வள்ளல் கீரை - Vallal Keerai - Water Spinach.

வள்ளல் கீரை.


வள்ளல் கீரை, தண்ணிக்கீரை என்று பலபெயர்களிலும் அழைக்கப்படும் இது நீர்நிலைகளில் நீளமான பல கிளைகளுடன் கொடிபோல் நீண்டு பரந்து வளரும் தன்மையுடையது.இது நீரில் மிதந்தபடி புதர்போல் காணப்படும்.

சில இடங்களில் நெல்வயல்களில் களைகள்போல் படர்ந்திருப்பதைக்  காணலாம். தற்காலத்தில் இது வீட்டுதோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.


  இதன் தண்டு மென்மையானது. உருளைவடிவில் நடுவில் துளையுடன் குழல்போல் காணப்படும். இதன் தண்டினை ஒடித்தால் வெள்ளைநிற பால்போன்ற திரவம் மிகக்குறைந்த அளவில் கசிவதைக் காணலாம். 

  தண்டின் ஒவ்வொரு கணுக்களிருந்தும் இலை, பூக்கள், வேர்கள், தளிர்கள் உருவாகின்றன.

  மிக வேகமாக வளரக்கூடியது. அதிகப்படியாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 அங்குலம்கூட வளரும்.

  பூக்கள் நீலம் கலந்த வெள்ளை  நிறத்திலும் உட்பக்கம் ஊதா நிறத்திலும் மிக அழகாக காணப்படுகிறது. தண்டிலிருந்து இலைகள் கூட்டிலையாக இல்லாமல் ஒற்றை இலைகளாகவே உள்ளன. இலைகள் வெற்றிலைப்போல் ஆனால் ஒடுங்கிய ஈட்டி வடிவில் மென்மையான அமைப்புடன் இருக்கும்.

  இந்த கீரை முதன்முதலில் சீன மக்களாலேயே உணவாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறியமுடிகிறது. உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக பிற உணவுகளுடன் இதனை சேர்த்து வந்தனர். அவர்களை அடுத்தே பிற நாட்டவரும் இதனை உணவாக பயன்படுத்தத் தொடங்கினர். இலங்கையில் இது "கங்குன் கீரை" என அழைக்கப்படுகிறது.

  இனி, இதிலுள்ள சத்துக்களைப்பற்றியும், பயன்களைப்பற்றியும் விரிவாக பார்ப்போம்.

  வள்ளல் கீரை & வெள்ளக்கீரை.

  பெயர் :- வள்ளல் கீரை.

  வேறு பெயர்கள் :-

  • வள்ளல் கீரை
  • வள்ளக் கீரை
  • வெள்ளக்கீரை
  • வெள்ளைக்கீரை
  • தண்ணிக்கீரை
  • மிதவைக்கீரை
  • நீர்த்தாளி கீரை
  • கங்குன்கீரை
  • வல்லை, நாளிதம்
  • வழிபர்னி
  • ஞாலி.

  ஆங்கில பெயர் :- Water spinach, river spinach, water morning glory, water convolvulus.

  தாவரவியல் பெயர் :- Ipomoea aquatica.

  குடும்பம் :- Convolvulaceae

  பேரினம் :- Ipomoea.

  இனம் :- I . aquatica.

  வரிசை :- Solanales.

  வகை :- கொடிவகை பூக்கும் தாவரம். இருவித்திலைத்தாவரம். கீரையாக பயன்படுத்தப்படுகிறது.

  தாயகம்.

  இதன் தாயகம் ஆப்பிரிக்கா என்றும் தென்கிழக்கு ஆசியா என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் சீனா மற்றும் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத கருத்தும் நிலவுகிறது.

  தன்மை.

  வெண்மை கலந்த ஊதாநிற பூக்களைக் கொண்டுள்ளது. இத்தாவரத்தின்  தண்டுகள் குழாய் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. காய்கள் கோள வடிவில் இருக்கும். காய்கள் உள்ளே சாம்பல்நிற விதைகளை கொண்டுள்ளன.

  water spinach flower

  இனப்பெருக்கம்.

  விதைகள்மூலம் இனப்பெருக்கம் நடக்கின்றன. விதைகள் இல்லாமல் வேர் உள்ள கிளைகளை ஒடித்துவைத்தால்கூட கணுவிலிருந்து புதியவேர்களை உற்பத்தி செய்து புதிய தாவரமாக வளர்கிறது.

  வாழிடம்.

  மிக அதிகளவு நீர்ப்பாங்கான நிலத்திலும் ஏரி, குளம், குட்டை முதலிய நீர்நிலைகளின்மேல் கொடிபோல் படர்ந்து கிளைவிட்டு வளர்வதை காணலாம். இது ஒரு வெப்ப மண்டல தாவரம்.

  பயிராகும் நாடுகள்.

  பலநாடுகளில் இதனை ஒரு விவசாய பயிராகவே விதைகள் மூலம்  பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். இது இந்தியா, சீனா, இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, பர்மா, ஆஸ்திரேலியா, கம்போடியா, ஜப்பான், தைவான், மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.

  பயன்பாடு.

  மூலிகை வடிவில் மருந்தாகவும், கீரை வடிவில் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீனாவிலும் தைவானிலும் கிராமப்புறங்களில்மிக முக்கிய உணவாக இது பயன்படுத்தப்பட்டுவருகிறது. கால்நடைகளுக்கும் இது பசுமை தீவனமாக கொடுக்கப்படுகிறது. மேலும் வளர்ப்பு மீன்கள், கோழிகள், வாத்துகளுக்கும்கூட அரைக்கப்பட்டு தீவனமாக வழங்கப்படுகிறது.

  சத்துக்கள்.

  [100 கிராம் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரம்].

  • கலோரி - 79 KJ (19 kcal).
  • கொழுப்பு [Fats] - 0.2 g.
  • புரதம் [Protein] - 2.6 g.
  • மாவுச்சத்து [Carbohydrate] - 3.14 g.
  • நார் சத்து [Fiber] - 2.1 g.
  • இரும்பு [Iron] - 1.67mg.
  • துத்தநாகம் [zinc] - 0.18mg.
  • வைட்டமின் A [Vitamin A] - 315 [micrograms].
  • தையமின்(B1) [Thiamine] - 0.03 mg.
  • ரிபோஃபிளேவின் (B2) [Riboflavin] - 0.1mg.
  • நியாசின் (B3) [Niacin] - 0.9mg.
  • Pantothenic acid (B5) - 0.141mg.
  • வைட்டமின் B6 - 0.096mg.
  • வைட்டமின் (B9) - 57.
  • வைட்டமின் C [Vitamin C] - 55mg.
  • சுண்ணாம்பு [Calcium] - 77mg.
  • சோடியம் [Sodium] - 113mg.
  • பாஸ்பரஸ் [Phosphorus] - 39mg.
  • மக்னீசியம் [Magnesium] - 71mg.
  • மாங்கனீஸ் [Manganese] - 0.16mg.
  • பொட்டாசியம் [Potassium] - 312mg.

  மற்றும் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

  பயன்கள்.

  இதை முறையாக உண்டுவர இரத்தத்தை சுத்திகரிப்பதோடு இரத்த சிவப்பணுக்களையும் பெருக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்களையும் பாதுகாக்கும்.

  நோயெதிர்ப்பு சக்தியை தருவதோடு ஆண்மையையும் அதிகரிக்கும். குடற்புண் அகலும். மலச்சிக்கல் தீரும். எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுவதோடு தோல்களையும் மெருகூட்டுகிறது.

  குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை சாப்பிட்டுவர தாய்ப்பாலை பெருக்கும். இதை கருத்தில் கொண்டே "வள்ளல் தாய்போல் பிள்ளையை வளர்க்கும்" என்னும் பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. மேலும் இது நரம்புத்தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் தன்மை வாய்ந்தது.

  water spinach food

  குறிப்பு.

  வழக்கமாக பலர் ஒரு உணவுப்பொருள்களிலுள்ள நன்மைகளை மட்டுமே அனைவருக்கும் தெரியும்படி தண்டோரா அடித்து சொல்வார்களேயொழிய அந்த உணவுப்பொருள்களால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகளைப் பற்றி யாரும் வாய்  திறப்பதே கிடையாது. இக்கீரையின் நன்மைகளை பகிர்ந்து கொண்ட நாம் இதிலுள்ள ஒருசில ஆபத்துகளையும் பகிர்ந்து கொண்டால்தான் சிறப்பாக இருக்கும் என கருதுகிறோம்.

  அந்த வகையில் இந்த வல்லக் கீரையின் உள்ளே ஒளிந்திருக்கும் ஆபத்தையும் இங்கு பார்ப்போம்.

  இந்த கீரை நீர்நிலைகளில் மிதந்தபடி வளர்வதால் ஒருசில ஆபத்துகளும் அதில் ஒளிந்துள்ளன. அது என்ன ஆபத்து எனில், இக்கீரையின் தண்டுகள் குழாய் போன்ற வடிவமுள்ளவை என்பதனை பார்த்தோமல்லவா அதனுள் சில நேரங்களில்  நீர்நிலையில் வாழ்கின்ற ஒருவிதமான மிக சிறிய நூல்போன்ற வடிவமுடைய அட்டை என்னும் உயிரினம் உள்நுழைந்து வாழ்க்கை நடத்துவதுண்டு.

  சாதாரண புழு, பூச்சியாக இருந்தால்கூட பரவாயில்லை வேக வைக்கும்போது இறந்துபோவதோடு அதிலுள்ள புரோட்டீனும் நமக்கு எக்ஸ்ராவாக கிடைக்கிறதே என சிறிது ஆறுதலடையலாம். ஆனால் இதில் குடியிருப்பது இரத்தத்தை உறிஞ்சி அதன்மூலம் உயிரை குடிக்கும் அட்டைப்பூச்சி. எனவே சமைக்கும்போது தண்டினை தவிர்த்து விடலாம் அல்லது புழு பூச்சிகள் மற்றும் அட்டைகள் இருக்கிறதா என்று நன்கு ஆராய்ந்து அதன் பின் பயன்படுத்தவும். 

  ஏனெனில் இந்த வகை அட்டைகளின் நிறமோ பச்சை, அதன் வடிவமோ மிகச்சிறியதாக நூல்போல்தான் இருக்குமாம். எனவே எளிதில் கண்டறிவது கடினம். 

  அதுமட்டுமல்ல சாதாரண வெப்பநிலையில் இவைகள் இறப்பதில்லை. ஆதலால் அரை அவியலாக அவிக்கப்படும் உணவின்மூலம் உடலுக்குள் சென்றுவிட்டால் அவ்வளவுதான் அங்கு ஒரு புதுமனை புகுவிழாவையே நடத்திவிடும். அதன்பின் உங்கள் குடல்தான் அது வாசம்செய்யும் வசந்தமாளிகை.

  புது வீட்டில் பால்காய்த்து கிரகப்பிரவேசம் நடத்துகிறதோ இல்லையோ விரைவிலேயே உங்களுக்கு பாலூற்றும்படி செய்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இந்த கீரையை கவனமாக கையாளவும். அப்படி கவனமுடன் கையாளத்தெரியவில்லையெனில் தயவு செய்து இதனை உணவாகப் பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

  அல்லது, இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் சத்து நிறைந்த கீரை என்பதாலும், உலகின் பலதரப்பட்ட மக்களால் விருப்ப உணவாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாலும் இதன் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பற்ற குளம், குட்டை மற்றும் கழிவு நீரோடைகளில் தன்னிச்சையாக வளரும் கீரைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இதனை உங்கள் வீட்டு தோட்டங்களில் நீங்களே பயிரிட்டு பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும். நன்றி!.

  💢💢💢💢

  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.