"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அறுகம்புல் - Arugampul - Durva grass - Cynodon daclylon.

அறுகம்புல் - Arugampul - Durva grass - Cynodon daclylon.

அறுகம்புல்.

Durva grass.

"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி" என்று சான்றோர்கள் வாழ்த்துவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆலமரம் தன் விழுதுகளை வீதியெங்கும் பரப்பி கிளைக்கும்.. அதேவேளையில் அறுகம்புற்களோ தன் வேர்களை ஊரெங்கும் ஓடச்செய்து தழைக்கும். இரண்டுமே பூமியில் ஒருதடவை என்டர் ஆகிவிட்டது என்றால் அதன்பின் அவைகளின் வாழ்க்கையில் எண்ட் என்பதே கிடையாது.


  ''அறுகு போல் வேரோடி'' என வாழ்த்துவதின் பொருள் அறுகு எவ்வாறு அதிகமான வேர்களை நிலத்தில் பதித்து தன் இனத்தை வேகமாக பரவச்செய்கிறதோ அதேபோல் அதிகமான உறவினர்களைப்பெற்று வாழ்க்கை செழிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு வாழ்த்துகிறார்கள்.

  அறுகம்புல்லானது நம் இருப்பிடங்களை சுற்றிலும் சாதாரணமாக காணப்படும் ஒரு புல் சார்ந்த தாவரம்தான் என்றாலும் நோய் தீர்ப்பதில் சர்வரோக சஞ்சீவியாக விளங்குகிறது.

  எனவே இத்துணை பெருமைவாய்ந்த அறுகம்புல்லைப்பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே இந்த பதிவில் அறுகம்புல்லைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே அலசுவோம்.

  Arugampul.

  Cynodon daclylon.

  திணை :- தாவரம்.

  வரிசை :- Poales.

  குடும்பம் :- போயேசியே - Poaceae.

  பேரினம் :- சைனோடான் - Cynodon.

  இனங்கள் :- சி . டாக்டைலான் - C.dectylon.

  பூர்வீகம் :- இது ஆசியா (Asia), ஆஸ்திரேலியா (Australia), தெற்கு ஐரோப்பா (Southern Europe), கிழக்கு ஆப்பிரிக்கா (East Africa) முதலிய நாடுகளை பூர்வீகமாக கொண்டவை.

  வாழிடம் :- தரிசு நிலங்கள், வயல் வரப்புகள், குளம், ஆறு மற்றும் ஈரப்பாங்கான இடங்கள்.

  தாவரவியல் பெயர் :- சைனோடான் டாக்டைலான் - Cynodon dactylon.

  ஹிந்தி பெயர் :- டூப் - Doob.

  சமஸ்கிருதம் பெயர் :- துர்வா - Durva.

  "துர்வா" என்றால் விலங்குகளால் விரும்பி உண்ணப்படும் புல் என்று ஒரு விளக்கமும், தொலைதூரத்தில் இருக்கும் சக்தியை கவர்ந்து இழுத்து தன் இருப்பிடத்திற்கு கொண்டுவரும் விருட்சம் என்று மற்றொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது.

  மலையாளம் :- கருகா புல்லி.

  "கருகா புல்லி" என்றால் கருகாத புல் என்று அர்த்தம். நீரின்றி மேற்பகுதி கருகினாலும்கூட வேர்ப்பகுதி உயிர்ப்புடன் இருந்து மழை பெய்தவுடன் மறுபடி மீண்டும் துளிர்ப்பதால் இதற்கு மலை ஆளும் பிரதேசமான மலையாளத்தில் "கருகா புல்லி" என்ட பறைஞ்சு.

  தமிழ் பெயர் :- அறுகம்புல். (அருகம்புல் என்பது தவறான உச்சரிப்பு "அறுகம்புல்" என்பதே சரியான பதம்).

  பெயர்க்காரணம்.

  ஒவ்வொரு மொழிகளிலும் வெவ்வேறுவிதங்களில் அழைக்கப்படும் இது தமிழில் "அறுகம்புல்" என அழைக்கப்படுகிறது. ஆனால் இதனுடைய உண்மையான பெயர் அறுகம்புல் அல்ல. இது தமிழில் ஆதியில் "அறுகை புல்" என்றே அழைக்கப்பட்டுவந்தது. காலப்போக்கில் இதுவே அறுகம்புல் என்று திரிந்துபோனது.

  கால்நடைகளுக்கு தேவையான பிற அனைத்து புல்வகைகளும் ஆயுதங்களால் அறுக்கப்படும்போது அதாவது துண்டிக்கப்படும்போது  இதுமட்டும் தரையோடு தரையாக படர்ந்திருந்ததாலும், கணுவிற்குகணு வேர்கள் பதிக்கப்பட்டு இருந்ததனாலும் இதனை ஆயுதங்களால் அறுப்பது சிரமம் என்பதால் கைகளாலேயே அறுக்கப்படுவதால் (அறு + கை = அறு கைகளால்) "அறுகை புல்" என பெயர் பெற்றது.

  ஆங்கில பெயர்.

  ஆங்கிலத்தில் இதனை பொதுவாக Bermuda Grass (பெர்முடா புல்) என அழைக்கின்றனர். ஆனால் இந்த Bermuda Grass என்பது நம்முடைய பராம்பரிய அறுகம்புல்லை குறிக்கும் சொல் அல்ல. அறுகம்புல்லைப் போலவே இருக்கும் 20 க்கும் மேற்பட்ட வகையான புற்களை குறிப்பிடும் ஒரு இனப்பெயர் அவ்வளவே.

  வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவு "பெர்முடா" ( Bermuda island).

  இந்த தீவில் இந்தவகையான புற்கள் நிறைய மண்டிக்கிடக்கின்றன. இங்கிருந்தே கிழக்கு அமெரிக்கப்பகுதிகளுக்கு இந்த புற்கள் பரவத்தொடங்கின. உடனே அங்குள்ள வெள்ளைக்கார துரைமார்கள் ஒன்றுசேர்ந்து பெர்முடாவிலிருந்து வந்த புதுவரவான இந்தவகை புல்லிற்கு "Bermuda Grass" என பெயர் வைத்துவிட்டனர்.

  இந்த பெர்முடா புற்களில் நிறைய வகைகள் உள்ளன என்றாலும் பெரும்பாலான பெர்முடாப்புற்கள் அழகு பொருந்திய புல்தரைகள் அமைப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன. இந்த புற்கள் எதுவுமே மருந்தாக பயன்படுவதில்லை. ஒன்றே ஒன்றை தவிர. ஆம் அந்த ஒன்றேயொன்றுதான்  "Durva grass" (துர்வா புல்) என அழைக்கப்படும் மருத்துவத்தன்மை வாய்ந்த நம்முடைய அறுகம்புல்.

  பொதுவாக Durva grass என்னும் இந்த அறுகம்புல் வெளிநாடுகளில் ஒரு மூலிகைச்செடியாக பார்க்கப்படுவதில்லை. மாறாக பயிர்களுக்கு தீங்குதரும் களைச்செடியாகவே பார்க்கப்படுகிறது. அதனாலேயே இதைப்பற்றிய விரிவான ஆராய்ச்சிகள்  எதுவும் இன்னும்  நிகழ்த்தப்படவில்லை. எனவேதான் அறுகம்புல்லை பற்றிய அறிவியல் பூர்வமான குணாதிசயங்கள் முழுமையாக கிடைக்கப்பெறாமலேயே உள்ளன.

  Arugampul Durva grass

  ஆங்கிலத்தில் இந்த மருத்துவத்தன்மை வாய்ந்த அறுகம்புல்லை Durva grass என்று மட்டுமல்லாது Indian Doab என பிரிதொரு பெயரிட்டும் அழைத்துவருகின்றனர்.

  வேறுபெயர்கள்.

  அறுகு, பதம், மூதண்டம், முயல் புல், தூர்வா, அனந்தா, மேகாரி, காகா மூலி, கணபதி பத்ரம், பார்கவி, ஷட்வல்லி, திக்தபர்வா, ஷட்பர்வா, ஷட் வீர்யா, சஹஸ்த்ர வீர்யா.

  வகைகள்.

  அறுகம்புல்லில் பலவகைகள் உள்ளது என்றாலும் மருந்துக்காக பயன்படுத்தும் அறுகம்புல்லில் இருவகையான இனங்களே உள்ளன. ஒன்று பேரறுகு மற்றொன்று சிற்றறுகு. ஒன்று சுமார் அரைஅடி உயரத்தில் குத்துச்செடிபோல வளரும் தன்மையுடையது. மற்றொன்று தரையோடு தரையாக படரும் தன்மையுடையது. மருத்துவ குணம் என்று பார்த்தால் இரண்டுமே ஒரே மாதிரியான குணங்களை கொண்டவைகள்தான்.

  மூலிகை மருத்துவத்தில் இந்த இரு அறுகம்புற்களைத் தவிர "வெள்ளறுகு" என்று ஒரு இனமும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளறுகானது புல்வகையை சார்ந்தது அல்ல. மாறாக செடிவகையை (குறுந்தாவரம்) சேர்ந்தது.

  தாவர அமைப்பு.

  இது ஒரு புல்வகை தாவரமாகும். இவை பூமிக்கு கிடைமட்டமாக பல கணுக்களுடன் காணப்படும். சிறிய தாவர இனம்தான் என்றாலும் ஒவ்வொரு கணுக்களிலும் புதிய வேர்களை உருவாக்கி வேகமாக படரும் தன்மையுடையது.

  ஒவ்வொரு கணுக்களிலும் இலைகளும், புதிய கிளைகளும் உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு கணுக்களும் வேர்விட்டு மனம்போன போக்கிலே வேகமாக படர்ந்து வளரும் தன்மையுடையது.

  வளரியல்பு.

  வயல் வரப்புகள், நீர்ப்பாங்கான இடங்கள் மற்றும் அனைத்து வகையான மண்களிலும் வளரும் தன்மையுடையது. ஆனால் களிமண் நிலங்களில் செழித்து வளர்கின்றன.

  அனைத்து பருவ காலங்களிலும் வளரும் இயல்புடையது. ஓரளவு வறட்சியை தாங்கி வளரும். 15⁰ C ல் இருந்து 37⁰ C வரையில் செழிப்பாக வளரும் தன்மையுடையது.

  நீரில்லாத வறண்ட காலங்களில் தரையின் மேற்பகுதி பாகங்கள் காய்ந்துபோகின்றன. ஆனால் வேர்முண்டுகள் போன்ற அமைப்பு உயிர்ப்புடன் இருக்கும். அடுத்த மழைபொழிவில் மறுபடியும் தழைக்க தொடங்கிவிடும்.

  தாவரத்தின் தன்மை.

  இது இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் பெற்றுள்ளது. எனவே இது உடல்வெப்பத்தை தணிப்பதில் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இதன் இலைகள், தண்டு, வேர்கள்  என முழு தாவரமுமே மருந்தாக பயன்படுகின்றன.

  இலைகளின் அமைப்பு.

  இலைகள் தட்டையானது. கூரானது. அகலத்தில் ஒடுங்கியது. கரும்பச்சை நிறத்தை அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தை கொண்டது. இலைகளின் நீளம் 0.5 லிருந்து 3 அங்குலம் வரை இருக்கலாம். தண்டுகள் குறுகியது. நேரானது. தண்டுகளின் ஒவ்வொரு கணுக்களிலும் இலைகள் உருவாகின்றன. தாவரம் முழுவதும் இலைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் இந்த இலைகள் வெளிப்பூச்சு மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தாக பயன்படுத்தப்படுவதில்லை.

  மலர்களின் தன்மை.

  நீளமான மஞ்சரிகளில் 3 முதல் 6 விரல்கள் போன்ற அமைப்புடன் எப்போதாவது பூக்கின்றன. விதைகளையும் உற்பத்தி செய்கின்றன. ஆனால் இவைகளை காண்பது மிகவும் அரிதானது.

  Durva grass flower seeds

  பயன்.

  நோய் தீர்க்கும் மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மண் அரிப்பை தடுக்க இது பயன்படுகிறது. இந்து மத சடங்குகளில் இது மிக முக்கியமான இடத்தைப்பிடிக்கிறது. முயல்களுக்கு இது மிகவும் விருப்பமான உணவு. முயல் வளர்ப்பவர்கள் கூடவே அதற்கு விருப்பமான அறுகம்புல்லையும் வளர்த்துவருவது அவசியம். மாடுகளும் அறுகம்புல்லை விரும்பி சாப்பிடுகின்றன.

  இனப்பெருக்கம்.

  இவைகளின் பிற இன அறுகம்புற்களில் ஏராளமாக விதைகள் உற்பத்தியாகின்றன. ஆனால் மருந்துக்காக பயன்படும் அறுகம்புல் வகைகளில்  விதைகள் உற்பத்தி அரிது. எனவே இவைகள் பெரும்பாலும் தண்டுகள் மூலமாகவே தங்களின் இனத்தை பெருக்குகின்றன. ஒவ்வொரு தண்டு கணுக்களிலும் வேர்களை உற்பத்திசெய்வதின் மூலமாக படரும் இடங்களிலெல்லாம் வேகமாக தடம் பதிக்கின்றன.

  அடங்கியுள்ள சத்துக்கள்.

  Tamil English
  கார்போஹைட்ரேட் Carbohydrate
  கொழுப்பு Fat
  நார்சத்து Fibre
  மெக்னீசியம் Magnesium
  பொட்டாசியம் Potassium
  சுண்ணாம்பு சத்து Calcium
  பாஸ்பரஸ் Phosphorous
  சோடியம் Sodium
  புரோட்டீன் Protein
  கரோட்டின் Carotene
  வைட்டமின் A Vitamin A
  வைட்டமின் C Vitamin C
  செலினியம் Selenium
  லிக்னின் Lignin
  கவுமாரிக் அமிலம் Coumaric acid
  பெரூலிக் அமிலம் Ferulic acid
  பால்மிட்டிக் அமிலம் Palmitic acid
  வேனிலிக் அமிலம் Vanillic acid
  அசிட்டிக் அமிலம் Acetic acid
  டைட்டர் பினாய்ட்ஸ் Triterpenoids
  ஆல்கலாய்ட்ஸ் Alkaloids
  அருண்டோயின் Arundoin
  ஃபிளாவோன் Flavones
  குளுக்கோசைட்ஸ் Glucosides
  பி.சிட்டோஸ்டர் -
  சேப்போனின்ஸ் -
  மேனிட்டால் -
  குளோரோபில் -

  இதில் சேப்போனின்ஸ் மற்றும் மேனிட்டால் சிறுநீரை பெருக்க உதவுகின்றன. மேலும் இதில் அதிக அளவு குளோரோபில் (chlorophyll) உள்ளது. இது இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) அளவை அதிகரிப்பதால் உடலில் இரத்தவிருத்தி அதிகரிக்கிறது.

  அறுகம்புல் பண்புகள்.

  1. டையூரிடிக் (diuretic) - சிறுநீரக பிரிப்பு.
  2. ஆன்டிடாக்ஸிக் (antitoxic) - நச்சு எதிர்ப்பு.
  3. ஆன்டிஃபங்கல் (antifungal) - பூஞ்சைநோய் எதிர்ப்பு.
  4. ஹைபோகிளைசெமிக் (hypoglycaemic) - இரத்த சர்க்கரை குறைவை சீராக்குதல்.
  5. ஆன்டிலிதிக் (antilithic) - கற்களை கரைக்கும் தன்மை.
  6. ஹைபோடென்சிவ் (hypotensive) - இரத்த குறை அழுத்தம்.
  7. கோகுலண்ட் (coagulant) - இரத்த உறைதலை துரிதப்படுத்துதல்.
  8. ஆண்டிபயாடிக் (antibiotic) - நுண்ணுயிர்கொல்லி.
  9. ஆன்டிகேன்சர் (anticancer) - புற்றுநோயை எதிர்க்கும் தன்மை ஆகிய பண்புகளை கொண்டுள்ளன.

  மருத்துவப் பயன்கள்.

  அறுகு நிறைய மருத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோ மருத்துவங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

  அறுகு உடல் வெப்பத்தையும், வறட்சியையும் நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். பித்த சம்பந்தமான உஷ்ண வியாதிகளை நீக்கி உடலை தேற்றும். 

  தலைநோய், தலை பாரம், கண்நோய், கண்புகைச்சல் இவைகளை நீக்குவதோடு கண்பார்வையையும் தெளிவுபெற செய்யும். நினைவுத்திறன் மற்றும் தாதுவிருத்தியும் உண்டாகும்

  இதயநோய், இரத்தக்கொதிப்பு, மார்புவலி முதலியவைகளை குணமாக்கும். இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தி இரத்தத்தை தூய்மையாக்கும்.

  நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீக்குவதோடு சிறுநீரையும் பெருக்கும்

  வயிற்றுபுண், குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, கைகால் வலி, குடைச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல் முதலியவைகளை நிவர்த்தி செய்யும். கபத்தை அறுக்கும், கொழுப்பை குறைக்கும், மலத்தை இளக்கும். வாய்வை விலக்கும். மூலம் ஒழிக்கும்.

  சொறி, சிரங்கு, தோல்வியாதிகள் முதலியவைகளை குணப்படுத்துவதோடு தோலில் ஏற்படும் வெண்புள்ளிகளையும் குணப்படுத்தும், உடல் துர்நாற்றத்தையும் நீக்கும். 

  பெண்களுக்கு ஏற்படும் வெட்டை, மாதவிடாய் கோளாறு முதலியனவற்றிலுள்ள பிரச்சனைகளை சரிசெய்யும்.

  மன அழுத்தத்தை குறைத்து நரம்புகளை பலப்படுத்தி நிம்மதியான தூக்கத்தைத் தரும்.

  முக வசீகரத்தையும், அழகையும் உண்டுபண்ணும். உடலுக்கு வலிமை சேர்ப்பதோடு உற்சாகத்தையும் தருகிறது.

  பயன்படுத்தும் விதம்.

  அறுகம்புல் இலைகளில் ஒவ்வாமை ஏற்படுத்தும் சில மூலக்கூறுகள் உள்ளதாதலால் உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகளில் இலைகளை நீக்கி தண்டுகள் மற்றும் வேர்களை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். வெளிப்பூச்சு மருந்துகளுக்கு முற்றிய இலைகளை தவிர்த்து பசுமையான இலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  நரம்புத்தளர்ச்சி.

  அறுகம்புல் இலைகளை நீக்கி தண்டுகளை நீர்விட்டு இடித்து சாறெடுத்து தினந்தோறும் உணவுக்குப்பின் அருந்திவர நரம்பு தளர்ச்சியினால் உண்டாகும் கைகால் நடுக்கம், வாய் குளறுதல் முதலியவைகளிலிருந்து விடுபடலாம்.

  குருதி வடிவது நிற்க.

  அறுகம்புல்லை இடித்து பிழிந்தெடுத்த சாற்றை அடிபட்ட காயங்களில் பூச இரத்தம் வடிவது நிற்கும். அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு ஆறாத புண்கள் மீது தடவ விரைவில் ஆறும்.

  உடல் உஷ்ணத்திற்கு.

  போதிய அளவு அறுகம்புல்லை சுத்தம் செய்து இலைகளை நீக்கி தண்டுகளை மட்டும் உரலிலிட்டு நீர்விட்டு இடித்து பிழிந்த சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து அருந்திவர உடல் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சி பெறுவதோடு பித்தம் சார்ந்த வியாதிகளும் நீங்கும்.

  முக வசீகரத்திற்கு.

  அறுகம்புல்லை வேருடன் எடுத்து இலைகளையும், கணுக்களையும் நீக்கி வேர் மற்றும் தண்டுகளை சுத்தம் செய்து 35 கிராம் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் 35 கிராம் சுத்தமான வெண்ணை சேர்த்து தினம் 2 வேளை வீதம் 48 நாட்கள் சாப்பிட்டுவர அழகும், முக வசீகரமும் உண்டாகும். அறிவு தெளிவடையும். உடல் உறுதிபெறும்.

  நீரடைப்புக்கு.

  அறுகம்புல்லை சுத்தம் செய்து இலைகளை நீக்கி தண்டுகளை இடித்துப்போட்டு கஷாயம் வைத்து பாலுடன் சேர்த்து உட்கொள்ள நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல், இரத்தமூலம் குணமாகும்.

  வெள்ளைப்படுதல், வெட்டை குணமாக.

  ஒரு கைப்பிடி அளவு அறுகம்புல் எடுத்து இலைகளை நீக்கி தண்டுகளை மட்டும் எடுத்து நறுக்கி அதனை 4 கப் நீரிலிட்டு அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து கொதிக்கவிடவும். 4 கப் நீர் 1 கப்பாக வற்றும்வரை காய்க்கவும். பின் வடிகட்டி எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை குடித்துவர வெள்ளைப்படுதல் நீங்கும்.

  அருகம்புல் தண்டுகளை நன்கு கூழ்போல அரைத்து ஒரு கொட்டைப்பாக்களவு எடுத்துக்கொள்ளவும். இதனை 1 கப் பசுந்தயிருடன் கலந்து காலையில் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட்டுவர வெட்டை மட்டையாகும்.

  வயிற்றுப்புண் குணமாக.

  வயிற்றுப்புண்களால் வேதனைப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள் 20 மி.லி அருகம்புல் தண்டுகளை இடித்தெடுத்த சாற்றுடன் சம அளவு நீர்சேர்த்து இதனுடன் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வர 2 மாத காலத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.

  அறுகம்புல் பானம்.

  • இலைகள் நீக்கிய அறுகம்புல் தண்டு - ஒரு கைப்பிடி.
  • இஞ்சி - சிறியதுண்டு.
  • தண்ணீர் - தேவையான அளவு.

  செய்முறை :- அறுகம்புல்லை நன்கு சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி துண்டையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்தெடுக்கவும்.

  அறுகம்புல் சாற்றுடன் இஞ்சிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

  இதனுடன் சிறிது தேன்கலந்து வெறும் வயிற்றில் காலை, மாலை பருகிவரலாம்.

  Arugampul juice

  அறுகம்புல் பானம்.

  [மற்றொரு வகை]

  • இலைகள் நீக்கிய அறுகம்புல் தண்டு - 1 கைப்பிடி.
  • மிளகு - 5 எண்ணிக்கை.
  • வெள்ளைப்பூடு அரிசி - 2 எண்ணிக்கை.

  இம்மூன்றையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு நீர்விட்டு அடித்து சாறு பிழிந்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

  அருகம்புல் ஜூஸ் ரெடி.

  ஜூஸ் என்றால் அது சுவைக்க வேண்டுமல்லவா.. சுவைக்காக 2 டீஸ்பூன் தேன் கலந்துகொள்ளுங்கள்.

  வெறும்வயிற்றில் இதனை சாப்பிட்டுப்பாருங்கள்..

  பலன்களோ பலப்பல..

  இது உங்களின் சோர்ந்த மனதை ஜோராக்கும். உடல் வெப்பத்தையும் கூலாக்கும். ஹீமோகுளோபின் அளவை நூறாக்கும், நரம்புதனை நாராக்கும். கொழுப்பையும் கரைத்து நீராக்கும். சீறுநீரகக் கல்லை தூளாக்கும், பார்வைதனை கூராக்கும். நோய்க்கிருமிகளை கூறாக்கும். பித்தத்தைக்கூட பாழாக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும். மெலிந்த உடலை ஆளாக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக துவண்டு கிடப்பதையும்கூட நேராக்கும். 😆😋😍...

  கண் குளிர்ச்சிக்கு அறுகு எண்ணெய்.

  • அறுகம்புல் சமூலம் (வேர் உட்பட முழு செடி) - 200 கிராம்.
  • சீரகம் - 100 கிராம்.
  • மிளகு - 150 கிராம்.
  • சுத்தமான நல்லெண்ணெய் - 2 லிட்டர்.

  அறுகம்புல், சீரகம், மிளகு இம்மூன்றையும் தனித்தனியாக நன்கு இடித்து நல்லெண்ணையுடன் கலந்துகொள்ளவும். இந்த கலவையை இரண்டுவாரம் கடும் வெயிலில் வைத்துவரவும். அதன்பின் வடிகட்டி எண்ணெய்யை பிரித்தெடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  இதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு அரைமணிநேரம் கழித்து குளித்துவர கண்நோய்கள் நீங்கி கண்கள் குளிர்ச்சி பெறும்.

  அறுகு வேர் தைலம்.

  • அறுகம் வேர் - 1 பிடி.
  • நல்லெண்ணெய் - 500 மி.லி.
  • கோரைக்கிழங்கு - 10 கிராம்.
  • பூமி சர்க்கரைக்கிழங்கு - 10 கிராம்.
  • அமுக்கிரா கிழங்கு - 10 கிராம்.

  அறுகம் வேருடன் மூன்று வகையான கிழங்குகளையும் பசும்பால்விட்டு அரைத்து நல்லெண்ணையுடன் கலந்து கருகாமல் தைல பக்குவமாக காய்ச்சி இறக்கவும். நன்கு ஆறியபின் வடிகட்டி காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  உபயோகிக்கும் முறை :- தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து அரை மணிநேரம் ஊறவிட்டு அதன்பின்பு குளிக்கவும். வாரம் ஒருமுறை உபயோகித்தால் போதுமானது.

  தீரும் நோய்கள் :- பித்தம், வாதம், மேக காங்கை, கபால சூடு, மூல சூடு, நீர்க்கடுப்பு நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.

  அறுகம்புல் சாறு தீமைகள்.

  இதுவரையில் அறுகம்புல்லின் நன்மைகளை மட்டுமே பார்த்துவந்த நாம் அதன் தீமைகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறு அறிந்துகொண்டால்தான் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இதனை பயன்படுத்தும் நுட்பத்தையும் நம்மால் விளங்கிக்கொள்ளமுடியும். எனவே நாம் இனி அறுகம்புற்களால் நம் உடலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளையும், பிரச்சனைகளைக் களையும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

  சிலருக்கு அறுகம்புல் சாறு சாப்பிட்டால் தலைவலி, தலைச்சுற்று முதலிய பாதிப்புகள் ஏற்படலாம். இன்னும் சிலருக்கோ வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சிலருக்கு பசியில்லாத நிலைமை, அலர்ஜி, காய்ச்சல்கூட ஏற்படலாம். இன்னும் சிலருக்கோ தோலில் சொறி மற்றும் எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். இதற்கு காரணம் அறுகம்புல்லின் "இலைகள்". 

  அறுகம்புல்லின் இலைகளில் ஒவ்வாமை ஏற்படுத்தும் சில மூலக்கூறுகள் உள்ளதாதலால் பலபேர்களுக்கு இதன் இலைகள் ஒத்துக்கொள்வதில்லை. 

  அறுகம்புல்லை மருந்தாக பாவிக்க பரிந்துரைக்கும் சித்தர்களும்கூட பானம் மற்றும் உள்ளுக்குள் அருந்தும் மருந்துகள் தயாரிக்க அறுகம்புல்லின் இலைகளை நீக்கிவிட்டு அதன் தண்டுகளையும் வேர்களையும் மட்டுமே பயன்படுத்தும்படி வலியுறுத்துகின்றனர்.

  உள்ளுக்குள் சாப்பிடும் மருந்துகள் மற்றும் பானங்களுக்கு தண்டுகள் மற்றும் வேர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இலைகளை பயன்படுத்துதல் கூடாது.

  வெளிப்பூச்சு மருந்துகள், தைலங்கள் மற்றும் எண்ணெய் வகைகளுக்கு மட்டும் இலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  இதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் கரும்பு ஜூஸை எடுத்துக்கொள்வோம். கரும்பு ஜூஸ் எதைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது? கரும்பின் தண்டினைக்கொண்டா? அல்லது அதன் இலைகளைக் கொண்டா? தண்டிலிருந்துதானே தயாரிக்கப்படுகிறது. இந்த விதிமுறை அறுகம்புல்லிற்கும் பொருந்தும். ஏனெனில் அறுகம்புல் மற்றும் கரும்பு இரண்டுமே புல்வகையை சேர்ந்த தாவரங்கள்தான்.

  ஒருவேளை கரும்பு தண்டுடன் அதன் இலைகளையும் சேர்த்து கரும்புஜூஸ் தயாரிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை குடிக்கும் நம்முடைய  நிலைமை என்னவாகும்.. கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.. அதுபோலத்தான் அறுகம்புல் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜூஸும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதே. இதைநான் சொல்லவில்லை சித்தர்களே சொல்கிறார்கள்.

  எனவே, கடைகளில் விற்கப்படும் அறுகம்புல் ஜீஸ் தண்டுடன் இலைகளும் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதாலேயே இம்மாதிரியான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  எனவே, கடைகளில் விற்பனை செய்யப்படும் அறுகம்புல் ஜூஸை தவிர்த்து நீங்களே வீடுகளில் அறுகம்புல்லை சேகரித்து அதன் இலைகள் மற்றும் கணுக்களை நீக்கி தண்டுகளை மட்டும் பயன்படுத்தி பானம் தயாரிக்கவும். 

  இவ்வாறு இலைகள் மற்றும் கணுக்களை நீக்கி தண்டுகளை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானங்களே உடலுக்கு தீங்குவிளைவிக்காது. நன்மை மட்டுமே செய்யும் என்பதனை புரிந்துகொள்க. தண்டுடன் இலைகளையும் சேர்த்து பயன்படுத்தி தயாரிக்கப்படும் அருகம்புல் பானம் முற்றிலும் வீணே!

  இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பானங்களில் அறுகு தண்டுகளுடன் போதிய அளவு நீர்விட்டு அரைத்து பிழிந்தெடுத்த சாறுகளை பயன்படுத்தினால் மட்டுமே இப்பகுதியில் கூறப்பட்டுள்ள முழுப்பலன்களும் கிடைக்கும். மாறாக இலைகளையும் சேர்த்தே அரைத்து பிழிந்தெடுக்கப்படும் சாறுகளினால் எந்தவிதமான பலன்களும் ஏற்படப்போவதில்லை என்பதனை நினைவில் கொள்ளவும்.

  நமக்கு தேவையான அறுகம்புற்களை நம் வீட்டு தோட்டங்களிலேயே பயிரிட்டு பலன் பெறலாம். அடுத்து அறுகுதோட்டம் அமைப்பது எப்படி என்பதனை பார்ப்போம்.

  அறுகம்புல் பயிரிடுதல்.

  நிலம் தயார் செய்தல்.

  அறுகம்புல் பயிரிடவேண்டிய இடத்தை முதலில் மண்வெட்டியால் நன்கு கொத்தி அதிலுள்ள தேவையில்லாத கற்கள், புற்கள், களைச்செடிகள் மற்றும் கோரைக்கிழங்குகள் முதலியவைகளை நீக்கவேண்டும்.

  அதன்பின் 1 சதுரமீட்டருக்கு 2 கிலோ என்ற அளவில் மக்கிய மாட்டுச்சாணம், எரு முதலியவைகளை தூவி நிலப்பரப்பை சமன்செய்யவும்.

  அவ்வாறு நிலத்தை சமன்படுத்தும்போது மிகமுக்கியமான ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். அதிக மழைபொழிவு ஏற்படும் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்காதபடிக்கு வடிகால் வசதி ஏற்படுத்தும் பொருட்டு நிலத்தை சிறிது சரிவுகொடுத்து அமைக்கவேண்டியது அவசியம்.

  இவ்வாறு அமைத்த நிலத்தில் ஒருசில நாட்கள் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் படும்படியாக நீர்தெளித்துவாருங்கள். இதனால் சிலநாட்களில் அப்பகுதியில் மண்ணில் புதையுண்டு இருக்கும் விதைகளிலிருந்து களைச்செடிகள் முளைவிட ஆரம்பிக்கும். அதனை பிடுங்கி அப்புறப்படுத்தவும். அதன்பின் மீண்டும் ஒருதடவை நிலத்தை கொத்தி சமன்படுத்தவும்.

  நடவுமுறை.

  குளம் மற்றும் ஆற்றங்கரையோரம் வளர்ந்துநிற்கும் அறுகம்புற்களை வேருடன் கொண்டுவந்து 5 செ.மீ இடைவெளிவிட்டு நடவேண்டும். புதிய வேர்களை நிலத்தில் பதிக்கும்வரை அவைகள் காய்ந்துபோகாமல் இருக்க வைக்கோல் கொண்டு மூடவேண்டும். கூடவே பூவாளியால் நீர் தெளித்துவர வேண்டும்.

  தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒருமுறை நீர்ந்தெளித்துவருவது அவசியம். இவ்வாறு செய்துவர 15நாட்களில் புற்கள் துளிர்விட ஆரம்பித்துவிடும். குறுகிய காலத்திற்குள் தரையில் படர்ந்து வேர்பரப்பி தன்னுடைய அழகான பச்சை பட்டுக்கம்பளத்தை விரித்துவிடும்.

  உரமிடுதல்.

  வருடம் இரு முறை உரமிட வேண்டும். ஒரு சதுரமீட்டருக்கான அளவு..

  • நன்கு மக்கிய மாட்டுஎரு - 1கிலோ .
  • அமோனியம் சல்பேட் - 30 கிராம்.
  • சூப்பர் பாஸ்பேட் - 15 கிராம்.
  • மியூரேட் - ஆப் - பொட்டாஷ் - 15 கிராம்.

  இவைகளை ஒன்றாக கலந்து ஒரே சீராக தூவ வேண்டும். உரமிட்டவுடன் அதிக அளவு நீர்பாய்ச்ச வேண்டும்.

  Durva grass cultivation

  சில நேரங்களில் புற்களின் பசுமைத்தன்மை நீங்கி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். நிலத்தில் இரும்பு மற்றும் மாங்கனீசு பற்றாக்குறை இருந்தால் இப்படி ஏற்படும். இந்த பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய 100 சதுரமீட்டருக்கு 25 கிராம் "பெரஸ்சல்பேட்" என்னும் உப்பை 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்துவரலாம்.

  களைகளை களைதல்.

  பெரும்பாலும் களைகளாக கோரைச்செடிகள் வளர்வதற்கான வாய்ப்புகள்  அதிகம். கோரைக்கிழங்குகளை முற்றிலுமாக ஒழிப்பது கடினம். எனவே பொறுமையாக கைகளால் கிழங்குகளை அகற்ற முயற்சி செய்யலாம். அல்லது அன்சார் 529 என்னும் களைக்கொல்லியை 1 லிட்டர் நீரில் 3 மில்லி என்னும் விகிதாசாரத்தில் கலந்து தெளிக்கலாம்.

  கோரைக்கிழங்குகள் அல்லாமல் வேறுவிதமான களைகள் இருந்தால். 2-4D என்னும் களைக்கொல்லியை பயன்படுத்தலாம்.

  இங்கு அறுகம்புல் உணவாக பயன்படுவதால் களைக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம்.

  பூச்சிகளை கட்டுப்படுத்த.

  இதனை பெரும்பாலும் பூச்சிகள் தாக்குவதில்லை என்பதால் அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பூச்சி பாதிக்கும் பட்சத்தில் பூச்சி மருந்துகளை உபயோகப்படுத்தாமல் இயற்கையான முறைகளில் தீர்வுகாண்பது சிறப்பு.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. எண்ணற்ற பயன்கள்... அருமையான விளக்கங்கள்... நன்றி...

   பதிலளிநீக்கு
  2. சிவா,
   அறுகம்புல்லை குறித்து வியத்தகு பல தகவல்களை சேகரித்து வழங்கிய விதம் பாராட்டுக்குரியது.இங்கே சில வருடங்களுக்கு முன் சில பழசாறு விற்பனை கடைகளில் ஒருவகை புல்லின் சாற்றை உடனுக்குடன் பிழிந்து விற்றுவந்தார்கள், சிலர் அதை வாங்கி பருகியதையும் பார்த்திருக்கின்றேன்.
   நீங்கள் சொல்வதுபோல் சரியான புல்லை இனங்கண்டு அறிந்து அதை முறையாக பயன்படுத்துதல் அவசியம்.

   வாழ்த்துக்கள்.

   கோ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக ! நண்பரே ... பதிவு உங்களுக்கு பயனளித்தது மகிழ்ச்சி ... தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி !

    நீக்கு
  3. விளக்கமான பதிவு. நன்றி. அருகம்புல் விதை எங்கு கிடைக்கும்? கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் கிடைக்கவில்லை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. KALAI ... தங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் நன்றி நண்பரே!...

    அருகம்புல்லில் பல்வேறுவகை இனங்கள் உள்ளன என பார்த்தோமல்லவா? அவைகளில் பல அழகுக்காக (புல்தரை) வளர்க்கப்படுபவை. அவைகளின் விதைகளும் பல்வேறு பெயர்களில் அமேசான் போன்ற online தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அவைகளை ஆர்டர் செய்து வாங்குவதற்கு முன் ஒர்ஜினல் அருகம்புல் விதைதானா என பார்த்து வாங்குவது அவசியம். ஏனெனில் ஒரிஜினல் அருகம்புல் விதைகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இது கிடைப்பதற்கு அரிதான பொருள் என்பதால் இதன் 1Kg விதை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்வரை விற்கப்படுவதாக தெரியவருகிறது.

    விதைகளை வாங்கி ஏமாறுவதைவிட வயல்வெளி மற்றும் கோவில் வளாகங்களில் எளிதாக கிடைக்கின்ற அருகம் புற்களை வேரோடி பிடுங்கிவந்து தோட்டங்களில் நட்டு நீர்விட்டு வளர்ப்பதே எளிதான சிறந்த வழி. சில மாதங்களிலேயே இவை பல்கி பெருக ஆரம்பித்துவிடும். நன்றி!

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.