"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா பிஹாய் - Heliconia bihai - Types of heliconia in Tamil.

ஹெலிகோனியா பிஹாய் - Heliconia bihai - Types of heliconia in Tamil.

ஹெலிகோனியா பிஹாய்.

H. bihai.

          "ஹெலிகோனியம்" என்னும் இந்த பதிவின் மூலமாக "கொய் மலர்" என்னும் மலர் அலங்காரத்திற்குப் பயன்படும் மலர்களில் முதன்மையான மலரான ஹெலிகோனிய மலர்களைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம்.


Heliconia bihai.

  ஹெலிகோனியம் என்னும் இந்த அலங்கார தாவரங்களில் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் அதன் வடிவத்திலும், தன்மையிலும் வேறுபட்டவை.

  இதன் நிறம், நெடுநாள் உயிர்ப்புடன் இருக்கும் தன்மை மற்றும் இதன் கவர்ச்சியை கருத்தில்கொண்டு இவை அலங்காரப் பொருட்களாக பாவிக்கப்பட்டு வருகின்றன.

  சிவப்பு (Red), இளஞ்சிவப்பு (pink), ஆரஞ்சு (Orange), மஞ்சள் (Yellow), பச்சை (Green) என்று விதவிதமான வண்ணங்களுடனும், கவர்ச்சியான தோற்றத்துடனும் கண்களைப்பறிக்கும் அழகுடனும் திகழும் இதனை விரும்பாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.

  இவைகள் ஒன்றைப்போல் மற்றொன்று இல்லாமல் ஒவ்வொன்றும் சிறுசிறு மாற்றங்களுடனும், வெவ்வேறு தனிப்பட்ட வடிவங்களுடனும் கூடிய ரம்மியமான மலர்களை மலரச் செய்கின்றன. 

  இக்கட்டுரையின் முதல் பகுதியில் ஹெலிகோனியம் வகை தாவரத்தின் சில அடிப்படையான விஷயங்களையும், பொதுப்பண்புகளையும் பற்றி விரிவாக பார்த்தோம். இனி தொடர்ந்துவரும் பதிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஹெலிகோனிய இனங்களில் பிரபலமாக உள்ள சில ஹெலிகோனியா வகைகளைப்பற்றி மட்டும் விரிவாகப் பார்ப்போம்..

  இந்த பதிவில் ஹெலிகோனிய தாவரங்களில் மிகவும் ரம்மியமான அழகையும், கவர்ச்சியான நிறங்களையும் கொண்ட மலர்களை மலரச்செய்யும் ஹெலிகோனிய வகையான "ஹெலிகோனிய பிஹாய்" - Heliconia bihai என்னும் தாவரத்தைப்பற்றி அறிந்துகொள்வோம்.

  Heliconia bihai.

  தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா பிஹாய் - Heliconia bihai.

  பொதுவான பெயர் :- Red palulu [சிவப்பு பலுலு].

  தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

  குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

  பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

  இனம் :- பிஹாய் - Bihai.

  வரிசை :- Zingiberales.

  பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.

  வாழிடம் :- வெப்பமண்டல மழைக்காடுகள்.

  தாயகம் :- தென் அமெரிக்க கண்டங்கள்.

  வளரும் நிலப்பகுதிகள்.

  தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள ஒரு குடியரசு நாடு சுரினாம் [suriname]. இங்குள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில்  அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள மக்கள் இதனை "சிவப்பு பலுலு" [Red palulu] என செல்லப்பெயரிட்டு அழைத்துவருகின்றனர்.

  மேலும், வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), ஜமைக்கா (Jamaica), கயானா (Guyana), பிரேசில் (Brazil), கரீபியன் (Caribbean) ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.

  தற்பொழுது உலகின் எல்லாப்பகுதிகளிலும் குறிப்பாக வீட்டு தோட்டங்கள் மற்றும் பொது பூங்காக்களில் அழகுதரும் தாவரங்களாக அனைவராலும் விரும்பி வளர்க்கப்பட்டுவருகின்றன.

  மேலும் இவைகள் உலகின் அனைத்து நாடுகளிலும் வருமானம் ஈட்டித்தரும் பணப்பயிராக விவசாயநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன.

  உட்பிரிவுகள்.

  இந்த ஹெலிகோனியா பிஹாயில் பூக்களின் தன்மைகளுக்கு ஏற்ப பலவகையாகப் பிரித்து பெயரிடப்படுகின்றன. இதில் 15 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

  • Banana split
  • Chocolate Dancer
  • Yellow Dancer
  • Yellow dolly
  • Claw red
  • green bihai
  • cinnamon twist
  • Granny smith
  • Nappi
  • Nappi-Yellow
  • Peachy Pink
  • Purple Throat.

  இவைகளுடன் இன்னும் பல பிரிவுகள்  உள்ளன. இதன் பலவகைகளை கீழுள்ள படங்களில் காணலாம்.

  bihai.

  இனப்பெருக்கம்.

  சிறிய ரக வேர் போன்ற அமைப்பு உள்ள கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது. 

  types of Heliconia bihai.

  தாவரத்தின் தன்மை.

  இது வாழைமரத்தைப்போன்று வளரும் இயல்புடையது. 6 அடி முதல் 14 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலைகளும் வாழை இலைகளைப்போன்று பெரிதாகவே உள்ளன. இதன் இலைகள் 2 அடிமுதல் 6 அடிவரை பல்வேறு நீளங்களில் காணப்படுகின்றன. இலையின் அகலம் 30 முதல் 45 செ. மீ வரை இருக்கும்.

  மலர்களின் தன்மை.

  நிமிர்த்த உறுதியான தண்டுகளுடன் ஏறத்தாழ 2 அடி நீளமுடைய  மேல்நோக்கிய பூக்களை பல அடுக்குகளுடன் பூக்கின்றன.

  பூக்களைப் பாதுகாக்கும் வெளிப்புற மடல்கள் படகு போன்ற அமைப்புடன் ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கண்களைப் பறிக்கும் அழகோடு காட்சிதருகிறது.

  பொதுவாக ஹெலிகோனியா வகை தாவரங்களில் உள்ளே இருக்கும் பூ மொட்டுக்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருக்கும் இவ்வாறான கடினத்தன்மையுடன்கூடிய பாதுகாப்பு மடல்களே பல்வேறு வண்ணங்களில் தோன்றி நம் கண்களை மிரட்டுவதோடு தாவரங்களுக்கும் விசேஷ அழகினைக் கொண்டுவந்து சேர்க்கின்றன.

  இந்த மடல்கள் உள்ளே குழிவுடன் படகுபோன்று மேல்நோக்கிய அமைப்பில் உள்ளதால் மழைநீர் இதில் சேகரிக்கப்படுகின்றன. காடுகளில் உள்ள பறவைகளுக்கும் மற்றும் ஊர்வனவகை உயிரினங்களுக்கும் இதுவே  தாகம் தீர்க்கும் அட்சயப்பாத்திரமாக விளங்குகிறது என்றால் மிகையில்லை.

  இந்த மடல்களின் உள்ளேதான் பாதுகாப்பாக பூமொட்டுகள் உருவாகி பூக்களாக மலர்கின்றன.

  பூக்கள் வெளிறிய பச்சை கலந்த வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது. பூக்களில் தேன்கள் உற்பத்தியாகின்றன. இவைகளை அருந்த ஹம்மிங் பறவைகள் (Hummingbirds), வௌவால்கள் (Bats), வண்ணத்துப்பூச்சிகளுடன் (Butterfly) வேறுசில சிறியரக பறவைகளும் வருவதுண்டு. மகரந்தசேர்க்கையானது "ஹம்மிங்" போன்ற பறவைகளாலும், வௌவால்களாலும் நடைபெறுகிறது.

  பூக்களின் அகலம் 30 சென்டிமீட்டர் வரை இருக்கும். மலர்கள் "மஞ்சரி" எனப்படும் கிளைத்த தண்டுகளில் உருவாகின்றன.

  இம்மலர்களை விற்பனைக்காக செடியிலிருந்து வெட்டியெடுத்த பின்பும்கூட போதிய அளவு நீர்தெளித்து குளிர்ச்சியான சூழ்நிலைகளில் வைத்துவர இரண்டு வாரங்கள்வரை ஓரளவு வாடாமல் வைத்திருக்க முடியும்.

  இதனுடைய சிறப்பு என்னவென்றால் இது ஆண்டுமுழுவதும் பூக்கிறது. எனவே இது விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை ஈட்டித்தருகிறது.

  காய்களின் தன்மை.

  பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறங்களில் உள்ளன. இவைகள் பழங்களாக பழுக்கும் தருவாயில் அடர் நீல நிறத்தை அடைகின்றன. பழங்கள் பறவைகளுக்கும் வேறுசில சிறியவகை உயிரினங்களுக்கும்  உணவாகின்றன. வௌவால்களும் இவைகளை விரும்பி உண்கின்றன.

  தாவரத்தின் பயன்கள்.

  வீடுகளில் அலங்கார தாவரமாக வளர்க்கப்படுகிறது. இவைகள் தன்னிச்சையாக வளரும் வனப்பகுதிகளில் வாழும் மக்களால் இலைகளின் இளந்தளிர்கள் உணவாக சமைத்து உண்ணப்படுகின்றன.

  இதன் வேர்கள் மூச்சுத்திணறலை நிவர்தி செய்யும் மருந்தாக அப்பகுதிகளில் வாழும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

  மேலும் காகிதங்கள் தயாரிக்கவும் இதன் இலைகளிலுள்ள நார்ப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  தீமைகள்.

  தீமைகள் என்று பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் மலரை பாதுகாக்கும் மடல்போன்ற உறைகள் படகு போன்ற அமைப்பினை கொண்டுள்ளதால் இவைகளில் மழைக்காலங்களில் மழைநீர் சேமிக்கப்படுகின்றன. அவ்வாறு தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உங்களின் நிம்மதியான தூக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிக்கலாம்.

  இப்பதிவில் "ஹெலிகோனியா பிஹாய்" பற்றி அறிந்துகொண்ட நீங்கள்  ஹெலிகோனியாவின் மற்றொரு வகையான "ஹெலிகோனியா சார்டேசியா" பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ நாசூக்காக கிளிக் செய்யுங்கள்.

  >>"ஹெலிகோனியா சார்டேசியா - Heliconia chartacea."<<

  🌼 🌼 🌸🌸 🌼 🌼

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்