"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஆடு தீண்டாப்பாளை - aadu theenda palai - Aristolochia bracteolata.

ஆடு தீண்டாப்பாளை - aadu theenda palai - Aristolochia bracteolata.

ஆடு தீண்டாப்பாளை.

உலகில் பல லட்சக்கணக்கான தாவர இனங்கள் உள்ளன என்பதனை நாம் அறிவோம்.

அவைகளில் சில நூறு தாவர இனங்கள் மட்டுமே நோய் நீக்கும் பண்புகளை கொண்டுள்ளன. இவ்வகை தாவரங்களையே மருத்துவத் தாவரங்கள் என்றும், "மூலிகைகள்" என்றும் பெயரிட்டு அழைத்துவருகிறோம்.

அவைகளில் ஒன்றுதான் நோய்நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் "ஆடுதீண்டாப்பாளை" என அழைக்கப்படும் "பங்கம்பாளை" தாவரம்.

மூலிகை வகையை சேர்ந்த இத்தாவரம் ஏன் "ஆடுதீண்டாப்பாளை" என அழைக்கப்படுகிறது என்பது பற்றியும், இத்தாவரத்திலுள்ள மருத்துவகுணம் மற்றும் இதில் அடங்கியுள்ள நன்மை, தீமைகளைப்பற்றியும் இப்பதிவின் மூலமாக விரிவாகத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Aadu theenda palai.

திணை:- தாவரம்.

தாவர பிரிவு:- பூக்கும் விதை தாவரம் - Angiosperms.

துணை பிரிவு:- மேக்னோலிட்ஸ் - Magnoliids.

வரிசை:- பைபரேல்ஸ் - Piperales.

குடும்பம்:- அரிஸ்டோலோச்சியாசி - Aristolochiaceae.

துணைக்குடும்பம்:- அரிஸ்டோலோச்சியோடியே - Aristolochioideae.

பேரினம்:- அரிஸ்டோலோச்சியா - Aristolochia.

இனம்:- A. bracteolata.

  தமிழ் பெயர்க்காரணம்.

  இதனுடைய தமிழ் பெயர் காரணத்தை தெரிந்துக் கொள்வதற்கு முன்னால் இத்தாவரத்தின் குடும்ப பெயர், துணை குடும்பம், பேரினம், இனம் ஆகியவைகளின் பெயர்களை கூர்ந்து கவனியுங்கள்! அனைத்துமே "அரிஸ்டோலோச்சி" (Aristolochia) என்ற ரீதியில் அமைந்துள்ளதை நீங்கள் காணலாம். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

  இந்தவகை தாவரங்கள் எல்லாம் "அரிஸ்டோலோச்சிக் அமிலம்" (aristolochic acid) என்னும் ஒருவகை அமிலத்தை தங்கள் இலை, தண்டு, வேர் என அனைத்துப் பகுதிகளிலும் கொண்டுள்ளன. அதனால்தான் இவ்வகை தாவரங்களை "அரிஸ்டோலோச்சியாசி" என்னும் பிரிவின்கீழ் தனியாக வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

  சரி, இந்த அரிஸ்டோலோச்சிக் அமிலத்தால் நமக்கு என்ன நன்மை என்று கேட்கிறீர்களா?

  ஒரு நன்மையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இதனால் தீமைகளே அதிகம். சரி இதுபற்றி பின்னால் பார்ப்போம். இப்பொழுது இம்மூலிகையின் தமிழ் பெயர் காரணத்தைப்பற்றி மட்டும் பார்ப்போம்.

  ஆடு தீண்டாப்பாளை - Aadu theenda palai - Aristolochia bracteolata.

  தமிழில் மட்டுமல்ல மலையாள மொழியிலும் இது ஆடுதீண்டாப்பாளை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆடுகளின் மற்றொரு பெயர் "மறி" என்பதால் (செம்"மறி" ஆடு) சில இடங்களில் இது "மறி தீண்டா மூலி" என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

  தரையோடு தரையாக படரும் கொடி வகையை சாராத செடி வகைகளை "படர் தாளை" என்றும் "படர் பாளை" என்றும் அழைப்பதுண்டு. இந்த படர் தாவரங்களை பொதுவாக ஆடுகள் மிக விரும்பி சாப்பிடும். ஆனால் அந்த ரகத்தை சேர்ந்த படர் தாவரமான இந்த செடியை மட்டும் ஆடுகள் தீண்டுவதேயில்லை. அதாவது சாப்பிடுவதில்லை. அதனாலேயே இதற்கு "ஆடு தீண்டாப்பாளை" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  பெயர் வைத்ததெல்லாம் சரிதான். ஆனால் ஆடுகள் ஏன் இதை சாப்பிடுவதில்லை என்று ஊருக்குள் விசாரித்தால் இதன் கசப்பு சுவை அதற்கு பிடிப்பதில்லையாம். அதனால்தான் சாப்பிடுவதில்லை என பதில் வருகிறது.

  கசப்பு சுவைக்கு பெயர்போன "வேப்பிலை"களையே ஆடுகள் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கின்றோம். நிலைமை இப்படியிருக்க "ஆடு தீண்டாப்பாளை" கசக்கிறது அதனால்தான் ஆடுகள் அவைகளைச் சாப்பிடுவதில்லை என்ற கூற்று நம்பும்படியாக இல்லையே என நமக்குள் லேசாக பொறிதட்ட.. அதனை ஆடுகளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் அவைகள் "மே... மே" என்று விடாமல் கத்துவதிலிருந்தே அவைகள் "மே"ய்வதைத்தவிர ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் நம்மிடம் டிஸ்கஸ் செய்வதற்கு தயாரில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

  எனவே இந்த பிரச்சனையை அறிவியல் துணைகொண்டு ஆராய களம் இறங்குவதற்கு முன்னால் ஆடு தீண்டாப்பாளை தாவரத்தைப்பற்றியான சில அடிப்படை விஷயங்களைப்பற்றி பார்த்துவிடுவோமா...

  மறி தீண்டா மூலி.

  தாவரவியல் பெயர்:- அரிஸ்டோலோச்சியா ப்ராக்டியோலாட்டா - Aristolochia bracteolata.

  தமிழ் பெயர் - ஆடுதீண்டாப்பாளை. (aadu theenda palai).

  வேறு பெயர்கள்:- ஆடு தொடாப்பாளை, ஆடு தின்னாப்பாளை, மறியுண்ணா மூலி, மறி தீண்டா மூலி, பங்கம் பாளை, அதல மூலி, பாதாள மூலி, வரச்சுண்டி, புழுக்கொல்லிப் பூண்டு.

  ஆங்கில பெயர்:- Bracteated birthwort, Pipewine, Worm killer.

  ஹிந்தியில்:- கிட்டாமரி - Kitamari.

  தாவரத்தின் தன்மை:- வெப்ப தன்மை மிகுந்தவை.

  சுவை:- கசப்பானவை.

  வாசனை :- விரும்பத்தகாத வாசனை.

  வகைகள்:- இந்த ஆடு தீண்டாப்பாளையானது "அரிஸ்டோலோச்சியாசி" என்னும் குடும்பத்தை சேர்ந்தது. இந்த குடும்பத்தில் சிறிதும் பெரிதுமாக 400 க்கும் மேற்பட்ட இன வகைகள் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது. 

  தாயகம்:- "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்னும் தத்துவத்தை பின்பற்றி வளரும் இனம். அரிஸ்டோலோச்சியாசி குடும்பத்தை சேர்ந்த இந்தவகை தாவரங்கள் சிற்சில மாற்றங்களுடன் 400 க்கும் மேற்பட்ட வகைகளாகப் பிரிந்து உலகின் பல்வேறு கண்டங்களில் வாழ்க்கை நடத்தி வருகின்றன.

  Aadu theenda palai - Worm killer

  வளரும் பருவநிலை.

  இது ஒரு வெப்பமண்டல தாவரமாகையால் வெப்ப மண்டல நாடுகளில் இவைகளைக் காணலாம். அனைத்து பருவ நிலைகளிலும் வளர்கின்றன. மழைக்காலங்களில் புதியதாக துளிர்க்கின்றன.

  காணப்படும் நிலப்பரப்புகள்.

  ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், சோமாலியா, தான்சானியா, மாலத்தீவு, இந்தியா, இலங்கை, மியான்மர் மற்றும் பல இந்திய துணை கண்டங்களில் காணப்படுகின்றன.

  காணப்படும் இடங்கள்.

  ஆறுகள், குளம், சமவெளிப்புதர்கள் மற்றும் பாலைவனங்களிலுள்ள புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. மணற்பாங்கான இடங்களிலும், கரிசல்மண் நிலங்களிலும் செழித்து வளர்கின்றன.

  பயன்பாடு.

  இதன் வேர், தண்டு, இலை, விதை ஆகியன சித்தா, ஆயுர்வேத மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீன பாரம்பரிய மருத்துவங்களில்தான் அதிகமாக வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  தாவரத்தின் தன்மை.

  இது பிற தாவரங்களின் மீது ஏறு கொடிபோல படர்ந்தோ அல்லது சம தளங்களின் மீது தன் கிளைகளைப் படரவிட்டோ வளரும் படர்கொடி வகையை சேர்ந்தது.

  10 முதல் 60 செ.மீ உயரம் வரை பிற மரங்களின் மீது ஏறு கொடியாக தொற்றி வளர்கிறது. அல்லது சமதளங்களில் சுமார் 2 மீட்டர் அளவில் படர்ந்து வளருகிறது. இதன் தண்டுப்பகுதி மென்மையானது. இலைகள் முதற்கொண்டு மொத்த விருட்சமும் விரும்பத்தகாத வாசனையை கொண்டுள்ளது. மேலும் இந்த செடியானது தொடர்ந்து பல ஆண்டுகள் உயிர் வாழும் இயல்புடையது.

  இலைகளின் தன்மை.

  இதன் இலைகளின் அமைப்பானது மாற்று இலையடுக்கில் அமைந்துள்ளது. கசப்பு சுவையுடையது. இலைகளின் வடிவம் சிறுநீரகத்தின் வடிவத்தை நினைவுபடுத்துவதுடன் சாம்பல் கலந்த பச்சை நிறத்தை கொண்டுள்ளன.

  இலைகள் 2.7 அங்குல அகலமும், 3.2 அங்குல அளவில் நீளத்தையும் கொண்டுள்ளன. இலைக்காம்புகள் 1.7 அங்குல நீளத்தை கொண்டுள்ளன.

  இதன் இலைகளை ஆடுகள்தான் தின்பதில்லையே தவிர மற்றொரு சிறிய உயிரினம் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றன. அது இந்தியாவில் பரவலாக காணப்படும் "பச்லியோப்டா ஹெக்டர்" (Pachliopta hector) என்னும் இனத்தை சேர்ந்த "Crimson Rose" (சிவப்பு உடல் அழகி) என்னும் வண்ணத்துப்பூச்சியின் லார்வாக்கள்.

  Pachliopta hector_Crimson Rose
  வண்ணத்துப்பூச்சி.

  இந்த லார்வாக்களின் ஒரே உணவு "அரிஸ்டோலோச்சியா" இன தாவரங்களின் இலைகள் மட்டுமே.

  Pachliopta hector larva
  வண்ணத்துப்பூச்சியின் லார்வா.

  மலர்களின் தன்மை.

  இதன் மலர்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. மலர்க்காம்பை அடுத்துள்ள அடிப்பகுதி உருண்டையாகவும், கூடுபோன்ற தோற்றத்துடனும் அதையடுத்த பகுதி குழாய் போன்ற அமைப்புடன் வெளிப்பக்கமாக திறக்கிறது. 

  இந்த பூ போன்ற அமைப்பிற்கு பிற பூக்களுக்கு இருப்பதுபோல தனியாக இதழ்களெல்லாம் இல்லை. குழாய் போன்ற அமைப்பே கொஞ்சம் நீண்டு இதழ்போன்ற அமைப்பை உருவாக்குகின்றன.

  ஆடு தீண்டாப்பாளை - aadu theenda palai - Aristolochia bracteolata.
  aadu theenda palai.

  இந்த அமைப்பானது நீண்டு விரிந்து நாக்கு போன்று நீண்ட கருஞ்சிவப்பு அல்லது அடர் ஊதா நிறத்திலான ஒரேயொரு இதழ்களைக் கொண்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. இந்த அமைப்பானது 0.5 செ.மீ அகலத்தையும் 5 செ.மீ நீளத்தையும் கொண்டுள்ளது.

  ஒரு இலை அச்சில் ஒரு பூக்களே உருவாகின்றன. ஆனால் சோமாலியாவில் காணப்படும் மற்றொரு வகையான ஆடு தீண்டாப்பாளை கொஞ்சம் வித்தியாசமானவை. ஏனெனில் இவைகள் ஒரு இலை அச்சில் 2 அல்லது 3 பூக்கள்வரை உற்பத்தி செய்கின்றன.

  இந்த பூக்கள் ஏன் காம்பை அடுத்த அடிப்பகுதியில் வெற்றிடத்துடன்கூடிய கும்பம் போன்ற "குமிழ்" அமைப்பையும், அதைத்தொடர்ந்து குழாய் போன்றதொரு அமைப்பையும், முடிவில் இதழ்போன்ற அமைப்பையும் கொண்டுள்ளன என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படுகிறதல்லவா? எல்லாம் காரணமாகத்தான்..

  ஆடு தீண்டாப்பாளை - aadu theenda palai - Aristolochia bracteolata.

  சொல்லப்போனால் உண்மையில் இவைகள் பூக்களே அல்ல.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?! கன்பியூஸ் ஆகாதீர்கள். இவைகள் ஒருவகையில் பூக்கள்தான் என்றாலும், "பூக்கள் வடிவிலுள்ள பொறிகள்" என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.

  எலிகளை ஏமாற்றிப் பிடிப்பதற்காக வைக்கப்படும் "எலிப்பொறி"யை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா.. அதுபோல இது பூச்சிகளை ஏமாற்றி பிடிப்பதற்கான "பூச்சி பொறி".

  பூச்சிகளை பொறிவைத்து பிடித்து என்ன செய்ய போகின்றன "கட்லெட்" போடப்போகிறதா? என்றால் இல்லை இல்லை.. இனப்பெருக்கம் செய்யப்போகின்றன. அதாவது அயல்மகரந்த சேர்க்கை செய்வதற்கான ஒரு குறுக்குவழி.

  Aristolochia bracteolata flower
  ஆடுதீண்டாப்பாளை மலர் அமைப்பு.

  பொதுவாக பூக்களானது பூச்சிகளின் மூலமாகவே அயல்மகரந்த சேர்க்கை செய்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த பூச்சிகளை கவர்ந்திழுக்க தன்னிடமுள்ள வாசனையையும், மதுவையும் (தேன்) பயன்படுத்துகின்றன.

  ஆனால் இந்த அடுதீண்டாப்பாளையோ தன்னுடைய மலர்களில் மதுவை பயன்படுத்தாமல் (மகா கஞ்சனா இருப்பான் போல) பொறியை பயன்படுத்துகின்றன.

  அட ஆச்சரியமா இருக்கே.. எப்படி?

  தொலைவிலிருந்து இதன் ஒற்றை இதழ் போன்ற அமைப்பை உண்மையான பூ என்று நம்பி வரும் சிறிய பூச்சிகள் வந்தவேகத்தில் அதில் அமர..

  உட்கார்ந்த பிறகுதான் அதனுடைய சிறு மூளையுடன் கூடிய பெருமூளை வேலைசெய்ய ஆரம்பிக்க.. 

  பூக்கள் என்றால் நிறைய இதழ்கள் இருக்குமே.. "ஒண்ணு இங்க இருக்கு இன்னும் ஒண்னு எங்க இருக்கு?" என்று நம்ம கவுண்டமணி கெட்டப்பில் அதன் மாஸ்டர் ஆஃப் மைண்ட் கேள்வி எழுப்ப..

  Aristolochia bracteolata flower fight

  அட ஆமா.. "அந்த இன்னொரு இதழ் எங்க இருக்கு" என்று பார்க்கும் ஆவலில் இடுப்பை லேசாக திருப்ப..

  அந்த இன்னும் ஒண்ணும் இதேதான் என்று தட்டுத்தடுமாறி புரிந்து கொள்வதற்கும் முன்னால்..

  கால் இடறி அந்த குழாய் போன்ற அந்த போர்வெல் அமைப்புக்குள் விழ..

  விழுந்த வேகத்தில் குழாய் வழியாக சென்ற பூச்சி "தொபுக்கடீர்" என்று "கும்பம்" போன்ற அந்த வெற்றிடமான குமிழ் போன்ற பகுதிக்குள் சென்றுவிட..

  அதன்பின்பே தேனுக்கு ஆசைப்பட்டு பாழுங்கிணற்றுக்குள் விழுந்து விட்டோமோ என்கின்ற யோசனையே அந்த பூச்சிக்கு வர...

  வகையாக மாட்டிக்கொண்ட அது எப்படியாவது இங்கிருந்து உயிர் தப்பவேண்டுமே என்கின்ற ஆவேசத்தில் குறுக்கும்மறுக்குமாக முட்டிமோதி அலைபாய..

  விழுந்துகிடப்பது பூவின் குமிழ் போன்ற அடிப்பகுதிக்குள் என்பதாலும், வெளியேறும் பகுதியோ குழாய் போன்று ஒடுங்கியது மட்டுமல்லாமல் பூச்சிகள் அவ்வளவு எளிதில் வெளியேற முடியாத வகையில் உள்பகுதியில் சிறுசிறு உரோமங்களைக் கொண்டிருப்பதாலும்..

  மிஸ்டர் பூச்சியாரோ எளிதாக வெளியேற வழியின்றி வெகுநேரம் முட்டிமோதி தட்டுத்தடுமாற..

  Aristolochia bracteolata flower.
  மலரின் நீள்வெட்டு தோற்றம்.

  இந்த களேபரத்தில் குமிழின் உள்ளே இருக்கும் சூல்முடிகளில் பூச்சியின் உடலில் ஒட்டியிருக்கும் மொத்த மகரந்தமும் அப்படியே அப்பிக்கொள்ள..

  பூச்சியின் சிறைபிடிப்பால் பிள்ளைத்தாச்சியாகப் போவதை எண்ணி அஞ்சுகத்தின் நெஞ்சமெல்லாம் மஞ்சுகத்தால் கிறுகிறுக்க..

  அடடே, பயபுள்ள இந்த களேபரத்திலும் மகரந்த சேர்க்கை அழகாக பண்ணுகிறதே என்று மலர்விழியாள் மகிழ்ந்திருக்க.. பாவம் அந்த பூச்சிக்கோ பகலெல்லாம் திண்டாட்டம்.. பாவி நம்ம பூவிழிக்கோ மனசெல்லாம் கொண்டாட்டம்..

  எப்படியோ தட்டுத் தடுமாறி  மலர்குழியில்... இல்லை இல்லை... மரணக்குழியில் இருந்து வெளிவந்த பூச்சியோ "போங்கடா நீங்களும் ஒங்க மண்ணாங்கட்டி தேனும்" என்று கத்திக்கொண்டே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடிக்க.. 

  மது விருந்து இல்லாமலேயே மணவிருந்து நடந்தேறிய மகிழ்ச்சியில்...

  ஒரு பூச்சியின் தயவால் இன்று காயாகி, கனியாகி, தாயாகப்போகும் பூரிப்பில்...

  இதோ தன் மணிவயிற்றில் கருவை சுமக்க தயாராகிவிட்டாள் மறி தீண்டா மூலியவள். மதுவில்லா பாவி இவள்!

  இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகத்துடன் கூடிய ஆதங்கம் ஏற்பட்டிருக்கலாம். அது யாதெனில்... பாவம் இந்த தேனீக்கள்... ஆசை ஆசையாக மதுவை தேடி வரும் ஈக்களுக்கு ஒரு துளி தேனைக்கூட உற்பத்திசெய்து கொடுக்காமல் இப்படி ஓரவஞ்சனை பண்ணுகிறதே இந்த தாவரம்... ஒரு துளி தேனினால் இதனுடைய குடியா முழுகிவிடப்போகிறது... என்ன கொடுமை சார் இது என்கிற கோபம்தானே அது... கரெக்ட்...

  உங்கள் கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் உங்களின் கோபம் நியாயமான கோபமாக கூட தெரியலாம். ஆனால் அந்த தாவரத்தின் பக்கத்திலிருந்து பார்த்தால் உண்மையில் அவைகள் தேன்களை உற்பத்தி செய்யாததின் மூலம் அந்த தேனீக்களுக்கும், பூச்சிகளுக்கும் பெரிய அளவில் நன்மைகளையே செய்கின்றன.. நன்மைகள் என்றால் சாதாரண நன்மைகள் அல்ல. உயிர்ப்பிச்சை கொடுத்து அவைகளின் உயிரையே காப்பாற்றி கொடுக்கும் அளவிற்கு நன்மை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!.

  தேனீக்களுக்கு மட்டுமல்ல... காடுகளில் வாழும் கரடிகளுக்கும், குரங்குகளுக்கும் ஏன் மனிதர்களுக்கும்கூட உயிர்ப்பிச்சை கொடுப்பதின்மூலம் பெரிய அளவில் நன்மை செய்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!!!...

  மைண்ட் வாய்ஸ் :- "இன்னா சொல்ற நைனா... நன்மையா?!! அதுவும் கரடி, கொரங்கு அப்புறம் இந்த கஸ்மாலம் மனிதர்களுக்கும் சேர்த்தா? இன்னாயா சொல்ற நீ... இதில் தேன் இல்லாததற்கும் காட்டில் வாழும் கரடி, குரங்குகளுக்கும் இன்னாயா சம்பந்தம்?.. வரவர உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா... ஒரு கன்றாவியும் புரிய மாட்டேங்குது? ஓங்கி விட்டேன்னு வச்சுக்கோ வாய் வெத்தல பாக்கு போட்டுரும்... அம்புட்டுதேன்..."

  "ஐயய்யே... இதுக்கெல்லாம் போயி டென்ஷன் ஆகாத தல.. ரிலாக்ஸா இருப்பா.. இந்த கட்டுரையின் முடிவில் உன்னோட சந்தேகம் அத்தனைக்குமே விடை இருக்கீதுபா. நெசமாதான் சொல்லுறேன்... நம்மள கொஞ்சம் கூலா கேண்டில் பண்ணு தல..."

  தேனீக்கள் என்றால் உடனேயே நாம் சாதாரணமாகப் பார்க்கும் பெரிய தேனீக்களை கற்பனை செய்துகொள்ளாதீர்கள். தேனீக்கள் வகைகளில் பல சிறியரக தேனீக்களும் உள்ளன. இவைகளின் உடலமைப்பு சாதாரண தேனீக்களைவிட ஆறு அல்லது எட்டு பங்கு அளவு சிறியதாக இருக்கும்.

  இந்த சிறிய ரக தேனீக்களை பொதுவாக கிராமப்புறங்களில் "கொசுவந்தேனி" அல்லது "கொசு தேனீக்கள்" என்று அழைப்பார்கள். இவைகள் பெரிய தேனீக்களைப்போல கொட்டுவதில்லை. ஏனெனில் இவைகளிடம் கொட்டக்கூடிய விஷக்கொடுக்குகள் இல்லை. எனவேதான் இவைகளை ஆங்கிலத்தில் "stingless bees" (கொட்டாத தேனீக்கள்) என அழைக்கின்றனர்.

  ஆடு தீண்டாப்பாளை - Aadu theenda palai - Aristolochia bracteolata.
  கொசு தேனீக்கள்.

  இவைகளும் பூக்களிலிருந்து தேனை சேகரித்து மரங்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளில் கூடுகட்டி அவற்றில் ஏராளமான தேன்களை சேமித்து வைக்கின்றன. இவைகளிலும் பல ரகங்கள் உள்ளன. இம்மாதிரியான சிறிய உடலமைப்பைக்கொண்ட தேனீக்களும், பூச்சிகளுக்குமே இம்மலர்களிடம் வந்து வகையாக மாட்டிக்கொள்கின்றன.

  சரி,... இனி மலரை பற்றி பார்ப்போம்... இம்மலர்கள் "தேன்"களை ஏன் உற்பத்தி செய்வதில்லை என்பதனை பார்ப்பதற்கு முன்னால் ஆடுதீண்டாப்பாளையினுடைய காய்களின் அமைப்பையும், அதன் தன்மைகளையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம் வாருங்கள்.

  காய்களின் தன்மை.

  மகரந்த சேர்க்கையினால் கருக்கொண்ட சூலகம் சிலநாட்களிலேயே காயாக மாறி மிதமான சாம்பல் நிறங்களை பெறுகின்றன. காய்கள் ஒவ்வொன்றும் 1 அங்குல நீளத்தை கொண்டுள்ளன. உள்ளே ஏராளமான தட்டையான விதைகளை வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தனித்தனி அறைகளை கொண்டுள்ளன.

  Aristolochia bracteolata pods
  ஆடுதீண்டாப்பாளை - காய்கள்.

  காலங்கள் செல்ல செல்ல..

  காய்கள் கனிகின்றன.

  கனிந்தவை காய்கின்றன.

  காய்ந்தவை வெடிக்கின்றன.

  இதோடு காய்களின் பணி முடிந்துவிடவில்லை. காய்கள் காய்ந்து மேல் தோடுகள் வெடித்தாலும்கூட மனம் சோர்வடையாமல்... ஒரு தாய் தொட்டிலில் தன்குழந்தையை கண்ணும் கருத்துமாக சுமப்பதுபோல... விதைகளை சிந்தாமல் சிதறாமல் பாதுகாப்பாக சுமந்தபடி மழைக்காலத்திற்காக பொறுமையாக மாதக்கணக்கில் காத்திருக்கின்றன.

  Aristolochia bracteolata dried pods
  உலர்ந்த காய்கள்.

  விதைகளின் தன்மை.

  விதைகள் முக்கோண வடிவத்தில் மிகவும் தட்டையாக 1.5 செ.மீ அகலத்திலும் 2.5 செ.மீ நீளத்திலும் உள்ளது. இவைகளை மேலிருந்து கீழே போட்டால் இதனுடைய வடிவமைப்பின் காரணமாக பிற விதைகளைப்போல் நேரடியாக பூமியில் வந்துவிழாமல் சுழன்று சுழன்று பூமியில் இறங்குகின்றன.

  இந்த விசேஷ வடிவமைப்பானது மழை வருவதற்கும் முன்னால் பலமாக சுழன்று அடிக்கக்கூடிய காற்றைப் பயன்படுத்தி வெகுதூரங்களுக்கு இவைகளால் ட்ராவல் செய்ய உதவுகிறது. இதன்மூலம் தன் இனத்தை வெகுதூரங்களுக்கு இவைகளால் கொண்டுசெல்ல முடிகிறது.

  எனவேதான் காய்கள் காய்ந்து வெடித்தபின்பும்கூட விதைகள் கீழே வீழ்ந்துவிடாமல் கவனமாக சுமந்தபடி வழிமேல் விழிவைத்து சுழன்றடிக்கும் காற்றுக்காக காத்திருக்கின்றன காய்ந்த காய்கள்.

  மாதங்கள் உருண்டோட.. வான்வெளியில் மேகங்களும் இருண்டோட.. கயல்விழியாள் காத்திருப்பு கனவாக போகவில்லை..

  நேற்றோடு வந்த நெடுங்காற்றோடு கணதூரம்வரை பயணப்பட்ட விதைகளோ தோட்டோடு கொஞ்சம் தூரமாய் சென்று விழ..

  காத்திருந்த கார்மேகமோ கவிதையாய் மழை பொழிய..

  பன்னிரு நாட்களிலே பரிவுடன் ஒரு உருவாய் திடுமெனவே கரு வளர்ந்து பயிராகுது வந்து பாரீர்.

  Aristolochia bracteolata seeds
  ஆடு தீண்டாப்பாளை - விதைகள்.

  இனப்பெருக்கம்.

  விதைகள் மூலமாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. எடைகுறைந்த தட்டையான இதன்விதைகள் பலமாக வீசும் மழைக்காற்றுகள்மூலம் பல மீட்டருக்கும் அப்பால் எடுத்துச் செல்லப்படுவதால் இவைகள் தூரமான இடங்களுக்கும் எளிதாக பரவுகின்றன.

  வேர்களின் தன்மை.

  பூச்சிக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளதாக கூறப்படுகிறது. வேர்களை சுத்தம்செய்து நிழலில் நன்கு உலர்த்தி இடித்து தூள் செய்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். அல்லது வேரை நீர்விட்டு அரைத்து 2 கிராம் சாப்பிட பூச்சிக்கடி பாதிப்புகள் நீங்குமாம்.

  தாவரத்தில் அடங்கியுள்ள வேதியியல் பொருட்கள்.

  இலைகளிலுள்ள வேதிப்பொருட்கள் :-

  TAMIL ENGLISH
  செரில் ஆல்கஹால் Ceryl alcohol
  அரிஸ்டோலோச்சிக் அமிலம் Aristolochic acid
  பீட்டா-சிட்டோஸ்டெரால் Beta-sitostero
  ஐசோரிஸ்டோலோகிக் Isoaristolochic
  ஆல்கலாய்டு அரிஸ்டோலோக்லென் Alkaloid aristoloclen
  கார்போனைல் Carbonul
  ஐசோவனில்லின் Isovanilin

  காய்களிலுள்ள வேதிப்பொருட்கள் :-

  TAMIL ENGLISH
  செரில் ஆல்கஹால் Ceryl alcohol
  அரிஸ்டோலோச்சிக் அமிலம் Aristolochic acid
  பீட்டா-சிட்டோஸ்டெரால் Beta-sitostero

  வேர்களிலுள்ள வேதிப்பொருட்கள் :-

  TAMIL ENGLISH
  அரிஸ்டோலோச்சிக் அமிலம் Aristolochic acid
  பொட்டாசியம் குளோரைடு Potassium chloride
  நைட்ரேட்டுகள் Nitrates

  மருத்துவத்தன்மை.

  இலை, வேர், சமூலம் அனைத்துமே மருத்துவத்தன்மை மிகுந்தவையாக கூறப்படுகிறது. இந்தியா, ஆப்ரிக்கா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் இந்த மூலிகை பயன்பாட்டில் உள்ளது.

  இதை பொதுவாக குடல்புழுக்களை அகற்றவும், தோல் நமைச்சல் மற்றும் பூச்சிக்கடி விஷத்திலிருந்து நிவாரணம் பெறவும் இந்தியா மட்டுமல்லாது நைஜீரியா, எத்தியோப்பிய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவர்களாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

  இந்த மூலிகையானது எண்பது வகையான வாதரோகங்களையும் குணப்படுத்துகிறதாம். இதுமட்டுமல்ல கருங்குஷ்டம், கரும்படை, குடற்புழு, குடல்புண், தோல் நோய்கள், உடல் சோர்வு, சிலந்திப்புண், கரப்பான், வாதநோய்கள், சொரியாசிஸ், அரையாப்புக்கட்டி, தலைவலி, மேகவாய்வு முதலியன குணமாவதோடு பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளும் நிவர்த்தியாகுமாம்.  

  அதுமட்டுமல்ல ஆண்களுக்கு விசேஷமாக தாது விருத்தியோடு தாது புஷ்டியையும் கொடுக்கிறதாம். அடேங்கப்பா!! (உடனே சந்தோஷத்தில் துள்ளி குதிக்காதீர்கள்.. உங்களுக்கெல்லாம் பின்னாடி இருக்குடீ "ஆப்பு" ...)

  இது வயிற்றிலுள்ள புழுக்களை கொல்வதில் சிறப்பானதாக கருதப்படுகிறது. எனவே இதனை "புழுக்கொல்லிப்பூண்டு" எனவும் அழைக்கின்றனர்.

  சிரங்கு, கரப்பான், வண்டு கடி மற்றும் பிறவகை தோல்நோய்களுக்கு இலைகளை அரைத்து மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

  மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கும் இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

  தலைநோய், பீனிசம் அகல.

  • ஆடுதீண்டாப்பாளை இலை சாறு - அரை லிட்டர்.
  • சுத்தமான நல்லெண்ணெய் - 1 லிட்டர்.

  மேற்குறிப்பிட்டுள்ள இரண்டையும் ஒன்று கலந்து அடுப்பில் வைத்து சிறு தீயால் பதமுற காய்ச்சி மெழுகு பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிடவும். 

  ஆறியவுடன் வடிகட்டி எடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும். 

  இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டுநாள் தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறியபின் குளித்துவர தலைவலி, தலைக்குத்து, பீனிசம் முதலியன அகலும்.

  இதன் இலைகளை பூச்சிக்கடித்த இடங்களில் அரைத்துப்பூச பூச்சிகளின் விஷம் அகலும். கருந்தேமல், கரப்பான், கரும்படை இவைகளின்மீது பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

  வயிற்றுப்பூச்சி அகல.

  ஆடுதீண்டாப்பாளை இலை மற்றும் தண்டுகளை நன்கு நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக எடுத்துக்கொள்ளவும்.

  இந்த பொடியை காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் அளவிலும், சிறியவர்களுக்கு 1 ஸ்பூன் அளவிலும் தேனில் கலந்து இரவில் கொடுத்து வெந்நீர் அருந்தச்செய்தால் வயிற்றுப்பூச்சி தொல்லைகள் அகலுகிறதாம்.

  (குழந்தைகள் ஜாக்கிரதை:- குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் நலனுக்கு இம்மருந்து ஏற்றதல்ல... எனவே கவனம் தேவை. இந்த எச்சரிக்கையையும் மீறி சிறியவர்களுக்கு இம்மருந்தை கொடுத்து அதனால் அவர்களின் உடலுக்கோ அல்லது உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நம்முடைய "கம்பெனி" பொறுப்பாகாது...) 😁😂😋.

  மேக வாய்வு நீங்க.

  5 பங்கு இலையுடன் அரை பங்கு நல்லமிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு இருவேளை உண்டுவர மேகவாய்வுகள் எதுவாக இருந்தாலும் அகலுமாம்.

  இதன் இலை, வேர்கள் மட்டுமல்ல விதைகளும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. காய்ச்சலை குணப்படுத்த விதைகளுடன் மிளகு சேர்த்து பக்குவப்படுத்தி கொடுக்கப்படுகிறது.

  சாகுபடி.

  தனியாக யாரும் இதனை நீரூற்றி வளர்ப்பதில்லை. ஏனெனில் இதன் தேவை மிகக் குறைவே. எனவே இயற்கையாக வளரும் இடங்களிலிருந்தே பெறப்படுகின்றன.

  ஆடுதீண்டாப்பாளையின்
  தீமைகள்.

  இதுவரையில் ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவ குணங்களைப்பற்றி தெளிவாக தெரிந்து கொண்டீர்களா?!.

  நல்லது..

  எதற்கும் ஒரு தடவை விசிலடித்து ஜோராகக் கைதட்டிக் கொள்ளுங்கள்.

  தட்டியாச்சா.. சரி.. இனி மெயின் மேட்டருக்கு வருவோம்.

  பொதுவாக நம் இந்தியாவில் "You Tube" போன்ற சமூக வலைத்தளங்களாகட்டும் அல்லது TV போன்ற வேறு மீடியாக்களாகட்டும் மூலிகைகளை பற்றி எடுத்துரைக்கும்போது அதன் நன்மைகளை மட்டுமே பட்டியலிடுகின்றன. ஆனால் அதனுள் ஒளிந்திருக்கும் தீமைகளைப்பற்றி அவைகள் வாய் திறப்பதேயில்லை.

  Aristolochia bracteolata_vijayakanth

  இங்கு ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். மூலிகை சம்பந்தப்பட்ட துறைகளில் நன்கு அனுபவம் உள்ளவன் என்ற உரிமையில் சொல்கிறேன்.. மூலிகைகள் என்று வரும்போது அதில் 70 சதவீத மூலிகைகள் மட்டுமே உடலுக்கு முழு அளவில் நன்மை பயப்பவை. பக்க விளைவுகள் எதுவும் இல்லாதவை.

  ஆனால், அடுத்துள்ள 30 சதவீத மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்பவைதான் என்றாலும் முறையாக பயன்படுத்த தவறினால் தீங்கு விளைவிப்பவை. உடலுக்கு நிவர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பக்க விளைவுகளை கொண்டு வருபவை.

  எனவே, ஒரு மூலிகையைப் பற்றி ஏனோதானோ என்று தெரிந்து வைத்திருப்பதைவிட அதன் நன்மை தரும் விஷயங்களையும், தீமை தரும் விஷயங்களையும் ஒருசேர தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

  எனவேதான் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறளுக்கு ஏற்ப இங்கு பதிவிடும் அனைத்து விஷயங்களையும் அறிவியல் பூர்வமாகவே அலச வேண்டுமென முடிவெடுத்துள்ளதால் நன்மைகளை ஒங்கி உரைக்கும் அதே வேளையில் அதன் தீமைகளையும் வெளிப்படுத்த தவறுவதில்லை. எனவே இந்த ஆடுதீண்டா பாளையிலுள்ள தீமைகளையும் சிறிது அலசுவோம் வாருங்கள்.

  ஆடுகள் இந்த கொடியை சாப்பிடுவதில்லை அதனாலேயே இதற்கு "ஆடுதீண்டப்பாளை" என்று பெயர் வந்தது என்று ஆரம்பத்தில் பார்த்தோம் அல்லவா... நீங்களும் முன்பே பல சந்தற்பங்களில் இதனை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கலாம் அல்லவா!..

  ஆடுகள் இவைகளை தின்பதில்லை ஏன்? என்ற வினாவிற்கு விடையாக இவற்றின் இலைகள் கசப்பானவை அதனாலேயே ஆடுகள் இவைகளை தின்பதில்லை என்ற பதிலை கேட்டு நீங்களும் பலமாக தலையை ஆட்டிக்கொண்டு சமாதானம் அடைந்திருக்கலாம் அல்லவா!...

  ஆனால்... உண்மை அதுவன்று!!!.

  கசப்பு சுவைக்கு பெயர்போன வேப்பமரத்தின் இலைகளையே சப்புக்கொட்டி தின்கின்ற ஆடுகளுக்கு ஆடுதீண்டாப் பாளையினுடைய கசப்பு ஒரு பொருட்டே அல்ல. 

  அப்படியென்றால் ஆடுகள் ஏன் இவைகளை சாப்பிடுவதில்லை என்கிறீர்களா? 

  உங்களுக்கான பதில் ஒன்றே ஒன்றுதான்..

  மனிதர்களைப்போல ஆடுகளுக்கும் சாப்பாடு முக்கியம்தான்.. பசிக்குமில்ல.. ஆனால் அதைவிட "உசுரு முக்கியமுங்கோ"

  ஆடுகள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் என்னவாகும்?

  பெரிதாக ஒன்றும் ஆகாது. பாதையில் ஒழுங்காக சென்று கொண்டிருக்கும் ஆடுகள் ஓரிரு மாதங்களில் "பாடை"யில் போகவேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

  ஆடுகள் மட்டுமல்ல மனிதர்கள் சாப்பிட்டாலும் அதே கதிதான்.

  ஆடு தீண்டாப்பாளை - - Aristolochia bracteolata.

  "சொந்த காசில் சூனியம் வைத்தது போல" என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா.. அதை நிரூபிப்பதுபோல் அமைந்துள்ளதுதான் இந்த செடி.. சாரி.. நம்ம பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் "மூலிகை".

  தொடர்ந்து தின்றால் ஆடுகளின் உயிருக்கே உலைவைத்துவிடும். மனிதர்களுக்கும்தான். இதனை அதன் உள்ளுணர்வு எச்சரிப்பதால்தான் ஆடுகள் நமக்கேன் வம்பு என்று அதனை தீண்டுவதேயில்லை.

  (எது உடலுக்கு தீங்கு விளைவிப்பது எது நன்மை தருவது என அதன் வாசனையை வைத்தே கண்டறியும் திறனை இயற்கை அதற்கு கொடுத்துள்ளது.)

  அப்படி என்னதான் இந்த தாவரத்தில் இருக்கிறது என்கிறீர்களா..?

  விஷம்..

  ஆம்...

  மெல்லக் கொல்லும் விஷம்..

  இதைப்பற்றிய புரிதல் நமக்கு உள்ளதோ இல்லையோ.. ஆனால் ஆடுகள் அதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ளன... அதனாலேயே ஆடுகள் இதனை  சீண்டிப்பார்ப்பதே இல்லை.

  ஆனால், இதனை புரிந்துகொள்ளக்கூட திராணியற்ற நாமோ அவற்றின் இலைகள் கசக்கின்றன அதனாலேயே அவைகள் சாப்பிடுவதில்லை என்று யாராலும் கண்டறியமுடியாத சிதம்பர ரகசியத்தை கண்டறிந்து விட்டதுபோல் பெருமை பேசி திரிகின்றோம்.

  இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இதனால் நம்முடைய உடலுக்கு தீங்கு என்றால் ஏன் இதனை மூலிகை மருந்தாக உட்கொள்கிறோம் என்பதே..

  உண்மைதான், இது சந்தேகமில்லாமல் மூலிகை மருந்துதான்.. ஆனால் இது விருந்தல்ல மாறாக மருந்து என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

  இந்த மூலிகையை வெளிப்பூச்சாக பயன்படுத்தப்படும் கஷாயம், எண்ணெய் மற்றும் தைலங்கள் தயாரிக்கவே அதிகமாக பயன்படுத்த வேண்டுமென சித்தர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  தலையில் உள்ள பேன்களை ஒழித்துக்கட்டிட வேண்டுமா? ஒருசில நாட்கள் தலையில் தடவிவரலாம்.

  வயிற்றிலுள்ள பூச்சிகளை கூண்டோடு கைலாசம் அனுப்ப வேண்டுமா? ஓரிருநாட்கள் மட்டும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

  பாஃடீரியா, வைரஸ் இன்னும் சில நுண்கிருமிகளால் தோல்நோய்கள் அதிகரித்துள்ளதாக அறிகிறீர்களா? இதனை மேல்பூச்சாக பயன்படுத்தலாம்.

  எனவே, இது வெளி உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கான மூலிகை என்பதும், உள்ளுக்குள் மாதக்கணக்கில் தொடர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்ற மருந்து இதுவல்ல என்பதனையும் புரிந்துகொள்ளுங்கள்.

  தொடர்ந்து சாப்பிட்டால் என்னவாகும்?..

  சிதைந்துபோகும்..

  எது?..

  உங்கள் கல்லீரல்.

  ஓ.. மை.. காட்..

  உண்மையில் ஆடுதீண்டாப்பாளை திடுப்பென்று ஆளைக்கொல்லும் விஷச்செடி அல்ல. ஆனால் மெல்லக் கொல்லும் விஷம் ஒன்று இதில் ஒளிந்துள்ளது.

  அது என்ன?

  "அரிஸ்டோலோச்சிக்" அமிலம்.

  ஆம்.. இந்த அரிஸ்டோலோச்சிக் அமிலம் பாலூட்டிகளுக்கு ஆபத்தான பக்க விளைவுகளை தருவது என சந்தேகத்திற்கு இடமின்றி கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த "அரிஸ்டோலோச்சிக் அமிலம்" கல்லீரலுக்கு மட்டுமல்ல சிறுநீரகத்திற்கும் ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த அரிஸ்டோலோச்சிக் அமிலத்திற்கு "kidney toxin" (கிட்னி நச்சு) என்ற புனைப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்த அமிலம் அரிஸ்டோலோச்சியா இனத்தை சேர்ந்த ஆடுதீண்டாப் பாளையில் மட்டுமல்ல. இதே அரிஸ்டோலோச்சியா இனத்தை சேர்ந்த பெரும்பான்மை தாவரங்களிலும் காணப்படுகின்றன.

  இந்த அரிஸ்டோலோச்சியா இனத்தில் 400 க்கும் மேற்பட்ட தாவரங்கள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அதிகப்படியாக 30 வகையான தாவரங்கள் இந்தியா மற்றும் சீனா உட்பட சிலநாடுகளில் பாரம்பரிய மூலிகைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  இந்த அரிஸ்டோலோச்சியாசி தாவர குடும்பத்தை சேர்ந்த செடிவகைகளை மூலிகை என்னும் பெயரில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தொடர்ந்து உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தோமானால் அதிலுள்ள அரிஸ்டோலோச்சிக் (aristolochic acid) அமிலமானது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கல்லீரலை சிதைத்து புற்றுநோய் ஏற்பட வழிவகை செய்துவிடும்.

  இந்த அரிஸ்டோலோச்சிக் (aristolochic acid) அமிலமானது கல்லீரலை மட்டுமல்ல சிறுநீரகங்களையும் பாதிப்பதோடு D.N.A மரபணு மூலக்கூறுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

  Mr vadivelu liver failure

  மேலும் சிறுநீரக செயலிழப்போடு சிறுநீர் குழாய்களிலும் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருப்பதாக 2003 ம் ஆண்டு தைவான், ஆஸ்திரேலியா  மற்றும் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் தெரியவருகின்றன.

  இந்த அரிஸ்டோலோச்சிக் அமிலமானது உடலில் அதிகரிக்கும் பட்சத்தில் முதலில் சீறுநீரக குழாய்களின் செயல்பாட்டை பாதித்து இறுதியில் சிறுநீரகங்களின் செயல் இழப்புக்கு வழிவகை செய்கிறது.

  உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த அரிஸ்டோலோச்சியாசி இன தாவரங்களை பாரம்பரிய மூலிகை மருந்து என்ற பெயரில் அதிக அளவில் மாத்திரை வடிவிலும், டானிக் வடிவிலும் தயாரிக்கப்பட்டு மெடிக்கல் ஸ்டோர்களில் வைத்து விற்பனை செய்யப்படுவதால் பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு கல்லீரல் மற்றும் சீறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

  எனவேதான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பலநாடுகள் சீனாவிலிருந்து மருந்து மாத்திரைகள் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் இவைகள் பூக்களில் தேன்களை உற்பத்தி செய்வதில்லை என்பதனையும், மதுவுக்குப்பதிலாக பூக்களில் "பொறி" போன்ற ஒரு அமைப்பை பயன்படுத்தியே பூச்சிகளை ஏமாற்றி மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்பதனை பற்றியும் பார்த்தோமல்லவா? வாருங்கள் அவைகள் ஏன் தேன்களை உற்பத்தி செய்வதில்லை என்பதையும் பார்த்துவிடுவோம்.

  அடுதீண்டாப்பாளை என்னும் இந்த தாவரத்தின் வேர், தண்டு, இலை, காய், விதைகள் அனைத்திலுமே "அரிஸ்டோலோச்சிக்" என்னும் உடலுக்கு தீங்குதரும் அமிலத்தையே கொண்டுள்ளன என்பதனை பார்த்தோமல்லவா. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பயபுள்ளைக்கு ஒடம்பு அம்புட்டும் விஷம்.

  அனைத்து பாகங்களிலும் "அரிஸ்டோலோச்சிக்" அமிலத்தை கொண்டுள்ள இந்த தாவரம் அதன் மலர்களில் தேனை உற்பத்தி செய்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது மட்டும் என்ன தித்திக்கும் அமிர்தமாகவா இருக்கப்போகிறது?... அதுவும் விஷமாகத்தானே இருக்கும்.

  சரி... இப்போது இது தேனை உற்பத்தி செய்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அந்த தேனை தேனீக்கள் சாப்பிட்டால் என்ன ஆகும். சில நாட்களிலேயே தேனீக்களின் கிட்டினி சட்டினி ஆகிவிடும் அல்லவா?...

  சரி அதை விடுங்கள்... அந்த தேனீக்கள் இதிலுள்ள தேனை பிற பூக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தேனுடன் சேர்த்து தேனடைகளில் சேமித்து வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்?...

  தேனடைகளிலிருந்து தேனை திருடி சாப்பிடும் விலங்குகளில் முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா? "கரடி". அதற்கு அடுத்தபடியாக விரும்பி சாப்பிடுவது திருட்டு பயபுள்ள நம்ம "கொரங்கு". இப்போது சொல்லுங்கள் "அரிஸ்டோலோச்சிக்" அமிலம் கலந்த தேனை தொடர்ந்து சாப்பிட்டால் இதுவெல்லாம் உசுரோடு இருக்குமுன்னு நெனைக்கிறீங்க? தேனுடன் சர்க்கரை பாகு சேர்த்து அழகாக பாட்டிலில் அடைத்து "ஒரிஜினல் தேன்" என்று லேபிள் ஒட்டி விற்பனை செய்யும் மனிதர்களுக்கும் சேர்த்து சங்குதானே?... இப்போது புரிகிறதா அது ஏன் தேனை உற்பத்தி செய்வதில்லையென்று!!...

  இப்போது சொல்லுங்கள் ஆடுதீண்டாப்பாளை தன்னுடைய மலர்களில் தேனை உற்பத்தி செய்யாமல் இருப்பதின் மூலம் பூச்சிகள், தேனீக்கள், கரடி, குரங்கு உட்பட மனிதர்களாகிய உங்களுக்கும் சேர்த்து நன்மை செய்கிறதா இல்லையா?!!!...

  சரி, இதுபோல் இன்னுமொரு தாவரத்தைப்பற்றி நாம் நம் தளத்தில் அலசுவதற்கு முன்னால், தீங்குதரும் அரிஸ்டோலோச்சிக் அமிலத்தை மூலகமாக கொண்டுள்ள ஆடுதீண்டாப்பாளை உட்பட இன்னும் இவ்வினத்தை சேர்ந்த தாவரங்களை இனங்கண்டறிந்து ("பெருமருந்து" என சொல்லப்படும் "ஈஸ்வரமூலி"யும் இந்த இனத்தை சேர்ந்ததே என்பது குறிப்பிடத்தக்கது) அவைகளை உடலின் வெளி உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம். உள்ளுக்குள் மருந்தாக சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்போம். நாளும் நலம் பெறுவோம். நன்றி!

  💢💢💢💢

  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  1. // ஆடுகளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் // சிறிது சத்தமாகவே சிரித்து விட்டேன்...

   மிகவும் விளக்கமாக எழுதுவது உங்களின் வழக்கம்... இந்தமுறை ரசனை சற்றே அதிகமாக... அருமை... அருமை...

   பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு சகோ. நல்ல தகவல்கள். பயனுள்ள தகவல்கள்.

   ஆம் எந்த மூலிகையையும், மருந்தையும் அதிக நாட்கள் உட்கொள்வது சரியல்ல. அதுவும் அளவு உண்டு. மண்டலம் என்றெல்லாம் கூடச் சொல்லிக் கொடுப்பதுண்டு. எதுவும் நல்ல்லது என்று தினமும் உணவில் கூடச் சேர்த்துக் கொள்வது அத்தனை நல்லதல்ல உணவும் மருந்தே. விருந்தும் மருந்தும் சில நாள்தான் என்பதே.

   எனவே ஒவ்வொரு மூலிகையையும் அதன் மைனஸ் தெரிந்து பயன்படுத்துவதுதான் நல்லது. நல்ல தகவல் சகோ

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி சகோதரி ! தங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சியை தருகிறது....

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.