அம்பேத்கரின் சீரிய சிந்தனைகள் - Ambedkar great thoughts.

Ambedkar great thoughts.

          "பாபா சாகேப் அம்பேத்கர்" என்று பாசத்துடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட சட்ட மாமேதையின் இயற்பெயர் "பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்" (Bhimrao Ramji Ambedkar). இந்திய திரு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர்.

          இவர் இந்திய சட்டத்தை வரையறுத்த ஒரு சட்ட மாமேதை என்றுதான் நம்மில் பலபேர் தெரிந்துவைத்துள்ளோம். உண்மையில் இவர் சட்ட மாமேதை மட்டுமல்ல அரசியல் வித்தகர், பொருளாதார மாமேதை, வரலாற்று பேராசிரியர், தத்துவ ஞானி, சட்ட வல்லுநர், தலைசிறந்த எழுத்தாளர், சமூக நீதி சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர் என பன்முகத்தன்மைகொண்ட மாமேதை எனலாம்.

          அதுமட்டுமல்ல, தலைசிறந்த கல்வியாளரும்கூட.. அரசியல், வரலாறு, தத்துவம், பொருளாதாரம் இன்னும் பல துறைசார்ந்த விஷயங்களை கற்றுத்தேர்ந்தவர்.

          ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, பிரெஞ்சு, பெர்ஷியன், ஜெர்மன், பாலி என பழமொழிகளும் கற்றறிந்த வித்தகர். 

          இந்தியாவில் நிலவிவந்த ஜாதீய கொடுமைகளுக்கு எதிராக 1956 டிசம்பர் 6ம் தேதி வரை அதாவது தன் இறுதிமூச்சு இருந்தவரை தளராது போராடிய தீரர்.

          இவருடைய மகத்தான சேவைகளை பாராட்டி இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.  இவருடைய இறப்புக்குப்பின் 1990ல் தான் இவ்விருது வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

          இவருடைய கருத்துக்கள் பெரும்பான்பையும் ஜாதீயக்கொடுமைகளை சாடுவதாகவே அமைந்துள்ளன. அவருடைய சீரிய சிந்தனையில் உதித்த தத்துவங்கள் சிலவற்றை "அம்பேத்கரின் சீரிய சிந்தனைகள்" என்னும் இப்பதிவின்மூலம் அறிந்துகொள்வோம் வாருங்கள்..

அம்பேத்கரின் சீரிய சிந்தனைகள்.

 • கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
 • கடவுளுக்கு செலவிடும் பணத்தை உன் குழந்தையின் படிப்புக்கும், அவர்களின் எதிர்கால தேவைகளுக்கும் செலவிடு. அது உன்னையும் உன்னை சார்ந்த பிறரையும் வாழவைக்கும்.
 • சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம், அதை இழந்து வாழ்வது மிகப்பெரிய அவமானம்.
 • தன்னை உயர்ந்த ஜாதியாகவும் பிறிதொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் ஒரு மனநோயாளி.
 • சாதிதான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.
 • அடிமையாக வாழ்க்கை நடத்தும் ஒருவனுக்கு தான் அடிமையாக அவமானப்படுத்தப்படுவதை புரியவை. பிறகு அவன் தானாகவே அடிமைச்சங்கிலியை உடைத்தெறிய கிளர்ந்தெழுவான்.
 • ஜாதி உன்னுடைய அடையாளம் அல்ல. அது உன்னுடைய மற்றும் மனித குலத்தின் அவமானம்.
 • ஆயிரம் ஆண்டுகாலம் அடிமையாக வாழ்வதைவிட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்ந்து மடிவது சிறப்பு.
 • நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும்போது பகைவன்கூட நம்மை மதிப்புடன் பார்ப்பான்.
 • உழைப்பவன் அடிமையுமில்லை, ஊதியம் கொடுப்பவன் கடவுளும் இல்லை.
 • வாழ்க்கை நீளமானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை, அது சிறப்பானதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.
 • பலிபீடங்களில் வெட்டப்படுபவை அப்பாவி ஆடுகள்தானேயொழிய சீறும் சிங்கங்கள் அல்ல. எனவே சிங்கங்களாக எப்போதும் கர்ஜித்துக்கொண்டே இரு.
Ambedkar great thoughts.
Dr . Ambedkar.
 • நான் யாருக்கும் அடிமையாக இல்லை. அதேவேளையில் எனக்கும் யாரும் அடிமையாக இல்லை.
 • எனக்கு மேலே ஒருவரும் இல்லை. எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை.
 • எவன் ஒருவன் தன் உரிமைகளை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ, எவன் ஒருவன் தன் பொது விமர்சனங்களுக்கு அச்சப்படாமல் இயங்குகிறானோ, எவனொருவன் சுய சிந்தனை சுய மரியாதையுடன் திகழ்கிறானோ அவனையே சுதந்திரமான மனிதன் என்பேன்.
 • ஒரு மனிதனை அச்சமற்றவனாக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையை கற்பித்து தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னுடைய உரிமைக்காக போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி.
 • ஒரு லட்சியத்தை கையிலெடுங்கள் அதை அடைவதற்கு விடா முயற்சியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்.
 • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்றே மூன்றுதான். அவை அறிவு, சுயமரியாதை, நன்னடத்தை.
 • ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் புரட்சி இந்த மூன்று விஷயங்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்டு ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
 • அடிமை வாழ்வுதான் நமக்கு கிடைத்த கதி என்னும் எண்ணத்தை முதலில் குழிதோண்டி புதையுங்கள்.
 • உலகில் பிறக்கும்போது யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பதுமில்லை. அவதாரமாக அவதரிப்பதுமில்லை. அவரவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஏற்றத்தாழ்வுகளே அவர்களை உயர்ந்த நிலைக்கும் தாழ்ந்த நிலைக்கும் இட்டுச்செல்கிறது.
 • இந்தியாவில் எத்தனையோ மகாத்மாக்கள் தோன்றிவிட்டார்கள். ஆனால் தீண்டாமை கொடுமைதான் இன்னும் ஒழிந்தபாடில்லை. இந்த மகாத்மாக்கள் என்ன விஷயமாக தோன்றுகிறார்கள் என்றுதான் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
 • சாதியை பிடித்துக்கொண்டு அலைபவர்கள் அனைவருமே தேசவிரோத சக்திகள்தான்.
 • நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக நீ போராட துணியவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடே நீதான்.


கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.