header ads

header ads

வரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 2.


               நம்மில் நிறையபேருக்கு ''டைரி'' எழுதும் பழக்கம் இருக்கலாம். கடை கணக்கு, பால் கணக்கு எழுதி வைப்பது பலருடைய பொது வழக்கம். ஆனால் சிலரோ காளை பருவத்தில் காதலிக்கு கவிதை வடித்து வைத்திருப்பர் .... பின் வெகுகாலம் கழித்து தள்ளாத வயதிலும் மனம் கொள்ளாமல் அதை தூசிதட்டி புரட்டி பார்த்தால் காதலியின் நினைவோ நெஞ்சை மூழ்கடிக்கும் ... இதயம் படபடக்கும், மனதோ சிறகடிக்கும், மீண்டும் அந்த பருவம் செல்ல உள்ளம் துடிதுடிக்கும் ....


               இந்த பதிவின் முதல் பகுதியை படிக்க >>> இங்கு கிளிக்குங்க <<<

               ஆனால், கடந்த கால காதலை சொல்லி நிற்கும் டைரி ... கொஞ்சம் தடம்மாறி வரலாற்றை சுமந்து நின்றால் எப்படி இருக்கும் ... அப்படியான ஒரு வரலாற்று நிகழ்வைத்தான் நாம் முந்தைய பதிவில் இருந்து பார்த்து வருகிறோம்.

               18ம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்துகொள்ள பெரிதும் துணைபுரிபவை அக்காலத்தில் வாழ்ந்து வந்த ஆனந்தரங்கப் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்ப திருவேங்கடம் பிள்ளை (1737 - 1791), இரண்டாம் வீர நாயக்கர் (1755 ), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிவைத்த நாட்குறிப்புகளே [டைரி] பெரிதும் உதவுகின்றன.

               இந்த நால்வரில் ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாட்குறிப்புகள் மிகவும் சிறப்புபெற்றவை. அரை நூறாண்டுகளுக்கு மேலாக வெளி உலகிற்கு தெரியாமலே இருட்டு அறைக்குள் முடங்கிக் கிடந்த இந்த வரலாற்று பொக்கிஷம் வெளிஉலகிற்கு தெரியவந்த அந்த நிகழ்வு மிகவும் சுவாரசியமானது. அதை பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னால் இப்பதிவின் கதாநாயகன் ஆனந்தரங்கப் பிள்ளையை பற்றி முதலில் அறிந்துகொள்வோம்.


               ஆனந்தரங்கப் பிள்ளை சென்னையில் உள்ள ''பெரம்பூர்'' என்னும் ஊரில் 1709 ம் வருடம் மார்ச் மாதம் 30 தேதி பிறந்தார். இவருடைய தந்தை ''திருவேங்கடம்''. ஆனந்தரங்கப் பிள்ளைக்கு 3 வயது  இருக்கும்போதே தாயார் இறந்துவிட்டார்.

               சிறுவயதில் ஆரம்பக்கல்வியை எம்பார் என்னும் ஆசிரியரிடம் கற்றவர் அதன்பின் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வந்தார். ஆரம்பத்தில் பாக்கு மண்டி வைத்து வியாபாரம் நடத்திவந்தவர் அதன்பின் படிப்படியாக வளர்ந்து மதுபான ஆலை, துணி ஏற்றுமதி என தொழிலை விருத்தி செய்தார்.

               பின்னர் இவர் தன்நெருங்கிய உறவினரின் வற்புறுத்தலின் பேரில் புதுச்சேரியில் குடியேறினார். சென்னையிலிருந்து புதுவைக்கு சென்று சாதாரண அரசாங்க உதவியாளராக பணியல் அமர்ந்து தன்னுடைய அயராத உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வும் பெற்றார்.

               ''ஆனந்த புரவி'' என்னும் வணிக பாய்மரக்கப்பலுக்கு சொந்தக்காரர். தன்னுடைய சொந்த கப்பல் மூலம் துணி ஏற்றுமதியும் செய்து வந்தார். அதன்பின் தன்னுடைய கடைசி காலம் வரையில் புதுவையில் வாழ்ந்துவந்த இவர் மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.


               இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, போர்ச்சுகீசியம் ஆகிய பல மொழிகளில் நன்கு தேர்ச்சி உண்டு என்பதால் வணிகத்தில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு மொழி பெயர்ப்பாளராகவும்  பணியாற்றி வந்தார்.

               பல மொழிகளில் புலமை பெற்ற பண்டிதரான இவர் இந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் போற்றி வளர்ப்பதில் தனி கவனம் செலுத்தியுள்ளார். பன்மொழி புலவர்களையும் ஆதரித்து போற்றி வந்துள்ளார்.

               சில கோவில்களை புனரமைத்த பெருமையும் இவருக்கு உண்டு.


               புதுச்சேரி மாநிலம் பிரஞ்சுக்காரர்களின் ஆளுமையின் கீழ் இருந்த காலம் அது. பிரான்ஸ் நாட்டின் சார்பில் புதுச்சேரியை ஆண்ட கவர்னர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ''துய்ப்ளெக்சு'' (Dupleix).


               இவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ''கனகராய முதலி''. இவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால் காலியாக இருந்த அந்த இடத்தை நிரப்ப பன்மொழிப்புலமை கொண்டவரான ஆனந்தரங்கப் பிள்ளையை ஆங்கிலேய அரசாங்கம் மொழிபெயர்ப்பாளராக 1747 ல் நியமித்தது. கிட்டதட்ட 25 ஆண்டுகள் இப்பணியில் இருந்தார்.

               இவர் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த காலத்தில் கிட்டத்தட்ட நம்ம ஊரு ''நாட்டாமை'' போலவே வலம் வந்து கொண்டிருந்தார்.


               ஆளுநர் தூப்ளே ஆட்சிக்காலத்தில் ஆளுநர் மாளிகைக்குள் யாருமே எளிதில் நுழைய முடியாது. ஆனால் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமையும், தனிப்பட்ட கவுரவமும் கொடுக்கப்பட்டு இருந்தது.

               அதாவது, ஆளுநர் மாளிகைக்கு மங்கல ஒலிகள் ஒலிக்க பல்லக்கில் செல்லும் உரிமை, ஆளுநருக்கு நிகராக தங்கப்பிடிபோட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் உரிமை, ஆளுநர் மாளிகைக்குள் செருப்புடன் செல்லும் உரிமை ஆகியன வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல மக்களுடைய வழக்குகளை முறையாக விசாரித்து அவைகளுக்கு தீர்ப்பு வழங்கும் ''நாட்டாமை'' பதவியும் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

               ஆனந்தரங்கப் பிள்ளை தென்னிந்திய மன்னர்கள் பலருடன் நல்ல நட்பும், தொடர்பும் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல ஆங்கிலேயர்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் ஒரு பாலமாகவே விளங்கினார்.

              1749ம் ஆண்டு ''முசபர்சங்'' என்னும் இந்திய மன்னர் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு ''மன்சுபேதார் '' என்ற பட்டத்தை வழங்கி செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும் , அந்த மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தரராகவும் நியமிக்தார் என்றால் மன்னர்கள் மத்தியில் அவருக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்பதனை உணரலாம்.


               பாண்டிசேரியில் அரசு உதவியாளராக பணிசெய்தபோது இவருக்கு  நாள்குறிப்பு (டைரி ) எழுதும் பழக்கம் தொற்றிக்கொண்டது.

               1736 ம் ஆண்டு செப்டம்பர் 6 ம் தேதி இவருக்கு முதன் முதலில் டைரி எழுதவேண்டும் என்னும் ஆர்வம் துளிர் விட்டது. அன்றைய தினமே பிள்ளையார் சுழி போட்டு தன் நாட்குறிப்பை முதன்முறையாக எழுத தொடங்கிவிட்டார். அன்று தொடங்கியவர் 1761ம் ஆண்டு வரை ஒருசில நாட்களை தவிர்த்து விடாது எழுதியுள்ளார்.

              அவர் எழுதிய குறிப்புகள் அனைத்தும் தன்னை சுற்றி அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய சிறிய குறிப்புகள்தான். ஆனால் 25 வருடங்கள் தொடர்ந்து எழுதியதால் அவர் எழுதிவைத்த குறிப்புகள் 5,000 பக்கங்களை தொட்டு நிற்கிறது ...

               இந்த குறிப்பை அவருக்கே உரித்தான இயல்பான பேச்சுவழக்கில் எழுதியுள்ளது சிறப்பு. இவர் பல மொழிகளில் வித்தகர் என்றாலும் தன் தாய்மொழியான தமிழ் மொழியிலேயே டைரி குறிப்புகளை எழுதிவந்துள்ளார்  என்பது கூடுதல் சிறப்பு.


               வாழ்வில் அரை சதம் அடித்து 51 வயதில் அடியெடுத்து வைத்தும் இவர் டைரி எழுதும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவில்லை. ஆனால் அந்தோ பரிதாபம், மேலுலகில் இவர் கணக்கை தனியாக டைரி போட்டு எழுதிவந்த சித்திரகுப்தனோ இவர் கணக்கை முடித்து வைக்க முடிவு செய்து விட்டான் . விளைவு இவர் தன்னுடைய 51 வயது இறுதியில் 1761 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

               அந்நேரத்தில் இவரின் பெருமுயற்சியால் செதுக்கப்பட்ட அந்த வரலாற்று குறிப்பேடு இவருடைய படுக்கையிலேயே கொண்டவனை பிரிந்து வேறுயாரும் கொள்வாரின்றி கிடந்தது ...


               இது சாதாரண நாட்குறிப்பு அல்ல 18 ம் நூற்றாண்டின் வரலாற்றை எதிர்கால உலகிற்கு பறைசாற்றும் வரலாற்று பொக்கிஷம் என்னும் பேருண்மை அங்கிருப்போர் யாருக்கும் தெரியவில்லை. விளைவு ஆனந்தரங்கப் பிள்ளையின் பூத உடல் பூமாதேவியின் அரணுக்குள் சென்ற அதே வேளையில் அவரால் எழுதப்பட்ட டைரியோ பரணுக்கு சென்றது.

               வரலாற்றை தாங்கி இருட்டு அறையில் தூசுகளுக்கு மத்தியில் அதன் மகத்துவம் அறியாமல் தீண்டுவாரின்றி கிடந்த டைரி ஆனந்தரங்கப் பிள்ளையின் மறைவுக்கு பின் 85 ஆண்டுகள் கழித்தே வெளி உலகத்தின் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது .... எப்படி? .... யாரால் ? ... உங்கள் கேள்விகளுக்கு விடை அறிந்துகொள்ள பதிவின் அடுத்த பகுதிக்குள் மெல்ல அடியெடுத்து வைப்போம் வாருங்கள் ....

[வரலாறு தொடரும்] ...
               இந்த பதிவின் மூன்றாம் பகுதியை படிக்க .. >> இங்கு கிளிக்குங்க <<

♚♚♚♚♚♚♚♚♚♚

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.