"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
வெள்ளை கரிசலாங்கண்ணி - Eclipta prostrata - Karisalankanni - False Daisy.

வெள்ளை கரிசலாங்கண்ணி - Eclipta prostrata - Karisalankanni - False Daisy.

கரிசாலை.

Eclipta prostrata.

[PART - 1]

மூலிகை களஞ்சியமாக விளங்கும் இந்தியாவில் இமயம் முதல் குமரிவரை தன் காலடித் தடங்களை பதித்துள்ள ஒரே மூலிகை எதுவென்றால் "கையாந்தகரை" என்று செல்லமாக அழைக்கப்படும் கரிசலாங்கண்ணியை குறிப்பிடலாம். அதுமட்டுமல்ல தற்போது உலகின் பல பகுதிகளிலும் இவைகள் தங்கள் காலடித்தடங்களை பதித்து வருகின்றன. அந்த அளவிற்கு நம்ம "அங்கயற்கண்ணி" வேர்ல்ட் பூரா பேமஸ்...

  மூலிகை உலகில் எத்தனையோ மூலிகைகள் தன் நோய் தீர்க்கும் பண்பினால் பாஸ் ஆகி நின்றாலும்கூட அவைகள் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி மாஸ் ஆகி நிற்கும் ஒரே மூலிகை கரிசலாங்கண்ணி மட்டும்தான்.

  ஏனென்றால் இதனிடம் வெறும் நோய் தீர்க்கும் பண்பு மட்டுமல்ல உடலை நோய் தீண்டாவண்ணம் காயசித்தியாக்கும் தன்மையும் உள்ளன.

  அது இன்னா நைனா "காயசித்தி" என்கிறீர்களா?

  "காயம்" என்றால் உடல். "சித்தி" என்றால் "சித்தித்தல்".. அதாவது "வெற்றி அடைதல்" என்று பொருள்.

  புரியும்படி சொல்லவேண்டுமென்றால் காயசித்தி என்றால் உடலை எந்தவகையான நோயும் அண்டாத அளவில் பக்குவப்படுத்துதல் என்று பொருள்.

  இத்தனை சிறப்பு வாய்ந்த கரிசலாங்கண்ணி பற்றி இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா.. வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

  கரிசலாங்கண்ணி.

  Karisalankanni.

  திணை - தாவரம்.

  பிரிவு - Magnoliophyta  - பூக்கும் தாவரம்.

  வகுப்பு - மாக்னோலியோப்சிடா - Magnoliopsida.

  துணை வகுப்பு - Asteridae.

  வரிசை - Asterales.

  குடும்பம் - அஸ்டரேசியே - Asteraceae.

  பேரினம் - Eclipta L.

  இனம் - Eclipta prostrata.

  பெயர் - கரிசலாங்கண்ணி.

  ஆங்கில பெயர் - False Daisy.

  ஹிந்தி - பிருங்க ராஜ் மற்றும் கேச ராஜ்.

  சமஸ்கிருத பெயர் - பிருங்கராஜா.

  மலையாளம் - கைதோணி, கையுண்ணி.

  அறிவியல் பெயர் - எக்லிப்டா புரோஸ்ட்ராட்டா (Eclipta prostrata).

  தாயகம் - இந்தியா மற்றும் தென்மேற்கு அமெரிக்கா.

  காணப்படும் இடங்கள் - இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, நேபாளம் மற்றும் பிரேசில் முதலிய இடங்களில் தன்னிச்சையாகவே வளர்கின்றன.

  பரிணாமம் - "களைச்செடி" மற்றும் "மூலிகை செடி" என இரு பரிணாமங்களை கொண்டுள்ளது.

  வளரும் சூழ்நிலை - வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் வளரும் இது சதுப்பு நிலம் மற்றும் ஈரப்பாங்கான நிலங்களில் செழிப்பாக வளரும் தன்மையுடையது.

  வாழ்நாள் - சுமார் 1 ஆண்டுகள்.

  பெயர் காரணம் - இதன் உண்மையான பெயர் "கருசலம் கண்ணி" என்பதே. கரு + சலம் + கண்ணி = கருசலம் கண்ணி.

  "கரு" - கருமையான.

  "சலம்" - நீர் அல்லது சாறு.

  "கண்ணி" - "கன்று" சிறிய தாவரம் அல்லது குறுந்தாவரம்.

  "கருசலம் கண்ணி" - கருமையான சாற்றினை கொண்ட குறுந்தாவரம் என்று பொருள். இதுவே காலப்போக்கில் "கரிசலாங்கண்ணி" என்று திரிந்து போனது.

  False Daisy Leaf juice

  காணப்படும் இடங்கள் - வயல் வரப்புகள், ஆறு, குளம் மற்றும் நீர்பாங்கான இடங்களில் வளருகின்றன.

  இனப்பெருக்கம் - விதைகள் மூலமாகவும், வேர்முடிச்சுகளைக்கொண்ட தண்டுகள் மூலமாகவும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

  பயன்தரும் பாகங்கள் - இதன் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகின்றன.

  சுவை - கசப்பு மற்றும் காரம். மேலும் மிதமான அளவில் இனிப்பு, புளிப்பு மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.

  கரிசாலையில் அடங்கியுள்ள வேதி பொருட்கள்.

  Product ID English Name Tamil Name
  1 ß-amyrin ß-அமிரின்
  2 alpha-amyrin ஆல்பா-அமிரின்
  3 alpha-terthienyl methanol ஆல்பா-டெர்தைனில் மெத்தனால்
  4 Alkaloids ஆல்கலாய்டுகள்
  5 Apigenin அபிகெனின்
  6 stigmasterol ஸ்டிக்மாஸ்டீரால்
  7 bisabolol பிசாபோலோல்
  8 Triterpine ட்ரைடர்பைன்
  9 Coumarins கூமரின்
  10 chamazulene சமாசுலீன்
  11 daucosterol டேக்கோஸ்டெரால்
  12 dimethyl டைமெத்தில்
  13 desmethyl டெஸ்மெதில்
  14 Ecliptasaponin C எக்லிப்டாசபோனின் C
  15 Ecliptasaponin D எக்லிப்டாசபோனின் D
  16 Flavonoids ஃபிளாவனாய்டுகள்
  17 glycosides கிளைகோசைட்ஸ்
  18 Luteolin லுடியோலின்
  19 thiophene தியோபீன்
  20 Polyacetylene பாலிசெட்டிலீன்
  21 saponin சபோனின்
  22 Sitosterol சைட்டோஸ்டெரால்
  23 anthemic acid அந்திமிக் அமிலம்
  24 wedelic acid வெட்லிக் அமிலம்
  25 oleanolic acid ஒலியானோலிக் அமிலம்
  26 tannic acid டானிக் அமிலம்
  27 ursolic acid உர்சோலிக் அமிலம்
  28 Wedelolactone விடிலோலேக்டோன்
  29 Protein புரதம்
  30 Fat கொழுப்பு
  31 Phosphorus பாஸ்பரஸ்
  32 Iron இரும்பு
  33 Calcium கால்சியம்
  34 Magnesium மெக்னீசியம்
  35 Selenium செலினியம்
  36 Manganese மாங்கனீஸ்
  37 Minerals தாது உப்புக்கள்
  38 Vitamin A வைட்டமின் A
  39 Vitamin C வைட்டமின் C
  40 Vitamin E வைட்டமின் E
  41 Vitamin K வைட்டமின் K


  கரிசாலை வகைகள்.

  கரிசாலை என்னும் கரிசலாங்கண்ணியில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன...

  1. வெள்ளை கரிசலாங்கண்ணி.
  2. மஞ்சள் கரிசலாங்கண்ணி.
  3. சீமை கரிசலாங்கண்ணி.

  என மூன்று வகையான கரிசலாங்கண்ணி செடிகள் உள்ளன.

  Eclipta prostrata_Sphagneticola calendulacea

  இதில் "வெள்ளை கரிசலாங்கண்ணி" மூலிகை செடியாகவும்,

  "மஞ்சள் கரிசலாங்கண்ணி" மூலிகையாக திகழும் அதே வேளையில் ஊட்டம் தரும் கீரை உணவாகவும்,

  "சீமை கரிசலாங்கண்ணி" என்னும் குத்து கரிசாலையானது "களை" செடியாக திகழ்வதால் அவை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தப்படுவதில்லை.

  Sphagneticola trilobata

  சரி.. இனி இம்மூன்று கரிசலாங்கண்ணிகளின் தன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களைப்பற்றி தனித்தனியாக பார்ப்போம்.

  வெள்ளை கரிசலாங்கண்ணி.

  தாவரவியல் பெயர் - எக்லிப்டா புரோஸ்ட்ராட்டா (Eclipta prostrata)

  வளரும் நாடுகள் :- இந்தியா, சீனா, இலங்கை மற்றும் ஆசியாவின் சில நாடுகள்.

  வேறு பெயர்கள் :- கையாந்தகரை, கரிசணாங்கண்ணி, கரிப்பான், கரிசாலை, கைகேசி.

  தாவரத்தின் தன்மை.

  இவைகள் பெரும்பாலும் நீர் செழிப்புள்ள ஆற்றங்கரை மற்றும் வயல் வரப்புகளில் களை செடிகளாக வளர்ந்து நிற்பதை காணலாம். சூரியகாந்தி குடும்பத்தின் சிற்றின பிரிவை சேர்ந்த இது ஓராண்டுகள் வாழும் வருடாந்திர தாவரம்.

  வெள்ளை கரிசலாங்கண்ணியில் மட்டுமே இருவகைகள் உள்ளன. அவை...

  1. படர்வகை கரிசலாங்கண்ணி. (Creeper Plant Karisalankanni).
  2. குத்துச்செடி கரிசலாங்கண்ணி. (Upward growing Karisalankanni).

  படர் வகை கரிசலாங்கண்ணியானது தரையோடு தரையாக படர்ந்து வளருகின்றன. ஆனால் குத்துச்செடி கரிசலாங்கண்ணியோ மப்பும் மந்தாரமுமாக கும்மென்று மேல்நோக்கி வளர்ந்து நிற்கின்றன.

  Creeper Plant Karisalankanni
  Creeper Plant Karisalankanni.

  படர் வகை கரிசலாங்கண்ணி 1 அடியிலிருந்து சுமார் 3 அடிகள் சுற்றளவில் கிளைகளை பரவவிடுகின்றன.

  குத்துச்செடியாக வளரும் வகையை சேர்ந்தது 1 அடியிலிருந்து சுமார் 3 அடி உயரம்வரை வளர்கின்றன.

  upward growing Karisalankanni
  Upward growing Karisalankanni.

  இந்தியா மற்றும் சீனா போன்ற ஒரு சில தெற்காசிய நாடுகளில் மட்டுமே இவைகள் நோய் தீர்க்கும் மருந்து தாவரங்களாக அதாவது மூலிகை செடிகளாக கொண்டாடப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான நாடுகள் இதனை பயிர்களை பாதிக்கும் "களை" செடிகளாகவே பார்க்கின்றன.

  எது எப்படியோ இந்த தாவரங்கள் நோய்களை குணமாக்கும் பண்புகளை தன்னிடத்தே கொண்டுள்ளன என்பதனை மட்டும் யாராலும் மறுக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

  சரி வாருங்கள்... இனி தாவரங்களின் அமைப்பை அதாவது சாமுத்திரிகா லட்சணங்களை பார்க்கலாம்...

  வேர்களின் அமைப்பு.

  Karisalankanni Root.

  இந்த கரிசாலை தாவரமானது. சல்லிவேர் அமைப்பினை கொண்டுள்ளது. வேர்கள் ஒவ்வொன்றும் உருளை வடிவத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன.

  Karisalankanni root
  Karisalankanni - False Daisy root.

  வேர்களின் பயன்.

  வேர்கள் மருத்துவத்துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வாந்தியை உண்டுபண்ணுவதற்கும், நீராகப்போகும் மலத்தை நிறுத்துவதற்கும் இவைகள் உதவுகின்றன. குடல்புண்களை ஆற்றுவதற்கும், தோல் நோய்களை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

  மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளின் கால்பகுதி மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புண்களுக்கும் இந்த வேரை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

  தண்டுகளின் அமைப்பு.

  தண்டுகள் நீளமானவை. பச்சை மற்றும் மிதமான நீலம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டுள்ளன.

  பல கிளைகளுடன் காணப்படும் தண்டில் குத்தும் தன்மைகொண்ட சிறிய வெண்ணிற உரோமங்கள் இருப்பதால் சொரசொரப்பாக காணப்படுகின்றன.

  False-Daisy White fur

  படர்வகை கரிசலாங்கண்ணி செடிகளின் தண்டுகள் நிறைய வேர் முடிச்சுகளை கொண்டுள்ளன. எனவே வேர் முடிச்சுள்ள தண்டுகளை தனியாக  பிரித்தெடுத்தும் இதனை பயிரிடலாம்.

  இலைகளின் அமைப்பு.

  இலைகள் நீள் வடிவமானவை. சற்று தடித்த நீளமான அதேசமயத்தில் அகலத்தில் குறுகிய கரும்பச்சை இலைகளை கொண்டுள்ளன. ஈட்டி வடிவம் கொண்ட காம்பற்ற இந்த இலைகள் தண்டுகளில் எதிரெதிர் திசைகளில் அமைந்துள்ளன.

  False Daisy leaf

  பொதுவாக இதன் இலைகளை காம்பற்ற இலைகள் என்று குறிப்பிட்டாலும் கூட மிக குறுகிய காம்புகளை கொண்டுள்ளன எனலாம். மிக சரியாக சொல்ல வேண்டுமென்றால் இலைக்காம்புகள் 3 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன.

  இலைகள் கால் அங்குலத்திலிருந்து1 அங்குலம் வரை அகலம் கொண்டதாகவும், 1 லிருந்து 5 அங்குலம்வரை நீளம் கொண்டதாகவும் உள்ளன.

  இலையின் நடுப்பகுதி அகன்றும் முதலும் முடிவுமான பகுதிகள் குறுகியும் காணப்படுகின்றன. இலையின் மேற்பகுதியில் தண்டில் இருப்பதுபோன்ற வெண்ணிற உரோமங்கள் காணப்படுவதால் இலைகள் சொரசொரப்பாக உள்ளன. இலைகளின் இரு ஓரங்கள் ரம்பப் பற்கள் போன்ற அமைப்பை பெற்றுள்ளன.

  False Daisy leaf_full size

  85% நீர்சத்தினை கொண்டுள்ள இலைகளானது கசப்பு மற்றும் காரத்தன்மையை கொண்டுள்ளது. இதன் இலைச்சாறு சிறிது கருமையான தோற்றத்தில் காணப்படுகிறது.

  இலைகளின் பயன்.

  இலைகளில்தான் அதிக அளவில் மருத்துவத் தன்மைகள் அடங்கியுள்ளன. இந்த இலையை மைய அரைத்து உடலில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க உடல் பளபளப்பை பெறும். தலையில் பூசி சிறிது நேரம் ஊறவிட்டு அதன்பின் குளித்துவர தலைமுடி நன்கு கறுத்து வளரும். அல்லது தேங்காய்யெண்ணையில் இலைகளை ஊறவைத்து தலையில் தேய்த்துவரலாம். இதனாலும் முடி கருத்து தழைத்து வளரும்.

  தோல் சார்ந்த நோய்களான சொறி, சிரங்கு, படர்தாமரை ஆகியவைகளின் மீது இலைச்சாற்றை பூசிவர குணம் பெறலாம்.

  இலையை அரைத்து வெட்டுக்காயங்களின்மீது பற்றிட விரைவில் ஆறும்.

  கரிசலாங்கண்ணி இலைகளை நன்கு மென்று சாறினை உட்கொள்வதோடு அதன் இலைகளைக்கொண்டு பல் துலக்கிவர வாய்ப்புண் குணமாவதோடு வாய் நாற்றமும் நீங்கும். பற்களும் உறுதியாகி பளிச்சிடும்.

  இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கருப்பு நிற சாயமானது தலைமுடிக்கு கருப்பு நிறத்தை கொடுக்க பயன்டுத்தப்படுகிறது. பச்சைகுத்துதலுக்கும் இந்த சாயம் பயன்படுத்தப்படுவதுண்டு.

  பூக்களின் அமைப்பு.

  இவைகள் நீளமான பூ காம்புகளில் (மஞ்சரி) சிறிய வெண்மையான மலர்களை மலர செய்கின்றன. இலைக்கோணங்களில் பூக்கின்றன. ஒரு இலைக்கோணத்தில் ஒரே சமயத்திலோ அல்லது இருவேறு கால கட்டங்களிலோ ஒன்று அல்லது இரண்டு மலர் மஞ்சரிகள் உருவாகின்றன. மலர்கள் 6 லிருந்து 10 மி.மீ அளவில் விட்டத்தை கொண்டுள்ளன.

  False Daisy Double flower

  இந்த மலரானது "கதிர்பூக்கள்" வகையை சேர்ந்தது. கதிர்பூக்கள் என்றால் ஒரே மஞ்சரியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பூக்களை கொத்தாக கொண்டிருப்பது.

  மேலும் இது கதிர்ப்பூக்கள் வரிசையில் வட்டு சிறுமலர்கள் வகையை சேர்ந்தது. அதாவது இந்த மலர்களை தாங்கி நிற்கும் தலைப்பகுதி வட்டுப்போன்ற அமைப்பை பெற்றுள்ளதால் இந்த மலர்கள் "வட்டு சிறுமலர்கள்" என அழைக்கப்படுகின்றன. பூக்களை தாங்கிநிற்கும் இந்த வட்டு போன்ற தலைப்பகுதி 1 செ.மீ விட்டத்தை கொண்டுள்ளன.

  False Daisy round type space

  இந்த 1 செ.மீ விட்டத்திற்குள்தான் 50 க்கும் மேற்பட்ட பூக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் ஒற்றை மலராக கருதுவது உண்மையில் ஒற்றை மலர் அல்ல. புரியும் விதத்தில் சொல்வதென்றால் பல மலர்களின் தொகுப்பு. அதாவது அடுக்கடுக்காக அடுக்கப்பட்ட மிகச்சிறிய மலர்கள் பல ஒன்று சேர்ந்து நம் பார்வைக்கு ஒரே மலராக காட்சியளிக்கின்றன.

  ஒரு ஒற்றை பூவை எடுத்து உங்கள் கண்களின் அருகில் வைத்து பார்த்தீர்கள் என்றால் பச்சை நிற புல்லி வட்டத்தை அடுத்துள்ள அல்லி வட்டத்தில் (Corolla) வெண்மையான ஈரடுக்கு இதழ்கள் இருப்பதைப் பார்க்கலாம். இந்த இதழ்கள் "Ray florets" என அழைக்கப்படுகின்றன. தமிழில் "கதிர் இதழ்கள்" என்று சொல்லலாம்.

  இவைகளின் எண்ணிகை ஏறத்தாழ 11 லிருந்து 50 வரை இருக்கலாம். கதிர் இதழ்கள் ஒவ்வொன்றும் சுமார் 2 லிருந்து 3 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன. இதன் பணி ஒன்றே ஒன்றுதான். அது தன்னுடைய அழகை காட்டி பூச்சிகளை கவர்ந்து இழுப்பது. அதன்மூலம் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்வது. அவ்வளவே... இவைகள் விதைகளை உற்பத்தி செய்வதில்லை. வெறும் அழகுக்காக மட்டுமே!

  False Daisy Ray florets

  இந்த இதழ்களைத் தாண்டி இன்னும் உள்ளே பார்வையை செலுத்தினோமென்றால் அங்கு 30 லிருந்து 60 வரையில் சிறு சிறு குழல் போன்ற வடிவில் பூக்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவைகள் தான் உண்மையான மலர்கள். அதாவது குழல்போன்ற அமைப்பு கொண்ட மிகச்சிறிய கூட்டு மலர்கள்.

  இந்த குழல் போன்ற இதழ் அமைப்பின் மொத்த அளவு 1.5 லிருந்து 2 மி.மீ நீளம்வரை இருக்கும். இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மகரந்த தாள்கள், சூலகம் மற்றும் தான் கருகொள்வதற்காக மகரந்தத்தை சுமந்துவரும் வண்ணத்து பூச்சிகளுக்கு மதுவிருந்து படைப்பதற்கான தேன்களையும் நிரம்பவே கொண்டுள்ளன.

  Eclipta prostrata flower

  இன்னும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் குழல்போன்ற அமைப்புடைய இம்மலர்களுக்கு இணைக்கப்பட்ட 5 இதழ்கள் இருப்பதை காணலாம். இந்த 5 இதழ்களும்தான் உண்மையான "பூவிதழ்கள்" எனறு சொல்வதற்கான தகுதி படைத்தவை.

  False Daisy flower fullsize

  இந்த பூவிதழ்களுக்குள்ளே பார்வையை செலுத்தினீர்கள் என்றால் ஏற்றி வைத்த ஊதுபத்திபோல கருப்பும் அதன் தலைப்பகுதியில் மஞ்சள் நிற நெருப்பும் புகைவது போன்ற தனித்தனி இழைகளுடன் கூடிய 5 மகரந்தங்கள் இருப்பதை காணலாம். ஒவ்வொரு மகரந்த இழைகளின் நீளமும் சுமார் 1.5 லிருந்து 2 மி.மீ வரை உள்ளன. இவற்றின் நடுவே சூல்முடிகளையும் கொண்டுள்ளன.

  Eclipta_Prostrata_anther filament

  இந்த கதிர் பூக்கள் ஜனவரி முதல் மார்ச் வரையிலும் அதன்பின் ஜீன் முதல் செப்டம்பர் வரை பூக்கின்றன. சாதகமான சூழ்நிலை அமைந்தால் ஆண்டு முழுவதுமே பூக்கின்றன.

  இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் ஒற்றை பூ என்று நினைத்துக் கொண்டிருப்பது உண்மையில் ஒற்றை பூ அல்ல, அது 30 லிருந்து 60 வரையிலான சிறு சிறு மலர்களை உள்ளடக்கிய "மஞ்சரி தொகுப்பு" என்பது புரிகிறதல்லவா?!...

  பூக்களின் பயன்.

  இம்மலர்கள் சிறியரக பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் குளவிகள் போன்ற சிறியரக தேனுண்ணும் பூச்சிகளுக்கு தன்னிடமுள்ள மதுவை பகிர்ந்தளிக்கின்றன. அதற்கு பிரதி பலனாக பூச்சிகள் பூக்களின் அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.

  விதைகளின் அமைப்பு.

  இதன் கனியானது "சிப்செல்லா" (உலர் வெடியா கனி) வகையை சார்ந்தது. இது சதைப்பற்றில்லாமல் உலர் நிலையில் இருப்பதால் இதனை பொதுவாக விதையென்றே அழைக்கின்றோம்.

   இந்த விதை உறைகளின் நிறம் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் தொடங்கி அவைகள் முதிர்வடையும்போது பழுப்பு, செம்பழுப்பு நிறத்திற்கு படிப்படியாக மாறி முடிவில் கருமை நிறத்தை அடைகின்றன.

  Eclipta prostrata - False Daisy seed

  விதைகளுடன் கூடிய இந்த விதையுறைகள்  ஒவ்வொன்றும் 2 அல்லது 3 மி.மீ நீளத்தையும், 0.9 மி.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. அடி ஒடுங்கி மேல்பாகம் சிறிது பருத்து ஆப்பு வடிவில் இவைகள் காணப்படுகின்றன.

  Eclipta_prostrata_fruits_seeds

  இவ்விதை உறைகளின் உள்ளேதான் கரும்பழுப்பு நிற விதைகள் காணப்படுகின்றன.

  விதைகளின் பயன்.

  தாவரங்களை பொறுத்தளவில் இன பரவலுக்கு பயன்படும் இது மனிதர்களுக்கு மட்டும் நோய் நீக்கும் மருந்தாக பயன்படுகின்றன. விதைகளை நேரடியாக ஆலையிலிட்டு அரைத்து அதிலிருந்து எண்ணை பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

  நோய்களை போக்க இந்த எண்ணெய்யை 3 முதல் 5 துளிகள்வரை பயன்படுத்தலாம்.

  கரிசாலை - மருத்துவ பயன்கள்.

  இதன் இலை, வேர், பூ, காய் என அனைத்ததுமே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் அதிக அளவில் இலைகளே பயன்படுத்தப்படுகின்றன.

  இதன் இலைகளால் பாண்டு, சோகை, மூலம், மயக்கம், நீர்க்கட்டு, மலக்கட்டு, சளி, பித்த எரிச்சல், காசம், இளைப்பு, இருமல், காய்ச்சல், வீக்கம், கட்டி, ஜலதோஷம், தொழுநோய், கல்லீரல் நோய், தோல்நோய், கண்காசம், காதுவலி, இரத்தப்போக்கு, கடுப்பு, பொடுகு மற்றும் பூச்சிக்கடிகளால் ஏற்பட்ட ஊரல் முதலிய பிரச்சனைகளும் நீங்கும்..

  அதுமட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்தமாக்குவதிலும் உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதிலும் இது சிறப்பானது என சொல்லப்படுகிறது. இரத்தத்தை உற்பத்தி செய்து இரத்தசோகையையும் நீக்குகிறது.

  நீரழிவு நோயை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் அதிகரிக்காத வகையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

  மேலும் கல்லீரல் வீக்கத்தை கட்டுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஈரலை வலுவாக்கும் திறன் உள்ளது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.

  தோல்வியாதிகளுக்கும் இது சிறப்பான பலனை கொடுக்கிறது.

  இதற்கு பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி தன்மைகள் உள்ளதால் சிறுநீரக தொற்றை தடுத்து நிறுத்துகிறது. ஆறாத புண்கள் மற்றும் வெட்டுக் காயங்கள்மீது இதன் சாறை தொடர்ந்து தடவிவர விரைவில் ஆறுகிறது.

  பெண்களுக்கு வெள்ளைப்படுதலை தடுப்பதோடு கருப்பையையும் பலப்படுத்துகிறது.

  உடலின் நோய் எதிர்பாற்றலை (Immuno-stimulatory) அதிகரிக்கும் தன்மையை கொண்டுள்ளது.

  கண்கள் ஒளிபெற.

  கரிசலாங்கண்ணி இலைகளோடு சம அளவு குப்பைமேனி இலைகளையும் எடுத்து காயவைத்து தனித்தனியாக உரலிலிட்டு நன்கு இடித்து பொடிசெய்து பின் இரண்டு பொடிகளையும் நன்கு உறவாகும்படி கலந்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  தினந்தோறும் காலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவரவும். இதனால் ரத்தசோகை நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.

  இளைப்பு, காசநோய் நீங்க.

  கரிசலாங்கண்ணி இலை சூரணம் - 150 கிராம்.

  அரிசித்திப்பிலி சூரணம் - 35 கிராம்.

  இந்த இரண்டையும் நன்றாக உறவாகும்படி ஒன்று கலந்து காற்றுப்புகாத பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

  False-daisy-powder

  இதில் 5 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை அருந்திவரவும். இம்மருந்து சாப்பிடு காலங்களில், உணவில் புளி, மீன், கருவாடு சேர்க்காமல் பத்தியம் காத்துவர சளி, இருமல், காசம், இளைப்பு பிரச்சனைகள் நீங்கும்.

  கரிசாலை தைலம்.

  தேங்காய் எண்ணை - அரை லிட்டர்.

  கரிசலாங்கண்ணி தூள் - 50 கிராம்.

  ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்விட்டு அதனுடன் கரிசலாங்கண்ணி தூளை கலந்து சிறுதீயாக எரித்து மருந்துப்பொருள் கருகாமல் தைல பதத்தில் காய்ச்சி இறக்கி வைத்துவிடவும்.

  இரண்டு நாட்கள் அப்படியே வைத்து மூன்றாவது நாள் எண்ணெய்யை மட்டும் வடித்தெடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  இதனை தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர தலைமுடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். இளநரை என்று சொல்லப்படும் பித்த நரைகளும் நீங்கும்.

  கரிசாலை எண்ணெய்.

  கரிசாலை இலைச்சாறு - 200 மி.லி.

  நல்லெண்ணெய் - 200 மி.லி.

  மேற்கூறிய இரண்டையும்  கலந்து அடுப்பில்வைத்து சிறுதீயாக எரித்து பக்குவமாக காய்ச்சி வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  இதில் 2 கிராம் அளவில் காலை,மாலை அருந்திவர சளி, இருமலுடன் பிற சுவாச சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும்.

  பல் நோய்களுக்கு.

  இதன் இலை, தண்டு, வேர் இவைகளைக்கொண்டு பல் துலக்கிவரலாம். இதனால் பல்வலி, பற்களில் எனாமல் பாதிப்படைதல் மற்றும் ஈறு வீக்கம் முதலியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

  பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்... தினமும் கரிசாலை வேரால் பல்துலக்கிவாருங்கள். கூடவே இக்கீரையை இரண்டு பிடி அளவு வாயில் போட்டு நன்கு மென்று நீர் குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து சில மாதங்கள் செய்துவர பற்களில் மஞ்சள்கறை படிவது நின்றேபோகும்.

  மூலநோய்.

  கரிசலாங்கண்ணி இலை மற்றும் கறிவேப்பிலையை நன்கு காயவைத்து இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடித்து சலித்து எடுத்து கொள்ளவும்.

  பின் இரண்டையும் நன்கு ஒன்று கலந்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலையும் மாலையும் 25 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவரவும்.

  False-Daisy-Capsules

  பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, கடுப்பு, மூலநோய், இரத்த சோகை நீங்கி பூரண குணம் கிடைக்கும்.

  உணவாக பயன்படுத்தும் முறை.

  வெள்ளை கரிசலாங்கண்ணியான இதை பெரும்பாலும் உணவாக பயன்படுத்தப்படுவதில்லை. இது ஒரு மூலிகை மட்டுமே. கீரையாக பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல.

  கீரைகளுக்கான எந்தவிதமான சிறப்பு அம்சமும் இதில் கிடையாது என்பதால் இதனை கீரையாக பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம்.

  எனவே இந்த வெள்ளை கரிசலாங்கண்ணியை மருந்தாக மட்டுமே பயன்படுத்தி பயனடையலாம். ஆனால் இதன் மற்றொரு வகையான "மஞ்சள் கரிசலாங்கண்ணி"யை மருந்தாகவும், கீரை உணவாகவும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

  அடுத்த பதிவில் மருந்தாக பயன்படும் அதேவேளையில் உணவாகவும் பயன்படும் 2 in 1 தாவரமான "மஞ்சள் கரிசலாங்கண்ணி"யை பற்றி பார்க்க இருக்கிறோம்..

  இப்பதிவின் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதியை [PART - 2] படிக்க கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்...

  👉"மஞ்சள் கரிசலாங்கண்ணி - Manjal Karisalankanni - Sphagneticola calendulacea."👈

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  1. காயசித்தி விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. காயசித்தி என்றால்:
    காயம் + சித்தி
    காயம் என்றால் புண்
    சித்தி என்றால் குணமாகுதால் என்றும் பொருள் உண்டு.

    நீக்கு
   2. வருக நண்பரே!... தங்களின் அருமையான கருத்துகளுக்கு என் கனிவான நன்றிகள்...

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.