே திட்டத்தில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இதிலிருந்து உலகில் ஆண் இனம் இல்லாமலும் உயிரினங்கள் பல்கி பெருக முடியும் என்பது தெளிவாகிறது.

  Common Green Vine Snake

  விஷத்தன்மை.

  பச்சைப்பாம்புகளில் பலவகையான இனங்கள் உள்ளன. பொதுவாக பச்சைப்பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை என்று கூறப்பட்டாலும் இதன் கடைவாயில் விஷப்பற்கள் உள்ளன. இதில் உற்பத்தியாகும் விஷம் வீரியம் குறைந்த விஷம். இந்த விஷத்தால்  மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை  விளைவிக்கமுடியாது. ஆனால் பாம்பிற்கான இரையை பிடிக்கவும் பூச்சிகளை கொல்லவும் இது பயன்படுத்துகிறது.

  இது தீண்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை. சிறிதளவு வீக்கமும், வலியும் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்தில்லை என்பதால் சிகிச்சை தேவையில்லை என்று சும்மா இருந்துவிடுதல் கூடாது. இது கடித்த காயத்தில் ''பாக்கடீரியா தொற்று'' (bacterial infections) ஏற்பட்டு நோயை உண்டு பண்ணும். எனவே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  இயல்பு.

  இது பச்சை நிறமான தாவரங்கள், புல், பூண்டு, புதர்களில் மறைந்து வாழ்வதால் பரிணாம வளர்ச்சியின் தாக்கத்தால் இதன் உடல் பச்சை நிறமாக மாறுதலடைந்து உள்ளது.

  பச்சை நிறமான தாவரங்களில் மறைந்து வாழ்வதால் எதிரிகளின் கண்களுக்கு இவை எளிதில் புலப்படுவதில்லை. தன்னுடைய இரையை சுலபமாக எதிர்கொள்வதற்கும் இது நல்ல வாய்ப்பாக அமைகிறது.

  Pachai Pambu - Common Green Vine Snake.

  இவைகள் எதிரிகளை எதிர்கொள்ள நேரிட்டால் தன் உடலை உப்பலாக்கி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான செதில்களை வெளிக்காட்டும்.

  அப்போது பச்சைப்பாம்பு  பார்க்க கருப்பு, வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். இதை பார்க்கும் எதிரிகள் இது ஏதோ விஷப்பாம்பு என்று பயந்து ஓடிவிடும் என்று இதற்கு ஒரு நினைப்பு. நம்ம ''ஸ்னேக் பாபு'' வுக்கு என்ன ஒரு புத்திசாலித்தனம்.

  நம்பிக்கை.

  இது கண்களை குறிபார்த்து கொத்தும் என்று ஒரு நம்பிக்கை மனிதர்களிடையே உண்டு. ஆனால் இதுவரையில் இது யாருடைய கண்ணையும் கொத்தியதாக தெரியவில்லை.

  பச்சைப்பாம்பை கைகளில் பிடித்து உருவினால் நாம் சமைக்கும் சமையலின் சுவை தூக்கலாக இருக்கும் என்பதும் வேடிக்கை நிறைந்த கட்டுக்கதையே.

  இந்த பச்சைப்பாம்புபோலவே நம்மிடையே வலம்வருவது "சாரைப்பாம்பு". இன்னும் சொல்லப்போனால் பச்சைப்பாம்பின் நடமாட்டத்தைவிட இதன் போக்குவரத்தே அதிகமாக இருக்கும். எனவே இதைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்தானே!!!

  சாரைப்பாம்பைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்-ஐ அவசியம் கிளிக் பண்ணுங்கோ...

  >> சாரைப் பாம்பு - Sarai Pambu - rat snake. <<

  💢💢💢💢

  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  18 கருத்துகள்

  1. குருட்டுப்பாம்பு வகையறாதான் நமக்கு நாமே திட்டத்தை திமுகவுக்கு கைமாற்றி இருக்குமோ...

   படங்களை தெளிவாக தேர்வு செய்கிறீர்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக நண்பரே !!! மிக சரியாகவே கணித்துள்ளீர்கள் .... அது "குருட்டு" பாம்பு என்பதால் நீங்கள் சொல்லும் கட்சிக்கும் அதற்கும் எதாவது தொடர்பு இருக்கலாம் .....

    நீக்கு
  2. நாங்கள் விஜயவாடாவில் இருந்தபோது ஒரு ரப்பர் பாம்பு வாங்கினோம் அதை எருமை மாட்டின் முன் காண்பித்தால் எருமை மாடு தலை தெறிக்க ஓடும் பாம்புகளைக் கண்டால் உடனே கொன்று விடுவேன் என்னால் மோட்சம் அடைந்த பாம்புகள் ஏராளம்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாம்புக்கு மோட்சமா .... ஆனால் பாம்பை கொன்றால் "நாக தோஷம்" என்கிறார்களே ... எதற்கும் அரை லிட்டர் பசும்பால் வாங்கி வந்து பாம்பு புற்றுக்குள் விடவும் ... தோஷம் ஸ்வாஹா !!! ...

    நீக்கு
  3. விளக்கங்களோடு நடப்பு கதைகளையும் சொன்னது அருமை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி !!!

    நீக்கு
  4. நெய்வேலி நகரில் இருந்த வரை நிறைய பாம்புகள் கண்டது உண்டு. வீட்டுக்குள் கூட சில முறை வந்தது உண்டு. பச்சை பாம்பு பற்றிய தகவல்கள் நன்று.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக நண்பரே !! மழைக்காலங்களில் எங்கள் வீட்டிற்குள்ளும் அடிக்கடி பாம்புகள் வருவதுண்டு ... கண்ணில்பட்ட சிலவினாடிகளில் அதற்கு மரணம் பரிசாக அளிக்கப்படும். இதில் வேதனை என்னவென்றால் ஒருசில பாம்புகளில் விஷம் உள்ளது என்பதற்காக விஷம் இல்லாத அப்பாவி பாம்புகளை கூட பாரபட்சம் பார்க்காமல் கொல்கிறோம். ... உண்மையில் மனிதர்கள் ரொம்ப மோசம்.

    நீக்கு
  5. பச்சை பாம்பு பற்றிய தகவல்கள் அருமை! குருட்டு பாம்பு போல அமீபா கூட தன்னைத்தானே துண்டித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது.
   என்னதான் பச்சை பாம்பு தீண்டுவதால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் பாம்பு என்றால் படையும் நடுங்கும் அல்லவா?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக .... நண்பரே !!! குருட்டு பாம்பிற்கு சுத்தமாக கண் தெரியாது. எனவே அதற்கு ஜோடியை கண்டுபிடிப்பது மகா கஷ்டம் ... எனவே பரிணாம வளர்ச்சியும், இயற்கையும் இணைந்து அதற்கு இப்படியொரு வசதியை செய்து கொடுத்துள்ளது. ..... பாம்பு என்றால் படை நடுங்குகிறதோ இல்லையோ இப்போதெல்லாம் மனிதர்கள் என்றால் பாம்புகள்தான் அதிகம் நடுங்குகிறதாம் ... ஏனென்றால் பாம்பினால் கடிபட்டால் மனிதர்கள் பலர் பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு .. ஆனால் ... மனிதனால் அடிபட்டால் பாம்பினால் பிழைத்துக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை ....

    நீக்கு
  6. நல்ல தகவல்கள். எங்கள் இருவரின் ஊரிலுமே இது உண்டு. நிறைய பார்த்ததுண்டு. சில உயிரினங்கள் தங்கள் தாங்களே இனப்பெருக்கம் செய்வது பற்றியும் வாசித்ததுண்டு.

   நிறைய தெரிந்து கொண்டோம்.

   துளசிதரன், கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக நண்பர்களே ... தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி... சகோதரர் துளசிதரன் அவர்களுக்கும், சகோதரி கீதா அவர்களுக்கும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.!!!

    நீக்கு
  7. தகவல், பேச்சுவழக்கு எனச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக ! ... தங்களின் வருகைக்கும் , பாராட்டுதல்களுக்கும் நன்றி நண்பரே !!!.

    நீக்கு
  8. அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள். நன்றி!!!

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.