"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கறிவேப்பிலை - Karuveppilai - Curry Leaf.

கறிவேப்பிலை - Karuveppilai - Curry Leaf.

கறிவேப்பிலை.

Curry Leaf Tree.

"கறிவேப்பிலையோ கறிவேப்பிலை

காய்கறிக்கெல்லாம் தாய்பிள்ளை".

தமிழ் மணத்துடன் தெம்மாங்கு வாசமும் கலந்து காற்றில் தவழ்ந்து நம் காதுகளில் நுழைந்தது அந்த நாட்டுப்புற பாடல்.

பாட்டில் கலந்துள்ள வாசனை அது குறிப்பிடும் கருவேப்பிலையிலும் நிறையவே நிறைந்துள்ளது என்பதனை தமிழக அரசின் பாவேந்தர் விருதுக்கு பாத்திரமான S.D. சுந்தரம் அவர்கள் கவிதைமூலம் எடுத்துரைப்பதை பாருங்கள்..

"எட்டடுக்கு மாளிகையில்

இட்டலி பல தின்றாலும்

கறிவேப்பிலை சட்டினிக்கு

இணையாகுமோ பராபரமே".

இதை கேட்கும்போது மனிதர் ரசிச்சு ருசிச்சு அப்புறந்தான்யா பாடியிருக்கார் என்று சொல்ல தோன்றுகிறது அல்லவா!


  ஆம்... உணவிற்கு சுவையூட்டிட எத்தனையோ வாசனை நிறைந்த மசாலா பொருட்கள் இருந்தாலும் அவைகள் எதுவுமே இதுக்கு இணையாகாது என்பதுபோல உணவிற்கு சுவையும் நறுமணமும் கொடுக்கவல்லது கருவேப்பிலை மட்டுமே!

  கறிவேப்பிலை மருதமான ஒருவித வாசனையை கொண்டிருப்பதால் உணவுப்பொருள்களுக்கு வாசனை கொடுப்பதில் இது முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.

  இது உணவுக்கு சுவையும் மணமும் மட்டுமே கொடுக்கிறது. அதற்காக மட்டுமே இது சேர்க்கப்படுகிறது என பலபேர் நினைத்துக்கொன்டு சாம்பாரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கருவேப்பிலையை காப்பாற்றி பாதுகாப்பாக கரையேற்றிவிடுகின்றனர்.

  உண்மையில் இது ஓரமாக வைக்கப்பட வேண்டிய பொருளா? என்றால்... இல்லை இல்லை... உடலுக்கு உரமாக்க வேண்டிய பொருள்.

  நீங்கள் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணிக்க வேண்டுமெனில் அதற்கு கருவேப்பிலையின் உதவி மிகமிக அவசியம். இதிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் சாப்பிடும் உணவு விஷமிக்காமல் அதாவது "ஃபுட் பாய்சன்" (Food Poison) ஆகாமல் தடுக்கும் திறனும் இதற்கு உள்ளது.

  முதன்முதலில் கறிவேப்பிலையை பயன்படுத்தியவர்கள் தமிழர்களே என்பது நமக்கெல்லாம் பெருமை. உலகிலேயே அதிக அளவில் கருவேப்பிலை பயன்படுத்தும் நாடுகள் இலங்கையும், இந்தியாவும் மட்டுமே. பிற நாடுகளில் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

  Curry Leaf

  இந்தியாவில்கூட  தமிழ் மாநிலத்தில் மட்டுமே அதிக அளவில் கறிவேப்பிலை சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் அதிக அளவில் கறிவேப்பிலை சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட சில வகை உணவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

  இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து பிறநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் தற்போது வெளிநாடுகளிலும் கருவேப்பிலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

  குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மக்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

  சரி,.. இனி கருவேப்பிலை என்னும் தாவரத்தின் தன்மைகளைப் பற்றியும்,  பயன்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம்.

  கருவேப்பிலை.

  Karuveppilai.

  திணை - தாவரம்.

  பெருந்திணை - யூகார்யோட்டா (Eukaryota).

  தாயகம் - இந்தியா, இலங்கை.

  பிரிவு - Spermatophyta (வித்து தாவரம்).

  துணை பிரிவு - Angiospermae (பூக்கும் தாவரம்).

  வகுப்பு - Dicotyledonae (இருவித்திலை தாவரம்).

  வரிசை - Sapindales (சபின்டேல்ஸ்).

  குடும்பம் - Rutaceae (ருட்டாசியே). [சிட்ரஸ்].

  துணைக்குடும்பம் - Aurantioideae (ஆராண்டியோடியே).

  பேரினம் - Murraya (முர்ரயா).

  இனம் - M. koenigii.

  சுவை - துவர்ப்பு.

  ஆயுள் - சுமார் 50 ஆண்டுகள்.

  தாவரவியல் பெயர் - Murraya Koenigii. (முராய்யா கோய்னிகி) மற்றும் Bergera Koenigii (பெர்கெரா கோய்னிகி) என இரு பெயர்களை கொண்டுள்ளது.

  தமிழ் பெயர் - "கறிவேப்பிலை" மற்றும் "கருவேப்பிலை".

  பெயர் காரணம் - இலைகள் ஓரளவு வேம்பின் இலைகளை ஒத்து காணப்படுவதாலும், கறிகளுக்கு வாசனைதருவதற்காக பயன்படுத்தப்படுவதாலும் "கறிவேப்பிலை" என்னும் பெயரை பெற்றது. இம்மரத்தின் பட்டைகள் சாம்பல் மற்றும் கருமையான நிறத்தை கொண்டுள்ளதால் "கருவேம்பு" என்றும் அழைக்கப்படுகிறது.

  Curry Leaf tree stem

  மேலும் இது கருவேப்பிலை என்று வேப்பிலையை நினைவுபடுத்தினாலும், வேப்பிலையைப்போல கசப்பு சுவை இல்லையென்பதால் "இனிப்பு வேப்பிலை" என பொருள்படும்படி பல மொழிகளில் அழைக்கப்பட்டு வருகிறது.

  வேறுபெயர்கள் - கறிவேம்பு, கருவேம்பு, கஞ்சகம், கஞ்சக நனு முறி, கருவப்பிலை.

  ஆங்கில பெயர் - Curry Leaf tree (கறி லீப்).

  மேற்கத்திய நாடுகளில் "Helichrysum italicum" என்னும் தாவரவியல் பெயர்கொண்ட மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும் ஒரு சிறிய செடியினம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் "Curry plant" என்று கூறுகின்றனர். இதுவும் கறிவேப்பிலையின் நறுமணத்தை கொண்டுள்ளதால் "Curry plant" என்று அழைக்கின்றனர். ஆனால் சமையலுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல. பயன்படுத்துவதுமில்லை. எனவே "Curry Leaf"  என்று சொல்லப்படும் கறிவேப்பிலையும் "Curry plant" என்று அழைக்கப்படும் மஞ்சள் பூ பூக்கும் தாவரமும் ஒன்றல்ல. முற்றிலும் வெவ்வேறானவை என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

  Helichrysum italicum_Curry plant

  ஹிந்தி பெயர் - கறிபத்தா.

  சிங்கள பெயர் - கறபிஞ்சா.

  வளரும் பகுதிகள் - வெப்ப மண்டல மழைக்காடுகள், இலையுதிர் காடுகளில் இயற்கையாக காணப்படுகிறது. தற்காலங்களில் பெரும்பான்மையான வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

  இனப்பெருக்கம் - இயற்கையாக விதைகள் மூலமாகவே இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. தற்காலங்களில் தண்டுகள் மூலமாகவும் புதிய செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  தாவரத்தின் பயன்கள் - உணவிற்கு வாசனை தரும் பொருளாகவும், நோய்களை நிவர்த்தி செய்யும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மரத்தின் நன்றாக பருத்த அடித்தண்டுகள் வீட்டிற்கு தேவையான மர பர்னிச்சர்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

  மருந்தாக பயன்படும் பாகங்கள் - பூ, காய், இலை, ஈர்க்கு, பட்டை, வேர் என அனைத்தும் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  தாவரத்தின் தன்மை.

  இது ஒரு சிறுமர பிரிவை சேர்ந்தது. 4 முதல் 8 மீட்டர் உயரம் மட்டுமே வளரும் இது 4 முதல் 12 அடி பரப்பளவில் கிளைகளை பரப்புகின்றன.

  ஒவ்வொரு கிளைகளின் முடிவிலும் இலைகள் கொத்துக்கொத்தாக காட்சியளிக்கின்றன.

  Murraya-Koenigii-Curry Leaf Tree

  இதன் பெயர் வேப்பமரங்களை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் இது வேப்பமரங்களை போல அதிக அளவு உயரமாகவோ, பருமனாகவோ வளர்வதில்லை. இலைகளும் வேம்பின் இலைகளைப்போல கசப்பானவை அல்ல. மாறாக துவர்ப்பு தன்மையை உடையவை. மேலும் வேம்பின் இலைகளைவிட இதன் இலைகள் அளவில் கொஞ்சம் சிறியது. இருண்ட பச்சை நிறத்தை கொண்டது.

  கருவேப்பிலை கிளைகளிலுள்ள தண்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு பாடி கண்டிஷனரில் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

  இதன் கிளைகளிலுள்ள குச்சிகளை பிரஷ் போல சதைத்து தொடர்ந்து பல் துலக்கிவர ஈறுகளும், பற்களும் வலுப்படுகின்றன என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்,... இதன் குச்சிகளை சதைத்து "பிரஷ்" போன்று செய்து நேரடியாக பல்விளக்க பயன்படுத்துவதால் அதன் கடினப்பகுதி ஈறுகளில் காயங்களை ஏற்படுத்தி பற்களை வலுவிழக்க செய்வதோடு ஈறுகளிலும் ஆறாத புண்களை ஏற்படுத்திவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

  எனவே, இதிலிருந்து தப்பிக்க கருவேப்பிலை குச்சிகளை பற்களால் சதைத்து அதலிருந்துவரும் காரமான சாறுகளை மட்டும் வாயில் அடக்கிக்கொண்டு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் டூத் பிரஷ்களை கொண்டு துலக்குவதே சிறப்பு என்பதனை கவனத்தில் கொள்ளவும். இதே வழிமுறை வேம்பங்குச்சியால் பல் துலக்குபவர்களுக்கும் பொருந்தும்.

  Toothbrush

  சரி, இனி கருவேப்பிலை மரத்தின் பிற தன்மைகளைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம்....

  வளர்ந்த ஒரு மரத்தின் அடித்தண்டு சுற்றளவு அரை அடியிலிருந்து ஒன்றரை அடிவரை இருக்கலாம்.

  இதன் மர பட்டைகள் சாம்பல் மற்றும் கருமை நிறத்தையே பிரதிபலிக்கின்றன. மேலும் பட்டைகளின் மேல் வெண்மை நிற சிறிய புள்ளிகள் ஏராளமாக காணப்படுகின்றன.

  இம்மரத்தினுடைய ஆயுள் சுமார் 50 ஆண்டுகள்.

  இலைகளின் தன்மை.

  இலைகள் இறகுவடிவ கூட்டிலை வகையை சார்ந்தது. ஒரு இறகு வடிவ கூட்டிலையின் மொத்த நீளம் 4.7 அங்குலத்திலிருந்து 7.8 (12 - 20 செ.மீ) அங்குலம்வரை இருக்கின்றன.

  Karuveppilai Leaf

  இந்த இறகுவடிவ கூட்டிலையின் நடுத்தண்டிலிருந்து இருபக்கங்களிலும் எதிரெதிர் திசைகளில் ஒன்றிற்கொன்று மாறுதலான வரிசைகளில் தனித்தனி இலைகளை கொண்டுள்ளன.

  இலைகள் முட்டை வடிவம் மற்றும் நீள்முட்டை வடிவ தோற்றம் தருகின்றன. இவ்விலைகளின் எண்ணிக்கை 5 லிருந்து 21 வரை இருக்கலாம்.

  இவ்விலைகள் 1. 5 லிருந்து 5. 5 செ.மீ வரை நீளமும், 0. 5 லிருந்து 2. 8 செ.மீ அகலத்தையும் கொன்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் காரத்தன்மையுடன் கூடிய வாசனையையும் கொண்டுள்ளன.

  இலைகளினுடைய இலைக்காம்புகள் சிறியவை. 3 லிருந்து 5 மி.மீ வரை மட்டுமே நீளம் கொண்டவை.

  Curry Leaf tree_single leaf

  இவ்விலைகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல அவைகளின் முதிர்ந்த இலைகளின் விளிம்புகளை கூர்ந்து கவனித்தீர்களென்றால் மிக சிறியதான பல்லமைப்புகளைக் கொண்டுள்ளதையும் காணலாம்.

  இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித வாசனை கலந்த எண்ணெய்யானது சோப்புகள் தயாரிக்கவும் சிலவகை அழகு சாதன பொருட்களுக்கு வாசனை கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

  பூக்களின் தன்மை.

  இந்த கருவேம்பு மரமானது வசந்த காலத்திலும், கோடைகாலத்தின் துவக்கத்திலும் மலர்களை உருவாக்குகின்றன. அதாவது ஜூன் தொடங்கி நவம்பர் வரை பூக்கின்றன.

  பூக்கள் பூங்கொத்து வகையை சேர்ந்தது. இதன் மஞ்சரியானது "காரிம்ப்" வகையை சார்ந்தது.

  Curry leaf tree buds

  கிளைகளின் நுனிகளிலுள்ள மஞ்சரிகளில் 60 முதல் 90 க்கும் மேற்பட்ட வெண்ணிற சிறிய மதுரமான நறுமணத்தை கொண்ட பூக்களை மலரச்செய்கின்றன. பூவின் சராசரி விட்டம் சுமார் 1. 12 செ.மீ.

  ஒரு தனிப்பட்ட பூவின் காம்புகள் மிகவும் குறுகியவை. காம்பினை அடுத்துள்ள புல்லிவட்டமானது (sepals) 1 மி.மீ நீளத்திற்கும் குறைவான அளவையே கொண்டுள்ளன. இந்த புல்லிவட்டம் பச்சை நிறத்தில் இதழ்போன்ற 5 முனைகளுடன் காணப்படுகின்றன.

  புல்லிவட்டத்திற்கு அடுத்துள்ள அல்லிவட்டத்தில் தனித்தனியாக பிரிக்கப்பட்ட 5 பூ இதழ்கள் காணப்படுகின்றன. இந்த இதழ்களானது வெண்மையாக நீள் வட்ட வடிவத்தில் (ஈட்டி வடிவத்தில்) காணப்படுகின்றன. ஒவ்வொரு இதழ்களும் 4 லிருந்து 7 மி.மீ நீளத்தில் உள்ளன.

  அதற்கு அடுத்துள்ள மகரந்த வட்டத்தில் ஒரு இதழுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில் மொத்தம் 10 மகரந்த தாள்கள் (Stamen) காணப்படுகின்றன. இந்த மகரந்த தாள்களின் நீளம் 4 முதல் 6 மி.மீ அளவில் உள்ளன. இவைகளின் தலைப்பகுதியில் மஞ்சள் பொட்டுபோல் காணப்படும் மகரந்தமானது (Anther) மலருக்கு விஷேச அழகினை கொண்டுவருகின்றன.

  Curry leaf tree bouquet of flowers

  மகரந்த வட்டத்திற்கு மத்தியிலுள்ள கருப்பை (Ovary) யிலிருந்து மேலெழும்பிவரும் இலேசான பச்சை கலந்த வெண்ணிற சூல்தண்டு (Style) சுமார் 4 மி.மீ நீளத்தை பெற்றுள்ளன. இந்த சூல்தண்டின் தலைப்பகுதியில் இளம்பச்சை நிறத்தில் தொப்பி போன்ற அமைப்புடன் கூடிய வட்டவடிவ சூல்முடி (Stigma) காணப்படுகிறது. இவை எண்ணிக்கையில் ஒன்றுமட்டுமே உள்ளன.

  காய்களின் தன்மை.

  ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன.

  murraya_koenigii_Pods

  கறிவேப்பிலையின் காய்கள் வழக்கம்போல் பச்சைநிறமாகவே உள்ளன. அதன்பின் அவைகள் நாட்கள் செல்லச்செல்ல பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. அவ்வேளையில் காய்கள் பச்சையும் சிவப்பும் கலந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

  Curry leaf tree fruit

  பச்சை நிறத்திலிருந்து முழுமையாக கண்களை பறிக்கும் சிவப்பு நிறத்திற்கு மாறிய காய்கள் கனிய கனிய கருப்பு நிறத்திற்கு மாறுகின்றன. அவ்வேளையில் சிவப்பும் பளபளக்கும் நாவற்பழ கருப்புமாக காட்சிதரும் பழங்கள் உண்மையிலேயே நம் உள்ளத்தை கொள்ளையடிக்கின்றன.

  Murraya Koenigii_Curry leaf tree fruit

  அதன்பின் ஓரிரு நாட்களில் அனைத்தும் கனிந்து வழுவழுப்பான தோற்றத்துடன் பளபளக்கின்றன.

  கருமை நிறமான இந்த பழங்கள் பட்டாணி அளவில் பளபளப்புடன் அழகாக காட்சியளிக்கின்றன.

  Indian-Curry-Leaf-Tree-fruit

  இந்த பழங்கள் 10 லிருந்து 16 மி.மீ நீளமும், 10 லிருந்து 12 மி.மீ அகலத்தையும், 880 மி.கி அளவு எடையையும் கொண்டுள்ளன.

  காரமான வாசனையை கொண்டுள்ள இந்த பழங்களினுள் 1 அல்லது 2 எண்ணிக்கைகளில் பச்சை நிற விதைகள் காணப்படுகின்றன.

  விதைகள் 8 மி.மீ நீளத்தையும், 7.5 மி.மீ அகலத்தையும், 445 மி.கிராம் அளவு எடையையும் கொண்டுள்ளன.

  ஒரு பழத்தினுள் 1 விதை மட்டுமே இருந்தால் அவ்விதையானது மேற்கண்ட அளவுகளிலும், இருவிதைகள் இருந்தால் இருவிதைகளும் அளவில் கொஞ்சம் சிறியதாகவும் காணப்படுகின்றன.

  Indian Curry Leaf seeds

  விதைகளை சுற்றி லேசான ஊதாநிற சதைகள் கூழ் வடிவில் காணப்படுகின்றன. இந்த சதைகளை நாம் உணவாக உட்கொள்ளலாம். பழங்கள் உண்பதற்கு இனிமையாகவும், காரமான ஒருவித வாசனையையும் கொண்டுள்ளன.

  பழங்கள் சத்து நிறைந்தவை மட்டுமல்ல. மருத்துவகுணமும் கொண்டவை. ஆனாலும் இதில் குறிப்பிட்டு சொல்லும்படி அதிக அளவு சதைப்பற்று இல்லையென்பதாலும். சதைப்பகுதியையும், விதைப்பகுதியையும் பிரித்து சாப்பிட அதிகம் பொறுமை தேவைப்படுவதாலும் யாரும் இதனை அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை.

  ஆனால், பறவைகள் இதனை விரும்பி சாப்பிடுகின்றன. பறவைகள் மூலமாகவே தொலைதூரங்களுக்கு விதைகள் எடுத்துச்செல்லப்பட்டு இவ்வினங்கள் வேகமாக பரவுவதற்கு வழியேற்படுகின்றன. ஆனால் பாலூட்டிகளான விலங்குகள் இப்பழங்களை சாப்பிடுவதில்லை. அதற்கான காரணங்களும் உள்ளன. அதனை பின்னால் பார்க்கலாம்.

  பழத்தின் பாதிக்கும் அதிகமான பகுதியை விதைகளே ஆக்கிரமித்துள்ளன. பழத்தில் உண்ணக்கூடிய பகுதி 45 சதவீதம் மட்டுமே.

  இந்த பழத்தில் "வைட்டமின் A" மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் நிறையவே உள்ளன.

  கருவேப்பிலை பழங்களை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பூச்சிகள் கடித்த இடங்களில் தடவிவர அதன் பாதிப்புகள் அகலும்.

  பழங்களில் அடங்கியுள்ள சத்துக்கள்.

  [100 கிராம் பழச்சதையில் அடங்கியுள்ள சத்துக்கள்]

  English Name Tamil Name Nutrient value
  Water நீர் 64. 9 %
  Sugar சர்க்கரை 9. 76 %
  Vitamin C வைட்டமின் C 13. 35 mg
  Protein புரதம் 1. 97 g
  Phosphorus பாஸ்பரஸ் 0. 082 g
  Potassium பொட்டாசியம் 0. 811 g
  Calcium கால்சியம் 0. 166 g
  Magnesium மெக்னீசியம் 0. 216 g
  Iron இரும்பு 0. 007 g


  விதைகளின் தன்மை.

  பிற விதைகளைப்போல் இவைகள் பாதுகாப்புக்காக கடினமான ஓடுகளை பெற்றிருக்கவில்லை. பாலித்தீன் பேப்பரைப்போல ஒளி ஊடுருவும் தன்மைகொண்ட மிக மிக மெல்லிய தோல் போன்ற அமைப்பையே கொண்டுள்ளன. எனவே அதனுள்ளிருக்கும் பச்சைநிற இரு வித்திலைகளும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இதன்வழியாக வெளிப்பட்டு தெரிவதால்தான் பார்ப்பதற்கு இவ்விதைகள் பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

  Curry Leaf tree seeds

  இந்த விதைகள் இலைகளைப்போலவே காரத்தன்மை கொண்டதாகவும் ஓரளவு வாசனைகொண்டதாக இருந்தாலும் கூட இவைகள் இலைகளைப்போல சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் விதைகளிலுள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில இரசாயன மூலக்கூறுகள்.

  இதன் விதைகளிலுள்ள சில ரசாயன மூலக்கூறுகள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ஜீரணமண்டலங்களில் "குடல் அழற்சி" போன்ற சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

  கடினமான பாதுகாப்பு ஓடுகள் எதுவும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் விதைகள் விலங்குகளால் வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதனால் இயற்கையானது அதனை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த தற்காப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

  ஆனால் பறவைகளின் உடலில் இது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. அதன் ஜீரணமண்டலங்களால் விதைகள் சிதைக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் பறவைகள் மூலமாகவே இதன் விதைகள் தொலை தூரங்களுக்கு பயணிக்கின்றன என்பதால்.

  எனவே மனிதர்களாகிய நாம் இதன் பழங்களை ருசிபார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். விதைகளோடு சடுகுடு விளையாடுகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள். மீறினால் "இரைப்பை வறட்சி" மற்றும் "குடல் அழற்சி" என்னும் வலிமிகுந்த நோயுடன் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

  எனவே குழந்தைகளாகட்டும் அல்லது பெரியவர்களாகட்டும் பழங்களுடன் சேர்த்து விதைகளையும் சாப்பிட அனுமதிக்கவேண்டாம். சதைகளை சாப்பிட்டுவிட்டு விதைகளை துப்பிவிட வலியுறுத்துங்கள்.

  இனப்பெருக்கம்.

  பழங்களை விரும்பி உண்ணும் பறவைகளால் விதைகள் வெகுதூரங்களுக்கு கடத்தப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. தற்காலங்களில் இதன் கிளைகளை ஒடித்து நட்டு வைப்பதின் மூலமாகவும் புதிய செடிகளை உற்பத்தி செய்கின்றனர்.

  வேர்களின் தன்மை.

  இதனுடைய வேர்பட்டையானது சிறுநீரகங்களில் ஏற்படும் வலிகளை நீக்கும் தன்மையுடையது.

  சிறுநீரகம் சம்பந்தமான வலிகளுக்கு வேர்களிலிருந்து எடுக்கப்படும் சாறு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இந்த வேருக்கு கெட்டிப்பட்ட மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு.

  வேர்ப்பட்டையை ஊறவைத்த நீரை 60 மில்லி அளவு தினம் இருவேளை அருந்திவர வாந்தி நிற்கும்.

  சத்துக்களின் விபரம்.

  கருவேப்பிலையில் அடங்கியுள்ள சத்துக்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகளைப் பற்றி பார்ப்போம்.

  English Name Tamil Name
  beta-Pinene பீட்டா பினீன்
  alpha-Pinene ஆல்பா பினீன்
  beta-Caryophyllene பீட்டா-கேரியோபிலீன்
  beta-Phellandrene பீட்டா-பெல்லன்ட்ரீன்
  beta-sitosterol பீட்டா-சிட்டோஸ்டெரால்
  O-methyl murrayamine A O-மெத்தில் முர்ரமைன் A
  O-methyl mahanine O-மெத்தில் மகானைன்
  Calcium சுண்ணாம்பு சத்து
  Magnesium மக்னீசியம்
  Iron இரும்பு
  Copper தாமிரம்
  Phosphorus பாஸ்பரஸ்
  Sulphur கந்தகம்
  Chromium குரோமியம்
  Chlorine குளோரின்
  Carbazole கார்பஸோல்
  cyclomahanimbine சைக்ளோமஹானிம்பைன்
  Scopolin ஸ்கோப்போலின்
  Protein புரதம்
  Fats கொழுப்பு
  Fiber நார்ச்சத்து
  Vitamin A [beta-carotene] வைட்டமின் A [பீட்டா கரோட்டின்]
  Vitamin B1 [thiamine] வைட்டமின் B1 [தயாமின்]
  Vitamin B2 [riboflavin] வைட்டமின் B2 [ரிபோ ஃப்ளவின்]
  Vitamin B3 [niacin] வைட்டமின் B3 [நியாசின்]
  Vitamin B9 [folic acid] வைட்டமின் B9 [ஃபோலிக் அமிலம்]
  Vitamin C [ascorbic acid] வைட்டமின் C. [அஸ்கார்பிக் அமிலம்]
  Vitamin E வைட்டமின் E
  Isomahanine ஐசோமஹனைன்
  Isomurrayazoline ஐசோமுர்ரயஸோலைன்
  Isomurrayazolinine ஐசோமுர்ரயாசோலைனின்
  Koenine கோயினின்
  Koenidine கோனிடின்
  Koenigine கோயினிஜின்
  Koenimbine கோயின்பைன்
  Mahanimbinine மஹானிம்பினைன்
  Mahanimboline மஹானிம்போலைன்
  Mahanimbinol மஹானிம்பினோல்
  Mahanimbicine மஹானிம்பிஸைன்
  Mahanine மஹானைன்
  Mukonicine முகோனைஸின்
  Mukoeic acid முகோயிக் அமிலம்
  mukoline முகோலைன்
  Mukolidine முகோலைடின்
  Mukonine முகோனைன்
  Mukonidine முகோனிடின்
  Murrayacinine முர்ரயசைனைன்
  Murrayazolinine முர்ரயாசோலைனின்
  Murrayaline முர்ரயலைன்
  Murrayanine முர்ரயனைன்
  Murrayanol முர்ரயனோல்
  Murrayone imperatoxin முர்ரேயோன் இம்பெராடாக்சின்
  Glycozoline கிளைகோஸோலைன்
  methyl carbazole மெத்தில் கார்பஸோல்
  Oleoresin ஒலியோரெசின்
  Asparagine அஸ்பாரஜின்
  Serine amino acid செரைன் அமினோ அமிலம்
  Aspartic acid ஆஸ்பார்டிக் அமிலம்
  Oxalic acid ஆக்சாலிக் அமிலம்
  Alanine அலனைன்
  Proline புரோலின்
  Cinnamaldehyde சின்னமால்டிகைடு
  Girinimbine கிரினிம்பைன்
  Girinimbilol கிரினிம்பிலோல்
  Koenoline கோயினோலைன்
  Bismahanine பிஸ்மஹனைன்
  Phebalosin ஃபெபாலோசின்
  Mahanimbine மஹானிம்பைன்
  Pypayafoline carbazole பைபயாஃபோலின் கார்பசோல்
  Xynthyletin சைந்திலெடின்

  தீரும் நோய்கள்.

  உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் கருவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்து சாப்பிட வயிற்றிலுள்ள வாய்வை அகற்றி பசியுடன் நல்ல ஜீரணசக்தியையும் கொடுக்கும்.

  இலையை கஷாயம் செய்து அருந்த வாந்தி நிற்கும். மேலும் உடலுக்கு வலுவைத்தரும். பித்தத்தை கண்டித்து உடல் சூட்டை தணிக்கும்.

  வெயில் காலங்களில் ஏற்படும் கட்டிகளுக்கு கருவேப்பிலையை அரைத்து பூச குணம் கிடைக்கும்.

  கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும், இருதயநோயை இல்லாமல் செய்வதற்கும் கருவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகமிக அவசியம்.

  இது தீர்த்துவைக்கும் நோய்கள் என்று பார்த்தால் ஒன்றல்ல இரண்டல்ல பல உள்ளன என்றாலும் இளைஞர்களை வாட்டி எடுக்கும் தலையாய பிரச்சனையான இளநரையை தடுத்து நிறுத்துவதில் இது முதன்மையானது. இளநரை வராமல் தடுப்பதுடன் முடிக்கு பளபளப்பையும் கொடுக்கிறது. முடி கொட்டுவதிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. இளமை தளும்பும் வழுவழுப்பான தோல்களையும் தருகிறது.

  மேலும் இதனுடைய நோய்தீர்க்கும் பண்பு என்று பார்த்தால் சுவையின்மை, மந்தம், மலக்கட்டு, நாட்பட்ட சுரம், பிரமேகம், அம்மைத்தழும்பு, கிரகணி, தலைவலி, வீக்கம், தாகம், அரிப்பு, சூலைநோய் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கிறது.

  இதன் இலை, வேர், பட்டை முதலியவற்றை கஷாயமாக செய்து அருந்த பித்தத்தை நீங்குவதுடன் அதனால் ஏற்படுகின்ற வாந்தியையும் நிறுத்துகிறது.

  Murraya_koenigii_Stems

  தேவையான அளவு கருவேப்பிலையை கொண்டுவந்து அம்மியில் மையாக அரைத்து சுண்டைக்காயளவு சாப்பிட்டுவர வயிற்றுவலி நீங்கும். இரத்தம் சுத்தமாகும். இதையே நெல்லிக்காய் அளவு இருவேளை மூன்றுநாள் தொடர்ந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

  கறிவேப்பிலை பொடியை 3 டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு வெந்நீர் அருந்தவும். இதனால் சூதக வாய்வு, நீர்க்கோவை நீங்கும்.

  கருவேப்பிலையை துவையலாகவோ அல்லது பொடியாகவோ சாதத்துடன் சேர்த்துவர இதய நோய் வராமல் தடுக்கும்.

  தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை நன்றாக மென்று தின்று நீர் குடித்துவர உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் குறையும். தொப்பை கரையும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும். வாய்கசப்பு நீங்கும், வாயு தொல்லை அகலுவதோடு உடல் பருமனும் குறையும்.

  கருவேப்பிலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பசைபோலாக்கி தலையில் தடவி அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர பேன், பொடுகு தொல்லைகள் நீங்கும். முடியும் செழித்து வளரும்.

  இதிலுள்ள கந்தகம் பித்தநீர் சுரப்பு தடையின்றி சுரக்க உதவுகிறது. மேலும் உடலிலுள்ள கழிவுப்பொருட்கள் தடையின்றி வெளியேறவும் கந்தக சத்து உதவுகிறது.

  இதிலுள்ள குளோரின் உப்பானது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்கிறது.

  இதிலுள்ள பொட்டாசியம் ஜீரணநீர்கள் தடையின்றி உற்பத்தியாக உதவுகிறது.

  கை, கால் நடுக்கம் உள்ளவர்கள் கருவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்த்துவர நரம்புமண்டலம் பலமடைந்து கை, கால் நடுக்கம் நீங்கும்.

  இதில் பாஸ்பரஸ் தேவையான அளவு உள்ளதால் மூளைக்கு பலம் சேர்த்து  ஞாபக சக்தியையும் மேம்படுத்தும்.

  இதிலுள்ள மக்னீசியம் சத்தும் போலிக் அமிலமும் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.

  இதிலுள்ள "முராயாசினின்" என்னும் வேதிப்பொருள் கிருமி நாசினியாகவும், பூஞ்சை காளான் கொல்லியாகவும் செயல்படுகின்றன.

  கறிவேப்பிலையை நன்கு அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு காலை, மாலை மூன்றுநாட்கள் தொடர்ந்து சாப்பிட உள்சூடு அகன்று சீதபேதி குணமாகும்.

  கண்களுக்கு குளிர்ச்சி தரும் கருவேப்பிலையில் "வைட்டமின் A" தாராளமாக உள்ளதால் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.

  வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டுவரலாம்.

  இதன் இலைகளில் "ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்" (Antioxidants) நிறைந்துள்ளதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

  இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

  கருவேப்பிலையிலுள்ள "கிரினிம்பைன்" (Girinimbine) என்னும் ஆல்கலாய்டு ஈரல் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

  இதன் இலை மற்றும் விதைகளிலிருந்து வாசனை ததும்பும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யானது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் திறனை பெற்றுள்ளது.

  கருவேப்பிலை ஜீரண பொடி.

  கறிவேப்பிலை - 50 கிராம்.

  பெருங்காயம் - 50 கிராம்.

  சுக்கு - 50 கிராம்.

  திப்பிலி - 25 கிராம்.

  சீரகம் - 25 கிராம்.

  இந்துப்பு - 25 கிராம்.

  மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை வெயிலில் நன்றாக காயவைத்து பின் ஒருசேர எல்லாவற்றையும் உரலிலிட்டு இடித்து சலித்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதுவே கருவேப்பிலை ஜீரணப்பொடி.

  சாதத்துடன் 1 டீஸ்பூன் அளவு  பொடியை கலந்து இதனுடன் சிறிது பசுநெய்யும் சேர்த்து பிசைந்து சாப்பிட உடல் வலிமை பெறும். ஜீரண சக்தி அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். உடல் வெப்பத்தை தணிக்கும். பித்தம் அகலும். நன்கு பசியும் எடுப்பதோடு ஆரோக்கியமும் மேம்படும். ஆயுளும் விருத்தியாகும்.

  கருவேப்பிலை துவையல்.

  கறிவேப்பிலையுடன் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். இதனை அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு போதிய அளவு நீர்விட்டு துவையலாக அரைக்கவும்.

  Karuveppilai curry thuvaiyal

  இது உண்மையாகவே அடிபொழியாக இருக்கும். இதனை உணவுடன் கலந்து சிறிது நெய்யும் விட்டு சாப்பிட வாய்கசப்பு, வாய்நீர் ஊறல், பித்தம்,அரோசகம், அதிசாரம், பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுளைச்சல் முதலியன குணமாகும்.

  சிலருக்கு சாப்பிட்ட உடனேயே மலங்கழிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வரும். அப்படியானவர்கள் மேற்கண்ட துவையலை சாதத்தில் கலந்து உண்டுவர மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

  இந்த துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துவர செம்பட்டை முடி கருமையடையும். வறண்ட தோல்கள் வறட்சி நீங்கி பளபளப்படையும். பசியின்மை போயேபோகும். வாய்கசப்பு, பித்தம் நீங்கும்.

  ஈர்க்கு குடிநீர்.

  ஈர்க்கு (கறிவேப்பிலை இலையின் நடுத்தண்டு) - 25 கிராம்.

  சுக்கு - 25 கிராம்.

  சீரகம் - 25 கிராம்.

  ஓமம் - 25 கிராம்.

  மேற்கண்ட நான்கு பொருட்களையும் 2 படி தண்ணீரில் போட்டு கால் படியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து இருவேளை அருந்த அஜீரண வாயு அகலும்.

  கறி வேப்பிலை தைலம்.

  கறிவேப்பிலை சாறு - 6 அவுண்ஸ்.

  கற்பூரவள்ளி இலை சாறு - 6 அவுண்ஸ்.

  தேங்காய் எண்ணெய் - 12 அவுண்ஸ்.

  கருஞ்சீரகம் - 25 கிராம்.

  மேற்குறிப்பிட்ட நான்கு சரக்குகளையும் ஒன்று கலந்து சிறு விறகால் கருஞ்சீரகம் கருகாதவண்ணம் தைலபதமாக காய்ச்சி வடித்து ஆறியபின் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  இதனை தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர தலைகுத்து, ஒருதலைக்குத்து முதலியன குணமாகும்.

  முகப்பரு குணமாக.

  கருவேப்பிலையை காயவைத்து இடித்தெடுத்துக்கொள்ளவும். இந்த பொடி 1 தேக்கரண்டி அளவும் இதனுடன் சோம்பு பொடி அரை தேக்கரண்டி அளவும்  சேர்த்து ஒரிஜினல் பன்னீர்விட்டு குழைத்து பருக்களின்மேல் பூசிவர பருக்கள் காய்ந்து உதிர்ந்துவிடுவதோடு பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மாறிவிடும்.

  அம்மை வடு நீங்க.

  சிலருக்கு அம்மை நோயினால் முகத்தில் புள்ளி புள்ளியாக வடுக்கள் தோன்றி இருக்கும். முகத்தின் அழகை கெடுக்கும் இவ்வடுக்களை நீக்கி முகத்தை பொலிவுற செய்ய கருவேப்பிலை கைகொடுக்கிறது.

  கறிவேப்பிலை - 1 கைப்பிடி.

  கசகசா - 15 கிராம்.

  கஸ்தூரி மஞ்சள் - 8 கிராம்.

  இம்மூன்றையும் சுத்தமான கல்வத்திலிட்டு மைபோல் அரைத்தெடுத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் நன்கு தடிமனாக பூசி 20 நிமிடம் ஊறவிட்டு அதன்பின் வெந்நீரால் கழுவி விடவும். இவ்வாறு காலையும் மாலையும் தொடர்ந்து செய்துவர தழும்புகள் படிப்படியாக மறைந்துபோகும்.

  கருவேப்பிலை வளர்ப்பு முறை.

  முத்தான மூன்று ரகங்கள்.

  இனி கருவேப்பிலை மரத்தை நம்முடைய வீட்டு தோட்டங்களில் அல்லது விவசாய தோட்டங்களில் பயிர் செய்வது எப்படி என்பதனை பார்ப்போம். இதில் மூன்றுவிதமான ரகங்கள் உள்ளன. அவை..

  1. Regular (RE) - ரெகுலர் ரகம்.
  2. Gamthi Miniature (GM) - சிறிய ரகம்.
  3. Dwarf (DF) - குட்டை ரகம்.

  இதில் "ரெகுலர்" ரகமானது உயரமாக வளர்ந்து அழகாக காட்சிதரக்கூடியது. வேகமாக கிளைகளை உருவாக்கி அதிக அளவில் மகசூலையும் தரக்கூடியது. அடர்பச்சை இலைகளுடன் காணப்படும் இது இந்தியா முழுவதுமே பயிராகிறது.

  Indian-Curry-Leaf- Trees. Regular (RE)

  இரண்டாவது ரகமான "கமதி" என்று அழைக்கப்படும் சிறிய ரகமானது அடர்த்தியான இலைகளை கொண்டுள்ளது. இலைகள் அளவில் சிறியதாக ஆனால் தடிமனாக இருக்கும். அதிக அளவில் வாசனையை தரக்கூடியது. ஆனால் மிக மெதுவாக வளரக்கூடியது. இது சேர்க்கப்படும் உணவுப்பொருள் அதிக அளவு வாசனையையும், சுவையையும் பெறுகிறது.

  Curry Leaf - Gamthi Miniature (GM)

  மூன்றாவது ரகமான "குட்டை" ரகமானது உயரமாக வளர்வதில்லை. மாறாக பல பக்க கிளைகளுடன் பரந்து புதர்போல் வளர்கிறது. இலைகள் "ரெகுலர்" ரகத்தின் இலைகளைவிட சற்று நீளமானது. வெளிர் பச்சை நிறத்தை கொண்டவை. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதுபோல இதில் வாசனைக்கும் குறைவில்லை.

  Dwarf (DF). Murraya Koenigii

  மேற்குறிப்பிட்ட மூன்று ரகங்களுமே சுவைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்று சிறிது வேறுபடுகின்றன.

  பயிரிடும் முறை.

  இந்த கறிவேப்பிலையை பல ஏக்கர் பரப்பளவில் உற்பத்திசெய்யும் விவசாய நிலங்களை இருநாடுகளே கொண்டுள்ளன. ஒன்று இந்தியா. மற்றொன்று ஆஸ்திரேலியா.

  இந்தியாவில் இது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது.

  இது பொதுவாக வெப்பமண்டல தாவரமாக இருந்தபோதிலும் குளிர் பொருந்திய மிதவெப்ப மண்டலங்களிலும் அங்குள்ள பருவ நிலைகளையும் சமாளித்து கொண்டு ஓரளவு வளரத்தான் செய்கின்றன. ஆனால் அதிக குளிர் நிலவும் இடங்களில் இவைகள் வளருவதில்லை.

  இது செழிப்பாக வளர நல்ல சூரிய வெளிச்சமும் சுற்றுப்புற வெப்பநிலை 18 ⁰C (65 ⁰F) அளவிலும் இருக்கவேண்டியது அவசியம்.

  இதனை இருவகைகளில் பயிரிடலாம். அவை..

  1. தண்டுகளை பதியமிடுதல் மூலமாக.
  2. விதைகள் மூலமாக.

  தண்டு பதியமிடல்.

  தண்டுகளை பதியமிடுதல் முறையில் ஒருவிரல் கனமுள்ள தண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரை அடி நீளத்தில் கணுவுள்ள குச்சிகளாக நறுக்கி குச்சிகளின் அடிப்பகுதி சாய்வாக இருக்கும்படி கத்தியால் சீவிக்கொள்ள வேண்டும்.

  அதன்பின் சாய்வாக வெட்டப்பட்ட அடிப்பகுதியை வேர் வளர்ச்சியை தூண்டும் "Rooting Hormone" என்னும் மருந்தில் நனைத்து குச்சியின் அடிப்பகுதியை வரிசையாக கரிம உரம் கலந்த மணல்களில் நட்டுவைக்க இரண்டு வாரங்களில் துளிர்விடும். மூன்று வாரங்களில் வேர்விடும்.

  planting the curry leaf cutting.

  குச்சிகளை நட்டுவைக்கும் பகுதி வெயில் இல்லாத நிழலான பகுதியாக இருக்க வேண்டியது அவசியம்.

  விதைகள் மூலம் பயிர்செய்தல்.

  பழங்களிலிருந்து விதைகளை தனியாக பிரித்தெடுத்துதான் விதைக்க வேண்டுமென்பதில்லை. முழுப்பழமாகவே விதைத்துவிடலாம். ஒரு பழத்தினுள் ஒன்று அல்லது இரு விதைகள் மட்டுமே இருக்குமென்பதால் ஒரு பழத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு செடிகள் மட்டுமே முளைக்கின்றன.

  ஆனால் பழங்களுடன் விதைக்கப்படும் விதைகளைவிட பழங்களிலிருந்து தனியாக பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் விரைவாக முளைக்கின்றன.

  Karuveppilai seeds

  கனிந்த பழங்களை குளிர்ந்த நீரில் போட்டு கைகளால் பிசைந்து அலசுவதின் மூலம் விதைகளை எளிதில் பிரித்தெடுக்கலாம்.

  பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் விதைத்துவிட வேண்டும். பிறவிதைகளைப்போல வெயிலில் காய வைப்பதெல்லாம் வேலைக்காகாது.

  ஏனெனில் பிற விதைகளுக்கு இருப்பதுபோல உள்ளிருக்கும் வித்திலைகளில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாக்கும் பொருட்டு மேல்புறத்தில் கடினமான ஓடுகளை இது பெற்றிருக்கவில்லை. எனவே வெயிலில் காயவைத்தாலோ அல்லது விதைப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக்கொண்டாலோ வித்திலைகளிலுள்ள நீர் சத்துகளெல்லாம் வறண்டுபோய் விதைகள் இறந்துவிடும்.

  கருவேப்பிலை விதை முளைப்பதற்கு சுற்றுபுற வெப்பநிலை 20 ⁰C இருக்க வேண்டும்.

  விதைகள் பயிரிடும் மண்ணின் அமில கார அளவு 5.6 - 6.0 என்ற விகிதாசாரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

  நன்கு பழுத்த பழங்கள் அல்லது விதைகளை சேகரித்து சமதளமான நிலத்தில் விரல்களால் கால் அங்குலத்துக்கு குறைவான அளவில் பள்ளம் செய்து அதில் ஒரு விதையை போட்டு மணல்கொண்டு மூடவும். இவ்வாறு வரிசையாக விதைத்து நீர் தெளித்துவர 20 நாட்கள் கழித்து முளைவிட ஆரம்பிக்கும்.

  விதைகளின் முளைப்பு விகிதம் குறைவாக உள்ளதால் உங்களுக்கு தேவைப்படும் செடிகன்றுகளைவிட அதிக அளவில் விதைகளை விதைக்கவும்.

  பின் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வளர்ந்த நாற்றினை பிடுங்கி தனித்தனியான பாலித்தீன் கவர்களில் வைத்து பராமரிக்கவேண்டும்.

  Curry Leaf small plants.

  1 அல்லது ஒன்றரை வருடங்களில் போதிய அளவு வளர்ந்துவிடும் இதுவே விவசாய நிலங்களில் நடவு செய்வதற்கு ஏற்றது.

  நடவு செய்வதற்கு முன்னால் நிலத்தை பண்படுத்த வேண்டும். நிலத்தை எவ்வாறு பண்படுத்துவது என்று பார்ப்போம்.

  நில சீரமைப்பு மற்றும் சாகுபடி.

  கருவேப்பிலையை நடவு செய்வதற்கு முன் நிலத்தை 3 அல்லது நான்கு தடவை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும்.

  பின் செடியை நடவு செய்வதற்கு ஏதுவாக 30 செ.மீ ஆழ குழிதோண்ட வேண்டும். இரு குழிகளுக்கு  இடைபட்ட தூரம் 6 அடி இருத்தல் வேண்டும். 15 கிலோ மக்கிய தொழு உரத்தை மண்ணுடன் கலந்து குழிகளில் நிரப்ப வேண்டும். அப்படியே ஒன்றிரண்டு மாதங்கள் உரம் நன்கு மக்கும்படி ஆறப்போடவும்.

  ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பின் ஒன்று அல்லது ஒன்றரை வயது ஆன இளம் செடிகளை அதில் நடவு செய்தல் வேண்டும். நடவு செய்தபின் நீர் பாய்ச்சுதல் வேண்டும்.

  அதன்பின் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு தடவை நீர் பாய்ச்சுதல் வேண்டும். மரம் ஓரளவு நன்றாக வளர்ந்து மகசூல் தர தொடங்கிய உடன் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்தாலே போதுமானது.

  வருடத்திற்கு ஒரு தடவை எரு உரம் இட்டால் போதுமானது. அவ்வப்போது களைகளை அகற்றுவதுடன் நிலம் நன்கு காற்றோட்டமாக இருக்கும் விதத்தில் வருடத்திற்கு மூன்று அல்லது 4 தடவை உழுது வைக்க வேண்டியது அவசியம்.

  இதன் ஊடுபயிராக பூண்டு, புதினா, வெங்காயம், தக்காளி முதலியவைகளை பயிர்செய்யலாம். ஆனால் பூச்செடிகள், கடுகு, மா, எலுமிச்சை, நாரத்தை போன்ற சிட்ரஸ் மரவகைகளை நடவு செய்வதை தவிர்க்கவேண்டும்.

  நீர் மேலாண்மை.

  இது வறட்சியை தாங்கி வளரும் தாவரம். அதிக அளவில் நீர்ப்பாசனம் தேவைப்படுவதில்லை. மாதத்திற்கு இருமுறை நீர்பாய்ச்சினாலே போதுமானது.

  இதன் வேர் பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வேரில் நீர் தங்கினால் பூஞ்சாண தொற்று மற்றும் வேரழுகல் நோய் ஏற்பட்டு இலைகள் பழுத்து உதிரும். தாவரமும் விரைவில் மரணிக்கும். எனவே சிறந்த வடிகால் வசதியை ஏற்படுத்துவது அவசியம்.

  உர மேலாண்மை.

  தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரங்களை கொடுக்கலாம். இலைகள் மஞ்சள் நிறமாகவும் அதிலுள்ள நரம்புகள் அடர் பச்சை நிறமாகவும் தோற்றம்தந்து இலைகள் உதிர ஆரம்பித்தால் மண்ணில் "இரும்புசத்து" குறைவாக உள்ளது என்பதனை எளிதாக கண்டறிந்துவிடலாம். எனவே  இக்குறைபாட்டை களைய சிறிதளவு இரும்பு சல்பேட் ஐ மணலுடன் கலந்து தூவ வேண்டும்.

  வருடந்தோறும் ஒரு மரத்திற்கு சுமார் 15 லிருந்து 20 கிலோ வரையில் தொழுஉரம் இடவேண்டியது அவசியம். மேலும் ரசாயன உரமாக 150 கிராம் யூரியா, 50 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் இடவேண்டும்.

  பயிர்பாதுகாப்பு.

  குறைந்த அளவு பராமரிப்பே போதுமானது என்றாலும் களைகள் அவ்வப்போது அகற்றப்பட வேண்டியது அவசியம்.

  இது 16 ⁰C லிருந்து 37 ⁰C வரையுள்ள வெப்பநிலையிலேயே செழிப்பாக வளர்கின்றன. எனவே சுற்றுப்புற வெப்பநிலையையும் கவனித்துவர வேண்டியது அவசியம்.

  இனி இதனை தாக்கும் பூச்சி இனங்களைப் பற்றியும் அதனை கட்டுப்படுத்தும் முறையைப் பற்றியும் பார்க்கலாம்.

  பாதிக்கும் பூச்சிகள்.

  இந்த கருவேப்பிலையானது அதிகம் பாதிக்கப்படுவது "அசுவிணி" (Aphids) மற்றும் இலைப்புள்ளி நோய்களால்தான்.

  இலைப்புள்ளி நோயானது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகாளால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணை மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

  சாறு உறிஞ்சும் பூச்சிகள்.

  அசுவிணி பூச்சி (Aphids) மற்றும் செதில் பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.

  Cetil Pucci

  இதனை கட்டுப்படுத்த "டை மெத்தோயேட்" 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

  இலைப்புள்ளி நோய்.

  இலைப்புள்ளி என்பது பாக்டீரியாவால் இலைகளில் ஏற்படும் ஒருவித பாதிப்பு. இந்த பாதிப்பால் இலைகளின் மேற்பகுதிகளில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் நெருக்கமாக தோன்றும். இதனால் இலைகளின் பசுமைத்தன்மை பாதிக்கப்பட்டு இலைகள் விரைவில் உதிர்ந்துபோகும்.

  curry leaf plant diseases_Candidatus Liberibacter asiaticus bacteria

  இந்த நோயானது "Candidatus Liberibacter asiaticus" (கேண்டிடாடஸ் லிபெரிபாக்டர் ஆசியடிகஸ்) என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த "கார்பன்டாசிம்" 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

  பொதுவாக கருவேப்பிலை இலைகள் உணவாக பயன்படுத்தப்படுவதால் இலைகள் அறுவடை ஆரம்பிப்பதற்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே பூச்சிமருந்து தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

  ஆபத்தான பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதைவிட வேப்ப எண்ணெய் பயன்படுத்தி பூச்சிகளை ஒழிப்பது நன்மை பயக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் கலவையை தெளித்துவரலாம். இது பாதுகாப்பானது.

  மகசூல்.

  நடவு செய்த இரண்டாவது ஆண்டிலிருந்து அறுவடையை தொடங்கலாம்.

  இலைகள் அதிகமாக தழைக்க வேண்டுமெனில் காய்கள் காய்ப்பதை தள்ளிப்போடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மஞ்சரிகளில் மொட்டுக்கள் உருவாகும்போது அவைகளை அகற்றிவிடலாம். இதனால் இலைகள் அதிக அளவில் தழைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

  அறுவடை செய்யும்போது தாவரத்தில் எவ்வளவு இலைகள் உள்ளதோ அவற்றில் 30 % மட்டுமே அறுவடை செய்யவேண்டும். அதிகமாக அறுவடை செய்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து வரும் வருடங்களில் மகசூலும் குறைந்துபோகும்.

  ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச மகசூலாக சுமார் 5 டன் இலைகளை பெறமுடியும். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவை இலைகளை அறுவடை செய்யலாம் என்பதால் வருடத்திற்கு 15 முதல் 20 டன் இலைகளை மகசூலாக பெற முடியும்.

  தொடர்ந்து 20 வருடங்கள் மகசூல் தரும் பணப்பயிர் இதுவென்று சொல்லலாம். 20 வருடங்களுக்கு மேற்பட்ட மரங்கள் போதிய அளவில் பலன்தருவதில்லை. ஆதலால் அதற்குப்பதிலாக புதிய நாற்றுகளை நட்டு பராமரித்துவர வேண்டும்.

  கருவேப்பிலையின் தீமைகள்.

  இந்த கருவேப்பிலையில் பல நன்மைகள் உள்ளது என்றாலும் சில தீமைகளும் உள்ளன. ஆனால் இந்த தீமைகள் எளிதாக நிவர்த்தி செய்யக்கூடியதே.

  வாருங்கள்... இதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையும், அதனை நிவர்த்தி செய்யும் முறைகளையும் பார்ப்போம்.

  கருவேப்பிலைகளை அரைத்து துவையலாகவோ அல்லது பொடியாகவோ சாதத்தில் விட்டு பிசைத்து கிருஷ்ணா என்று மூக்குமுட்ட அடிப்பதற்கு முன்னால் அதில் ஒரு கரண்டி "நெய்" சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

  Curry Leaf Power

  இது எதற்கு தெரியுமா?

  இந்த கருவேப்பிலையானது நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை செய்தாலும்கூட அதிக அளவில் சாப்பிடும்போது ஒருசில தீமைகளையும் செய்கிறது அதில் ஒன்று "குடல் வறட்சி". அதாவது உங்கள் குடல் ஈரப்பதத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் திறனை இழந்துவிடும்.

  இதனால் வயிற்றில் சில அசௌவ்கரியங்கள் ஏற்படுவதோடு இயல்பாக மலம் கழிப்பதிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்.

  இதிலிருந்து தப்பிக்க கருவேப்பிலையை துவையலாகவோ, பொரியலாகவோ, பொடிகளாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் கூடவே 1 டீஸ்பூன் நெய்யும் சேர்த்துக்கொண்டு நெய்மணம் கமழ கமழ சாப்பாட்டை ஒருபிடி பிடியுங்கள். குடல் வறட்சியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம். மலமும் எளிதாக கழியும். பிராபளம் சால்வ். மறுநாள் காலையில் உங்கள் முகம் சகல ஐஸ்வர்யங்களுடன் மலர்ச்சியாக இருக்கும்.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறீர்கள்...மிக்க நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும்... கருத்துக்களை பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி நண்பரே!...

    நீக்கு
  2. பெயரில்லா4 மே, 2022 அன்று PM 7:35

   மிகவும் தெளிவான பதிவு... வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.