"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral inflammatory jaundice.

கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral inflammatory jaundice.

 கீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை.

Viral jaundice Hepatitis.

[PART - 9].

கீழாநெல்லியை பற்றிய பதிவில் இது ஒன்பதாவது பகுதி. ஒன்பதாவது பகுதி மட்டுமல்ல கீழாநெல்லியை பற்றிய பதிவின் கடைசி பகுதி என்று கூட சொல்லலாம்.

நாம் தொடர்ந்து பல பதிவுகளில் கீழாநெல்லியின் வகைகள், அதன் நோய் நீக்கும் பண்புகளோடு மஞ்சள் காமாலை என்னும் உயிர்கொல்லி நோயை தீர்ப்பதில் அது எந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது என்பது பற்றியும் தொடர்ந்து பார்த்துவருகின்றோம்.  மஞ்சள் காமாலை நோய் வருவதற்கான காரணங்கள் பல உள்ளதால் அனைத்து வகையான மஞ்சள் காமாலை பிரச்சனைகளுக்கும் கீழாநெல்லி ஒன்றே தீர்வல்ல என்பதனை புரிந்துகொள்ள செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தது.

  உண்மையில் மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதுவும், பல விதமான நோய்கள் ஏற்படுத்துகின்ற பொதுவான அறிகுறியே காமாலை என்பதுவும், இந்த அறிகுறியை சுமார் 20க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுத்துகின்றன என்பதனோடு நில்லாமல் அந்த நோய்களைப் பற்றிய சில தகவல்களையும் பார்த்தோம்.

  இக்கட்டுரையின் முதல் பகுதியை [Part - 1] படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க....

  >> பில்லாந்தஸ் இனங்களும் கீழாநெல்லியும் - Keelanelli - Phyllanthus Species.<<

  மஞ்சள் காமாலை வருவதற்கு மேற்குறிப்பிட்ட உடல் சார்ந்த பல காரணங்கள் உள்ளன என்றாலும், பெரும்பான்மை காரணமாக இருப்பது "ஆர்த்தோ ஹெபாட்னா" என்னும் வைரஸ்கள்தான்.

  ஹெப்படைட்டிஸ் (Hepatitis) என்பது ஈரல் அழற்சியை குறிக்கும். மேற்குறித்த "ஆர்த்தோ ஹெபாட்னா" வைரஸ்களானது ஈரல் அழற்சியை ஏற்படுத்துவதால் இதனை புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் "ஹெப்படைட்டிஸ் வைரஸ்" என அழைக்கிறோம். இந்த வைரஸ்களில் A, B, C, D, E, F, G என பல வகைகள் உள்ளன.

  அவைகளில் ஹெப்படைட்டிஸ் A மற்றும் ஹெப்படைட்டிஸ் B வைரஸைப்பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாகியா இப்பதிவில் மஞ்சள் காமாலைக்கு காரணமான வைரஸ்களான..

  1. ஹெப்படைட்டிஸ் C (Hepatitis C)
  2. ஹெப்படைட்டிஸ் D (Hepatitis D)
  3. ஹெப்படைட்டிஸ் E (Hepatitis E)
  4. ஹெப்படைட்டிஸ் F (Hepatitis F)
  5. ஹெப்படைட்டிஸ் G (Hepatitis G)

  ஆகிய ஐந்து வகையான வைரஸ்களைப்பற்றி பார்க்கலாம்.

  ஹெப்படைட்டிஸ் C (Hepatitis C)

  ஹெப்படைட்டிஸ் வைரஸ்களில் B டைப் வைரஸ் எந்த அளவிற்கு கொடூரமானதாக கருதப்படுகிறதோ அதே அளவிற்கு இந்த C டைப் வைரஸும் கொடூரமானதே. பொதுவாக இந்த C டைப் வைரஸ் நம் உடலுக்குள் சென்ற 2 முதல் 6 மாதங்களுக்குள்ளாக மஞ்சள் காமாலையை உண்டுபண்ணுகின்றன.

  Hepatitis C virus

  ஆனால் சிலருக்கு மட்டுமே இந்த பாதிப்புகள் வெளிப்பட்டு தெரிகின்றன. பெரும்பான்மையானவர்களுக்கு இது உடலில் குடிகொண்டிருப்பது தெரிவதே இல்லை.

  அதாவது நாம் ஏற்கனவே பார்த்த A மற்றும் B வகை வைரஸ்கள் உங்களுக்கு வெளிப்புறத்தில் எவ்வளவு கஷ்டத்தை கொடுத்ததோ அந்த கஷ்டத்தை எல்லாம் இவர் உங்களுக்கு கொடுக்கமாட்டார்.

  இன்னும் சொல்லப்போனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 75 சதவீத பேர்களுக்கு நாம் இப்படியொரு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கூட தெரிவதில்லை. ஏனென்றால் இவர்களுக்கு காமாலை வராது, காய்ச்சல் வராது...

  அடடே நம்ம "ஹெப்-சி" இவ்வளவு நல்ல பையனா இருக்கிறாரே என்று புளங்காகிதம் அடைந்தால் இப்போதே உங்களை நீங்களே விளக்குமாற்றால் அடித்துக் கொள்ளுங்கள்.

  ஏனென்றால், நீங்கள் நினைப்பதுபோல இவர் ஒன்றும் அவ்வளவு நல்லவரில்லை.

  இந்த வைரஸால் வெளிப்புற பாதிப்புகளைத்தான் நம்மால் உணர முடிவதில்லையே தவிர உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு நம்ம பங்காளி பாகிஸ்தான் செய்யும் அனைத்து வேலைகளையும் இதுவும் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

  உண்மையை சொல்லப்போனால் இவர் ஒரு கிரேட் "சைலண்ட் கில்லர்". உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடலை உருக்குலைய வைப்பவர்.

  அதாவது, இவருடைய நோக்கமே வெளி காயங்களை ஏற்படுத்தி உங்கள் மனதை புண்படுத்துவதல்ல. மாறாக உள் காயங்களை ஏற்படுத்தி உங்கள் உடலை புண்படுத்துவது.

  ஆம்... இவர் ஏற்படுத்துவது அத்தனையும் உள்காயங்கள்தான். உள்ளுக்குள் இருந்துகொண்டே குத்துவது அத்தனையும் ஊமைக்குத்தாகவே குத்தி உள்ளுறுப்புகளை ரணகளப்படுத்துவதில் வல்லவர்.

  இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 80 சதவீத பேர்கள் வெளிப்புறத்தில் எந்த பாதிப்பையும் பெறவில்லை என்றாலும் உள்ளுக்குள் நீடித்த கல்லீரல் அழற்சிக்கு ஆளாவார்கள். இவர்களுக்கு அதிக அளவில் தங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்பே நோயிருப்பது தெரியவரும்.

  மீதி 20 சதவீத பேர்களுக்கு கல்லீரல் சுருக்க நோயான "சிரோசிஸ்" பாதிப்பு ஏற்படலாம்.

  இந்த "ஹெப்படைட்டிஸ் C" வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் சுமார் 15 சதவீதத்தினர் மட்டுமே குணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மீதி 85 சதவீதத்தினருக்கு கிடைப்பதென்னவோ பட்டை நாமமும், பழனி பஞ்சாமிர்தமும்தான்.

  பரவும் விதம்.

  நம் உடலிலுள்ள இரத்தம் மற்றும் உடலிலுள்ள பிறவகை திரவங்கள் மூலமாகவே இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அதிக அளவில் பரவுகிறது.

  நீங்கள் யாரிடமாவது இருந்து இரத்தமோ அல்லது இரத்தம் சார்ந்த திரவங்களையோ தானமாக பெற்று கொண்டீர்களா? தானம்பெற்ற சில மாதங்களிலேயே உங்களை காமாலை அட்டாக் செய்கிறதா? வக்காளி சந்தேகமில்லாமல் அது "ஹெப்-சி" யோட விளையாட்டாகத்தான் இருக்கும்.

  இரத்ததானம் பெற்றபின் வரும் மஞ்சள் காமாலைகளில் 90 சதவீதம் இவருடைய கைங்கர்யம்தாம்.

  பச்சைகுத்துதல், காதுகுத்துதல், போதை ஊசி செலுத்துதல் முதலியவைகளிலும் ஒருவருடைய இரத்தம் இன்னொருவருடைய இரத்தத்ததுடன் கலக்கும் வாய்ப்பு இருப்பதால் இதன் மூலமாகவும் பரவுகின்றன.

  கருவுற்ற தாய் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் பிறக்கப்போகும் குழந்தையையும் இது பாதிக்கலாம். ஆனால் இது வெறும் 5 சதவீதம் மட்டுமே என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தி.

  முன்தடுப்பு முறை.

  ஒருவர் இரத்ததானம் கொடுக்க முன்வந்தால் அவருடைய இரத்தத்தில் C வைரஸ் உள்ளதா என்பதனை நன்கு பரிசோதித்து அதன் பின்பே இரத்ததானம் பெற முன்வர வேண்டும்.

  ஒருவர் அதிக அளவில் மதுபானம் அருந்துபவராக இருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவருக்கு இந்த வைரஸின் தாக்கம் அதிகரிக்கும். எனவே இந்த வைரஸால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தால் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- இந்நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு கீழாநெல்லி கஷாயம் கொடுக்கப்பட்டால் குணப்படுவதுபோன்ற ஒரு பிரமை ஏற்படலாம். வெளிப்புறத்தில் குணமாகிவிட்டது போன்றதொரு பிரமை ஏற்பட்டாலும்கூட உள்ளுக்குள் இந்த "ஹெப்-சி" குத்துக்காலிட்டு கும்மியடித்து கொண்டுதான் இருக்கும்.

  எனவே; இதனை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கு கீழாநெல்லி எந்தவிதத்திலும் பயன்படபோவதில்லை.

  Keelanelli syrup

  அதே வேளையில் சில வருடங்களுக்கு முன்புவரை இதற்கென பிரத்தியேக தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. ஆதலால் A மற்றும் B வகை வைரஸ்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளே இதற்கும் போடப்பட்டுவந்தன.

  மேலும் இந்த C வகை வைரஸ்களுக்கு "இண்டர்ஃபெரான்" என்னும் மருந்தும் கொடுக்கப்பட்டு வந்தது. இம்மருந்து 60 சதவீத நோயாளிகளுக்கு நல்ல பலனை கொடுத்தது.

  ஆனால், தற்போது இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. மாத்திரை வடிவத்திலேயே கிடைக்கின்றன. இவ்வைரஸ் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு 3 மாதங்கள் இந்த மாத்திரை எடுத்துக் கொண்டால் போதும். வைரஸை முழுமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

  இந்த வைரஸ் பாதிப்பால் கல்லீரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டு "கல்லீரல் சுருக்க நோய்" ஏற்பட்டிருந்தாலோ அல்லது புற்றுநோய் தோன்றியிருந்தாலோ அறுவை சிகிச்சை மட்டுமே பலனளிக்கும்.

  ஹெப்படைட்டிஸ் D (Hepatitis D).

  நாம் ஏற்கனவே பார்த்த "ஹெப்படைட்டிஸ் B" வைரஸிற்கும் இந்த D வைரஸிற்கும் நெருங்கிய உறவு உண்டு. உறவு என்றால் மாமன், மச்சான் உறவு மாதிரி.

  அதாவது யாருக்கெல்லாம் B வைரஸ் பாதிப்பு உள்ளதோ அவர்களுக்கெல்லாம் இந்த D வைரஸும் வந்து அவ்வப்போது குசலம் விசாரித்துவிட்டு போகும்.

  Hepatitis D virus

  குசலம் விசாரித்து விட்டு போனால்கூட பரவாயில்லை சிலநேரங்களில் மாமனுக்கு ஒரு பேச்சுத்துணையாக இருக்கட்டுமே என்று நிரந்தரமாக டோரா போட்டு தங்கி விடுவதுமுண்டு.

  அந்த வேளைகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து பண்ணுகிற அலப்பறை இருக்கே... அப்பப்பா... பாதிக்கப்பட்டவர் நிரந்தரமாக பெட்டில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

  ஏனென்றால், இந்த D வகை வைரஸினால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு முடிவில் கல்லீரல் சுருக்க நோயிலும் கொண்டுபோய் விட்டுவிடும்.

  D வைரஸ் பரவும் விதம்.

  வைரஸ் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து இரத்த தானம் பெறுவதால் இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவலாம்.

  நோயிருப்பவரின் அருகில் அடிக்கடி இருப்பதாலும் இது பரவலாம்.

  போதை ஊசிகளை பரிமாறிக்கொள்வதாலும் இந்நோய் ஒருவரை எளிதில் தாக்கலாம்.

  முறையற்ற பாலின உறவுகள் மூலமாகவும் இந்நோய் பரவலாம்.

  சிகிச்சை முறை.

  இந்த D வகை வைரஸுடன் பலருக்கு B டைப் வைரஸும் சேர்ந்திருப்பது உன்டு. அவ்வாறானவர்களுக்கு B டைப் வைரஸிற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்வது நோயை கட்டுப்படுத்த உதவும்.

  ஹெப்படைட்டிஸ் E (Hepatitis E)

  ஹெப்படைட்டிஸ் A  வைரஸ் தாக்குதலால் எந்தமாதிரியான கல்லீரல் அழற்சி ஏற்படுகிறதோ அதே பாதிப்புகள் இந்த ஹெப்படைட்டிஸ் E வைரஸினாலும் ஏற்படுகின்றன.

  Hepatitis E virus

  15 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறைகளின் மீதே தலைமுறை தலைமுறையாக தாக்குதல் நடத்திவரும் இது சிறு குழந்தைகளை தாக்குவது குறைவாகவே உள்ளன.

  கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானால் அந்த பெண் மரணத்தை சந்திப்பகற்கான வாய்ப்புகள் அதிகம்.

  E வைரஸ் பரவும் விதம்.

  ஆறு, குளம், குட்டை இவைகள்தான் இவைகளின் ஆரம்பகால வாழ்வாதாரமே. இந்நோய் பெரும்பாலும் குடிநீர் வழியாகவே பரவுகிறது.

  முன்தடுப்பு முறை.

  வடிகட்டப்பட்ட சுத்தமான நீரையே குடிக்க பயன்படுத்த வேண்டும். அல்லது தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். உணவு உண்ணும் முன்பும், கழிப்பிடங்களுக்கு சென்று வந்த பின்பும் சோப்பு பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும்.

  உணவு பாத்திரங்களை சுத்தமாக வைத்திருத்தல், சுகாதாரத்தை கடைபிடித்தல் முதலியவைகளை பின்பற்றினால் இந்நோய் வராமல் தடுக்க முடியும்.

  சிகிச்சை முறை.

  இது ஹெப்படைட்டிஸ் A போன்று தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்துவதால் அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. இந்நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

  ஹெப்படைட்டிஸ் F (Hepatitis F)

  1990 களில் Hepatitis A , B, C, D, E இவைகளை தவிர்த்து புதுவிதமான வைரஸ் சிலரை பாதித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். இந்த வைரஸிற்கு ஹெப்படைட்டிஸ் F (Hepatitis F ) என பெயரும் வைத்துவிட்டனர். ஆனால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அப்படியான வைரஸ் எதுவும் இல்லையென்று நிரூபணம் ஆகியதால் ஹெப்படைட்டிஸ் F கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

  Hepatitis F_gp muthu

  ஹெப்படைட்டிஸ் G (Hepatitis G)

  இதுவும் ஆரம்பத்தில் பார்த்த ஹெப்படைட்டிஸ் C வைரஸ் போன்று இரத்தம் மற்றும் உடலிலுள்ள பிறவகை திரவங்கள் மூலமாகவே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அதிக அளவில் பரவுகிறது. போதை ஊசி பயன்படுத்தும் நபர்களுக்கு இது எளிதில் பரவுகிறது.

  Hepatitis G virus

  அடிக்கடி இரத்தம் ஏற்ற வேண்டிய பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்நோய் எளிதில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்நோய் கர்ப்பிணி பெண்களிடமிருந்து குழந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

  இந்த வைரஸ் தனியாகவும் ஒருவரை பாதிக்கலாம் அல்லது B மற்றும் C வகை வைரஸ்களை கூட்டுசேர்த்துக்கொண்டு மும்முனை தாக்குதல்களிலும் ஈடுபடலாம்.

  ஆரம்பத்தில் சிறிய அளவில் அழற்சியை ஏற்படுத்தும் இது நாட்கள் செல்ல செல்ல கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி அதிகரித்த மஞ்சள் காமாலையினை தோற்றுவிக்கின்றன.

  தற்காத்துக்கொள்ளும் வழிவகைகள்.

  இரத்த வங்கிகளிலிருந்தோ அல்லது தனிப்பட்ட ஒருவரிடமிருந்தோ இரத்தம் தானமாக பெறவேண்டி இருந்தால் அப்படி பெறப்படும் இரத்தத்தில் G டைப் வைரஸ் கிருமி உள்ளதா என்பதனை நன்கு பரிசோதித்து அறிவது அவசியம்.

  சிகிச்சை முறை.

  இந்நோய்க்கான விசேஷ சிகிச்சை எதுவுமில்லை.

  அடைப்பு காமாலை.

  Surgical Jaundice.

  பித்தப்பையில் பித்தக்கல் உருவாவதால் பித்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, குடலிலுள்ள புழுக்கள், கணைய தலைப்பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய் இவைகளால் பிலிருபின் வெளியேறமுடியாமல் அதனால் உருவாகும் மஞ்சள் காமாலை நோய்க்கு "அடைப்பு காமாலை" (Surgical Jaundice) என்று பெயர்.

  குடற்புழுக்களால் ஏற்படும் அடைப்பு.

  இரத்தத்திலுள்ள காலாவதியான ஹீமோகுளோபின் செல்கள் எப்போதும் போல மிதமான வேகத்திலேயே அழிக்கப்படுகின்றன என்றே வைத்துக்கொள்வோம். உங்கள் கல்லீரலும் சமத்தாக அதனை வடிகட்டுவதாகவே வைத்துக்கொள்வோம். இப்போதும் உங்கள் உடல் மங்காத்தா ரேஞ்சுக்கு மஞ்சளாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

  எப்படியெனில் வெளியிலிருந்து உங்கள் உடலுக்குள் அந்நியனாக நுழையும் சில லார்வாக்கள் ஆட்டை கடித்து மாட்டை கடித்து பின்பு மனிதனையே கடித்த கதையாக முதலில் குடலை பாதித்து அதன்பின் கல்லீரலிலிருந்து குடலுக்குள்வரும் பித்தநீரை மோப்பம் பிடித்து "இது எங்கிருந்து வருது பாப்போம்" என ஆரம்பித்து கடைசியில் "வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்துட்டோம் நாங்க" என பாடிக்கொண்டே கல்லீரலுக்குள் புகுந்துவிடுகின்றன.

  worm Infection Jaundice

  இதனால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு கல்லீரல் வீங்கியோ அல்லது சுருங்கியோ "பிலிருபின்" வெளியேறும் பகுதியில் அடைப்பு ஏற்பட கல்லீரலிலிருந்து வெளியேறவேண்டிய "பிலிருபின்" வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் கல்லீரலால் வடிகட்டப்பட்ட பிலிருபின் வேறு வழியில்லாமல் மீண்டும் இரத்தத்தில் கலக்கப்பட உங்கள் உடல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுகின்றன.

  பித்தப்பை கற்களால் ஏற்படும் அடைப்பு.

  பித்த நீர் என்பது கல்லீரலில் சுரக்கும் மிக முக்கியமான ஜீரண நீராகும். இது பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது.

  பித்தப்பை என்பது சிறிய பை போன்ற அமைப்பு. இது கல்லீரலின் அடிப்பகுதியில் இருக்கிறது. 8 செ.மீ நீளமும், 4 செ. மீ அகலமும் கொண்டது. இதில் பெரும்பாலும் 50 மில்லி அளவிற்கு பித்தநீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

  பித்தநீரை வெளிப்படுத்தும் குழாய்களில் அடைப்பு ஏதாவது இருந்தால் பித்தநீர் குடலுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்தில் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

  சிலருக்கு பித்த பைகளில் பித்தக்கற்கள் உருபெறுவது உண்டு. இந்த பித்தக்கற்களானது கொலஸ்ட்டிரால், கால்சியம் உப்புக்கள் மற்றும் பிலிருபின் இவைகளால் உருவாகின்றன.

  Gallstones

  பித்தப்பையில் உருவாகும் இந்த பித்த கற்கள் பித்தநீரை குடலுக்கு எடுத்துச் செல்லும் நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துவதால் பித்தநீரும் அதில் கலந்துள்ள பிலிருபினும் வெளியேற முடியாமல் மீண்டும் வேறு வழியில்லாமல் இரத்தத்திலேயே கலந்துவிட இதனை பித்தக்கற்களால் ஏற்படும் அடைப்பு வகை காமாலை என்கிறோம்.

  இதனால் கடுமையான பித்தப்பை அழற்சி ஏற்படுவதோடு வீக்கம், எரிச்சல் உருவாகி அதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

  இந்த பித்த கற்கள் பெரும்பாலும் ஆண்களைவிட இரு மடங்கு அதிக அளவில் பெண்களைத்தான் பாதிக்கின்றன.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- இந்நோய் ஆரம்பக்கட்டத்தில் "லேப்ராஸ்கோபிக்" மூலம் கற்கள் அகற்றப்படுகின்றன. இந்த பித்த கற்களை அகற்றுவதற்கு கீழாநெல்லி பயன்படப்போவதில்லை.

  கட்டி, புற்று நோய்களால் ஏற்படும் அடைப்பு.

  கல்லீரலில் ஏதாவது கட்டிகள் தோன்றினாலோ அல்லது புற்றுநோய் ஏற்பட்டாலோ கூட அடைப்பு ஏற்படும்.

  liver cancer

  புற்று நோயானது கல்லீரலின் தலைப்பகுதியில் ஏற்பட்டால் மட்டுமே காமாலையை ஏற்படுத்துகின்றன. அதன் நடுப்பகுதியிலோ அல்லது வால் பகுதியிலோ புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அது காமாலை அறிகுறியை ஏற்படுத்துவதில்லை.

  அதுபோல பித்தப்பையில் பித்தக்கற்கள் இருப்பவர்களுக்கும் பித்தப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த புற்று நோயானது பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையே பாதிக்கிறது. இந்த புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- "அடைப்பில்லாத காமாலை" நோய்களை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் மேற்குறிப்பிட்ட "அடைப்பு காமாலை"யை மருந்து மாத்திரைகளாலோ, மூலிகை மற்றும் கீழாநெல்லி சார்ந்த மருந்துகளாலோ குணப்படுத்திவிடமுடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் அறுவை சிகிச்சை செய்து அடைப்பை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.